கிறிஸ்மஸ் கிறிஸ்துவை ஒதுக்கிவிட்டதா?
“கிறிஸ்மஸ் பண்டிகை சமயத்தில் வரும் கொண்டாட்டங்களை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. இயேசுவின் வாழ்க்கையோடும் போதனையோடும் ஒத்துப்பார்க்கும்போது இவையெல்லாம் முரணாக இருப்பதாய் தோன்றியது.”—மோகன்தாஸ் கே. காந்தி.
காந்தி சொன்னதை நிறைய பேர் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். ‘கிறிஸ்தவ பண்டிகையைப் பற்றி ஒரு இந்து அரசியல்வாதிக்கு என்ன தெரியும்?’ என்று அவர்கள் யோசிக்கலாம். ஆனால், கிறிஸ்மஸ் பண்டிகை உலகம்பூராவும் பரவி, எல்லா வகையான கலாச்சாரங்களையும் செல்வாக்கு செலுத்துவதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும், அந்தப் பண்டிகை எல்லா கலாச்சாரங்களிலும் கொண்டாடப்படுகிறது.
உதாரணமாக, சுமார் 14 கோடியே 50 லட்சம் ஆசிய நாட்டவர் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறார்கள், பத்து வருஷத்திற்கு முன்பு இருந்ததைவிட நான்கு கோடி பேர் அதிகம். நவீனகால கிறிஸ்மஸின் உலகப்பிரகாரமான செயல்களை, வெறித்தனமாய் பொருட்களை நிறைய வாங்கும் கொள்கையை “கொண்டாட்டங்கள்” என்று காந்தி அர்த்தப்படுத்தியதாக வைத்துக்கொள்வோம். அப்படியென்றால், பண்டிகையில் இந்த அம்சம் அதிகம் தலைவிரித்தாடுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏசியாவீக் பத்திரிகை இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஹாங்காங்கில் ஜொலிக்கும் கோலாகலமான விளக்குகள் முதல் பெய்ஜிங் ஹோட்டல் வரவேற்பறையில் காட்சியளிக்கும் உயரமான கிறிஸ்மஸ் மரங்கள் மற்றும் சிங்கப்பூரில் மின்னும் இயேசுவின் பிறப்பிடக் காட்சிகள் வரை—ஆசியாவில் கிறிஸ்மஸ் என்பது பெரும்பாலும் உலகப்பிரகாரமான ஒரு (வியாபார) நிகழ்ச்சியே.”
நவீனகால கிறிஸ்மஸ் கொண்டாட்டம் கிறிஸ்துவை ஒதுக்கிவிட்டதா? பொ.ச. நான்காம் நூற்றாண்டு முதற்கொண்டு அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 25 கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாட ரோம கத்தோலிக்க சர்ச் இந்த நாளை குறித்தது. ஆனால் சமீபத்தில் ஐக்கிய மாகாணங்களில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கிறிஸ்மஸின் மிக முக்கிய அம்சம் கிறிஸ்துவின் பிறப்பு என்பதை 33 சதவீதத்தினர் மாத்திரமே உணர்ந்தார்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஓயாத விளம்பர அலைகள், பரிசுப் பொருட்களை வாங்கவேண்டிய தொல்லைகள், மரத்தில் அலங்காரங்கள், பார்ட்டிகள் ஏற்பாடு செய்தல் மேலும் அதற்குப் போய்வருதல், வாழ்த்து மடல்களை அனுப்புதல் போன்ற காரியங்களில் மூழ்கியிருப்பதால், எப்படியோ இயேசுவை மறந்துவிட்டிருப்பதைப் போல் சிலசமயங்களில் நீங்கள் உணருகிறீர்களா?
இயேசுவின் பிறப்பிட காட்சியை சித்தரித்துக் காட்டுவதே கிறிஸ்துவை கிறிஸ்மஸில் மீண்டும் கொண்டுவருவதற்கு ஒருவழி என பலர் நினைக்கின்றனர். நீங்கள் ஒருவேளை இப்படிப்பட்ட படங்களை பார்த்திருக்கலாம், அவற்றில் மரியாளும் யோசேப்பும் மேய்ப்பர்கள் சிலரும், ‘மூன்று வானசாஸ்திரிகளும்’ அல்லது ‘மூன்று ராஜாக்களும்,’ மாடோ கழுதையோ போன்ற விலங்குகளும், பார்வையாளர்கள் சிலரும் குழந்தை இயேசுவை சூழ்ந்து மாட்டுத் தொழுவத்தில் இருப்பதுபோல் சித்தரிக்கப்பட்டிருக்கும். கிறிஸ்மஸின் உண்மையான அர்த்தத்தை மக்களுக்கு நினைப்பூட்ட இப்படிப்பட்ட சித்தரிப்புகள் உதவுமென பொதுவாக நம்பப்படுகிறது. யூ.எஸ். கேத்தலிக் பத்திரிகை சொல்கிறபடி, “எந்தவொரு சுவிசேஷமும் சொல்வதைவிட [இயேசுவின்] பிறப்பிடத்தைப் பற்றிய காட்சிகள் நன்கு சித்தரித்துக் காட்டுகின்றன, இருப்பினும் இந்த வர்ணனைகள் சரித்திரப்பூர்வமற்ற சம்பவத்தையே வலியுறுத்திக் காட்டுகின்றன.”
ஆனால், பைபிளின் சுவிசேஷ பதிவுகளில் உள்ள விவரங்கள் சரித்திரப்பூர்வமற்றவை என இயேசுவின் பிறப்பிடத்தைப் பற்றிய காட்சி எப்படி தெரிவிக்கும்? வேலைப்பாடுமிக்க சிறிய சிலைகள் கிறிஸ்துவின் பிறப்புக்கு புராணக் கதை அல்லது கட்டுக்கதை போன்ற ஒரு சூழலையே ஏற்படுத்துகிறது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். 13-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்துறவி ஒருவரால் முதலாவது பிரபலமாக்கப்பட்ட இயேசுவின் பிறப்பிடத்தைப் பற்றிய காட்சி ஒருகாலத்தில் பகட்டின்றி இருந்தது. இன்றோ, இந்தப் பண்டிகையோடு சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்களைப் போலவே, இயேசுவின் பிறப்பிடத்தைப் பற்றிய காட்சிகளும் பெரும் வியாபாராமாகிவிட்டன. இத்தாலியிலுள்ள நேப்பிள்ஸில், பிறப்பிடக் காட்சிகளை அல்லது பிரெஸிப்பியை வர்ணிக்கும் உருவங்களை வரிசை வரிசையான கடைகள் வருடம் முழுக்க அமோக விற்பனை செய்கின்றன. அவற்றில் மிகவும் பிரபலமான உருவங்கள் சில, சுவிசேஷ விவரப்பதிவிலுள்ள கதாபாத்திரங்களை அல்ல, இளவரசி டயானா, அன்னை தெரசா, ஆடை வடிவமைப்பாளர் ஜானி வெர்ஸாச்சே போன்ற நவீனகால புகழ்பெற்ற ஆட்களையே சித்தரித்துக் காட்டுகின்றன. பிற இடங்களில், பிரெஸிப்பி சாக்லேட்டாலும் மாவுப் பொருட்களாலும் கடற்சிப்பிகளாலும் தயாரிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட காட்சிகளில் சரித்திரத்தைப் பார்ப்பது ஏன் கடினம் என்பதை நீங்களே புரிந்துகொள்ளலாம்.
அப்படியானால், எந்தவொரு சுவிசேஷமும் சொல்வதைவிட ‘பிறப்பிடத்தைப் பற்றிய இந்த வர்ணனைகள் எப்படி நன்கு சித்தரித்துக் காட்ட முடியும்’? சுவிசேஷ விவரப்பதிவுகள் உண்மையிலேயே சரித்திரப்பூர்வமற்றவையா? இயேசு உண்மையிலேயே வாழ்ந்த சரித்திர புருஷர் என்பதை கல்நெஞ்சமுள்ள சந்தேகவாதிகளும்கூட ஒத்துக்கொள்ள வேண்டும். ஆகையால், ஒருகாலத்தில் அவர் உண்மையிலேயே ஒரு குழந்தையாகவும், புவியியல் ரீதியில் உண்மையிலேயே இருந்த ஒரு இடத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். பிறப்பிடத்தைப் பற்றிய காட்சியை மோலோட்டமாய் பார்ப்பதைவிட அவருடைய பிறப்போடு சம்பந்தப்பட்ட சம்பவங்களின் காட்சியைப் பார்ப்பதற்கு ஒரு சிறந்த வழி இருக்க வேண்டும்!
சொல்லப்போனால், அப்படிப்பட்ட ஒரு வழி இருக்கிறது. இயேசுவின் பிறப்பைப் பற்றிய விவரங்களை இரண்டு சரித்திராசிரியர்கள் தனித்தனியே எழுதினார்கள். கிறிஸ்மஸ் சமயத்தில் கிறிஸ்து பெரும்பாலும் அசட்டை செய்யப்படுவதாக நினைத்தால், ஏன் இந்த விவரப்பதிவுகளை நீங்கள் ஆராய்ந்து பார்க்கக்கூடாது? கட்டுக் கதைகளையோ புராணக் கதைகளையோ அல்ல, மனதை கொள்ளைகொள்ளும் கதையை—கிறிஸ்துவின் பிறப்பை பற்றிய உண்மையான கதையை—அவற்றில் நீங்கள் காணலாம்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
பக்கங்கள் 3-6, 8, 9-ல் உள்ள பார்டர்: Fifty Years of Soviet Art