பூமிக்கு அழிவு நிச்சயமா?
இருபதாம் நூற்றாண்டு முடிவடையவிருக்கிறது, 21-ஆம் நூற்றாண்டும் பிறக்கவிருக்கிறது. இந்நிலையில், அழிவைப் பற்றிய கணிப்புகளை பொதுவாக அசட்டை செய்யும் அல்லது காதிலேயே வாங்கிக்கொள்ளாத நபர்களும்கூட, விரைவில் உலகைக் கலக்கும் முக்கிய சம்பவம் ஏதாவது நடக்குமோ என யோசிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்த விஷயத்தின்பேரில் செய்தித்தாள்களிலும் பத்திரிகைகளிலும் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன, புத்தகங்களும்கூட எழுதப்பட்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். என்ன சம்பவங்களோடு 21-ஆம் நூற்றாண்டு ஆரம்பமாகும் என்பதை நாம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும். 20-ஆம் நூற்றாண்டு முடிவடையும்போது அப்படியொன்றும் பிரமாதமாய் எதுவும் நடந்துவிடாது, வெறுமனே புத்தாண்டு பிறக்கும், அவ்வளவுதான் (சொல்லப்போனால் வருடம் 2000-க்கும் 2001-க்கும் ஒரு நிமிட வித்தியாசம்தான்) என சிலர் சொல்கின்றனர். ஆனால், அதற்குப் பிறகு நம் கிரகத்தின் எதிர்காலம் எப்படியிருக்குமோ என நினைத்து அநேகர் மிகவும் கவலைப்படுகின்றனர்.
இந்நாட்களில் நாம் அடிக்கடி கேள்விப்படும் கணிப்பு என்னவென்றால், என்றாவது ஒருநாள்—நாளையாகவும் இருக்கலாம் பல ஆண்டுகள் கழித்தும் இருக்கலாம்—இந்தப் பூமி, இருந்த சுவடே தெரியாமல் அழிந்துபோகும் என்பதுதான். துக்கமளிக்கும் அப்படிப்பட்ட கணிப்புகளில் இரண்டை மட்டும் இப்போது பார்க்கலாம்.
1996-ல் முதன்முறையாக பிரசுரிக்கப்பட்ட, உலக முடிவு—மனிதகுல அழிவின் அறிவியலும் நெறிகளும் என்ற ஆங்கில புத்தகத்தில், அதன் ஆசிரியரும் தத்துவஞானியுமான ஜான் லெஸ்லி, மனிதகுலம் பூமியிலிருந்து துடைத்தழிக்கப்படுவதற்கு மூன்று சாத்தியங்கள் இருப்பதாக சொல்கிறார். முதலில் அவர் கேட்பதாவது: “உலகளாவிய அணு ஆயுதப் போர் மனித இனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுமா?” அதன்பின் இவ்வாறு சொல்கிறார்: “அநேகமாய் . . . கதிரியக்கத்தின் பாதிப்புகளால்—புற்றுநோய்கள், தடுப்பாற்றல் பலவீனமாவதால் அதிகரிக்கும் தொற்று நோய்கள் அல்லது எண்ணற்ற பிறவிக் கோளாறுகள் ஆகியவற்றால்—அழிவு ஏற்படும் என எதிர்பார்க்கலாம். சுற்றுச்சூழலுக்கு நலன்பயக்கும் நுண்ணுயிரிகளும்கூட சாகலாம்.” திரு. லெஸ்லி கூறும் மூன்றாவது சாத்தியம் என்னவென்றால், இந்தப் பூமியை ஒரு வால்நட்சத்திரமோ அல்லது ஒரு நுண்கோளோ (asteroid) தாக்கலாம். அதாவது, “ஏறக்குறைய இரண்டாயிரம் வால்நட்சத்திரங்களுக்கும் நுண்கோள்களுக்கும், என்றாவது ஒரு நாள் தங்கள் சுற்றுப்பாதையை விட்டு பூமியின் சுற்றுப்பாதைக்குள் சென்று தாக்கும் சாத்தியம் இருப்பதாய் தோன்றுகிறது; அவற்றின் சுற்றுப்பாதையினுடைய விட்டம் ஒன்று முதல் பத்து கிலோமீட்டர் ஆகும். இவற்றைக்காட்டிலும் பெரிய விட்டமுள்ளவை எண்ணிக்கையில் சற்று குறைவாகவே காணப்படுகின்றன (திட்டவட்டமான எண்ணிக்கையை ஊகித்து மட்டுமே சொல்லமுடியும்), சிறிய விட்டமுள்ளவையோ பெருமளவில் காணப்படுகின்றன.”
“அழிவுநாள்” பற்றிய தத்ரூபமான விளக்கம்
மற்றொரு விஞ்ஞானியான பால் டேவிஸ் சொல்வதைக் கவனியுங்கள்; அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராய் பணியாற்றுகிறார். “உலகிலேயே மிகச் சிறந்த அறிவியல் எழுத்தாளர்” என்று வாஷிங்டன் டைம்ஸ் அவரை விவரித்தது. கடைசி மூன்று நிமிடங்கள் என்ற ஆங்கில புத்தகத்தை 1994-ல் அவர் வெளியிட்டார்; அது “அழிவுநாளை விவரிக்கும் தலைசிறந்த புத்தகம்” என பெயர்பெற்றிருக்கிறது. இப்புத்தகத்தின் முதல் அதிகாரத்தின் தலைப்பு “அழிவுநாள்.” அது ஒரு வால்நட்சத்திரம் பூமியைத் தாக்கினால் என்ன நேரிடக்கூடும் என்பதைப் பற்றிய ஒரு கற்பனை காட்சியை அளிக்கிறது. குலை நடுங்க வைக்கும் அவரது விளக்கத்தின் ஒரு பகுதியைக் கவனியுங்கள்:
“பத்தாயிரம் பூகம்பங்கள் ஒருமிக்க ஏற்பட்டதுபோல் இக்கிரகம் நடுநடுங்குகிறது. வெடித்தெழும் கடும் வெப்பம் நாலாபக்கமும் வீசியடித்து கட்டிடங்களை தரைமட்டமாக்குகிறது; அதன் பாதையில் உள்ளவையெல்லாம் சுக்குநூறாக சிதறிப்போகின்றன. வால்நட்சத்திரம் மோதிய பரப்பைச் சுற்றிலும் பல இடங்களில், அக்கினிக் குழம்பு பல கிலோமீட்டர் உயரத்திற்கு பீச்சியடிக்கப்படுகிறது; அப்போது 150 கிலோமீட்டர் ஆழத்திற்கு பூமியின் கருவறையே வெறுமையாகிறது. . . . அடர்ந்த புழுதிப் படலம் வளிமண்டலத்தின் போர்வையாகிறது, ஆக கிரகத்தில் சூரியவொளி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனாலும் பயங்கரப் பிரகாசம்!!? சின்னாபின்னமாக வெடித்துச் சிதறி விண்வெளி வரை தூக்கியெறியப்பட்ட அனைத்தும் போன வேகத்தில் மறுபடியும் கீழே காற்று மண்டலத்திற்குள் வந்து விழுகின்றன. நூறு கோடிக்கும் மேலான இவையே, விவரிக்க முடியாத கடும் வெப்பத்தால் பயங்கரமாய் பிரகாசிக்கின்றன; அவற்றின் வெப்பக் கனலினால் நிலமும் கொதி கொதிக்கிறது.”
பேராசிரியர் டேவிஸ் இந்தக் கற்பனை காட்சியை, ஸ்விஃப்ட்-டட்டெல் என்ற வால்நட்சத்திரம் பூமியை மோதவிருக்கிறது என்ற கணிப்போடு சம்பந்தப்படுத்துகிறார். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் ஒருவேளை உடனடியாக நிகழாமலிருக்கலாம், ஆனால் “ஸ்விஃப்ட்-டட்டெல் அல்லது அது போன்ற வேறேதாவது ஒன்று, இந்தப் பூமியை என்றாவது ஒருநாள் நிச்சயமாய் மோதும்” என்பதே தன் அபிப்பிராயம் என்றும் சொல்லி எச்சரிக்கிறார். அவர் அந்த முடிவுக்கு வரக் காரணம், அரை கிலோமீட்டர் அல்லது அதற்கும் அதிகமான விட்டமுள்ள 10,000 விண்வெளி கோள்கள் பூமியின் கோளப் பாதைக்கு குறுக்கே வலம் வருவதாய் கணக்கிடப்பட்டிருப்பதே.
இப்படிப்பட்ட திகிலூட்டும் சம்பவம் உண்மையிலேயே நிகழும் என நம்புகிறீர்களா? ஆச்சரியம் என்னவென்றால், மிக அதிகமானோர் நம்புகிறார்கள். அதேசமயத்தில் தங்கள் வாழ்நாளில் அது நடக்காது என சொல்லிக்கொண்டு கவலையின்றி இருக்கிறார்கள். ஆனால், பூமி ஏன் அழிய வேண்டுமென்பதுதான் முதல் கேள்வி; அழிவு இப்போதா ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு பிறகா என்பதெல்லாம் அடுத்து வருபவையே. நிச்சயமாகவே, மனிதருக்கோ மிருகங்களுக்கோ ஏற்படும் பிரச்சினைகளுக்கு இந்தப் பூமி எவ்விதத்திலும் காரணமாய் இல்லை. அதற்கு மாறாக, இந்த 20-ஆம் நூற்றாண்டில் எதிர்ப்படும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு மனிதனே காரணமாய் இருக்கிறான் அல்லவா? ஒருவேளை முழுமையாய் ‘பூமியை அழிப்பதற்கும்’ அவனே காரணமாய் இருப்பான் அல்லவா?—வெளிப்படுத்துதல் 11:18, NW.
தவறான நிர்வாகத்தின் மத்தியிலும் நம்பிக்கை ஒளி
மனிதனே தனது தவறான நிர்வாகத்தினாலும் பேராசையினாலும் இப்பூமிக்கு சமாதி கட்டிவிடுவான் என எதிர்பார்க்கலாமா? அளவுக்கதிகமாய் காடுகளை அழிப்பது, மட்டுக்குமீறிய அளவு காற்றை அசுத்தப்படுத்துவது, நீர்நிலைகளை மாசுபடுத்துவது ஆகியவற்றின் மூலமாக பூமியின் சில பாகங்கள் ஏற்கெனவே நாசமாக்கப்பட்டிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இது சுமார் 25 ஆண்டுகளுக்கு முன், ஒரேவொரு பூமி என்ற ஆங்கில புத்தகத்தின் ஆசிரியர்களான பார்பரா வார்ட் மற்றும் ரனே டியூபோ என்பவர்களால் ரத்தின சுருக்கமாய் சொல்லப்பட்டது: “பூமியில் உயிர்வாழ தேவைப்படும் மூன்று முக்கிய கூறுகளான காற்று, நீர், நிலம் ஆகியவற்றிற்கே நாம் கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் அவை பெருமளவு மாசுபடுத்தப்படுகின்றன.” இவ்வளவு வருடங்களுக்குப் பிறகாவது, நிலைமையில் ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்ன?
மனிதனின் அறிவீனத்தால் பூமி சர்வநாசம் அடைய வாய்ப்பிருக்கிறது என்றாலும், மீண்டும் சீரடைந்து புதுப் பொலிவடைவதில் நமது கிரகத்திற்கு இருக்கும் திறனைக் குறித்து சிந்திப்பதன் மூலம் நாம் தைரியங்கொள்ளலாம். ரனே டியூபோ என்பவர், தன்னையே சீர்படுத்திக்கொள்ளும் சூழியல் அமைப்புகள் என்ற மற்றொரு ஆங்கில புத்தகத்தில் பூமியின் ஆச்சரியத்தக்க ஆற்றலை விவரிப்பவராய் இந்த உற்சாகமளிக்கும் குறிப்புகளைச் சொல்கிறார்:
“ஏற்கெனவே இந்தச் சூழியல் அமைப்புகளுக்கு செய்யப்பட்டிருக்கும் சேதத்தை மாற்ற முடியாது என்பதால் சுற்றுச்சூழல் நாசம் குறித்த விழிப்புணர்வு காலம் பிந்தி ஏற்பட்டிருப்பதாய் நினைத்து அநேகர் கவலைப்படுகின்றனர். ஆனால் இப்படி நம்பிக்கையற்று இருப்பதற்கு எந்தக் காரணமும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை; ஏனென்றால் சூழியல் அமைப்புகள், சேதத்திலிருந்து மீளுவதற்கான பெரும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன.
“சூழியல் அமைப்புகள், அநேக செயல்முறைகள் மூலம் சுயமாய் சீரடைகிறது. . . . இச்செயல்முறைகள், முன்பிருந்த சமநிலையை மீண்டும் படிப்படியாய் நிலைநாட்டுகின்றன; அதன்மூலம் சேதங்களின் விளைவுகளிலிருந்து சூழியலை மீட்கின்றன.”
சீரமைக்க முடியும்
சமீப ஆண்டுகளில் இதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணமாய், படிப்படியாய் சுத்தமடைந்திருக்கும் லண்டனின் புகழ்பெற்ற தேம்ஸ் நதியைச் சொல்லலாம். பொது நலனுக்காக மனிதர் ஒன்றுபட்டு உழைக்கையில் எதை நிறைவேற்றலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழும், குறிப்பிடத்தக்க இந்தச் சாதனையைப் பற்றி, ஜெஃப்ரி ஹாரிஸன் மற்றும் பீட்டர் க்ரான்ட் எழுதிய மறுரூபமடைந்த தேம்ஸ் என்ற ஆங்கில புத்தகம் பேசுகிறது. பிரிட்டனைச் சேர்ந்த எடின்பர்க் இளவரசர் இப்புத்தகத்தின் முகவுரையில் இப்படி எழுதினார்: “ஒருவழியாக, இமாலய வெற்றி கண்டிருக்கிறோம்; இந்த விஷயத்தை வெளியிட்டால், இயற்கை சீரழிவு தாங்கள் கேள்விப்பட்ட அளவுக்கு அபாய நிலையில் இல்லை என சிலர் நினைக்கலாம் என்பது உண்மைதான். ஆனாலும் இதை வெளியிடுவது தகும். . . . தேம்ஸில் செய்யப்பட்ட சாதனையை கருத்தில்கொண்டு அனைவரும் தைரியங்கொள்ளலாம். மகிழ்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால், சூழியல் அமைப்பை சீரமைக்க முடியும், அதற்கான திட்டங்களும் வெற்றியடையும்.”
“மாபெரும் சுத்திகரிப்பு” என்ற அதிகாரத்தில், கடந்த 50 ஆண்டுகளில் என்ன நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதைக் குறித்து ஹாரிசனும் க்ரான்டும் உற்சாகம்பொங்க எழுதுகின்றனர்: “தொழிற்சாலைகளாலும் மற்றவற்றாலும் படுமோசமாய் மாசுபடுத்தப்பட்ட நதி, உலகிலேயே முதன்முறையாக இந்தளவு சீரடைந்திருப்பதால் நீர்ப்பறவைகளும் மீன்களும் மீண்டும் வகை தொகை இல்லாமல் பெருகியிருக்கின்றன. நம்பி இனி பயனில்லை என கைவிடப்பட்ட ஒன்று இவ்வளவு விரைவாக இந்தளவுக்கு மாறியிருப்பது, முற்றிலும் நம்பிக்கையிழந்த வனப் பாதுகாப்பாளருக்கும்கூட உற்சாகமளிக்கிறது.”
பின் அவர்கள் இந்த மாற்றத்தை விவரிக்கின்றனர்: “முக்கிய கழிவுநீர் அமைப்புகளும் சாக்கடைகளும் இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் சேதப்படுத்தப்பட்டன அல்லது முற்றிலும் நாசமாக்கப்பட்டன; இதை ஒருவேளை மரண அடி எனலாம். இதன் பின்னரே, நதி வேகமாய் மோசமடைய ஆரம்பித்தது. 1940-களிலும் 1950-களிலும் தேம்ஸ் நதி படுமோசமான நிலையில், திறந்த சாக்கடை என்று சொல்லுமளவுக்கு இருந்தது; தண்ணீரோ கன்னங்கரேல், ஆக்ஸிஜனும் இல்லை, போதாக்குறைக்கு கோடை காலங்களில் வெகு தூரம் வரை துர்நாற்றமும் வீசியது. . . . ஒருசமயம் துள்ளித்திரிந்த மீன்கள் ஒன்றையும் காணவில்லை. ஒருசில விலாங்குமீன்கள் மட்டுமே தப்பிக்கொண்டன, ஏனென்றால் அவை மேற்பரப்பிலிருந்து காற்றை நேரடியாகவே சுவாசிக்கும் ஆற்றல் பெற்றவை. லண்டனுக்கும் உல்விச்சுக்கும் இடையேயுள்ள தேம்ஸின் பகுதியில், பறவையினங்களிலேயே காட்டு வாத்தும் வெள்ளை வாத்தும் மட்டுமே விரல்விட்டு எண்ணுமளவு எஞ்சியிருந்தன. அவை நதியில் தீவனம் கிடைக்காததால், கப்பற்துறை தளத்தில் சிந்திக்கிடந்த தானியங்களைச் சாப்பிட்டே உயிர்வாழ்ந்தன. . . . இப்படிப்பட்ட நிலைமை தலைகீழாய் மாறும் என்று அப்போது யார்தான் நினைத்துப் பார்த்திருப்பார்கள்? ஆனாலும் பத்து வருடங்களுக்குள்ளாக நிலைமை மாறியிருக்கிறது; பறவையினங்களே தென்படாத நதியின் அதே பகுதிகள் இன்று அநேக நீர்ப்பறவைகளுக்கு அடைக்கலம் தருகின்றன; குளிர்காலத்தில் காணப்படும் 10,000 காட்டு வாத்துக்களும் 12,000 நீந்தும் பறவைகளும் அவற்றில் அடங்கும்.”
ஆனால் இது, பூமியின் ஒரேவொரு சிறிய பகுதியில் நடந்த மாற்றத்தின் விவரம் மட்டுமே. இருந்தபோதிலும் இந்த உதாரணம் நமக்கு படிப்பினையைத் தருகிறது. மனிதனின் தவறான நிர்வாகம், பேராசை, முன்யோசனையற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாய் இந்தக் கிரகத்திற்கு அழிவு நிச்சயம் என்று கருதவேண்டியதில்லை என அது காட்டுகிறது. பொது நலனுக்காக மனிதவர்க்கத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒன்றுபட்ட முயற்சி எடுத்தால், சூழியலுக்கும் சுற்றுப்புறத்துக்கும் நிலப்பகுதிக்கும் ஏற்பட்டிருக்கும் படுமோசமான சேதத்தையும்கூட பூமி தானே சரிசெய்துகொள்வதற்கு உதவியாயிருக்கும். ஆனால் விண்வெளிக் கோள்களான, சுற்றித்திரியும் வால்நட்சத்திரங்களோ நுண்கோள்களோ பூமியைப் பதம் பார்த்துவிடுமா?
இப்படிப்பட்ட குழப்பமூட்டும் கேள்விக்கு எவ்வாறு திருப்தியான பதிலைக் கண்டடையலாம் என பின்வரும் கட்டுரை காட்டும்.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
விழிப்புணர்வும் ஒன்றுபட்ட முயற்சியும், படுமோசமான சேதத்திலிருந்துகூட மீள பூமிக்கு உதவும்