கிறிஸ்தவம் என்ற அழியா சொத்திற்கு நன்றி
க்வென் கூச் என்பவரால் சொல்லப்பட்டது
ஸ்கூலில் நான் ஒரு பக்திப் பாடலை பாடியிருக்கிறேன்; அதில், ‘மகிமையில் வீற்றிருக்கும் உன்னத யெகோவாவே’ என்று ஒரு வரி வரும். ‘யார் இந்த யெகோவா?’ என்று அடிக்கடி யோசித்துப்பார்ப்பேன்.
என் தாத்தா பாட்டிக்கு கடவுள் பக்தி அதிகம். இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், அவர்களுக்கு பைபிள் மாணாக்கர்களோடு பழக்கம் ஏற்பட்டது; யெகோவாவின் சாட்சிகளை அப்போது அப்படித்தான் அழைத்தார்கள். என் அப்பா தொழிலில் கொடிகட்டிப் பறந்து சொத்து சேர்த்துவைத்திருந்தாலும், அவருக்கு கிடைத்திருந்த கிறிஸ்தவம் என்ற சொத்தை ஆரம்பத்தில் தன் மூன்று பிள்ளைகளுக்கும் கொடுக்கத் தவறினார்.
ஒருமுறை அப்பா என் அண்ணன் டக்ளஸுக்கும் தங்கச்சி ஆன்னுக்கும் எனக்கும், அவரது கிரியைகள் மற்றும் கடவுள் யார்? என்ற சிறிய ஆங்கில புத்தகங்களைக் கொடுத்தார். அப்போதுதான் தெரிந்துகொண்டேன், யெகோவா என்பது உண்மையான கடவுளுடைய பெயர் என்று. (சங்கீதம் 83:17) எனக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை! ஆனால் அப்பாவிற்கு எப்படி மறுபடியும் ஆர்வம் வந்தது?
1938-ல் எல்லா நாடுகளும் போருக்கு ஆயத்தமாவதை அப்பா கவனித்தார்; அப்போதுதான், உலகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மனிதன் எடுக்கும் முயற்சிகள் வீண் என்ற ஞானோதயம் பிறந்தது அவருக்கு. யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்திருந்த, எதிரிகள் என்ற ஆங்கில புத்தகத்தை பாட்டி அவருக்கு கொடுத்தார்கள். அதை வாசித்த பிறகு, மனிதரது உண்மையான எதிரி பிசாசாகிய சாத்தான்தான் என்பதையும் கடவுளுடைய அரசாங்கத்தால் மாத்திரமே உலகிற்கு சமாதானத்தைக் கொடுக்க முடியும் என்பதையும் தெரிந்துகொண்டார். a—தானியேல் 2:44; 2 கொரிந்தியர் 4:4.
போர் துவங்கவிருந்த சமயத்தில், வடக்கு லண்டனில் அமைந்திருந்த உவுட் க்ரீனில் யெகோவாவின் சாட்சிகளது ராஜ்ய மன்றத்தில் நடைபெற்ற கூட்டங்களுக்கு நாங்கள் குடும்பமாக செல்ல ஆரம்பித்தோம். 1939, ஜூன் மாதம், “அரசாங்கமும் சமாதானமும்” என்ற தலைப்பில் ஜோஸஃப் எஃப். ரதர்ஃபோர்டு அளிக்கவிருந்த பொதுப் பேச்சைக் கேட்பதற்காக அருகிலிருந்த அலெக்ஸான்ட்ரா பேலஸுக்கு நாங்கள் சென்றோம்; அவர்தான் அப்போது உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரெஸிடென்ட். நியூ யார்க் நகரில் அமைந்த மாடிசன் ஸ்கோயர் கார்டனில் ரதர்ஃபோர்டு அளித்த பேச்சு, லண்டனிலும் மற்ற முக்கிய நகரங்களிலும் ரேடியோ மூலம் ஒலிபரப்பப்பட்டது. பேச்சு தெள்ளத்தெளிவாக கேட்டது; நியூ யார்க்கில் ஒரு ரௌடிக் கும்பல் செய்த கலாட்டா சப்தம் அவ்வளவு தெளிவாக கேட்டதால், எங்கள் ஆடிட்டோரியத்தில்தான் ஏதோ நடக்கிறது என நினைத்து நான் சுற்றுமுற்றும் பார்த்தேன் என்றால் பாருங்களேன்!
பைபிள் சத்தியத்தில் அப்பா காட்டிய வைராக்கியம்
ஒவ்வொரு சனிக்கிழமை சாயங்காலமும் முழுக் குடும்பமாக சேர்ந்து பைபிளைப் படிக்க வேண்டுமென்பதில் அப்பா விடாப்பிடியாக இருந்தார். அடுத்த நாள் காவற்கோபுர படிப்பு நடக்குமென்பதால், முக்கியமாக அந்தத் தலைப்பின் பேரிலேயே நாங்கள் கலந்தாலோசித்தோம். இப்படிப்பட்ட படிப்புகள் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றன; உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், மே 1, 1939, ஆங்கில காவற்கோபுரத்தில் யோசுவாவைப் பற்றியும் ஆயி பட்டணம் கைப்பற்றப்பட்டது பற்றியும் கொடுக்கப்பட்டிருந்த விளக்கம் இன்றும் மனதில் பசுமையாக இருக்கிறது. அந்தப் பதிவு அந்தளவுக்கு என் ஆவலைக் கிளறியதால், எல்லா வசனங்களையும் என் சொந்த பைபிளில் எடுத்துப் பார்த்தேன். அப்படிப்பட்ட ஆராய்ச்சியில் மனம் லயித்துப்போனேன், இன்னமும் அப்படித்தான்.
கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களிடம் சொன்னபோது, பைபிள் போதகங்கள் பசுமரத்தாணிபோல் என் இதயத்தில் பதிந்தன. ஒருநாள் அப்பா, பைபிள் பிரசங்கம் பதிவுசெய்யப்பட்டிருந்த ஒரு கிராமாஃபோனையும், பைபிள் படிப்புக்காக பயன்படுத்திய ஒரு சிறு புத்தகத்தையும், வயதான ஒரு பெண்மணியின் விலாசத்தையும் என்னிடம் கொடுத்தார். பின், அவரைப் போய் சந்திக்கும்படி சொன்னார்.
“என்ன சொல்லணும், என்ன செய்யணும்?” என கேட்டேன்.
“எல்லாமே ரெடியா இருக்கு. கிராமஃபோனை ஆன் செய், கேள்விகளைப் படி, அவர்களிடம் பதில்களை வாசிக்க சொல், அப்புறம் நீ வசனங்களை வாசி, அவ்வளவுதான்” என்றார் அப்பா.
அவர் சொன்னபடியே செய்தேன்; ஒரு பைபிள் படிப்பை நடத்தவும் கற்றுக்கொண்டேன். இப்படியாக ஊழியத்தில் வசனங்களைப் பயன்படுத்துவதன் மூலம், அவற்றை இன்னும் தெளிவாக புரிந்துகொண்டேன்.
போர் கால சவால்
1939-ல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது. அதற்கடுத்த வருடம் யெகோவாவை சேவிப்பதற்காக என்னை ஒப்புக்கொடுத்திருந்ததன் அடையாளமாக முழுக்காட்டுதல் பெற்றேன். அப்போது எனக்கு வெறும் 13 வயது. பயனியர் என அழைக்கப்படும், ஒரு முழுநேர ஊழியக்காரியாய் ஆகவேண்டுமென மனதில் தீர்மானித்தேன். 1941-ல் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு, லெஸ்டர் மாநாட்டின்போது டக்ளஸோடு சேர்ந்து என் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தேன்.
அதற்கடுத்த வருடம், மனசாட்சியின் நிமித்தம் போரில் கலந்துகொள்ள மறுத்ததற்காக அப்பாவை சிறையில் போட்டார்கள். பிள்ளைகளான நாங்கள் எல்லாரும் அம்மாவை கவனித்துக்கொள்ள ஒன்றுகூடி வந்தோம்; போர் நடந்துகொண்டிருந்த அந்தக் கடினமான காலத்தில் வீட்டைக் கவனிப்பதில் அவருக்கு உதவி செய்தோம். அதன்பின், அப்பா விடுதலையாகி வந்தாரோ இல்லையோ, அதற்குள் டக்ளஸுக்கு ராணுவத்தில் சேரும்படி ஆணை வந்தது. “அப்பா விரும்பி சிறைக்கு சென்றாரென்றால், மகனுமா” என்ற தலைப்புச்செய்தியை ஓர் உள்ளூர் செய்தித்தாள் வெளியிட்டது. உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏன் சகமனிதர்களை கொல்ல மாட்டார்கள் என விளக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது; ஆகவே அது ஒரு நல்ல சாட்சியாய் அமைந்தது.—யோவான் 13:35; 1 யோவான் 3:10-12.
போர் காலத்தில், முழுநேர ஊழியம் செய்த அநேக சாட்சிகள் தவறாமல் எங்கள் வீட்டிற்கு வருவார்கள்; பைபிள்பூர்வமாக அவர்கள் பேசியவை எங்களைத் தட்டிக்கொடுத்தன, மனதில் அழியா இடமும் பெற்றன. அப்படிப்பட்ட உண்மையுள்ள கிறிஸ்தவ சகோதரர்களில் ஜான் பார்ரும் ஆல்பர்ட் ஷ்ரோடரும் இருந்தனர்; இப்போது அவர்கள் யெகோவாவின் சாட்சிகளது ஆளும் குழுவின் அங்கத்தினர்கள். என் அம்மா அப்பா மற்றவர்களை மனதார உபசரித்தார்கள், நாங்களும் அப்படியே இருக்க வேண்டுமென சொல்லித்தந்தார்கள்.—எபிரெயர் 13:2.
பதில் சொல்லத் தயார்
நான் பயனியர் செய்ய ஆரம்பித்து சில நாட்களுக்குள்ளாகவே, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஹில்டாவை சந்தித்தேன். அவள் கோபமாக இவ்வாறு சொன்னாள்: “என் கணவர் உங்களப் போலவங்களுக்காகத்தான் மெனக்கெட்டு சண்டை போட்டுக்கிட்டிருக்காரு! நீங்களெல்லாம் ஏன் போருன்னா ஒதுங்கி நிக்கிறீங்க?”
“நான் என்ன செஞ்சிக்கிட்டு இருக்கேங்கறத பத்தி உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா? ஏன் உங்களைப் பார்க்க வந்திருக்கேன்னு உங்களுக்கு தெரியுமா?” என கேட்டேன்.
“ம். . உள்ள வேணா வந்து சொல்லுங்க” என்றாள்.
பெரும்பாலும் கடவுளின் பெயரில் செய்யப்படும் கொடுமைகளால் அவதிப்படும் மக்களுக்கு நாங்கள் உண்மையான நம்பிக்கையை அளித்துவருவதாக விளக்கினேன். நான் சொன்னதை ஹில்டா ஆர்வத்தோடு கேட்டாள்; என்னோடு தவறாமல் பைபிளை படித்த முதல் நபரானாள். 55 வருடங்களுக்கும் மேலாக அவள் சுறுசுறுப்பான சாட்சியாய் இருந்துவருகிறாள்.
போர் முடிவடைந்தபோது, இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியைச் சேர்ந்த டார்செஸ்டர் பட்டணத்தில் பயனியர் செய்வதற்கான புதிய நியமிப்பைப் பெற்றேன். முதன்முறையாக வீட்டைவிட்டு பிரிந்து சென்றேன். எங்கள் சிறு சபை ஒரு ரெஸ்டரென்ட்டில் கூடியது; “ஓல்ட் டீ ஹவுஸ்” என்று அழைக்கப்பட்ட அந்தக் கட்டிடம் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஒவ்வொரு கூட்டத்திற்கு முன்பாகவும் நாங்கள் டேபிள்களையும் நாற்காலிகளையும் சரியாக அரேன்ஜ் செய்ய வேண்டியிருந்தது. எனக்கு பழக்கப்பட்டிருந்த ராஜ்ய மன்றத்திலிருந்து இது மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஆனாலும், இங்கு கிடைத்த ஆவிக்குரிய உணவிலும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளின் அன்பான கூட்டுறவிலும் எந்த வித்தியாசமும் இல்லை.
இதற்கிடையே, என் பெற்றோர் லண்டனுக்கு தெற்கே உள்ள டன்ப்ரிஜ் வெல்ஸுக்கு குடிமாறிச் சென்றார்கள். அப்பாவும் ஆன்னும் நானும் சேர்ந்து பயனியர் செய்வதற்காக வீடு திரும்பினேன். சீக்கிரத்திலேயே எங்கள் சபை அங்கத்தினர்களது எண்ணிக்கை 12-லிருந்து 70 ஆக உயர்ந்தது. ஆகவே தெற்குக் கரையோரமாக அமைந்திருந்த ப்ரைட்டனுக்கு குடிமாறிச் செல்லும்படி எங்கள் குடும்பத்தாரைக் கேட்டுக்கொண்டார்கள், ஏனென்றால் ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கான தேவை அங்கு அதிகம் இருந்தது. எங்களது பயனியர் குடும்பத்தோடு சேர்ந்து ஊழியம் செய்வதில் அநேகர் வைராக்கியமாக ஈடுபட்டனர். யெகோவா எங்கள் சேவையை அபரிமிதமாய் ஆசீர்வதித்ததைக் கண்கூடாக பார்த்தோம். அந்த ஒரு சபையே சிறிது காலத்திற்குள் மூன்று சபைகளாக ஆனது!
ஓர் எதிர்பாரா அழைப்பு
1950-ம் ஆண்டின் கோடையில், நியூ யார்க் யான்ங்கீ ஸ்டேடியத்தில் நடைபெற்ற தேவராஜ்ய அதிகரிப்பு சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரிட்டனிலிருந்து 850 பேர் சென்றார்கள், நாங்களும் குடும்பமாக பிரதிநிதிகளாய் சென்றிருந்தோம். மற்ற நாடுகளிலிருந்து அந்த மாநாட்டிற்கு வரவிருந்த அநேக பயனியர்களுக்கு உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் கலந்துகொள்வதற்காக விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கப்பட்டன; அது நியூ யார்க்கிலுள்ள தென் லான்ஸிங் அருகே அமைந்திருந்தது. டக்ளஸுக்கும் ஆன்னுக்கும் எனக்கும்கூட விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன! விண்ணப்பத்தை பூர்த்தி செய்து போஸ்ட் பாக்ஸிற்குள் போட்டபோது, ‘இப்போது உண்மையிலேயே இந்தப் பொறுப்பு என்மேல் விழுந்திருக்கிறது! இனி என் வாழ்க்கை எப்படி மாறப்போகுதோ?’ என நினைத்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஆனாலும் நான் எடுத்த தீர்மானம்: ‘இதோ இருக்கிறேன், என்னை அனுப்பும்.’ (ஏசாயா 6:8) மாநாட்டிற்குப்பின் அங்கேயே தங்கி டக்ளஸோடும் ஆன்னோடும் 16-வது கிலியட் பள்ளியில் கலந்துகொள்ளும்படி அழைக்கப்பட்டபோது என் உள்ளம் சிலிர்த்தது. உலகில் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் மிஷனரிகளாய் அனுப்புவார்கள் என்று எங்கள் எல்லாருக்கும் நன்றாகவே தெரியும்.
குடும்பமாக சந்தோஷமாய் மாநாட்டில் கலந்துகொண்டோம்; ஆனால் இப்போது அப்பா அம்மா மாத்திரம் இங்கிலாந்துக்கு திரும்பவேண்டிய நேரம் வந்தது. மாரிடேனியா கப்பல் கிளம்பியபோது, நாங்கள் மூவரும் கையசைத்து அவர்களுக்கு பிரியாவிடை கொடுத்தோம். அந்தப் பிரிவால் மனம் பட்ட வேதனையை சொன்னால் புரியாது!
மிஷனரி நியமிப்புகள்
16-வது கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள உலகின் எல்லா பகுதிகளிலிருந்தும் 120 மாணாக்கர்கள் வந்திருந்தனர்; அவர்களில் சிலர், நாசி கான்ஸன்ட்ரேஷன் முகாம்களில் அவதிப்பட்டவர்கள். எங்கள் வகுப்பிற்கு ஸ்பானிய மொழி கற்றுத்தரப்பட்டதால், தென் அமெரிக்காவில் அம்மொழி பேசப்படும் ஏதோவொரு நாட்டிற்கு எங்களை அனுப்புவார்கள் என நினைத்தோம். ஆனால் டக்ளஸ் ஜப்பானுக்கும், ஆன்னும் நானும் சிரியாவுக்கும் செல்லவேண்டும் என்று பட்டமளிப்பு நாளில் தெரியவந்தபோது ஆச்சரியத்தால் திகைத்துப்போனோம். ஆகவே ஆன்னும் நானும் அரபு மொழி பயில வேண்டியிருந்தது, எங்கள் நியமிப்பு லெபனானுக்கு மாறியபோதும் அரபு மொழியை கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. நாங்கள் விசாவுக்காக காத்திருந்தபோது, வாரத்திற்கு இருமுறை அம்மொழி கற்றுத்தரப்பட்டது; அரபிக் காவற்கோபுரத்திற்கு அச்சுக்கோப்பவரான ஜார்ஜ் ஷாகஷிரி எங்களுக்கு ஆசிரியராய் இருந்தார்.
எந்த பைபிள் நாட்டைப் பற்றி நாங்கள் பள்ளியில் படித்தோமோ அங்கேயே உண்மையில் செல்லவிருந்தது மிகுந்த சந்தோஷமளித்தது! கீத் மற்றும் ஜாய்ஸ் ச்சூ, எட்னா ஸ்டாக்ஹாஸ், ஆலிவ் டர்னர், டாரீன் வார்பர்டன், டாரஸ் உவுட் ஆகியோர் எங்களுடன் அங்கு வந்தார்கள். என்னே ஓர் மகிழ்ச்சி பொங்கும் மிஷனரி குடும்பமானோம்! அந்த மொழியை இன்னுமதிகமாய் கற்றுக்கொள்ள உதவுவதற்காக ஓர் உள்ளூர் சாட்சி எங்களது மிஷனரி வீட்டிற்கு வந்தார்கள். எங்களது தினசரி வகுப்பின்போது, ஒரு சுருக்கமான பிரசங்கத்தை பேசிப் பார்ப்போம். அதன்பின் வெளியே சென்று ஊழியத்தில் பயன்படுத்துவோம்.
முதல் ஒருசில வருடங்கள் நாங்கள் ட்ரிபோலியில் சேவை செய்தோம், அங்கு ஒரு சபை ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. ஜாய்ஸ், எட்னா, ஆலிவ், டாரீன், டாரஸ், ஆன் ஆகியோருடன் நானும் உள்ளூர் சாட்சிகளின் மனைவிகளுக்கும் மகள்களுக்கும், கூட்டங்களிலும் வெளி ஊழியத்திலும் பங்குகொள்வதற்கு உதவினோம். அதுவரை, நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகள், உள்ளூர் பழக்க வழக்கத்தைப் பின்பற்றி, கூட்டங்களில் ஒன்றுசேர்ந்து உட்கார்ந்ததில்லை; அதுமட்டுமல்ல, இந்தக் கிறிஸ்தவ சகோதரிகள் அரிதாகவே வீட்டுக்குவீடு ஊழியம் செய்தனர். வெளி ஊழியத்தில் அந்த ஊர் மொழியில் பேச எங்களுக்கு அவர்களது உதவி தேவைப்பட்டது; அதேசமயத்தில் இந்த ஊழியத்தில் கலந்துகொள்ளும்படி அவர்களையும் உற்சாகப்படுத்த முடிந்தது.
அடுத்ததாக, பூர்வ பட்டணமாகிய சிடோனில் இருந்த சாட்சிகளின் சிறு தொகுதிக்கு உதவும் நியமிப்பை ஆன்னும் நானும் பெற்றோம். சிறிது காலத்திற்குள்ளாகவே, தலைநகரான பெய்ரூட்டிற்கு திரும்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டோம். அங்கு ஆர்மீனிய பாஷை பேசிய சமுதாயத்தில் பைபிள் சத்தியத்தின் விதைகள் விதைக்கப்பட்டிருந்தன, ஆகவே அவர்களுக்கு உதவுவதற்காக நாங்கள் அந்த மொழியைக் கற்றுக்கொண்டோம்.
நியமிப்புகளில் மாற்றங்கள்
இங்கிலாந்தை விட்டு செல்வதற்குமுன் நான் வில்ஃப்ரெட் கூச் என்ற சகோதரரை சந்தித்திருந்தேன். அவர் வைராக்கியமானவர், அன்பானவர், லண்டன் பெத்தேலில் பணியாற்றியவர். வில்ஃப், 15-ம் கிலியட் பள்ளி மாணாக்கராக, 1950-ல் யான்ங்கீ ஸ்டேடியத்தில் நடைபெற்ற மாநாட்டில் பட்டம் பெற்றார். அவர் மிஷனரியாக, நைஜீரியாவின் உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்தில் பணியாற்றும்படி நியமிக்கப்பட்டார். கொஞ்ச காலத்திற்கு நாங்கள் கடிதம் மூலம் பேசிக்கொண்டோம். 1955-ல் லண்டனில் நடைபெற்ற “ஜெயங்கொள்ளும் ராஜ்யம்” மாநாட்டிற்கு நாங்கள் இருவருமே சென்றிருந்தோம். அதன்பின் சில நாட்களுக்குள் எங்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதற்கடுத்த வருடம், கானாவில் எங்கள் திருமணம் நடந்தது; என் கணவரோடு சேர்ந்து நைஜீரியாவிலுள்ள லாகோஸில் மிஷனரி ஊழியத்தை ஆரம்பித்தேன்.
லெபனானில் ஆன்னை விட்டு பிரிந்துவந்த பிறகு, அவள் ஒரு அருமையான கிறிஸ்தவ சகோதரரை மணந்துகொண்டாள்; ஜெரூசலமில் இருக்கையில் அவருக்கு பைபிள் சத்தியம் கிடைத்தது. அப்பா அம்மாவால் எங்கள் கல்யாணத்திற்கு வர முடியவில்லை; ஏனென்றால், எங்கள் மூவரது திருமணமும் வெவ்வேறு நாடுகளில் நடந்தது. ஆனாலும், நாங்கள் எல்லாரும் யெகோவா தேவனை சந்தோஷமாக சேவித்து வந்தோம் என்பதில் அவர்களுக்கு மன திருப்தி.
நைஜீரியாவில் சேவை
லாகோஸிலுள்ள கிளை அலுவலகத்தில், எட்டு பெத்தேல் ஊழியர்களின் ரூம்களை சுத்தம் செய்வதும், அவர்களுக்கு சாப்பாடு தயாரிப்பதும், துணிமணிகளை சலவை செய்வதுமே என் வேலை. எனக்கு கணவர் மட்டுமா கிடைத்தார், ஒரு குடும்பமே கண்ணிமைக்கும் நேரத்தில் கிடைத்துவிட்டது போல் இருந்தது!
வில்ஃபும் நானும் யொருபா மொழியில் சுருக்கமான பைபிள் பிரசங்கங்களைக் கற்றுக்கொண்டோம்; எங்கள் உழைப்புக்கு ஏற்ற வெகுமதி கிடைத்தது. அச்சமயத்தில் நாங்கள் ஓர் இளைஞரை சந்தித்தோம்; இப்போது, அவரது மகனும் மகளும், சுமார் 400 அங்கத்தினர்கள் அடங்கிய நைஜீரியாவின் பெரிய பெத்தேல் குடும்பத்தின் பாகமாக இப்போது சேவை செய்துவருகின்றனர்.
1963-ல், என் கணவர் வில்ஃப், நியூ யார்க் ப்ரூக்ளினில் பத்து-மாத விசேஷ பயிற்றுவிப்பைப் பெறும்படி அழைக்கப்பட்டார். அதை முடித்த பிற்பாடு, அவரை மறுபடியும் இங்கிலாந்துக்கே அனுப்பினார்கள்; இதை நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை. நான் நைஜீரியாவிலேயே இருந்தேன்; பதினான்கே நாட்களில் லண்டனில் வில்ஃபை சந்திக்கவேண்டுமென எனக்கு சொன்னார்கள். நைஜீரியாவில் சேவை செய்தது அந்தளவுக்கு பிடித்துப்போய்விட்டதால், தயக்கத்தோடு அங்கிருந்து புறப்பட்டேன். 14 வருடங்கள் வெளிநாட்டில் சேவை செய்த பிறகு, மறுபடியும் இங்கிலாந்தில் வாழ பழகிக்கொள்வதற்கு காலம் எடுத்தது. ஆனாலும், வயதாகிவிட்ட எங்கள் பெற்றோருக்கு பக்கத்தில் மறுபடியும் வசித்ததில் எங்களுக்கு அதிக மகிழ்ச்சி; ஏனென்றால் அவர்களை நன்றாய் கவனித்துக்கொள்ள முடிந்தது.
நம்பிக்கையே பக்கபலம்
1980 முதற்கொண்டு, வில்ஃப் மண்டலக் கண்காணியாக அநேக நாடுகளுக்கு சென்றார்; அவருடன் செல்லும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. முக்கியமாக நைஜீரியாவுக்கு மறுபடியும் செல்வதை ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். அதன்பின் ஸ்கான்டினேவியாவிற்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் அரபு நாடுகளுக்கும்கூட நாங்கள் சென்றோம், லெபனானுக்கும்தான். இன்ப நினைவுகளுக்கு மனம் பின்னோக்கிச் சென்றது; நான் பார்த்தபோது சிறுவர்களாய் இருந்தவர்களெல்லாம் இப்போது கிறிஸ்தவ மூப்பர்களாய் சேவிப்பதை கண்டபோது எனக்கு அலாதியான பூரிப்பு ஏற்பட்டது.
வருத்தகரமாக, 1992-ன் வசந்த காலத்தில் என் கணவர் இறந்துபோனார். அப்போது அவருக்கு வயது 69 தான். அதை துளியும் எதிர்பார்க்காததால், தாங்கமுடியாத இடி என் தலையில் விழுந்ததுபோல் இருந்தது. 35 வருட இல்லற வாழ்க்கைக்குப் பிறகு, அவரது இழப்பைத் தாங்கிக்கொள்வது என்பது சுலபமாய் இல்லை. ஆனால் என் உலகளாவிய கிறிஸ்தவ குடும்பத்தார் உதவியையும் அன்பையும் பொழிந்திருக்கிறார்கள். எப்போதுமே நினைத்து நினைத்து சந்தோஷப்படும்படியான அநேக அனுபவங்கள் இருந்திருக்கின்றன.
என் அம்மா அப்பா இருவருமே கிறிஸ்தவ உத்தமத்தன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. அம்மா 1981-லும் அப்பா 1986-லும் காலமானார்கள். டக்ளஸும் ஆன்னும் தொடர்ந்து யெகோவாவை உண்மையோடு சேவிக்கிறார்கள். டக்ளஸும் அவன் மனைவி காம்மும் லண்டனுக்கு திரும்பியிருக்கிறார்கள்; அப்பாவை கவனித்துக்கொள்ள வந்தவர்கள் இங்கேயே தங்கிவிட்டனர். ஆன்னும் அவளது குடும்பமும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். கடவுள் கொடுத்துள்ள நம்பிக்கையையும் கிறிஸ்தவம் என்ற சொத்தையும் நாங்கள் எல்லாரும் மிக உயர்வாய் மதிக்கிறோம். தொடர்ந்து ‘பொறுமையோடு காத்திருக்கிறோம்’; உயிருள்ளோரும், உயிர்த்தெழுந்து வரும் அவர்களது அன்பானவர்களும் ஒன்றுசேர்ந்து, யெகோவாவின் பூமிக்குரிய குடும்பமாக என்றென்றும் சேவை செய்யும் அந்த நாளை எதிர்நோக்கியிருக்கிறோம்.—புலம்பல் 3:24, NW.
[அடிக்குறிப்பு]
a என் அப்பா, எர்னஸ்ட் பீவரின் சுயசரிதை, மார்ச் 15, 1980 ஆங்கில காவற்கோபுர பிரதியில் வெளிவந்துள்ளது.
[பக்கம் 23-ன் படங்கள்]
கடிகாரச் சுற்றுப்படி:
13 வயதில் க்வென், என்பீல்ட் ராஜ்ய மன்றத்தில் ஒரு பைபிள் படிப்பை நடித்துக் காட்டுகிறார்
1951-ல் லெபனான், ட்ரிபோலியில் மிஷனரி குடும்பம்
க்வென், காலம்சென்ற தன் கணவர் வில்ஃபுடன்