யெகோவாவை சார்ந்திருக்கக் கற்றுக்கொண்டேன்
யான் கார்ப்பா ஓன்டோ சொன்னபடி
அது, வருடம் 1942. ரஷ்யாவிலுள்ள குர்ஸ்க் நகரம். சுற்றிலும் ஹங்கேரி நாட்டு வீரர்களின் பலத்த பாதுகாப்பு. இரண்டாம் உலகப் போரின்போது ரஷ்யாவுக்கு எதிராக போரிட்ட அச்சு நாடுகளின் சிறைக்கைதிகள் நாங்கள். இனி ஒரு யெகோவாவின் சாட்சி இல்லை என்ற ஒப்பந்தத்தில் நான் கையெழுத்திட 10 நிமிஷம்தான் பாக்கி. என் கல்லறைகூட தயாராயிருந்தது. அடுத்து என்ன நடந்தது என்பதை சொல்வதற்குமுன், இங்கு எப்படி வந்துசேர்ந்தேன் என்பதை விவரிக்கிறேன்.
ஸாஹார் என்ற குக்கிராமத்தில் 1904-ல் நான் பிறந்தேன். அது இப்போது ஸ்லோவாகியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஸாஹார், முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து, புதிதாய் ஏற்படுத்தப்பட்ட செக்கோஸ்லோவாகியா நாட்டின் பாகமானது. எங்கள் கிராமத்தில் சுமார் 200 வீடுகள் இருந்தன; இரண்டு சர்ச்சுகளும் இருந்தன. ஒன்று, கிரேக்க கத்தோலிக்க சர்ச்; மற்றொன்று கால்வினிஸ்ட் சர்ச்.
கால்வினிஸ்ட் சர்ச்சுக்கு போய்க்கொண்டிருந்தேன் என்றுதான் பெயர், என் வாழ்க்கையோ ஒழுக்கத்தில் தறிகெட்டுப் போயிருந்தது. என் வீட்டிற்குப் பக்கத்திலேயே ஒருவர் வசித்துவந்தார், மிகவும் வித்தியாசமான ஆசாமி. ஒருநாள் என்னிடம் வந்து பேசினார், ஒரு பைபிளையும் இரவலாக கொடுத்தார். வாழ்க்கையிலேயே அன்றுதான் முதல் முறையாக பைபிளை கையில் எடுத்தேன். இது இப்படியிருக்க, 1926-ல் பார்பராவை மணந்தேன். சீக்கிரத்திலேயே பார்பரா, யான் என்ற இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனானேன்.
பைபிளை படிக்க ஆரம்பித்தேன். ஆனால் நிறைய விஷயங்கள் எனக்குப் புரியவில்லை. ஆகவே என் பாஸ்டரிடம் சென்று அவற்றை விளக்குமாறு கேட்டேன். அவரோ, “படித்தவங்களுக்குத் தான் பைபிள்” என்றும், “அதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று நீ கனவிலும் ஆசைப்படாதே” என்றும் கூறிவிட்டார். அதுமட்டுமா, என்னை சீட்டு விளையாடவும் கூப்பிட்டார்.
பிறகு ஆரம்பத்தில் எனக்கு பைபிளைக் கொடுத்த அந்த ஆசாமியிடம் சென்றேன். அவர் ஒரு பைபிள் மாணாக்கர். யெகோவாவின் சாட்சிகள் அப்போதெல்லாம் அப்படித்தான் அழைக்கப்பட்டனர். எனக்கு உதவுவதில் அவருக்கு அளவில்லா மகிழ்ச்சி. கொஞ்ச காலத்தில் எனக்கு ஞானோதயம் பிறந்தது. மிதமிஞ்சி குடிப்பதை நிறுத்திவிட்டேன். ஒழுக்கமாக வாழ ஆரம்பித்தேன். யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசவும் ஆரம்பித்தேன். ஸாஹாரில் பைபிள் சத்தியம் 1920-களின் முற்பகுதியில் வேர் கொண்டது; சுறுசுறுப்பான பைபிள் மாணாக்கரின் ஒரு தொகுதி விரைவில் அங்கு உருவானது.
இருந்தபோதிலும், அங்கு மத எதிர்ப்பு பலமாயிருந்தது. எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று சர்ச் பாதிரி சொல்லவே, என் குடும்பத்தாரில் கிட்டத்தட்ட எல்லாருமே எனக்கு எதிராக கிளம்பிவிட்டனர். ஆனால் என் வாழ்க்கைக்கோ ஓர் அர்த்தம் பிறந்துகொண்டிருந்தது. உண்மை தேவனாகிய யெகோவாவை சேவிக்க நான் உறுதியாக தீர்மானித்தேன். இவ்வாறு, யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்து 1930-ல் முழுக்காட்டுதல் பெற்றேன்.
கடும் சோதனைகளின் ஆரம்பம்
1938-ல், நாங்கள் வசித்துவந்த பகுதி ஹங்கேரி ஆட்சியின்கீழ் வந்தது; அது இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியுடன் கூட்டுச் சேர்ந்திருந்தது. அப்போது கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வசித்த எங்கள் கிராமத்தில் சுமார் 50 சாட்சிகள் இருந்தனர். எங்கள் உயிரும் சுதந்திரமும் பறிபோகும் ஆபத்து இருந்தபோதிலும் நாங்கள் பிரசங்கிப்பதை நிறுத்தவில்லை.
1940-ல், ஹங்கேரி நாட்டு ராணுவத்தில் சேவை செய்வதற்கான ஆணை வந்தது. நான் என்ன செய்வேன்? மக்கள் தங்கள் போராயுதங்களை சமாதான கருவிகளாக அடிப்பார்கள் என்றும், தக்க காலத்தில் கடவுள் பூமியிலிருந்து எல்லா போரையும் நிறுத்திவிடுவார் என்றும் நான் பைபிளில் படித்திருந்தேன். (சங்கீதம் 46:9; ஏசாயா 2:4) அதனால் போர் என்றாலே வெறுப்பாகிவிட்டிருந்தது. என்ன வந்தாலும்சரி ராணுவத்தில் சேருவதில்லை என்றும் தீர்மானித்தேன்.
ஹங்கேரியிலுள்ள பேக் என்னுமிடத்தில் 14 மாதம் சிறையில் இருந்தேன். அதே சிறையில் இன்னும் ஐந்து சாட்சிகள் இருந்தார்கள். எங்கள் ஒவ்வொருவருக்கும் அந்தக் கூட்டுறவு அருமையாய் இருந்தது. ஆனாலும் சிறிது காலம் காலில் விலங்கிடப்பட்டு, தனி அறையில் அடைக்கப்பட்டேன். ராணுவம் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்ய மறுத்தபோது எங்களுக்குச் செமத்தியாக அடி விழுந்தது. மதியம் இரண்டு மணிநேரத்தைத் தவிர நாள் முழுவதும் ‘அட்டென்ஷன்’ நிலையிலேயே நிற்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டது மற்றொரு விஷயம். இந்தக் கடும் சோதனை மாதக்கணக்கில் தொடர்ந்தது. ஆனாலும் நாங்கள் சந்தோஷமாய் இருந்தோம்; ஏனென்றால் தேவனுக்கு முன்பாக சுத்தமான மனசாட்சி எங்களுக்கு இருந்தது.
இணங்கிப்போவதா?
ஒருநாள், 15 கத்தோலிக்க பாதிரிகள் எங்களிடம் படையெடுத்து வந்தார்கள்; இராணுவத்தில் சேர்ந்து போரை ஆதரிக்க வேண்டியது மிக முக்கியம் என்று எப்படியாவது எங்களை நம்பவைக்க முயன்றார்கள். அவர்களிடம் நாங்கள் சொன்னோம்: “ஆத்துமா அழியாது என்றும், போரில் மடிந்தால் நாமெல்லாம் பரலோகத்துக்குப் போவோம் என்றும் நீங்கள் பைபிளிலிருந்து நிரூபித்தால் நாங்கள் ராணுவத்தில் சேரத் தயார்.” அதன்பின் அவர்களால் ஒரு வார்த்தையும் சொல்ல முடியவில்லை. அதை நிரூபிக்க முடியாததால் வெறுப்பில் இடத்தை காலி செய்துவிட்டார்கள்.
1941-ல் எனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை முடிவுற்றது. என் குடும்பத்தாரோடு சேர்ந்துகொள்ளப்போகும் குஷியில் இருந்தேன். அந்தோ, ஹங்கேரியில் ஷாரஷ்பாட்டக் என்ற ராணுவ தளத்துக்கு விலங்கிட்டு என்னைக் கொண்டுபோனதுதான் மிச்சம். நாங்கள் போய்ச் சேர்ந்தபோது, விடுவிக்கப்படுவதற்கான ஓர் வாய்ப்பு எனக்கு கொடுக்கப்பட்டது. “இந்த வாக்குறுதியில் கையொப்பம் இட்டால் போதும், நீ வீட்டுக்குப் போகலாம்; 200 பெங்கோ மட்டும் கட்ட வேண்டும்” என்று சொல்லப்பட்டது.
“அது எப்படி முடியும்? எதற்காக அந்தப் பணம்?” என்று கேட்டேன்.
“அந்தப் பணம் கட்டினால், ராணுவத்திற்கான மருத்துவ சோதனையில் நீ பாஸ் ஆகவில்லை என்ற ஒரு சர்டிபிகேட் உனக்குக் கொடுக்கப்படும்” என்று சொன்னார்கள்.
நான் சிக்கலில் மாட்டிக்கொண்டேன். ஒரு வருடத்துக்கும் மேலாக மிருகத்தனமாக நடத்தப்பட்டிருக்கிறேன்; கொஞ்சம் கொஞ்சமாய் சக்தியெல்லாம் போய்விட்டது. ஆனால் இப்போது கொஞ்சம் பணத்தைக் கொடுத்தால்போதும், எனக்கு விடிவுகாலம் வந்துவிடும். எனவே, “யோசித்துச் சொல்கிறேன்” என்று முனகினேன்.
நான் என்ன தீர்மானம் எடுப்பேன்? என் மனைவி பிள்ளைகளின் கதி என்னவாகும்? ஒரே குழப்பம். அப்பொழுது பார்த்து, ஒரு கிறிஸ்தவ சகோதரர் என்னை உற்சாகப்படுத்தி ஓர் கடிதம் எழுதியிருந்தார். “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது” என்ற மேற்கோளைக் குறிப்பிட்டிருந்தார். அது, எபிரெயர் 10:38-ல் அப்போஸ்தலன் பவுல் மேற்கோள் காட்டியிருந்த யெகோவாவின் வார்த்தைகள். கடிதம் கிடைத்த சில நாட்களுக்குள், போர்வீரர் குடியிருப்பில் இருந்த ஹங்கேரி நாட்டு அதிகாரிகள் இருவர் என்னிடம் பேசினார்கள். “நீ விடாப்பிடியாய் பைபிள் நியமங்களை கடைப்பிடிப்பதற்காக உன்மேல் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறோம் தெரியுமா! விட்டுக் கொடுத்துவிடாதே!” என்று அவர்களில் ஒருவர் கூறினார்.
அடுத்தநாள், 200 பெங்கோவுக்கு என்னை விடுவிப்பதாக கூறினவர்களிடம் சென்று: “நான் சிறைக்கைதியாகும்படி யெகோவா தேவன் என்னை அனுமதித்திருப்பதால், என்னை விடுவிப்பதையும் அவர் பார்த்துக்கொள்வார். நான் பணம் கொடுத்து விடுதலை பெறமாட்டேன்” என்றேன். அதற்காக பத்து வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டேன். ஆனால், என்னை இணங்கச் செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் அத்துடன் நின்றுவிடவில்லை. இரண்டே மாதங்களுக்கு ராணுவத்தில் சேவை செய்துவிட்டால் போதும், மன்னிப்பு வழங்கப்படும் என்றும் போர்க் கருவி எதையும் கையில் தொடக்கூட வேண்டியதில்லை என்றும் நீதிமன்றம் சொன்னது! அதற்கும் நான் அசையவில்லை. ஆகவே என் சிறைவாழ்வு தொடர்ந்தது.
துன்புறுத்தல் அதிகரிக்கிறது
பேக்கிலுள்ள சிறைக்கு நான் மறுபடியும் கொண்டுசெல்லப்பட்டேன். இந்த முறை பயங்கரமாய் சித்திரவதை செய்யப்பட்டேன். என் கைகளைப் பின்புறமாக கட்டி, அவற்றாலேயே தொங்கவிட்டார்கள். இவ்வாறு சுமார் இரண்டு மணிநேரம் தொங்கினேன். இதனால், என் இரண்டு தோள்பட்டைகளும் பிசகிவிட்டன. சுமார் ஆறு மாதங்களாக விடாமல் என்னை அவ்விதமாகவே சித்திரவதை செய்தார்கள். நான் விட்டுக்கொடுக்காமல் இருந்ததற்கு யெகோவாவுக்கே நன்றி தெரிவிக்க முடியும்.
1942-ல், அரசியல் கைதிகளும் யூதர்களும் யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் 26 பேரும், குர்ஸ்க் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டோம். அந்தப் பகுதி ஜெர்மானிய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டோம். அவர்கள் போர்முனையிலுள்ள வீரர்களுக்கு உணவையும் ஆயுதங்களையும், துணிமணிகளையும் எடுத்துச்செல்வதற்கென சிறைக்கைதிகளைப் பயன்படுத்தினர். சாட்சிகளாகிய நாங்கள் அப்படிப்பட்ட வேலையைச் செய்ய மறுத்துவிட்டோம். ஏனெனில் அது எங்களது கிறிஸ்தவ நடுநிலைமையை மீறுவதாகும். அதன் விளைவாக, ஹங்கேரி நாட்டவரிடமே மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டோம்.
காலப்போக்கில், குர்ஸ்க் நகரின் உள்ளூர் காவலில் வைக்கப்பட்டோம். ரப்பர் தடிகளால் ஒரு நாளுக்கு மூன்று தடவை என பல நாட்களாக அடி வாங்கினோம். என் பொட்டில் ஒரு அடி விழுந்ததும் டமால் என்று விழுந்துவிட்டேன். அப்படி அடி வாங்கியபோது, ‘சாவு ஒன்றும் அந்தளவுக்கு கஷ்டமாய் இருக்காது’ என்று நினைத்துக்கொண்டேன். என் உடல் முழுவதும் மரத்துவிட்டது; அதனால் எனக்கு வலியே தெரியவில்லை. மூன்று நாட்களாக எங்களை கொலைப் பட்டினி போட்டார்கள். பிறகு நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டோம். ஆறுபேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆகவே தண்டனை நிறைவேறிய பிறகு மீந்திருந்தது நாங்கள் 20 பேர் மட்டுமே.
விசுவாச பரீட்சை என்ற உருவில் குர்ஸ்க் நகரில் அக்டோபர் 1942-ல் நான் பட்ட கொடுமைகள் இருக்கின்றனவே, அவற்றை என்னென்று விவரிப்பது! நான் இதுவரை பட்டவற்றிலேயே மிகக் கொடுமையானவை. நாங்கள் அப்போது எவ்வாறு உணர்ந்தோம் என்பது யோசபாத் ராஜாவினால் தெரிவிக்கப்பட்டது. அவர் தனது மக்கள் சொல்லொணா துன்பத்தை எதிர்ப்பட்டபோது இவ்வாறு தெரிவித்தார்: “எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது.”—2 நாளாகமம் 20:12.
எங்கள் கல்லறையை நாங்களே வெட்டும்படியாக 20 பேரையும் கொண்டு போனார்கள். காவலுக்காக எங்களைச் சுற்றி 18 ஹங்கேரி வீரர்கள். நாங்கள் கல்லறை வெட்டி முடிந்தபிறகு, ஒரு வாக்குறுதியில் கையொப்பமிட பத்து நிமிடமே பாக்கி என எங்களுக்குச் சொல்லப்பட்டது. அந்த வாக்குறுதியின் ஒரு பகுதி இவ்வாறு வாசிக்கிறது: “யெகோவாவின் சாட்சிகளது போதனை தவறு. அதை நான் இனி நம்பவோ ஆதரிக்கவோ மாட்டேன். . . . தாய்நாடான ஹங்கேரியின் சார்பாகவே போரிடுவேன். ரோமன் கத்தோலிக்க சர்ச்சில் சேருகிறேன் என ஒப்பமிட்டு இதன்மூலம் உறுதிகூறுகிறேன்.”
பத்து நிமிடத்திற்குப் பின்பு இவ்வாறு ஆணை பிறப்பிக்கப்பட்டது: “ரைட் டர்ன்! கல்லறைக்கு நட!” பிறகு வந்தது இந்தக் கட்டளை: “முதலாம் ஆளும் மூன்றாம் ஆளும் குழிக்குள் இறங்கு!” இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைத் தீர்மானிக்க இந்த இரண்டு பேருக்கும் இன்னும் பத்து நிமிடம் கொடுக்கப்பட்டது. வீரர்களில் ஒருவன் இப்படி கெஞ்சினான்: “உன் விசுவாசமும், நீயும்! அத தூக்கியெறிந்துவிட்டு வெளியே வந்துவிடேன்!” யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை. பிறகு பொறுப்பில் இருந்த அதிகாரி இருவரையும் சுட்டுத்தள்ளிவிட்டார்.
“மற்றவர்களையெல்லாம் என்ன செய்வது?” ஒரு வீரன் பொறுப்பிலிருந்த அதிகாரியைக் கேட்டான்.
“அவன்களை கட்டிப்போடு” என்று பதிலளித்தார். “இன்னும் நல்லா சித்திரவதை செய்து காலை ஆறு மணிக்கு சுட்டுப் பொசுக்குவோம்.”
திடீரென்று என்னைப் பயம் கவ்விக்கொண்டது. நான் சாகப்போகிறேன் என்பதனால் அல்ல; ஆனால், எங்கே சகித்து நிற்கத் திராணியில்லாமல் போய், இணங்கிவிடுவேனோ என்றுதான். ஆகவே சற்று முன்னால் அடியெடுத்து வைத்து, “சார், நீங்க இப்போ சுட்டுத் தள்ளினீங்களே, எங்க சகோதரங்க. அவங்க செஞ்ச தப்பைத்தானே நாங்களும் செஞ்சோம். ஏன் எங்களையும் அதேமாதிரி சுட்டுறக்கூடாது?” என்று கேட்டேன்.
ஆனால் அவர்கள் எங்களைச் சுடவில்லை. எங்கள் கைகளைப் பின்புறமாகக் கட்டி, அவற்றாலேயே தொங்கவிட்டார்கள். நாங்கள் உணர்வு இழந்தபோது, எங்கள்மீது தண்ணீரை அள்ளி ஊற்றினார்கள். அப்பப்பா, தாங்கமுடியாத வேதனை. எங்கள் உடலின் கனத்தால் தோள்கள் பிசகிவிட்டன. இந்தச் சித்திரவதை சுமார் மூன்று மணிநேரம் தொடர்ந்தது. பிறகு, எந்தவொரு யெகோவாவின் சாட்சியையும் சுடவேண்டாம் என திடீரென ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
கிழக்குக்கு மாற்றம்—பிறகு தப்பி ஓட்டம்
மூன்று வாரம் கழித்து, டான் நதிக்கரைக்கு எங்களை அணிவகுத்து கூட்டிச்சென்றார்கள். இவ்வாறு சில நாட்கள் நடந்தே சென்றோம். நாங்கள் உயிருடன் திரும்பி வரப்போவதில்லை என அதிகாரிகள் சொன்னார்கள். பகல்வேளையில், ஏதாவது வேலை வாங்கவேண்டும் என்பதற்காகவே வெட்டியாக குழிகளைத் தோண்டச் சொல்லி, பின்பு அவற்றையே மூட வைத்தார்கள். மாலைவேளையில், அங்குமிங்கும் நடமாட ஓரளவு சுதந்திரம் கிடைத்தது.
எனக்கிருந்த சூழ்நிலையை நினைத்துப் பார்க்கையில், இரண்டே இரண்டு வாய்ப்புதான் இருந்தது. அங்கேயே உயிர்விடுவது அல்லது ஜெர்மானியர்களிடமிருந்து தப்பி ஓடி, ரஷ்யரிடம் சரணடைவது. உறைந்த டான் நதியைக் கடந்து தப்பி ஓட எங்களில் மூன்றுபேர் மட்டும் தீர்மானித்தோம். டிசம்பர் 12, 1942-ல், ஜெபத்தோடு நாங்கள் புறப்பட்டோம். ரஷ்ய எல்லையை அடைந்தவுடன், சுமார் 35,000 சிறைக்கைதிகளுடன் நாங்களும் சிறை முகாமில் போடப்பட்டோம். வசந்த காலம் வந்தது, மீந்திருந்ததோ சுமார் 2,300 சிறைக்கைதிகள்தான். மற்றவர்கள் பட்டினியால் இறந்திருந்தனர்.
கிடைத்ததோ சுதந்திரம், தொடர்ந்ததோ அவலம்
போர் முடியும்வரை, ஏன் அது முடிந்து பல மாதம்கூட ஒரு ரஷ்ய சிறைக்கைதியாகவே காலம் கழித்தேன். கடைசியில், நவம்பர் 1945-ல், ஸாஹாருக்குத் திரும்பினேன். எங்கள் பண்ணை மோசமான நிலையில் இருந்தது. ஆகவே எல்லா வேலைகளையும் திரும்ப எடுத்துச் செய்யவேண்டியதாயிற்று. என் மனைவியும் பிள்ளைகளும் போர்க்காலங்களின்போது பண்ணையைக் கவனித்துக்கொண்டனர்; ஆனால் அக்டோபர் 1944-ல், ரஷ்யர்கள் ஆக்கிரமித்தபோது, அந்த இடத்தைவிட்டு கிழக்கு நோக்கிச் சென்றுவிட்டனர். எங்களுக்கிருந்த அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
அதையெல்லாம்விட கொடுமை என்னவென்றால், நான் வீடுதிரும்பியபோது என் மனைவி படுத்த படுக்கையாகி இருந்தாள். பிப்ரவரி 1946-ல் அவள் இறந்துவிட்டாள். அப்போது அவளுக்கு 38 வயது மட்டுமே. ஐந்து வருட பிரிவுத் துயருக்குப்பின், சேர்ந்து வாழ கிடைத்தது கொஞ்ச நாட்கள்தான்.
கூட்டங்களுக்குச் செல்வதன் மூலமும், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்கேற்பதன் மூலமும் என் ஆவிக்குரிய சகோதரர்களின் மத்தியில் ஆறுதலைக் கண்டடைந்தேன். 1947-ல் ஒரு மாநாட்டுக்குச் செல்வதற்காக கொஞ்சம் பணம் கடனாக வாங்கி, ப்ரனோவுக்குச் சென்றேன். சுமார் 400 கிலோமீட்டர் தூர பிரயாணம் அது. உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியின் அப்போதைய தலைவர் நேதன் எச். நார் உட்பட, அங்கிருந்த கிறிஸ்தவ சகோதரர்களின் மத்தியில் ஏராளமான ஆறுதலும் உற்சாகமும் எனக்குக் கிடைத்தது.
போருக்குப் பின்பு ஏற்பட்ட சுதந்திரம் வெகுநாள் நீடிக்கவில்லை. 1948-ல் கம்யூனிஸ்ட்டுகள் எங்களை ஒடுக்க ஆரம்பித்தார்கள். செக்கோஸ்லோவாகியாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய சேவையில் முனைப்பாக செயல்பட்ட சகோதரர்களில் பலர் 1952-ல் கைது செய்யப்பட்டனர். ஆகவே சபைகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. 1954-ல், என்னையும் கைது செய்தார்கள். எனக்கு நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. என் மகன் யான், பேரன் யூரை ஆகிய இருவருமே தங்கள் கிறிஸ்தவ நடுநிலைமைக்காக சிறையிலிடப்பட்டனர். பிராக்கிலுள்ள பான்கிராட்ஸ் என்ற அரசு சிறைச்சாலை முகாமில் இரண்டு ஆண்டுகளைக் கழித்தேன். 1956-ல் மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டேன்.
ஒருவழியாக விடுதலை!
இறுதியில், 1989-ல், செக்கோஸ்லோவாகியாவில் கம்யூனிஸத்தின் பிடி தளர்ந்தது. யெகோவாவின் சாட்சிகளுடைய சேவைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது. இவ்வாறு, கூட்டங்களை நடத்தவும் பகிரங்கமாக பிரசங்கிக்கவும் எங்களுக்கு சுயாதீனம் கிடைத்தது. அந்தச் சமயத்தில் ஸாஹாரில் கிட்டத்தட்ட நூறு சாட்சிகள் இருந்தனர்; அதாவது, அந்தக் கிராமத்திலிருந்த 10 பேரில் ஒருவர் சாட்சியாய் இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஓர் அழகிய விஸ்தாரமான ராஜ்ய மன்றத்தை ஸாஹாரில் கட்டினோம். அதில் 200 பேர் உட்காரலாம்.
என் உடல்நலம் முன்புமாதிரி அவ்வளவு நன்றாக இல்லை. ஆகவே சகோதரர்கள் வந்து ராஜ்ய மன்றத்துக்கு என்னைக் கூட்டிச்செல்கின்றனர். அங்கு செல்வது எனக்கு இன்பத்தைத் தருகிறது. காவற்கோபுர படிப்பில் பதில்கள் சொல்வதை அனுபவித்து மகிழ்கிறேன். என் குடும்பத்தில், அநேக பேரக்குழந்தைகள் உட்பட, மூன்று தலைமுறைகளிலும் பலர் யெகோவாவை சேவிப்பதைக் காண்பதில் விசேஷமான மகிழ்ச்சி எனக்கு உண்டு. இவர்களில் ஒருவர் செக்கோஸ்லோவாகியாவில் யெகோவாவின் சாட்சிகளின் பயணக் கண்காணியாக சேவித்திருக்கிறார். ஆனால், அவரது குடும்பப் பொறுப்புகளின் காரணமாக பயணக் கண்காணியாக தொடர்ந்து சேவிக்க முடியவில்லை.
எனக்கு நேரிட்ட சோதனைகளின் போதெல்லாம் யெகோவா என்னைப் பலப்படுத்தினதற்காக நான் அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். “அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல” அவர்மீதே என் கவனத்தை ஒருமுகப்படுத்தி வைத்திருந்ததுதான் என்னை ஆதரித்தது. (எபிரெயர் 11:27) ஆம், அவரது விடுவிக்கும் பலத்த கரம் என்கூடவே இருந்திருக்கிறது. ஆகவேதான், இப்பொழுதும்கூட, சபை கூட்டங்களுக்குச் செல்லவும், முடிந்த அளவுக்கு பொது ஊழியத்தில் அவருடைய பெயரைப் பறைசாற்றவும் தொடர்ந்து முயற்சி செய்கிறேன்.
[பக்கம் 25-ன் படம்]
ஸாஹாரிலுள்ள ராஜ்ய மன்றம்
[பக்கம் 26-ன் படம்]
காவற்கோபுர படிப்பில் பதில்சொல்லும் நல்வாய்ப்பை மதிப்புடையதாய் கருதுகிறேன்