‘யெகோவாவின் நாளை’ தப்பிப்பிழைத்தல்
“யெகோவாவின் நாள் பெரிது, மகா பயங்கரமானது; அதைச் சகிப்பவன் யார்?”—யோவேல் 2:11, தி.மொ.
1. ‘யெகோவாவின் பயங்கரமான நாள்’ ஏன் மகிழ்ச்சிக்குரிய ஒரு சந்தர்ப்பமாக இருக்கும்?
“பயங்கரமானது”! பெரிதான ‘யெகோவாவின் நாளை’ இவ்வாறே கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய யோவேல் விவரிக்கிறார். எனினும், யெகோவாவை நேசித்து, இயேசுவினுடைய மீட்பின் கிரயபலி அடிப்படையில் ஒப்புக்கொடுத்தவர்களாய் அவரிடம் வந்திருக்கிறவர்களாகிய நாம், யெகோவாவின் நாள் நெருங்கி வருகையில் பயந்து பின்வாங்க வேண்டியதில்லை. நிச்சயமாகவே அது பயங்கரமான நாளாக இருக்கும், ஆனால், அதே சமயத்தில் மகத்தான இரட்சிப்புக்குரிய நாளாகவும் இருக்கும். பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதவர்க்கத்தை தொல்லைப்படுத்தி வந்திருக்கிற பொல்லாத காரிய ஒழுங்குமுறையிலிருந்து விடுதலையாகும் நாளாக அது இருக்கும். அந்த நாளை எதிர்பார்த்து, யோவேல் கடவுளுடைய ஜனத்தை இவ்வாறு ஏவுகிறார்: “மகிழ்ந்து களிகூரு; யெகோவாவே பெரியவற்றைச் செய்[வார்].” இந்த உறுதியையும் சேர்த்துக் குறிப்பிடுகிறார்: “மேலும், யெகோவாவின் பெயரில் தொழுதுகொள்ளுகிற ஒவ்வொருவனும் பத்திரமாய்த் தப்புவான்” பின்பு கடவுளுடைய ராஜ்ய ஏற்பாட்டில், “தப்பியவர்கள் இருப்பார்கள், யெகோவா சொன்னபடியே, தப்பிப்பிழைத்தவர்களுக்குள், யெகோவா அழைக்கிறவர்கள் இருப்பார்கள்.”—யோவேல் 2:11, 21, 22, தி.மொ., 32, NW.
2. கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றத்தில், என்ன நடந்தேறுகிறது (அ) ‘கர்த்தரின் நாளில்’ (ஆ) ‘யெகோவாவின் நாளில்’?
2 யெகோவாவின் பயங்கரமான நாளை, வெளிப்படுத்துதல் 1:10-ல் குறிப்பிட்டுள்ள ‘கர்த்தரின் நாளுடன்’ குழப்பிக்கொள்ளக்கூடாது. பின் குறிப்பிடப்பட்ட இந்த நாள், வெளிப்படுத்துதல் 1-22 அதிகாரங்களில் விவரிக்கப்பட்டுள்ள 16 தரிசனங்களின் நிறைவேற்றத்தை உட்படுத்துகிறது. “இந்தக் காரியங்கள் எப்போது நடக்கும், உம்முடைய வந்திருத்தலுக்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்னவாயிருக்கும்?” என்ற தம்முடைய சீஷர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் இயேசு சொன்ன எல்லா சம்பவங்களின் நிறைவேற்ற காலத்தை அது உட்படுத்துகிறது. இயேசுவின் பரலோக வந்திருத்தல், பயங்கர ‘யுத்தங்கள், பஞ்சங்கள், பகைகள், கொள்ளைநோய்கள், அக்கிரமம்’ ஆகியவற்றால் பூமியில் குறித்துக் காட்டப்பட்டிருக்கிறது. இந்தத் துயரங்கள் பெருகியிருக்கையில், “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தியை, குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும் சகல தேசத்தாருக்கும் ஒரு சாட்சியாக” பிரசங்கிக்கும்படி, தம்முடைய தற்கால சீஷர்களை அனுப்புவதன்மூலம், கடவுளுக்குப் பயந்து நடக்கும் மனிதருக்கு இயேசு ஆறுதலை அளித்திருக்கிறார். பின்பு, கர்த்தரின் நாளினுடைய உச்சக்கட்டமாக, தற்போதைய காரிய ஒழுங்குமுறையின் ‘முடிவாகிய,’ யெகோவாவின் பயங்கர நாள் திடீரென்று தொடங்கும். (மத்தேயு 24:3-14, NW; லூக்கா 21:11) அது, சாத்தானின் சீரழிந்த உலகத்தின்மீது ஆக்கினைத் தீர்ப்பை விரைவாக நிறைவேற்றுவதற்கான யெகோவாவின் நாளாக இருக்கும். “வானமும் பூமியும் அசையும்; யெகோவா தமது ஜனத்துக்கு அடைக்கல”மாக இருப்பார்.—யோவேல் 3:16, தி.மொ.
நோவாவின் நாட்களில் யெகோவா நடவடிக்கை எடுக்கிறார்
3. இன்றைய நிலைமைகள் எவ்வாறு “நோவாவின் நாட்களில்” இருந்ததற்கு ஒப்பாக உள்ளன?
3 இன்றைய உலக நிலைமைகள், 4,000-த்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக, “நோவாவின் நாட்களில்” இருந்ததற்கு ஒப்பாக உள்ளன. (லூக்கா 17:26, 27) ஆதியாகமம் 6:5-ல், நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் [யெகோவா] கண்டார்.” இன்றைய உலகம் எவ்வளவாய் அதைப்போலவே இருக்கிறது! அக்கிரமமும், பேராசையும், அன்பற்ற தன்மையும் எங்கும் நிறைந்திருக்கின்றன. மனிதனின் ஒழுக்கச் சீர்கேடு அடிமட்டத்தை எட்டிவிட்டது என்று நாம் சில சமயங்களில் நினைக்கலாம். ஆனால், ‘கடைசி நாட்களைப்’ பற்றிய அப்போஸ்தலன் பவுலின் தீர்க்கதரிசனம் தொடர்ந்து நிறைவேறிக்கொண்டிருக்கிறது: “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.”—2 தீமோத்தேயு 3:1, 13.
4. பூர்வ காலங்களில் பொய் வணக்கம் என்ன பாதிப்பை ஏற்படுத்தியது?
4 நோவாவின் காலத்தில் மதம் மனிதவர்க்கத்திற்கு துயர்த்தீர்ப்பைக் கொண்டுவந்திருக்க முடியுமா? அதற்கு எதிர்மாறாக, அப்போது இருந்ததைப்போன்ற விசுவாசதுரோக மதம், அந்தச் சீரழிவான நிலைமைகளுக்கு மிகப் பேரளவில் காரணமாக இருந்திருக்கும். ‘பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பின்’ பொய்ப் போதகத்திற்கு, நம் முதல் பெற்றோர் இணங்கிப்போயினர். ஆதாமின் இரண்டாவது தலைமுறையில், “யெகோவாவின் பெயரில் கூப்பிடுவது தொடங்கப்பட்டது,” தேவதூஷணத்திற்காகவே எனத் தோன்றுகிறது. (வெளிப்படுத்துதல் 12:9; ஆதியாகமம் 3:3-6; 4:26, தி.மொ.) பின்னால், கலகஞ்செய்த தூதர்கள், கடவுளுக்குத் தனிப்பட்ட பக்தி செலுத்துவதை விட்டுவிட்டு, சௌந்தரியமுள்ள மனித குமாரத்திகளுடன் தகாத பாலுறவுகள் கொள்ளும்படி கண்ணுக்குப் புலப்படும் மனித உருவெடுத்தனர். இந்தப் பெண்கள், நெபிலிம் எனப்பட்ட இனக்கலப்பு பிறவிகளான இராட்சதர்களைப் பெற்றெடுத்தார்கள். இந்த இராட்சதர்கள் மனிதவர்க்கத்தை ஒடுக்கி கொடுமைப்படுத்தினார்கள். இந்தப் பேய்த்தன செல்வாக்கில், ‘மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டார்கள்.’—ஆதியாகமம் 6:1-12.
5. நோவாவின் நாளின் சம்பவங்களைக் குறிப்பிட்டு, என்ன எச்சரிக்கையான அறிவுரையை இயேசு நமக்குக் கொடுக்கிறார்?
5 எனினும், ஒரு குடும்பம், யெகோவாவிடம் உத்தமத்தைக் காத்து வந்தது. ஆகையால், கடவுள், “நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவாவுட்பட எட்டுப்பேரைக் காப்பாற்றிப் பக்தியில்லாதவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணினார்.” (2 பேதுரு 2:5, தி.மொ.) இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைக் குறிக்கிற யெகோவாவின் பயங்கரமான நாளுக்கு அந்த ஜலப்பிரளயம் முன்நிழலாய் இருந்தது. இதைக் குறித்து இயேசு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் [“வந்திருத்தலிலும்,” NW] நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் [“வந்திருத்தலிலும்,” NW] நடக்கும்.” (மத்தேயு 24:36-39) இன்று நாம், அதேப்போன்ற சூழ்நிலையில் இருக்கிறோம். ஆகையால், ‘எச்சரிக்கையாயிருங்கள். இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பும்படி, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்’ என்று இயேசு நமக்கு அறிவுரை கூறுகிறார்.—லூக்கா 21:34-36.
சோதோம் கொமோராவுக்கு யெகோவாவின் நீதித்தீர்ப்பு தண்டனை
6, 7. (அ) லோத்தின் காலத்தில் நடந்த சம்பவங்களால் எது முன்நிழலாகக் குறிக்கப்பட்டிருக்கிறது? (ஆ) என்ன தெளிவான எச்சரிக்கையை இது நமக்கு அளிக்கிறது?
6 ஜலப்பிரளயத்திற்குப்பின், சில நூற்றாண்டுகளுக்கு அப்பால், நோவாவின் சந்ததியார் பூமியில் பெருகினபோது, உண்மையுள்ள ஆபிரகாமும் அவருடைய சகோதரன் மகனான லோத்தும், யெகோவாவின் மற்றொரு பயங்கரமான நாளுக்கு கண்கண்ட சாட்சிகளாக இருந்தனர். லோத்தும் அவருடைய குடும்பத்தாரும் சோதோம் பட்டணத்தில் வாழ்ந்தனர். அதற்கு அருகிலிருந்த கொமோராவோடுகூட, இந்தப் பட்டணம் அருவருப்பான பாலுறவு ஒழுக்கக்கேடு நிரம்பியவையாயிருந்தது. பொருளாசையும் முக்கிய அக்கறைக்குரியதாயிற்று, முடிவில், லோத்தின் மனைவிகூட அதனால் பாதிக்கப்பட்டாள். யெகோவா ஆபிரகாமிடம் இவ்வாறு சொன்னார்: ‘சோதோம் கொமோராவின்பேரில் எழும் கூக்குரல் பெரிதாயிருக்கிறது, அவைகளின் பாவம் மிகவும் கொடியதாயிருக்கிறது.’ (ஆதியாகமம் 18:20, தி.மொ.) அந்தப் பட்டணங்களில் இருந்த நீதிமான்களின் நிமித்தமாக அவற்றை அழிக்காமல் விடும்படி, ஆபிரகாம் யெகோவாவிடம் மன்றாடினார். ஆனால், அங்கே பத்து நீதிமான்களையும்கூட தாம் காண முடியவில்லை என்று யெகோவா அறிவித்தார். லோத்தும் அவருடைய இரண்டு குமாரத்திகளும் அருகிலிருந்த சோவார் பட்டணத்துக்கு தப்பியோட, கடவுள் அனுப்பின தூதர்கள் அவர்களுக்கு உதவி செய்தார்கள்.
7 பின்பு என்ன சம்பவித்தது? நம்முடைய ‘கடைசி நாட்களை’ லோத்தின் நாட்களோடு ஒப்பிட்டு, லூக்கா 17:28-30 இவ்வாறு அறிவிக்கிறது: “லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.” யெகோவாவின் அந்தப் பயங்கரமான நாளில் சோதோம் கொமோராவுக்கு நேரிட்ட பேரழிவு, இயேசுவின் வந்திருத்தலுக்குரிய காலத்தில் வாழும் நமக்கு, தெளிவான எச்சரிக்கையை அளிக்கிறது. இந்தத் தற்கால மனிதவர்க்க சந்ததியும்கூட, ‘விபசாரத்தில் மிதமிஞ்சி, அந்நிய மாம்சத்தை நாடித் தொடர்ந்திருக்கிறது.’ (யூதா 7, தி.மொ.) மேலும், நம்முடைய காலங்களின் பாலின ஒழுக்கக்கேட்டு நடத்தைகள், இந்நாளில் ஏற்படுமென இயேசு முன்னறிவித்த ‘கொள்ளை நோய்கள்’ பலவற்றிற்குக் காரணமாக இருந்திருக்கின்றன.—லூக்கா 21:11.
இஸ்ரவேல் “சூறைக்காற்றை” அறுவடை செய்கிறது
8. இஸ்ரவேலர் எந்தளவுக்கு யெகோவாவின் உடன்படிக்கையைக் கைக்கொண்டார்கள்?
8 ஏற்ற காலத்தில், இஸ்ரவேலை, ‘சகல ஜனங்களிலும் தமக்குச் சொந்த சம்பத்தாயிருக்கும்படி, . . . ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாக’ யெகோவா தெரிந்துகொண்டார். ஆனால் இது, அவர்கள், ‘அவருடைய வாக்கை உள்ளபடி கேட்டு, அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொள்வதன்பேரில்’ சார்ந்திருந்தது. (யாத்திராகமம் 19:5, 6) இந்த மகத்தான சிலாக்கியத்தை அவர்கள் உயர்வாக மதித்தார்களா? இல்லவே இல்லை! அந்த ஜனத்தில், உண்மையுள்ள தனி நபர்கள்—மோசே, சாமுவேல், தாவீது, யோசபாத், எசேக்கியா, யோசியா போன்றவர்களும், பக்தியுள்ள தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசினிகளும்—உண்மைத்தவறாமல் சேவித்தார்கள் என்பது மெய்யே. எனினும், மொத்தத்தில் அந்த ஜனம் உண்மையற்றதாக இருந்தது. காலப் போக்கில், அந்த ராஜ்யம்—இஸ்ரவேல் எனவும் யூதா எனவும்—இரண்டாகப் பிளவுற்றது. பொதுவில், அந்த இரண்டு ராஜ்யங்களுமே, அண்டை நாடுகளின் பலதெய்வ வணக்கம், கடவுளை அவமதிக்கும் மற்ற பழக்கவழக்கங்கள் ஆகிய கண்ணிகளில் சிக்கிக்கொண்டன.—எசேக்கியேல் 23:49.
9. கலகக்கார பத்துக் கோத்திர ராஜ்யத்தை யெகோவா எவ்வாறு நியாயந்தீர்த்தார்?
9 காரியங்களை யெகோவா எவ்வாறு நியாயந்தீர்த்தார்? ஆமோஸால் கூறப்பட்ட பின்வரும் நியமத்திற்கு இசைவாக, எப்போதும்போல், எச்சரிக்கை விடுத்தார்: “யெகோவாவாகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தமது ஊழியருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.” இஸ்ரவேலின் வட ராஜ்யத்திற்கு வரவிருந்த ஆபத்தை ஆமோஸ் தானே இவ்வாறு அறிவித்தார்: “யெகோவாவின் நாளை நீங்கள் விரும்புவதேன்? அந்த நாள் வெளிச்சமல்ல அந்தகாரமே.” (ஆமோஸ் 3:7; 5:18; தி.மொ.) மேலுமாக, ஆமோஸின் உடன் தீர்க்கதரிசியாகிய ஓசியா இவ்வாறு அறிவித்தார்: “அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்.” (ஓசியா 8:7) பொ.ச.மு. 740-ல், வட ராஜ்யமாகிய இஸ்ரவேலை நிரந்தரமாக இல்லாதபடி அழித்துப்போட அசீரிய படையை யெகோவா பயன்படுத்தினார்.
விசுவாசதுரோக யூதாவுடன் யெகோவாவின் நீதித்தீர்ப்பு
10, 11. (அ) யெகோவா ஏன் யூதாவை மன்னிக்க மனதில்லாதிருந்தார்? (ஆ) அருவருக்கத்தக்க என்ன காரியங்கள் அந்த ஜனத்தைக் கறைபடுத்தியிருந்தன?
10 தென் ராஜ்யமாகிய யூதாவுக்கும் யெகோவா தம்முடைய தீர்க்கதரிசிகளை அனுப்பினார். இருப்பினும், மனாசேயையும் அவருக்குப்பின் ஆண்ட ஆமோனையும் போன்ற யூதாவின் இத்தகைய அரசர்கள், ‘குற்றமில்லாத இரத்தத்தை மிகுதியாகச் சிந்தி, நரகலான விக்கிரகங்களைச் சேவித்து அவைகளைப் பணிந்துகொண்டு,’ யெகோவாவின் பார்வையில் பொல்லாப்பானதைத் தொடர்ந்து செய்துவந்தார்கள். ஆமோனின் குமாரனாகிய யோசியா, யெகோவாவின் பார்வையில் நேர்மையானதைச் செய்த போதிலும், அவருக்குப் பின் ஆண்ட அரசர்களும், ஜனங்களும்கூட மறுபடியுமாக அக்கிரமத்தில் மூழ்கிப்போனார்கள். ஆகையால், “யெகோவா மன்னிக்க மனதில்லாதிருந்தார்.”—2 இராஜாக்கள் 21:16-21; 24:3, 4, தி.மொ.
11 யெகோவா, தம்முடைய தீர்க்கதரிசியாகிய எரேமியாவின்மூலம் இவ்வாறு அறிவித்தார்: “திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்திலே நடந்துவருகிறது. தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்ன செய்வீர்கள்?” யூத ஜனம் மிதமிஞ்சிய இரத்தப்பழியை சுமக்கிறது; அந்த ஜனங்கள், திருடுதல், கொலைசெய்தல், விபசாரம்செய்தல், பொய்யாணையிடுதல், அந்நிய தேவர்களைப் பின்பற்றுதல், இன்னும் மற்ற அருவருப்புகளைச் செய்தல் ஆகியவற்றின் மூலம் கறைபட்டிருந்தார்கள். கடவுளுடைய ஆலயம் ‘கள்ளர் குகை’ ஆயிற்று.—எரேமியா 2:34; 5:30, 31; 7:8-12.
12. உண்மை வணக்கத்தைவிட்டு விலகிய எருசலேமை யெகோவா எவ்வாறு தண்டித்தார்?
12 யெகோவா அறிவித்தார்: “நான் வடக்கேயிருந்து [கல்தேயாவிலிருந்து] பொல்லாப்பையும், மகா சங்காரத்தையும் வரப்பண்ணுகிறேன்.” (எரேமியா 4:6) இவ்வாறு, உண்மை வணக்கத்தைவிட்டு விலகிய எருசலேமையும் அதன் ஆலயத்தையும் நொறுக்குவதற்கு, “சர்வ பூமியின் சம்மட்டி” என்ற பாபிலோனிய உலக வல்லரசை அந்தச் சமயத்தில் வரவழைத்தார். (எரேமியா 50:23) பொ.ச.மு. 607-ல், கடுமையான முற்றுகைக்குப்பின், அந்த நகரம் நேபுகாத்நேச்சாரின் பலத்த படைகளால் கைப்பற்றப்பட்டது. “பின்பு பாபிலோன் ராஜா ரிப்லாவிலே, சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டுவித்தான்; யூதா பிரபுக்கள் அனைவரையும் பாபிலோன் ராஜா வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் கெடுத்து, அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோக அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டான். கல்தேயர், ராஜாவின் அரமனையையும் ஜனத்தின் வீடுகளையும் அக்கினியால் சுட்டெரித்து, எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள். நகரத்தில் தங்கியிருந்த ஜனங்களையும், தன் பட்சத்தில் ஓடிவந்துவிட்டவர்களையும், மீதியான மற்ற ஜனங்களையும், காவற் சேனாதிபதியாகிய நேபுசராதான் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோனான்.”—எரேமியா 39:6-9.
13. பொ.ச.மு. 607-ல் வந்த யெகோவாவின் நாளில் யார் காப்பாற்றப்பட்டார்கள், ஏன்?
13 நிச்சயமாகவே பயங்கரமான நாள்! எனினும், யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்த சில ஆத்துமாக்கள் அந்தக் கடும் ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்குள் இருந்தார்கள். இஸ்ரவேலரல்லாத ரேகாபியர்களும் இவர்களில் அடங்கியிருந்தார்கள். இவர்கள், யூதேயருக்கு நேர்மாறாக, மனத்தாழ்மையும் கீழ்ப்படிதலுமுள்ள மனப்பான்மையைக் காட்டினார்கள். தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்த துரவில் சாகவிருந்த எரேமியாவைக் காப்பாற்றின உண்மையுள்ள பிரதானியாகிய எபெத்மெலேக்கும், எரேமியாவின் உண்மைப்பற்றுறுதியுள்ள எழுத்தாளர், பாருக்கும்கூட காப்பாற்றப்பட்டார்கள். (எரேமியா 35:18, 19; 38:7-13; 39:15-18; 45:1-5) இப்படிப்பட்டவர்களுக்கே யெகோவா இவ்வாறு அறிவித்தார்: “உங்கள் விஷயமாக நான் கொண்டிருக்கும் எண்ணங்களை நான் அறிவேன், . . . அவைகள் கேட்டையல்ல வாழ்வையே குறித்தவை; வருங்கால நல்நம்பிக்கையை உங்களுக்குக் கொடுப்பதே என் நோக்கம்.” கடவுள் பயமுள்ள யூதர்கள், பாபிலோனை வென்று கைப்பற்றின கோரேசு ராஜாவால் விடுதலை செய்யப்பட்டு, எருசலேமின் நகரத்தையும் ஆலயத்தையும் திரும்பக் கட்டும்படி வந்த சமயமாகிய பொ.ச.மு. 539-ல் அந்த வாக்குறுதி சிறிய அளவில் நிறைவேற்றமடைந்தது. இன்று, பாபிலோனிய மதத்தை விட்டு வெளியேறி, யெகோவாவின் தூய்மையான வணக்கத்தில் திரும்ப நிலைநாட்டப்பட்டிருப்போர், அவ்வாறே, யெகோவாவின் திரும்ப நிலைநாட்டப்படும் பரதீஸில் நித்திய சமாதானத்தின் மகிமையான எதிர்காலத்தை ஆவலோடு எதிர்நோக்கலாம்.—எரேமியா 29:11, தி.மொ.; சங்கீதம் 37:34; வெளிப்படுத்துதல் 18:2, 4.
முதல் நூற்றாண்டு “மகா உபத்திரவம்”
14. யெகோவா ஏன் இஸ்ரவேலை நிரந்தரமாகத் தள்ளிவிட்டார்?
14 பொ.ச. முதல் நூற்றாண்டுக்கு நம் கவனத்தைத் திருப்பலாம். திரும்ப நிலைநாட்டப்பட்ட யூதர்கள், அந்தச் சமயத்திற்குள் மறுபடியுமாக, விசுவாசத்தைவிட்டு விலகியிருந்தனர். யெகோவா, தம்முடைய ஒரே பேறான குமாரனை, தம்முடைய அபிஷேகஞ்செய்யப்பட்டவராக, அல்லது மேசியாவாக பூமிக்கு அனுப்பினார். பொ.ச. 29-லிருந்து 33 வரையான ஆண்டுகளின்போது, இயேசு, இஸ்ரவேல் தேசம் முழுவதிலும் இவ்வாறு சொல்லி, பிரசங்கித்தார்: “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது.” (மத்தேயு 4:17) மேலுமாக, ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தியை யாவரறிய அறிவிப்பதில் தம்மோடு பங்குகொள்வதற்கு, சீஷர்களை அவர் கூட்டிச் சேர்த்து பயிற்றுவித்தார். யூதர்களின் ஆளுநர்கள் எவ்வாறு பிரதிபலித்தனர்? அவர்கள் இயேசுவை நிந்தித்து, கடைசியாக, வாதனையின் கழுமரத்தில் கடும் வேதனையான மரணத்திற்கு அவரை உட்படுத்தும் கொடிய குற்றத்தைச் செய்தார்கள். யெகோவா, யூதரை தம்முடைய ஜனமாயிராதபடி தள்ளிவிட்டார். இப்போது, அந்த ஜனம் நிரந்தரமாகத் தள்ளப்பட்டது.
15. மனந்திரும்பின யூதர்கள் எதை நிறைவேற்றும்படி சிலாக்கியம் அளிக்கப்பட்டார்கள்?
15 உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியை தம்முடைய சீஷர்களின்மீது ஊற்றினார். இது, விரைவில் கூட்டமாக கூடிவந்திருந்த யூதரிடமும் யூத மதத்தை ஏற்றவர்களிடமும் பல மொழிகளில் பேசுவதற்கான திறமையை அவருடைய சீஷர்களுக்கு அளித்தது. கூட்டத்தாரிடம் பேசுகையில், அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு அறிவித்தார்: “இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம். . . . ஆகையினால், நீங்கள் சிலுவையில் [“கழுமரத்தில்,” NW] அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள்.” நேர்மையான யூதர்கள் எவ்வாறு பிரதிபலித்தனர்? அவர்கள், “இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி” தங்கள் பாவங்களை விட்டு மனந்திரும்பி முழுக்காட்டப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 2:32-41) ராஜ்ய பிரசங்கிப்பு விரைவில் பரவினது, 30 ஆண்டுகளுக்குள் அது, “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும்” பரவச்செய்யப்பட்டது.—கொலோசெயர் 1:23.
16. மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலின்மீது தாம் அளித்த ஆக்கினைத்தீர்ப்பு நிறைவேறும்படி சம்பவங்களை யெகோவா எவ்வாறு வழிநடத்தினார்?
16 யெகோவா, தாம் தள்ளிவிட்ட ஜனமாகிய, மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலின்மீது ஆக்கினைத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான காலம் இப்போது வந்தது. அப்போது அறியப்பட்ட உலகமுழுவதிலும் இருந்த தேசங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்தவ சபைக்குள் திரளாக வந்து, ‘தேவனுடைய [ஆவிக்குரிய] இஸ்ரவேலராக’ அபிஷேகஞ்செய்யப்பட்டிருந்தார்கள். (கலாத்தியர் 6:16) எனினும், அந்தக் காலத்து யூத சமுதாயமோவெனில், பகையும் வன்முறை கட்சி பிரிவினையுமான ஒரு போக்கில் மூழ்கியிருந்தது. ‘மேலான அதிகாரங்களுக்கு அடங்கியிருப்பதைப்’ பற்றி பவுல் எழுதினதற்கு நேர்மாறாக, தங்களை ஆண்ட ரோம அதிகாரத்திற்கு விரோதமாக அவர்கள் வெளிப்படையாய் கலகம் செய்தார்கள். (ரோமர் 13:1) பின்தொடர்ந்த சம்பவங்களை யெகோவா வழிநடத்தியதாகத் தோன்றுகிறது. பொ.ச. 66-ல், தளபதி கல்லஸின் தலைமையில், ரோம படைகள் எருசலேமை முற்றுகையிட்டன. தாக்குதல் நடத்திய ரோமர்கள் அந்த நகரத்திற்குள், ஆலய மதில்களைத் தகர்க்கும் அளவுக்குச் சென்றுவிட்டனர். ஜொஸிபஸின் சரித்திரப் பதிவின்படி, அந்த நகரத்தின்மீதும் அந்த ஜனங்கள்மீதும் மெய்யாகவே உபத்திரவம் உண்டாயிற்று.a ஆனால், தாக்குதல் நடத்திய ரோம போர்வீரர்கள் திடீரென்று அதை நிறுத்தி விட்டு பின்வாங்கி ஓடினர். இது, மத்தேயு 24:15, 16-ல் பதிவு செய்யப்பட்டுள்ள தீர்க்கதரிசனத்தில் அறிவுரை அளித்திருந்தபடி, ‘மலைகளுக்கு ஓடிப்போக’ இயேசுவின் சீஷர்களுக்கு வாய்ப்பளித்தது.
17, 18. (அ) எந்த உபத்திரவத்தைக் கொண்டு யூத சமுதாயத்தின்மீது யெகோவா நீதித்தீர்ப்பை நிறைவேற்றினார்? (ஆ) எந்த மாம்சம் ‘பத்திரமாய்த் தப்பினது,’ இது எதற்கு முன்நிழலாக இருந்தது?
17 எனினும், அந்த உபத்திரவத்தின் உச்சக்கட்டத்தில் நடைபெறவிருந்த, யெகோவா அளித்த ஆக்கினைத்தீர்ப்பின் முழு நிறைவேற்றம், இனி வரப்போவதாக இருந்தது. பொ.ச. 70-ல், ரோம படைகள், இப்போது தளபதி டைட்டஸின் தலைமையில், தாக்குதல் நடத்த திரும்பி வந்தன. இந்தத் தடவை அந்தப் போர் உறுதியான முடிவாக இருந்தது! தங்கள் மத்தியிலும்கூட போரிட்டுக்கொண்டிருந்த யூதர்கள், ரோமருக்கு நிகராக இல்லை. அந்த நகரமும் அதன் ஆலயமும் தரைமட்டமாக்கப்பட்டன. பலம் இழந்த, பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் துன்பப்பட்டு மாண்டனர்; ஏறக்குறைய 6,00,000 பிணங்கள் நகர வாசலுக்குப் புறம்பே எறியப்பட்டிருந்தன. நகரம் கைப்பற்றப்பட்ட பின்பு, 97,000 யூதர்கள் கைதிகளாகக் கொண்டுசெல்லப்பட்டனர்; காட்சியரங்குகளில் காட்சிப்பொருளாக பலர் சாகவிருந்தார்கள். மெய்யாகவே, அந்த உபத்திரவ ஆண்டுகளின்போது காப்பாற்றப்பட்ட ஒரே மாம்சம், யோர்தானுக்கு அப்பால் மலைகளுக்கு ஓடிச் சென்றிருந்த கீழ்ப்படிதலுள்ள கிறிஸ்தவர்களேயாவர்.—மத்தேயு 24:21, 22; லூக்கா 21:20-22.
18 இவ்வாறு, ‘இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைப்’ பற்றிய இயேசுவினுடைய பெரிய தீர்க்கதரிசனம், பொ.ச. 66-70-ல் அந்தக் கலகக்கார யூத ஜனத்தின்மீது நீதித்தீர்ப்பை நிறைவேற்றின யெகோவாவின் நாளில் அதன் முதல் நிறைவேற்றத்தை அடைந்தது. (மத்தேயு 24:3-22) எனினும், முழு உலகத்தையும் சீக்கிரத்தில் ஆழ்த்தப்போவதாக இருக்கிற, அந்த முடிவான உபத்திரவமாகிய, ‘யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதன்’ முன்நிழலாக மாத்திரமே அது இருந்தது. (யோவேல் 2:31, தி.மொ.) நீங்கள் எவ்வாறு ‘பத்திரமாய்த் தப்பலாம்’? பின்வரும் கட்டுரை சொல்லும்.
[அடிக்குறிப்புகள்]
a தாக்குதல் நடத்திய ரோமர்கள் நகரத்தை சூழ்ந்துகொண்டு, மதிலின் ஒரு பாகத்தை கீழிருந்து தோண்டிப் பறித்து, யெகோவாவின் ஆலயத்தின் வாசலுக்குத் தீ வைக்கும் நிலையில் இருந்தார்கள். நகரத்திற்குள் சிக்கியிருந்த பல யூதர்களுக்கு இது பயங்கர திகிலை உண்டாக்கியது. ஏனெனில் மரணம் எக்கணமும் ஏற்படலாம் என்பதை அவர்கள் கண்ணாரக் காண்போராய் இருந்தனர் என்று ஜொஸிபஸ் கூறுகிறார்.—யூதர்களின் போர் (ஆங்கிலம்), புத்தகம் II, அதிகாரம் 19.
மறுபார்வைக்கான கேள்விகள்
◻ “கர்த்தரின் நாள்” எவ்வாறு ‘யெகோவாவின் நாளுடன்’ சம்பந்தப்பட்டிருக்கிறது?
◻ நோவாவின் நாளை மறுபார்வையிட்டு, என்ன எச்சரிக்கைக்கு நாம் செவிகொடுக்க வேண்டும்?
◻ சோதோமும் கொமோராவும் என்ன பலத்த பாடத்தை அளிக்கின்றன?
◻ முதல் நூற்றாண்டு ‘மகா உபத்திரவத்தின்போது’ யார் காப்பாற்றப்பட்டார்கள்?
[பக்கம் 15-ன் படம்]
நோவாவின் குடும்பமும் லோத்தின் குடும்பமும் தப்புவதற்கு யெகோவா வழி அருளினது மட்டுமல்லாமல், பொ.ச.மு. 607-லும் பொ.ச. 70-லும்கூட அவ்வாறு செய்தார்