கடவுள் தந்த புத்தகம்
“தீர்க்கதரிசனம் ஒருபோதும் மனுஷசித்தத்தினால் வரவில்லை; கடவுளிடமிருந்து வந்ததையே பரிசுத்த ஆவியினால் ஏவப்படுகிறவர்களாய் மனுஷர் பேசினார்கள்.” —2 பேதுரு 1:21, திருத்திய மொழிபெயர்ப்பு.
1, 2. (அ) பைபிள் நவீன வாழ்க்கைக்கு பொருந்துமா என்று ஏன் ஒருசிலர் கேள்வி எழுப்புகின்றனர்? (ஆ) பைபிள் கடவுள் தந்த புத்தகம் என்பதை நிரூபித்து காட்ட நாம் என்ன மூன்று சான்றுகளை முன்வைக்கலாம்?
மக்கள் 21-ம் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறார்கள், இப்போதுபோய் அவர்களுக்கு பைபிள் பொருந்துமா? பொருந்தாது என ஒருசிலர் நினைக்கிறார்கள். டாக்டர் ஈலை எஸ். செஸ்சன் என்பவர், பைபிளை காலத்திற்கு ஒத்துவராத ஒரு புத்தகம் என அவர் நினைப்பதற்கு காரணத்தை விளக்கி, இவ்வாறு எழுதினார்: “1924-ல் வெளியிடப்பட்ட வேதியியல் பாட [புத்தகத்தை] இன்றைய வேதியியல் வகுப்பில் பயன்படுத்தும்படி யாருமே சொல்ல மாட்டார்கள். அதன்பிறகு எவ்வளவோ விஷயங்கள் வேதியியலைப் பற்றி தெரியவந்துள்ளன.” மேலோட்டமாகப் பார்த்தால், இந்த விவாதம் அறிவுக்கு ஏற்றதாக தோன்றும். பார்க்கப்போனால், பைபிள் காலத்திலிருந்து இன்றுவரையாக மனிதன் அறிவியலைப் பற்றியும், மன நலத்தைப் பற்றியும், மனித நடத்தையைப் பற்றியும் எவ்வளவோ கற்றுக்கொண்டுவிட்டான். ஆகவே, சிலருக்கு என்ன சந்தேகம் என்றால்: ‘இவ்வளவு பழமையான புத்தகம் அறிவியலுடன் ஒத்துவராத பிழைகள் இன்றி எப்படி இருக்க முடியும்? இப்படிப்பட்ட ஒரு புத்தகத்தில் நம் நாளுக்கு ஏற்ற நடைமுறையான ஆலோசனை இருக்க வாய்ப்பு உள்ளதா என்ன?’
2 இதற்கு பைபிளே பதிலளிக்கிறது. பைபிள் தீர்க்கதரிசிகள் “கடவுளிடமிருந்து வந்ததையே பரிசுத்த ஆவியினால் ஏவப்படுகிறவர்களாய் . . . பேசினார்கள்” என்று 2 பேதுரு 1:21 நமக்கு தெரிவிக்கிறது. இவ்வாறாக பைபிள் கடவுள் தந்த புத்தகம் என்று பைபிளே சுட்டிக்காட்டுகிறது. ஆனால், மற்றவர்களை எப்படி நம்பவைப்பது? பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதற்கு மூன்று சான்றுகளை நாம் பார்க்கலாம்: (1) அறிவியல் ரீதியில் திருத்தமாக உள்ளது, (2) நவீன வாழ்க்கைக்கு நடைமுறையான, கால வரம்பற்ற நியமங்கள் அடங்கியுள்ளது, (3) இதிலுள்ள தீர்க்கதரிசனங்கள் அப்படியே நிறைவேறியதை வரலாற்று உண்மைகள் உறுதிசெய்தன.
அறிவியலோடு ஒத்துப்போகும் புத்தகம்
3. அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டு ஏன் பைபிள் அஞ்சவில்லை?
3 பைபிள் அறிவியல் புத்தகம் அல்ல. ஆனால் கால வெள்ளத்தால் அழிக்க முடியாத சத்தியம் என்னும் புத்தகம். (யோவான் 17:17) அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டு அஞ்சவில்லை பைபிள். பண்டைய “அறிவியல்” கோட்பாடுகள் சில வெறும் கட்டுக்கதைகள் என்று நிரூபிக்கப்பட்டன. இக்கோட்பாடுகளுக்கும் பைபிள் குறிப்பிடும் அறிவியல் சார்ந்த விஷயங்களுக்கும் கொஞ்சம்கூட தொடர்பே இல்லை. பார்க்கப்போனால், பைபிளில் அடங்கியுள்ள கூற்றுகள் அறிவியல் ரீதியில் மிக திருத்தமாக இருப்பதோடு, அந்தக் காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களுக்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, பைபிளும் மருத்துவ அறிவியலும் ஒத்துப்போவதை கவனியுங்கள்.
4, 5. (அ) பண்டைய மருத்துவர்கள் நோய்களைப் பற்றி என்ன புரிந்துகொள்ளவில்லை? (ஆ) எகிப்திய வைத்தியர்களின் வைத்திய முறைகளைப் பற்றி மோசே அறிந்திருந்தார் என எப்படி அடித்து சொல்லலாம்?
4 பண்டைய மருத்துவர்களுக்கு நோய் எப்படி பரவுகிறது என்று முழுமையாக புரியவில்லை. நோயைத் தடுக்க சுகாதாரம் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் அறியவில்லை. அவர்களுடைய மருத்துவ முறைகள் பல, நவீன மருத்துவ தராதரங்களோடு ஒப்பிடுகையில் காட்டுமிராண்டித்தனமாகத் தோன்றும். கிடைக்கக்கூடிய மிகப் பழமையான மருத்துவ புத்தகங்களில் ஒன்று எபர்ஸ் பப்பைரஸ் ஆகும். இது எகிப்தியர் அறிந்திருந்த மருத்துவ முறைகளைப் பற்றி சேகரிக்கப்பட்ட ஒரு தொகுப்பு. இதன் காலம் ஏறக்குறைய பொ.ச.மு. 1550. இதில், “முதலை கடி முதல், கால் நகம் வலி வரை” 700 வகை வியாதிகளுக்கு நிவாரணங்கள் அடங்கி உள்ளன. பெரும்பாலான நிவாரணிகள் ஒன்றுக்கும் உதவாதவை மாத்திரம் அல்ல, அவற்றில் சில பயங்கர ஆபத்தானவையும்கூட. காயத்திற்கு சிகிச்சையளிக்க பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளில் ஒன்று, மனித மலத்தை வேறுசில பொருட்களோடு கலந்து பூசுவதாகும்.
5 எகிப்திய மருத்துவ நிவாரணிகள் அடங்கிய இப்புத்தகம் எழுதப்பட்ட அதே காலப்பகுதியில், பைபிளின் ஆரம்ப புத்தகங்களும் எழுதப்பட்டன. அவற்றுள் மோசேயின் நியாயப்பிரமாணமும் உள்ளடங்கும். மோசே, பொ.ச.மு. 1593-ல் பிறந்து, எகிப்தில் வளர்ந்தார். (யாத்திராகமம் 2:1-10) பார்வோன் குடும்பத்தில் ஒருவராக வளர்க்கப்பட்ட அவருக்கு, ‘எகிப்தியரின் எல்லா ஞானமும் கற்பிக்கப்பட்டது.’ (அப்போஸ்தலர் 7:22, தி.மொ.) அவருக்கு எகிப்திய ‘வைத்தியரைப்’ பற்றி நன்றாகவே தெரியும். (ஆதியாகமம் 50:1-3) அவர்களுடைய ஒன்றுக்கும் உதவாத அல்லது ஆபத்தான மருத்துவ முறைகள் அவர் எழுதியவற்றை பாதித்தனவா?
6. நவீன மருத்துவ அறிவியல் எவ்வளவோ மேல் என கருதும் நியாயப்பிரமாண சட்டத்தில் இருந்த சுகாதார முறை யாது?
6 இல்லை. அதற்குமாறாக, சுகாதார முறைகளைப் பற்றி மோசேயின் நியாயப்பிரமாணத்தில் அடங்கியிருந்த சட்டங்களை, இன்றைய நவீன மருத்துவ அறிவியல் எவ்வளவோ மேல் என்று கருதுகிறது. உதாரணத்திற்கு, இராணுவ முகாமிடுவோர், முகாமிலிருந்து வெகு தூரம் சென்று மலம் கழித்துவிட்டு, அதனை மூடிவிட்டு வரவேண்டும் என்று சட்டம் வலியுறுத்தியது. (உபாகமம் 23:13) இது மிகவும் முன்னேற்றமடைந்திருந்த நோய்த்தடுப்பு முறையாக இருந்தது. இது தண்ணீர் மாசுபடாமல் தடுத்தது. ஈக்களால் பரவும் ஷிகெலோஸில் என்ற வியாதியிலிருந்தும், இன்னும் வேறுசில வயிற்றுப்போக்கு வியாதிகளிலிருந்தும் பாதுகாப்பை அளித்தது. இன்றும்கூட பெரும்பாலும் வளர்ந்துவரும் நாடுகளில் இவ்வியாதிகள் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பலிவாங்குகின்றன.
7. மோசேயின் நியாயப்பிரமாணத்தில் இருந்த எந்தச் சுகாதார சட்டங்கள் தொற்றுநோய் பரவாமல் பாதுகாத்தன?
7 மோசேயின் நியாயப்பிரமாணத்தில் இன்னும் மற்ற சுகாதார சட்டங்களும் இருந்தன. அவை தொற்றுநோய் பரவுவதிலிருந்து பாதுகாத்தன. ஒரு ஆளுக்கு தொற்றுவியாதி இருந்தாலோ அல்லது இருக்கலாம் என்று சந்தேகம் வந்தாலோ அவரை தனியே ஒதுக்கி வைத்துவிடுவர். (லேவியராகமம் 13:1-5) (அநேகமாக வியாதியினால்) ஒரு மிருகம் இறந்துபோனால், அந்த மிருகத்தின்மீது பட்ட துணியை அல்லது பாத்திரத்தை மறுபடியும் உபயோகிப்பதற்குமுன் துவைக்க வேண்டும் அல்லது கழுவ வேண்டும் அல்லது அவற்றை அழித்துவிட வேண்டும். (லேவியராகமம் 11:27, 28, 32, 33) ஒரு நபர் ஒரு பிணத்தைத் தொட்டால், அவர் அசுத்தமாக எண்ணப்படுவார். அவர் சுத்திகரிக்கும் சடங்கை அனுசரிக்க வேண்டும். அது அவருடைய துணிகளை துவைப்பதையும், அவர் குளிப்பதையும் உள்ளடக்கியது. அசுத்தமாக இருக்கும் அந்த ஏழு நாட்களுக்கு மற்றவர்களை அவர் தொடக்கூடாது.—எண்ணாகமம் 19:1-13.
8, 9. மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்பட்ட சுகாதார விதிமுறை அந்தக் காலத்தோடு ஒப்பிடுகையில் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருந்தது என ஏன் சொல்லலாம்?
8 இந்தச் சுகாதார விதிமுறையில் அடங்கியிருந்த ஞானத்தை அந்தக் காலத்தோடு ஒப்பிடுகையில் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருந்தது தெரிகிறது. நோய்கள் பரவுவதைப் பற்றியும், தடுப்பதைப் பற்றியும் நவீன மருத்துவ அறிவியல் எவ்வளவோ கற்றுக்கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, 19-ம் நூற்றாண்டின் மருத்துவ முன்னேற்றங்கள், கிருமிகளைத் தடுக்கும் (antisepsis) மருத்துவ முறையை, அதாவது நோய்த் தொற்றுவதை குறைக்கும் சுகாதார முறையை அறிமுகம் செய்தன. அதன் பலன் அபாரமாக இருந்தது. தொற்றுநோயும், அகால மரணமும் வியப்பூட்டும் அளவில் குறைந்தன. 1900-ல் பல ஐரோப்பிய நாடுகளிலும் ஐக்கிய மாகாணங்களிலும் மக்களின் ஆயுட்காலம் 50-க்கும் குறைவாக இருந்தது. அன்று முதல் கிடுகிடுவென்று இது உயர்ந்தது. நோயைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட மருத்துவ முன்னேற்றம் மாத்திரம் அல்ல இந்த உயர்வுக்கு காரணம். ஆனால், நல்ல சுகாதாரமும், வாழ்க்கைத் தரங்களும்கூட இந்த உயர்வுக்கு காரணங்களாகும்.
9 நோய் பரவும் முறைகளைப் பற்றி மருத்துவ அறிவியல் கற்றுக்கொள்வதற்கு பல ஆயிர வருடங்களுக்கு முன்பே, நோய்கள் வராமல் காக்க, அறிவுப்பூர்வமாக தடுக்கும் முறைகளை பைபிள் அளித்தது. தன் காலத்தில் இருந்த இஸ்ரவேலர்கள் பொதுவாகவே 70 முதல் 80 வயது வரை வாழ்ந்தார்கள் என்று மோசே சொன்னதில் ஆச்சரியம் ஏதுமில்லை. (சங்கீதம் 90:10) இத்தகைய சுகாதார விதிமுறைகள் எப்படி மோசேக்கு தெரிந்திருக்கும்? பைபிளே இதற்கு விளக்கம் தருகிறது: நியாயப்பிரமாண சட்டத்தொகுப்பு “தேவதூதரைக்கொண்டு . . . கட்டளையிடப்பட்டது.” (கலாத்தியர் 3:19) ஆம், பைபிள் மனித ஞானத்தால் உருவான புத்தகம் அல்ல; இது கடவுள் தந்த புத்தகம்.
நவீன வாழ்க்கைக்கு நடைமுறையான புத்தகம்
10. பைபிள் எழுதி முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 2,000 வருடங்கள் கடந்துசென்றாலும், அதன் அறிவுரையைப் பற்றி என்ன சொல்லலாம்?
10 ஆலோசனைகளை அள்ளி வழங்கும் புத்தகங்கள் விரைவில் காலத்திற்கு ஒத்துவராமல் போய்விடுவதால், அவை மாற்றம் செய்யப்படுகின்றன அல்லது மாற்றீடு செய்யப்படுகின்றன. ஆனால் மாற்றத்திற்கான தேவையே இன்றி தனித்தன்மைவாய்ந்த ஒரு புத்தகமாக பைபிள் திகழ்கிறது. சங்கீதம் 93:5 இவ்வாறு சொல்கிறது: “உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்.” பைபிள் எழுதி முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 2,000 வருடங்கள் கடந்துசென்றிருந்தாலும், அதன் வார்த்தைகள் இன்றும் பொருந்துகின்றன. அவை எந்நாட்டவருக்கும் எந்நிறத்தவருக்கும் ஒன்றுபோல பலனைத் தருகின்றன. பைபிளின் கால வரம்பற்ற, “மிகவும் உண்மையுள்ள” ஆலோசனைகள் சிலவற்றை கவனிக்கவும்.
11. பல பத்தாண்டுகளுக்குமுன், அநேக பெற்றோர்கள் பிள்ளை சிட்சையைப் பற்றி எதை நம்பும்படி வழிநடத்தப்பட்டனர்?
11 பல பத்தாண்டுகளுக்குமுன், “பிள்ளையை சிட்சிக்கக்கூடாது” என்பதை போன்ற பிள்ளை வளர்ப்பைப் பற்றிய ‘புதிய கருத்துக்களால்’ பெற்றோர்கள் ஊக்குவிக்கப்பட்டார்கள். பிள்ளைகளுக்கு வரம்புகளை விதித்தால், மன உளைச்சலையும் வெறுப்பையும் உண்டாக்கும் என அவர்கள் பயந்தார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சும்மா லேசாக கண்டிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பிள்ளை வளர்ப்பில் நல்லெண்ணம் கொண்ட ஆலோசகர்கள் வலியுறுத்தினார்கள். இன்று அதே ஆலோசகர்கள் பலர் “இன்னும் கொஞ்சம் கண்டிப்போடு இருந்து, [பிள்ளைகளை] மறுபடியும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும்படி பெற்றோர்களை வற்புறுத்தி வருகிறார்கள்” என்று த நியூ யார்க் டைம்ஸ் அறிவிக்கிறது.
12. “சிட்சை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க பெயர்ச்சொல்லின் அர்த்தம் என்ன, அத்தகைய சிட்சை பிள்ளைகளுக்கு ஏன் தேவை?
12 ஆனால், பிள்ளை வளர்ப்பைப் பற்றி தெள்ளத்தெளிவாக இருக்கும் சமநிலையான அறிவுரையை இவ்வளவு காலமாக பைபிள் அளித்து வந்துள்ளது. அது தரும் அறிவுரை: “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.” (எபேசியர் 6:4) “சிட்சை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க பெயர்ச்சொல்லின் அர்த்தம், “வளர்த்தல், பயிற்சி அளித்தல், போதனை வழங்குதல்.” இப்படிப்பட்ட சிட்சை அல்லது போதனையானது பெற்றோர் காட்டும் பாசத்தின் அடையாளம் என்பதாக பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 13:24, NW) ஒழுக்க சம்பந்தமாக தெள்ளத்தெளிவான விதிமுறைகள் பிள்ளைகளுக்கு இருந்தால் அவர்கள் நன்கு செழித்தோங்கி வளருவார்கள். எது சரி, எது தவறு என்ற உணர்வை வளர்த்துக்கொள்ள இந்த ஒழுக்க விதிகள் அவர்களுக்கு உதவுகின்றன. சரியான விதத்தில் கொடுக்கப்படும் சிட்சை பிள்ளைகளை பாதுகாப்பாக உணரச்செய்கிறது. பெற்றோருக்கு பிள்ளைகள் பேரிலும், அவர்கள் எப்படிப்பட்டவர்களாக வளர்ந்து வருகிறார்கள் என்பதன் பேரிலும் அக்கறை இருப்பதை சிட்சையானது பிள்ளைகளுக்கு அறிவுறுத்தும்.—ஒப்பிடுக: நீதிமொழிகள் 4:10-13.
13. (அ) சிட்சை கொடுக்கும் விஷயத்தில் பெற்றோரை எவ்வண்ணம் பைபிள் எச்சரிக்கிறது? (ஆ) பைபிள் பரிந்துரை செய்யும் சிட்சை யாது?
13 ஆனால் சிட்சை கொடுக்கும் விஷயத்தில் பெற்றோரை பைபிள் எச்சரிக்கிறது. பெற்றோர் என்ற அதிகாரத்தை ஒருபோதும் தவறாக பயன்படுத்தக்கூடாது. (நீதிமொழிகள் 22:15, NW) எந்தவொரு பிள்ளையையும் கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கி தண்டிக்கக்கூடாது. பைபிள் சொல்கிறபடி வாழும் குடும்பத்தில் அடித்து நொறுக்கும் முரட்டு செயலுக்கு இடமே கிடையாது. (சங்கீதம் 11:5) உணர்ச்சி ரீதியிலும் அவர்களை புண்படுத்தக்கூடாது. அதாவது கடுமையான வார்த்தைகளால் சாடுவது, சும்மா சும்மா குறைகூறுவது, குத்தலாக பேசுவது போன்றவை பிள்ளையின் மனதை சுக்குநூறாக உடைத்துவிடும். (நீதிமொழிகள் 12:18-ஐ ஒப்பிடுக.) பெற்றோரை பைபிள் இவ்வாறு ஞானமாக எச்சரிக்கிறது: “உங்கள் பிள்ளைகள் மனம்தளரும்படி, [அல்லது “நீங்கள் அவர்களுடைய இருதயத்தை முழுமையாக நொறுக்கி விடும்படி,” பிலிப்ஸ்] அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.” (கொலோசெயர் 3:21, NW) வரும்முன் தடுக்கும் முறைகளையே பைபிள் பரிந்துரைசெய்கிறது. பிள்ளைகளின் மனங்களில் ஒழுக்க மற்றும் ஆன்மீக மதிப்பீடுகளை ஊன்றவைப்பதற்கு, தற்செயலாக கிடைக்கும் சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்தும்படி உபாகமம் 11:19-ல் பெற்றோர்களுக்கு ஊக்கம் தரப்படுகிறது. பிள்ளை வளர்ப்பு பற்றிய இத்தகைய தெளிவான, நியாயமான அறிவுரை பைபிள் காலங்களில் எப்படி பொருந்தியதோ அப்படியே இன்றும் பொருந்துகிறது.
14, 15. (அ) பைபிள் ஞானமான அறிவுரையை மட்டுமின்றி, இன்னும் அதிகத்தை எவ்வாறு வழங்குகிறது? (ஆ) வெவ்வேறு இன மக்களை சமமாக கருதி நடத்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்ன பைபிள் போதனைகள் உதவுகின்றன?
14 பைபிள் ஞானமான அறிவுரையை மட்டுமின்றி, இன்னும் அதிகத்தை வழங்குகிறது. அதன் செய்தி மனதை சுண்டி இழுக்கிறது. எபிரெயர் 4:12 இவ்வாறு சொல்கிறது: “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” பைபிளின் உந்துவிக்கும் சக்திக்கு ஒரு உதாரணத்தை கவனியுங்கள்.
15 குலம், தேசம், இனம் என்னும் சுவர்களால் இன்று மக்கள் பிளவுபட்டுள்ளனர். இவ்வாறு எழுந்துள்ள இந்தச் செயற்கை சுவர்கள், உலகெங்கிலும் போர் என்னும் போர்வையில் அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதில் பங்கு வகித்துள்ளன. இதற்கு நேர்மாறாக, வெவ்வேறு இன மக்களை சமமாக கருதி நடத்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் பைபிள் போதனைகள் உதவுகின்றன. உதாரணமாக, கடவுள் ‘ஒரே ஆளிலிருந்து . . . மக்களினம் அனைத்தையும் படைத்தார்’ என்று அப்போஸ்தலர் (திருத்தூதர் பணிகள்) 17:26 (பொது மொழிபெயர்ப்பு) சொல்கிறது. அப்படியென்றால், உண்மையில் ஒரே ஒரு குலம் தான் இருக்கிறது, அதுவே மனிதகுலம்! மேலும் ‘தேவனைப் பின்பற்றும்படி’ பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. கடவுளைப் பற்றி அது இவ்வாறு சொல்கிறது: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.” (எபேசியர் 5:1; அப்போஸ்தலர் 10:34, 35) இந்த அறிவு, பைபிளை கருத்தாய் ஏற்றுக்கொண்டு, அதன் போதனைகளின்படி வாழ உண்மையில் முயற்சிக்கும் ஆட்களிடத்தில் ஒற்றுமைப்படுத்தும் நல்விளைவை உண்டுபண்ணுகிறது. இது மனித மனதிற்குள் ஆழமாக பாய்ந்து சென்று, மனிதரை பிரிக்க மனிதன் உண்டாக்கிய சுவர்களையெல்லாம் உடைத்து தவிடுபொடியாக்கிவிடுகிறது. இன்றைய உலகில் உண்மையில் இதை செயலாற்ற முடியுமா?
16. யெகோவாவின் சாட்சிகள் உண்மையில் உலகளாவிய சகோதரத்துவம் உடையவர்கள் என்பதற்கு ஓர் அனுபவத்தை கூறவும்.
16 கண்டிப்பாக முடியும்! யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய உலகளாவிய சகோதரத்துவத்திற்காக புகழ்பெற்று விளங்குகிறார்கள். பொதுவாகவே எலியும் பூனையுமாக இருக்கும் வெவ்வேறு இனத்தவர்களை ஒன்றிணைக்கிறது இந்தச் சகோதரத்துவம். உதாரணத்திற்கு, ருவாண்டாவில் நடந்த இனக்கலவரங்களின்போது, யெகோவாவின் சாட்சிகளாய் இருந்த இரு இனத்தவர்களும் வேற்று இனத்தை சேர்ந்த தங்கள் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளை பாதுகாப்பதற்காக தங்கள் உயிரையே பணயம் வைத்தார்கள். ஹூட்டு இனத்தை சேர்ந்த சாட்சி ஒருவர் தன் சபையிலுள்ள டுட்ஸி இனத்தை சேர்ந்த ஆறுபேர் அடங்கிய ஒரு குடும்பத்தை தன் வீட்டில் மறைத்து வைத்தார். கொடூரம் என்னவென்றால், எப்படியோ சிலர் இந்த டுட்ஸி குடும்பத்தை கண்டுபிடித்து கொன்றுபோட்டனர். அந்தக் கொலைப்பாதகர்களுடைய கோபம் இந்த ஹூட்டு சகோதரர்மீதும் அவருடைய குடும்பத்தினர்மீதும் திரும்பியது. அதனால் இவர்கள் டான்ஜானியாவுக்கு ஓடிப்போக வேண்டியதாயிற்று. இதேபோன்ற நிறைய உதாரணங்கள் அறிக்கை செய்யப்பட்டன. இத்தகைய ஒற்றுமை பைபிள் செய்தியின் வல்லமை தூண்டுவதாலேயே உதயமாகிறது என்று எந்தத் தயக்கமுமின்றி யெகோவாவின் சாட்சிகள் ஒத்துக்கொள்கிறார்கள். பகைமை நிறைந்து காணப்படும் இவ்வுலகில் மக்களை பைபிள் ஒன்றிணைக்கிறது என்ற உண்மை, இது கடவுளிடமிருந்தே வந்திருக்கிறது என்பதற்கு சக்திவாய்ந்த ஆதாரமாய் திகழ்கிறது.
உண்மை தீர்க்கதரிசனப் புத்தகம்
17. மனிதன் செய்யும் முன்கணிப்புகளிலிருந்து எப்படி பைபிள் தீர்க்கதரிசனங்கள் முற்றிலும் வித்தியாசமாக உள்ளன?
17 “தீர்க்கதரிசனம் எவரது சொந்த விளக்கத்திலிருந்தும் உதயமாவதில்லை” என்கிறது 2 பேதுரு 1:20 (NW). பைபிள் தீர்க்கதரிசிகள், உலக நிலவரங்களின் போக்கை பார்த்துவிட்டு, அவற்றிற்கு ஏற்ப அறிவின் அடிப்படையில் ஊகங்கள் செய்து, சுயமாக முன்கணிப்பு செய்யவில்லை. அல்லது எதிர்காலத்தில் என்ன சம்பவித்தாலும் அதற்கு பொருந்தும் வகையில் தெளிவற்ற முன்கணிப்புகளையும் அவர்கள் சொல்லவில்லை. நாம் உதாரணத்திற்கு ஒரு தீர்க்கதரிசனத்தை பார்க்கலாம். அந்தத் தீர்க்கதரிசனம் அபார துல்லியமாக இருந்தது; பார்க்கப்போனால் அன்று வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் நினைத்ததற்கு அப்படியே நேர்மாறாகவும்கூட அது இருந்தது.
18. பண்டைய பாபிலோன் குடிமக்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்ததில் ஏன் ஆச்சரியம் இல்லை, ஆனாலும் பாபிலோனைப் பற்றி ஏசாயா என்ன தீர்க்கதரிசனம் உரைத்தார்?
18 பாபிலோனிய பேரரசின் தலைநகரான பாபிலோன், கைப்பற்றவே முடியாது என்று தோன்றும் அளவிற்கு பொ.ச.மு. ஏழாம் நூற்றாண்டிற்குள் உயர்ந்தோங்கியது. யூஃப்ரடீஸ் நதிக்கரையில் அமைந்திருந்த அந்நகரைச் சுற்றி, நதியின் தண்ணீரால் பரந்துவிரிந்த, ஆழமான அகழி உண்டாக்கப்பட்டிருந்தது. கிளைக் கிளையாக கால்வாய்கள் வெட்டப்பட்டிருந்தன. கூடுதலாக, அந்நகரம் மாபெரும் இரட்டை சுவர்களால் பாதுகாக்கப்பட்டிருந்தது. எதிரிகளை தாக்குவதற்கென்றே, சுவரில் ஆங்காங்கே எண்ணற்ற கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பாபிலோன் குடிமக்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும்கூட, மகிமையின் சிகரத்தை பாபிலோன் எட்டிப்பிடிக்கும் முன்பே, பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு முன்னுரைத்துவிட்டார்: “பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும். இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறை தோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம்போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர் மந்தையை மறிப்பதுமில்லை.” (ஏசாயா 13:19, 20) பாபிலோன் அழிக்கப்படும் என்பதை மாத்திரமல்ல, ஆனால் அதில் இனி நிரந்தரமாக யாருமே வசிக்கமாட்டார்கள் என்பதையும் அந்தத் தீர்க்கதரிசனம் முன்கணித்துள்ளதை கவனியுங்கள். ஆஹா, எவ்வளவு தைரியமான முன்கணிப்பு! பாபிலோன் பாழ்நிலமாக ஆனதைப் பார்த்தப் பிறகே ஏசாயா தன்னுடைய தீர்க்கதரிசனத்தை எழுதியிருப்பாரோ? கிடையவே கிடையாது என்கிறது வரலாறு!
19. பொ.ச.மு. 539, அக்டோபர் 5-ம் தேதியன்று ஏன் ஏசாயாவின் தீர்க்கதரிசனம் முழுவதுமாக நிறைவேறவில்லை?
19 பொ.ச.மு. 539, அக்டோபர் 5-ம் தேதி இரவு, மகா கோரேசுவின் தலைமையில் வந்த மேதிய பெர்சிய படைகளின் கைகளில் பாபிலோன் வீழ்ச்சியடைந்தது. ஆனால், அப்போது ஏசாயாவின் தீர்க்கதரிசனம் முழுவதுமாக நிறைவேறவில்லை. கோரேசு கைப்பற்றிய பின்பும், வீழ்ச்சியடைந்த நிலையிலிருந்த அந்தப் பாபிலோனில் மக்கள் தொடர்ந்து சில நூற்றாண்டுகளுக்கு குடியிருந்தனர். பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில், அதாவது ஏசாயாவின் சவக்கடல் சுருள் நகல் எடுத்து முடிக்கப்போகும் சமயத்தில், பாபிலோன் பார்தியரின் (Parthians) கைகளுக்குள் வந்தது. அப்போதும்கூட சுற்றியிருந்த நாட்டவர்கள் விரும்பி வரக்கூடிய ஓர் இடமாகவே பாபிலோன் திகழ்ந்துகொண்டிருந்தது. அதற்காக அவர்கள் சண்டை போட்டனர். பொ.ச.மு. முதல் நூற்றாண்டில் “பெரும் திரளான” யூதர்கள் பாபிலோனில் குடியேறி இருந்தார்கள் என்று யூத வரலாற்று ஆசிரியர் ஜொஸிஃபஸ் அறிவித்தார். பொ.ச. 24-ம் வருடம் வரை, தாமார் என்ற பழம்பெரும் நகரின் வணிகர்கள் செழிப்பாக வியாபாரம் நடத்திய ஓர் இடமாக பாபிலோன் திகழ்ந்தது என்ற விவரத்தை கேம்பிரிட்ஜின் பண்டைய வரலாறு என்ற ஆங்கில புத்தகம் தருகிறது. ஆகவே, பொ.ச. முதல் நூற்றாண்டு வரையாக, பாபிலோன் முழுமையாக பாழ்நிலம் ஆகிவிடவில்லை. ஆனால் அதற்கு எவ்வளவோ காலத்திற்கு முன்பே ஏசாயாவின் புத்தகம் எழுதி முடிந்தாயிற்று.—1 பேதுரு 5:13.
20. பாபிலோன் மெல்ல மெல்ல வெறும் ‘மண்மேடாக’ ஆனது என்பதற்கு என்ன சான்று உள்ளது?
20 பாபிலோன் வசிப்பதற்கு லாயக்கற்ற இடமாக ஆனதை பார்க்க ஏசாயா உயிரோடு இல்லை. ஆனால், தீர்க்கதரிசனத்தின்படி பாபிலோன் மெல்ல மெல்ல வெறும் ‘மண்மேடாக’ ஆனது. (எரேமியா 51:37) எபிரெய அறிஞர் ஜெரோம் (பொ.ச. நான்காம் நூற்றாண்டு) சொன்னபடி, அவருடைய காலத்திற்குள் பாபிலோன் வேட்டையாடும் ஓர் இடமாக ஆனது, அதில் ‘எல்லாவிதமான மிருகங்களும்’ அலைந்துதிரிந்தன. இந்நாள் வரையாக பாபிலோன் பாழ்நிலமாக இருக்கிறது. சுற்றுலா பயணத்திற்கு ஏற்ற கவர்ச்சி மிக்க ஓர் இடமாக மாற்றுவதற்காக பாபிலோனில் செய்யப்படும் புதுப்பிக்கும் பணி, சுற்றுலா பயணிகளை வேண்டுமென்றால் கவர்ந்திழுக்கலாம். ஆனால், ஏசாயா முன்னுரைத்தபடி, பாபிலோன் ‘வழிமரபினரும் வழித்தோன்றலும் இல்லாது’ என்றென்றைக்குமாக ஒழிந்துபோனது.—ஏசாயா 14:22, 23, பொ.மொ.
21. உண்மையான தீர்க்கதரிசிகளால் மட்டும் எப்படி எதிர்காலத்தைப் பற்றி துளிகூட பிசகாமல் முன்னுரைக்க முடிந்தது?
21 இவ்வாறாக, ஏதாவது ஓர் எதிர்கால சம்பவத்திற்கு பொருந்தும் வகையில், ஏசாயா ஊகித்து முன்கணிப்புகளை சொல்லவில்லை. அல்லது வரலாற்றை அப்படியே மாற்றிபோட்டு தீர்க்கதரிசனமாகவும் அவர் எழுதவில்லை. ஏசாயா ஓர் உண்மை தீர்க்கதரிசி. அவ்வாறே பைபிளின் மற்ற எல்லா தீர்க்கதரிசிகளும் உண்மை தீர்க்கதரிசிகள். மற்ற மனிதர்களால் செய்ய முடியாததை, அதாவது எதிர்காலத்தைப் பற்றி துளிகூட பிசகாமல் முன்னுரைக்க இவர்களால் மட்டும் எப்படி முடிந்தது? பதில் உள்ளங்கை நெல்லிக்கனி போல் இருக்கிறது. “அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டு . . . அறிவிக்கிற” தீர்க்கதரிசன கடவுளாகிய யெகோவாவிடமிருந்தே தீர்க்கதரிசனங்கள் உதயமாயின.—ஏசாயா 46:10.
22. நேர்மை இருதயமுள்ள மக்கள் தாங்களாகவே பைபிளை ஆராய்ந்துபார்க்க நாம் ஏன் நம்மால் ஆன அனைத்தையும் செய்ய வேண்டும்?
22 ஆகவே, ஆராய்ந்துபார்ப்பதற்கு பைபிள் தகுதியானதா? கண்டிப்பாக தகுதியானதே! இது நமக்குத் தெரியும். ஆனால் நிறையப் பேர் இதை நம்பமாட்டார்களே. அவர்கள் பைபிளை படித்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள், ஆனால் அதைப் பற்றி தாங்களாகவே கருத்துக்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். முந்தின கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்தப் பேராசிரியரை கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அவர் பைபிளை படிக்க ஒத்துக்கொண்டார்; பைபிளை கவனமாக ஆராய்ந்தபின், இது கடவுள் தந்த புத்தகம் என்ற முடிவுக்கு வந்தார். யெகோவாவின் சாட்சிகளுள் ஒருவராக அவர் முழுக்காட்டுதல் பெற்று, இப்போது ஒரு மூப்பராக சேவித்து வருகிறார்! மக்கள் தாங்களாகவே கடவுளுடைய வார்த்தையை ஆராய்ந்துபார்த்து, அதற்குப்பின் ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்ளும்படி நேர்மை இருதயமுள்ள ஆட்களைத் துரிதப்படுத்த நம்மால் ஆன அனைத்தையும் செய்வோமாக. அவ்வாறு ஆராயும்போது, பைபிள் உண்மையிலேயே ஒரு விசேஷித்த புத்தகம், நிச்சயம் இது எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்று அவர்கள் உணருவார்கள். இந்தக் கருத்தில் நமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது!
உங்களால் விளக்கம் தர முடியுமா?
◻ பைபிளை மனிதன் உருவாக்கவில்லை என்பதை, மோசேயின் நியாயப்பிரமாணத்தை உபயோகித்து நீங்கள் எவ்வண்ணம் எடுத்துரைப்பீர்கள்?
◻ நவீன வாழ்க்கைக்கு நடைமுறையாக இருக்கும் பைபிளின் கால வரம்பற்ற நியமங்கள் யாவை?
◻ ஏசாயா 13:19, 20-ல் உள்ள தீர்க்கதரிசனம் சம்பவம் நடந்த பிறகே எழுதப்பட்டது என்று ஏன் சொல்ல முடியாது?
◻ நேர்மை இருதயமுள்ள மக்களுக்கு என்ன செய்யும்படி நாம் ஊக்கம் தரவேண்டும், ஏன்?
[பக்கம் 17-ன் படம்]
மோசே பதிவுசெய்த சுகாதார முறைகள் அக்காலத்தில் இருந்த நிலைமையிலிருந்து மிகவும் முன்னேறி இருந்தன