உள்ளூர் பழக்கவழக்கங்களும் கிறிஸ்தவ நியமங்களும்—ஒத்துப்போகுமா?
வட ஐரோப்பாவைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் ஒரு யெகோவாவின் சாட்சி. அவர் ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு மிஷனரியாக அனுப்பப்பட்டார். உள்ளூர் சகோதரர் ஒருவரோடு டவுனில் நடந்து போய்க்கொண்டிருந்தார்; அப்போது அந்தச் சகோதரர் இவருடன் கைகோர்த்துக்கொண்டார்; உடனே இவருக்கு தூக்கிவாரிப் போட்டது போல் இருந்தது.
சந்தடிமிக்க ஒரு வீதியில் மற்றொருவருடன் கைகோர்த்துக்கொண்டு நடந்து செல்கிற எண்ணமே ஸ்டீபனுக்கு அதிர்ச்சியூட்டியது. அவருடைய கலாச்சாரத்தில் இப்படிப்பட்ட பழக்கம் ஓரினப்புணர்ச்சியை மறைமுகமாக தெரிவிக்கிறது. (ரோமர் 1:27) ஆனால் அந்த ஆப்பிரிக்க சகோதரருக்கோ, கைகோர்த்துக்கொள்வது வெறுமனே நட்பின் சின்னம். கையை உதறிவிடுவது நட்பை ஒதுக்குவதைக் குறிக்கும்.
கலாச்சார மோதல்களைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? முக்கியமாக, யெகோவாவின் சாட்சிகள் ‘சகல ஜனங்களையும் சீஷராக்க’ வேண்டிய தெய்வீக கட்டளையை நிறைவேற்ற ஆர்வமுடன் இருக்கிறார்கள். (மத்தேயு 28:19, NW) இந்த வேலையை செய்து முடிக்க, நிறைய ஊழியர்கள் தேவைப்படும் இடங்களுக்கு சிலர் சென்றிருக்கின்றனர். இவர்கள் தங்களுடைய புத்தம்புது சூழலில் பரிணமிப்பதற்கு, அங்குள்ள வித்தியாசமான கலாச்சாரங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பக்குவமாய் நடந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய புதிய சகோதர சகோதரிகளுடன் ஒருமித்து சேவைசெய்ய முடியும்; அதோடு வெளி ஊழியத்திலும் நன்கு பிரகாசிக்க முடியும்.
மேலும், கொந்தளிப்பான இந்த உலகில், அரசியல் அல்லது பொருளாதார காரணங்களுக்காக அநேக மக்கள் தொல்லைமிக்க தங்களுடைய தாயகத்தை விட்டோடி மற்ற நாடுகளில் சென்று குடித்தனம் நடத்துகிறார்கள். ஆகையால், இந்தப் புதிய அயலகத்தாருக்கு நாம் பிரசங்கிக்கையில் புதிய பழக்கவழக்கங்களை எதிர்ப்படலாம். (மத்தேயு 22:39) வித்தியாசமான முறைகளில் அவர்கள் செயல்படுவதை திடுமென்று பார்க்கையில் நாம் சற்று குழம்பிப்போகலாம்.
தெளிவாக வகுக்கப்பட்ட அம்சங்கள்
கலாச்சாரம் என்பது மனித சமுதாயம் என்ற ஆடையில் நூலிழையாக நெய்யப்பட்டிருக்கிறது. ஆகையால், ‘மிஞ்சின நீதிமானாக’ காட்டிக்கொண்டு தொட்டதற்கெல்லாம் பைபிளோடு ஒத்திருக்கிறதா என்று சின்னச் சின்ன பழக்கவழக்கங்களையும் தோண்டித் துருவுவது மாயமானை வேட்டையாடுவதைப் போல்தான் இருக்கும்!—பிரசங்கி 7:16.
மறுபட்சத்தில், தெய்வீக நியமங்களுக்கு விரோதமானது என பட்டவர்த்தனமாக தெரியும் உள்ளூர் பழக்கவழக்கங்களை இனம் கண்டுகொள்வது அவசியம். ஆனால் பொதுவாக, அது ஒன்றும் மலையைக் கட்டி இழுக்கிற விஷயம் அல்ல, ஏனெனில் ‘காரியங்களை சீராக்குவதற்கு’ கடவுளுடைய வார்த்தை மட்டப்பலகையைப் போல் இருக்கிறது. (2 தீமோத்தேயு 3:16, NW) உதாரணமாக, பல தாரம் வைத்துக்கொள்வது சில நாடுகளில் சகஜம்; ஆனால் உண்மை கிறிஸ்தவர்களுக்கு வேதப்பூர்வமான தராதரம் ஒன்றுண்டு—அதுதான் ஒருவனுக்கு ஒருத்தி.—ஆதியாகமம் 2:24; 1 தீமோத்தேயு 3:2.
அதைப் போலவே, கெட்ட ஆவிகளை அண்டவிடாமல் செய்வதற்காக, அல்லது அழியாத ஆத்துமா என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சில ஈமச்சடங்குகள் நடத்தப்படுகின்றன; இப்படிப்பட்டவை உண்மை கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளத் தகாதவை. பொல்லாத ஆவிகளை விரட்டியடிப்பதற்காக சில ஜனங்கள் செத்தவருக்கு தூபம் காட்டுகிறார்கள் அல்லது மந்திரம் ஓதுகிறார்கள். வேறு சிலரோ, இறந்தவரை ‘மறு உலகில்’ வாழ தயார்படுத்த உதவும் நோக்கத்தில் விடியவிடிய விழித்திருக்கும் பழக்கத்தையும் இரண்டாவது அடக்கம் செய்யும் பழக்கத்தையும் கடைப்பிடிக்கின்றனர். ஆனால், ஒரு ஆள் இறந்தபின் ‘ஒன்றும் அறியமாட்டார்’ என பைபிள் போதிக்கிறது. எனவே, எவருக்கும் அவர் நன்மை செய்யவோ தீமை செய்யவோ முடியாது.—பிரசங்கி 9:5; சங்கீதம் 146:4.
ஆனால், கடவுளுடைய வார்த்தைக்கு இசைவான அநேக பழக்கவழக்கங்கள் உள்ளன. உபசரிக்கும் பண்பு இன்னும் செழித்தோங்குகிற, அந்நியருக்கும்கூட அன்பாய் வணக்கம் சொல்லுகிற, தேவைப்பட்டால் விருந்தாளியாக வீட்டில் தங்கவைக்கும் பழக்கமுள்ள கலாச்சாரங்களைப் பார்க்கையில் அது மனதுக்கு எவ்வளவாய் இதமளிக்கிறது! இப்படிப்பட்ட உபசரிப்பை நீங்கள் முதன்முதலாக பெறுகையில், இத்தகைய முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கு உங்கள் மனம் தூண்டவில்லையா? அவ்வாறு பின்பற்றுவீர்களாகில், அது நிச்சயமாகவே உங்களுடைய கிறிஸ்தவ குணங்களுக்கு மெருகூட்டும்.—எபிரெயர் 13:1, 2.
கால்கடுக்க காத்திருப்பதை நம்மில் யார்தான் விரும்புவர்? சில நாடுகளில் இது அபூர்வமே, ஏனெனில் காலந்தவறாமை முக்கியமாக கருதப்படுகிறது. யெகோவா ஒழுங்கின் கடவுள் என பைபிள் நமக்குச் சொல்கிறது. (1 கொரிந்தியர் 14:33, NW) அதனால், துன்மார்க்கத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒரு “நாளையும் நாழிகையையும்” அவர் குறித்து வைத்திருக்கிறார், இது ‘தாமதிக்காது’ என்ற உறுதியையும் நமக்குத் தருகிறார். (மத்தேயு 24:36; ஆபகூக் 2:3) நியாயமான விதத்தில் நேரம் தவறாமையை ஊக்குவிக்கும் கலாச்சாரங்கள் ஒழுங்காக இருப்பதற்கும் மற்றவர்களுக்கும் அவர்களுடைய பொன்னான நேரத்திற்கும் தகுந்த மதிப்பு காண்பிப்பதற்கும் நமக்கு உதவுகின்றன; அது நிச்சயமாகவே வேதப்பூர்வ நியமங்களுக்கு இசைவாக உள்ளது.—1 கொரிந்தியர் 14:40; பிலிப்பியர் 2:4.
தீங்கற்ற பழக்கவழக்கங்களைப் பற்றியென்ன?
தெளிவாகவே சில பழக்கவழக்கங்கள் கிறிஸ்தவ வாழ்க்கை முறைக்கு இசைவாக இருக்கிறபோதிலும், மற்றவை அப்படி இருப்பதில்லை. ஆனால் சரியா தவறா என்று வகுக்கமுடியா பழக்கவழக்கங்களைப் பற்றியென்ன? அநேக பழக்கவழக்கங்கள் தீங்கற்றவை, அவற்றின் மீதுள்ள மனப்பான்மை நம்முடைய ஆவிக்குரிய சமநிலையை வெளிப்படுத்தலாம்.
உதாரணமாக, வாழ்த்து தெரிவிக்கும் முறைகள் அநேகம் உள்ளன—கை குலுக்குதல், தலை வணங்குதல், முத்தமிடுதல், கட்டிப்பிடித்தல். அதைப் போலவே, ‘டேபிள் மேனர்ஸ்’ சம்பந்தமான பழக்கவழக்கங்களிலும் பலவகை உள்ளன. சில நாடுகளில், கூடியிருந்து மக்கள் ஒரே தட்டில் சாப்பிடுகின்றனர். போற்றுதலை தெரிவிப்பதற்கு ஏப்பம் விடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது—விரும்பத்தக்கதும்கூட. ஆனால் மற்ற நாடுகளில் இது ஏற்றுக்கொள்ளத்தகாதது, மிக மோசமான ‘மேனர்ஸ்’ என்றும்கூட வகைப்படுத்தப்படும்.
இப்படிப்பட்ட தீங்கற்ற பழக்கவழக்கங்களில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள் அல்லது எதை விரும்புகிறதில்லை என்பதை முடிவுசெய்வதற்குப் பதிலாக, அவற்றை சரியான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்குக் கவனம் செலுத்துங்கள். எக்காலத்திற்கும் ஏற்ற பைபிள் அறிவுரையானது, ‘ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் நம்மிலும் மேன்மையானவர்களாக எண்ணும்படி’ பரிந்துரை செய்கிறது. (பிலிப்பியர் 2:3) அதைப் போலவே, இப்படிச் செய்யுங்கள் ப்ளீஸ்—மேனர்ஸ் புக் என்ற ஆங்கில புத்தகத்தில் எலினர் போயிக்கின் சொல்கிறார்: “முதலில் உங்களுக்கு வேண்டியது அன்பான இதயமே.”
இப்படிப்பட்ட தாழ்மையான அணுகுமுறை மற்றவர்களுடைய பழக்கவழக்கங்களைக் கீழ்த்தரமாக பார்ப்பதை தவிர்க்கும். வித்தியாசமாக தோன்றுகிற எல்லாவற்றையும் தவிர்ப்பதற்கு அல்லது சந்தேக கண்ணோடு பார்ப்பதற்குப் பதிலாக, மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைக் கற்றுக்கொண்டு, அவர்களது பழக்கவழக்கங்களை பகிர்ந்துகொண்டு, அவர்களது உணவை ருசிபார்ப்பதற்கு நாமே முயற்சியெடுக்க தூண்டப்படுவோம். பரந்த மனமுள்ளவர்களாயும் புதிய முறைகளை முயன்றுபார்க்கும் விருப்பமுள்ளவர்களாயும் இருப்பதன் மூலம், நம்முடைய விருந்தினருக்கு அல்லது அயல்நாட்டு அயலகத்தாருக்கு மரியாதை செலுத்துகிறோம். நம்முடைய இருதயங்களையும் நம்முடைய அனுபவத்தையும் ‘விரிவாக்குகையில்’ நாம்தாமேயும் பயனடைகிறோம்.—2 கொரிந்தியர் 6:13, NW.
பழக்கவழக்கங்கள் ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தால்
பைபிளுக்கு விரோதமாக இல்லாத ஆனால் ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு துணைபுரியாத பழக்கவழக்கங்களை எதிர்ப்பட்டால் என்ன செய்வது? உதாரணமாக, சில நாடுகளில், காரியங்களை தள்ளிப்போட்டுக்கொண்டே போகும் பழக்கத்தில் மக்கள் ஊறிப்போய் இருக்கலாம். அலட்டிக்கொள்ளாத இப்படிப்பட்ட அணுகுமுறை மனஅழுத்தத்தைக் குறைக்கலாம், ஆனால் நம்முடைய ஊழியத்தை “முழுமையாய்” நிறைவேற்றுவதை இது அதிக கடினமாக்கலாம்.—2 திமொத்தேயு 4:5, பொ.மொ.
‘நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம்’ என்று முக்கியமான காரியங்களைத் தள்ளிப்போடுவதைத் தவிர்ப்பதற்கு நாம் எவ்வாறு மற்றவர்களை ஊக்குவிக்கலாம்? “முதலில் உங்களுக்கு வேண்டியது அன்பான இதயமே” என்பதை மறந்துவிடாதீர்கள். அன்பால் தூண்டப்பட்டு, நாம்தாமே முன்மாதிரி வைக்கலாம். அதன்பின், செய்ய வேண்டியதை நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிடாமல் இருப்பதால் வரும் நன்மைகளை அன்புடன் விளக்கலாம். (பிரசங்கி 11:4) அதேசமயத்தில், பலனடைவதற்காக பரஸ்பர நம்பிக்கையை தியாகம் செய்யாமலிருக்க நாம் கவனமுடன் இருக்க வேண்டும். நம்முடைய ஆலோசனைகளை மற்றவர்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளாவிட்டால், நாம் அவர்கள்மீது அவற்றை திணிக்கவோ அல்லது நம்முடைய வெறுப்பை வெளிப்படுத்தவோ முயலக் கூடாது. சாமர்த்தியத்திற்கு முன்னால் எப்பொழுதும் அன்பே ஓங்கிநிற்க வேண்டும்.—1 பேதுரு 4:8; 5:3.
உள்ளூர் ரசனையை சிந்தித்துப்பார்த்தல்
நாம் கொடுக்கும் எந்த ஆலோசனையும் மதிப்புமிக்கதா, அல்லது வெறுமனே நம்முடைய சொந்த ரசனைகளை மற்றவர்கள்மீது திணிக்க விரும்புகிறோமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். உதாரணமாக, உடை உடுத்தும் பாணிகள் மிகவும் வித்தியாசப்படுகின்றன. ஒரு நபர் ‘டை’ அணிந்துகொண்டு நற்செய்தியைப் பிரசங்கிப்பது பல இடங்களில் தகுந்ததே. ஆனால் வெப்பமண்டல நாடுகள் சிலவற்றில், அதை மிதமிஞ்சிய சம்பிரதாயமாக கருதலாம். பொதுமக்களோடு தொடர்புகொள்கிற ரெப்ரஸன்டேடிவ்-க்கு தகுந்த உடை எது என்பதைக் குறித்து உள்ளூர் ரசனையை சிந்தித்துப் பார்ப்பது பெரும்பாலும் பயனுள்ள வழிகாட்டியாக இருக்கும். உணர்ச்சியை புண்படுத்தும் உடை சம்பந்தமான விஷயங்களைக் கையாளும்போது “தெளிந்த புத்தி” இன்றியமையாதது.—1 தீமோத்தேயு 2:9, 10.
ஒரு பழக்கவழக்கம் நமக்கு பிடிக்காமலிருந்தால் என்ன செய்வது? உடனடியாக அதை ஒதுக்கிவிட வேண்டுமா? அவசியமில்லை. முன்பு சொல்லப்பட்ட பழக்கமாகிய ஆண்கள் கைகோர்த்துக்கொள்ளும் பழக்கம், குறிப்பிட்ட அந்த ஆப்பிரிக்க சமுதாயத்தில் பூரணமாய் ஏற்றுக்கொள்ளத்தக்கது. மற்ற ஆண்கள் கைகோர்த்துக்கொண்டு நடப்பதை அந்த மிஷனரி பார்த்தபோது, உடனே ஆசுவாசமானார்.
அப்போஸ்தலன் பவுல் பரவலாக மிஷனரி பயணம் செய்தபோது, பல்தரப்பட்ட பின்னணியிலிருந்து வந்தவர்களை சபைகளில் சந்தித்தார். கலாச்சார மோதல்கள் அதிகம் இருந்தன என்பதில் சந்தேகமேயில்லை. எனவே, பைபிள் நியமங்களை உறுதியாகப் பின்பற்றிக்கொண்டு, அதேசமயத்தில் தன்னால் முடிந்த எந்தப் பழக்கவழக்கங்களையும் பவுல் ஏற்றுக்கொண்டார். “எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்” என்று சொன்னார்.—1 கொரிந்தியர் 9:22, 23; அப்போஸ்தலர் 16:3.
புதிய பழக்கவழக்கங்களை எதிர்ப்படுகையில் அதற்கு நாம் எப்படி பிரதிபலிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கு இதோ சில பொருத்தமான கேள்விகள். ஏதாவது பழக்கவழக்கத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம்—அல்லது புறக்கணிப்பதன் மூலம்—பார்ப்பவர்களுடைய மனதில் என்ன அபிப்பிராயத்தை நாம் ஏற்படுத்துகிறோம்? அவர்களுடைய கலாச்சாரத்தை நாம் ஏற்றுக்கொள்வதை பார்க்கும்போது ராஜ்ய செய்திக்கு அவர்கள் கவரப்படுவார்களா? மறுபட்சத்தில், நாம் உள்ளூர் பழக்கவழக்கத்தை ஏற்றுக்கொள்வோமாகில், ‘நம்முடைய ஊழியம் குற்றப்படுத்தப்படுமா’?—2 கொரிந்தியர் 6:3.
‘எல்லாருக்கும் எல்லாமாக’ இருக்க நாம் விரும்பினால், எது சரி எது தவறு என்பதைப் பற்றிய வேரூன்றிய சில கருத்துக்களை மாற்ற வேண்டியதாயிருக்கலாம். ஒரு காரியத்தைச் செய்வதற்கு “சரியான” முறை எது, “தவறான” முறை எது என்பதெல்லாம் வெறுமனே நாம் எங்கே வாழ்கிறோம் என்பதையே பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. எனவே, ஆண்கள் கைகோர்த்துக்கொண்டு நடப்பது ஒரு நாட்டில் நட்புக்கு அடையாளமாக இருக்கலாம், அதேசமயத்தில் மற்ற அநேக நாடுகளில், அது நிச்சயமாகவே ராஜ்ய செய்தியை ஆட்கள் கேட்காதவாறு செய்துவிடும்.
ஆனால், பல்வேறு இடங்களில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் கிறிஸ்தவர்களுக்கு தகுந்ததாகவும்கூட இருக்கிற மற்ற பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. ஆனாலும் நாம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
கோட்டைத் தாண்டுவதைக் குறித்து ஜாக்கிரதை!
தம்முடைய சீஷர்களை இந்த உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ள முடியாதபோதிலும், அவர்கள் ‘உலகத்தின் பாகமல்லாமல்’ இருக்க வேண்டும் என இயேசு சொன்னார். (யோவான் 17:15, 16, NW) ஆனால் சிலசமயங்களில், சாத்தானுடைய உலகத்தோடு ஒன்றுக்குள் ஒன்றாய் கலந்திருக்கும் காரியத்திற்கும் வெறுமனே கலாச்சாரத்திற்கும் இடையே உள்ள கோட்டை கண்டுபிடிப்பது சாமானியமான விஷயமல்ல. உதாரணமாக, இசையும் நடனமும் எல்லா கலாச்சாரத்திலும் காற்றைப்போல ஊடுருவிப் பரவியுள்ளன, ஆனால் சில நாடுகளில் அவை உயிர் மூச்சாய் திகழ்கின்றன.
ஒரு காரியத்தை சிலசமயங்களில் நாம் பட்டென்று முடிவுசெய்துவிடலாம்—சரியான வேதப்பூர்வ காரணங்களை வைத்து அல்ல, நம்முடைய பின்னணியின் அடிப்படையில். அலெக்ஸ் என்ற ஒரு ஜெர்மன் சகோதரர் ஸ்பெய்னுக்கு அனுப்பப்பட்டார். அவர் வளர்ந்துவந்த சூழலில் நடனம் அதிக பாப்புலராக இல்லை, ஆனால் ஸ்பெய்ன் கலாச்சாரத்திலோ அது இரண்டறக் கலந்திருந்தது. ஒரு சகோதரரும் சகோதரியும் விறுவிறுப்பாக ஸ்பானிய டான்ஸ் ஆடுவதை அவர் பார்த்தபோது, அவருடைய மனதில் ஒரே குழப்பம். இப்படிப்பட்ட டான்ஸ் தவறானதா, அல்லது ஒருவேளை உலகப்பிரகாரமானதா? இந்தக் கலாச்சாரத்துடன் அவர் ஒத்துப்போவாராகில் தன்னுடைய ஒழுக்க தராதரத்தை தாழ்த்திக்கொள்வாரா? இசையும் நடனமும் வித்தியாசமாக இருந்தபோதிலும், தன்னுடைய ஸ்பானிய சகோதர சகோதரிகள் கிறிஸ்தவ தராதரங்களை தாழ்த்திக்கொண்டார்கள் என நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை அலெக்ஸ் புரிந்துகொண்டார். அவருடைய குழப்பத்திற்கு காரணம், கலாச்சாரங்களில் உள்ள வேறுபாடே.
ஆனால், ஸ்பானிய பாரம்பரிய நடனத்தை அனுபவித்து மகிழும் எமிலியோ என்ற சகோதரர், அதில் ஆபத்து இருப்பதை உணர்ந்துகொள்கிறார். “பல விதமான நடனங்களில் இருபாலாரும் மிக நெருக்கமாக ஆடவேண்டியிருக்கிறது” என அவர் விளக்குகிறார். “திருமணமாகாத ஒரு நபராக நான் நினைக்கிறேன், இரண்டு பேரில் ஒருவருக்காவது நிச்சயமாய் இது உணர்ச்சிகளைத் தூண்டும். சிலசமயங்களில், உங்களுக்கு பிடித்தமானவர் யாரிடமாவது அன்பை காண்பிப்பதற்கு ஒரு சாக்காக நடனத்தைப் பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. தரமான இசையைத் தேர்ந்தெடுப்பதும், நெருக்கத்தைக் குறைத்துக்கொள்வதும் பாதுகாப்பாக இருக்கும். ஆனாலும், திருமணமாகாத இளம் சகோதர சகோதரிகள் டான்ஸ் பார்ட்டிகளுக்கு செல்கையில், தேவராஜ்ய முறைக்கேற்ற ஒரு சூழலை காத்துக்கொள்வது ரொம்ப கஷ்டம் என்பதை நான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.”
நிச்சயமாகவே, உலகப்பிரகாரமான நடத்தையை அனுபவிப்பதற்கு சாக்குப்போக்காக நம்முடைய கலாச்சாரத்தை நாம் பயன்படுத்த விரும்ப மாட்டோம். இஸ்ரவேல் கலாச்சாரத்தில் ஆடலும் பாடலும் இடம்பெற்றிருந்தன. இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி செங்கடலைக் கடந்து வந்தபோது, அதை ஆடிப் பாடி கொண்டாடினர். (யாத்திராகமம் 15:1, 20) ஆனால், அவர்களுடைய இசையும் நடனமும் அவர்களைச் சுற்றியிருந்த புறமத உலகத்திலிருந்து வேறுபட்டிருந்தன.
சீனாய் மலையிலிருந்து மோசே திரும்பி வரக் காத்திருக்கையில், இஸ்ரவேலர்கள் பொறுமையிழந்து, ஒரு கன்றுக்குட்டியை உருவாக்கி, புசித்து குடித்து ‘கூத்தாட எழுந்தது’ வருந்தத்தக்கது. (யாத்திராகமம் 32:1-6, தி.மொ.) யோசுவாவும் மோசேயும் அவர்களுடைய பாடலை கேட்டபோது, உடனே அது அவர்களை கலக்கியது. (யாத்திராகமம் 32:17, 18) இஸ்ரவேலர்கள் அந்தக் “கோட்டை” தாண்டிவிட்டார்கள், இப்பொழுதோ அவர்களுடைய ஆட்டமும் பாட்டமும் அவர்களைச் சுற்றியிருந்த புறமத உலகத்தைப் படம்பிடித்து காட்டின.
அதைப் போலவே இன்றும், நம்முடைய ஊரில் இசையும் நடனமும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாயும் மற்றவர்களுடைய மனசாட்சியை புண்படுத்தாததாயும் இருக்கலாம். ஆனால் அரைகுறை இருட்டில், பிளாஷ் லைட்டுகள் பளிச்சிட, இசையை வித்தியாசமான தாளத்துடன் போட்டால், ஒருகாலத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இருந்தது இன்று இந்த உலகத்தின் போக்கை பிரதிபலிப்பதாக ஆகிவிடலாம். “இது எங்க கலாச்சாரம்தான்” என நாம் வாதாடலாம். ஆரோனும் இதுபோன்ற சாக்குப்போக்கையே பயன்படுத்தினார். புறமத களியாட்டையும் வணக்கத்தையும் ‘யெகோவாவுக்கான பண்டிகை’ என தவறாக வர்ணித்து, அவற்றை அனுமதித்தார். இப்படிப்பட்ட நொண்டிச் சாக்கு செல்லாமல் போனது. ஏன், அவர்களுடைய நடத்தை ‘பகைவரும் இழிவாக’ கருதுமளவுக்கும் சென்றுவிட்டிருந்ததே.—யாத்திராகமம் 32:5, 25, NW.
கலாச்சாரத்திற்கென்று ஒரு தனி இடமுள்ளது
விநோதமான பழக்கவழக்கங்கள் முதலில் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கலாம், ஆனால் அவை அனைத்துமே ஏற்றுக்கொள்ளத்தகாதவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய ‘பயிற்றுவிக்கப்பட்ட பகுத்தறியும் திறமைகளால்,’ எந்தப் பழக்கவழக்கங்கள் கிறிஸ்தவ நியமங்களுடன் ஒத்திருக்கின்றன, எவை ஒத்திருக்கவில்லை என்பதை தீர்மானிக்க முடியும். (எபிரெயர் 5:14, NW) நம்முடைய உடன் மானிடரிடம் அன்பால் பொங்கிவழியும் இதயத்தை வெளிக்காட்டும்போது, தீங்கற்ற பழக்கவழக்கங்களை எதிர்ப்பட்டால் நாம் சரியாகவே செயல்படுவோம்.
நம்முடைய பிராந்தியத்திலோ வேறு இடங்களிலோ மக்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கையில், கதம்ப கலாச்சாரத்தைக் குறித்ததில் ஒரு சமநிலையான அணுகுமுறை ‘எல்லாருக்கும் எல்லாமாவதற்கு’ உதவும். கதம்ப கலாச்சாரத்தை நாம் வரவேற்கையில், வளமிக்க, கலகலப்பான, பல்சுவைமிக்க நம்முடைய வாழ்க்கைக்கு அது அழகுசேர்ப்பதை காண்போம் என்பதில் சந்தேகமில்லை.
[பக்கம் 20-ன் படம்]
கிறிஸ்தவ வாழ்த்துக்களை பல்வேறு விதங்களில் தெரிவிக்கலாம்
[பக்கம் 23-ன் படம்]
கதம்ப கலாச்சாரத்தைப் பற்றிய ஒரு சமநிலையான நோக்கு வளமிக்க, பல்சுவையான வாழ்க்கைக்கு வழிநடத்தும்