கடவுளின் நீதியில் நம்முடைய நம்பிக்கையை பலப்படுத்துதல்
“உன் நம்பிக்கை யெகோவாமீது இருப்பதற்கு . . . நான் உனக்கு அறிவைத் தந்திருக்கிறேன்.”—நீதிமொழிகள் 22:19, NW.
1, 2. (அ) யெகோவாவின் சாட்சிகள் யெகோவாவில் ஏன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள்? (நீதிமொழிகள் 22:19) (ஆ) தனி நபர்கள் சிலர் யெகோவாவில் தங்களுடைய நம்பிக்கையைப் பலப்படுத்த வேண்டும் என்பதை எது சுட்டிக்காட்டுகிறது?
மெய் கிறிஸ்தவர்களுக்கு யெகோவாவைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் திருத்தமான அறிவு ஆசீர்வாதமாய் அருளப்பட்டுள்ளது. ‘ஏற்ற வேளையில் [ஆவிக்குரிய] உணவை’ அவர்களுக்கு “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” அன்புடன் வழங்குகிறது. (மத்தேயு 24:45, NW) அவர்கள் பெறும் அறிவு, கடவுள்மீது நம்பிக்கையை வைப்பதற்கு பலமான அஸ்திவாரத்தை அளிக்கிறது. இவ்விதமாக, யெகோவாவின் சாட்சிகள் ஒரு தொகுதியாய், யெகோவாவிலும் அவருடைய நீதியிலும் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள்.
2 என்றபோதிலும், சாட்சிகளில் தனிப்பட்ட நபர்கள் சிலர் இப்படிப்பட்ட நம்பிக்கையை பலப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என தெரிகிறது. சங்கத்தின் பிரசுரங்களில் கொடுக்கப்படும் விளக்கங்கள்மீது சந்தேகப்பட்டு எழுதப்படும் கடிதங்கள் அவ்வப்பொழுது சங்கத்திற்கு வருகின்றன. இந்தச் சந்தேகங்கள், புரிந்துகொள்ளுதலில் மாற்றங்கள் செய்யப்படுகையில் அவர்களுக்கு ஏற்படும் பிரதிபலிப்பாக இருக்கலாம், அல்லது கேள்வி கேட்பவரை முக்கியமாக உணர்ச்சிப்பூர்வமாக பாதிக்கும் விஷயங்களாக இருக்கலாம்.—யோவான் 6:60, 61-ஐ ஒப்பிடுக.
3. யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களுக்கும்கூட என்ன நேரிடலாம், ஏன்?
3 யெகோவாவை சேவிக்கும் உண்மையுள்ள ஊழியர்களும்கூட, பிரசங்கி 9:11-ல் சொல்லப்பட்டுள்ள விஷயத்தின் உண்மையை அனுபவித்திருக்கிறார்கள். அங்கு இவ்வாறு வாசிக்கிறோம்: “நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச் செயலும் [“எதிர்பாராத சம்பவங்களும்,” NW] நேரி[டுகின்றன].” விரிவான, அல்லது ஆவிக்குரிய கருத்தில் இது எவ்வாறு உண்மையாக இருக்கலாம்? பைபிள் அறிவுரையை உடனடியாக பொருத்துகிறவர்களாயும், சத்தியத்திற்காக வாதாடுவதில் திறமைசாலிகளாயும், பைபிள் நியமங்களைப் பொருத்துவதில் ஞானவான்களாயும், திருத்தமான அறிவை நாடுவதில் வைராக்கியமுள்ளவர்களாயும் இருந்த கிறிஸ்தவர்களை நாம் அறிந்திருக்கலாம். இருப்பினும், ‘சமயம் மற்றும் எதிர்பாராத சம்பவங்களால்,’ அதாவது, விபத்தின் காரணமாக அல்லது வயோதிபத்தின் காரணமாக சிலர் இப்பொழுது பலவீனமாய் ஆகியிருக்கலாம். மரிக்காமலேயே கடவுளுடைய புதிய உலகிற்குள் செல்வோமா என்று அவர்கள் யோசிக்கலாம்.
4, 5. கிறிஸ்தவர்கள், யெகோவாவின் நீதியில் நம்பிக்கையை இழந்துவிடுவதற்கு ஏன் எந்தவொரு காரணமும் இல்லை?
4 ஒரு கிறிஸ்தவர் தன்னுடைய மணத் துணையை இழக்கும்போது, அதனால் உண்டாகும் வேதனையும் இழப்புணர்வும் கடுமையாக இருக்கிறது. தம்பதிகளாக ஒன்றுசேர்ந்து யெகோவாவை பல ஆண்டுகளாக அல்லது பல பத்தாண்டுகளாகக்கூட சேவித்திருக்கலாம். திருமண பந்தத்தை மரணம் முறித்துவிடுகிறது என்பதை உயிரோடிருக்கும் துணைவர் அறிந்திருக்கிறார்.a (1 கொரிந்தியர் 7:39) இப்பொழுது, தன்னுடைய நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடைவதைத் தவிர்ப்பதற்கு, அவர் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.—மாற்கு 16:8-ஐ ஒப்பிடுக.
5 துணைவரோ பெற்றோரோ பிள்ளையோ அல்லது நெருங்கிய கிறிஸ்தவ நண்பரோ இறக்கும்போது யெகோவாவின் நீதியில் நம்பிக்கையைக் காண்பிப்பதற்குரிய வாய்ப்பாக அதைக் கருதுவது எவ்வளவு ஞானமானது! தனிப்பட்ட இழப்பை எதிர்ப்படுகையிலும்கூட, யெகோவா அநீதியுள்ளவர் அல்ல என்பதில் நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம். தப்பிப்பிழைப்பதன் மூலமோ அல்லது உயிர்த்தெழுதலின் மூலமோ நித்திய ஜீவனைப் பெறுகிற ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கலாம். கடவுளைப் பற்றி சங்கீதக்காரன் இவ்வாறு சொல்கிறார்: “நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் [“உயிருள்ள ஒவ்வொன்றின்,” NW] வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.”—சங்கீதம் 145:16-19.
தேவையில்லாமல் துன்பப்பட்டதாக உணர்ந்தால்
6, 7. (அ) கடந்தகாலத்தில் துன்பப்பட்ட சாட்சிகளில் சிலர் ஏன் இப்பொழுது வித்தியாசமான புரிந்துகொள்ளுதலை பெற்றிருக்கலாம்? (ஆ) கடந்தகாலத்தில் இப்படிப்பட்ட துன்பத்தை அனுமதித்ததால் யெகோவா அநீதியுள்ளவர் என நாம் ஏன் கருதக்கூடாது?
6 மனசாட்சியின் நிமித்தம் முன்பு ஒரு செயலில் பங்குகொள்ள மறுத்ததற்காக சாட்சிகள் சிலர் துன்பப்பட்டுள்ளனர்; இப்பொழுதோ அதைச் செய்ய அவர்களுடைய மனசாட்சி அனுமதிக்கிறது. உதாரணத்திற்கு, படைத்துறை சாராத சில சேவைகளை எடுத்துக்கொள்ளுங்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இதைச் செய்யாமலிருக்க அவர்கள் தெரிவு செய்திருக்கலாம். தற்போதைய காரிய ஒழுங்குமுறையைக் குறித்ததில், தன்னுடைய கிறிஸ்தவ நடுநிலைமையை மீறாமல் இப்படிப்பட்ட சேவையை சுத்தமான மனசாட்சியோடு செய்யமுடியும் என ஒரு சகோதரர் இப்பொழுது நினைக்கலாம்.
7 மனசாட்சியின் உறுத்தலின்றி இப்பொழுது செய்யலாம் என தான் உணரும் ஒரு செயலை முன்பு செய்ய மறுத்ததற்காக துன்பப்பட அனுமதித்தது யெகோவாவின் பாகத்தில் அநீதியா? அப்படிப்பட்ட அனுபவத்தைப் பெற்ற பெரும்பாலானோர் அவ்வாறு நினைக்க மாட்டார்கள். மாறாக, சர்வலோக அரசதிகாரத்தைப் பற்றிய விவாதத்தில் தாங்கள் உறுதியுடன் இருக்க தீர்மானித்திருப்பதை வெளிப்படையாகவும் தெளிவாகவும் காண்பிப்பதற்கு கிடைத்த வாய்ப்புக்காக சந்தோஷப்படுகிறார்கள். (யோபு 27:5-ஐ ஒப்பிடுக.) யெகோவாவின் சார்பாக உறுதியான நிலைநிற்கை எடுத்து தன் மனசாட்சியின்படி நடந்ததற்காக பின்னர் மனஸ்தாபப்படுவதற்கு ஒருவருக்கு என்ன காரணம் இருக்க முடியும்? கிறிஸ்தவ நியமங்களை தாங்கள் புரிந்துகொண்டபடி உண்மைப் பற்றுறுதியுடன் ஆதரித்ததன் மூலம் அல்லது மனசாட்சியின் உறுத்துதலுக்கு இணங்கியதன் மூலம், யெகோவாவின் நட்புக்குத் தகுதியுள்ளவர்களாக தங்களை நிரூபித்தார்கள். நிச்சயமாகவே, ஒருவருடைய மனசாட்சியை அலைக்கழிக்கும் அல்லது மற்றவர்களை இடறலடையச் செய்யும் ஒரு போக்கை தவிர்ப்பது ஞானமானது. இவ்விஷயத்தில், அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியை நாம் சிந்தித்துப் பார்க்கலாம்.—1 கொரிந்தியர் 8:12, 13; 10:31-33.
8. முன்பு நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றிய யூத கிறிஸ்தவர்கள் யெகோவாவின் நீதியை சந்தேகிப்பதற்கு ஏன் எந்தக் காரணமும் இல்லை?
8 யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்காக, யூதர்கள் பத்துக் கட்டளைகளுக்கும் பல்வேறுபட்ட சுமார் 600 சட்டங்களுக்கும் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. பின்பு கிறிஸ்தவ ஏற்பாட்டில், மாம்சப்பிரகாரமான யூதர்களும்கூட, யெகோவாவை சேவிப்பதற்காக இப்படிப்பட்ட சட்டங்களுக்கு இனிமேல் கீழ்ப்படிய வேண்டிய அவசியமில்லாமல் போனது. விருத்தசேதனம் செய்தல், ஓய்வுநாளைக் கடைப்பிடித்தல், மிருக பலிகளை செலுத்துதல், உணவு சம்பந்தப்பட்ட சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தல் போன்ற சட்டங்கள் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. (1 கொரிந்தியர் 7:19; 10:25; கொலோசெயர் 2:16, 17; எபிரெயர் 10:1, 11-14) அப்போஸ்தலர் உட்பட கிறிஸ்தவர்களாக மாறிய யூதர்கள், நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ் இருந்தபோது கீழ்ப்படிய வேண்டியிருந்த சட்டங்களைக் கைக்கொள்ளும் கடமையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். இனிமேலும் தேவைப்படாத காரியங்களுக்கு முன்பு அவர்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்த்ததால் அவருடைய ஏற்பாடு அநீதியானது என முறையிட்டார்களா? இல்லை, யெகோவாவின் நோக்கங்களை இன்னும் முழுமையாக புரிந்துகொண்டதற்காக அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.—அப்போஸ்தலர் 16:4, 5.
9. சாட்சிகளில் சிலரைக் குறித்ததில் எது உண்மையாக இருந்திருக்கிறது, ஆனால் இதைக் குறித்து வருந்துவதற்கு ஏன் எந்தக் காரணமும் இல்லை?
9 நவீன காலங்களில், சாட்சிகளில் சிலர் எதைச் செய்வது எதைச் செய்யக்கூடாது என்பதைப் பற்றிய தங்களுடைய நோக்குநிலையில் மிகவும் கண்டிப்புடன் இருந்திருக்கிறார்கள். அதன் காரணமாக மற்றவர்களைவிட அதிகமாய் துன்பப்பட்டார்கள். பிற்பாடு, காரியங்களைப் பரந்த அளவில் நோக்குவதற்கு கூடுதலான அறிவு அவர்களுக்கு உதவியது. ஆனால், முன்பு தங்களுடைய மனசாட்சியின்படி செயல்பட்டதற்காகவோ அதனிமித்தம் அதிக துன்பப்பட்டதற்காகவோ வருந்துவதற்கு எந்தக் காரணமும் இல்லை. யெகோவாவுக்கு உண்மையுடன் இருப்பதற்காக, ‘நற்செய்தியினிமித்தம் எல்லா காரியங்களையும் செய்வதற்கு’ துன்பப்பட மனவிருப்பமாய் இருந்ததை அவர்கள் வெளிப்படுத்தியது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அப்படிப்பட்ட தேவபக்தியை யெகோவா ஆசீர்வதிக்கிறார். (1 கொரிந்தியர் 9:23, NW; எபிரெயர் 6:10) அப்போஸ்தலன் பேதுரு உட்பார்வையோடு இவ்வாறு எழுதினார்: “நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்.”—1 பேதுரு 2:20.
யோனாவிடமிருந்து கற்றுக்கொள்ளுதல்
10, 11. யெகோவாவில் அவநம்பிக்கையை யோனா எப்படி காட்டினார்: (அ) நினிவேவுக்குப் போகும்படி நியமிப்பு கொடுக்கப்பட்டபோது? (ஆ) நினிவே மக்களை கடவுள் அழிக்காதபோது?
10 நினிவேயிக்குப் போகும்படி யோனாவிடம் கட்டளையிடப்பட்டபோது, தன்மீது யெகோவா வைத்திருந்த நம்பிக்கைக்கு போற்றுதல் காண்பிக்க தவறிவிட்டான். கீழ்ப்படிய மனமில்லாததால் ஏற்பட்ட பயங்கரமான ஓர் அனுபவத்திற்குப் பிறகு, யோனாவுக்கு புத்தி தெளிந்து, தன்னுடைய தவறை உணர்ந்து, தனக்கு கொடுக்கப்பட்ட அயல்நாட்டு நியமிப்பை ஏற்றுக்கொண்டான்; வரவிருந்த அழிவைக் குறித்து நினிவே பட்டணத்தாருக்கு எச்சரிக்கை விடுத்தான். அப்போது எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தது: நினிவே மக்கள் மனமாற்றத்தை காண்பித்ததால் அவர்களை அழிப்பதை கைவிட்டுவிட யெகோவா உறுதிபூண்டார்.—யோனா 1:1–3:10.
11 யோனாவின் பிரதிபலிப்பு எப்படி இருந்தது? அதிருப்தியடைந்தவனாக, ஜெபத்தில் கடவுளிடம் குறைகூறினான். அவன் கூறியதன் சாராம்சம் இதுவே: ‘இப்படித்தான் நடக்குமென்று நான் அப்போதே நினைத்தேன். அதனால்தான் முதலிலேயே நினிவேயிக்குப் போக எனக்கு விருப்பமில்லை. இப்பொழுது, எல்லா கஷ்டத்தையும் பட்டு, ஒரு பெரிய மீன் விழுங்கியதால் பயந்துபோய் அவமானப்பட்டு, அழிவு சீக்கிரம் வருமென்று நினிவே மக்களுக்கு கஷ்டப்பட்டு எச்சரித்தப் பிறகு பார்த்தால் இப்படி! நான் பட்ட கஷ்டமெல்லாம் வீணாய் போய்விட்டது! நான் செத்து தொலைந்திருக்கலாம்!’—யோனா 4:1-3.
12. யோனாவின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
12 குறைகூறுவதற்கு யோனாவிடம் நியாயமான காரணம் இருந்ததா? மனந்திரும்பிய குற்றவாளிகளுக்கு இரக்கத்தைக் காண்பித்ததில் யெகோவா அநீதியுள்ளவராக இருந்தாரா? உண்மையில், யோனா சந்தோஷப்பட்டிருக்க வேண்டும்; பல்லாயிரக்கணக்கான மக்கள் அழிக்கப்படாமல் காக்கப்பட்டார்களே! (யோனா 4:11) ஆனால், யெகோவாவின் நீதியில் ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை என்பதை அவனுடைய அவமரியாதையான, குறைகூறும் மனப்பான்மை காட்டியது. அவன் தன்னைப்பற்றியே அதிகம் நினைத்துக்கொண்டிருந்தான், மற்றவர்களைப் பற்றி கொஞ்சம்கூட நினைத்துப்பார்க்கவில்லை. நம்மையும் நம்முடைய தனிப்பட்ட உணர்ச்சிகளையும் இரண்டாவதாக வைப்பதன் மூலம் நாம் யோனாவிடமிருந்து கற்றுக்கொள்வோமாக. யெகோவா தம்முடைய அமைப்பின் வாயிலாக கொடுக்கும் வழிநடத்துதலை பின்பற்றி அவருடைய தீர்மானங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் அவருக்கு கீழ்ப்படிவதே செய்யவேண்டிய சரியான காரியம் என்பதில் நம்பிக்கையோடு இருப்போமாக. யெகோவாவுக்கு “முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள்” என்பதில் நாம் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.—பிரசங்கி 8:12.
நம்முடைய நம்பிக்கையைப் பலப்படுத்துவதற்கு இதுவே தருணம்!
13. நாம் அனைவரும் யெகோவாவில் நம்முடைய நம்பிக்கையை எவ்வாறு பலப்படுத்தலாம்?
13 யெகோவாவில் நம்முடைய நம்பிக்கையை பலப்படுத்துவதே ஞானமான போக்கு. (நீதிமொழிகள் 3:5-8) நிச்சயமாகவே, அதிக நம்பிக்கையுள்ளவர்களாய் ஆவதற்கு உதவும்படி யெகோவாவிடம் ஜெபிப்பது மட்டும் போதாது. திருத்தமான அறிவின் அடிப்படையிலேயே நம்பிக்கை வளருகிறது. ஆகவே நம்முடைய அன்றாட பழக்கத்தில் தனிப்பட்ட பைபிள் படிப்பை ஒரு பாகமாக்கிக்கொண்டு, பைபிளையும் பைபிள் சார்ந்த விளக்க நூல்களையும் படிக்க வேண்டும். கிறிஸ்தவ கூட்டங்களுக்கு தவறாமல் ஆஜராவது இன்றியமையாதது; அதைப் போலவேதான் முடிந்தளவுக்கு நன்கு தயாரிப்பதும் பங்குகொள்வதும்கூட. மற்றவர்களுடன் பைபிள் சத்தியங்களைப் பகிர்ந்துகொள்வதை ஒரு பழக்கமாக்கிக்கொள்வதும், ஆட்சேபணைகளை சாமர்த்தியமாய் சமாளிப்பதும், யெகோவாவிலும் அவருடைய வார்த்தையிலும் நம்முடைய நம்பிக்கையை ஆழமாக்குகிறது. இவ்விதமாய், அனுதினமும் அவருடன் அதிக தொடர்புகொள்கிறவர்களாக ஆவோம்.
14. கடவுளின் ஜனங்கள் சீக்கிரத்தில், முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு யெகோவாவில் நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டிய தேவை ஏன் ஏற்படும்?
14 வெகு சீக்கிரத்தில், மனிதவர்க்கத்தை இதுவரை தாக்கியிராத மிகுந்த உபத்திரவம் திடீரென ஆரம்பமாகும். (மத்தேயு 24:21) அப்பொழுது, கடவுளுடைய ஊழியர்கள் யெகோவாவின் நீதியிலும் அவருடைய அமைப்பின் மூலம் கொடுக்கப்படும் வழிநடத்துதலிலும் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும். அடையாளப்பூர்வமான முறையில், அப்பொழுது அவர்கள் கடவுளுடைய இந்தக் கட்டளைக்கு நம்பிக்கையோடு கீழ்ப்படிவார்கள்: “என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்.” (ஏசாயா 26:20) 232 நாடுகளில் உள்ள 85,000-க்கும் அதிகமான சபைகளின் பாதுகாப்பான சூழலுக்குள் அவர்கள் ஏற்கெனவே நுழைந்துவிட்டார்கள். “நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசி” என்ற இந்தக் கட்டளையுடன் கூடுதலாக எது சேர்க்கப்பட்டாலும்சரி, அதை நிறைவேற்றுவதற்கு யெகோவா நமக்கு உதவிசெய்வார் என்ற நம்பிக்கையோடு இருக்கலாம்.
15. 1998-ல், நம்பிக்கையைப் பற்றிய விஷயம் எவ்வாறு வலியுறுத்திக் காண்பிக்கப்பட்டது, அது ஏன் பொருத்தமாகவும் இருக்கிறது?
15 இப்பொழுதே நம்முடைய நம்பிக்கையை பலப்படுத்துவது இன்றியமையாதது. நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்களில், யெகோவாவின் அமைப்பில், எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவில்தாமே நம்பிக்கை இல்லையென்றால் தப்பிப்பிழைப்பது சாத்தியமற்றது. ஆகவே, “யெகோவாவின் பெயரில் கூப்பிடுகிற அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள்” என்ற வருடாந்தர வசனத்தின் மூலம், உலகமுழுவதும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் 1998-ல் திரும்பத் திரும்ப நினைப்பூட்டப்படுவது எவ்வளவு பொருத்தமானது! (ரோமர் 10:13, NW) அதைக் குறித்து நாம் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த நம்பிக்கையில் கடுகளவு சந்தேகம் இருப்பதை கண்டுபிடித்தாலும், இப்பொழுதே, ஆம் இன்றே அதைச் சரிப்படுத்துவதற்கு உழைக்க வேண்டும்.
யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நீதியாக இருக்கும்
16. நம்பிக்கையை வளர்க்காவிட்டால் அதற்கு என்ன நேரிடலாம், இதை நாம் எவ்வாறு தடுக்கலாம்?
16 எபிரெயர் 3:14-ல் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இவ்வாறு எச்சரிக்கப்படுகிறார்கள்: “நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.” நியமத்தின் அடிப்படையில், பூமிக்குரிய நம்பிக்கையையுடைய கிறிஸ்தவர்களுக்கும் இந்த வார்த்தைகள் பொருந்துகின்றன. ஆரம்பத்தில் வைத்திருந்த நம்பிக்கையை வளர்க்காவிட்டால் அது கொஞ்சம் கொஞ்சமாக பலவீனப்பட்டுவிடும். நாம் தொடர்ந்து திருத்தமான அறிவை நாடுவதன்மூலம் நம்முடைய நம்பிக்கைக்கு ஆதாரமாக அமைந்துள்ள அஸ்திவாரத்தைப் பலப்படுத்துவது எவ்வளவு இன்றியமையாதது!
17. தப்பிப்பிழைத்தலைக் குறித்ததில், இயேசு சரியாக நியாயந்தீர்ப்பார் என்பதில் நாம் ஏன் நம்பிக்கையுடன் இருக்கலாம்?
17 ‘மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல [ஜனங்களை] பிரிக்கும்படிக்கு,’ எல்லா தேசத்தாரும் விரைவில் கிறிஸ்துவால் பரீட்சிக்கப்படுவார்கள். (மத்தேயு 25:31-33) தப்பிப்பிழைப்பதற்கு தகுதியானவர்கள் யார் என நியாயந்தீர்ப்பதில் கிறிஸ்து நீதியாக செயல்படுவார் என்பதில் நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம். ‘பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பதற்கு’ யெகோவா அவருக்கு ஞானத்தையும், உட்பார்வையையும், தேவையான மற்ற பண்புகளையும் தந்திருக்கிறார். (அப்போஸ்தலர் 17:30, 31) நம்முடைய நம்பிக்கை ஆபிரகாமைப் போல் இருப்பதாக. அவர் சொன்னார்: “துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் [யெகோவாவுக்குத்] தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ”?—ஆதியாகமம் 18:25.
18. தற்சமயம் நமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி நாம் ஏன் மிதமீறி கவலைப்பட வேண்டியதில்லை?
18 யெகோவாவின் நீதியில் முழு நம்பிக்கையோடு இருக்கலாம். ‘குழந்தைகளும் சிறுபிள்ளைகளும் எவ்வாறு நியாயந்தீர்க்கப்படுவார்கள்? அர்மகெதோன் வரும்போது நிறைய பேர் நற்செய்தியை கேள்விப்படாமலேயே இருப்பார்களா? மனவளர்ச்சி குன்றியவர்களைப் பற்றியென்ன? . . . இவர்களைப் பற்றியென்ன?’ போன்ற கேள்விகளுக்கு பதில்களைக் கண்டுபிடிப்பதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இந்தப் பிரச்சினைகளை யெகோவா எவ்வாறு தீர்ப்பார் என்பது இப்பொழுது நமக்கு தெரியாமல் இருக்கலாம் என்பது உண்மைதான். என்றபோதிலும், நீதியான முறையிலும் இரக்கமான முறையிலும் அவர் இவற்றை கையாளுவார். நாம் அதை ஒருபோதும் சந்தேகிக்கக் கூடாது. சொல்லப்போனால், நாம் ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்க்காத ஒரு முறையில் அவர் இவற்றைத் தீர்ப்பதைக் கண்டு ஆச்சரியமடையலாம், மகிழ்ச்சியும் அடையலாம்.—ஒப்பிடுக: யோபு 42:3; சங்கீதம் 78:11-16; 136:4-9; மத்தேயு 15:31; லூக்கா 2:47.
19, 20. (அ) நியாயமான கேள்விகளைக் கேட்பது ஏன் தவறல்ல? (ஆ) தேவையான பதில்களை யெகோவா எப்பொழுது தருவார்?
19 விரோதிகள் சிலர் தவறாக கூறுகிறபடி, காலத்திற்கேற்ற, நியாயமான கேள்விகள் கேட்பதை யெகோவாவின் அமைப்பு தடை செய்வதில்லை. (1 பேதுரு 1:10-12) இருப்பினும், முட்டாள்தனமான, ஊகத்திற்குரிய கேள்விகளைத் தவிர்க்கும்படி பைபிள் அறிவுரை கொடுக்கிறது. (தீத்து 3:9) வேதப்பூர்வமான பதில்களைக் கண்டுபிடிப்பதற்காக நியாயமான கேள்விகள் கேட்பதும் கடவுளுடைய வார்த்தையையும் கிறிஸ்தவ பிரசுரங்களையும் ஆராய்வதும் நம்முடைய திருத்தமான அறிவை அதிகரிக்கச் செய்யும், அதோடு யெகோவாவில் நம்முடைய நம்பிக்கையையும் பலப்படுத்தும். இயேசுவின் மாதிரியை அமைப்பு பின்பற்றுகிறது. சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு உரிய நேரம் வராததால் அவர் பதிலளிக்காமல் இருந்தார். அவர் விளக்கினார்: “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.” (யோவான் 16:12) அந்த சமயத்தில் தமக்கே தெரியாத சில விஷயங்கள் இருந்தன என்பதையும்கூட அவர் ஒப்புக்கொண்டார்.—மாற்கு 13:32.
20 வெளிப்படுத்துவதற்கு யெகோவாவிடம் இன்னுமதிக விஷயங்கள் உள்ளன. யெகோவா தம்முடைய நோக்கங்களை அதற்கேற்ற சரியான சமயத்தில் வெளிப்படுத்துவார் என்பதில் நம்பிக்கையோடிருந்து அவருக்காக காத்திருப்பது எவ்வளவு ஞானமானது! யெகோவாவின் ஏற்ற சமயம் வந்துவிட்டால், அவருடைய வழிகளைப் பற்றிய கூடுதலான உட்பார்வையைப் பெறும் சந்தோஷத்தை நாம் அனுபவிப்போம் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கலாம். ஆம், யெகோவாவிலும் அவர் பயன்படுத்தும் அமைப்பிலும் நம்பிக்கையுடன் இருந்தால், நமக்கு நிச்சயம் பலனுண்டு. நீதிமொழிகள் 14:26 நமக்கு உறுதியளிப்பதாவது: “கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.”
[அடிக்குறிப்புகள்]
a ஆங்கில காவற்கோபுரம், அக்டோபர் 15, 1967, பக்கம் 638; ஜூன் 1, 1987, பக்கம் 30-ஐக் காண்க.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
◻ யெகோவாவில் நம்முடைய நம்பிக்கையை உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க அனுமதிப்பது ஏன் ஞானமற்றது?
◻ யோனாவின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
◻ பைபிள் படிப்பும் கூட்டங்களுக்கு ஆஜராவதும் ஏன் மிகவும் முக்கியம்?
[பக்கம் 16-ன் படம்]
தனிப்பட்ட இழப்பை எதிர்ப்படுகையிலும்கூட, யெகோவா அநீதியுள்ளவர் அல்ல என்பதில் நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம்
[பக்கம் 18-ன் படங்கள்]
உங்களுடைய நம்பிக்கை யெகோவாவில் இருக்கிறது என்பதைக் குறித்து உறுதியுடன் இருக்கிறீர்களா?