மகிழ்ச்சியான வைபவம்—கிலியட் பள்ளியின் 104-வது வகுப்பு பட்டமளிப்பு விழா
“இன்று சந்தோஷமான நாள், நாம் எல்லோருமே மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறோம்.” இப்படித்தான் மார்ச் 14, 1998 அன்று, யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினரான கேரி பார்பர், உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் 104-வது வகுப்பு பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார். இந்த வைபவத்தில் கலந்து கொள்ள 4,945 பேர் வந்திருந்தனர்; “மகிழ்ச்சிப் பாட்டு” என்ற தலைப்பில் அமைந்த 208-ம் பாடலுடன் நிகழ்ச்சிநிரல் ஆரம்பமானது.
சந்தோஷத்தை காத்துக்கொள்ள நடைமுறை அறிவுரை
நிகழ்ச்சியின் ஆரம்பமாக, பைபிளின் அடிப்படையில் அமைந்த தொடர்ச்சியான ஐந்து பேச்சுகள் கொடுக்கப்பட்டன; ஒவ்வொரு பேச்சும் பட்டமளிப்பு நாளில் கரைபுரண்டோடிய மகிழ்ச்சியை எப்படி தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது என்பதன் பேரிலான சில நடைமுறை அறிவுரைகளை தந்தது.
முதல் பேச்சு ரைட்டிங் டிபார்ட்மெண்டைச் சேர்ந்த ஜோசப் இம்ஸ் என்பவரால் கொடுக்கப்பட்டது. அவர் “உத்தமமுள்ளோரின் மனநிலையைப் பின்பற்றுங்கள்” என்ற பொருளில் பேசினார்; அது பைபிள் புத்தகமாகிய இரண்டு சாமுவேல் 15 மற்றும் 17-ம் அதிகாரங்களில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது; அங்கே, தாவீதின் மகனாகிய அப்சலோம், கலகத்தை தூண்டுவதன் மூலமாக தன் தகப்பனுக்கு கடவுள் கொடுத்திருந்த ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு செய்த சதித்திட்டம் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதேபதிவு யெகோவாவால் அபிஷேகம் பண்ணப்பட்ட தாவீது ராஜாவிடம் சிலர் தொடர்ந்து விசுவாசமாக இருந்தனர் என்றும் காட்டுகிறது. இதிலிருந்து புதிய மிஷனரிகள் என்ன பாடத்தை கற்றுக் கொள்ளலாம்? “நீங்கள் மிஷனரிகளாக எங்கு சென்றாலும்சரி, தேவராஜ்ய அதிகாரத்திற்கான மரியாதையையும் ஒத்துழைக்கும் மனப்பான்மையையும் உத்தமத்தன்மையோடு முன்னேற்றுவியுங்கள். மற்றவர்களும் அவ்வாறு செய்ய உதவுங்கள்” என்று சொல்லி சகோதரர் இம்ஸ் முடித்தார்.
அடுத்து, டேவிட் சின்கிளேர் பேசினார்; 15-ம் சங்கீதத்திலிருந்து, (NW) ‘யெகோவாவின் கூடாரத்தில்’ விருந்தினராக தங்குவதற்கு தேவைப்படுகிற பத்து காரியங்களை விளக்கிக் காட்டினார். அவருடைய பேச்சின் தலைப்பு “உங்களுடைய மிஷனரி கூடாரத்தில் விருந்தினராக தொடர்ந்திருங்கள்” என்பதே. பட்டம் பெறுகிற மாணவர்களை, அவர்கள் விருந்தினராக தங்கப்போகிற மிஷனரி பிராந்தியத்தில் இந்த சங்கீதத்தை பொருத்தும்படி உற்சாகப்படுத்தினார். எல்லா சமயத்திலும் கடவுளுடைய தராதரங்களின்படி வாழவேண்டியதன் முக்கியத்துவத்தை சகோதரர் சின்கிளேர் வலியுறுத்தினார். அதன் விளைவு என்னவாயிருக்கும்? சங்கீதம் 15:5 இவ்வாறு விடையளிக்கிறது: “இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.”
ஆளும் குழுவின் அங்கத்தினரான ஜான் பார் அடுத்ததாக பேசினார்; கிறிஸ்தவ கூட்டங்களில் பாடல்கள் ஏற்படுத்துகிற புத்துணர்ச்சிக்கு அவர் கவனத்தை திருப்பினார். ஆனால், முழு உலகிலும் இன்று பாடப்படும் மகிழ்ச்சி பொங்கும் பாட்டு எது? அது கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தின் நற்செய்தியே. இந்தப் பாடல்களை பாடுவதால் அல்லது ராஜ்யத்தை பற்றிய பிரசங்கிப்பால் என்ன பலன் கிடைத்திருக்கிறது? 208-ம் பாடலின் இரண்டாம் வரி இதற்கு சுருக்கமாக விடையளிக்கிறது: “பிரசங்கித்தலால், நற்போதனையால் யெகோவாவின் பக்கம் சேர்ந்தனர். இவர்கள் கூட களிகூர்ந்திட எவ்விடமும் பாடுகின்றனர்!” ஆம், ஒவ்வொரு நாளும் சுமார் 1,000 புதிய சீஷர்கள் முழுக்காட்டப்படுகின்றனர். “சகோதரர்களே, நீங்கள் ஊழியப் பிராந்தியத்திற்கு அனுப்பப்படுவதே உங்களுடைய துதிப் பாட்டைக் கேட்பதற்காக காத்துக்கொண்டிருக்கும் மக்களைச் சந்திக்கத்தான் என்பதை எண்ணிப் பார்ப்பது வியப்பூட்டுவதாய் இல்லையா?” என்று சொல்லி சகோதரர் பார் தன்னுடைய பேச்சை முடித்தார்.
“அனுபவசாலிகள் சொல்பவற்றுக்கு செவிகொடுங்கள்” என்பதே ரைட்டிங் டிபார்ட்மெண்டைச் சேர்ந்த ஜேம்ஸ் மான்ட்ஸ் கொடுத்த அடுத்த பேச்சின் தலைப்பு. சில காரியங்களை அனுபவத்தின் மூலமாக மட்டுமே கற்றுக்கொள்ள முடியும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். (எபிரெயர் 5:8) இருந்தாலும், நீதிமொழிகள் 22:17 “உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய” அல்லது அனுபவசாலிகளுடைய ‘வார்த்தையைக் கேள்’ என்று நம்மை உற்சாகப்படுத்துகிறது. தங்களுக்கு முன்பு அங்கு சென்று வாழுகிற மிஷனரிகளிடமிருந்து பட்டம் பெறுகிற மாணவர்கள் அதிகத்தை கற்றுக்கொள்ளலாம். “அவர்களுக்கு உள்ளூர் கடைக்காரர்களிடம் எப்படி பேரம் பேசுவது என தெரியும். நகரத்தில் எத்தகைய இடங்களுக்கு சென்றால் சரீர ரீதியிலோ ஒழுக்கரீதியாகவோ ஆபத்து ஏற்படக்கூடும் என்பது தெரியும். உள்ளூர் மக்கள் எவற்றால் எளிதில் புண்பட்டுவிடுவர் என்பதை நன்றாக புரிந்திருப்பர். நீங்கள் சந்தோஷமாக இருக்கவும் உங்களுடைய நியமிப்பில் வெற்றியடையவும் என்ன தேவை என்பதை நீண்டகால மிஷனரிகள் அறிந்திருக்கிறார்கள்” என்று சகோதரர் மான்ட்ஸ் சொன்னார்.
கிலியட் பள்ளியின் பதிவாளர் வாலஸ் லிவரன்ஸ் “உங்களுடைய தேவராஜ்ய நியமிப்பை உயர்வாய் மதியுங்கள்” என்ற தலைப்பில் பேசுகையில், அப்போஸ்தலன் பவுல், தீமோத்தேயு, பர்னபா போன்ற மிஷனரிகள் தங்களுடைய நியமிப்பை கடவுளிடமிருந்து அவருடைய பரிசுத்த ஆவியின் மூலமாகவோ அற்புதமான சில வெளிக்காட்டின் மூலமாகவோ பெற்றுக்கொண்டனர்; கிலியட்டில் பயிற்றுவிக்கப்பட்ட மிஷனரிகள் உலகளாவிய பிராந்தியத்தில் தங்களுடைய நியமிப்பை “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யின் மூலமாக பெறுகின்றனர் என்பதை விளக்கினார். (மத்தேயு 24:45-47, NW) அவர் மிஷனரிகளின் நியமிப்புகளை, மீதியானியர்களுக்கு எதிராக போர் செய்யவிருந்த மனிதர்களை கிதியோன் நிற்க வைத்த இடங்களுக்கு ஒப்பிட்டார். (நியாயாதிபதிகள் 7:16-21) “உங்களுடைய தேவராஜ்ய மிஷனரி நியமிப்புகளை உயர்வாய் மதியுங்கள். கிதியோனின் வீரர்கள், ‘அவரவர் தங்கள் நிலையிலே நின்றதைப்’ போலவே உங்களுடைய நியமிப்பை நீங்கள் நிற்கவேண்டிய இடமாக கருதுங்கள். கிதியோனின் முன்னூறு மனிதர்களை பயன்படுத்தியதைப் போல உங்களையும் யெகோவா பயன்படுத்த முடியும் என்பதில் நம்பிக்கை வையுங்கள்” என்று சகோதரர் லிவரன்ஸ் ஊக்கமூட்டினார்.
மக்கள்மீது அக்கறை சந்தோஷத்தை கொண்டுவருகிறது
காவற்கோபுரம் ஒருசமயம் இவ்வாறு குறிப்பிட்டது: “நம்முடைய வாழ்க்கையையும் நாட்டங்களையும், இந்த உலகத்தின் உற்பத்திகளிலும் எலக்ட்ரானிக் சாமான்களிலும் அதாவது தொடர்ந்து உபயோகிப்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லாத பொருட்களின்மேல், வைப்பதற்கு மாறாக, மக்கள் மீது அக்கறை வைத்து, மற்றவர்களுக்காக காரியங்களை செய்வதில் உண்மையான சந்தோஷத்தை அடைய கற்றுக்கொள்வது எந்தளவு மேலானதாகவும் ஞானமானதாகவும் இருக்கும்.” இதற்கு இசைவாக, கிலியட் பள்ளியின் போதனையாளர்களில் ஒருவரான சகோதரர் மார்க் நூமர் மாணவர்களின் ஒரு தொகுதியினரோடு அவர்களுடைய ஊழிய அனுபவங்களைக் குறித்து உரையாடினார்; பின்பு இவ்வாறு குறிப்பிட்டார்: “நீங்கள் மற்றவர்களிடம் தனிப்பட்ட அக்கறை காட்டினால்தான் நல்ல மிஷனரிகளாக முடியும்.”
அயல்நாட்டுப் பிராந்தியத்தில் மகிழ்ச்சியை கண்டடைவதற்கான வழிகள்
மிஷனரி வேலையில் மகிழ்ச்சியும் வெற்றியும் அடைவதற்கான ஒருசில வழிகள் யாவை? சர்வீஸ் டிபார்ட்மெண்டைச் சேர்ந்த சகோதரர் சார்லஸ் வுட்டியும், லத்தீன் அமெரிக்காவின் முன்னாளைய மிஷனரியும், டீச்சிங் கமிட்டியின் உதவியாளருமான சகோதரர் ஹெரால்ட் ஜேக்ஸனும், கிளை அலுவலகக் கண்காணிகளுக்கான பள்ளியின் ஒன்பதாவது வகுப்புக்கு வந்திருந்த பல கிளை அலுவலக குழுவின் அங்கத்தினர்களை பேட்டி கண்டனர். இந்த அங்கத்தினர்கள் அளித்த ஆலோசனைகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ஸாம்பியாவிலிருந்து வந்த ஆல்பர்ட் மூஸன்டா இவ்வாறு சொன்னார்: “சகோதரர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்கு மிஷனரிகள் முந்திக் கொள்வார்களென்றால், அது கட்டியெழுப்புகிற தன்மையை அதிகரிக்கும்; அப்போதுதான் சகோதரர்கள் மிஷனரிகளிடம் நெருங்கி பழகுவர்; அதோடு மிஷனரியும் அவர்களோடு ஐக்கியமாகிவிட முடியும்.”
புதிய மிஷனரிகளிடம் சிநேகப்பான்மையான மக்கள் குடிப்பதற்கு ஏதாவதொன்றை தருகிறபோது தயவாகவும் சாதுரியமாகவும் பதிலளிக்கலாம் என குவாதமாலாவைச் சேர்ந்த ரோலான்டோ மோரால்ஸ் இவ்வாறு ஆலோசனை சொன்னார்: “நான் இந்த ஊருக்கு புதுசு. நீங்க கொடுப்பதை குடிக்க எனக்கு ஆசைதான்; ஒங்கள மாதிரி இன்னும் என்னோட உடம்பு இந்த சூழ்நிலைக்கு பழக்கமாகல. சீக்கிரத்துல எனக்கு இதெல்லாம் பழகிடும்னு நெனக்கிறேன்; அப்ப நீங்க குடுக்கிறத நான் சந்தோஷமா குடிப்பேன்.” இத்தகைய பதிலால் வரும் பலன் என்ன? “அது மக்களை புண்படுத்தாது, மிஷனரிகளும் மற்றவர்களிடம் தயவாக நடந்திருப்பர்.”
மிஷனரிகள் தங்களுடைய நியமிப்பில் சகித்திருப்பதற்கு எது அவர்களுக்கு உதவும்? லைபீரியாவில் கடந்த 12 ஆண்டுகளாக சேவிப்பவரும், 79-வது கிலியட் வகுப்பின் பட்டதாரியுமான சகோதரர் பால் க்ரூடாஸ் இந்த குறிப்பை சொன்னார்: “பிள்ளைகளை பிரிந்திருப்பது பெற்றோருக்கு கஷ்டமாக இருக்குமென்பது உண்மைதான்; ஆனால் அந்த ஊர், சூழ்நிலை, கலாச்சாரம், மக்கள் இவற்றோடெல்லாம் அவர் பழக்கமாவதற்கு சிறிதுகாலம் ஆகும். அந்த சமயத்தில் வீட்டுக்கு போய்விடலாமா என்றும்கூட அவருக்கு தோன்றும். ‘நாங்க எல்லாருமே உன் நினைவா இருக்கிறோம், நீ இல்லாம நாங்க என்ன செய்யப்போறோம்னு எங்களுக்கு தெரியலை’ என்று சொல்லுகிற ஒரு கடிதம் போதும், அவர் பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு கிளம்புவதற்கு. இதை இங்கு வந்திருக்கிற உறவினர்கள் முக்கியமாக மனதில் வைக்கவேண்டும்.”
பேட்டிகளுக்கு பிறகு, நிகழ்ச்சிநிரலின் கடைசி பேச்சை ஆளும் குழுவின் அங்கத்தினரான தியோடர் ஜராக்ஸ் கொடுத்தார். அவருடைய பேச்சின் பொருள் “உங்களுடைய வாழ்க்கையில் ராஜ்யத்தை முதலாவதாக வையுங்கள்” என்பதே. மிஷனரிகள் தங்களுடைய மனதை அலையவிடாமல் தங்களுடைய வேலையில் கவனத்தை ஒருமுகப்படுத்துவது எப்படி? தனிப்பட்ட பைபிள் படிப்புக்கான அட்டவணையைக் கொண்டிருப்பது ராஜ்ய அக்கறைகளை வாழ்க்கையில் முதலாவதாக வைத்திருக்க உதவும் என்று அவர் உற்சாகப்படுத்தினார். காலத்துக்கேற்ற இந்த நினைப்பூட்டுதலும் கொடுக்கப்பட்டது: “எலக்ட்ரானிக் சாமான்கள், இ-மெயில், கம்ப்யூட்டர் ஆகியவற்றில் மூழ்கிப்போய், சில மிஷனரிகள் தங்களுடைய தனிப்பட்ட படிப்பை அசட்டை செய்திருக்கிறார்கள். எந்தக் கருவியைப் பயன்படுத்துவதிலும் சமநிலையோடிருக்கவேண்டும்; தனிப்பட்ட பைபிள் படிப்புக்கான நேரத்தை தடை செய்கிற எதற்கும் அளவுக்குமீறி நேரம் செலவழிப்பதைக் குறித்து கவனமாயிருக்கவேண்டும்.”
சகோதரர் ஜராக்ஸின் பேச்சைத் தொடர்ந்து பட்டங்கள் வழங்கப்பட்டன. மாணவர்களின் போற்றுதல் கடிதமும் வாசிக்கப்பட்டது. மாணவர்களின் உணர்ச்சிப் பிரவாகத்தை வகுப்பு பிரதிநிதி கீழ்க்காணும் வார்த்தைகளில் கொட்டினார்: “அன்பே தம்முடைய சீஷர்களை தனிப்படுத்தி காட்டும் பண்பு என்று இயேசு சொன்னார்; அதற்கான தெளிவான அத்தாட்சியை நாங்கள் கண்டோம்; நாங்கள் எங்கிருந்தாலும்சரி, ஆர்வமிக்க, அன்பான, தாய்போன்ற அமைப்பு எங்களை ஆதரிக்க இருக்கிறது என்ற உறுதியை இது கொடுக்கிறது. இத்தகைய ஒரு ஆதரவுடன், பூமியின் கடைக்கோடிகளுக்கும்கூட செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம்.” நெஞ்சை நெகிழவைத்த இந்த முடிவுரையுடன் கிலியட்டின் 104-ம் வகுப்பின் மகிழ்ச்சிகரமான பட்டமளிப்பு வைபவம் நிறைவடைந்தது.
[பக்கம் 24-ன் பெட்டி]
வகுப்பின் புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 9
அனுப்பப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 16
மாணவர்களின் எண்ணிக்கை: 48
தம்பதிகளின் எண்ணிக்கை: 24
சராசரி வயது: 33
சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 16
முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 12
[பக்கம் 25-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 104-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன (இடமிருந்து)(1) ராமாரோ, எம்.; ஹூவர்த், ஜெ.; பிளேக்பெர்ன்-கேன், டி.; ஹோகென்காஸர், இ.; வெஸ்ட், எஸ்.; டாம், எஸ். (2) கோலோன், டபிள்யு.; கிளான்சி, ஜெ.; கோனோ, ஒய்.; டிரூஸ், பி.; டாம், எஸ்., கோனோ, டி. (3) டாம், டி.; ஜெஸ்மைஸ்டர், எஸ்.; கெர்டெல், எஸ்.; எல்வெல், ஜெ.; டனெக், பி.; டிபடோ, ஹெச். (4) டெய்லர், இ.; ஹில்ட்ரெட், எல்.; சான்சஸ், எம்.; ஏண்டர்ஸன், சி.; பக்னார், டி.; ஹோகென்காஸர், இ. (5) ஹூவர்த், டி.; வார்ட், சி.; ஹின்ச், பி.; மெக்டானால்ட், ஒய்.; சான்சஸ், டி.; தாம், ஓ. (6) டிரூஸ், டி.; டிபடோ, இ.; எல்வெல், டி.; டனெக், டபிள்யு.; பிளேக்பெர்ன்-கேன், டி.; வார்ட், டபிள்யு. (7) ஏண்டர்ஸன், எம்.; ஜெஸ்மைஸ்டர், ஆர்.; மெக்டானால்ட், ஆர்.; பக்னார், ஆர்.; கிளான்சி, எஸ்.; கெர்டெல், ஜி. (8) ராமாரோ, டி.; ஹின்ச், ஆர்.; ஹில்ட்ரெட், எஸ்.; டெய்லர், ஜெ.; கோலோன், எ.; வெஸ்ட், டபிள்யு.
[பக்கம் 26-ன் படம்]
104-வது வகுப்பை போதிப்பதில் பங்குகொண்ட சகோதரர்கள்: டபிள்யு. லிவரன்ஸ், யு. கிளாஸ், கே. ஆடம்ஸ், எம், நூமர்