நீதியான ஓர் உலகம்—அதற்காக ஏங்குகிறீர்களா?
மூன்று பாய்மரங்களையும் இரண்டு தளங்களையும் கொண்ட மரக்கலன் ஒன்று அ.ஐ.மா.-விலுள்ள மாசசூட்ஸில் இப்பொழுது கேப் காடாக இருக்கும் கடற்கரையை முத்தமிட வருகிறது. மரக்கலனில் இருந்த பணியாட்களும் 101 பயணிகளும் 66 நாட்களாக கடலில் பயணம் செய்ததில் களைத்துப் போயிருக்கிறார்கள். இவர்கள் மத துன்புறுத்தலிலிருந்தும் பொருளாதார இன்னல்களிலிருந்தும் விடுபடுவதற்காக இந்தக் கடினமான பயணத்தை மேற்கொண்டு அட்லான்டிக் சமுத்திரத்தைக் கடந்து வந்திருக்கிறார்கள்.
மே ஃப்ளவர் என்ற மரக்கலனில் வந்த இந்தப் பயணிகள் 1620, நவம்பர் 11-ம் தேதி நிலப் பகுதியைப் பார்த்த மாத்திரத்தில், ஓர் புதிய அத்தியாயத்தைக் காணும் நம்பிக்கையில் அவர்களுடைய கண்கள் ஒளிவீசுகின்றன. மேம்பட்டதோர் உலகிற்கு அடித்தளம் போடும் ஆசையோடு, மரக்கலனில் இருந்த பயணிகளில் வயதுவந்த ஆண்களில் பெரும்பாலானோர் மே ஃப்ளவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர். “காலனியின் முன்னேற்றத்துக்காக நீதியான, பாரபட்சமற்ற சட்டங்களை” அமல்படுத்த ஒப்புக்கொள்கின்றனர். தார்மீக ரீதியில் அனைவருக்கும் நேர்மையாகவும் நியாயமாகவும் இருக்கும் நீதியான ஓர் உலகை படைப்பதற்கான அவர்களுடைய கனவு நனவாகியிருக்கிறதா?
மே ஃப்ளவரில் கையெழுத்தான ஒப்பந்தம் அமெரிக்க அரசாங்க அமைப்பின் ஓர் அடிக்கல்லாக கருதப்பட்டபோதிலும், உலகம் முழுவதிலும் இருப்பது போலவே அமெரிக்காவிலும் அநீதி மலிந்து கிடக்கிறது. உதாரணமாக, கடைக்காரர் ஒருவரிடமிருந்து கொள்ளையடித்தப் பின்பு அவரை சுட்டுவிட்டு ஓட முயன்றபோது போலீஸாரால் பின்பக்கத்தில் சுடப்பட்ட ஒரு மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள். அவன் போலீஸார் மீதும் நியூ யார்க் நகரின்மீதும் வழக்குத்தொடுத்து, அளிக்கப்பட்ட தீர்ப்பில் பல லட்சக்கணக்கான டாலரைப் பெற்றுக்கொண்டான்.
மற்றொரு உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கலிபோர்னியாவிலுள்ள பாசடீனாவில் சட்டக் கல்லூரி மாணவர்கள் பாரிஸ்டர் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவர் மாரடைப்பினால் கீழே சுருண்டு விழுந்துவிட்டார். மருத்துவ உதவியாளர்கள் வந்து சேரும்வரை அருகிலிருந்த இரண்டு மாணவர்கள் உடனடியாக இதயத் தூண்டுதல் சிகிச்சை (cardiopulmonary resuscitation) அளித்துக்கொண்டிருந்தார்கள். அந்த மனிதனுக்கு உதவிசெய்வதில் அவர்கள் 40 நிமிடங்கள் செலவிட்டார்கள். ஆனால் தேர்வை எழுதி முடிப்பதற்காக அவர்கள் கூடுதலாக 40 நிமிடங்கள் கேட்டபோது, சட்டக் கல்லூரி அதிகாரிகள் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.
குற்றச்செயல்களுக்குக் கிடைக்கும் தண்டனை பற்றிய விஷயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். பொருளியல் ஆய்வாளர் எட் ருபன்ஸ்டன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “பெரும்பாலான குற்றச்செயல்களைச் செய்பவர்கள் ஒருபோதும் கைதாவதில்லை. கைதாகும் அநேகர் தண்டனை பெறுவதில்லை. குற்றவாளிகளாக தீர்க்கப்படும் பலர் நிபந்தனையின்பேரில் விடுவிக்கப்பட்டு விடுகிறார்கள். குற்றவாளியின் நோக்குநிலையில், எதிர்பார்க்கப்படும் தண்டனை ஒருவேளை கிடைக்கலாம், ஆனால் நிச்சயமில்லை.” வீடு புகுந்து கொள்ளையடிப்பது பற்றிய செய்தி குறிப்புகளை வைத்து அவர் இந்த முடிவுக்கு வருகிறார்: “98 சதவீதத்துக்கு மேல், வீடு புகுந்து கொள்ளையடிப்பவன் சிறைக்குச் செல்வதிலிருந்து தப்பிவிடுவான்.” தண்டனை பெறும் அபாயம் குறைவாக இருப்பது அதிகமான குற்றச்செயல்களுக்கும் அதிகமானோர் குற்றச்செயல்களினால் பாதிக்கப்படுவதற்கும் வழிநடத்துகிறது.—பிரசங்கி 8:11.
பல நாடுகளில் சிறுபான்மையினராக இருக்கும் பணக்காரர்கள் இன்னும் அதிக பணக்காரர்களாகிக் கொண்டே போகையில், பெரும்பான்மையினராக இருக்கும் ஏழைகள் பொருளாதார அநீதிகளை எதிர்ப்படுகின்றனர். தங்களுடைய தோலின் நிறம், இனப் பின்னணி, மொழி, பாலினம் அல்லது மதத்தின் காரணமாக தங்களுடைய நிலைமையை மேம்படுத்திக்கொள்ளவோ தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவோகூட அதிக வாய்ப்பில்லாமல் இருக்கும் இடங்களில் இப்படிப்பட்ட அநீதி பரவலாக காணப்படுகிறது. உதாரணமாக த நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாளின் பிரகாரம், “இந்துக்களின் ஆதிக்கம் அதிகமாயுள்ள தென் ஆசியாவில்—பெரும்பாலும் இந்தியாவிலும் நேபாளத்திலும்—சுமார் 25 கோடி மக்கள் தீண்டத்தகாதவர்களாகவே பிறந்து அவ்வாறே மரித்தும் போகிறார்கள்.” இதன் விளைவாக, கோடிக்கணக்கானோர் வறுமையினாலும் பசியினாலும் நோயினாலும் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். தொட்டில் முதல் சுடுகாடு வரையாக வாழ்நாள் முழுக்க அநீதியையே அனுபவிக்கிறார்கள்.
மனிதரின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக தோன்றும் அநீதிகளைப் பற்றி என்ன? பிறவியிலேயே குறைபாடுகளுடன்—குருடாகவோ மனவளர்ச்சி குன்றியோ அல்லது ஊனமாகவோ—பிறக்கும் குழந்தைகளைப்பற்றி எண்ணிப்பாருங்கள். அருகிலுள்ள பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளை வைத்துக் கொஞ்சி விளையாடும்போது தன்னுடைய குழந்தை மட்டும் நொண்டியாக பிறந்தால் அல்லது செத்துப்பிறந்தால் ஒரு பெண் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக உணரமாட்டாளா?
அநீதி அதிகரிக்க அதிகரிக்க அதன் விளைவுகளான பெருந்துயரமும், சமாதானமின்மையும் சந்தோஷமின்மையும் திருப்தியின்மையும் அதிகரித்துக்கொண்டே போவது வருத்தத்திற்குரியதாகும். அநேகர் தங்கள் கண்ணால் காணும் அல்லது அனுபவிக்கும் அநீதியினால் சீற்றங்கொண்டு வன்முறையை நாடியிருக்கிறார்கள்—கடைசியில் மனித துயரம் அதிகமானதுதான் மிச்சம். அநீதி இழைக்கப்பட்டிருப்பதை உணர்ந்த காரணத்தால்தான் பெரும்பாலான போர்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.
நீதியுள்ள ஓர் உலகை படைப்பதில் மனிதன் ஏன் தோல்வியடைந்துவிட்டான்? அப்படிப்பட்ட ஓர் உலகம் வெறும் கனவுதானா?
[பக்கம் 3-ன் படம்]
மே ஃப்ளவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல்
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
Corbis-Bettmann
[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]
Corbis-Bettmann