ஜீவனுக்காக ஓடும் ஓட்டத்தை நிறுத்திவிடாதீர்கள்!
“நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.”—எபிரெயர் 12:1.
1, 2. கிளர்ச்சியூட்டும் என்ன சம்பவங்கள் இந்தக் கடைசி நாட்களின்போது யெகோவாவின் ஊழியர்களை மெய்சிலிர்க்க வைக்கின்றன?
கிளர்ச்சியூட்டும், சமாளிக்க கடினமாய் இருக்கும் காலங்களில் நாம் வாழ்கிறோம். எண்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன், 1914-ல், இயேசு கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் அரசராக சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டார். அந்த சமயத்திலிருந்து ‘கர்த்தருடைய நாளும்’ அதோடு இந்தக் காரிய ஒழுங்குமுறையின் ‘முடிவு காலமும்’ தொடங்கின. (வெளிப்படுத்துதல் 1:10; தானியேல் 12:9) அப்போதிருந்து ஜீவனுக்காக ஓடும் கிறிஸ்தவனின் ஓட்டம், மிகைப்பட்ட அவசர வேகத்தை ஏற்றுள்ளது. யெகோவாவின் நோக்கங்களை நிறைவேற்றும்படி, நிற்காமல் தொடர்ந்து செல்கிற, யெகோவாவின் பரலோக அமைப்பாகிய, அவருடைய பரம இரதத்தோடு முன்னேறிக்கொண்டிருப்பதற்கு, கடவுளுடைய ஊழியர்கள் தங்களை ஊக்கமான முயற்சியில் ஈடுபடுத்தியிருக்கின்றனர்.—எசேக்கியேல் 1:4-28; 1 கொரிந்தியர் 9:24.
2 நித்திய ஜீவனை நோக்கிய ‘ஓட்டத்தில் ஓடுகையில்,’ கடவுளுடைய ஜனங்கள் மகிழ்ச்சியைக் கண்டடைந்திருக்கிறார்களா? ஆம், நிச்சயமாகவே! இயேசுவின் சகோதரர்களில் மீதியானவர்கள் கூட்டிச் சேர்க்கப்படுவதைக் காண்பதில் அவர்கள் உள்ளக்கிளர்ச்சியுற்றனர்; 1,44,000 பேரில் மீதியானோர் கடைசியாக முத்தரிக்கப்பட்டு பெரும்பாலும் முடிவடைய இருப்பதைக் கண்டுணர்ந்து களிகூருகின்றனர். (வெளிப்படுத்துதல் 7:3, 4) மேலும், யெகோவா நியமித்த அரசர், ‘பூமியின் பயிரை’ அறுப்பதற்கு தமது அரிவாளை நீட்டியிருப்பதை அறிந்துணர்வதில் ஆர்வ கிளர்ச்சியுறுகின்றனர். (வெளிப்படுத்துதல் 14:15, 16) மேலும் எத்தகைய அறுவடை அது! (மத்தேயு 9:37) இது வரையாக, 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆத்துமாக்கள் கூட்டிச் சேர்க்கப்பட்டுள்ளனர், “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்.” (வெளிப்படுத்துதல் 7:9) அந்தக் கூட்டம் முடிவில் எவ்வளவு பெரிதாகும் என்று ஒருவரும் சொல்ல முடியாது, ஏனெனில் ஒருவராலும் அதை யூகிக்க முடிகிறதில்லை.
3. என்ன இடையூறுகளின் மத்தியிலும் மகிழ்ச்சியுள்ள மனப்பான்மையைப் பெருக்கிவர நாம் எப்போதும் முயற்சி செய்யவேண்டும்?
3 உண்மைதான், ஓட்டத்தில் நாம் விரைந்துகொண்டு இருக்கையில் நம்மை இடறிவிழச் செய்வதற்கு அல்லது தாமதமாக்குவதற்கு சாத்தான் முயற்சி செய்கிறான். (வெளிப்படுத்துதல் 12:17) முடிவு காலத்தைக் குறிக்கிற, போர்களும் பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், மற்ற எல்லா இக்கட்டுகளும் ஆகிய இவற்றினூடே விடாது தொடர்ந்து ஓடுவது எளிதாக இருப்பதில்லை. (மத்தேயு 24:3-9; லூக்கா 21:11; 2 தீமோத்தேயு 3:1-5) இருப்பினும், ஓட்டத்தின் முடிவு நெருங்கி வருகையில் நம்முடைய இருதயங்கள் மகிழ்ச்சியால் துள்ளுகின்றன. தன்னுடைய நாளில் இருந்த உடன் கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கும்படி பவுல் ஊக்குவித்த இந்த மனப்பான்மையைப் பிரதிபலிக்க நாம் பிரயாசப்படுகிறோம்: “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.”—பிலிப்பியர் 4:4.
4. பிலிப்பிய கிறிஸ்தவர்கள் என்ன வகையான மனப்பான்மையைக் காட்டினார்கள்?
4 அந்த வார்த்தைகளைப் பவுல் யாரை நோக்கி சொன்னாரோ அந்தக் கிறிஸ்தவர்கள், தங்கள் விசுவாசத்தில் மகிழ்ச்சியைக் கண்டடைந்தார்கள் என்பதில் எவ்வித சந்தேகமில்லை. ஏனெனில் பவுல் அவர்களிடம்: “கர்த்தருக்குள் தொடர்ந்து களிகூருங்கள்” என்று சொன்னார். (பிலிப்பியர் 3:1, NW) பிலிப்பியர், ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் சேவித்த, தயாளமும் அன்பும் உள்ள சபையாராக இருந்தனர். (பிலிப்பியர் 1:3-5; 4:10, 14-20) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களில் எல்லாருமே அந்த மனப்பான்மையை உடையோராக இருக்கவில்லை. உதாரணமாக, எபிரெயர் புத்தகத்தை பவுல் யாருக்கு எழுதினாரோ அந்த யூதக் கிறிஸ்தவர்களில் சிலர், கவலைக்கிடமாக இருந்தனர்.
“மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்”
5. (அ) முதல் கிறிஸ்தவ சபை அமைக்கப்பட்டபோது எபிரெய கிறிஸ்தவர்கள் என்ன மனப்பான்மை உடையோராக இருந்தார்கள்? (ஆ) ஏறக்குறைய பொ.ச. 60-ல் எபிரெய கிறிஸ்தவர்களில் சிலருக்கு இருந்த மனப்பான்மையை விவரியுங்கள்.
5 உலக சரித்திரத்தில் முதல் கிறிஸ்தவ சபை, பிறவி யூதராலும் யூத மதத்தை ஏற்றவர்களாலும் ஆகியிருந்து, பொ.ச. 33-ல் எருசலேமில் ஸ்தாபிக்கப்பட்டது. அது எத்தகைய மனப்பான்மையை உடையதாய் இருந்தது? துன்புறுத்துதலை எதிர்ப்படுகையிலும்கூட அதன் ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் அறிந்துகொள்வதற்கு, அப்போஸ்தலர் புத்தகத்தின் ஆரம்ப அதிகாரங்களை மாத்திரமே ஒருவர் வாசிப்பதுத் தேவைப்படுகிறது. (அப்போஸ்தலர் 2:44-47; 4:32-34; 5:41; 6:7) எனினும் சில பத்தாண்டுகள் கடந்து சென்றபோது, நிலைமை மாறியது; யூதக் கிறிஸ்தவர்கள் பலருடைய, ஜீவ ஓட்டத்தில் தாமதம் ஆனதாகத் தோன்றினது. ஏறக்குறைய பொ.ச. 60-ல் அவர்கள் இருந்த நிலைமையைப் பற்றி ஒரு சான்றாதாரம் இவ்வாறு சொல்லுகிறது: “கிளர்ச்சியின்மையும் சோர்வும் உற்ற ஓர் நிலைமை, எதிர்பார்ப்புகளின் ஏமாற்றம், நிறைவேறாத நம்பிக்கைகள், வேண்டுமென்றே தவறுவது, எதிலுமே விசுவாசமில்லாமை. அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள் ஆனால், தங்கள் [பரலோக] அழைப்பின் மகிமையைப் பற்றி மிகக் குறைந்த மதித்துணர்வே உடையோராக இருந்தார்கள்.” அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் எவ்வாறு அத்தகைய ஒரு நிலைமைக்குள்ளாகலாம்? (ஏறக்குறைய பொ.ச. 61-ல் எழுதப்பட்ட) எபிரெயருக்கு எழுதின பவுலினுடைய நிருபத்தின் பாகங்களைச் சிந்திப்பது, அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க நமக்கு உதவி செய்கிறது. அத்தகைய சிந்திப்பு, அதைப் போன்ற ஆவிக்குரிய பலவீன நிலைமைக்குள் அமிழ்வதைத் தவிர்ப்பதற்கு இன்று நம்மெல்லாருக்கும் உதவி செய்யும்.
6. மோசேயின் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்ட வணக்கத்திற்கும், இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன்பேரில் ஆதாரம் உடையதாக இருக்கும் வணக்கத்திற்கும் உள்ள சில வேறுபாடுகள் யாவை?
6 எபிரெய கிறிஸ்தவர்கள், மோசேயின் மூலமாக யெகோவா அருளிய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதாக உரிமைபாராட்டின ஓர் ஒழுங்குமுறையாகிய யூத மதத்திலிருந்து வந்தவர்கள். அந்த நியாயப்பிரமாணம் யூதக் கிறிஸ்தவர்கள் பலரின் கவனத்தைத் தொடர்ந்து கவர்ந்திழுத்ததாகத் தோன்றுகிறது. பல நூற்றாண்டுகளாக, அதுவே யெகோவாவை அணுகுவதற்கான ஒரே வழியாக இருந்ததும், ஆசாரியத்துவம், ஒழுங்காய்ச் செலுத்தப்பட்ட பலிகள், எருசலேமிலிருந்த உலக பிரசித்திப்பெற்ற ஆலயம், ஆகியவற்றோடு கவர்ச்சியூட்டிய வணக்க ஒழுங்குமுறையாக இருந்ததும் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். கிறிஸ்தவம் வேறுபட்டதாக இருக்கிறது. “இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து,” ‘அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாய்’ தொடர்ந்திருந்தவராகிய மோசேயின் நோக்குநிலையைப் போன்ற ஆவிக்குரிய நோக்குநிலையை அது கேட்கிறது. (எபிரெயர் 11:26, 27) அத்தகைய நோக்குநிலை யூதக் கிறிஸ்தவர்கள் பலருக்கு இல்லையெனத் தோன்றினது. நோக்கமுள்ள வகையில் ஓடுவதற்குப் பதிலாக, அவர்கள் நொண்டி நொண்டி சென்றனர்.
7. நாம் விட்டு வெளிவந்திருக்கிற அந்த ஒழுங்குமுறை, ஜீவனுக்காக நாம் ஓடும் விதத்தை எவ்வாறு பாதிக்கக்கூடும்?
7 இதைப்போன்ற நிலைமை இன்று உள்ளதா? மறுக்கமுடியாதபடி, இன்று நிலைமைகள் முற்றிலுமாக அதைப்போல் இல்லை. எனினும், பேரளவில் பெருமிதம் பாராட்டுகிற, ஒரு காரிய ஒழுங்குமுறையிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளிவருகிறார்கள். ஆர்வம் எழுப்பும் வாய்ப்புகளை இந்த உலகம் அளிக்க முன்வருகிறது, ஆனால் அதேசமயத்தில், ஜனங்களின்மீது கனத்த பொறுப்புகளை வைக்கிறது. கூடுதலாக, சந்தேக மனப்பான்மை பொதுவாய் நிலவியிருப்பதும், ஜனங்கள் சுயநலமுள்ளோராயும், ‘நான்-முதல்’ என்ற மனப்பான்மை உடையோராயும் இருப்பதுமான நாடுகளில் நம்மில் பலர் வாழக்கூடும். இத்தகைய ஒரு ஒழுங்குமுறையால் செல்வாக்குச் செலுத்தப்பட நம்மை நாம் அனுமதித்தால், நம்முடைய ‘மனக்கண்கள்’ எளிதில் மந்தமாக்கப்படலாம். (எபேசியர் 1:19) ஜீவனுக்காக ஓடும் ஓட்டத்தில், நாம் செல்லும் இடத்தை இனிமேலும் தெளிவாகக் காண முடியவில்லை என்றால், நாம் எப்படி நன்றாக அதை நோக்கி ஓட முடியும்?
8. நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்ட வணக்கத்தைப் பார்க்கிலும் கிறிஸ்தவம் மேன்மையானதாக இருக்கிற வழிகளில் சில யாவை?
8 யூதக் கிறிஸ்தவர்களை ஊக்கி எழுப்புவதற்காக பவுல், மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு மேம்பட்டதாக இருக்கும் கிறிஸ்தவ ஒழுங்குமுறையின் மேன்மையை அவர்களுக்கு நினைப்பூட்டினார். உண்மைதான், பிறவி இஸ்ரவேல் தேசத்தார், நியாயப்பிரமாணத்தின்கீழ் யெகோவாவின் ஜனங்களாக இருந்தபோது, தேவாவியால் ஏவப்பட்ட தீர்க்கதரிசிகளின் மூலமாக யெகோவா அவர்களிடம் பேசினார். ஆனால் இன்று அவர், “குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் [காரிய ஒழுங்குமுறைகளையும், NW] உண்டாக்கினார்,” என்று பவுல் சொல்கிறார். (எபிரெயர் 1:2) மேலும் இயேசு, தம்முடைய ‘தோழர்களாகிய,’ தாவீதின் வம்ச பரம்பரையில் தோன்றிய அரசர்கள் எல்லாரையும்விட மேலானவராக இருக்கிறார். தேவதூதர்களைப் பார்க்கிலும்கூட அவர் உயர்ந்தவர்.—எபிரெயர் 1:5, 6, 9.
9. பவுலின் நாளில் இருந்த யூத கிறிஸ்தவர்களைப்போல், நாம் ஏன் யெகோவா சொல்பவற்றை “மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்”?
9 ஆகையால், தன் யூத கிறிஸ்தவர்களுக்கு பவுல் இவ்வாறு அறிவுரை கூறினார்: “ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டுவிலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.” (எபிரெயர் 2:1) கிறிஸ்துவைப் பற்றி கற்றறிவது அதிசயமான ஆசீர்வாதமாக இருந்தபோதிலும், இன்னும் அதிகம் தேவைப்பட்டது. தங்களைச் சுற்றி இருந்த யூத உலகத்தின் செல்வாக்கை எதிர்த்துத் தடுக்க, கடவுளுடைய வார்த்தைக்கு அவர்கள், கருத்தூன்றிய கவனம் செலுத்த வேண்டியிருந்தது. நாமும்கூட, உலகத்திலிருந்து இடைவிடாது நமக்கு வந்துகொண்டிருக்கும் பிரச்சாரங்களைக் கருதுகையில், யெகோவா சொல்பவற்றை “மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.” இது, நன்றாய் படிக்கும் பழக்கங்களை முன்னேற்றுவித்து, நல்ல பைபிள் வாசிப்பு திட்டத்தைக் கடைப்பிடித்து வருவதைக் குறிக்கிறது. எபிரெயருக்கு எழுதின தன் நிருபத்தில் பவுல் பின் சொல்லுகிறபடி, கூட்டங்களுக்கு வருவதிலும், மற்றவர்களுக்கு நம் விசுவாசத்தை அறிக்கையிடுவதிலும் தவறாமல் இருப்பதையும் இது குறிக்கிறது. (எபிரெயர் 10:23-25) இத்தகைய நடவடிக்கை, நம் மகிமையான நம்பிக்கை நம் பார்வையை விட்டு அகல விடாதபடி ஆவிக்குரிய பிரகாரமாய் விழிப்புள்ளவர்களாக நிலைத்திருக்க நமக்கு உதவிசெய்யும். யெகோவாவின் சிந்தனைகளால் நம் மனதை நாம் நிரப்பினால், இந்த உலகம் நமக்குச் செய்யக்கூடிய எதனாலும் நாம் மூழ்கும்படியாகவோ தடுமாறும்படியாகவோ செய்யப்பட மாட்டோம்.—சங்கீதம் 1:1-3; நீதிமொழிகள் 3:1-6.
“ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள்”
10. (அ) யெகோவாவின் வார்த்தைக்கு ஜாக்கிரதையாய்க் கவனம் செலுத்தாத ஒருவருக்கு என்ன நேரிடலாம்? (ஆ) நாம் எவ்வாறு ‘நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லலாம்’?
10 ஆவிக்குரிய காரியங்களுக்கு நாம் கூர்ந்த கவனம் செலுத்தாவிட்டால், கடவுளுடைய வாக்குறுதிகள் மெய்மை அற்றவைப்போல் தோன்றிவிடலாம். சபைகள், முழுக்கமுழுக்க அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களால் மாத்திரமே ஆகியிருந்து, அப்போஸ்தலரில் சிலர் இன்னும் உயிரோடிருந்த முதல் நூற்றாண்டிலேயே இத்தகையநிலை ஏற்பட்டது. பவுல் எபிரெயரை இவ்வாறு எச்சரித்தார்: “சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.” (எபிரெயர் 3:12, 13) “எச்சரிக்கையாயிருங்கள்” என்ற பவுலின் வார்த்தை, விழிப்புள்ளோராக இருப்பதன் அவசியத்தை அறிவுறுத்துகிறது. ஆபத்து பயமுறுத்துகிறது! விசுவாசக் குறைவாகிய பாவம் நம்முடைய இருதயங்களில் தோன்றி, கடவுளிடமாக நாம் நெருங்கி வருவதற்குப் பதிலாக அவரிடமிருந்து விலகிப்போகச் செய்யலாம். (யாக்கோபு 4:8) தொடர்ந்து ‘ஒருவருக்கொருவர் புத்தி சொல்லும்படி’ பவுல் நமக்கு நினைப்பூட்டுகிறார். சகோதரக் கூட்டுறவின் அன்புக்குரிய அனல் நமக்குத் தேவை. “பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.” (நீதிமொழி 18:1) அத்தகைய கூட்டுறவின் தேவை, சபை கூட்டங்களுக்கும் அசெம்பிளிகளுக்கும் மாநாடுகளுக்கும் தவறாமல் ஆஜராகும்படி கிறிஸ்தவர்களை இன்று தூண்டுவிக்கிறது.
11, 12. அடிப்படை கிறிஸ்தவ கோட்பாடுகளை மாத்திரமே அறிவதோடு திருப்தியடைந்தவர்களாய் நாம் ஏன் இருக்கக்கூடாது?
11 பின்னால் தன் நிருபத்தில், அருமதிப்புள்ள மேலுமான இந்த அறிவுரையை பவுல் கொடுக்கிறார்: “காலத்தைப் பார்த்தால் நீங்கள் போதகராயிருக்கவேண்டியது நியாயம்; ஆனாலோ கடவுளினுடைய வாக்கியங்களின் ஆரம்ப பாலபோதனைகளை மறுபடியும் ஒருவன் உங்களுக்கு உபதேசிப்பது அவசியமாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல பாலை உண்ணவேண்டியவர்களாய்விட்டீர்கள். . . . பலமான ஆகாரம் வயதேறினவர்களுக்கே தகும் இவர்கள் நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியப் பயிற்சியின் மூலமாய்ப் பழகின ஞானேந்திரியங்களையுடையவர்கள்.” (எபிரெயர் 5:12-14, திருத்திய மொழிபெயர்ப்பு) யூதக் கிறிஸ்தவர்களில் சிலர், புரிந்துகொள்வதில் முன்னேறத் தவறினர் என்பதாகத் தோன்றுகிறது. நியாயப்பிரமாணத்தையும் விருத்தசேதனத்தையும் பற்றியவற்றில் அதிகரிக்கப்பட்ட ஒளியை ஏற்பதில் அவர்கள் தாமதமாக இருந்தனர். (அப்போஸ்தலர் 15:27-29; கலாத்தியர் 2:11-14; 6:12, 13) வாராந்தர ஓய்வுநாள், பயபக்தியூட்டின வருடாந்தர பிராயச்சித்த நாள் போன்ற பரம்பரை பழக்கவழக்கங்களை சிலர் உயர்வாக இன்னும் மதித்து வந்திருக்கலாம்.—கொலோசெயர் 2:16, 17; எபிரெயர் 9:1-14.
12 ஆகையால், பவுல் இவ்வாறு சொல்கிறார்: “கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய ஆரம்ப உபதேச வசனங்களை நாம் விட்டு முதிர்ந்த நிலைமைக்கு முன்னேறிச் செல்வோமாக.” (எபிரெயர் 6:1, தி.மொ.) நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் ஓடும் ஒருவன், தன் திட்ட உணவுக்கு தனிப்பட கவனம் செலுத்தி வருகையில், அந்த நீண்ட கடும் ஓட்டத்தைச் சகிக்க முடிகிறவனாக இருக்கிறான். அவ்வாறே, ‘ஆரம்ப உபதேச’ கோட்பாடுகளுக்கு மாத்திரமே தன்னை மட்டுப்படுத்திக்கொள்ளாமல், ஆவிக்குரிய சத்துணவுக்குக் கூர்ந்த கவனம் செலுத்தி வருகிற ஒரு கிறிஸ்தவர், அந்த ஓட்டத்தில் நிலைத்திருந்து முடிக்கக்கூடியவராக இருப்பார். (2 தீமோத்தேயு 4:7-ஐ ஒப்பிடுக.) இது, சத்தியத்தின் “அகலமும், நீளமும், ஆழமும், உயரமும்” ஆகியவற்றில் அக்கறையைப் பெருகச் செய்து, இவ்வாறு முதிர்ச்சிக்கு படிப்படியாய் முன்னேறுவதைக் குறிக்கிறது.—எபேசியர் 3:18.
“பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது”
13. சென்ற காலங்களில், எபிரெயக் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை எவ்வாறு மெய்ப்பித்துக் காட்டியிருந்தனர்?
13 பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின் உடனடியாகத் தொடர்ந்த காலப்பகுதியில், யூதக் கிறிஸ்தவர்கள், கொடிய துன்புறுத்துதலின் மத்தியிலும் உறுதியாய் நிலைநின்றனர். (அப்போஸ்தலர் 8:1) பவுல் பின்வருமாறு எழுதினபோது இது அவர் மனதில் இருந்திருக்கலாம்: “முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே.” (எபிரெயர் 10:32) அவ்வாறு உண்மையுடன் சகித்தது, கடவுளின்மீதிருந்த அவர்களுடைய அன்பை மெய்ப்பித்துக் காட்டி, அவருக்கு முன்பாக பேச்சு சுயாதீனத்தை அவர்களுக்கு அளித்தது. (1 யோவான் 4:17) விசுவாசக் குறைவினால் அந்தப் பேச்சு சுயாதீனத்தை விட்டுவிடாதபடி பவுல் அவர்களுக்கு அறிவுரை கூறுகிறார். அவர்களை இவ்வாறு ஊக்குவிக்கிறார்: “நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.”—எபிரெயர் 10:35-37.
14. யெகோவாவைப் பல ஆண்டுகள் சேவித்த பின்பும் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு என்ன உண்மைகள் நமக்கு உதவி செய்ய வேண்டும்?
14 இன்று நம்மைப் பற்றியதென்ன? கிறிஸ்தவ சத்தியத்தை நாம் முதலாவதாகக் கற்றபோது நம்மில் பெரும்பான்மையர் ஆர்வத்துடன் இருந்தோம். அந்த ஆர்வம் நமக்கு இன்னும் இருக்கிறதா? அல்லது ‘ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டோமா?’ (வெளிப்படுத்துதல் 2:4) அர்மகெதோனுக்காகக் காத்திருப்பதில் நாம் ஆர்வம் குன்றி, ஒருவேளை சற்று ஏமாற்றமடைந்து அல்லது சோர்வுற்று இருக்கிறோமா? எனினும் சற்று நின்று, சிந்தியுங்கள். சத்தியத்தின் தனிமதிப்பு முன்னிருந்ததைவிடக் குன்றிவிடவில்லை. இயேசு இன்னும் நம் பரலோக அரசராக இருக்கிறார். பரதீஸான பூமியில் நித்திய ஜீவனடைவதற்கான நம்பிக்கையுடையோராக நாம் இன்னும் இருக்கிறோம், மேலும், யெகோவாவுடன் உறவுடையோராக நாம் இன்னும் இருக்கிறோம். மேலும் இதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்: “வருகிறவர் . . . வருவார் தாமதம்பண்ணார்.”
15. இயேசுவைப்போல், கிறிஸ்தவர்கள் சிலர் எவ்வாறு கடும் துன்புறுத்துதலைச் சகித்திருக்கின்றனர்?
15 ஆகையால், எபிரெயர் 12:1, 2-ல் பதிவுசெய்யப்பட்ட பவுலின் வார்த்தைகள் மிகப் பொருத்தமாக இருக்கின்றன: “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் [விசுவாசம் இல்லாமை] தள்ளிவிட்டு, விசுவாசத்தைத்துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் [வாதனையின் கழுமரத்தை, NW] சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.” இந்தக் கடைசி நாட்களில் கடவுளுடைய ஊழியர்கள் பல காரியங்களைச் சகித்திருக்கிறார்கள். கொடிய வேதனையான மரண நிலை வரையாகவும் உண்மையுள்ளவராக இருந்த இயேசுவைப்போல், நம்முடைய சகோதர சகோதரிகளில் சிலர் மிகக் கடுமையான துன்புறுத்துதலை—சிறையிருப்பு முகாம்கள், சித்திரவதை, கற்பழிப்பு, மரணத்தையுங்கூட—உண்மையுடன் சகித்திருக்கிறார்கள். (1 பேதுரு 2:21) அவர்களுடைய உத்தமத்தை நாம் கவனிக்கையில், அவர்களிடமாக அன்பினால் நம் இதயம் உணர்ச்சிப் பெருக்கெடுப்பதில்லையா?
16, 17. (அ) தங்கள் விசுவாசத்திற்கு எதிர்ப்பான என்ன சவால்களோடு கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையர் போராட வேண்டியிருக்கிறது? (ஆ) எதை நினைவில் வைப்பது, ஜீவ ஓட்டத்தில் விடாது தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்படி நமக்கு உதவி செய்யும்?
16 எனினும் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களுக்கு, பவுலின் மேலுமான வார்த்தைகள் பொருந்துகின்றன: “பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே.” (எபிரெயர் 12:4) எனினும், இந்த ஒழுங்குமுறையில், சத்தியத்தின் வழி நம்மில் எவருக்கும் எளிதாக இல்லை. உலகப்பிரகாரமான வேலை செய்யும் இடத்தில் அல்லது பள்ளியில், “பாவிகளால் பேசப்படும் எதிர்மாறான பேச்சால்” சிலர் சோர்வுறுகின்றனர், ஏளனத்தைச் சகிக்கின்றனர் அல்லது பாவம் செய்யும்படியான வற்புறுத்தலை எதிர்க்கின்றனர். (எபிரெயர் 12:3, NW) கடவுளுடைய உயர் தராதரங்களைக் காத்துவரும்படியான சிலருடைய தீர்மானத்தை, கடுமையான சோதனை அரித்துவிட்டிருக்கிறது. (எபிரெயர் 13:4, 5) விசுவாசத் துரோகிகள், தங்கள் நச்சுப் பிரச்சாரத்திற்குச் செவிகொடுக்கும் சிலரின் ஆவிக்குரிய சமநிலையை பாதித்திருக்கிறார்கள். (எபிரெயர் 13:9) ஆளுமை வேறுபாடுகள் மற்றவர்களின் மகிழ்ச்சியைக் கெடுத்திருக்கின்றன. பொழுதுபோக்கிலும் ஓய்வுநேர நடவடிக்கைகளிலும் மட்டுக்குமீறி அழுத்தம் வைப்பது சில கிறிஸ்தவர்களின் மனத்திடத்தை குறைய செய்திருக்கிறது. மேலும், இந்தக் காரிய ஒழுங்குமுறையில் வாழ்வதன் பிரச்சினைகளால் நெருக்கப்படுவோராக பெரும்பான்மையர் உணருகின்றனர்.
17 உண்மைதான், இந்தச் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் ஒன்றும் ‘இரத்தஞ்சிந்தப்படத்தக்க அளவான போராட்டம்’ அமைந்தில்லை. சில சூழ்நிலைகள், நாம்தாமே செய்யும் தவறான தீர்மானங்களின் விளைவால் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அவை எல்லாம் நம்முடைய விசுவாசத்திற்கு சவாலாக உள்ளன. இதன் காரணமாகவே, சகிப்புத்தன்மையின்பேரில் இயேசுவின் சிறந்த முன்மாதிரியில் நம்முடைய கண்களை ஊன்ற வைக்க வேண்டும். நம் நம்பிக்கை எவ்வளவு அதிசயமானது என்பதை நாம் ஒருபோதும் மறவாமல் இருப்போமாக. யெகோவா, ‘தம்மை ஆவலாய்த் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறார்’ என்ற நம் நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடாமல் இருப்போமாக. (எபிரெயர் 11:6, தி.மொ.) அப்போது, ஜீவனுக்காக ஓடும் ஓட்டத்தில் விடாது தொடர்ந்து ஓடுவதற்கு ஆவிக்குரிய பலம் நமக்கு இருக்கும்.
நாம் சகிக்க முடியும்
18, 19. தேவாவியால் ஏவப்பட்ட பவுலின் அறிவுரைக்கு, எருசலேமிலிருந்த எபிரெயக் கிறிஸ்தவர்கள் செவிகொடுத்தார்கள் என்று எந்தச் சரித்திர சம்பவங்கள் குறிப்பாய்த் தெரிவிக்கின்றன?
18 பவுலின் நிருபத்திற்கு யூதக் கிறிஸ்தவர்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள்? எபிரெயருக்கு நிருபம் எழுதப்பட்டு ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்குப் பின், யூதேயா போரில் ஈடுபட்டது. பொ.ச. 66-ல், ரோமப் படை எருசலேமை முற்றுகையிட்டு, இயேசுவின் இவ்வார்த்தைகளை நிறைவேற்றினது: “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.” (லூக்கா 21:20) எனினும், அந்தச் சமயத்தில் எருசலேமில் இருக்கும் கிறிஸ்தவர்களின் நன்மைக்காக, இயேசு இவ்வாறு சொன்னார்: “அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.” (லூக்கா 21:21.) ஆகையால், ரோமுடன் செய்யப்பட்ட போர் ஒரு பரீட்சையை வைத்தது: அந்த யூதக் கிறிஸ்தவர்கள், யூத வணக்கத்தின் மையமாகவும், அந்த மகிமையான ஆலயத்தின் முக்கிய இடமாகவும் இருந்த எருசலேமை விட்டுச் செல்வார்களா?
19 என்ன காரணமோ, திடீரென்று, ரோமர் முற்றுகையிடுவதை விட்டு விலகினர். தங்கள் பரிசுத்த நகரத்தை கடவுள் பாதுகாப்பதன் நிரூபணம் என்பதாக, மதப்பற்றுள்ள யூதர்கள் இதைக் கருதியிருக்கலாம். கிறிஸ்தவர்களைப் பற்றியதென்ன? அவர்கள் விலகி ஓடிவிட்டனர் என்று சரித்திரம் நமக்குச் சொல்கிறது. பின்பு, பொ.ச. 70-ல், ரோமர் திரும்பிவந்து எருசலேமை முற்றிலுமாக அழித்தனர். பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. யோவேல் முன்னறிவித்த “யெகோவாவின் நாள்” எருசலேமின்மீது வந்தது. ஆனால், உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் அங்கு இல்லை. அவர்கள் ‘இரட்சிக்கப்பட்டார்கள்.’—யோவேல் 2:30-32, தி.மொ.; அப்போஸ்தலர் 2:16-21.
20. பெரிதான “யெகோவாவின் நாள்” நெருங்கியுள்ளது என்பதை அறிவது, என்ன விதங்களில் நம்மைத் தூண்டுவிக்க வேண்டும்?
20 இன்று, மற்றொரு பெரிதான “யெகோவாவின் நாள்” இந்தக் காரிய ஒழுங்குமுறை முழுவதையும் சீக்கிரத்தில் பாதிக்கும் என்று நாம் அறிந்திருக்கிறோம். (யோவேல் 3:12-14) அந்த நாள் எப்போது வரும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், அது நிச்சயமாகவே வரும் என்று கடவுளுடைய வார்த்தை நமக்கு உறுதிகூறுகிறது! அது தாமதிக்காது என்று யெகோவா சொல்கிறார். (ஆபகூக் 2:3; 2 பேதுரு 3:9, 10) ஆகையால், ‘நாம் கேட்டவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிப்போமாக.’ ‘நம்மை எளிதில் அகப்படுத்துகிற பாவமாகிய’ விசுவாசக் குறைவைத் தவிருங்கள். அது எடுக்கும் காலமளவும் சகித்திருக்கும்படி தீர்மானியுங்கள். யெகோவாவின் பெரும் இரதம் போன்ற பரலோக அமைப்பு முன்னேறுகிறது என்பதை நினைவில் வையுங்கள். அதன் நோக்கத்தை அது நிறைவேற்றும். ஆகையால், நாம் எல்லாரும், ஜீவனுக்காக ஓடும் ஓட்டத்தை நிறுத்திவிடாமல் தொடர்ந்து ஓடுவோமாக!
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ பவுல், பிலிப்பியருக்கு அளித்த என்ன அறிவுரைக்குச் செவிகொடுப்பது, ஜீவனுக்காக ஓடும் ஓட்டத்தில் நிலைத்திருக்க நமக்கு உதவும்?
◻ நம் கவனத்தைத் திருப்பும்படியான இந்த உலகப் போக்கை எதிர்த்துத் தடுப்பதற்கு எது நமக்கு உதவிசெய்யும்?
◻ இந்த ஓட்டத்தில் நிலைத்திருப்பதற்கு நாம் ஒருவருக்கொருவர் எவ்வாறு உதவிசெய்யலாம்?
◻ ஒரு கிறிஸ்தவனைத் தாமதமாக்கக்கூடிய சில காரியங்கள் யாவை?
◻ சகித்து நிலைத்திருப்பதற்கு இயேசுவின் முன்மாதிரி நமக்கு எவ்வாறு உதவிசெய்யலாம்?
[பக்கம் 8, 9-ன் படம்]
ஓட்டக்காரர்களைப்போல் கிறிஸ்தவர்கள் கவனம் சிதறடிக்க எதையும் அனுமதிக்கக்கூடாது
[பக்கம் 10-ன் படம்]
யெகோவாவின் மாபெரும் பரம இரதம், கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதை எதுவும் தடுக்க முடியாது