உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 9/1 பக். 4-7
  • மனசாட்சியை நம்ப முடியுமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மனசாட்சியை நம்ப முடியுமா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மனசாட்சியைப் பயிற்றுவித்தல்
  • கடவுளது சிந்தனையோடு ஒன்றிப்போதல்
  • மனசாட்சியைப் பயிற்றுவிக்க உதவும் ஒன்று
  • ‘கிறிஸ்துவின் சிந்தையைப்’ பெறுதல்
  • பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் நன்மைகள்
  • நல்ல மனசாட்சியோடு வாழ...
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • உங்கள் மனசாட்சி நன்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • கடவுளுக்கு முன் நல்ல மனசாட்சியோடு இருங்கள்
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
  • உள்மனதின் குரலுக்குச் செவிகொடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 9/1 பக். 4-7

மனசாட்சியை நம்ப முடியுமா?

பொதுப்படையாக பார்த்தால், திசைமானி ஒரு நம்பத்தகுந்த கருவிதான். புவிக் காந்தப் புலனால் இயங்கும் அதன் முள், எப்போதும் வடக்குத் திசையையே காட்டுகிறது. ஆகவே பயணிகள் எப்போதுமே அதை நம்பலாம், முக்கியமாய் அவர்களுக்கு வேறெந்த திசைகாட்டிகளும் இல்லாதபோது இதுவே அவர்களுக்குச் சிறந்த வழிகாட்டி. ஆனால் ஒரு காந்தப் பொருளை அதன் பக்கத்தில் வைத்தால் என்னவாகும் தெரியுமா? அதன் முள் வடக்கு திசையைக் காண்பிப்பதற்கு பதிலாக சட்டென்று காந்தத்தின் பக்கமாக திரும்பிக்கொள்ளும். இனியும் அதை நம்புவதற்கில்லை.

நம் மனசாட்சிக்கும் அதே விதமாய் நடக்கலாம். நம்பத்தகுந்த வழிகாட்டியாய் இருப்பதற்காகவே கடவுள் இந்த உள்ளுணர்வை நமக்கு வழங்கினார். நாம் கடவுளது சாயலில் உண்டாக்கப்பட்டிருப்பதால், தீர்மானங்கள் எடுக்கும்போது, ‘இதுவே சரி, இதுவே சரி’ என நம் மனசாட்சி நமக்கு எப்போதும் சரியான திசையைக் காட்டிக்கொண்டே இருக்கவேண்டும். கடவுளது ஒழுக்க தராதரங்களைப் பின்பற்ற நம்மைத் தூண்டவும்வேண்டும். (ஆதியாகமம் 1:27) அடிக்கடி அப்படித்தான் அது நம்மைத் தூண்டுகிறது. உதாரணத்திற்கு, கடவுளது சட்டங்களைப் பெற்றிருக்காத சிலரும், ‘இயல்பாகவே சட்டத்தின்படி நடக்கிறார்கள்’ என கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். ஏன்? ஏனென்றால் ‘அவர்களது மனசாட்சி அவர்களோடே சாட்சியிடுகிறது.’—ரோமர் 2:14, 15, NW.

ஆனாலும் தேவைப்படும் எல்லா சமயங்களிலேயும் மனசாட்சி பேசுவது கிடையாது. அபூரணத்தின் காரணமாக, தவறு என்று தெரிந்திருக்கும் காரியங்களைக்கூட செய்ய நம் மனம் சாய்கிறது. பவுலும் இதை ஒப்புக்கொண்டு இவ்வாறு சொன்னார்: “நான் கடவுளின் சட்டத்தைக்குறித்து உள்ளூர மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், என் உறுப்புகளில் வேறொரு சட்டத்தைக் காண்கிறேன்; என் மனம் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை அது எதிர்த்துப் போராடுகிறது; என் உறுப்புகளில் இருக்கும் அந்தப் பாவச் சட்டத்திற்கு என்னைக் கட்டுப்படுத்துகிறது.” (ரோமர் 7:22, 23, பொது மொழிபெயர்ப்பு) நாம் அடிக்கடி அப்படிப்பட்ட தவறான நினைப்புகளுக்கு இடமளித்தால், மெதுமெதுவாக நம் மனசாட்சி மந்தமாகிக்கொண்டே போகும். இறுதியில் அப்படிப்பட்ட நடத்தை தவறு என்று சொல்வதைக்கூட நிறுத்திக்கொள்ளும்.

ஒன்று மாத்திரம் நிச்சயம், நாம் அபூரணமாக இருந்தாலும் நமது மனசாட்சியை கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாக செயல்படவைக்க முடியும். சொல்லப்போனால் அப்படிச் செய்வது மிக அவசியம். சுத்தமான, சரியாக பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியினால், கடவுளோடு நெருங்கிய தனிப்பட்ட தோழமை கிடைக்கும். இரட்சிப்பிற்கு அது இன்றியமையாததும்கூட. (எபிரெயர் 10:22; 1 பேதுரு 1:15, 16) மேலும் வாழ்க்கையில் ஞானமாக தீர்மானங்கள் எடுக்க நல்மனசாட்சி உதவும். அதன் மூலம் சமாதானமும் சந்தோஷமும் கிடைக்கும். அப்படிப்பட்ட மனசாட்சியுள்ள நபரைப் பற்றி சங்கீதக்காரன் சொன்னார்: “அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.”—சங்கீதம் 37:31.

மனசாட்சியைப் பயிற்றுவித்தல்

மனசாட்சியைப் பயிற்றுவிப்பதற்கு, வெறுமனே சட்டங்களை மனப்பாடம் செய்துகொண்டு அவற்றை இம்மி பிசகாமல் கடைப்பிடித்தால் மாத்திரம் போதாது. இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் அதைத்தான் செய்தார்கள். அந்த மதத் தலைவர்கள் சட்டங்களை கரைத்துக் குடித்திருந்தார்கள். அந்தச் சட்டங்களை மக்கள் மீறாமலிருக்க அவர்களுக்கு உதவவேண்டும் என்று சொல்லிக்கொண்டு தொட்டதற்கெல்லாம் பாரம்பரியங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். ஆகவேதான் இயேசுவின் சீஷர்கள் ஓய்வுநாளின்போது கதிர்களைப் பறித்து சாப்பிட்டதைப் பார்த்தவுடன் கோபத்தில் பொங்கி எழுந்தார்கள். அதேவிதமாய் இயேசு சூம்பின கையுள்ள ஒருவனை ஓய்வுநாளில் குணப்படுத்தியபோது அதைக் குறித்தும் கேள்வியெழுப்பினார்கள். (மத்தேயு 12:1, 2, 9, 10) பரிசேயர்களின் பாரம்பரியத்தின்படி, இந்த இரு செயல்களுமே நான்காவது கட்டளையை மீறுவதாக இருந்தது.—யாத்திராகமம் 20:8-11.

பரிசேயர்களுக்கு சட்டங்கள் அத்துப்படி என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் அவர்களது மனசாட்சி கடவுளது தராதரங்களுக்கு ஏற்ப இருந்ததா? சிறிதும் இல்லை! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஓய்வுநாள் கட்டளையை மன்னிக்க முடியாதளவு மீறிவிட்டதாக சொல்லி குறைகூறிய அடுத்த கணமே, அந்தப் பரிசேயர்கள் இயேசுவை “கொலைசெய்யும்படி” ஆலோசனை நடத்தினார்கள். (மத்தேயு 12:14) இந்த நியாயம் எப்படி இருக்கிறது? ஓய்வுநாளின்போது நெற்கதிர்களைப் பறித்துச் சாப்பிட்டதும் குணப்படுத்தியதும் அந்த சுயநீதிமான்களுக்கு கொலைக் குற்றம்போல் தெரிந்ததாம், அதேசமயம் இயேசுவை உண்மையிலேயே கொலைசெய்ய திட்டமிட்டதில் ஒரு பாவமும் இல்லையாம்! அவர்கள் மனசாட்சி கொஞ்சமும் உறுத்தவேயில்லை!

முக்கிய ஆசாரியர்களும் அதேவிதமான குறுக்குப் புத்தியைக் காட்டினார்கள். இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்காக ஆலய காணிக்கைப் பெட்டியிலிருந்து 30 வெள்ளிக் காசுகளை எடுத்து யூதாஸுக்குக் கொடுத்தபோது அந்த ஊழல் பேர்வழிகளின் மனசாட்சி குத்தவேயில்லை. ஆனால் யூதாஸ் திடுதிப்பென காசை திரும்பக்கொண்டுவந்து ஆலயத்தில் தூக்கியெறிந்தபோதோ, அவர்களது மனசாட்சி, சட்டப்படி என்ன செய்வது என்ற குழப்பத்தில் மாட்டிக்கொண்டது. ‘[காசு] இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொன்னார்கள்.’ (மத்தேயு 27:3-6) அந்த ஆசாரியர்களுக்கு, யூதாஸ் திருப்பிக்கொடுத்த காசு இப்போது சட்டப்படி அசுத்தமாகிவிட்டதோ என்ற கவலை திடீரென ஏற்பட்டது. (உபாகமம் 23:18-ஐ ஒப்பிடுக.) ஆனாலும் கடவுளது குமாரனைக் காட்டிக்கொடுப்பதற்காக கைகூசாமல் காசை வாரி வழங்கினார்களே, அது என்னவோ ஒரு குற்றமாகவே அவர்களுக்குத் தெரியவில்லை!

கடவுளது சிந்தனையோடு ஒன்றிப்போதல்

மனசாட்சியைப் பயிற்றுவிப்பதற்கு, செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என ஒரு பட்டியலை மாத்திரம் மனதில் வைத்துக்கொள்வது போதாது என்பதை இப்போது நாம் பார்த்த உதாரணங்கள் காட்டுகின்றன. கடவுளது சட்டங்களை அறிந்திருப்பது அவசியம்தான். அவற்றிற்குக் கீழ்ப்படிவது இரட்சிப்பிற்கு அவசியம் என்பதையும் மறுக்க முடியாதுதான். (சங்கீதம் 19:7-11) ஆனாலும் கடவுளது சட்டங்களைப் பற்றிய அறிவோடுகூட, அவரது சிந்தனைக்கு இசைவான மனமும் தேவை. அப்போதுதான் ஏசாயாவின் மூலம் யெகோவா சொன்ன தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை நாம் அனுபவிக்க முடியும். அது சொல்கிறது: “உன் கண்கள் உன் போதகர்களைக் காணும். நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.”—ஏசாயா 30:20, 21; 48:17.

அதற்காக ஒரு முக்கியமான தீர்மானம் எடுக்கவேண்டியிருக்கும்போது, இப்படி செய், அப்படி செய் என உண்மையிலேயே ஒரு குரல் நமக்கு சொல்லும் என்று அர்த்தமில்லை. இருந்தாலும் கடவுளுடைய சிந்தனைக்கு ஏற்ப நாமும் சிந்திக்கும்போது, அவருக்குப் பிரியமான விதத்தில் தீர்மானங்கள் எடுக்க நம் மனசாட்சி நமக்கு உதவும்.—நீதிமொழிகள் 27:11.

பொ.ச.மு. 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யோசேப்பை எடுத்துக்கொள்ளுங்கள். போத்திபாரின் மனைவி தன்னோடு விபச்சாரம் செய்யும்படி வற்புறுத்தியபோது யோசேப்பு மறுத்துவிட்டார். “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி” என்று கேட்டார். (ஆதியாகமம் 39:9) அவரது காலத்தில் விபச்சாரத்தை கண்டனம் செய்யும் கடவுளது எழுதப்பட்ட சட்டம் இல்லை. அதுமட்டுமல்லாமல், யோசேப்பு எகிப்தில் வாழ்ந்துகொண்டிருந்தார், அங்கு தனது குடும்பத்தாரின் கவனிப்போ சட்டதிட்டங்களோ இல்லை. அப்படியென்றால் எதைக்கொண்டு யோசேப்பினால் சோதனையை எதிர்க்க முடிந்தது? சுருக்கமாக சொல்லவேண்டுமானால், அது அவரது பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி. கணவனும் மனைவியும் ‘ஒரே மாம்சமாய்’ இருக்க வேண்டும் என்ற கடவுளது கருத்தே யோசேப்பிற்கும் இருந்தது. (ஆதியாகமம் 2:24) ஆகவே இன்னொருவரது மனைவியோடு உறவுகொள்வது தவறு என அவர் புரிந்துகொண்டார். அந்த விஷயத்தில் கடவுள் சிந்திப்பதைப் போலவே அவரும் சிந்தித்தார். அவரைப் பொருத்தவரை, விபச்சாரம் ஒழுக்கநெறியை மீறுவதாய் இருந்தது.

இன்று யோசேப்பைப் போன்றவர்கள் விரல்விட்டு எண்ணுமளவே இருக்கின்றனர். பாலியல் ஒழுக்கக்கேட்டைப் பற்றி சொல்லவே வேண்டாம். கடவுளுக்கும், தங்களுக்கும், தங்கள் துணைவருக்கும் முன்பாக ஒழுக்கப்பிரகாரமாய் சுத்தமாக இருக்கவேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது என்பதை அநேகர் ஏற்றுக்கொள்வதில்லை. எரேமியா புத்தகத்தில் விவரிக்கப்பட்ட நிலைமையைப் போலவேதான் இருக்கிறது: “என்ன செய்துவிட்டேனென்று சொல்லி தன் தீச்செயலுக்காக வருந்துகிறவன் எவனுமில்லை; போர்க்களத்தில் பாய்ந்தோடுகிற குதிரைபோல அவனவன் தன் தன் வழியே ஓடுகிறான்.” (எரேமியா 8:6, NW) ஆகவே இப்போது கடவுளுடைய சிந்தையைத் தரித்துக்கொள்ள வேண்டியதற்கான தேவை முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகமாகியிருக்கிறது. அதைச் செய்வதற்கு உதவியளிக்கும், அருமையான ஒன்று நம்மிடம் இருக்கிறது.

மனசாட்சியைப் பயிற்றுவிக்க உதவும் ஒன்று

வேதவாக்கியங்கள் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்கின்றன; “தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவை.” (2 தீமோத்தேயு 3:16, 17) ‘பகுத்தறிவு ஆற்றல்கள்’ என பைபிள் அழைக்கும் ஒன்றை பயிற்றுவிப்பதற்கு பைபிள் படிப்பு நமக்கு உதவும்; அதன் மூலம் நன்மை தீமையை தெளிவாய் அறிந்துகொள்ளலாம். (எபிரெயர் 5:14, பொது மொழிபெயர்ப்பு) கடவுள் நேசிப்பவற்றை நேசிப்பதற்கும் அவர் வெறுப்பவற்றை வெறுப்பதற்கும் அது நமக்கு உதவும்.—சங்கீதம் 97:10; 139:21.

ஆகவே பைபிளைப் படிப்பதன் நோக்கம், வெறுமனே அறிவை வளர்த்துக்கொள்வதற்காக மட்டுமேயல்ல, ஆனால் சத்தியத்தின் உண்மையான அர்த்தத்தையும் நோக்கத்தையும் புரிந்துகொள்வதற்காகும். செப்டம்பர் 1, 1976, ஆங்கில காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “நாம் பைபிளைப் படிக்கும்போது கடவுளுடைய நீதி, அன்பு, நியாயம் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு அவற்றை நம் உள்ளத்தில் ஆழமாய் பதியவைக்க கடுமையாய் முயற்சி செய்ய வேண்டும்; அவை நம் ரத்தத்தில் ரத்தமாக கலந்துவிடவேண்டும். எது சரி எது தவறு என்பதன்பேரில் கூர்மையான அறிவை வளர்த்துக்கொள்வதன் மூலம், ஒழுக்கமாக நடந்துகொள்ளவேண்டிய பொறுப்பை இன்னுமதிகமாய் உணர முயற்சி எடுக்கவேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக பரிபூரண நீதிபதியும் சட்டமளிப்பவருமான யெகோவா தேவனுக்குப் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை நம் மனசாட்சியில் பசுமரத்தாணியாய் பதியவைக்க வேண்டும். (ஏசா. 33:22, NW) ஆகவே கடவுளைப் பற்றிய காரியங்களைக் கற்றுக்கொள்ளும்போது நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அவரைப் பின்பற்ற முயற்சி செய்ய வேணடும்.”

‘கிறிஸ்துவின் சிந்தையைப்’ பெறுதல்

பைபிள் படிப்பு ‘கிறிஸ்துவின் சிந்தையை,’ அதாவது இயேசு கிறிஸ்து காண்பித்த கீழ்ப்படிதலான, மனத்தாழ்மையான மனோபாவத்தைப் பெறுவதற்கும் நமக்கு உதவும். (1 கொரிந்தியர் 2:16) அவரது தகப்பனின் சித்தத்தைச் செய்வது அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது; சிந்தனையே செய்யாமல் ஏதோ வழக்கமான வேலைபோல் ஒப்புக்கு அவர் அதைச் செய்யவில்லை. அவரது மனோபாவத்தை சங்கீதக்காரனான தாவீது தீர்க்கதரிசனமாக இவ்வாறு முன்னுரைத்தார்: “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது.”a—சங்கீதம் 40:8.

‘கிறிஸ்துவின் சிந்தையைப்’ பெற்றுக்கொள்வது மனசாட்சியைப் பயிற்றுவிப்பதற்கு அவசியம். பூமியில் பரிபூரண மனிதனாக இருந்தபோது, இயேசு தமது தகப்பனின் குணங்களையும் ஆளுமையையும் பின்பற்றினார். மனிதருக்குரிய வரம்புகள் இருந்தபோதிலும் முடிந்தளவு முழுமையாய் அவரைப் பின்பற்றினார். ஆகவே “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என அவரால் சொல்ல முடிந்தது. (யோவான் 14:9) பூமியில் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின்போதும், பிதா எதைச் செய்யவேண்டுமென விரும்பினாரோ அதையே செய்தார். ஆகவே இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி நாம் படிக்கும்போது, யெகோவா தேவன் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

யெகோவா “இரக்கமும், கிருபையும், நீடியசாந்தமும், மகா தயையும்” உள்ள தேவன் என நாம் படிக்கிறோம். (யாத்திராகமம் 34:6) இதே குணங்களைத்தான் இயேசு தமது அப்போஸ்தலர்களோடு இருக்கையில் திரும்பத் திரும்ப காண்பித்தார். தங்களில் பெரியவர் யார் என அவர்கள் அடிக்கடி சண்டைபோட்டுக்கொண்டபோது, இயேசு சொல்லிலும் செயலிலும் அவர்களுக்கு பொறுமையாக பாடம் கற்பித்தார். “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்” என்று அவர் சொன்னார். (மத்தேயு 20:26, 27) இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பதன் மூலம் கடவுளது சிந்தையையே நாமும் பெறலாம் என்பதற்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டுதான்.

நாம் இயேசுவைப் பற்றி எவ்வளவு அதிகமாக கற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவு சிறப்பாக நமது பரலோக தகப்பனாகிய யெகோவாவைப் பின்பற்ற முடியும். (எபேசியர் 5:1, 2) கடவுளது சிந்தனைக்கு இசைவான மனசாட்சி நமக்கு சரியான திசையைக் காட்டும். யெகோவா தம்மை நம்புகிறவர்களுக்கு இந்த வாக்குறுதியைத் தருகிறார்: “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.”—சங்கீதம் 32:8.

பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் நன்மைகள்

அபூரண மனிதர்களின் தாறுமாறான போக்கை அறிந்து, மோசே இஸ்ரவேலர்களுக்கு பின்வருமாறு எச்சரித்தார்: “இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாய் ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள்.” (உபாகமம் 32:46) நாமும்கூட கடவுளுடைய சட்டத்தை நம் இருதயங்களில் எழுத வேண்டும். அப்படிச் செய்தோமென்றால், நம் மனசாட்சி நாம் நடக்கவேண்டிய வழியைக் காட்டி, சரியான தீர்மானங்கள் எடுக்க நமக்கு உதவும்.

ஆனால் நாம் ஜாக்கிரதையாயும் இருக்கவேண்டும். பைபிள் நீதிமொழி சொல்கிறது: “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.” (நீதிமொழிகள் 14:12) ஏன் இது பெரும்பாலும் உண்மையாய் இருக்கிறது? ஏனென்றால் பைபிள் சொல்லும் பிரகாரம், “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” (எரேமியா 17:9) ஆகவே நீதிமொழிகள் 3:5, 6-ல் கொடுக்கப்பட்டுள்ள புத்திமதியைப் பின்பற்ற வேண்டிய தேவை நம் அனைவருக்கும் உண்டு. “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”

[அடிக்குறிப்புகள்]

a அப்போஸ்தலனாகிய பவுல், எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தில், 40-ஆம் சங்கீதத்திலுள்ள வார்த்தைகளை இயேசு கிறிஸ்துவிற்குப் பொருத்தினார்.—எபிரெயர் 10:5-10.

[பக்கம் 7-ன் படம்]

திசைமானி: நன்றி: Peabody Essex Museum, Salem, Mass.

[படத்திற்கான நன்றி]

திசைமானியைப் போல், பைபிளால் பயிற்றுவிக்கப்படும் மனசாட்சி நமக்கு சரியான வழியைக் காட்டும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்