கடவுள் காட்டும் ஜீவ வழியைப் பின்பற்ற திடமனதாயிருத்தல்
“கடவுள் காட்டும் ஜீவ வழி.” கடவுளை சேவிப்போருக்கு இந்த மாநாடுகள் வாரிவழங்கிய விஷயங்கள் எண்ணிலடங்கா. “போதனையை, உற்சாகத்தை, அறிவொளியை பெற மிகச் சிறந்த சமயம்” என்று இந்த மாநாட்டை வர்ணித்தார் பிரதிநிதி ஒருவர்.
“அனுபவிக்கவும், சிந்திக்கவும், எடுத்துக்கொள்ளவும் நிறைய விஷயங்கள் இருந்தன.” இப்படி சொன்னது மற்றொரு பிரதிநிதி. இப்பொழுது நாம் அந்த நிகழ்ச்சிநிரலை மனத்திரையில் சற்று ஓடவிடலாமா?
இயேசு கிறிஸ்து—அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமானவர்
மாநாட்டின் முதல் நாள் பொருள் இதுவே. (யோவான் 14:6) நாம் மாநாட்டில் ஒன்றாக கூடிவந்திருப்பதன் நோக்கத்தை முதல் பேச்சு விளக்கியது. அதாவது, வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழியை, கடவுள் காட்டும் ஜீவ வழியைப் பற்றி கூடுதலாக போதிக்கப்படுவதற்கு வந்திருக்கும் நோக்கத்தை விளக்கியது. அவருடைய வழிகளில் நடப்பது எப்படி என்பதை யெகோவா தம்முடைய மக்களுக்கு போதிக்கிறார். எவற்றின் வாயிலாக? பைபிள், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை,” பரிசுத்த ஆவி ஆகியவற்றின் வாயிலாக. (மத்தேயு 24:45-47, NW; லூக்கா 4:1; 2 தீமோத்தேயு 3:16) இந்த சர்வலோக உன்னத அதிகாரியால் போதிக்கப்படுவது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
அந்த நாளின் பொருளுக்கேற்ப முக்கிய பேச்சின் தலைப்பும் அமைந்திருந்தது. “கிறிஸ்துவின் மீட்கும்பொருள்—இரட்சிப்புக்கான கடவுளின் வழி.” கடவுள் காட்டும் ஜீவ வழிக்கு கீழ்ப்படியும் வண்ணமாக, யெகோவாவின் நோக்கத்தில் இயேசு கிறிஸ்து வகிக்கும் பாகத்தை அங்கீகரிப்பது இன்றியமையாதது. அந்தப் பேச்சாளர் சொன்னார்: “இயேசு கிறிஸ்துவின் கிரயபலியின்றி, எந்த மனிதனும், அவனுடைய நம்பிக்கைகளோ கிரியைகளோ எதுவாக இருந்தாலும்சரி, கடவுளிடமிருந்து நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள முடியாது.” அதன் பின்பு யோவான் 3:16-ஐ மேற்கோள் காண்பித்தார், அது குறிப்பிடுகிறது: “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” கிறிஸ்துவின் கிரயபலியில் விசுவாசத்தைக் காண்பிப்பது சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை பெறுவதை அர்த்தப்படுத்துகிறது. யெகோவாவுக்கு நம்முடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுப்பதையும் அதை தண்ணீர் முழுக்காட்டுதலால் அடையாளப்படுத்திக் காண்பிப்பதையும் இயேசு கிறிஸ்து வைத்த முன்மாதிரிக்கேற்ப வாழ்வதையும் இது உட்படுத்துகிறது.—1 பேதுரு 2:21.
“அன்பின் வழி ஒருபோதும் தோல்வியுறாது” என்று தலைப்பிடப்பட்ட பேச்சுடன் ஆரம்பமானது பிற்பகல் நிகழ்ச்சிநிரல். 1 கொரிந்தியர் 13:4-8-ல் பவுல் உந்துவிக்கும் அன்பின் வர்ணனையை வசனத்திற்கு வசனம் கலந்தாலோசித்தது. சுயதியாக அன்பு கிறிஸ்தவத்தை அடையாளங்காட்டுகிற அம்சம் என்பதும், கடவுள்மீதும் அயலார்மீதும் காட்டுகிற அன்பு யெகோவாவால் அங்கீகரிக்கப்பட்ட வணக்கத்தின் முக்கிய அம்சங்கள் என்பதும் அரங்கத்தில் அமர்ந்திருந்தோருக்கு நினைப்பூட்டப்பட்டது.
அடுத்து வந்தது மூன்று-பாக தொடர்பேச்சு. “பெற்றோரே—உங்களுடைய பிள்ளைகளின் மனதில் கடவுளின் வழியைப் பதியவையுங்கள்” என்பதே அதன் தலைப்பு. பைபிளை வாசிப்பதிலும் படிப்பதிலும் பெற்றோர் நல்ல முன்மாதிரி வைத்து, கடவுளை சேவிப்பதற்கு தங்களுடைய பிள்ளைகளுக்கு உதவலாம். குடும்பத்தின் தேவைகளுக்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட ஒழுங்கான குடும்ப படிப்பின் வாயிலாக தங்களுடைய பிள்ளைகளின் மனதில் சத்தியத்தைப் பதிய வைக்கலாம். சபை நடவடிக்கைகளிலும் வெளி ஊழியத்திலும் ஈடுபட பிள்ளைகளுக்கு உதவுவதும் முக்கியம். இந்தப் பொல்லாத உலகத்தில் கடவுள்-பயமுள்ள பிள்ளைகளை வளர்ப்பது சவாலாக இருந்தாலும், அப்படிச் செய்வது அநேக பலன்களைத் தருகிறது.
தொடர் பேச்சுக்கு அடுத்த பேச்சு: “மதிப்புள்ள உபயோகத்திற்காக யெகோவா உங்களை உருப்படுத்த அனுமதியுங்கள்.” குயவன் ஒரு களிமண் பானையை வடிவமைப்பதைப் போலவே, கடவுள் தம்மை சேவிக்க விரும்புவோரை வடிவமைக்கிறார். (ரோமர் 9:20, 21) தம்முடைய வார்த்தை மற்றும் அமைப்பிலிருந்து தரும் அறிவுரை வாயிலாக இதைச் செய்கிறார். நம்மை மனப்பூர்வமாக அளித்து, வாய்ப்புகளுக்கு இடமளித்து, அவர் நம்முடைய நடைகளை நடத்துவதற்கு இருதயப்பூர்வமாக அனுமதிப்போமாகில், நம் திறமைகளை முழுமையாக பயன்படுத்த யெகோவா நமக்கு உதவி செய்வார்.
அடுத்து, நிகழ்ச்சிநிரலின் நெகிழ்ச்சியூட்டும் அம்சம் வந்தது—“மிஷனரி பிராந்தியத்தில் சேவை.” தற்பொழுது உலகம் முழுவதும் 148 நாடுகளில் 2,390 கிறிஸ்தவ ஊழியர்கள் மிஷனரி சேவை செய்து வருகிறார்கள். இவர்கள் உண்மைப் பற்றுறுதிக்கும் வைராக்கியத்திற்கும் மிகச் சிறந்த முன்மாதிரிகளாய் திகழ்கிறார்கள். அயல்நாடுகளில் சேவைசெய்ய கிடைத்த சிலாக்கியத்திற்காக ஆழ்ந்த நன்றியுள்ளவர்களாயும் இருக்கிறார்கள். சர்வதேச மாநாடுகளில் கொடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சிநிரல் பாகத்தின்போது, மிஷனரி வாழ்க்கையின் சவால்களையும் சந்தோஷங்களையும் பற்றி மிஷனரிகள் தெரிவித்தார்கள்.
முதல் நாளின் இறுதிப் பேச்சு, “மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா?” என்ற தலைப்பில் இருந்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தக் கேள்வி மனிதவர்க்கத்தை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. எல்லா சமுதாயத்தினரும் இந்தப் பொருளுடன் மல்லுக்கட்டியிருக்கிறார்கள். அனுமானிக்கப்பட்ட பதில்களுக்கு அளவே கிடையாது. மக்களுடைய கலாச்சாரங்களும் மதங்களும் வித்தியாசப்படுவது போலவே அவர்களுடைய பதில்களும் வித்தியாசப்படுகின்றன. ஆயினும், சத்தியத்தை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் இறக்கும்போது என்ன நேரிடுகிறது? என்ற 32-பக்க வர்ண சிற்றேட்டை வெளியிட்டார் பேச்சாளர். ஆத்துமா அழியாமையைப் பற்றிய போதனையின் வேர்களை இந்தச் சிற்றேடு காட்டுகிறது. அதோடு, இன்று உலகிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து மதங்களிலும் எவ்வாறு இது ஊடுருவியது என்பதையும் காட்டுகிறது. ஆத்துமாவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது, நாம் ஏன் மரிக்கிறோம், மரணத்தில் நமக்கு என்ன ஏற்படுகிறது போன்றவற்றை பளிங்கு போல் தெளிவாக, மனதைக் கவரும் விதத்தில் இது அலசியாராய்கிறது. இறந்தோருக்கும் இருப்போருக்கும் என்ன நம்பிக்கை என்பதையும் இந்தச் சிற்றேடு விளக்குகிறது. சத்தியத்தை நாடித்தேடுவோருக்கு இந்தப் பிரசுரம் என்னே ஓர் ஆசீர்வாதம்!
உங்கள் நடக்கையைக் குறித்து கவனமாக இருங்கள்
இரண்டாம் நாள் மாநாட்டிற்கு இது என்னே ஒரு பொருத்தமான தலைப்பு! (எபேசியர் 5:15) பிரசங்கிக்கும் மற்றும் சீஷராக்கும் வேலையின்மீது காலை நிகழ்ச்சி கவனத்தை ஒருமுகப்படுத்தியது. தினவாக்கியத்தை கலந்தாலோசித்தப் பிறகு, “ஜீவ வழியில் சேர்ந்துகொள்ளும்படி மக்களுக்கு உதவுதல்” என்ற பேச்சுடன் இந்த நிகழ்ச்சிநிரல் தொடங்கியது. சத்தியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது சிலாக்கியம், அது ஒரு கடமை என்பதை உணர்ந்து, இந்த அவசரமான வேலையை செய்துமுடிப்பதில் நம்பிக்கையான மனநிலையை வைத்திருப்பது முக்கியம். பொ.ச. முதல் நூற்றாண்டில், பெரும்பாலான மக்கள் கடவுளுடைய வார்த்தையை புறக்கணித்தனர். ஆனால் எதிர்ப்பின் மத்தியிலும், ‘நித்திய ஜீவனுக்காக சரியான மனச்சாய்வை காண்பித்து விசுவாசிகளானவர்களும்’ இருந்தார்கள். (அப்போஸ்தலர் 13:48, 50, NW; 14:1-5) இன்றும் இதே சூழ்நிலை நிலவுகிறது. பைபிள் சத்தியங்களை அநேகர் புறக்கணிக்கிறபோதிலும், நன்கு பிரதிபலிக்கிற மக்களை நாம் தொடர்ந்து தேடுகிறோம்.—மத்தேயு 10:11-13.
ஜீவனை காக்கும் செய்தியை மற்றவர்களிடம் கொண்டுசெல்கையில் நாம் எதிர்ப்படும் சவால்களை அடுத்த பேச்சு எடுத்துரைத்தது. இப்பொழுது மக்களை வீடுகளில் பார்ப்பது அதிக கஷ்டமாக இருப்பதால், ராஜ்ய செய்தி அநேகரை சென்றெட்ட வேண்டுமாகில் நாம் சந்துபொந்தெல்லாம் சென்று முழுமையாக செய்ய வேண்டும், திறமையுள்ளவர்களாயும் இருக்க வேண்டும். அநேக நாடுகளில், தொலைபேசியின் வாயிலாக சாட்சிகொடுத்தல், வியாபார பிராந்தியங்களில் பிரசங்கித்தல் போன்ற முறைகளைக் கையாண்டு நற்செய்தியைப் பிரசங்கிப்போர் அமோக விளைச்சலை அறுவடை செய்கிறார்கள். இவ்வாறாக, மற்றபடி தொடர்புகொள்ள முடியாதவர்களை சென்றெட்டுகிறார்கள்.
“கிறிஸ்து கட்டளையிட்ட யாவற்றையும் சீஷர்களுக்குப் போதித்தல்” என்ற பேச்சு, நம்முடைய ஊழியத்தில் திறமைமிக்கவர்களாய் இருப்பதன் முக்கியத்துவத்தின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தியது. மற்றவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும்போதும் சபை கூட்டங்களில் பெற்ற மிகச் சிறந்த பயிற்றுவிப்பை பொருத்தி பயன்படுத்தும்போதும் நம்முடைய போதனை திறமைகள் மெருகூட்டப்படுகின்றன. போதிப்பதில் திறம்பெற்றவர்களாகையில், பைபிள் சத்தியத்தை மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவும் நம் வேலையில் அதிக சந்தோஷத்தையும் திருப்தியையும் காண்கிறோம்.
ஒப்புக்கொடுத்தல் மற்றும் முழுக்காட்டுதலின் அர்த்தத்தைப் பற்றிய பேச்சுடன் காலை நிகழ்ச்சிநிரல் நிறைவுற்றது. நாம் கடவுளை முழுமையாக நம்பி அவருடைய சித்தத்தைச் செய்ய ஊக்கமாய் முயற்சி எடுப்போமாகில், அவர் நம்மை ஆசீர்வதித்து காப்பார். ஞானி ஒருவர் எழுதினார்: “உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” (நீதிமொழிகள் 3:6) கடவுள் காட்டும் ஜீவ வழியில் அநேகர் நடக்க ஆரம்பித்திருந்ததை காட்டிய சந்தோஷமளிக்கும் முழுக்காட்டுதலே மாநாட்டின் சிறப்பம்சம்.
மதிய இடைவேளைக்குப் பிறகு, “முடிவில்லா வாழ்க்கையை கருத்தில்கொண்டு சேவித்தல்” என்ற பேச்சுடன் ஆரம்பமானது பிற்பகல் நிகழ்ச்சிநிரல். கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் பூமியில் தம்மை என்றும் சேவிப்பதற்கான கடவுளுடைய நோக்கம் நிறைவேற்றமடையும். அப்படியானால், நித்தியகாலத்தை கருத்தில்கொண்டு யெகோவாவை சேவிப்பதன் பேரில் நம்முடைய சிந்தையையும் திட்டங்களையும் நம்பிக்கைகளையும் ஒருமுகப்படுத்துவது எவ்வளவு பொருத்தமானது! ‘யெகோவாவின் நாளை’ மனதில் நெருங்க வைத்திருக்க வேண்டுமென்றாலும், நித்தியத்துக்கும் அவரை சேவிப்பதே நம்முடைய இலக்கு என்பதை நினைவிற்கொள்வது இன்றியமையாதது. (2 பேதுரு 3:12, NW) கடவுளுடைய பழிவாங்குதலை இயேசு எப்பொழுது நிறைவேற்றுவார் என்ற சரியான காலத்தை அறியாமல் இருப்பது நம்மை தொடர்ந்து விழிப்புடனிருக்கச் செய்கிறது, யெகோவாவை சுயநலமற்ற நோக்கத்தோடு சேவிக்கிறோம் என்பதை நிரூபிக்க நமக்கு ஒவ்வொரு நாளும் வாய்ப்பளிக்கிறது.
பின்வந்த இரண்டு பேச்சுக்கள், எபேசியர்களுக்கு எழுதிய பவுலின் கடிதத்தில் 4-ம் அதிகாரத்தை ஆராய்ந்தன. ‘மனிதரில் வரங்களாகிய’ பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்ட, ஆவிக்குரிய விதத்தில் தகுதிபெற்ற ஆண்களைப் பற்றிய விஷயங்கள் சிந்திக்கப்பட்டன. நம்முடைய ஆவிக்குரிய நன்மைக்காக இந்த மூப்பர்கள் அறிவுரையையும் வழிநடத்துதலையும் கொடுக்கிறார்கள். ‘புதிய ஆள்தன்மையைத்’ தரித்துக்கொள்ளும்படி பவுலின் ஏவப்பட்ட கடிதமும் கிறிஸ்தவர்களை உந்துவிக்கிறது. (எபேசியர் 4:8, 24) இரக்கம், தயவு, தாழ்ந்த சிந்தை, சாந்தம், நீடிய பொறுமை, அன்பு ஆகிய குணங்கள் தேவபக்திக்குரிய ஆள்தன்மையில் உட்பட்டுள்ளன.—கொலோசெயர் 3:12-14.
நம்முடைய நடத்தையில் விழிப்புள்ளவர்களாய் இருப்பது என்பது உலகத்தால் கறைபடாதவாறு நம்மை காத்துக்கொள்வதையும் உட்படுத்துகிறது. இதுதான் அடுத்த பேச்சின் பொருள். பொழுதுபோக்குகள், விருந்துகள், பொருளாதார நாட்டங்கள் ஆகியவற்றை தெரிந்தெடுக்கையில் சமநிலை தேவைப்படுகிறது. உலகத்தால் கறைபடாதவாறு இருப்பதற்கு யாக்கோபு 1:27-ல் உள்ள அறிவுரையைப் பொருத்தி, கடவுளோடு சுத்தமான நிலைநிற்கையையும் நல்மனசாட்சியையும் அனுபவிக்கிறோம். நாம் நோக்கமுள்ள வாழ்க்கையை வாழமுடியும்; அப்பொழுது சமாதானம், ஆவிக்குரிய செழுமை, இனிய நட்புறவு ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்படுவோம்.
“இளைஞர்களே—கடவுளின் வழியைப் பின்பற்றுங்கள்.” இது அதைத் தொடர்ந்து வந்த மூன்று பாக தொடர்பேச்சின் தலைப்பு. கடவுள் அவர்களை நேசிக்கிறார், தூய வணக்கத்தை ஆதரிப்பதற்கு அவர்கள் எடுக்கும் முயற்சிகளைப் போற்றுகிறார் என்பதை அறிந்தவர்களாய், அவரை உண்மையுடன் சேவிப்பதற்கான தங்களுடைய பகுத்துணரும் ஆற்றலை இளைஞர்கள் பயிற்றுவிக்க வேண்டும். பகுத்துணரும் ஆற்றலை வளர்த்துக்கொள்வதற்கு ஒருவழி, கடவுளுடைய வார்த்தையை தினமும் படித்து அதை தியானிப்பதாகும். இதை நாம் செய்தால், யெகோவாவின் வழிகளை அறிந்துகொள்ளலாம். (சங்கீதம் 119:9-11) பெற்றோர்களிடமிருந்தும் மூப்பர்களிடமிருந்தும், சங்கத்தின் பிரசுரங்களிலிருந்தும் வரும் முதிர்ச்சியான அறிவுரைகளை ஏற்றுக்கொள்வதாலும் பகுத்துணரும் ஆற்றல் வளருகிறது. இளைஞர்கள் தங்களுடைய பகுத்துணரும் ஆற்றலை சரியான முறையில் பயன்படுத்தி, பொருளாதார ஆசைகள், அசுத்தமான பேச்சு, கடவுளிடமிருந்து பிரிந்த இந்த உலகை படம்படித்துக் காட்டும் மிதமீறிய பொழுதுபோக்கு ஆகியவற்றை மேற்கொள்ள கடும் முயற்சி செய்கிறார்கள். கடவுள் காட்டும் ஜீவ வழியைப் பின்பற்றி இளைஞரும் முதியோரும் உண்மையான வெற்றியைப் பெறலாம்.
அந்த நாளின் கடைசி பேச்சு, “சிருஷ்டிகர்—அவருடைய ஆள்தன்மையும் வழிகளும்.” கோடிக்கணக்கானோர் படைப்பாளரைப் பற்றி அறியாதிருப்பதை சுட்டிக்காட்டிய பின், பேச்சாளர் இவ்வாறு சொன்னார்: “வாழ்க்கையின் மெய்யான அர்த்தம், குணமுள்ள கடவுளாகிய நம் படைப்பாளரை அறிவதோடு தொடர்புடையது; அவருடைய ஆள்தன்மையை கண்டுணர்வதோடும் அவருடைய வழிகளுடன் ஒத்துழைப்பதோடும் தொடர்புடையது. . . . நாம் வாழும் உலகைப் பற்றியும் நம்மைப் பற்றியும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றனவே; இவற்றைப் பயன்படுத்தி, படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதை நம்புவதற்கும் அவரை அறிந்துகொண்டு அர்த்தமுள்ள வாழ்க்கையை நடத்துவதற்கும் மக்களுக்கு உதவலாம்.” பின்பு அந்தப் பேச்சாளர், ஞானமும் அன்புமுள்ள ஒரு படைப்பாளர் இருக்கிறார் என்பதற்கான அத்தாட்சியை குறிப்பிட்டு பேசினார். உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? (ஆங்கிலம்) என்ற புதிய புத்தகத்தை வெளியிடுகையில் இந்தப் பேச்சு உச்சக்கட்டத்தை அடைந்தது.
“வழி இதுவே, இதிலே நடவுங்கள்.”
இதுவே மாநாட்டின் மூன்றாம் நாளின் தலைப்பு. (ஏசாயா 30:21) இந்த நிகழ்ச்சிநிரல் மூன்று பேச்சுக்கள் அடங்கிய விறுவிறுப்பான தொடர்பேச்சுடன் ஆரம்பமானது; அது எசேக்கியேல் ஆலய தரிசனத்தின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தியது. இன்று கடவுளுடைய ஜனங்களுக்கு இந்தத் தரிசனம் அதிக அர்த்தம் நிறைந்தது, ஏனெனில் அது நம்முடைய காலத்தின் தூய வணக்கத்தோடு தொடர்புடையது. இந்தத் தரிசனத்தைப் புரிந்துகொள்வதற்கு ஒரு முக்கிய திறவுகோல் இதுவே: யெகோவாவின் பெரிய ஆவிக்குரிய ஆலயம் அவருடைய தூய வணக்கத்திற்கான ஏற்பாட்டை பிரதிநிதித்துவம் செய்கிறது. அத்தரிசனத்தின் அம்சங்கள் சிந்திக்கப்பட்டபோது, அபிஷேகம் செய்யப்பட்ட அன்பான கண்காணிகளும் அந்த அதிபதியின் வகுப்பாரை சேர்ந்த வருங்கால அங்கத்தினர்களும் செய்யும் வேலைக்கு தாங்கள் எவ்வாறெல்லாம் ஆதரவளிக்கலாம் என்பதைக் குறித்து செவிகொடுத்துக் கேட்டவர்கள் தியானித்தனர்.
பின்பு அந்த நாள் காலை நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக பைபிள் நாடகம் இருந்தது. நாடகத்தின் தலைப்பு: “குடும்பங்களே—அன்றாட பைபிள் வாசிப்பை உங்கள் வாழ்க்கை முறை ஆக்குங்கள்!” அது பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையை வணங்க மறுத்த மூன்று எபிரெயர்களுடைய விசுவாசத்தையும் தைரியத்தையும் சித்தரித்துக் காட்டியது மெய்சிலிர்க்க வைத்தது. பைபிள் வெறுமனே பூர்வகால சரித்தரம் மட்டுமல்ல, அதிலுள்ள அறிவுரைகள் இன்றைய இளைஞருக்கும் முதியோருக்கும் உண்மையிலேயே பயனுள்ளவை என்பதை மெய்ப்பித்துக் காட்டுவதே அந்த நாடகத்தின் நோக்கம்.
பிற்பகல் சிறப்பு நிகழ்ச்சியான பொதுப் பேச்சின் தலைப்பு “நித்திய ஜீவனுக்கான ஒரே வழி.” மனிதவர்க்கம் பாவத்திற்குள்ளும் மரணத்திற்குள்ளும் வீழ்ந்த சரித்திரத்தின் தடயத்தை கண்டுபிடித்தப் பிறகு, சிந்தையைத் தூண்டும் பின்வரும் வார்த்தைகளால் பேச்சாளர் முடித்தார்: “மாநாட்டின் இன்றைய பைபிள் வசனம் ஏசாயா 30:21; அது சொல்கிறது: ‘நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.’ இந்த சத்தத்தை நாம் எவ்வாறு கேட்கிறோம்? கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளுக்கு செவிகொடுப்பதாலும், நம்முடைய மகத்தான போதகராகிய யெகோவா தேவனுடைய நவீனநாளைய கிறிஸ்தவ அமைப்பு கொடுக்கும் வழிநடத்துதலைப் பின்பற்றுவதாலுமே. இவ்வாறு செய்வதுதான் நித்திய ஜீவனுக்கான ஒரே வழி.”
அந்த வாரத்திற்கான காவற்கோபுர படிப்புக் கட்டுரையின் சுருக்கத்திற்குப் பிறகு, “யெகோவாவின் வழியில் தொடர்ந்து நடங்கள்” என்ற இறுதிப் பேச்சு வந்தது. நிகழ்ச்சிநிரலின் முக்கிய குறிப்புகளை அது மீண்டும் மனத்திரைக்கு கொண்டு வந்தது. அதன்பின், கடவுளுடைய வழியில் தொடர்ந்து இருப்பதற்கான உறுதியை தெரிவிக்கும் ஒரு தீர்மானத்தை அந்தப் பேச்சாளர் முன்வைத்தார்.
அந்தத் தீர்மானம் தூண்டுவிக்கும் இந்த வார்த்தைகளுடன் முடிந்தது: “வேதப்பூர்வ நியமங்களுக்கும் அறிவுரைகளுக்கும் புத்திமதிகளுக்கும் இசைவாக நடப்பதே இன்று வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி என்று நம்புகிறோம்; மெய்யான வாழ்க்கையை உறுதியுடன் பற்றிக்கொள்ளும்படிக்கு, அதுவே எதிர்காலத்திற்கான சிறந்த அஸ்திவாரத்தைப் போடுகிறது என்றும் உறுதியாக நம்புகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் யெகோவா தேவனை முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் மனதோடும் பலத்தோடும் அன்புகூருவதால் இந்த உறுதிமொழியை எடுக்கிறோம்!” ஆஜராயிருந்த அனைவரும் தங்கள் சம்மதத்தை ஆம் என்று சொல்லி நீண்ட கரவொலி மூலம் உறுதிப்படுத்தினர்!
[பக்கம் 8-ன் பெட்டி/படம்]
உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா?
இந்தத் தலைப்பிடப்பட்ட புதிய புத்தகம் படைப்பாளராகிய யெகோவா இருக்கிறார் என்பதற்கு நம்பத்தக்க அத்தாட்சி அளிக்கிறது; மேலும், அவருடைய பண்புகளையும் கூறுகிறது. குறிப்பாக, உலகக் கல்வியில் சிறந்து விளங்கும், அதே சமயத்தில் கடவுளில் நம்பிக்கை இல்லாத நபர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடவுளில் நம்பிக்கையுள்ள நபர்களுடைய விசுவாசத்தையும் அவருடைய ஆள்தன்மையின் மீதும் வழிகளின் மீதும் உள்ள போற்றுதலையும் அதிகரிக்க இந்த 192-பக்க புத்தகம் உதவும்.
உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? என்ற புத்தகம், வாசகருக்கு ஏற்கெனவே கடவுள் நம்பிக்கை இருப்பதாக எண்ணுவதில்லை. மாறாக, படைப்பாளர் இருக்கிறார் என்பதை சமீப விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் கருத்துக்களும் எவ்வாறு அத்தாட்சி அளிக்கின்றன என்பதை சொல்கிறது. “உங்களுடைய வாழ்க்கைக்கு எது அர்த்தத்தை கூட்டும்?,” “நம்முடைய பிரபஞ்சம் எப்படி வந்தது?—சர்ச்சைக்குரிய விஷயம்,” “நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள்!” போன்ற தலைப்புகள் இப்புத்தகத்தின் அதிகாரங்களில் பவனிவருகின்றன. பைபிள் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதைக் குறித்து நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம் என்பதை மற்ற அதிகாரங்கள் சிந்திக்கின்றன. படைப்பாளருடைய பண்புகளையும் வழிகளையும் வெளிப்படுத்துகிற பைபிளைப் பற்றிய மேலோட்டமான ஒரு கண்ணோட்டத்தையும் இந்தப் புதிய புத்தகம் வழங்குகிறது. கடவுள் ஏன் இவ்வளவு துன்பத்தை அனுமதித்திருக்கிறார் என்பதை சிந்திப்பதோடு அல்லாமல், அதற்கு எவ்வாறு என்றென்றும் முடிவுகட்டுவார் என்பதையும் விளக்குகிறது.
[பக்கம் 7-ன் படம்]
அநேகர் முழுக்காட்டப்பட்டனர்
[பக்கம் 7-ன் படம்]
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும்குழு அங்கத்தினர் ஏ. டி. ஷ்ரோடரால் புதிய சிற்றேட்டை வெளியிடுகிறார்
[பக்கம் 8, 9-ன் படம்ங்கள்]
அன்றாட பைபிள் வாசிப்பை உற்சாகப்படுத்துகிற மெய்சிலிர்க்க வைக்கும் நாடகம்