அறிவுறுத்தி உந்துவிக்கும் கலையினால் இருதயங்களை எட்டுதல்
அறிவுறுத்தி “உந்துவித்தல்” என்ற சொல்லை பலர் சந்தேக மனப்பான்மையுடன் கருதுகின்றனர். வற்புறுத்தி ஏற்கச் செய்யும் விற்பனையாளனையாகிலும் அல்லது வாங்குவோரை ஏமாற்றும்படியோ, கவனத்தைக் கவர்ந்து காரியத்தைச் சாதிக்கும்படியோ திட்டமிடப்பட்ட விளம்பரத்தையாகிலும் இது ஞாபகப்படுத்தலாம். பைபிளிலுங்கூட, அறிவுறுத்தி உந்துவிப்பதைப் பற்றிய எண்ணம் சாதகமற்ற எதிர்மாறான அர்த்தத்தை உடையதாக சில சமயங்களில் உள்ளது; அது தவறான வசப்படுத்துதலை அல்லது வழிநடத்துதலைக் குறிக்கிறது. உதாரணமாக, கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் கலாத்தியருக்கு இவ்வாறு எழுதினார்: “நீங்கள் நன்றாய் ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களைத் தடைசெய்தவன் யார்? இந்த வகையான உந்துவிப்பு உங்களை அழைத்தவரால் உண்டானதல்ல.” (கலாத்தியர் 5:7, 8, NW) மேலும், ‘உந்த வைக்கும் விவாதங்களால் தங்களை வஞ்சிக்க’ எவருக்காயினும் இடமளிப்பதற்கு எதிராக, பவுல் கொலோசெயரை எச்சரித்தார். (கொலோசெயர் 2:4, NW) இத்தகைய உந்துவிப்பு, பொய்யான ஆதாரங்களின்மீது அமைக்கப்பட்ட சூழ்ச்சித் திறமை வாய்ந்த விவாதங்களின்பேரில் சார்ந்திருக்கிறது.
எனினும், தீமோத்தேயுக்கு எழுதின தன் இரண்டாவது நிருபத்தில் அப்போஸ்தலன் பவுல், இந்த உந்துவிப்பின் எண்ணத்தை வேறொரு கருத்தில் பயன்படுத்தினார். அவர் இவ்வாறு எழுதினார்: “நீ கற்று நம்பும்படி உந்துவிக்கப்பட்ட காரியங்களில் நிலைத்திரு, எவரிடமிருந்து அவற்றைக் கற்றாய் என்பதை அறிந்திருக்கிறாய்.” (2 தீமோத்தேயு 3:14, NW) ‘நம்பும்படி உந்துவிப்பதில்’ வேதவசன சத்தியங்களை அவருக்குக் கற்றுத்தந்த தாயும் பாட்டியும் தீமோத்தேயுவின்மீது தந்திரமான செல்வாக்கு செலுத்தவில்லை.—2 தீமோத்தேயு 1:5. a
ரோமில், பவுல் தன் வீட்டில் சிறைப்பட்டவராகக் காவலில் இருந்தபோது பலருக்கு, “அவர்களிடமாக உந்துவிப்பைப் பயன்படுத்தி, இயேசுவைக் குறித்து மோசேயின் நியாயப்பிரமாணத்திலிருந்தும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலிருந்தும் காலையிலேயே தொடங்கி சாயங்காலமட்டும்” முழுமையான சாட்சி பகர்ந்தார். (அப்போஸ்தலர் 28:23, NW) பவுல் தனக்குச் செவிகொடுத்துக் கேட்டவர்களை ஏமாற்றிக்கொண்டிருந்தாரா? ஒருபோதும் இல்லை! அப்படியானால், உந்துவிப்பது கெட்ட காரியமாக எப்போதும் இருப்பதில்லை என்பது தெளிவாயிருக்கிறது.
நல்ல அர்த்தத்தில் பயன்படுத்தும்போது, ‘உந்துவி’ என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க மூலச் சொல், நம்பவைப்பது, நல்லாதாரமுடையது, விவாதப் பொருத்தமான காரணங்காட்டி விளக்குவதால் மனமாற்றத்தை ஏற்படுத்துவது என பொருள்படுகிறது. ஆகவே, கற்பிக்கும் ஒருவர், அறிவுறுத்தி உந்துவிப்பதைப் பயன்படுத்தி, இவ்வாறு வேதப்பூர்வ ஆதாரத்தின்மீது கட்டியெழுப்பி, பைபிள் சத்தியத்தில் உறுதியான நம்பிக்கையை மற்றவர்களில் ஊன்ற வைக்கலாம். (2 தீமோத்தேயு 2:15) நிச்சயமாகவே, இது பவுலினுடைய ஊழியத்தின் சின்னமாக இருந்தது. “கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப் பவுல் என்பவன் சொல்லி, எபேசுவிலேமாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக ஜனங்களுக்குப் போதித்து, அவர்களை வசப்படுத்திக்கொண்டான்” என்று கிறிஸ்தவ போதனைகளை பொய்யென கருதிய தட்டானாகிய தெமேத்திரியுங்கூட குறிப்பிட்டான்.—அப்போஸ்தலர் 19:26.
ஊழியத்தில் உந்துவிப்பைப் பயன்படுத்துதல்
இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றுவோருக்கு இவ்வாறு கட்டளையிட்டார்: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து [“அவர்களை முழுக்காட்டி,” NW] நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் [“இந்தக் காரிய ஒழுங்குமுறையின்,” NW] முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.” (மத்தேயு 28:19, 20) 230-க்கும் மேற்பட்ட நாடுகளில், யெகோவாவின் சாட்சிகள் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள். தங்கள் 1997-ன் ஊழிய ஆண்டின்போது உலகமெங்கும், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 45,52,589 பைபிள் படிப்புகள் நடத்தினார்கள்.
வீட்டு பைபிள் படிப்பு ஒன்றை நடத்தும் சிலாக்கியம் பெற்றவராக நீங்கள் இருந்தால், அறிவுறுத்தி உந்துவிக்கும் கலையைப் பயன்படுத்துவதில் உட்பட்டுள்ள சவால்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். உதாரணமாக, நீங்கள் உங்கள் அடுத்த படிப்பை நடத்தவிருக்கிறீர்களென்று வைத்துக்கொள்வோம், திரித்துவத்தைப் பற்றி ஒரு கேள்வி எழும்பலாம். இந்தக் கோட்பாட்டை உங்கள் மாணாக்கர் நம்புகிறாரென நீங்கள் அறிந்திருந்தால் என்ன செய்வீர்கள்? அந்த விஷயத்தின்பேரில் விவாதித்து ஆராயும் ஒரு பிரசுரத்தை அவரிடம் கொடுக்கலாம். அவர் அதைப் படித்தப் பின்பு, கடவுளும் இயேசுவும் ஒருவரே அல்ல என்று அவர் அறிவுறுத்தி உந்துவிக்கப்பட்டிருப்பதாக நீங்கள் ஒருவேளை காணலாம். ஆனால், இன்னும் சில கேள்விகள் இருந்தால், நீங்கள் எவ்வாறு தொடர்ந்து நடத்தலாம்?
கவனமாய்ச் செவிகொடுத்துக் கேளுங்கள். கொடுக்கப்பட்ட விஷயத்தைப் பற்றி உங்கள் மாணாக்கர் ஏற்கெனவே நம்புவது என்ன என்பதைத் தீர்மானிக்க இது உங்களுக்கு உதவிசெய்யும். உதாரணமாக, “நான் திரித்துவத்தை நம்புகிறேன்” என்று உங்கள் மாணாக்கர் சொன்னால், இந்தக் கோட்பாட்டைத் தவறென்று நிரூபிக்கும் வேத வசன கலந்தாலோசிப்பை விரைவில் மேற்கொண்டு நடத்தலாம். ஆனால் திரித்துவத்தைப் பற்றி பல்வேறு நம்பிக்கைகள் இருக்கின்றன. திரித்துவக் கோட்பாடு என்று நீங்கள் விவரிப்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றை உங்கள் மாணாக்கர் ஒருவேளை நம்புபவராக இருக்கலாம். மறுபிறப்பு, ஆத்துமா அழியாமை, இரட்சிப்பு போன்ற மற்ற நம்பிக்கைகளைக் குறித்தவற்றிலும் இவ்வாறே சொல்லப்படலாம். ஆகையால் பதிலளிப்பதற்கு முன்பாகக் கவனமாய் அவர் என்ன சொல்கிறார் என்பதை செவிகொடுத்துக் கேளுங்கள். மாணாக்கர் நம்புவதைப் பற்றி நீங்களாகவே எதையாவது ஒன்றை ஊகித்துக்கொள்ளாதீர்கள்.—நீதிமொழிகள் 18:13.
கேள்விகளைக் கேளுங்கள். இவற்றில் பின்வருபவை உட்படலாம்: ‘உங்களுக்கு எப்போதுமே திரித்துவத்தில் நம்பிக்கை இருந்திருக்கிறதா? இந்த விஷயத்தின்பேரில் பைபிள் சொல்வதைப் பற்றி எப்போதாவது முழுமையாக ஓர் ஆராய்ச்சி செய்திருக்கிறீர்களா? கடவுள் திரித்துவத்தின் பாகமாக இருந்தால், அவருடைய வார்த்தையாகிய பைபிள், தெளிவாகவும் நேரடியாகவும் நமக்கு அதைச் சொல்லும் அல்லவா?’ மாணாக்கருக்குக் கற்பிக்கையில், அவ்வப்போது நிறுத்தி, பின்வருபவற்றைப் போன்ற கேள்விகளைக் கேளுங்கள்: ‘நாம் இதுவரை கலந்தாலோசித்தது உங்களுக்கு நியாயமானதாகத் தோன்றுகிறதா?’ ‘இந்த விளக்கத்தை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?’ கேள்விகளை நீங்கள் திறம்பட்ட வகையில் பயன்படுத்துவதால், கற்றுக்கொள்ளும்படி உங்கள் மாணாக்கரை உட்பட வைக்கிறீர்கள். ஒரு விஷயத்தின்பேரில் நீங்கள் விளக்கம் சொல்லுகையில் அவர் வெறுமனே கேட்பவராக மாத்திரமே இருக்கக்கூடாது.
நல்லாதாரமுள்ள விவாதத்தைப் பயன்படுத்துங்கள். உதாரணமாக, திரித்துவக் கோட்பாட்டைக் கலந்தாலோசிக்கையில், உங்கள் மாணாக்கரிடம் நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: ‘இயேசு முழுக்காட்டப்பட்டபோது, பரலோகத்திலிருந்து ஒரு குரல், இவ்வாறு சொன்னது: “நீர் என்னுடைய நேச குமாரன்.” கடவுளே உண்மையில் பூமியில் இருந்து முழுக்காட்டப்பட்டிருந்தால், அவர் தம்முடைய குரலை பரலோகத்துக்குச் செல்லவைத்து, பின்பு பூமியில் அந்த வார்த்தைகள் கேட்கப்படும்படி செய்திருப்பாரா? இது தவறாக வழிநடத்துவதாக இருக்கும் அல்லவா? “பொய்யுரையாத” கடவுள் இத்தகைய பாசாங்குத்தனமான காரியத்தைச் செய்வாரா?’—லூக்கா 3:21, 22; தீத்து 1:1, 3.
சாதுரியமான முறையில் நியாயங்காட்டி அளிக்கும் விளக்கம் பெரும்பாலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு பெண்மணியின் உதாரணத்தைக் கவனியுங்கள், அவர்களை பார்பரா என்று நாம் அழைக்கலாம். இயேசுவே கடவுள் என்றும் பரிசுத்த ஆவி அடங்கிய ஒரு திரித்துவத்தின் பாகமானவர் என்றும் அவர்கள் தங்கள் வாழ்நாளெல்லாம் நம்பிவந்தார்கள். ஆனால் பின்பு, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர், கடவுளும் இயேசுவும் வெவ்வேறான இரண்டு தனி ஆட்கள் என்று அந்தப் பெண்மணிக்கு சொல்லி, தான் சொன்னதற்கு ஆதாரமாக வேதவசனங்களை எடுத்துக் காட்டினார். b பார்பரா பைபிளைத் தவறென்று சொல்லவில்லை. அதே சமயத்தில், மனத்தடுமாற்றம் அடைந்தார்கள். திரித்துவக் கோட்பாடு அவர்களுடைய இருதயத்துக்கு உகந்ததாக இருந்ததே அதற்கு காரணம்.
அந்தச் சாட்சி, பார்பராவுடன் பொறுமையோடு காரணங்காட்டி விவாதித்தார். “இரண்டு ஆட்கள் சமமானவர்கள் என்று எனக்குப் போதிக்க நீங்கள் முயற்சி செய்தால், அதை விளக்கிக் காட்டுவதற்கு எந்தக் குடும்ப உறவின் உதாரணத்தைப் பயன்படுத்துவீர்கள்?” என்று அவர் கேட்டார். அந்தப் பெண்மணி ஒரு விநாடி சிந்தித்து: “இரண்டு சகோதரர்களுக்கு இடையேயான உறவை உதாரணத்திற்குப் பயன்படுத்துவேன்” என்று பதில் சொன்னார்கள். “சரியாகச் சொன்னீர்கள்,” என்று சாட்சி பதிலளித்து, “இருவரும் ஒன்றுபோல் இருக்கும் இரட்டையர்களின் உதாரணத்தையுங்கூட பயன்படுத்தலாம். ஆனால், கடவுளை பிதாவாகவும் தம்மை குமாரனாகவும் கருதும்படி நமக்குப் போதித்ததில், இயேசு என்ன செய்தியைத் தெரிவித்தார்?” ஆச்சரியத்தால் தன் கண்களை அகல விரித்து பார்பரா, “இப்ப புரியுது, ஒருவரை பெரியவராகவும் அதிக அதிகாரம் உடையவராகவும் விவரிக்கிறார்” என்று பதிலளித்தார்கள்.
“ஆம், இயேசு சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த யூதர், கோத்திரப் பிதா தலைமை வகிக்கும் சமுதாயத்தில் வாழ்வோராக இருந்ததனால், அவர்கள் முக்கியமாய் அந்த முடிவுக்கு வந்திருப்பார்கள்” என்று சாட்சி பதிலளித்தார். தன் குறிப்பை அறிவுறுத்துபவராய், சாட்சி முடிவாக இவ்வாறு சொன்னார்: “சமத்துவத்தைக் கற்பிப்பதற்கு, சகோதரர் அல்லது ஒன்றுபோலிருக்கும் இரட்டையர்கள் போன்ற பொருத்தமான விளக்க உதாரணத்தை நாம் பயன்படுத்துகிறோம் என்றால் நிச்சயமாகவே, பெரிய போதகராகிய இயேசுவும் அவ்வாறு செய்திருக்கலாம். மாறாக, அவர் தமக்கும் கடவுளுக்கும் இடையேயுள்ள உறவை விவரிப்பதற்கு ‘பிதாவும்,’ ‘குமாரனும்’ என்ற பதங்களைப் பயன்படுத்தினார்.”
முடிவில் அந்தக் குறிப்பை பார்பரா புரிந்துகொண்டு, அதை ஏற்றுக் கொண்டார்கள். அறிவுறுத்தி உந்துவிக்கும் கலையால் அவர்களுடைய இருதயத்தைத் தொட முடிந்தது.
உணர்ச்சி வேகங்களைக் கையாளுதல்
ஊறிப்போன மத நம்பிக்கைகளில் பெரும்பாலும் ஓர் உணர்ச்சிவேக அம்சம் உட்பட்டிருக்கிறது. பக்தியுள்ள கத்தோலிக்கராக இருந்த எட்னாவின் காரியத்தைக் கவனியுங்கள். இருபது வயதுக்குள்ளிருந்த அவர்களுடைய பேரன்கள், கடவுளும் இயேசுவும் ஒரே ஆளல்ல என்பதற்கு வேதப்பூர்வ நிரூபணத்தை அவர்களுக்கு அளித்தார்கள். எட்னா, தான் கேட்டதைப் புரிந்துகொண்டார்கள். இருந்தபோதிலும் அவர்கள்: “நான் பரிசுத்த திரித்துவத்தை நம்புகிறேன்” என்று சாந்தமாய் ஆனால் உறுதியாய்க் கூறினார்கள்.
ஒருவேளை உங்களுக்கும் அதைப்போன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். பலர், தங்கள் மத கோட்பாடுகளைத் தங்கள் தனித்துவத்தின் பாகம் என்பதுபோல் கருதுகின்றனர். அத்தகைய பைபிள் மாணாக்கர்களை அறிவுறுத்தி உந்துவிக்க, சாதாரண விவாத முறையைப் பார்க்கிலும் அல்லது அந்த நபரின் கருத்து தவறு என்று நிரூபித்துக் காட்டும் வரிசையான பல வேதவசனங்களையுங்கூட பார்க்கிலும் இன்னும் அதிகம் தேவைப்படுகிறது. அறிவுறுத்தி உந்துவிக்கும் கலையை இரக்கத்தோடு சமநிலைப்படுத்துவதன் மூலம் இத்தகைய சூழ்நிலைமைகளை திறம்பட்ட விதத்தில் கையாளலாம். (ஒப்பிடுக: ரோமர் 12:15; கொலோசெயர் 3:12.) உண்மைதான், பலன்தரத்தக்க முறையில் போதிப்பவருக்கு மெய்ம்மையில் நிச்சய உறுதி இருக்க வேண்டும். உதாரணமாக, பவுல், “நிச்சயித்திருக்கிறேன்,” “கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து உந்துவிக்கப்பட்டிருக்கிறேன்” என்பவற்றைப் போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தினார். (ரோமர் 8:38; 14:14, NW) எனினும், நம்முடைய உறுதியான நம்பிக்கைகளை வெளிப்படுத்திக் கூறுவதில், நாம் கொள்கைப் பிடிவாதமுள்ளவராக, சுயநீதியுள்ளவராய்த் தொனிக்கும் நிலையை ஏற்கக்கூடாது, பைபிள் சத்தியங்களை அறிவிப்பதில் ஏளனமாக அல்லது மதிப்பைக் குறைப்பவராகவும் இருக்கக்கூடாது. மாணாக்கர் மனதைப் புண்படுத்த அல்லது அவரை அவமதிக்கவுங்கூட நாம் நிச்சயமாகவே விரும்புகிறதில்லை.—நீதிமொழிகள் 12:18.
மாணாக்கரின் நம்பிக்கைகளை மதித்து, அவர் அவற்றை கொண்டிருப்பதற்குரிய உரிமையை ஒப்புக்கொள்வது அதைப்பார்க்கிலும் மிக அதிக பலன்தரத்தக்கதாய் இருக்கும். இதில் மனத்தாழ்மை முக்கிய அம்சமாக உள்ளது. மனத்தாழ்மையுள்ள ஒரு போதகர், தன் மாணாக்கரைப் பார்க்கிலும் தான் இயல்பாய் மேம்பட்டவரென உணருகிறதில்லை. (லூக்கா 18:9-14; பிலிப்பியர் 2:3, 4) தேவபக்தியுள்ள உந்துவிப்பு மனத்தாழ்மையை உட்படுத்துகிறது, செயல்முறையளவில் இவ்வாறு இருக்கிறது: ‘இதைக் காண்பதற்கு யெகோவா இரக்கமாய் எனக்கு உதவிசெய்தார். அதை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள அனுமதியுங்கள்.’
கொரிந்துவிலிருந்த தன் உடன்கிறிஸ்தவர்களுக்கு, பவுல் இவ்வாறு எழுதினார்: “எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.” (2 கொரிந்தியர் 10:4, 5) யெகோவாவின் சாட்சிகள், இன்று அரண்களாக பலத்திருக்கும் பொய்க் கோட்பாடுகளையும், அவற்றோடுகூட கடவுளுக்குப் பிரியமில்லாதவையான ஆழமாய்ப் பதிக்கப்பட்டுள்ள பழக்கவழக்கங்களையும் போக்குகளையும் தகர்ப்பதற்கு கடவுளுடைய வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். (1 கொரிந்தியர் 6:9-11) இவ்வாறு செய்வதில், யெகோவா தங்களிடமாக அன்புடன்கூடிய பொறுமையுடன் இருக்கிறார் என்று சாட்சிகள் நினைவுகூருகிறார்கள். அவருடைய வார்த்தையாகிய பைபிள் தங்களுக்கு இருப்பதிலும், பொய்ப் போதகங்களை வேரோடு பிடுங்கி எறிந்து, உந்துவிக்கும் கலையோடு இருதயங்களை எட்டுவதற்கும் இந்த வல்லமைவாய்ந்த கருவியைப் பயன்படுத்துவதிலும் அவர்கள் எவ்வளவாய் மகிழ்ச்சியடைகிறார்கள்!
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் காவற்கோபுர பதிப்பில் பக்கங்கள் 7-9-லுள்ள “ஐனிக்கேயாளும் லோவிசாளும்—பின்பற்றத்தக்க போதனையாளர்கள்” என்ற கட்டுரையைக் காண்க.
b யோவான் 14:28; பிலிப்பியர் 2:5, 6; கொலோசெயர் 1:13-15 ஆகியவற்றைக் காண்க. மேலுமானத் தகவலுக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்த, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? என்ற சிற்றேட்டைக் காண்க.
[பக்கம் 23-ன் பெட்டி]
உங்கள் மாணாக்கரின் இருதயத்தை எட்டுதல்
◻ பைபிள் மாணாக்கரின் இருதயத்தை எட்ட யெகோவாவின் வழிநடத்துதலுக்காக ஜெபியுங்கள்.—நெகேமியா 2:4, 5; ஏசாயா 50:4.
◻ மாணாக்கர் நம்புவதையும் பொய்யான ஒரு நம்பிக்கையை வசீகரமுள்ளதாக அவர் ஏன் காணலாம் என்பதையும் பகுத்தறியுங்கள்.—அப்போஸ்தலர் 17:22, 23.
◻ தயவும் பொறுமையுமுள்ள முறையில், பொது விவாத ஆதாரத்தைக் காத்துவருகையில், காரணகாரிய பொருத்தமுடைய, வேதப்பூர்வ விவாதத்தை கட்டியெழுப்புங்கள்.—அப்போஸ்தலர் 17:24-34.
◻ கூடுமானால், பயனுண்டாக்கும் விளக்க உதாரணங்களுடன் பைபிள் சத்தியங்களை மேலும் சக்தி வாய்ந்த விதத்தில் அளியுங்கள்.—மாற்கு 4:33, 34.
◻ பைபிளிலிருந்து வரும் திருத்தமான அறிவை ஏற்பதன் நன்மைகளை மாணாக்கருக்குக் காட்டுங்கள்.—1 தீமோத்தேயு 2:3, 4; 2 தீமோத்தேயு 3:14, 15.