மன்னர் வணக்கத்திலிருந்து உண்மை வணக்கத்திற்கு
இசாமு சுகியுரா என்பவரால் சொல்லப்பட்டது
1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பான் தோல்வியை தழுவப்போவது தெளிவாகத் தெரிந்தாலும், நிச்சயமாகவே காமிகாஸ் (“தெய்வீக காற்று”) வீசி எதிரியை தோற்கடிக்கும் என்பதாக நாங்கள் நம்பிக்கொண்டிருந்தோம். காமிகாஸ் என்பது 1274-ம் 1281-ம் ஆண்டுகளில் வீசிய புயல் காற்று; அந்தக் காற்று ஜப்பானியர்களை எதிர்த்து படையெடுத்து வந்த மங்கோலியர்களின் போர்க்கப்பல்கள் பலவற்றை இரண்டுமுறை நாசம் செய்ததால் அவர்கள் திரும்பிச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்துவிட்டது என்ற விவரத்தை ஆகஸ்ட் 15, 1945-ல் பேரரசர் ஹீரோஹிட்டோ அறிவித்தபோது அவரை வணங்கிய பத்து கோடி ஜனங்களின் நம்பிக்கை தகர்ந்து தவிடுபொடியானது. அப்போது நான் பள்ளி செல்லும் சிறுவன்; என் நம்பிக்கையும் தகர்ந்துதான் போனது. ‘பேரரசர் உண்மையில் கடவுள் இல்லை என்றால் வேறு யார்தான் கடவுள்? நான் யாரைத்தான் நம்புவது?’ என்பதாக குழப்பமடைந்தேன்.
இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பான் தோல்வியடைந்ததால் நானும் என்னைப்போன்ற ஆயிரக்கணக்கான ஜப்பானியர்களும் உண்மைக் கடவுளாகிய யெகோவாவை தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. நான் என்னென்ன மாற்றங்களையெல்லாம் செய்ய வேண்டியிருந்தது என்பதை சொல்வதற்கு முன்பு நான் எப்படிப்பட்ட மத அமைப்பில் வளர்ந்தேன் என்பதை சொல்கிறேன்.
சிறு வயதில் மதத்தின் செல்வாக்கு
நகோயா நகரில் 1932-ம் வருடம் ஜூன் 16-ம் தேதி பிறந்தேன். எங்கள் குடும்பத்திலிருந்த நான்கு பையன்களில் நான்தான் கடைக்குட்டி. அந்த நகரத்தில் ஒரு சர்வேயராக அப்பா வேலை செய்தார். அம்மா டென்ரிகியொ என்ற ஷின்டோ மதப்பிரிவின் பக்தையாக இருந்தார்; என்னுடைய மூத்த அண்ணன் டென்ரிகியொ போதகராக இருப்பதற்கு பயிற்சி பெற்றிருந்தார். என் அம்மாவுக்கு நான்தான் செல்லப்பிள்ளை. அதனால் வணக்க ஸ்தலத்திற்கு செல்லும்போதெல்லாம் என்னையும் அழைத்துச் செல்வார்கள்.
தலை குனிந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று எனக்கு கற்றுக்கொடுத்தார்கள். டென்ரிகியொ மதத்தில் டென்ரி ஓ னொ மிகோடோ தான் கடவுள்; அதோடு இன்னும் பத்து சிறிய தெய்வங்கள் மேல் நம்பிக்கை வைக்கவும் போதிக்கிறார்கள். இதன் அங்கத்தினர்களிடம் விசுவாச சுகமளிக்கும் பழக்கம் இருந்தது; மற்றவர்களுக்கு சேவை செய்வதும் மதத்தின் நம்பிக்கைகளை பரப்புவதும் முக்கியம் என்று போதித்தார்கள்.
சிறுவயதிலிருந்தே விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் எனக்கு படு ஆர்வம். இரவு வானில் ஒளி சிந்திய முழுமதியையும் கணக்குவழக்கே இல்லாமல் சிதறிக் கிடந்த நட்சத்திரங்களையும் பார்த்து பார்த்து அதிசயப்படுவேன்; வானத்தைக் கடந்து விண்வெளி எந்தளவு தூரம் இருக்கும் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். எங்கள் வீட்டுக் கொல்லைப் புறத்தின் ஒரு சிறிய மூலையில் நான் நட்ட கத்தரிச் செடிகளும் வெள்ளரிக்காய்களும் வளர்ந்ததை பார்த்து எனக்கு ஆச்சரியம் தாளவில்லை; இயற்கையோடு ஏற்பட்ட நெருக்கத்தால் சிருஷ்டிகர் மேலிருந்த என் விசுவாசம் பலப்பட்டது.
போர்க் காலங்கள்
1939 முதல் 1945 வரை இரண்டாம் உலக யுத்தம் தொடர்ந்தது. அவைதான் என் ஆரம்பப்பள்ளி படிப்பின் வருடங்கள். எங்களுடைய பள்ளி படிப்பின்போது ஷின்டோ மதப்படி பேரரசர் வணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நல்லொழுக்க வகுப்பில் எங்களுக்கு ஷுஷின் போதித்தார்கள். நல்லொழுக்க பயிற்சி என்ற பெயரில் தேசபக்தியை ஊட்டிவளர்த்து, ராணுவத்திற்கும் தயார்படுத்தினார்கள். சொல்லப்போனால் அதில் இதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கொடியேற்று விழாவில் பங்கு பெறுதல், தேசிய கீதம் பாடுதல், பேரரசுக்குரிய கல்வி சட்டங்கள், பேரரசரின் படத்தை வணங்குதல் போன்ற எல்லாவற்றையும் எங்கள் பள்ளியில் தவறாமல் செய்துவந்தோம்.
அங்குள்ள ஷின்டோ கோயிலுக்குச் சென்று பேரரசின் படை வெற்றி பெறுவதற்காக நாங்கள் வேண்டிக்கொள்வோம். அப்போது எனது அண்ணன்களில் இருவர் ராணுவத்தில் இருந்தனர். சிறுவயதிலிருந்தே நான் தேசிய-மத போதகங்களில் பயிற்றுவிக்கப்பட்டதால் ஜப்பானிய படையின் வெற்றிகளைக் கேள்விப்படும்போது எனக்கு சந்தோஷம் பொங்கியது.
ஜப்பானின் விமான தொழில்மையமாக நகோயா இருந்தது; எனவே ஐக்கிய மாகாணங்களின் விமானத் தாக்குதலுக்கு முக்கியமாக குறிவைக்கப்பட்ட இடமானது. பட்டப்பகலில், நகரத்தில் தொழிற்சாலை பகுதிகளுக்குமேல் B-29 சூப்பர்ஃபார்ட்ரெஸ் யுத்த விமானங்கள் சுமார் 30,000 அடி உயரத்தில் ஒன்றாக பறந்து, நூற்றுக்கணக்கான டன் எடையுள்ள குண்டுகளை சரமாரியாக பொழிந்தன. இரவு நேரங்களில் செர்ச் லைட் (search lights) ஒளியில் யுத்த விமானங்களை 4,500 அடி உயரத்திலேயே காண முடிந்தது. இவ்விதம் தொடர்ந்து குண்டு மழை பொழிந்தமையால் குடியிருப்பு பகுதிகளில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. யுத்தத்தின் கடைசி ஒன்பது மாதங்களில் நகோயாவில் மட்டும் 54 விமான தாக்குதல் நடந்தன; விளைவு 7,700-க்கும் அதிகமானோர் மரித்தனர்.
இந்தச் சமயத்தில் கடலருகே இருந்த பத்து நகரங்கள் போர் கப்பல்களால் தாக்கப்பட்டன. அமெரிக்கப் படைகள் டோக்கியோ அருகே வந்துவிடும் என்பதாக அப்போது ஜனங்கள் பேசிக்கொண்டார்கள். நாட்டைக் காக்க பெண்களுக்கும் சிறுவர்களுக்கும்கூட மூங்கில் ஈட்டிகளை உபயோகித்து சண்டை செய்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது எங்களுடைய கோஷம்: “ஈச்சியோகு சோகியோகுசி.” அதன் அர்த்தம் “சரணடைவதைக் காட்டிலும் 10 கோடி ஜனங்கள் சாவதே மேல்.”
ஆகஸ்ட் 7, 1945 அன்று செய்தித்தாளின் தலையங்கம் இவ்விதம் அறிவித்தது: “புது விதமான குண்டு ஹிரோஷிமாவில் போடப்பட்டது.” இரண்டு நாட்களுக்குப்பின் இன்னொன்று நாகசாகியில் போடப்பட்டது. இவைதாம் அணு குண்டுகள்; இவை மொத்தமாக 3,00,000-க்கும் அதிகமான உயிர்களை பலிவாங்கின என்பதாக நாங்கள் பின்னர் அறிந்துகொண்டோம். ஆகஸ்ட் 15-ல் கட்டை துப்பாக்கிகளை வைத்து நாங்கள் அணிவகுப்பு பயிற்சி செய்து முடித்தபோது ஜப்பான் சரணடைந்து விட்டதாக எங்கள் பேரரசர் அறிவித்ததைக் கேட்டோம். எங்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதாக நம்பிக்கொண்டிருந்தோம், ஆனால் இப்போதோ எங்கள் மனக்கோட்டை தகர்ந்து தூள்தூளானது!
ஒரு புதிய நம்பிக்கை பிரகாசிக்கிறது
அமெரிக்க படைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஜப்பானை ஆக்ரமித்தபோதுதான் போரில் அமெரிக்கா வென்றுவிட்டது என்ற உண்மையை மெல்ல மெல்ல ஜீரணிக்க முடிந்தது. அதன்பின் மக்களாட்சி ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது; அதோடுகூட மத சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளித்த ஒரு புதிய அரசியல் அமைப்பு உருவானது. அச்சமயம் வாழ்க்கை வேதனை மிகுந்ததாக இருந்தது, உணவு பற்றாக்குறை இருந்தது, ஊட்டச்சத்து குறைபாட்டால் 1946-ஆம் ஆண்டு என் அப்பா இறந்து போனார்.
அந்த சமயத்தில் என்னுடைய பள்ளியில் ஆங்கிலம் கற்று கொடுத்தார்கள்; NHK ரேடியோ நிலையம் ஆங்கிலத்தில் பேசுவதற்கு பயிற்சி அளிக்கும் ஒரு நிகழ்ச்சியை ஆரம்பித்தது. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்ச்சியை, பயிற்சி ஏட்டின் உதவியோடு நாள் தவறாமல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்குக் கேட்டு வந்தேன். இதனால் என்றாவது ஒரு நாள் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டுவிட்டது. ஷின்டோ மதம், புத்த மதம் ஏற்படுத்திய ஏமாற்றத்தால் உண்மையான கடவுளைப் பற்றி மேற்கத்திய மதங்களில் ஒருவேளை தெரிந்துகொள்ள முடியும் என்பதாக நினைத்தேன்.
1951-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியின் மிஷனரியான கிரேஸ் கிரிகரியை நகோயா ரயில் நிலையத்திற்கு முன்பாக சந்தித்தேன். அவர் ஆங்கில காவற்கோபுர பத்திரிகையையும் ஜப்பானிய மொழியில் பைபிள் சம்பந்தப்பட்ட சிறு புத்தகத்தையும் அளித்தார். இப்படிப்பட்ட வேலையை செய்வதற்காக அவருக்கு இருந்த மனத்தாழ்மையை கவனித்து நான் பிரமித்துப்போனேன். அவர் அளித்த அந்த இரண்டு பிரசுரங்களையும் வாங்கிக்கொண்டேன்; பைபிள் படிப்பைப் பற்றி அவர் குறிப்பிட்டவுடன் அதற்கும் மறுபேச்சில்லாமல் ஒப்புக்கொண்டேன். பைபிள் படிக்க சில நாட்களுக்குப்பின் அவருடைய வீட்டிற்கு வருவதாக சொன்னேன்.
ரயிலில் உட்கார்ந்து காவற்கோபுர பத்திரிகையை படிக்க ஆரம்பிக்கையில் அதன் முதல் கட்டுரையில் இருந்த “யெகோவா” என்ற முதல் வார்த்தையைக் கவனித்தேன். அந்தப் பெயரை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. என் கையில் இருந்த ஜப்பானிய-ஆங்கில டிக்ஷ்னரியில் அந்தப் பெயர் இருக்காது என்றுதான் நினைத்தேன்; என்னே ஆச்சரியம் அதிலும் அப்பெயர் இருந்ததே! “யெகோவா . . . , பைபிளின் கடவுள்.” கிறிஸ்தவத்தின் கடவுளை பற்றி நான் இப்போது கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்!
சில வாரங்கள் கழித்து உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியின் தலைவர் நேதன் எச். நார் பைபிள் பேச்சை கொடுக்கவிருந்தார். இந்த விவரத்தை முதல் முறையாக நான் மிஷனரி ஹோமுக்கு சென்ற அன்றே கேள்விப்பட்டேன். தன்னுடைய காரியதரிசி மில்டன் ஹென்ஷல் என்பவருடன் ஜப்பானுக்கு விஜயம் செய்த அவர் நகோயாவுக்கும் வருவதற்கு திட்டமிட்டிருந்தார். எனக்கு அப்போது பைபிள் அறிவு மிகக்குறைவே, என்றாலும் நான் அந்தப் பேச்சை ரசித்துக் கேட்டதோடு அங்கிருந்த மிஷனரிகளுடனும், வந்திருந்தவர்களுடனும் கூட்டுறவு கொள்வதில் அதிக மகிழ்ச்சியடைந்தேன்.
இரண்டு மாதங்களில் கிரேஸ் எனக்கு, யெகோவா, இயேசு கிறிஸ்து, மீட்கும் பொருள், பிசாசாகிய சாத்தான், அர்மகெதோன், பூங்காவனமாக மாற்றப்படவிருக்கும் பூமி போன்ற அடிப்படை சத்தியங்களை கற்றுக்கொடுத்தார். ராஜ்யத்தை பற்றிய நற்செய்தியே உண்மையில் நான் தேடிக்கொண்டிருந்த விஷயம். நான் படிக்க ஆரம்பித்ததிலிருந்தே சபை கூட்டங்களுக்கும் போக தொடங்கினேன். இப்படிப்பட்ட கூட்டங்களில் நிலவிய அன்பை அதிகம் விரும்பினேன்; மிஷனரிகள் ஜப்பானியர்களுடன் வித்தியாசமில்லாமல் பழகினார்கள், எங்களுடன் டாடாமியில் (பாய்கள்) அமர்ந்தனர்.
ஜப்பானில் முதல் வட்டார மாநாடு, ஒசாகா நகரில் இருந்த நாகானொஷிமா பொது அரங்கத்தில் 1951-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது. அச்சமயம் ஜப்பானில் 300-க்கும் குறைவான சாட்சிகளே இருந்தனர்; ஆனாலும் சுமார் 300 பேர் வந்திருந்தனர். அதில் கிட்டத்தட்ட 50 பேர் மிஷனரிகள். அந்த மாநாட்டின் நிகழ்ச்சிநிரலில் ஒரு சிறிய பகுதியில் நானும் பங்கெடுத்தேன். அப்போது நான் பார்த்ததும் கேட்டதும் என் இருதயத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்து போயின; ஆகவே என் வாழ்நாள் முழுவதும் யெகோவாவை சேவிக்க வேண்டும் என்று உறுதியாக தீர்மானித்தேன். அதற்கு அடுத்த நாள், அருகில் இருந்த பொது குளியலறையில் வெதுவெதுப்பான தண்ணீரில் முழுக்காட்டப்பட்டேன்.
பயனியர் ஊழியத்தின் சந்தோஷம்
யெகோவாவின் சாட்சிகளில் பயனியர்கள் என்பதாக அழைக்கப்படும் முழுநேர ஊழியர்கள் உள்ளனர்; நான் அவர்களில் ஒருவனாக விரும்பினேன்; அதே சமயம் என் குடும்பத்தையும் பொருளாதார ரீதியில் ஆதரிக்க விரும்பினேன். என்னுடைய விருப்பத்தைப்பற்றி முதலாளியிடம் பேசுவதற்கு தேவையான தைரியத்தை எல்லாம் ஒன்றுதிரட்டி ஒருவழியாக அவரிடம் பேசினேன். “உனக்கு சந்தோஷம்னா எனக்கும் சந்தோஷம்தான். அட்ஜஸ்ட் பண்ணறதுல எனக்கு ஆட்சேபணை இல்லை” என்றார் அவர். அவருடைய இந்த பதில் என்னை சந்தோஷத்தின் எல்லைக்கே கொண்டுசென்றது. இதனால் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் வேலை செய்தேன்; அந்த வருமானத்தை வைத்தே வீட்டு செலவுகளில் என் அம்மாவிற்கு உதவி செய்தேன். இப்போது கூட்டிலிருந்து விடுபட்ட சுதந்திரப் பறவையைப்போல் உணர்ந்தேன்.
நிலைமைகள் சற்று முன்னேறிய பின் ஆகஸ்ட் 1, 1954-ல் பயனியர் செய்ய ஆரம்பித்தேன். முதன் முதலில் கிரேஸை சந்தித்த இடத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இருந்த பகுதியில் அதாவது நகோயா ரயில் நிலையத்திற்கு பின் இருந்த பகுதியில் ஊழியம் செய்தேன். சில மாதங்களுக்கு பின் மேற்கு தீவான கியூஷுவில் இருந்த பெப்பு என்ற நகரத்தில் விசேஷ பயனியராக நியமிக்கப்பட்டேன். ட்சுடோமு மியுரா என்பவர்தான் என் ஊழிய பார்ட்னர்.a அச்சமயத்தில் அந்த முழு தீவிலும் யெகோவாவின் சாட்சிகளின் சபை ஒன்றுகூட கிடையாது. ஆனால் இன்றோ நூற்றுக்கணக்கான சபைகள் இருக்கின்றன; அவை 22 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன!
புதிய உலகத்தின் முன்னனுபவம்
1956-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் சகோதரர் நார் மறுபடியும் ஜப்பானுக்கு வந்தபோது ஆங்கில காவற்கோபுர பத்திரிகையிலிருந்து சில பாராக்களை சத்தமாக வாசிக்கும்படி என்னிடம் சொன்னார். இதற்கு காரணம் என்ன என்று அப்போது சொல்லவில்லை; ஆனால் சில மாதங்களுக்குப்பின் கிலியட் மிஷனரிப் பள்ளியின் 29-வது வகுப்பில் கலந்துகொள்வதற்கு எனக்கு அழைப்பு வந்தது. ஆகவே அதே வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவிற்கு சந்தோஷத்துடன் கிளம்பினேன்; என்னுடைய நீண்ட நாள் கனவு நனவானது. புரூக்ளினிலுள்ள பெரிய பெத்தேல் குடும்பத்துடன் தங்கி அவர்களுக்காக வேலை செய்தபோது எனக்கு யெகோவாவின் காணக்கூடிய அமைப்பிடமிருந்த விசுவாசம் பலப்பட்டது.
1957-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புரூக்ளினிலிருந்து நியூ யார்க்கின் வடக்குப் பகுதியில் சௌத் லான்சிங் என்ற இடத்தில் இருந்த கிலியட் பள்ளிக்கு என்னையும் சேர்த்து மூன்று மாணவர்களை சகோதரர் நார் காரில் அழைத்து சென்றார். அதைத் தொடர்ந்து வந்த ஐந்து மாதங்களில் கிலியட் பள்ளியில் யெகோவாவின் வார்த்தையிலிருந்து நன்றாக கற்பிக்கப்பட்டோம்; மற்ற மாணவர்களோடு சேர்ந்து அப்படிப்பட்ட அழகான பகுதிகளில் வசித்தபோது அது, எனக்கு பூமியில் வரவிருக்கும் பரதீஸின் முன்னனுபவமாக அமைந்தது. அங்கு பயின்ற 103 மாணவர்களில் என்னையும் சேர்த்து பத்து பேர் ஜப்பானுக்கு நியமிக்கப்பட்டனர்.
கொடுக்கப்பட்ட வேலையை உயர்வாய் மதித்தல்
1957-ஆம் வருடம் அக்டோபர் மாதம் நான் ஜப்பான் திரும்பியபோது சுமார் 860 சாட்சிகள் இருந்தனர். நான் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன்; நகோயாவிலிருந்த சகோதரர் ஆட்ரியன் தாம்ப்ஸன் இந்த ஊழியத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக எனக்கு பயிற்சி அளித்தார். எனக்கு நியமிக்கப்பட்ட வட்டாரம் ஃபியுஜி மலைக்கு அருகில் இருக்கும் ஷிமிஸுவிலிருந்து ஷிகோகு தீவு வரை இருந்தது; அதில் முக்கியமான பெரிய நகரங்களான கியோடோ, ஒசாகா, கோப், ஹிரோஷிமா போன்றவை அடங்கும்.
1961-ஆம் ஆண்டு மாவட்ட கண்காணியாக நியமிக்கப்பட்டேன். இதன் காரணமாக நான் வடக்கே பனிபொழியும் ஹொக்கைடோ தீவிலிருந்து மிதவெப்ப தீவான ஒகினாவா வரையாகவும் அதையும் கடந்து தைவான் அருகே இருக்கும் இஷிகாகி தீவுகள் வரை கிட்டத்தட்ட 3,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது.
பிறகு 1963-ஆம் வருடம் புரூக்ளின் பெத்தேலில் பத்து மாத கிலியட் பள்ளிக்கு வர அழைப்பு கிடைத்தது. அப்போது, கொடுக்கப்படும் வேலைக்கு சரியான மனநிலையைக் காட்ட வேண்டியதன் அவசியத்தை சகோதரர் நார் வலியுறுத்தினார். கழிவறைகளை சுத்தம் செய்யும் வேலையும் அலுவலகத்தில் பணி செய்வதைப்போலவே மிக முக்கியம் என்று அவர் தொடர்ந்து கூறினார். கழிவறைகள் சரியாக சுத்தம் செய்யப்படாவிட்டால் அது பெத்தேல் குடும்பம் முழுவதையும் அவர்களின் வேலைகளையும் பாதிக்கும் என குறிப்பிட்டார். பிற்பாடு ஜப்பான் பெத்தேலில் கழிவறைகளை சுத்தம் செய்வது என் வேலையின் பாகமாக இருந்தபோது அவர் சொன்ன அறிவுரைகளை நினைத்துக்கொண்டேன்.
ஜப்பானுக்கு திரும்பியபின் மறுபடியுமாக வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். சில வருடங்களுக்கு பிறகு 1966-ஆம் ஆண்டு மட்சூ என்ற நகரத்தில் விசேஷ பயனியராக சேவை செய்து வந்த ஜுன்கொ இவாசாகியை திருமணம் செய்துகொண்டேன். அச்சமயம் ஜப்பானில் கிளை அலுவலக கண்காணியாக இருந்த லாயிட் பேரி அருமையான திருமணப் பேச்சைக் கொடுத்தார். அதன் பின் ஜுன்கொ பயண வேலையில் என்னுடன் சேர்ந்துகொண்டாள்.
1968-ஆம் ஆண்டு எங்கள் வேலையில் மாற்றம் ஏற்பட்டது; டோக்கியோவில் இருந்த கிளை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பு வேலை செய்யும்படி அழைக்கப்பட்டேன். பெத்தேலில் போதுமான தங்கும் வசதி இல்லாததால் நான் டோக்கியோவின் சுமீதா டவுன்ஷிப்பிலிருந்து வந்து போய்க்கொண்டு இருந்தேன். உள்ளூர் சபையில் ஜுன்கொ விசேஷ பயனியராக சேவை செய்தாள். இச்சந்தர்ப்பத்தில் கிளை அலுவலகத்தில் அதிக வசதிகள் தேவைப்பட்டன. ஆகவே 1970-ஆம் ஆண்டு ஃபியுஜி மலைக்கு அருகில் இருக்கும் நுமாஸுவில் ஒரு இடம் வாங்கப்பட்டது. அங்கே மூன்று மாடி கட்டிடத்தில் ஃபேக்டரியும், குடியிருப்பு வசதியும் கட்டப்பட்டன. கட்டடங்கள் கட்டப்படுவதற்கு முன்பாக அந்த இடத்தில் ஏற்கெனவே இருந்த அநேக வீடுகள் ராஜ்ய ஊழிய பள்ளிக்காக பயன்படுத்தப்பட்டன; இந்தப் பள்ளியில் கண்காணிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கற்பிக்கும் பெரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது; ஜுன்கொ மாணவர்களுக்கு உணவு தயாரித்துக் கொடுத்தாள். நூற்றுக்கணக்கான சகோதரர்கள் ஊழியத்திற்காக விஷேச பயிற்சி பெற்றதைப் பார்த்தபோது ஆனந்தமாய் இருந்தது.
ஒரு நாள் மதியம் திடீரென்று ஒரு தந்தி வந்தது. என் தாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்காக போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக புல்லட் டிரெயினில் ஏறி நகோயாவிலுள்ள ஆஸ்பத்திரியை அடைந்தேன். அப்போது அம்மாவுக்கு சுயநினைவு இல்லை; நான் அந்த இரவு முழுவதும் அவர் அருகே இருந்தேன். அடுத்தநாள் விடியக்காலையில் அம்மா இறந்துவிட்டார். நான் நுமாஸுவுக்கு திரும்பி வரும்போது அவர் பட்ட வேதனைகள் எல்லாம் ஒன்றொன்றாய் என் கண் முன் வந்தன; அவருக்கு என்மீதிருந்த அளவுகடந்த அன்பையும் நினைத்துப்பார்த்தேன், என்னால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. யெகோவாவுக்கு சித்தமானால் அவரை மறுபடியும் உயிர்த்தெழுதலில் சந்திப்பேன்.
நுமாஸுவில் எங்கள் எண்ணிக்கை அதிகரித்தது; எனவே அந்த இடமும் போதவில்லை. ஆகவே 1978-ஆம் ஆண்டு எபினா நகரத்தில் 18 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு புதிய கிளையின் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்போதோ இங்கும் எல்லா இடத்திலும் ஃபேக்டரியும் குடியிருப்பு வசதிகளும் நிறைந்திருக்கின்றன. இங்கே 2,800 பேர் அமரக்கூடிய ஒரு அசெம்பிளி ஹாலும் இருக்கிறது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் 13 மாடிகள் உடைய இரண்டு குடியிருப்பு கட்டிடங்களும் பார்க்கிங் வசதியுடைய ஐந்து மாடி அலுவலக கட்டிடங்களும் கட்டி முடிக்கப்பட்டன. எங்களுடைய பெத்தேல் குடும்பத்தில் சுமார் 530 பேர் இருக்கிறோம், ஆனால் விஸ்தரிக்கப்பட்ட இடத்தில் சுமார் 900 பேருக்கு இடமிருக்கும்.
சந்தோஷப்படுவதற்கு காரணங்கள் ஒன்றா இரண்டா?
‘சிறியவன் ஆற்றல் மிகுந்த தேசமாக வளருவான்’ என்ற பைபிளின் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதைக் கண்ணால் காண்பது எனக்குக் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. (ஏசாயா 60:22, NW) 1951-ஆம் ஆண்டு என் அண்ணன் என்னிடம் “ஜப்பானில் சாட்சிகள் எவ்வளவுபேர் இருக்காங்க?” என கேட்டது இன்னும் நன்றாக நினைவிருக்கிறது.
அதற்கு “கிட்டத்தட்ட 260 பேர் இருக்கோம்” என்று நான் பதிலளித்தேன்.
“இவ்வளவுதானா?” என கிண்டலாக சொன்னார்.
அச்சமயம் நான், ‘இப்படிப்பட்ட ஷின்டோ-புத்தமத நாட்டில் எத்தனை பேரை தம்முடைய வணக்கத்திற்காக யெகோவா கூட்டிச்சேர்ப்பார் என்பதை காலம்தான் பதில் சொல்லும்’ என மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். இதற்கு யெகோவா தேவனே பதிலளித்துவிட்டார்! இன்று ஜப்பானில் பிரசங்கம் செய்யாத பகுதிகளே கிடையாது. ஜப்பானில் உண்மை வணக்கத்தாரின் எண்ணிக்கை இப்போது எவ்வளவு தெரியுமா? 3,800 சபைகளில் 2,22,000-க்கும் அதிகமான பேர் இருக்கிறோம்!
முழுநேர ஊழியத்தில் கடந்த 44 ஆண்டுகளாக செய்த சேவையில் கிடைத்த மகிழ்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. அதில் 32 வருடங்கள் என் அருமை மனைவியுடன் சேர்ந்து சேவித்திருக்கிறேன். அவற்றில் 25 ஆண்டுகள் பெத்தேலில் மொழிபெயர்ப்பு டிபார்ட்மென்டில் பணிபுரிந்தேன். 1979-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் எனக்கு ஜப்பானிய கிளையில் பிரான்ச் கமிட்டி மெம்பராக சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
உண்மை மனமுள்ள, சமாதானத்தை நேசிக்கும் ஜனங்களை யெகோவாவின் வணக்கத்திற்கு வழிநடத்துவதில் எனக்கு கிடைத்த சிறிய பங்கை பெரும் பாக்கியமாகவும் ஆசீர்வாதமாகவும் நினைக்கிறேன். ஒருகாலத்தில் மன்னர்தான் என் கடவுள், ஆனால் இன்றோ ஒரே மெய் தேவனாகிய யெகோவாவே என் கடவுள். என்னைப்போல் அநேகர் மாற்றம் செய்திருக்கின்றனர். இன்னும் அநேகர் யெகோவாவின் வெற்றிசிறக்கும் அணியில் சேர்ந்து சமாதான புதிய உலகில் முடிவில்லா வாழ்வை பெற வேண்டும் என்பதே என் ஆசை.—வெளிப்படுத்துதல் 22:17.
[அடிக்குறிப்புகள்]
a 1945-ஆம் ஆண்டு ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்டபோது, அங்கிருந்த ஒரு ஜப்பானிய சிறைச்சாலையில் தப்பிப்பிழைத்த ஓர் உண்மையுள்ள சாட்சியே அவருடைய அப்பா. விழித்தெழு! அக்டோபர் 8, 1994, பக்கங்கள் 11-15-ஐக் காண்க.
[பக்கம் 29-ன் படம்]
மன்னர் வணக்கத்தை மையமாகக் கொண்ட கல்வி
[படத்திற்கான நன்றி]
The Mainichi Newspapers
[பக்கம் 29-ன் படம்]
நியூ யார்க்கில் சகோதரர் ஃபிரான்ஸுடன்
[பக்கம் 29-ன் படம்]
என் மனைவி ஜுன்கொவுடன்
[பக்கம் 31ன் படங்கள்]
மொழிபெயர்ப்பு டிபார்ட்மென்டில் வேலை செய்கையில்