உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w97 11/1 பக். 13-18
  • உலகத்தில் இருந்தாலும் அதன் பாகமல்ல

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தில் இருந்தாலும் அதன் பாகமல்ல
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உலக வல்லரசுகளின் தோற்றம்
  • வரவிருக்கிற கடவுளுடைய ராஜ்யத்தின் ஆளுகை
  • ‘மிருகத்தின் முத்திரையைத்’ தவிர்த்தல்
  • அந்த ‘மிருகமும்’ ‘இராயனும்’
  • மனசாட்சியுள்ள குடிமக்கள்
  • கடைசி நாட்களில் நடுநிலைமை வகிக்கும் கிறிஸ்தவர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • கடவுளும் இராயனும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • சாத்தானுடைய உலகத்தின் சார்பாகவா, அல்லது கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையின் சார்பாகவா?
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
  • உலகம்
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
w97 11/1 பக். 13-18

உலகத்தில் இருந்தாலும் அதன் பாகமல்ல

“நீங்கள் உலகத்தின் பாகமாக இராததனால், . . . உலகம் உங்களைப் பகைக்கிறது.”—யோவான் 15:19, NW.

1. உலகத்துடன் கிறிஸ்தவர்களுக்கு எப்படிப்பட்ட உறவு இருக்கிறது, எனினும் உலகம் அவர்களை எவ்வாறு கருதுகிறது?

இயேசு, தம்முடைய சீஷர்களுடன் இருந்த கடைசி இரவில், அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் உலகத்தின் பாகமானவர்கள் அல்லர்.” இதில் எந்த உலகத்தைப் பற்றி அவர் பேசினார்? “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என முன்னொரு சந்தர்ப்பத்தில் அவர் சொல்லியிருந்தார் அல்லவா? (யோவான் 3:16) தெளிவாகவே, சீஷர்கள் அந்த உலகத்தின் பாகமானவர்களாக இருந்தார்கள், ஏனெனில், நித்திய ஜீவனை அடைவதற்கு அவர்களே இயேசுவில் முதலாவதாக விசுவாசம் வைத்தவர்கள். அப்படியானால், உலகத்திலிருந்து தனிப்பட்டவர்களாக தம்முடைய சீஷர்கள் இருந்தார்கள் என்று இயேசு ஏன் இப்போது சொன்னார்? மேலும், “நீங்கள் உலகத்தின் பாகமாக இராததனால், . . . உலகம் உங்களைப் பகைக்கிறது.”—யோவான் 15:19, NW.

2, 3. (அ) எந்த “உலகத்தின்” பாகமாக கிறிஸ்தவர்கள் இருக்கக்கூடாது? (ஆ) கிறிஸ்தவர்கள் பாகமானோராக இராத அந்த ‘உலகத்தைப்’ பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

2 பதில் என்னவென்றால், “உலகம்” (கிரேக்கில் காஸ்மாஸ்) என்ற சொல்லை பைபிள் வெவ்வேறு வழிகளில் பயன்படுத்துகிறது. முந்தின கட்டுரையில் விளக்கினபடி, பைபிளில் “உலகம்” என்பது பொதுவில் மனிதவர்க்கத்தை சில சமயங்களில் குறிக்கிறது. இந்த உலகத்தின்மீதே கடவுள் அன்புகூர்ந்தார், இதற்காகவே இயேசுவும் மரித்தார். எனினும், தி ஆக்ஸ்ஃபர்ட் ஹிஸ்ட்ரி ஆஃப் கிறிஸ்டியானிட்டி என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: ‘உலகம்’ என்பது, கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்டதும் அவரிடமாக பகைமைகொண்டதுமான ஒன்றுக்கு கிறிஸ்தவம் பயன்படுத்தும் ஒரு பதமாகவும் உள்ளது.” இது எவ்வாறு உண்மையாக உள்ளது? லே கரேட்டியன் ஏ லில மான்ட் (கிறிஸ்தவர்களும் உலகமும்) என்ற தன் புத்தகத்தில் கத்தோலிக்க நூலாசிரியர் ரோலான் மினராத் இவ்வாறு விளக்குகிறார்: “எதிர்மறையான கருத்தில் உலகம் என்பது . . . கடவுளுக்கு எதிராகப் பகைமையுடைய அரசாங்கங்கள் தங்கள் நடவடிக்கையை நிறைவேற்றிவரும் அதிகார எல்லை என்பதாகக் காணப்படுகிறது. மேலும் இது, கிறிஸ்துவின் வெற்றிகரமான ஆட்சியை எதிர்ப்பதால் சாத்தானுடைய அதிகாரத்தின்கீழ் ஓர் எதிரி பேரரசாக அமைவதாகவும் உள்ளது.” இந்த “உலகம்” கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்ட மனிதத் திரளாக இருக்கிறது. உண்மையான கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தின் பாகமானவர்கள் அல்லர், இது அவர்களைப் பகைக்கிறது.

3 முதல் நூற்றாண்டின் முடிவில், யோவான் இவ்வாறு எழுதினபோது இந்த உலகத்தையே மனதில் வைத்திருந்தார்: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.” (1 யோவான் 2:15, 16) அவர் மேலும் இவ்வாறு எழுதினார்: “நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.” (1 யோவான் 5:19) இயேசுதாமே, சாத்தானை “இந்த உலகத்தின் அதிபதி” என்று அழைத்தார்.—யோவான் 12:31; 16:11.

உலக வல்லரசுகளின் தோற்றம்

4. உலக வல்லரசுகள் எவ்வாறு தோன்ற ஆரம்பித்தன?

4 கடவுளிடமிருந்து உறவு பிரிக்கப்பட்டதான, இப்போது இருந்து வருகிற மனிதவர்க்க உலகம், நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்திற்குச் சிறிது பின்பு, நோவாவின் சந்ததியார் பலர் யெகோவா தேவனை வணங்குவதை நிறுத்திவிட்டபோது உருவாகத் தொடங்கினது. இது தொடங்கிய நாட்களில் நிம்ரோது பிரசித்தி பெற்றவனாக இருந்தான். இவன், நகரங்களைக் கட்டுபவனாகவும், ‘யெகோவாவுக்கு எதிரான ஒரு பலத்த வேட்டைக்காரனாகவும்’ இருந்தான். (ஆதியாகமம் 10:8-12, NW) அந்த ஆண்டுகளில், இந்த உலகத்தின் பெரும்பாகம் சிறிய நகர-ராஜ்யங்களாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த ராஜ்யங்கள் அவ்வப்போது கூட்டணிகள் அமைத்துக்கொண்டு ஒன்றுக்கொன்று எதிராகப் போரிட்டன. (ஆதியாகமம் 14:1-9) சில நகர-ராஜ்யங்கள் மற்றவற்றின் மேல் ஆதிக்கம் செலுத்துபவையாக, உலகப் பகுதி ஒன்றை ஆளும் வல்லரசுகளாயின. முடிவில், இவ்வாறு பெரும் பகுதிகளை ஆண்ட வல்லரசுகளில் சில, பெரும் உலக வல்லரசுகளாகும் அளவுக்கு உயர்ந்தன.

5, 6. (அ) பைபிள் சரித்திரத்தின் ஏழு உலக வல்லரசுகள் யாவை? (ஆ) இந்த உலக வல்லரசுகள் எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகின்றன, அவற்றிற்கு அதிகாரம் எங்கிருந்து வருகிறது?

5 நிம்ரோதுவின் மாதிரியைப் பின்பற்றி, இந்த உலக வல்லரசுகளின் அதிபதிகள் யெகோவாவை வணங்கவில்லை. இந்த உண்மை அவர்களுடைய கொடூர வன்முறைச் செயல்களில் பிரதிபலித்தது. பைபிளில் இந்த உலக வல்லரசுகள் மூர்க்க மிருகங்களாக அடையாளப்படுத்தி காட்டப்படுகின்றன. இவற்றில், நூற்றாண்டுகளினூடே யெகோவாவின் ஜனங்கள்மீது வல்லமைவாய்ந்த தாக்குதலைச் செய்திருந்த ஆறு வல்லரசுகளை பைபிள் குறித்துக் காட்டுகிறது. இவையாவன: எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதியபெர்சியா, கிரீஸ் மற்றும் ரோம். ரோமுக்குப்பின், ஏழாவது உலக வல்லரசு ஒன்று எழும்புவதைப் பற்றி முன்னறிவிக்கப்பட்டது. (தானியேல் 7:3-7; 8:3-7, 20, 21; வெளிப்படுத்துதல் 17:9, 10) இது, ஆங்கில-அமெரிக்க உலக வல்லரசாக நிரூபித்தது; பிரிட்டிஷ் பேரரசும் அதன் நட்புநாடாகிய ஐக்கிய மாகாணங்களும் அடங்கியதாக இருந்தது; முடிவில் ஐக்கிய மாகாணங்கள் பிரிட்டனைக் காட்டிலும் அதிக வல்லமை பெற்றது. ரோம பேரரசின் கடைசி தடயம் முடிவாக மறைந்துவிட்ட பின்பு, பிரிட்டிஷ் பேரரசு மேலோங்கத் தொடங்கினது.a

6 ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்த இந்த உலக வல்லரசுகள் ஏழும், அமைதியற்ற மனித சமுதாய கடலிலிருந்து எழும்பிவருகிற ஏழு தலைகளையுடைய ஒரு மூர்க்க மிருகத்தின் தலைகளாக, வெளிப்படுத்துதல் புத்தகத்தில் அடையாளமாய்க் குறிக்கப்பட்டிருக்கின்றன. (ஏசாயா 17:12, 13; 57:20, 21; வெளிப்படுத்துதல் 13:1, NW) இந்த ஆளும் மிருகத்திற்கு அதிகாரத்தைக் கொடுப்பது யார்? பைபிள் இவ்வாறு பதிலளிக்கிறது: “வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.” (வெளிப்படுத்துதல் 13:2) பிசாசாகிய சாத்தானே அந்த வலுசர்ப்பமாக இருக்கிறான்.—லூக்கா 4:5, 6; வெளிப்படுத்துதல் 12:9.

வரவிருக்கிற கடவுளுடைய ராஜ்யத்தின் ஆளுகை

7. கிறிஸ்தவர்கள் எதில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், இந்த உலகத்தின் அரசாங்கங்களினிடமாக உள்ள அவர்களுடைய உறவை இது எவ்வாறு பாதிக்கிறது?

7 ஏறக்குறைய 2,000 ஆண்டுகளாக, கிறிஸ்தவர்கள் இவ்வாறு ஜெபித்து வந்திருக்கிறார்கள்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:10) கடவுளுடைய ராஜ்யம் ஒன்றே பூமியில் மெய்யான சமாதானத்தைக் கொண்டுவர முடியும் என்று யெகோவாவின் சாட்சிகள் அறிந்திருக்கிறார்கள். பைபிள் தீர்க்கதரிசனத்தைக் கூர்ந்து கவனித்து வருவோராய், அவர்கள் இந்த ஜெபம் சீக்கிரத்தில் பதிலளிக்கப்படும் என்றும் சீக்கிரத்தில் அந்த ராஜ்யம் பூமியின் விவகார பொறுப்பை ஏற்கும் என்றும் உறுதியாய் நம்புகிறார்கள். (தானியேல் 2:44) இந்த ராஜ்யத்தினிடமாக அவர்கள் கொண்டுள்ள பற்றுறுதியானது உலக அரசாங்கங்களின் விவகாரங்களில் நடுநிலை வகிக்கும்படி அவர்களைச் செய்விக்கிறது.

8. சங்கீதம் 2-ல் முன்னறிவிக்கப்பட்டபடி, கடவுளுடைய ராஜ்யத்தின் ஆட்சிக்கு அரசாங்கங்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன?

8 மத நியமங்களைக் கடைப்பிடிப்பதாக சில தேசங்கள் உரிமை பாராட்டுகின்றன. எனினும், செயலில் யெகோவாவே சர்வலோக பேரரசர் என்ற உண்மையையும், பூமியின்மீது அதிகாரம் செலுத்தும்படி இயேசுவை பரலோக அரசராக அவர் சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்திருக்கிறார் என்ற உண்மையையும் அவை புறக்கணிக்கின்றன. (தானியேல் 4:17; வெளிப்படுத்துதல் 11:15) ஒரு தீர்க்கதரிசன சங்கீதம் இவ்வாறு சொல்கிறது: “யெகோவாவுக்கும் அவர் மேசியாவுக்கும் [இயேசுவுக்கு] விரோதமாய்ப் பூமியின் ராஜாக்கள் எழும்புகிறார்கள்; அதிகாரிகளும் கூடி ஆலோசனை செய்கிறார்கள். அவர்கள் கட்டுகளை அறுத்து அவர்கள் கயிறுகளை நம்மிடமிருந்து எறிந்துவிடுவோம் என்கிறார்கள்.” (சங்கீதம் 2:2, 3, தி.மொ.) தங்கள் தேசிய அளவில் அரசதிகாரம் செலுத்துவதைக் கட்டுப்படுத்தும் தேவ ‘கட்டுகளை’ அல்லது ‘கயிறுகளை’ அரசாங்கங்கள் ஏற்பதில்லை. ஆகையால், தாம் தேர்ந்தெடுத்த அரசராகிய இயேசுவிடம் யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர்.” (சங்கீதம் 2:8, 9) எனினும், இயேசு எதற்காக மரித்தாரோ அந்த மனிதவர்க்க உலகம், முழுமையாக ‘நொறுக்கிப்போடப்படாது.’—யோவான் 3:17.

‘மிருகத்தின் முத்திரையைத்’ தவிர்த்தல்

9, 10. (அ) வெளிப்படுத்துதல் புத்தகத்தில் எதைக் குறித்து நாம் எச்சரிக்கப்படுகிறோம்? (ஆ) ‘மிருகத்தின் முத்திரையைத்’ தரித்திருப்பதால் அடையாளமாகக் காட்டப்படுவது என்ன? (இ) கடவுளுடைய ஊழியர் என்ன முத்திரைகளை ஏற்கிறார்கள்?

9 கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்டட மனிதவர்க்க உலகம், அதன் முடிவுக்குச் சற்று முன்பு, “சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையை . . . தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும்” அதிகமதிகமாக வற்புறுத்தும் என்று, அப்போஸ்தலன் யோவான் பெற்ற வெளிப்படுத்துதல் எச்சரித்தது. (வெளிப்படுத்துதல் 13:16, 17) இதன் அர்த்தமென்ன? வலது கையிலுள்ள முத்திரை, செயல்பட்டு ஆதரிப்பதற்கு பொருத்தமான ஓர் அடையாளமாக இருக்கிறது. நெற்றியிலுள்ள முத்திரையைப் பற்றியதென்ன? தி எக்ஸ்போஸிட்டர்ஸ் கிரீக் டெஸ்டமென்ட் இவ்வாறு சொல்கிறது: “இந்த ஆழ்ந்த மறைபொருளுள்ள அடையாளம், போர்ச்சேவகர்களுக்கும் அடிமைகளுக்கும் தெளிவாகத் தெரிகிறபடி பச்சை குத்தும் அல்லது முத்திரையிடும் பழக்கத்தை . . . ; அல்லது மேலும் குறிப்பாக ஒரு தெய்வத்தின் பெயர் கொண்ட தாயத்தை தரித்திருக்கும் மத பழக்கத்தை குறிக்கிறது.” பல மனிதர்கள் தங்கள் செயல்களாலும் சொற்களாலும் அடையாள அர்த்தத்தில் இந்த “முத்திரையை” தரித்திருக்கிறார்கள், இவ்வாறு, அந்த “மிருகத்தின்” ‘அடிமைகளாக’ அல்லது ‘போர்ச்சேவகர்களாக’ தங்களை அடையாளம் காட்டுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 13:3, 4) அவர்களுடைய எதிர்காலத்தைக் குறித்து, தியாலஜிகல் டிக்ஷ்னரி ஆஃப் த நியூ டெஸ்டமென்ட் இவ்வாறு சொல்கிறது: “கடவுளுடைய சத்துருக்கள், மிருகத்தின் அதன் பெயர் அடங்கிய புதைமறைவான எண்ணாகிய அதன் [முத்திரையை], தங்கள் நெற்றியிலும் ஒரு கையிலும் போடும்படி அனுமதிக்கின்றனர். இது, பொருளாதார மற்றும் வர்த்தக முன்னேற்றத்திற்குரிய பெரும் வாய்ப்புகளை அவர்களுக்கு அளிக்கிறது; ஆனால் கடவுளின் கோபாக்கினைக்கு அவர்களை ஆளாக்கி ஆயிர ஆண்டு ராஜ்யத்திலிருந்து அவர்களை விலக்கி வைக்கிறது, வெளி. 13:16; 14:9; 20:4.”

10 இந்த ‘முத்திரையைப்’ பெறும்படியான வற்புறுத்துதலை எதிர்த்து நிற்பதற்கு மேன்மேலும் அதிகமான தைரியமும் சகிப்புத்தன்மையும் தேவைப்படுகின்றன. (வெளிப்படுத்துதல் 14:9-12) கடவுளுடைய ஊழியர்கள் அத்தகைய பலத்தை உடையோராக இருக்கிறார்கள். என்றபோதிலும், இதன் காரணமாக, அவர்கள் அடிக்கடி பகைக்கப்பட்டு அவதூறாகப் பேசப்படுகிறார்கள். (யோவான் 15:18-20; 17:14, 15) மிருகத்தின் முத்திரையைப் பெற்றிருப்பதற்கு மாறாக, ‘யெகோவாவினுடையவன்’ என அவர்கள் தங்கள் கையில் அடையாள அர்த்தத்தில் எழுதி வைப்பார்கள் என்று ஏசாயா சொன்னார். (ஏசாயா 44:5, தி.மொ.) மேலும், விசுவாச துரோக மதம் செய்திருக்கிற காரியங்களின்பேரில் அவர்கள் ‘பெருமூச்சுவிட்டழுவதால்’, யெகோவாவின் நியாயத்தீர்ப்புகள் நிறைவேற்றப்படுகையில், அழிக்காமல் விடப்படுவதற்குத் தகுதியாயிருப்பவர்களென அவர்களைக் குறிப்பிட்டுக் காட்டும் ஓர் அடையாளக் குறிப்பான முத்திரையை அவர்கள் தங்கள் நெற்றியில் பெறுகிறார்கள்.—எசேக்கியேல் 9:1-7.

11. பூமியின் ஆளுகையை ஏற்பதற்கு கடவுளுடைய ராஜ்யம் வரும் வரையில் ஆளுகை செய்ய மனித அரசாங்கங்களுக்கு யார் அனுமதி அளித்திருக்கிறார்?

11 கிறிஸ்துவின் பரலோக ராஜ்யம், இந்தப் பூமியின் ஆளுகையை முற்றிலுமாக ஏற்கும் அந்தச் சமயம் வரையில் ஆளுகை செய்ய, மனித அரசாங்கங்களை கடவுள் அனுமதிக்கிறார். அரசாங்கங்கள் இருப்பதை கடவுள் தடைசெய்யாமல் விட்டு வருவதை, பேராசிரியர் ஆஸ்கார் குல்மேன், புதிய ஏற்பாட்டில் அரசாங்கம் (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அவர் இவ்வாறு எழுதுகிறார்: “அரசாங்கத்தின் ‘தற்காலிக’ இயல்பின் சிக்கலான இந்தக் கருத்து, அரசாங்கத்தினிடமாக முதல் கிறிஸ்தவர்களுக்கு இருந்த மனப்பான்மை ஏன் இசைவாய் இல்லாமல், ஒருவாறு முரண்படுவதாகத் தோன்றுகிறது என்பதற்கு காரணத்தை அளிக்கிறது. அவ்வாறு இருப்பதாகத் தோன்றுகிறது என்பதை நான் அழுத்திக் கூறுகிறேன். ‘எந்த மனுஷனும் அதிகாரங்களுக்குக் கீழ்ப்படியக்கடவன் . . . ’ என்ற ரோமர் 13:1-ஐ, வெளிப்படுத்துதல் 13: அரசாங்கமே அபிஸ்ஸிலிருந்து எழும்பிவருகிற அந்த மிருகம் என்பதோடுகூட குறிப்பிடுவதே போதுமானது.”

அந்த ‘மிருகமும்’ ‘இராயனும்’

12. மனித அரசாங்கங்களைப் பற்றி என்ன சமநிலையான நோக்குநிலையை உடையோராக யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள்?

12 அரசாங்க அதிகாரத்தில் இருக்கிற எல்லா மனிதரும் சாத்தானுடைய கருவிகள் என்ற முடிவுக்கு வருவது தவறாக இருக்கும். ‘விவேகமுள்ள மனுஷன்’ என்று பைபிளில் விவரிக்கப்பட்டிருக்கிற அதிபதி செர்கியுபவுலைப்போல், சரியான நியமங்களைக் கடைப்பிடிக்கும் ஆட்களாக பலர் தங்களை நிரூபித்திருக்கின்றனர். (அப்போஸ்தலர் 13:7) சில அதிபதிகள், யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் தாங்கள் அறியாதபோதிலும், கடவுள் அளித்துள்ள தங்கள் மனச்சாட்சியால் வழிநடத்தப்பட்டு, சிறுபான்மையோருடைய உரிமைகளின் சார்பாக தைரியத்துடன் செயல்பட்டிருக்கின்றனர். (ரோமர் 2:14, 15) ‘உலகம்’ என்ற சொல்லை, மாறுபட்ட இரண்டு வழிகளில் பைபிள் பயன்படுத்துகிறது என்பதை நினைவில் வையுங்கள்: மனிதவர்க்க உலகம், இதை கடவுள் நேசிக்கிறார், அதை நாமும் நேசிக்க வேண்டும். மற்றொன்று, யெகோவாவிடமிருந்து பிரிக்கப்பட்டு, சாத்தான் அதன் கடவுளாக இருப்பதும் அதிலிருந்து நாம் விலக வேண்டியதுமான மனிதவர்க்க உலகம். (யோவான் 1:9, 10; 17:14; 2 கொரிந்தியர் 4:4; யாக்கோபு 4:4) இவ்வாறு, மனித ஆளுகையினிடமாக யெகோவாவின் ஊழியர் சமநிலையான ஒரு மனப்பான்மையுடையோராக இருக்கின்றனர். கடவுளுடைய ராஜ்யத்தின் ஸ்தானாபதிகளாக அல்லது தூதுவர்களாக நாம் சேவிப்பதாலும் நம்முடைய வாழ்க்கையை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதாலும், அரசியல் விவகாரங்களில் நாம் நடுநிலை வகிக்கிறோம். (2 கொரிந்தியர் 5:20) மற்றபடி, அதிகாரத்தில் இருப்போருக்கு நல்மனச்சாட்சியுடன் கீழ்ப்பட்டிருக்கிறோம்.

13. (அ) மனித அரசாங்கங்களை யெகோவா எவ்வாறு கருதுகிறார்? (ஆ) மனித அரசாங்கங்களுக்குக் கிறிஸ்தவ கீழ்ப்படிதல் எந்த அளவு வரையாகச் செல்கிறது?

13 இந்த சமநிலையான அணுகுமுறை யெகோவா தேவனின் சொந்த நோக்கை பிரதிபலிக்கிறது. உலக வல்லரசுகள், அல்லது சிறிய நாடுகளுங்கூட, தங்கள் அதிகாரத்தை தவறான வகையில் பயன்படுத்தி, தங்கள் ஜனங்களை ஒடுக்கினால், அல்லது கடவுளை வணங்குவோரைத் துன்புறுத்தினால், கொடிய மிருகங்களாக தீர்க்கதரிசனம் அவற்றை விவரிப்பதற்கு நிச்சயமாகவே பொருத்தமானவையாக இருக்கின்றன. (தானியேல் 7:19-21; வெளிப்படுத்துதல் 11:7) எனினும், நீதியில் சட்டத்தையும் ஒழுங்கையும் காத்துவருவதில் கடவுளுடைய நோக்கத்தை தேசிய அரசாங்கங்கள் சேவிக்கையில், அவற்றை தம்முடைய “பொது ஊழியர்களாக” அவர் கருதுகிறார். (ரோமர் 13:6, NW) தம்முடைய ஜனங்கள், மனித அரசாங்கங்களை மதித்து, அவற்றிற்குக் கீழ்ப்பட்டிருக்கும்படி யெகோவா எதிர்பார்க்கிறார்; ஆனால் அவர்கள் கீழ்ப்பட்டிருப்பதில் மட்டுப்பாடுகள் உண்டு. கடவுளுடைய சட்டம் தடைவிதித்திருக்கிற காரியங்களைச் செய்யும்படி கடவுளுடைய ஊழியர்களை மனிதர் கட்டளையிடுகையில், அல்லது செய்யும்படி கடவுள் கட்டளையிட்டிருக்கிற காரியங்களைத் தடுத்து உத்தரவிடுகையில், அப்போஸ்தலர்கள் ஏற்ற நிலைநிற்கையை, அதாவது: “மனிதருக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் அரசராக கடவுளுக்கே நாங்கள் கீழ்ப்படிய வேண்டும்” என்ற நிலைநிற்கையை அவர்கள் ஏற்கிறார்கள்.—அப்போஸ்தலர் 5:29, NW.

14. இயேசு மற்றும் பவுல் ஆகியோரால் மனித அரசாங்கங்களிடமாக கிறிஸ்தவக் கீழ்ப்படிதல் எவ்வாறு விளக்கப்பட்டிருக்கிறது?

14 இயேசு பின்வருமாறு சொன்னபோது, தம்மைப் பின்பற்றுவோருக்கு, அரசாங்கங்களிடமாகவும் கடவுளிடமாகவும் இருதரப்பாரிடமாகவுமே செய்வதற்கான கடமைகள் இருக்குமென அறிவித்தார். “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்.” (மத்தேயு 22:21) கடவுளுடைய ஆவியின் ஏவுதலில் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஒவ்வொரு ஆத்துமாவும் மேலான அதிகாரங்களுக்குக் கீழ்ப்பட்டிருப்பதாக . . . ஆனால், நீ தீமையானதைச் செய்தால் பயந்திரு: ஏனெனில் அது நோக்கமில்லாமல் பட்டயத்தைப் பிடித்தில்லை; அது கடவுளுடைய ஊழியன், தவறானதைச் செய்துவருகிறவன்மீது கோபாக்கினையை நிறைவேற்றும்படி பழிவாங்குகிற ஒன்று. ஆகையால், கோபாக்கினையினிமித்தமாக மட்டுமல்லாமல் உன் மனச்சாட்சியினிமித்தமாகவும் கீழ்ப்பட்டிருக்க உங்களுக்கு வற்புறுத்தலான காரணமுண்டு. இதனிமித்தமே வரியையும் நீங்கள் செலுத்துகிறீர்கள்.” (ரோமர் 13:1, 4-6, NW) பொ.ச. முதல் நூற்றாண்டிலிருந்து இன்று வரையாக, கிறிஸ்தவர்கள், அரசாங்கம் கட்டளையிடுபவற்றிற்கு கவனம் செலுத்தவேண்டியதாக இருந்திருக்கிறது. அரசாங்கம் கேட்பவற்றிற்கு ஒத்துப்போவது தங்கள் வணக்கத்தை விட்டுக்கொடுப்பதற்கு வழிநடத்துமா அல்லது அத்தகைய கட்டளைகள் நியாயமானவையும் மனச்சாட்சியுடன் ஏற்கவேண்டியவையுமாக இருந்தனவா என்பதை அவர்கள் பகுத்தறிய வேண்டியதாக இருந்திருக்கிறது.

மனசாட்சியுள்ள குடிமக்கள்

15. எவ்வாறு யெகோவாவின் சாட்சிகள் தாங்கள் செலுத்த வேண்டியதை மனசாட்சியுடன் இராயனுக்குச் செலுத்துகிறார்கள்?

15 அரசியல் ‘மேலான அதிகாரங்கள்’ கடவுள் அங்கீகரித்துள்ள தங்கள் பங்கை நிறைவேற்றுகையில், கடவுளுடைய ‘ஊழியராக’ இருக்கின்றன. “தீமைசெய்கிறவர்களுக்கு தண்டனை அளிக்கவும் ஆனால் நன்மை செய்கிறவர்களைப் புகழவும்” இருக்கும் அதிகாரமும் இதில் உட்பட்டிருக்கிறது. (1 பேதுரு 2:13, 14, NW) இராயன் சட்டப்படி கேட்கும் வரிகளை யெகோவாவின் ஊழியர் மனச்சாட்சியுடன் செலுத்துகிறார்கள். மேலும், பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தங்கள் மனச்சாட்சி அனுமதிக்கும் அளவுக்கு, ‘துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கிறார்கள், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கிறார்கள்.’’ (தீத்து 3:1) திடீர் விபத்துகள் போன்றவை ஏற்படும்போது மற்றவர்களுக்கு உதவி செய்வதும் ‘நற்கிரியைகளில்’ உட்பட்டிருக்கிறது. அத்தகைய சந்தர்ப்பங்களில் உடன் மனிதரிடமாக யெகோவாவின் சாட்சிகளால் காட்டப்பட்ட பரிவிரக்கத்திற்கு பலர் அத்தாட்சி அளித்திருக்கின்றனர்.—கலாத்தியர் 6:10.

16. அரசாங்கங்களுக்கும் உடன் மனிதருக்கும் என்ன நற்கிரியைகளை யெகோவாவின் சாட்சிகள் மனசாட்சியுடன் செய்கிறார்கள்?

16 யெகோவாவின் சாட்சிகள் தங்கள் உடன் மனிதர்களை நேசிக்கிறார்கள்; நீதியுள்ள “புதிய வானங்களும் புதிய பூமியும்” உண்டாகச் செய்யும்படியான கடவுளுடைய நோக்கத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடையும்படி அவர்களுக்கு உதவி செய்வதே, தாங்கள் அவர்களுக்குச் செய்யக்கூடிய மிக பயனுள்ள நற்கிரியை என்று உணருகிறார்கள். (2 பேதுரு 3:13) பைபிளின் உயர்ந்த ஒழுக்க நியமங்களைப் போதித்தும் அதன்படி செயற்பட்டும் வருவதன் மூலம், மனித சமுதாயத்திற்கு அவர்கள் உபயோகமானவர்களாக இருந்து, பலரை தீயச் செயல்களிலிருந்து தடுத்து காக்கிறார்கள். யெகோவாவின் ஊழியர்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து, அரசாங்க ஊழியர்கள், அதிகாரிகள், நீதிபதிகள், நகர அதிகாரிகள் ஆகியோரிடமாக மரியாதையுடன் நடந்துகொள்கிறார்கள்; ‘கனம்பண்ண வேண்டியவர்களை’ கனம்பண்ணுகிறார்கள். (ரோமர் 13:7) சாட்சிகளாக இருக்கும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் ஆசிரியர்களுடன் மகிழ்ச்சியோடு ஒத்துழைத்து, நன்றாய் படிக்கும்படி தங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்கிறார்கள். இவ்வாறு, தங்கள் பிள்ளைகள் பிற்காலத்தில் தங்கள் வாழ்க்கை தேவைகளுக்காக சம்பாதிக்கும்படியும் சமுதாயத்திற்கு பாரமாயிராதபடியும் செய்கிறார்கள். (1 தெசலோனிக்கேயர் 4:11, 12) தங்கள் சபைகளுக்குள், இன சம்பந்தமான, தப்பெண்ணமும் வகுப்பு வேறுபாடுகளும் இராதபடி சாட்சிகள் தடுத்து, குடும்ப வாழ்க்கையைப் பலப்படுத்துவதற்கு பெரும் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார்கள். (அப்போஸ்தலர் 10:34, 35; கொலோசெயர் 3:18-21) ஆகவே, குடும்ப எதிர்ப்பாளர்கள் அல்லது சமுதாயத்திற்கு உதவிசெய்யாதவர்கள் என்று தங்கள் பேரில் சாட்டும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அவர்கள் தங்கள் செயல்களின்மூலம் காட்டுகிறார்கள். இவ்வாறு, அப்போஸ்தலன் பேதுருவின் வார்த்தைகள் உண்மையாக நிரூபிக்கின்றன: “நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.”—1 பேதுரு 2:15.

17. எவ்வாறு கிறிஸ்தவர்கள், ‘புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் தொடர்ந்து நடந்து’ கொள்ளலாம்?

17 ஆகையால், கிறிஸ்துவை உண்மையாய்ப் பின்பற்றுவோர் “உலகத்தின் பாகமானவர்கள் அல்லர்” என்றபோதிலும், இந்த உலகத்தின் மனித சமுதாயத்தில் அவர்கள் இன்னும் இருக்கிறார்கள், ‘புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் தொடர்ந்து நடந்து’ கொண்டிருக்க வேண்டும். (யோவான் 17:16; கொலோசெயர் 4:5) மேலான அதிகாரங்கள், தம்முடைய ஊழியக்காரனாகச் செயல்படும்படி யெகோவா அனுமதிக்கிற வரையில், நாம் அவற்றிற்குத் தகுந்த மரியாதையை காண்பித்து வருவோம். (ரோமர் 13:1-4) அரசியலினிடமாக நடுநிலை வகிப்பவர்களாக நாம் தொடர்ந்திருந்து வருகையில், “ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும்” ஜெபித்து வருவோம், முக்கியமாய், வணக்க சுயாதீனத்தைப் பாதிக்கக்கூடிய தீர்மானங்களை அவர்கள் எடுக்க நேரிடுகையில் அவ்வாறு செய்வோம். ‘எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படும்படி’ நாம் “எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு” இதை தொடர்ந்து செய்து வருவோம்.—1 தீமோத்தேயு 2:1-4.

[அடிக்குறிப்பு]

a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்த, வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தில், அதிகாரம் 35-ஐப் பாருங்கள்.

மறுபார்வைக்குரிய கேள்விகள்

◻ கிறிஸ்தவர்கள் எந்த “உலகத்தின்” பாகமாக இருக்கிறார்கள், ஆனால் எந்த “உலகத்தின்” பாகமாக அவர்கள் இருக்க முடியாது?

◻ ஓர் ஆளின் கையில் அல்லது நெற்றியில் போடப்படும் ‘மிருகத்தின்’ ‘முத்திரை,’ அடையாளமாகக் குறிப்பது என்ன, யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் என்ன முத்திரைகளை உடையோராக இருக்கின்றனர்?

◻ உண்மையான கிறிஸ்தவர்கள், மனித அரசாங்கங்களினிடமாக சமநிலையான என்ன நோக்குநிலையை உடையோராக இருக்கின்றனர்?

◻ யெகோவாவின் சாட்சிகள், மனித சமுதாயத்தின் நலனுக்கு உதவிசெய்யும் வழிகளில் சில யாவை?

[பக்கம் 16-ன் படங்கள்]

மனித அரசாங்கங்களை கடவுளுடைய ஊழியனாகவும், மூர்க்க மிருகமாகவும் இருவகையிலும் பைபிள் அடையாளம்காட்டுகிறது

[பக்கம் 17-ன் படம்]

மற்றவர்களுக்கு அன்புள்ள அக்கறையைக் காட்டுவதனால், யெகோவாவின் சாட்சிகள் தங்கள் சமுதாயங்களுக்கு சொத்தாக இருக்கிறார்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்