குடும்பத்தின் ஒளிவிளக்கு
“அமெரிக்க குடும்பங்களில் ‘பூகம்பம்’! விவாகரத்து, கல்யாணமாகாமல் குழந்தைகள் பெறுவது, மனைவி பிள்ளைகளை துன்புறுத்துவது போன்றவை அதிகரிக்கும் வேகத்தைப் பார்த்தால் இதை வேறெப்படி விவரிப்பது?”
டிவி நிருபரான டாம் ப்ரோக்கா சொன்ன இவ்வார்த்தைகள், கிட்டத்தட்ட எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். சரி, எந்த விதத்தில் குடும்பங்கள் அபாயத்தில் உள்ளன?
ஒவ்வொரு குடும்பமும் சமுதாயம் எனும் கட்டடத்தை எழுப்பும் கற்கள். ஆகவே குடும்பத்திற்கு ஏதாவது ஒன்றென்றால் சமுதாயமே ஆட்டங்கண்டுவிடும். அதுமட்டுமல்ல, பணத்தாலும் குணத்தாலும் குழந்தை குட்டிகளுக்கு ஆதரவளித்து அடைக்கலம் தருவதும் குடும்பமே. அதுவே அவர்கள் அனுபவத்தைப் பயிலும் பள்ளி. சொல்லப்போனால், வாழ்க்கையில் படிக்க வேண்டிய முக்கிய பாடங்களை அங்குதான் கற்றுக்கொள்கிறார்கள். குடும்பத்தில் ஏதாவது பிரச்சினையென்றால் பிள்ளைகள் எப்படிப்பட்ட பாடத்தைக் கற்றுக்கொள்வார்கள்? அவர்களுக்கு அடைக்கலம் எங்கே? எப்படிப்பட்டவர்களாய் வளருவார்கள்?
குடும்பம் அபாய நிலையைத் தாண்ட ஏதாவது வழி இருக்கிறதா? ஓ, இருக்கிறதே. குடும்பத்திற்கு அடிக்கல்லை நாட்டியவர் கடவுள். (ஆதியாகமம் 1:27, 28) குடும்பத்திற்கு தேவையான இன்றியமையாத ஆலோசனைகளை அவர் தமது வார்த்தையாகிய பைபிளில் கொடுத்திருக்கிறார். (கொலோசெயர் 3:18-21) சமுதாயத்தை சீரமைக்க நமக்கேது சக்தி, ஆனால் நம் குடும்பத்தில் பைபிள் ஆலோசனையைப் பின்பற்றலாம் அல்லவா? இதைச் செய்த சிலருக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. நீங்களே படித்துப் பாருங்களேன்.
விவாகரத்தைத் தவிர்த்தல்
அநேக நாடுகளில் சுமார் 50 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. மானிட உறவுக்கு ஏற்பட்டுள்ள படுதோல்வி! இதனால் சிலர் ஒண்டிக்கட்டையாக பிள்ளைகளை வளர்த்து சாதனை புரிகின்றனர் என்பதை மறுக்க முடியாதுதான். அதேசமயம் கணவனும் மனைவியும் பிணக்குகளை தீர்த்துக்கொண்டு சுமுகமாக வாழ்வது எவ்வளவோ மேல் என்பதை பெரும்பாலானவர்கள் ஒத்துக்கொள்ளத்தான் செய்கிறார்கள்.
சாலமன் தீவுகளில் வசிக்கும் ஒரு தம்பதியின் மணவாழ்வு ஊசலாடிக்கொண்டிருந்த சமயம் அது. அந்தக் கணவன் ஒரு தலைவரின் மகன். எதற்கெடுத்தாலும் அவருடைய கைதான் பேசும். அதோடு இன்னும் நிறைய கெட்ட பழக்கங்கள் வேறு. மனைவி பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. தற்கொலையையும் முயன்று பார்த்தாள். ஒருநாள் கணவன் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்டார். எது தவறு என தெரிந்துவைத்திருந்தால் மட்டும் கடவுளைப் பிரியப்படுத்திவிட முடியாது, ‘தீமையை வெறுக்கவும் வேண்டும்’ என கற்றுக்கொண்டார். (சங்கீதம் 97:10) அப்படியென்றால் பொய் சொல்வது, திருடுவது, குடித்து வெறித்து அடிதடியில் இறங்குவது போன்றவற்றை வெறுத்து ஒதுக்க வேண்டும். கற்றதைக் காற்றில் பறக்கவிடாமல், மனதில் பதியவைத்து, அதன்படி செய்தார். அவரது கெட்ட பழக்கவழக்கங்களும் கோபமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்தன. மனைவிக்குக் கேட்கவா வேண்டும், ஒரே ஆச்சரியம். கடவுளது வார்த்தையின் உதவியால், ஊசலாடிக்கொண்டிருந்த அவர்களது மணவாழ்வு களைகட்ட ஆரம்பித்தது.
தென் ஆப்பிரிக்காவில் ஒரு யெகோவாவின் சாட்சியினுடைய முதலாளி அம்மாவும் அவரது கணவரும் விவாகரத்து செய்துகொள்ள முடிவெடுத்திருந்தனர். இதை அறிந்த சாட்சி, கடவுள் திருமணத்தை எவ்வாறு கருதுகிறார் என்பது பற்றி அவரோடு பேசி, குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தைக் காண்பித்தார். யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், திருமணத்தோடு சம்பந்தப்பட்ட பைபிள் நியமங்களை எடுத்துக் காட்டுகிறது. முக்கியமாய் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள பைபிள் எவ்வாறு தம்பதிகளுக்கு உதவுகிறது என்பதை சிறப்பித்துக் காட்டுகிறது. முதலாளி அம்மாவும் அவரது கணவரும் அந்தப் புத்தகத்தைப் படித்தார்கள். அதிலுள்ள பைபிள் ஆலோசனைகளைப் பின்பற்ற மனதார முயற்சி செய்தார்கள். விவாகரத்து செய்யும் எண்ணத்தையும் கைவிட்டுவிட்டார்கள். பைபிள் நியமங்களைப் பொருத்தியதால் பாதுகாக்கப்பட்ட திருமணங்களில் இதுவும் ஒன்று.
வெவ்வேறு மதம்
கணவனும் மனைவியும் வெவ்வேறு மதத்தினராய் இருந்தால் என்ன செய்வது? ‘கர்த்தருக்குட்பட்டவரையே’ திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பைபிள் கிறிஸ்தவர்களுக்கு எதார்த்தமாய் ஆலோசனை வழங்குகிறது. (1 கொரிந்தியர் 7:39) சிலசமயங்களில் கணவனோ மனைவியோ மதம் மாறலாம். அதுவே அவர்கள் மணவாழ்வுக்கு முற்றுப்புள்ளியாகிவிட வேண்டுமா? நிச்சயமாக இல்லை.
போட்ஸ்வானாவில் ஒரு பெண் சமீபத்தில் யெகோவாவின் சாட்சியானாள். அது அவளை எப்படி மாற்றியிருக்கிறது என கேட்டபோது தன் கணவரையே அதற்குப் பதிலளிக்கச் சொன்னாள். அவர் சொன்னார்: “என் மனைவி யெகோவாவின் சாட்சியாக ஆனதிலிருந்து ஆளே அடியோடு மாறிட்டா. எத்தனையோ விஷயத்துல நல்ல நல்ல மாற்றம் செய்திருக்கா. எப்போதும் இல்லாத ஒரு அமைதி, புத்திசாலித்தனம். சிகரெட் பிடிக்கிறதகூட விட்டுற அளவுக்கு மனவுறுதி வந்துடுச்சு. என்னாலதான் இந்தப் பழக்கத்த இன்னும் விட முடியல. பிள்ளைங்ககிட்டயும் என்கிட்டயும் ரொம்ப அன்பா பாசமா நடந்துக்குறா, மத்தவங்ககிட்டயும்தான். இப்பவெல்லாம் சுள்ளுன்னு கோபம் வர்றதில்ல. முக்கியமா பிள்ளைங்ககிட்ட எரிஞ்சுவிழறதில்ல. மத்தவங்களும் நல்லா வாழனுங்கறதுக்காக அக்கறையா அவங்ககிட்டயும் போய் பேசி உதவி செய்யறா. நான்கூட ரொம்ப மாறிட்டேன். இதுக்கு காரணமும் அவதான்.” இவர்களது மணவாழ்வில் பைபிள் நியமங்கள் எவ்வளவு நல்ல பலன்களைத் தந்திருக்கின்றன! சாட்சியாக இருக்கும் தங்கள் துணைவரைப் பற்றி அநேகர் இதேவிதமாய் சொல்லியிருக்கின்றனர்.
அப்பா பொறுப்பை உணராதபோது
குடும்பம் பலப்பட்டிருக்க அப்பா பிள்ளைகளுக்கு இடையேயுள்ள உறவு உறுதியாயிருக்க வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு ஆலோசனை வழங்கினார்: “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.” (எபேசியர் 6:4) அநேக சமூக பிரச்சினைகளுக்குக் காரணம், அப்பாமார்கள் கடைமையைச் செய்ய தவறுவதே என்கிறது த வில்சன் க்வார்டர்லி என்ற பத்திரிகை. அது சொல்கிறது: “1960-லிருந்து 1990 வரை, பெற்ற தகப்பனோடு வாழாத பிள்ளைகளின் எண்ணிக்கை இருமடங்கானது . . . அமெரிக்க சமுதாயத்தை ஆட்டிப்படைக்கும் மிகப் பெரிய பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம், தகப்பன்மார் தங்கள் கடமையை நிறைவேற்றாததுதான்.”
அப்படியென்றால் தகப்பன் வளர்க்காத பிள்ளைகள் உருப்படுவதில்லையா? அப்படிச் சொல்ல முடியாது. பூர்வகாலத்து சங்கீதக்காரன் சொன்னார்: “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.” (சங்கீதம் 27:10) தாய்லாந்தில் வசிக்கும் ஒன்பது வயது சிறுவனுக்கு இந்த உண்மை புரிந்தது. குழந்தையாய் இருக்கும்போதே அம்மாவைப் பறிகொடுத்தான். அப்பா இவனை சுமையாக கருதி பாட்டியிடம் விட்டுவிட்டார். புறக்கணிக்கப்பட்ட உணர்வு, பாசத்திற்கான ஏக்கம் என எல்லாம் சேர்ந்து அவனை முரடனாக்கியது. அடாவடியன் என்ற பெயர் வாங்கினான். பாட்டியையே பயமுறுத்தினான். முழுநேர ஊழியம் செய்யும் இரண்டு யெகோவாவின் சாட்சிகள் ஒருமுறை இவனை தங்கள் வீட்டிற்கு அழைத்தனர். ஏனென்றால் அங்கிருந்த ராஜ்ய மன்றத்திற்கு வெளியே இவன் நிற்பதை அவர்கள் அடிக்கடி பார்த்திருந்தனர்.
கடவுள், அப்பாவைப்போல் தம் பிள்ளைகளிடம் மிகவும் பாசமாக இருக்கிறார் என அவனிடம் சொன்னார்கள். உண்மையுள்ள மனிதர்களை கடவுள் இதே பூமியில் பரதீஸில், அதாவது பூங்காவன சூழலில் வாழவைக்கப் போவதைப் பற்றியும் சொன்னார்கள். (வெளிப்படுத்துதல் 21:3, 4) இதெல்லாம் கேட்க கேட்க இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை அவனுக்கு வந்தது. அதனால் தினந்தினம் வர ஆரம்பித்தான். உண்மையிலேயே கடவுள் அவனுக்கு அப்பாவைப்போல் இருக்க வேண்டுமென்றால் அடாவடித்தனத்திற்கு முழுக்கு போடவேண்டும் என சாட்சிகள் அவனிடம் சொன்னார்கள். “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” என ரோமர்களுக்கு பவுல் எழுதியதை அடிப்படையாக வைத்து அப்படிச் சொன்னார்கள். (ரோமர் 12:18) பாட்டியையும் அன்பாக நடத்தச் சொன்னார்கள். (1 தீமோத்தேயு 5:1, 2) விரைவிலேயே பைபிள் நியமங்களின்படி நடக்க ஆரம்பித்தான். பிறகென்ன, பாட்டியும் பேரனும் சந்தோஷமாய் வாழ்ந்தார்கள். (கலாத்தியர் 5:22, 23) சுற்றுவட்டாரத்தில் இருந்தவர்களால் தங்கள் கண்களையே நம்பமுடியவில்லை. இவன் செய்த மாற்றத்தைப் பார்த்து, தங்கள் பிள்ளைகளையும் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்கவைக்க முடிவுசெய்தார்கள்!
சமாதானத்தைத் தேடி
“பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள். தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது” என அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசெயர்களுக்கு எழுதினார். (கொலோசெயர் 3:14, 15) உள்ளப்பூர்வமான அன்போடு சமாதானத்தை நாடும்போது, குடும்பம் பின்னிப் பிணைக்கப்படும். நெடுநாளாய் பிரிந்திருக்கும் குடும்ப அங்கத்தினர்களை இணைக்கும் சக்தியும் அதற்குண்டு. அல்பேனியாவில் வசிக்கும் ரூக்கியா என்ற பெண்மணி, ஏதோ குடும்பத் தகராறால் 17 வருடங்களுக்கும் அதிகமாக தன் தம்பியோடு பேசவேயில்லை. அவர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்தபோது, கடவுளது ஊழியர்கள் ஒவ்வொருவரும் சமாதானத்தையே நாடவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டார். ‘சமாதானத்தைத் தேடி, அதைப்பின்தொடர வேண்டும்’ என்கிறது பைபிள்.—1 பேதுரு 3:11.
தம்பியோடு சமரசமாக வேண்டுமென்பதை ரூக்கியா உணர்ந்தார். ராத்திரி முழுக்க ஜெபம் செய்துவிட்டு, காலையில் தம்பி வீட்டை நோக்கி நடந்தாள். இனம்தெரியாத பயத்தால் மனம் பக்பக்கென்றது. கதவைத் திறந்த தம்பி மகள், “நீங்களா! இங்க எப்படி?” என்றாள் ஆச்சரியம் பொங்க. அவள் அப்பாவோடு பேசி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளவே வந்திருப்பதாய் அமைதியாக சொல்லிவிட்டு, அவரைக் கூப்பிட சொன்னார் ரூக்கியா. ஏன் சமாதானத்தை நாடினார்? கடவுளது விருப்பம் அதுதான் என புரிந்துகொண்டதாலேயே. தம்பியின் கோபமும் தணிந்தது. அப்புறம் என்ன, ஒருவரையொருவர் கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். பைபிள் நியமங்கள் பிரிந்தவர்களை இணைத்தது.
கெட்ட கூட்டுறவு
செழித்தோங்கும் குடும்பங்களின் 7 பழக்கங்கள் என்ற ஆங்கில புத்தகத்தின்படி, “இன்று சாதாரணமாக ஒரு பிள்ளை தினமும் ஏழு மணிநேரம் டிவி பார்க்கிறது. ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் 8,000 கொலைகளுக்கும் 1,00,000 வன்முறைக் காட்சிகளுக்கும் மேலாக பார்த்துவிடுகிறது.” இது பிள்ளையை எப்படி பாதிக்கிறது? “நிபுணர்கள்” அனைவரும் ஒரே கருத்தை ஆமோதிப்பதில்லை, ஆனால் கெட்ட கூட்டுறவை பைபிள் வன்மையாக கண்டிக்கிறது. உதாரணத்திற்கு, ‘மூடருக்குத் தோழன் நாசமடைவான்’ என சொல்கிறது. (நீதிமொழிகள் 13:20) “கெட்ட கூட்டுறவு நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” என்றும் சொல்கிறது. (1 கொரிந்தியர் 15:33, NW) நேருக்கு நேராக இருந்தாலும் சரி தொலைக்காட்சி வாயிலாக இருந்தாலும் சரி கெட்ட கூட்டுறவுகளைப் பற்றிய இந்த நியமத்தை விவேகத்தோடு பொருத்தினால் குடும்ப வாழ்வு செழித்தோங்கும்.
லக்ஸம்பர்க்கிலுள்ள ஒரு பெண் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்துவந்தார். அவருக்கு ஏழு வயதிலும் எட்டு வயதிலும் இரண்டு மகள்கள். சாயங்காலம் ஆனால் போதும் கூச்சலும் ரகளையும் தாங்க முடியவில்லை என ஒருமுறை அவர் சாட்சியிடம் புலம்பினார். சாயங்காலங்களில் பொதுவாக பிள்ளைகள் என்ன செய்வார்கள் என சாட்சி கேட்டார். தான் சமையலறையை சுத்தம் செய்யும்போது அவர்கள் டிவி பார்ப்பார்கள் என அந்தப் பெண் சொன்னார். என்ன நிகழ்ச்சிகளைப் பார்ப்பார்கள்? “அது ஒண்ணுமில்ல, சும்மா கார்ட்டூன்தான்” என்றார் அவர். கார்ட்டூனில்கூட வன்முறை ஜாஸ்தி என விளக்கியபோது, இனி அதையும் கண்காணிப்பதாக சொன்னார்.
மறுநாளோ, தன் மகள்கள் பார்த்துக்கொண்டிருந்த கார்ட்டூனைப் பார்த்து தான் அதிர்ச்சியடைந்ததாக சொன்னார். அதில், விண்வெளியிலிருந்து வந்த, கற்பனைக் கதாபாத்திரங்களான பூதங்கள் கண்மண் தெரியாமல் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிப்போடுகின்றன. யெகோவா வன்முறையை வெறுக்கிறார் என்றும் அப்படிப்பட்ட கொடூர செயல்களை நாம் பார்ப்பதையும் அவர் விரும்புவதில்லை என்றும் மகள்களிடம் விளக்கினார். (சங்கீதம் 11:5) யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்காக அந்தச் சிறுமிகளும் டிவி பார்ப்பதை விட்டுவிட்டு டிராயிங் அல்லது பெயின்டிங் செய்வதாக ஒப்புக்கொண்டனர். உடனடியாக கிடைத்த பலன்? அவர்களது முரட்டுத்தனம் மறைந்தது, குடும்ப சூழலும் முன்னேற்றமடைந்தது.
பைபிள் நியமங்கள் எவ்வாறு குடும்ப வாழ்வை முன்னேற்றுவிக்கின்றன என்பதற்கு இவை சில உதாரணங்கள். எந்தவித சூழ்நிலைகளாய் இருந்தாலும் சரி, பைபிளில் ஆலோசனை ரெடியாக இருக்கிறது. அது நம்பத்தகுந்தது, நம்மீது நன்மைக்கேதுவான பலமான செல்வாக்கு செலுத்துகிறது. (எபிரெயர் 4:12) மக்கள் பைபிளைப் படித்து, அதன்படி நடக்க மனதார முயற்சி செய்யும்போது குடும்ப உறவுகள் பலப்படுகின்றன, நல்ல குணங்கள் வளர்கின்றன, தவறுகள் தவிர்க்கப்படுகின்றன. கடவுளது ஆலோசனையை ஒரேவொரு குடும்ப அங்கத்தினர் கடைப்பிடித்தாலும் நிலைமை எவ்வளவோ முன்னேறும். வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் சங்கீதக்காரனைப் போலவே நாம் கடவுளுடைய வார்த்தையை கருதவேண்டும். அவர் எழுதினார்: “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.”—சங்கீதம் 119:105.
[பக்கம் 5-ன் படம்]
பைபிள் நியமங்களைப் பொருத்தியதால் குடும்பப் பிரச்சினைகள் தீர்ந்துள்ளன