அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்
உண்மை கடவுளை எலியா உயர்த்துகிறார்
இஸ்ரவேலில் அவரை வலைவீசி தேடிக்கொண்டிருந்தார்கள். அரசன் கண்ணில் பட்டால் போதும், அவருக்கு மரண தண்டனை நிச்சயம். தேடப்பட்ட அந்த நபர் யார்? அவர்தான் யெகோவாவின் தீர்க்கதரிசி எலியா.
அரசன் ஆகாப்பும் அவரது வேற்றுநாட்டு மனைவி யேசபேலும் இஸ்ரவேலில் பாகால் வழிபாட்டை செழித்தோங்க செய்தனர். அதன்விளைவாக, யெகோவா அத்தேசத்தில் பஞ்சம் வரும்படி செய்திருந்தார். நான்காவது வருடமாக பஞ்சம் தொடர்ந்துகொண்டிருந்தது. கோபம்கொண்ட யேசபேல் யெகோவாவின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுகுவிக்க ஆட்களை ஏவினாள், ஆனால் எப்படியும் எலியா தன் கையில் சிக்கவேண்டும் என்று ஆகாப் குறியாக இருந்தார். ஏனென்றால், மூன்று வருடங்களுக்கு முன்பு ஆகாப்பிடம் எலியா இவ்வாறு சொல்லியிருந்தார்: “என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும்.” (1 இராஜாக்கள் 17:1) அவர் சொன்னமாதிரியே பஞ்சம் வந்து, அது தொடர்ந்துகொண்டிருந்தது.
இப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலையில் எலியாவிடம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன்.” எலியா தன் உயிரையே பணயம் வைத்து யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்.—1 இராஜாக்கள் 18:1, 2.
எதிராளிகள் இருவரும் நேருக்கு நேர்
எலியாவைப் பார்த்ததும் ஆகாப் இவ்வாறு கேட்கிறார்: “இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா”? அதற்கு எலியா கொஞ்சமும் பயப்படாமல், “இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்” என்று பதில் சொன்னார். அதன்பிறகு, எல்லா இஸ்ரவேலரையும் அவர்களோடுகூட “பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும் . . . தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும்” கர்மேல் மலையில் வந்து சேரும்படி எலியா, கட்டளையிட்டார். அப்பொழுது எலியா கூட்டத்தினரைப் பார்த்து இவ்வாறு சொன்னார்: “நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; a கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள்.”—1 இராஜாக்கள் 18:17-21.
ஜனங்கள் யாரும் வாய் திறக்கவில்லை. யெகோவாவுக்கு மாத்திரம் செலுத்தவேண்டிய பக்தியைச் செலுத்த தவறியதால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி ஒருவேளை அவர்களைத் குத்தியிருக்கும். (யாத்திராகமம் 20:4, 5) அல்லது தங்கள் உத்தமத்தை யெகோவாவுக்கும் பாகாலுக்கும் இடையே கூறுபோட்ட பாவத்தை உணராத அளவுக்கு அவர்கள் மனசாட்சி கல்லாகி போயிருக்கும். எது எப்படியோ, இரண்டு இளம் காளைகளைக் கொண்டுவரும்படி எலியா கட்டளையிட்டார். அவற்றில் ஒன்று பாகால் தீர்க்கதரிசிகளுக்கு, மற்றொன்று தனக்கு. இந்த இரு காளைகளையும் வெட்டி பலியாக தயார் செய்ய வேண்டும், ஆனால் நெருப்பு மட்டும் வைக்கக்கூடாது. எலியா இவ்வாறு சொன்னார்: “நீங்கள் உங்கள் தெய்வத்தின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் யெகோவாவின் திருநாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன்; அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே [உண்மையான] தெய்வம்.”—1 இராஜாக்கள் 18:23, 24, தி.மொ.
யெகோவா உயர்த்தப்படுகிறார்
பாகால் தீர்க்கதரிசிகள், ‘அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து [குதித்து] ஆடத்தொடங்கினார்கள்.’ அவர்கள் காலைமுதல் மத்தியானம்வரை, “பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும்” என்று கத்திக்கொண்டே இருந்தார்கள். ஆனால் பாகால் எந்த உத்தரவும் தரவில்லை. (1 இராஜாக்கள் 18:26) பிறகு எலியா அவர்களை கேலிசெய்ய ஆரம்பித்தார்: “உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே.” (1 இராஜாக்கள் 18:27) பாகால் தீர்க்கதரிசிகள் தங்களை கத்திகளாலும் ஈட்டிகளாலும் கீறிக்கொள்ளவும் துவங்கினார்கள். புறமதங்களில் கடவுளின் அனுதாபத்தை பெறுவதற்காக இப்படி கீறிக்கொள்ளும் பழக்கம் இருந்துவந்தது. b—1 இராஜாக்கள் 18:28.
மத்தியானவேளை ஆகியும், பாகால் வணக்கத்தார் தொடர்ந்து “தீர்க்கதரிசிகள் போல் நடந்துகொண்டார்கள்” (NW) என்ற இச்சொற்றொடரை இந்தச் சூழமைவில் பார்த்தால், அப்படியே தன்னிலை மறந்து பரவசம் அடைந்தார் போல் அவர்கள் பாவனை செய்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தருகிறது. இப்போது மத்தியானவேளையும் கடந்துவிட்டது, கடைசியில் எலியா மக்களை நோக்கி, “என் கிட்டே வாருங்கள்” என்றார். தகர்க்கப்பட்டிருந்த யெகோவாவின் பலிபீடத்தை எலியா செப்பனிட்டு, பலிபீடத்தை சுற்றி ஒரு வாய்க்கால் வெட்டி, பலிபீடத்தின்மீது விறகுகளை அடுக்கி, ஓர் இளம் காளையைத் துண்டுத்துண்டாக வெட்டி, விறகுகளின்மேல் வைத்தார். அவற்றை எரிக்கவில்லை. எலியா இதையெல்லாம் செய்தபோது எல்லாரும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பிறகு, காளையையும் பலிபீடத்தையும் விறகையும் தொப்பையாக நனையும்படி தண்ணீர் ஊற்றி, வாய்க்காலும் தண்ணீரால் நிரப்பப்பட்டது (மத்தியத்தரைக்கடலில் இருந்து தண்ணீரைக் கொண்டுவந்தார்கள் என்பதில் சந்தேகம் இல்லை). அதன்பிறகு எலியா யெகோவாவிடம் இவ்வாறு ஜெபித்தார்: “இஸ்ரவேலில் நீரே கடவுள் என்றும் நான் உமது ஊழியன் என்றும் இன்றையதினம் விளங்கப்பண்ணும்; யெகோவாவே, எனக்கு உத்தரவளியும், யெகோவாவாகிய நீரே கடவுள் என்றும் தங்கள் இருதயத்தை உம்மிடம் திருப்பச் செய்தவர் நீரே என்றும் இந்த ஜனங்கள் அறியும்படி எனக்கு உத்தரவளியும்.”—1 இராஜாக்கள் 18:29-37, தி.மொ.
அப்போது திடீரென்று வானத்திலிருந்து நெருப்பு இறங்கி, “அந்தத் தகனபலியையும் விறகுகளையும் கற்களையும் மண்ணையும் பட்சித்து வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.” இதைப் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் உடனே முகங்குப்புற விழுந்து: “யெகோவாவே உண்மைக் கடவுள்! யெகோவாவே உண்மைக் கடவுள்!” என்று சொல்லத்தொடங்கினார்கள். எலியாவின் கட்டளைப்படி, பாகால் தீர்க்கதரிசிகளை பிடித்து, கீசோன் ஆற்றுப் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுபோய், அவர்களை வெட்டிப்போட்டார்கள்.—1 இராஜாக்கள் 18:38-40, NW.
நமக்குப் பாடம்
எலியா செய்ததை பார்த்தால், அவர் சூப்பர்மேன் போல் மகா தைரியத்தைக் காட்டினாரோ என்று தோன்றும். ஆனால், “எலியா நம்மைப்போன்ற தன்மையுள்ள மனுஷனே” என்பதை நமக்கு பைபிள் எழுத்தாளன் யாக்கோபு உறுதிசெய்கிறார். (யாக்கோபு 5:17, தி.மொ.) பயத்தையும் துயரத்தையும் கண்டு அஞ்சாமல் இருக்க அவர் ஒன்றும் பனங்காட்டு நரி அல்ல. உதாரணத்திற்கு, பாகால் தீர்க்கதரிசிகளை இழந்துவிட்டதால் கொதித்துப்போன யேசபேல், எப்படியும் எலியாவை பழிக்குப்பழி வாங்குவேன் என்று சபதம் பூண்டதுதான் தாமதம், எலியா தலைதெறிக்க ஓட்டம்பிடித்தார், பின்னர் யெகோவாவினிடத்தில் இவ்வாறு கதறி, ஜெபம் செய்தார்: “போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்.”—1 இராஜாக்கள் 19:4.
எலியாவின் ஆத்துமாவை யெகோவா எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக, இரக்கத்தோடு அவருக்கு உதவி அளித்தார். (1 இராஜாக்கள் 19:5-8) கடவுளின் தற்கால ஊழியர்கள் துயர் மிகுந்த கால கட்டங்களை எதிர்படும்போது, ஒருவேளை எதிர்ப்பினால் துயரங்கள் வரும்போது எலியாவுக்கு உதவியதைப்போல் யெகோவா நிச்சயம் உதவுவார் என்ற நம்பிக்கையோடு இருக்கலாம். இவர்கள் யெகோவாவினிடம் ஜெபித்தால், “இயல்புக்கு மீறிய சக்தியை” இவர்களுக்கு கண்டிப்பாக அருளுவார். அதனால் “எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்” இவர்கள் “ஒடுங்கிப்போகிறதில்லை.” இவ்வாறாக, பொறுமையோடு தாங்கிக்கொள்ள எலியாவுக்கு எப்படி உதவியளிக்கப்பட்டதோ அதேபோல் இவர்களுக்கும் உதவியளிக்கப்படும்.—2 கொரிந்தியர் 4:7, 8, NW.
[அடிக்குறிப்புகள்]
a ஒருவேளை பாகால் வணக்கத்தாரிடையே இருந்த மத சம்பிரதாய ஆட்டத்தை எலியா குறிப்பிட்டிருக்கலாம் என சில கல்விமான்கள் சொல்கிறார்கள். பாகால் தீர்க்கதரிசிகளின் ஆட்டத்தை விவரிக்கும் “குந்திக்குந்தி” என்ற அதே வார்த்தை 1 இராஜாக்கள் 18:26-ல் (NW) காணப்படுகிறது.
b தன்னையே வெட்டிக்கொள்வதும் கீறிக்கொள்வதும் நரபலியோடு தொடர்புடையவை என்று சிலர் சொல்கிறார்கள். உடலை காயப்படுத்தும் அல்லது இரத்தம் சிந்தும் இந்த இரு செயல்களும் ஒரு கடவுளை வரம் அருளும்படி தூண்டமுடியும் என்று மறைமுகமாக உணர்த்தின.