அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்
மன்னிக்க தயாராக இருக்கும் ஒரு தகப்பன்
இதுவரையில் எழுதப்பட்ட சிறுகதைகளுள் புகழ்பெற்ற சிறுகதை என்றும் நல்ல காரணத்திற்காக எழுதப்பட்டது என்றும் இது அழைக்கப்படுகிறது. காணாமற்போன மகன்மீது தகப்பன் கொண்டிருந்த அன்பைப் பற்றி இயேசு கூறிய உவமை ஒரு ஜன்னலைப்போல் உள்ளது, இதன் வழியே மனந்திருந்திய பாவிகள்மீது கடவுள் கொண்டிருக்கும் பரிவிரக்கத்தைப் பற்றி அற்புதமான ஒரு காட்சியை நாம் காணலாம்.
காணாமற்போய், கண்டெடுத்தல்
ஒரு மனிதனுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவரிடத்தில் இளையவன் இவ்வாறு சொல்கிறான்: ‘நீர் இறந்துபோகும்வரை காத்திருப்பதற்கு பதிலாக, என்னுடைய சொத்து இப்போதே எனக்கு வேண்டும்.’ தந்தை அதற்கு உடன்பட்டு, இருவரில் இளையவனுக்கு சட்டப்படி சேரவேண்டிய பங்கை, அதாவது எல்லாவற்றிலும் மூன்றில் ஒரு பங்கை அநேகமாக கொடுத்திருக்க வேண்டும். (உபாகமம் 21:17) அந்த இளைஞன் தன் சொத்துக்களையெல்லாம் உடனே சுருட்டிக்கொண்டு, ஒரு தூரதேசத்திற்குப் போய், ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்து எல்லா காசையும் கரியாக்கினான்.—லூக்கா 15:11-13.
பிறகு கொடிய பஞ்சம் உண்டானது. அந்த இளைஞன் வேறு கதியின்றி பன்றிகளை மேய்க்கும் வேலை செய்ய ஒத்துக்கொண்டான். ஒரு யூதனைப் பொருத்தமட்டில் இது ஓர் இழிவான வேலையாகும். (லேவியராகமம் 11:7, 8) உணவுக்கு அவ்வளவு தட்டுப்பாடு இருந்ததால், பன்றிகளுக்கு உணவாக கொடுக்கப்பட்ட தவிட்டிற்காக அவன் ஏங்கினான்! கடைசியில் அந்த இளைஞனுக்கு புத்தி தெளிந்தது. ‘என்னுடைய தகப்பன் வீட்டில் வேலைக்காரர்களுக்கு நல்ல திருப்திகரமாக உணவளிக்கப்படுகையில், நான் இவ்வாறு வாடுகிறேனே. நான் வீட்டிற்கு திரும்பிப்போய், என்னுடைய பாவங்களை எல்லாம் அறிக்கையிட்டு, அப்பாவுடைய கூலிக்காரர்களில் என்னையும் ஒருவனாக ஏற்கும்படி கெஞ்சிக்கேட்பேன்’ என்று தனக்குள் யோசிக்க ஆரம்பித்தான்.a—லூக்கா 15:14-19.
அந்த இளைஞன் வீட்டிற்கு திரும்பும் நீண்ட பயணத்தை மேற்கொண்டான். அவனது தோற்றம் பெருமளவிற்கு மாறியிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இருப்பினும் அவனுடைய அப்பா “அவன் தூரத்தில் வரும்போதே” அவனை அடையாளம் கண்டுகொள்கிறார். இரக்க உணர்வு பொங்கிவழிய, அவர் தன் மகனிடமாக ஓடிச்சென்று, அவனைக் கட்டித்தழுவி, ‘அவனை முத்தஞ்செய்தார்.’—லூக்கா 15:20.
இத்தகைய அனலான வரவேற்பு, தன் மன பாரத்தையெல்லாம் இறக்கிவைக்க அந்த இளைஞனுக்கு எளிதாக்கியது. “தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல.” “உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்” என்று சொன்னான். தகப்பன் தன் ஊழியக்காரரை அழைத்தார். “சீக்கிரம்! நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்” என்று கட்டளையிட்டார்.—லூக்கா 15:21-24, 19.
ஒரு பிரமாதமான விருந்து தடபுடலாக தயாரானது, அதில் இசையும் நடனமும்கூட இடம்பெற்றிருந்தன. மூத்த மகன் வயலிலிருந்து திரும்புகையில், தடபுடலான சத்தம் அவன் காதில் விழுந்தது. அவனுடைய தம்பி வீடு திரும்பியதை ஒட்டி இத்தகைய கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை அறிந்தபோது, அவனுக்கு கோபம் வந்தது. “இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. [ஆனால்] வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே” என்று முறையிட்டான். அதற்குத் தகப்பன் கனிவோடு இவ்வாறு பதிலளித்தார், ‘மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற் போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே.’—லூக்கா 15:25-32.
நமக்குப் பாடங்கள்
இயேசுவின் உவமையில் சொல்லப்பட்ட தகப்பன், இரக்கமுள்ள கடவுளாகிய யெகோவாவை பிரதிநிதித்துவம் செய்கிறார். காணாமற்போன மகனைப்போலவே, சில ஆட்கள் கடவுளுடைய பாதுகாப்பான குடும்பத்தை கொஞ்ச காலத்திற்கு விட்டுச்சென்று, ஆனால் மறுபடியும் திரும்பிவிடுகிறார்கள். அத்தகைய ஆட்களை யெகோவா எவ்வாறு நோக்குகிறார்? யெகோவாவினிடத்தில் உண்மையான மனந்திரும்புதலோடு திரும்பி வருவோருக்கு இவ்வாறு உறுதியளிக்கப்படுகிறது: “அவர் எப்போதுபார்த்தாலும் குற்றம் கண்டுக்கொண்டிருக்க மாட்டார், அல்லது என்றென்றும் கோபமாக இருக்க மாட்டார்.” (சங்கீதம் 103:9, NW) இந்த உவமையில், அந்தத் தகப்பன் ஓடிச்சென்று தன் மகனை வரவேற்கிறார். அவ்விதமே, மனந்திரும்பும் பாவிகளை மன்னிப்பதற்கு யெகோவா மனப்பூர்வமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஆவலோடும் இருக்கிறார். அவர் “மன்னிக்கிறதற்குத் தயாராக” இருக்கிறார், அதையும் “தாராளமாக” செய்கிறார்.—சங்கீதம் 86:5; ஏசாயா 55:7; NW, சகரியா 1:3.
இயேசுவின் உவமையில், அப்பாவின் உண்மையான அன்பே, மறுபடியும் திரும்பி வருவதற்கான தைரியத்தை ஒன்றுதிரட்ட அந்த மகனுக்கு எளிதாக்கியது. ஆனால், இதைச் சற்று சிந்தியுங்கள்: தகப்பன் அந்தப் பையனை நிராகரித்திருந்தால் அல்லது அவன் வீட்டிற்குள் மறுபடியும் காலடியெடுத்து வைக்கக்கூடாது என கோபமாக சத்தம்போட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? அத்தகைய ஒரு மனப்பான்மை, அந்தப் பையனை நிரந்தரமாகப் பிரித்துவிட்டிருக்கும்.—2 கொரிந்தியர் 2:6, 7-ஐ ஒப்பிடுக.
ஒருவிதத்தில் பார்த்தால், மகன் வீட்டைவிட்டு போகும்போதே, அவன் திரும்பிவருவதற்கான அடித்தளத்தையும் தகப்பன் போட்டுவிட்டதாகவே தெரிகிறது. சில நேரங்களில், மனந்திரும்பாத பாவிகளை கிறிஸ்தவ மூப்பர்கள் சபையிலிருந்து நீக்கவேண்டிருக்கிறது. (1 கொரிந்தியர் 5:11, 13) எதிர்காலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென்றால் பாவம் செய்தவன் என்னென்ன படிகளை எடுக்கவேண்டும் என்று மூப்பர்கள் அன்பாக சுட்டிக்காட்டுவதன் மூலம் மறுபடியும் அந்த நபர் திரும்பி வருவதற்கான வழியை அவரை நீக்கும்போதே வகுத்துக்கொடுக்கலாம். மூப்பர்கள் உள்ளப்பூர்வமாக மன்றாடியதன் நினைவே, ஆவிக்குரியவிதத்தில் தொலைந்துபோன பலர் மனந்திரும்பும்படி தூண்டி, கடவுளுடைய வீட்டிற்கு திரும்பும்படி செய்வித்திருக்கிறது.—2 தீமோத்தேயு 4:2.
தன்னுடைய மகன் திரும்பி வரும்போது அந்தத் தகப்பன் பரிவிரக்கத்தையும் காட்டினார். பையனுடைய உண்மையான மனந்திரும்புதலை கண்டுகொள்ள அவருக்கு அதிகநேரம் எடுக்கவில்லை. மகன் செய்த தவறுகளை ஒவ்வொன்றாக ஒப்பிக்கவேண்டும் என்று வற்புறுத்துவதற்கு பதிலாக, அவர் உடனே செயலில் இறங்கினார், வந்தவனை வரவேற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார், அவ்வாறு செய்வதில் தன்னுடைய அளவில்லா ஆனந்தத்தை வெளிக்காட்டினார். இந்த முன்மாதிரியை கிறிஸ்தவர்கள் பின்பற்றலாம். தொலைந்துபோனவர் திரும்பவும் கிடைத்ததற்காக அவர்கள் சந்தோஷப்பட வேண்டும்.—லூக்கா 15:10.
வழிவிலகிப்போன மகனுக்காக அந்தத் தகப்பன் வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தார் என்பதை அவருடைய நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி காட்டிவிட்டது. உண்மையில் இது வெறும் ஒரு முன்காட்சியை நிழலிட்டுக்காட்டியது; அதாவது கடவுளுடைய வீட்டைவிட்டு வழிவிலகிப்போன அனைவருக்காகவும் யெகோவா ஏங்குகிறார். அவர் ‘ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்புகிறார்.’ (2 பேதுரு 3:9) ஆகவே, தங்களுடைய பாவங்களுக்காக மனந்திரும்புவோர், ‘கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்களால்’ ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்ற உத்தரவாதம் அளிக்கப்படுகின்றனர்.—அப்போஸ்தலர்கள் 3:19.
[அடிக்குறிப்புகள்]
a ஊழியக்காரன் குடும்பத்தில் ஒருவனாக எண்ணப்பட்டான், கூலிக்காரனோ தினக்கூலிக்கு வேலைப்பார்க்கும் ஒரு தொழிலாளி, அவன் எப்போது வேண்டுமென்றாலும் வேலையிலிருந்து நீக்கப்படலாம். தன் தகப்பன் வீட்டில் அந்தஸ்து குறைவான ஓர் இடம் கிடைத்தாலும்போதும் அதனை மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த இளைஞன் நினைத்துக்கொண்டான்.