முழுநேர ஊழியத்தில் எவ்வாறு சந்தோஷத்தைக் காத்துக்கொள்வது
கடவுள் பயமற்ற இந்த ஒழுங்குமுறையின் கடைசி நாட்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் தெளிவாக காட்டுகிறது. இதை அறிந்திருக்கும் யெகோவா தேவனுடைய ஊழியர்கள் அவருடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பரப்புவதில் தங்களால் முடிந்த அளவு அதிகமான நேரத்தை செலவழிக்கிறார்கள். 6,00,000-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் முழுநேர ஊழியத்தில் பங்குகொள்ளும் வகையில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் பயனியர்கள் என்றழைக்கப்படும் முழுநேர ராஜ்ய அறிவிப்பாளர்களாக இருக்கிறார்கள். மற்றவர்கள் உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைமைக் காரியாலயத்தில் அல்லது அதன் கிளை காரியாலயங்களில் பெத்தேல் வாலண்டியர்களாக இருக்கிறார்கள். இன்னும் மற்றவர்கள் மிஷனரிகளாகவும் பயணக் கண்காணிகளாகவும் இருக்கிறார்கள்.
கடைசி நாட்களில் ‘கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்கள்’ இருக்கும் என்பதாக பைபிள் குறிப்பிடுகிறது. (2 தீமோத்தேயு 3:1-5, NW) கிரேக்க பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்றொடரை, “நியமிக்கப்பட்ட கொடிய காலங்கள்” என்றும் மொழிபெயர்க்கலாம். ஆகவே நம்முடைய நாளில் பிரச்சினைகள் இல்லாத ஒரு வாழ்க்கையை யாருமே எதிர்பார்க்கக்கூடாது. கிறிஸ்தவ ஊழியர்கள் சிலருக்கு பிரச்சினைகள் அத்தனை கவலைக்குரியதாக தோன்றுவதால், ‘நான் முழுநேர சேவையில் தொடர முடியுமா அல்லது அதை நான் நிறுத்திவிட வேண்டுமா?’ என்பதாக தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளக்கூடும்.
ஒரு பயனியராக, பெத்தேல் வாலண்டியராக, பயணக் கண்காணியாக அல்லது மிஷனரியாக இருக்கும் தன்னுடைய சேவையை மறுமதிப்பீடு செய்யும்படி என்ன சூழ்நிலைமைகள் எவராவது ஒருவரைத் தூண்டலாம்? ஒருவேளை கவலைக்குரிய உடல் நலப் பிரச்சினை இருக்கலாம். ஒருவேளை வயதான அல்லது பலவீனமாயுள்ள உறவினர் ஒருவருக்கு இடைவிடாத பராமரிப்பு தேவைப்படலாம். திருமணமான ஒரு தம்பதி ஒரு குடும்பத்தைத் தொடங்குவதாக இருக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களுக்காகவும் வேதப்பூர்வமான கடமைகளைச் செய்வதற்காகவும் முழுநேர சேவையை இடையில் நிறுத்திவிடும் ஒருவர், வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை.
இருப்பினும், சந்தோஷம் இல்லாத காரணத்தால் முழுநேர சேவையை இடையில் நிறுத்திவிட ஒருவர் திட்டமிடுவாரேயானால் அப்போது என்ன? ஒருவேளை ஒரு பயனியர் தன்னுடைய ஊழியத்தில் நல்ல பலனைக் காணாதபடியால், ‘ஒரு சிலரே செவிகொடுத்துக் கேட்கும்போது என்னுடைய இந்த சுய தியாக வாழ்க்கை முறையை நான் ஏன் தொடரவேண்டும்?’ என்பதாக கேட்கலாம். ஒருவேளை பெத்தேல் வாலண்டியருக்கு தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் அவ்வளவு மகிழ்ச்சி இல்லாமல் இருக்கலாம். அல்லது பயனியர் சேவையை தடை செய்யாவிட்டாலும் தொல்லையாக இருக்கும் உடல்நலக் கேடு கடைசியாக ஒரு நபரின் மகிழ்ச்சியை அழித்துவிடலாம். இப்படிப்பட்ட ஆட்கள் எவ்வாறு தங்கள் சந்தோஷத்தைக் காத்துக்கொள்ள முடியும்? அனுபவமுள்ள ஒரு சில ஊழியர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதை நாம் சிந்திக்கலாம்.
ஏமாற்றத்தைச் சமாளித்தல்
ஸ்விட்சர்லாந்திலிருந்து வரும் ஆனி, 1950-ல் உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளிக்குச் சென்றிருந்தார். வேற்று நாட்டில் மிஷனரி வேலை நியமிப்பு பெற்றுக்கொள்வதற்காக அவர் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். ஐரோப்பாவிலேயே பெத்தேலில் பணிபுரியும் நியமிப்பை அவர் மறுபடியும் பெற்றுக்கொண்டபோது, ஆனிக்கு அது ஏமாற்றமாக இருந்தது. இருந்தபோதிலும், மொழிபெயர்ப்பு இலாக்காவில் தன் வேலை நியமிப்பை அவர் ஏற்றுக்கொண்டு, இன்னும் அந்த வேலையைச் செய்துவருகிறார். தன்னுடைய ஏமாற்றத்தை அவர் எவ்வாறு மேற்கொண்டார்? “செய்யப்படுவதற்கு அப்போது அதிக வேலை இருந்தது, இப்போதும் இருந்துவருகிறது. வேலையைப்போல் என்னுடைய உணர்ச்சிகளும் விருப்பங்களும் அந்தளவுக்கு முக்கியமானவை அல்ல” என்பதாக ஆனி விளக்குகிறார்.
நம்முடைய வேலை நியமிப்பு நமக்கு ஏமாற்றமளிப்பதாய் இருந்தால், ஒருவேளை நாம் ஆனியின் மனநிலையை வளர்த்துக்கொள்ளலாம். நம்முடைய சொந்த விருப்பம் எல்லாவற்றையும்விட முக்கியமானது அல்ல. ராஜ்ய செய்தியை பரப்புவதோடு சம்பந்தப்பட்ட பல்வேறு பொறுப்புகள் எல்லாம் சரியாக கையாளப்படுவதுதான் அதிக முக்கியத்துவம் உடையது. “சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு,” என்பதாக நீதிமொழிகள் 14:23 நமக்குச் சொல்கிறது. நமக்கு என்ன வேலை நியமிப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும் சரி, அதை உண்மையுடன் செய்து முடிப்பது ராஜ்ய வேலையை செய்துமுடிப்பதற்கு உதவிசெய்கிறது. மேலும் கடவுளால் கொடுக்கப்பட்ட இப்படிப்பட்ட ஒரு வேலையில் அதிகமான மனநிறைவும்—ஆம், சந்தோஷமும்—இருக்கக்கூடும்.—1 கொரிந்தியர் 12:18, 27, 28-ஐ ஒப்பிடுக.
மற்றவர்களை அநுசரித்து செல்லுதல்
முழுநேர ஊழியமானது—வெளி ஊழியத்தில், பெத்தேலில், ஒரு மிஷனரி இல்லத்தில், அல்லது ஒரு பயணக் கண்காணியாக ஒன்றன் பின் ஒன்றாக சபையை சந்தித்துவருகையில்—எல்லா வகையான ஆட்களோடும் நெருக்கமாக தொடர்புகொள்வதை உட்படுத்துகிறது. ஆகவே, சந்தோஷம் என்பது மற்றவர்களை அநுசரித்து செல்வதிலேயே பெருமளவு சார்ந்திருக்கிறது. இருந்தபோதிலும், கடைசி நாட்களுக்குரியதாக முன்னறிவிக்கப்பட்டுள்ள இந்தக் “கொடிய காலங்கள்” மனித உறவுகளில் அதிகமான அழுத்தங்களைக் கொண்டுவருகின்றன. யாராவது ஒருவர் தன்னை நிலைகுலைந்துபோகும்படி செய்தாலும்கூட ஒரு ஊழியர் எவ்விதமாக தன்னுடைய சந்தோஷத்தை இழப்பதைத் தவிர்க்க முடியும்? ஒருவேளை வில்ஹெல்மிடமிருந்து நாம் எதையாவது கற்றுக்கொள்ள முடியும்.
வில்ஹெல்ம் 1947-ல் பெத்தேல் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக ஆனார். அதற்குப்பின், பயனியர் சேவையிலும் பயணக் கண்காணியாக சேவிப்பதிலும் நேரத்தை செலவிட்டார். “சரியாக இல்லை என்பதாக நாங்கள் நினைக்கும் காரியங்களை அல்லது தனிப்பட்ட விதமாக எங்களைக் கவலைகொள்ளச் செய்யும் காரியங்களை என்னுடைய மனைவியும் நானும் காண்கையில், நாங்கள் எவ்வாறு உணருகிறோம் என்பதை யெகோவாவிடம் சொல்லிவிட்டு அதைத் தீர்த்துவைப்பதற்கு காரியங்களை அவரிடமாக விட்டுவிடுகிறோம்,” என்பதாக வில்ஹெல்ம் விளக்குகிறார்.—சங்கீதம் 37:5.
உங்களிடம் அவமரியாதையாக அல்லது யோசனையில்லாமல் பேசிவிட்ட ஒரு உடன் கிறிஸ்தவரின் நடத்தையினால் நீங்களே ஒருவேளை கலக்கமடைந்திருக்கலாம். நாம் அனைவரும் நம்முடைய பேச்சில் அநேக தடவைகள் தவறுகிறோம் என்பதை நினைவில்கொள்ளுங்கள். (யாக்கோபு 3:2) ஆகவே, ‘ஜெபத்தைக் கேட்கிறவரிடம்’ நெருங்கிவருவதற்காக இந்தச் சந்தர்ப்பத்தை ஏன் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது? (சங்கீதம் 65:2) அந்த விஷயத்தைப் பற்றி யெகோவாவிடம் பேசுங்கள், அதற்குப் பின்னர் அவருடைய கரங்களில் அதை ஒப்படைத்துவிடுங்கள். கடவுள் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், அவர் அவ்விதமாகச் செய்வார். மிஷனரி இல்லத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தால், அவர்கள் இதை மனதில் வைப்பது அவசியமாயிருக்கலாம், ஏனென்றால் யெகோவாவின் சேவையில் தங்கள் சந்தோஷத்தைக் காத்துக்கொள்வதற்கு இது அவர்களுக்கு உதவி செய்யும்.
உடல் நலம் குறைவுபடுகையில்
வெகு சில ஆட்களே எப்போதும் நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்கிறார்கள். வாழ்க்கையின் துடிப்பான பருவமென அழைக்கப்படும் பருவத்தில் இருப்பவர்களுக்கும்கூட மனச்சோர்வோ அல்லது வியாதியோ ஏற்படலாம். உடல் நலக்குறைவினால் சிலர் முழுநேர சேவையை இடையில் நிறுத்திவிட வேண்டியிருக்கிறது, ஆனால் அதற்குப்பின் அவர்கள் ராஜ்ய பிரஸ்தாபிகளாக மிகச் சிறப்பாக வேலை செய்கிறார்கள். இருப்பினும் மற்றவர்கள், உடல் நலக் குறைபாடு இருந்தபோதிலும் முழுநேர சேவையை தொடர்ந்து செய்யமுடிகிறது. உதாரணத்துக்கு ஹார்ட்முட் மற்றும் கிஸ்லின்டை எடுத்துக்கொள்ளுங்கள்.
ஹார்ட்முட்டும் கிஸ்லின்டும் பயனியர்களாகவும், மிஷனரிகளாகவும், பயண ஊழியத்திலும் 30 வருடங்களை செலவழித்திருக்கும் திருமணமான தம்பதியாவர். இரண்டு பேருமே சில காலமாக கவலைக்குரிய விதமாக நோய்வாய்ப்பட்டிருந்து சில சமயங்களில் சரீரப்பிரகாரமாயும் உணர்ச்சிப்பூர்வமாயும் மிகவும் களைப்பாய் உணர்ந்திருக்கிறார்கள். இருந்தபோதிலும், அவர்கள் மிகச் சிறந்த வேலையைச் செய்திருக்கிறார்கள், இதேபோன்ற கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு உற்சாகமளிக்கும் நிலையில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் என்ன ஆலோசனையைக் கொடுக்கிறார்கள்? “கடந்த காலத்தைப் பார்க்காமல் எதிர்காலத்தைப் பார்த்திருங்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் மிகச் சிறந்த விதமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் யெகோவாவைத் துதிப்பதற்கு ஒரே ஒரு சந்தர்ப்பத்தை மாத்திரமே தரலாம். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அதை அனுபவித்து மகிழுங்கள்.”
ஹானலூரின் விஷயத்தை சிந்தித்துப் பாருங்கள். ஒரு பயனியராகவும், ஒரு மிஷனரியாகவும், அவருடைய கணவனோடு பயண ஊழியத்திலும், பெத்தேல் சேவையிலும் இருந்த 30 ஆண்டுகளில் திரும்பத் திரும்ப வந்த வியாதியினால் அவர் கஷ்டப்பட்டிருக்கிறார். ஹானலூர் இவ்வாறு சொல்கிறார்: “மனிதர்கள் தங்களுக்கு எளிதாக இருக்கும்போது மாத்திரமே யெகோவாவை சேவிக்கிறார்கள் என்பதாக சாத்தான் எழுப்பிய விவாதத்தின்மீது நான் கவனத்தை ஊன்றவைக்கிறேன். கஷ்டங்களை சகித்திருப்பதன் மூலம், சாத்தான் சொன்னது தவறு என்பதை நிரூபிப்பதில் நான் ஒரு பங்கைக் கொண்டிருக்க முடியும்.” இது பலமான ஒரு தூண்டுதலாக இருக்கக்கூடும். கஷ்டத்தின்கீழ் இருக்கையில், யெகோவாவுக்கு உங்களுடைய தனிப்பட்ட உண்மைப்பற்றுறுதி முக்கியமானது என்பதை நினைவில் வையுங்கள்.—யோபு 1:8-12; நீதிமொழிகள் 27:11.
உங்கள் உடல் நலத்தின் சம்பந்தமாக சமநிலையான ஒரு தீர்மானம் செய்ய நீங்கள் முயலுகையில், காரிய ஒழுங்கு முறையின் முடிவைப் பற்றி இயேசு கிறிஸ்து சொன்ன தீர்க்கதரிசனத்தின் இரண்டு அம்சங்களை சிந்தித்துப்பாருங்கள். கொள்ளைநோய்கள் பல இடங்களில் வரும் என்பதாக இயேசு முன்னறிவித்தார். “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்,” என்றும்கூட சொன்னார். (மத்தேயு 24:3, 14; லூக்கா 21:11) கடைசி நாட்களில் தம்மைப் பின்பற்றுவோர் நோய்களோடு போராடிக்கொண்டிருப்பர் என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆனால், பிரசங்க வேலையானது நல்ல ஆரோக்கியமுள்ள ஆட்களால் மாத்திரமல்ல, கவலைக்குரிய நோய்களால் அவதிப்படும் தனி நபர்களாலும் நிறைவேற்றப்படும் என்பதை அவர் உணர்ந்தார். மோசமான உடல்நிலையின் மத்தியிலும் நம்மால் முழுநேர சேவையில் தொடர்ந்திருக்க முடிந்தால், யெகோவா அவருடைய நாமத்துக்காக நாம் காண்பிக்கும் அன்பை மறந்துவிட மாட்டார்.—எபிரெயர் 6:10.
மக்கள் அக்கறை காட்டாவிட்டாலும்கூட சந்தோஷத்தைக் காத்துக்கொள்ளுதல்
மக்கள் எவ்விதமாக ராஜ்ய பிரசங்கிப்பு வேலைக்கு பிரதிபலிக்கிறார்கள் என்பது நம்முடைய மனநிலையை பாதிக்கலாம். “வீட்டுக்காரரோடு ஒரு உரையாடலை ஆரம்பிப்பது பயனியர்களுக்கும்கூட கஷ்டமாக இருக்கிறது” என்பதாக அனுபவமுள்ள ஒரு ஊழியர் சொல்கிறார். “நாமனைவருமே நம்முடைய சந்தோஷத்தைக் காத்துக்கொள்வதற்கு போராட வேண்டியதாயிருக்கிறது.” ஆம், வெளிப்படையான அக்கறையின்மை வெளி ஊழியத்தில் நம்முடைய சந்தோஷத்தைக் குறைத்துவிடக்கூடும். ஆகவே வழக்கமாக அலட்சியமான தன்மையை எதிர்ப்படும் ஒரு பயனியர் எவ்வாறு தன்னுடைய சந்தோஷத்தைக் காத்துக்கொள்ள முடியும்? அனுபவமுள்ள ஊழியர்கள் முயற்சிசெய்யப்பட்டு சோதிக்கப்பட்டுள்ள பின்வரும் ஆலோசனைகளை அளிக்கிறார்கள்.
அக்கறையின்மை ஒரு சவாலை பிரதிநிதித்துவம் செய்கிறது, ஆனால் அது தோல்வியை அர்த்தப்படுத்த வேண்டியதில்லை. பரவலாக காணப்படும் அலட்சியத் தன்மைதானே முழுநேர சேவையை இடையில் நிறுத்திவிடுவதற்கு ஒரு காரணமாக இல்லை. நாம் வேதாகமத்தை ஊக்கமாக படிப்பதற்கு போதுமான நேரத்தை ஒதுக்கி வைப்போமானால் அக்கறையின்மையை எதிர்ப்பட்டாலும் நம்முடைய சந்தோஷத்தை நாம் காத்துக்கொள்ளலாம். அவை ‘எல்லா நற்கிரியையுஞ் செய்ய நம்மைத் தகுதியுள்ளவர்களாக்குகிறது,’ இது நற்செய்திக்கு செவிசாய்க்காதவர்களிடம் பேசுவதையும் உட்படுத்துகிறது. (2 தீமோத்தேயு 3:16, 17) எரேமியா தீர்க்கதரிசிக்கு மக்கள் செவிகொடுக்க விரும்பாதபோதிலும், அது அவர் பிரசங்கிப்பதை நிறுத்திக்கொள்ளும்படியாகச் செய்யவில்லை. (எரேமியா 7:27) கிறிஸ்தவ பிரசுரங்களின் உதவியோடு பைபிளைப் படிக்கையில், நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்தி அக்கறையின்மையைக் கையாள நமக்கு உதவிசெய்யக்கூடிய கருத்துக்களை கவனத்தில் எடுத்துக்கொள்வோமானால் நாம் மிகவும் பயனடைவோம்.
அக்கறையின்மை ஒரு சவாலாக இருப்பதாக நாம் எடுத்துக்கொண்டாலும்கூட, நாம் பிரசங்கிக்கிறவர்களிடமாக நம்முடைய மனப்பான்மையை பரிசீலனை செய்வோமாக. அவர்கள் ஏன் அலட்சியமாய் இருக்கிறார்கள்? உதாரணமாக ஐரோப்பாவின் சில பகுதிகளில் பரவலாக காணப்படும் அக்கறையின்மைக்கு ஒரு காரணம், பொய் மதம் ஏற்படுத்தியிருக்கும் விசனகரமான பதிவாகும். மதத்துக்கு இனிமேலும் தங்களுடைய வாழ்க்கையில் இடமிருப்பதாக மக்கள் உணருவதும் கிடையாது அல்லது அதோடு எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்ள விரும்புவதும் கிடையாது. வேலையில்லாமை, உடல் நலம், குற்றச்செயல், சகிப்புத்தன்மை இல்லாமை, சுற்றுச்சூழல் மற்றும் போரின் அச்சுறுத்தல் போன்ற அவர்களைப் பாதிக்கிற விஷயங்களைப் பற்றி மக்களிடம் பேசுவதன் மூலம் நாம் வளைந்துகொடுப்பவர்களாக இருப்பது அவசியமாகும்.
ஒரு வீட்டுக்காரரிடம் நாம் சொல்லும் ஆரம்ப வார்த்தைகளில், உள்ளூரில் கவலைக்குரியதாக இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி நாம் குறிப்பிடலாம். அதிகமாக ஒன்றும் பலன் கிடைக்காத ஒரு கிராமத்தில் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது டயட்மார் அதைத்தான் செய்ய முயன்றார். அங்கு வசித்துவந்த ஒருவர் முந்தின தினம் அந்தக் கிராமத்தில் சோகமான ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக குறிப்பிட்டார். அதற்குப்பின் ஒவ்வொரு கதவண்டையிலும், டயட்மார் அந்தச் சோகமான சம்பவத்தைக் குறித்து உண்மையாகவே வருத்தத்தைத் தெரிவித்தார். “திடீரென்று, மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்” என்பதாக அவர் சொன்னார். “அந்தச் சோக சம்பவம் எல்லாருடைய மனதிலும் இருந்தது. அவர்களுடைய வாழ்க்கையில் நான் அக்கறை காண்பித்த காரணத்தால் அன்று நேர்த்தியான விதங்களில் சம்பாஷிக்க முடிந்தது.”
நாம் எங்கு மக்களைப் பார்த்தாலும் ராஜ்ய சாட்சியை அவர்களுக்கு கொடுப்பது அவசியமாகும். சந்தர்ப்ப சாட்சிகொடுத்தல் பலன் தருவதாய் இருக்கலாம், பைபிள் ஆதாரமுள்ள பிரசுரங்களில் அளிக்கப்படும் ஆலோசனைகளைப் பயன்படுத்தி இந்த வேலையில் நம்மைநாமே பயிற்றுவித்துக்கொள்ள முடியும். நட்பான ஒருசில வார்த்தைகளிலிருந்து அல்லது ஒரு வீட்டுக்காரரிடம் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை அளிப்பதிலிருந்து சந்தோஷத்தைப் பெற முடியும். நாம் மறுசந்திப்புகளைச் செய்து அக்கறையுள்ள ஒரு நபரோடு ஒரு பைபிள் படிப்பை நடத்த ஆரம்பித்துவிட்டிருந்தால், “பைபிளை படிக்க விருப்பப்படக்கூடிய வேறு எவரையாவது உங்களுக்குத் தெரியுமா?” என்பதாக கேட்பதன் மூலம் மற்றொரு அக்கறையுள்ள நபரை கண்டுபிடிக்கலாம். இது மற்றொரு வீட்டு பைபிள் படிப்பு ஸ்தாபிக்கப்படுவதற்கு வழிநடத்தலாம். எப்படியிருந்தாலும், நாம் நம்பிக்கையோடிருந்து, யெகோவாவின்மீது ஜெபசிந்தையோடு சார்ந்திருந்து அக்கறையின்மை நம்மை சோர்வடையச் செய்ய அனுமதியாதிருப்போமாக.
மற்றவர்களிடமிருந்து உற்சாகம்பெறுதல்
யுயர்ஜெனும் கிறிஸ்டியாவும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயனியர் செய்துகொண்டும் பயண ஊழியத்தில் ஈடுபட்டும் வந்திருக்கிறார்கள். ஒரு சமயம் அவர்களுக்கு நியமிப்பு கிடைத்த பிராந்தியத்தில், அக்கறையில்லாத பிடிவாதமுள்ள பெரும்பாலான ஆட்களிடத்தில் பிரசங்கிக்க வேண்டியிருந்தது. யுயர்ஜெனும் கிறிஸ்டியாவும் உற்சாகத்திற்காக எவ்வளவாக ஏங்கினார்கள்! ஆனால் ஏதோ ஒரு காரணத்தினிமித்தமாக சபையிலிருந்த மற்றவர்கள் இவர்களுடைய இந்தத் தேவையைப் பூர்த்திசெய்யவில்லை.
ஆகவே “சில பயனியர்கள் கடினமான சூழ்நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு மூப்பர்களிடமிருந்தும் மற்ற பிரஸ்தாபிகளிடமிருந்தும் அதிகமான உற்சாகமூட்டுதல் தேவையாக இருக்கிறது,” என்பதை யுயர்ஜென் அனுபவரீதியாக அறிந்துகொண்டிருக்கிறார். யோசுவாவை உற்சாகப்படுத்தி பலப்படுத்தும்படியாக மோசேயிடம் கடவுள் சொன்னார். (உபாகமம் 3:26-28) மேலும் கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொள்கிறவர்களாக இருக்கவேண்டும். (ரோமர் 1:11, 12) ராஜ்ய பிரஸ்தாபிகள் முழுநேர சேவையில் இருப்பவர்களை கட்டியெழுப்பும் வார்த்தைகள் மூலமாகவும் ஊழியத்தில் அவர்களோடு அவ்வப்போது செல்வதன் மூலமாகவும் உற்சாகப்படுத்தலாம்.
யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பது—நம்முடைய பெலன்
தங்களுடைய வாழ்க்கையில் பெரும்பகுதியை பயனியர்களாக அல்லது மிஷனரிகளாக, பெத்தேலில் சேவை செய்பவர்களாக அல்லது பயண ஊழியத்தில் சபைகளைச் சந்திப்பவர்களாக செலவிட்டிருக்கும் கிறிஸ்தவர்கள், பெரும்பாலான பிரச்சினைகள் குறுகிய காலத்துக்கு மாத்திரமே இருப்பதையும், ஆனால் சில பிரச்சினைகள் நீண்ட காலம் இருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒருபோதும் தீராது என தோன்றும் சில பிரச்சினைகளும்கூட நம்முடைய சந்தோஷத்தை பறித்துவிட அனுமதிக்கக்கூடாது. 45 வருடங்களுக்கும் மேலாக ஒரு அந்நிய நாட்டில் சேவை செய்து வந்திருக்கும் ரேமன், பிரச்சினைகள் நம்மை சோகத்தில் ஆழ்த்திடும்போது, “நமக்கிருக்கும் அநேக ஆசீர்வாதங்களைப் பற்றியும், இதைவிட அதிகமான கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் மற்ற ஆயிரக்கணக்கானோரைப் பற்றியும் நாம் யோசித்துப்பார்க்க வேண்டும்,” என்பதாக ஆலோசனை கொடுக்கிறார். ஆம், உலகம் முழுவதிலுமுள்ள நம்முடைய உடன் விசுவாசிகள் கஷ்டங்களை எதிர்ப்பட்டு வருகிறார்கள், யெகோவா நம் அனைவரையும் உண்மையில் விசாரிக்கிறவராய் இருக்கிறார்.—1 பேதுரு 5:6-9.
ஆகவே, நம்முடைய தனிப்பட்ட சூழ்நிலைமைகள் நம்மை முழுநேர சேவையில் பங்குகொண்டு அதில் நிலைத்திருக்க அனுமதிக்குமேயானால், நம்முடைய பரலோக தந்தையின்மீது சார்ந்திருப்பதன் மூலம் நம்முடைய சந்தோஷத்தைக் காத்துக்கொள்வோமாக. அவர் தம்முடைய ஊழியர்களைப் பலப்படுத்துகிறார், ‘யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே நம்முடைய பெலன்’ என்பதை நாம் அனைவரும் நினைவில் வைக்கவேண்டும்.—நெகேமியா 8:10.
[பக்கம் 21-ன் படம்]
“வேலையைப்போல் என்னுடைய உணர்ச்சிகளும் விருப்பங்களும் அந்தளவுக்கு முக்கியமானவை அல்ல”
[பக்கம் 22-ன் படம்]
‘நாங்கள் எவ்வாறு உணருகிறோம் என்பதை யெகோவாவிடம் சொல்லிவிட்டு காரியங்களை அவரிடமாக விட்டுவிடுகிறோம்’
[பக்கம் 23-ன் படங்கள்]
“ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் மிகச் சிறந்த விதமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் யெகோவாவைத் துதிப்பதற்கு ஒரே ஒரு சந்தர்ப்பத்தை மாத்திரமே தரலாம்”
[பக்கம் 23-ன் படங்கள்]
“கஷ்டங்களை சகித்திருப்பதன் மூலம், சாத்தான் சொன்னது தவறு என்பதை நிரூபிப்பதில் நான் ஒரு பங்கைக் கொண்டிருக்க முடியும்”
[பக்கம் 24-ன் படங்கள்]
“சில பயனியர்கள் கடினமான சூழ்நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு மூப்பர் களிடமிருந்தும் மற்ற பிரஸ்தாபிகளிடமிருந்தும் அதிகமான உற்சாகமூட்டுதல் தேவையாக இருக்கிறது”
[பக்கம் 24-ன் படங்கள்]
‘நமக்கிருக்கும் அநேக ஆசீர்வாதங்களைப் பற்றி நாம் யோசித்துப்பார்க்க வேண்டும்’