இதோ ஆபத்து விழித்தெழுவீர்!
“நாம் வாழும் காலத்தைக் குறித்து தவறாக எடைபோடாதீர்; தூக்கத்தைவிட்டு விழித்தெழ இதுவே காலம்.” (ரோமர் 13:11, நாக்ஸ் ஆங்கில மொழிபெயர்ப்பு) பொ.ச. 70-ல் படுபயங்கரமான அழிவை யூத உலகம் எதிர்ப்படுவதற்கு சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பே ரோமில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு மேலே உள்ள வார்த்தைகளை அப்போஸ்தலன் பவுல் எழுதினார். ஆவிக்குரியவிதமாக விழிப்புடன் இருந்ததால் அபாய காலக்கட்டத்தில் யூத கிறிஸ்தவர்கள் எருசலேமில் இருக்கவில்லை. அதனால் சாவையும் தழுவவில்லை; அடிமையும் ஆகவில்லை. ஆனால், அந்நகரத்துக்கு முழுக்குப் போடவேண்டும் என்று அவர்கள் எவ்வாறு அறிந்திருந்தனர்?
எதிரிகள் எருசலேமைச் சுற்றி அரண் எழுப்பி முற்றுகையிடுவர், அதன் குடிமக்களை நிர்மூலமாக்குவர் என்று இயேசு கிறிஸ்து எச்சரித்திருந்தார். (லூக்கா 19:43, 44, திருத்திய மொழிபெயர்ப்பு) பிறகு, எளிதில் புரிந்துகொள்ளத்தக்க பல அம்சங்களடங்கிய ஓர் அடையாளத்தையும் தம்மை உண்மையுடன் பின்பற்றிய சீடர்களுக்கு கொடுத்தார். (லூக்கா 21:7-24) எருசலேமிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு, நகரை விட்டுச் செல்வதென்பது வீடுவாசல், வேலைவெட்டி என்று எல்லாவற்றையும் விட்டுச் செல்வதைக் குறித்தது. ஆனால், அவர்கள் ஜாக்கிரதை உணர்வோடிருந்ததும் ஓடிப்போனதும் உயிரைக் காத்தன.
எருசலேமின் அழிவைக் குறித்து இயேசு முன்னறிவித்தபோது, அவருடைய சீஷர்கள் இவ்வாறு கேட்டனர்: “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், [“வந்திருத்தலுக்கும்,” NW] உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” (மத்தேயு 24:3) இயேசு தம்முடைய பதிலில், தம் எதிர்கால வந்திருத்தலை, நோவா காலத்தின் வெள்ளப் பெருக்குக்கு முன்பிருந்த காலப்பகுதியுடன் ஒப்பிட்டார். அப்போதைய பேரழிவில் கொடியோர் அனைவரும் துடைத்தழிக்கப்பட்டதை இயேசு சுட்டிக் காட்டினார். (மத்தேயு 24:21, 37-39) மனிதருடைய விவகாரங்களில் கடவுள் மீண்டும் தலையிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் எந்தளவுக்கு? கொடியவர்களின் உலகை அல்லது ஒழுங்குமுறையை முற்றிலுமாக நீக்குமளவுக்கு! (2 பேதுரு 3:5, 6-ஐ ஒப்பிடுக.) அது நம்முடைய நாட்களில் நடக்குமா?
இன்றும் அதே நிலைதானா?
தங்களுடைய புனித நகராகிய எருசலேம் அழிக்கப்படுமென்று முதல் நூற்றாண்டில் வாழ்ந்த யூதர்களில் பலர் கற்பனைகூட செய்யவில்லை. இதேவிதமான அவநம்பிக்கை எரிமலைக்கு அருகில் வாழும் மக்களிடத்திலும் நிலவுகிறது. ஒருவேளை அது வெடிப்பதை அவர்கள் இதுவரை பார்த்திருக்க மாட்டார்கள். அதைக் குறித்து எச்சரிக்கும்போது, “இப்ப எங்க அது வெடிக்கப்போகுது” என்ற பதில் சர்வசாதாரணம். “வழக்கமாக இரண்டோ மூன்றோ நூற்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் எரிமலை தன் கைவரிசையைக் காட்டும். அப்பாம்மா காலத்துல அது வெடிச்சிருந்தா மனசுல கொஞ்சம் பயம் இருக்கும், ஆனா அது தாத்தா பாட்டி காலத்துல நடந்திருந்தா கேட்கவே வேண்டாம்; அது பழங்கதைதான்” என்று எரிமலை ஆய்வாளர் லையனல் வில்சன் விளக்குகிறார்.
இருந்தாலும், அபாயச் சங்கொலிகளைப் புரிந்துகொண்டு அலட்சியம் செய்யாமலிருப்பதற்கு துல்லியமான தகவல்கள் உதவலாம். மௌன்ட் பிலீ வெடிப்பதற்கு முன்பு அங்கிருந்து வெளியேறியவர்களில் ஒருவர் எரிமலைகளைப் பற்றி விவரம் தெரிந்தவர்; அதோடு அபாய சமிக்கைகளையும் புரிந்துகொண்டார். மௌன்ட் பினட்டூபோ வெடிப்பதற்கு சற்றுமுன்பும் அத்தகைய அடையாளங்கள் சரியாக புரிந்துகொள்ளப்பட்டன. அந்த மலை உள்ளுக்குள்ளேயே உறுமிக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக்க தயாராயிருந்ததைக் கண்காணித்த எரிமலை ஆய்வாளர்கள் அவ்விடத்தை உடனடியாக காலி செய்யும்படி உள்ளூர்வாசிகளுக்கு புரிய வைத்தனர்.
சிலர் எப்போதுமே அபாயச் சங்கொலிகளை அசட்டை செய்து, ஒன்றும் நடக்காது என்ற தோரணையில் விடாப்பிடியாக இருப்பதென்னவோ உண்மைதான். உடனடி நடவடிக்கை எடுப்பவர்களையும்கூட இவர்கள் கேலி செய்யலாம். நம் நாட்களில் அத்தகைய மனநிலை சர்வசாதாரணமாக காணப்படும் என்று அப்போஸ்தலனாகிய பேதுரு முன்னறிவித்தார். அவர் சொன்னார்: “நீங்கள் முதலாவது தெரிந்துகொள்ளவேண்டியது இதுவே. இறுதிக் காலத்தில் ஏளனம் செய்வோர் சிலர் தோன்றித் தங்கள் சொந்த தீய நாட்டங்களுக்கேற்ப வாழ்ந்து உங்களை எள்ளிநகையாடுவர். அவர்கள், ‘அவரது வருகையைப் பற்றிய வாக்குறுதி என்னவாயிற்று? நம் தந்தையரும் இறந்து போயினர்; ஆயினும் படைப்பின் தொடக்கத்தில் இருந்ததுபோல எல்லாம் அப்படியே இருக்கிறதே’ என்று சொல்லுவார்கள்.”—2 பேதுரு 3:3, 4, பொது மொழிபெயர்ப்பு.
நாம் “இறுதிக் காலத்தில்” வாழ்கிறோம் என்பதை நம்புகிறீர்களா? த கொலம்பியா ஹிஸ்டரி ஆஃப் த உவார்ல்ட் என்ற புத்தகத்தில் ஜான் ஏ. கோரட்டி மற்றும் பீட்டர் கே என்பவர்கள், “நம் நாகரிகம் சீர்குலைந்து போவதை காண்கிறோமா?” எனக் கேட்கிறார்கள். அதற்கு பதிலளிக்க, அரசாங்கப் பிரச்சினைகள், உலகளவில் அதிகரித்துவரும் குற்றச்செயல் மற்றும் குடிமக்களின் கீழ்ப்படியாமை, குடும்ப வாழ்க்கையின் சீர்குலைவு, சமுதாயத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் படுதோல்வி, அதிகாரத்திற்கான போட்டிகள், ஒழுக்கம் மற்றும் மதத்தின் உலகளாவிய சிதைவு என பலவற்றை இந்தச் சரித்திர ஆசிரியர்கள் ஆய்வு செய்கிறார்கள். இறுதியில் அவர்கள் எடுத்த முடிவு இதுவே: “முடிவு நிச்சயம் என்பதற்கு இவையெல்லாம் அடையாளங்களாக இல்லாவிட்டால், வேறு எதுவுமே அடையாளங்களாக இருக்க முடியாது.”
“முடிவு” வெகு விரைவில் என்பதை நம்புவதற்கு அசைக்க முடியாத காரணம் நமக்கு உள்ளது. இல்லையில்லை, இந்த பூமி கோளமே அழிந்துவிடும் என்று பயந்துவிடாதீர்கள். ஏனெனில் கடவுள் ‘பூவுலகை அதன் அடித்தளத்தின் மீது நிலைநாட்டினார். அது என்றென்றும் அசைவுறாது’ என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் [திருப்பாடல்கள்] 104:5, பொ.மொ.) ஆனால், மனிதர்களின் இந்த பெரும் துன்பத்துக்கு காரணமான கொடியவர்களின் ஒழுங்குமுறைக்கு அழிவு விரைவிலிருக்கிறது என்பதை நாம் எதிர்பார்க்கலாம். ஏன்? இதுதான் கடைசி நாட்கள் என்பதை தெளிவாக அடையாளம் காட்டுகிற அநேக அம்சங்களை நாம் காண்கிறோம். அதை இயேசு தொகுத்துரைத்தார். (“கடைசி நாட்களின் சில அம்சங்கள்” என்ற பெட்டியைக் காண்க.) இயேசுவின் வார்த்தைகளை உலக சம்பவங்களோடு ஏன் நீங்கள் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது? உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பயனளிக்கிற தீர்மானத்தைச் செய்ய அது உங்களுக்கு உதவலாம். ஆனால் உடனடி நடவடிக்கை இன்று ஏன் அவசியம்?
விழிப்பாய் இருப்பது மிக அவசியம்
வெகு விரைவில் எரிமலை வெடிக்கும் என்பதை விஞ்ஞானிகள் அறிந்திருக்கிற போதிலும், அது துல்லியமாய் எப்போது நடக்கும் என்பதை அவர்களால் சொல்ல முடியாது. அதேவிதமாகவே, இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைக் குறித்தும் இயேசு சொன்னார்: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.” (மாற்கு 13:32) இந்தத் தற்போதைய ஒழுங்குமுறை அழியும் நிமிஷத்தை நாம் அறியாதபடியால் இயேசு இத்தகைய எச்சரிப்பையும் கொடுத்தார்: “இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் [இயேசு] வருவார்.”—மத்தேயு 24:43, 44, பொ.மொ.
இந்த ஒழுங்குமுறைக்கு திடீரென வரும் படுநாசகரமான முடிவைக் குறித்து இவ்வுலகம் ஆச்சரியமடையும் என்பதை இயேசுவின் வார்த்தைகள் காட்டுகின்றன. நாம் அவருடைய சீடர்களாக இருந்தாலும்கூட ‘ஆயத்தமாக இருக்கவேண்டியது’ அவசியம். நம் சூழ்நிலை, திருடன் வரும் நேரத்தை அறியாததால், திடுதிப்பென்று அவன் வரும்போது அதிர்ச்சியடையும் வீட்டு உரிமையாளரின் நிலைக்கு ஒத்திருக்கிறது.
அதேவிதமாகவே, தெசலோனிக்கேயாவில் உள்ள சகோதரர்களுக்கு பவுல் எழுதினார்: “திருடன் இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய [“யெகோவாவின்,” NW] நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள். . . . அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது.” பவுல் மேலும் இவ்வாறு துரிதப்படுத்துகிறார்: “ஆகவே மற்றவர்களைப்போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.” (1 தெசலோனிக்கர் 5:2, 4, 6, பொ.மொ.) “விழிப்போடும் அறிவுத் தெளிவோடும்” இருப்பதென்றால் என்ன?
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எருசலேமை விட்டு ஓடியதுபோல நாமும் பாதுகாப்பிற்காக ஒரு குறிப்பிட்ட நகரை விட்டு ஓட வேண்டுமென இது அர்த்தப்படுத்துகிறதில்லை. தூக்கத்திலிருந்து விழித்தெழுமாறு ரோமிலுள்ள உடன் விசுவாசிகளுக்கு ஆலோசனை கொடுத்த பிறகு, “இருளின் ஆட்சிக்குரிய செயல்களை களைந்து விட்டு, . . . இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்” என்று பவுல் துரிதப்படுத்தினார். (ரோமர் [உரோமையர்] 13:12, 14, பொ.மொ.) இயேசுவின் அடிச்சுவடுகளை நெருக்கமாக பின்பற்றுவதன் மூலம் ஆபத்தான நம் நாட்களைக் குறித்து விழிப்பாயிருக்கிறோம் என நாம் காட்டுகிறோம்; கொடியோரின் இந்த ஒழுங்குமுறை அழிவுறுகையில் ஆவிக்குரிய விழிப்புணர்வு தெய்வீக பாதுகாப்பை அளிக்கும்.—1 பேதுரு 2:21.
இயேசுவைப் பின்பற்றுவோர் அர்த்தமுள்ள, மனநிறைவளிக்கும் வாழ்க்கையை வாழ்கிறார்கள். இயேசுவின் சீஷராக இருப்பதன் நுகம் மெதுவானதாகவும் இளைப்பாறுதல் அளிப்பதாகவும் இருக்கிறது என்பது லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் கண்டறிந்த உண்மை. (மத்தேயு 11:29, 30) ‘கடவுளையும் அவரால் அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவை எடுத்துக்கொள்வதே’ சீஷராவதற்கு நீங்கள் வைக்கும் முதல் அடி. (யோவான் 17:3) சாட்சிகள் வாராவாரம் லட்சக்கணக்கானோரின் வீடுகளில் ஏறியிறங்கி ஆணித்தரமான “உண்மையை அறிந்துணர” மக்களுக்கு உதவுகிறார்கள். (1 திமொத்தேயு 2:4, பொ.மொ.) உங்கள் வீட்டிற்கு வந்து இலவசமாய் பைபிளை சொல்லித்தருவதற்கும் அவர்களுக்கு ஆனந்தம்தான். கடவுளுடைய வார்த்தையைப் படித்து, அறிவில் வளருகையில், நம் நாட்கள் சாதாரணமானவை அல்ல என்பதை நீங்களும்கூட உறுதியாக நம்புவீர்கள், இதில் சந்தேகமில்லை. தூக்கத்திலிருந்து விழித்தெழுவீர்! இதுவே காலம்!
[பக்கம் 7-ன் பெட்டி/படங்கள்]
கடைசி நாட்களின் சில அம்சங்கள்
“தேசத்துக்கு விரோதமாக தேசம் எழும்பும்”; ‘சமாதானம் பூமியிலிருந்து எடுக்கப்படும்.’ (மத்தேயு 24:7, NW; வெளிப்படுத்துதல் 6:4)
இந்த நூற்றாண்டில் நடந்த இரண்டு உலகப் போர்களும், கணக்குவழக்கற்ற சண்டைகளும் சமாதானத்தை பூமியிலிருந்து எடுத்து விட்டிருக்கின்றன. “முற்கால யுத்தங்களைவிட முதலாம், இரண்டாம் உலகப் போர்கள் வித்தியாசமாக இருந்தன. அளவு, அழிவின் கடுமை, உட்பட்ட நாடுகள், பொருட்சேதம், உயிர் சேதம் ஆகிய எல்லாவற்றிலுமே வித்தியாசமாக இருந்தன. . . . இந்த உலகப் போர்கள் எக்கச்சக்கமான மனிதரைக் காவு கொண்டன, ஏராளமான செல்வத்தை சூறையாடின, அதுவரை நடந்த எந்த போரைக் காட்டிலும் உலகின் பெரும் பாகத்தை துயரக் கடலில் ஆழ்த்தின” என எழுதுகிறார் சரித்திர ஆசிரியர் ஜான் கீகன். இன்றைய போர்களோ வீரர்களைவிட அதிகமாக பெண்களையும் பிள்ளைகளையும்தான் அல்லல்படுத்துகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் இருபது லட்சம் பிள்ளைகள் போர்களில் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல அமைப்பு கணக்கிடுகிறது.
‘பஞ்சங்கள்’ (மத்தேயு 24:7; வெளிப்படுத்துதல் 6:5, 6, 8)
1996-ல் கோதுமை, மக்காச்சோளம் ஆகியவற்றின் விலை கிடுகிடுவென அதிகரித்தது. அதற்கு காரணம்? உலக சேமிப்புக் கிடங்கில் இந்த தானியங்கள் ஐம்பது நாட்களுக்கு தேவையான அளவு மட்டுமே இருந்தன. இதுவரை பதிவு செய்யப்பட்டிருப்பதிலேயே இதுதான் மிகக் குறைந்த அளவு. அத்தியாவசியமான உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதென்பது இவ்வுலகின் கோடிக்கணக்கான ஏழை மக்களின், முக்கியமாக பிள்ளைகளின் வயிற்றில் அடிப்பதாய் இருக்கிறது.
“பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்” (மத்தேயு 24:7)
கடந்த 2,500 ஆண்டுகளில் ஒன்பது பூமியதிர்ச்சிகள் மட்டுமே 1,00,000-க்கும் அதிகமான மக்களை பலி வாங்கியுள்ளன. இவற்றுள் நான்கு 1914-க்கு பின் ஏற்பட்டவை.
‘அக்கிரமம் மிகுதியாகிறது’ (மத்தேயு 24:12)
20-ம் நூற்றாண்டின் முடிவை நெருங்குகையில், எங்கும் சட்டவிரோதமும் சட்ட ஏய்ப்புமே. தீவிரவாதிகள் அப்பாவி மக்களைத் தாக்குவது, ஈவிரக்கமற்ற கொலையாளிகள், கொன்று குவித்தல் ஆகியவை வன்முறை நிறைந்த இந்த கடைசி நாட்களின் திடுக்கிடச் செய்யும் அம்சங்களில் சில.
‘பல இடங்களில் கொள்ளை நோய்’ (லூக்கா 21:11)
1990-களில் கிட்டத்தட்ட 3 கோடி மக்கள் காசநோயால் சாவார்கள். வரவர நோய் தாங்கிச் செல்லும் பாக்டீரியாக்கள் நோய் எதிர்ப்பு மருந்துகளை பார்த்து கெக்கலிக்கின்றன. மற்றொரு கொடிய நோயான மலேரியா, ஒவ்வொரு ஆண்டும் 30 கோடியிலிருந்து 50 கோடி மக்களை அல்லல்படுத்தி, கணக்கிட்டபடி சுமார் 20 லட்சம் பேரை கொல்கிறது. இந்த பத்தாண்டு முடிவதற்குள்ளாக, வருடத்திற்கு 18 லட்சம் பேர் எய்ட்ஸால் இறந்திருப்பர். “இன்றைய மனித இனம் கொள்ளை நோய்களின் படையெடுப்பை காண்கிறது” என ஸ்டேட் ஆஃப் த உவார்ல்ட் 1996 அறிவிக்கிறது.
“ராஜ்யத்தின் நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமி முழுவதும் பிரசங்கிக்கப்பட வேண்டும்.” (மத்தேயு 24:14, NW)
1997-ல் யெகோவாவின் சாட்சிகள் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக 100 கோடிக்கும் அதிகமான மணிநேரங்களை செலவிட்டனர். ஐம்பது லட்சத்துக்கும் அதிகமான சாட்சிகள் 232 தேசங்களிலுள்ள மக்களுக்கு இந்த செய்தியை தவறாமல் சென்று பிரசங்கிக்கின்றனர்.
[படத்திற்கான நன்றி]
FAO photo/B. Imevbore
U.S. Coast Guard photo
[பக்கம் 4, 5-ன் படம்]
கிறிஸ்தவர்கள் எருசலேமை விட்டு ஓடிப்போக ஆவிக்குரிய விழிப்புணர்ச்சி உதவினது