மகத்தான குயவரும் அவருடைய கைவண்ணமும்
“எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்ட . . . கனத்துக்குரிய பாத்திரமா[குங்கள்].”—2 தீமோத்தேயு 2:21.
1, 2. (அ) முதல் மனுஷனும் மனுஷியும் கடவுளுடைய நேர்த்தியான கைவண்ணம் என்று எப்படி சொல்லலாம்? (ஆ) மகத்தான குயவர் ஆதாமையும் ஏவாளையும் உண்டாக்கியதன் நோக்கம் என்ன?
யெகோவாவே மகத்தான குயவர். அவருடைய படைப்பின் நேர்த்தியான கைவண்ணம்தான் ஆதிபெற்றோராகிய ஆதாம். பைபிள் நமக்கு சொல்கிறது: “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்,” அதாவது “சுவாசிக்கும் உயிரியானான்.” (ஆதியாகமம் 2:7; அடிக்குறிப்பு NW) அந்த முதல் மானிட படைப்பு பரிபூரணமாக இருந்தது, கடவுளுடைய மெய் நீதிக்கும் நியாயத்திற்கும் தெய்வீக ஞானத்திற்கும் அன்பிற்கும் அத்தாட்சியாய் அவருடைய சாயலாகவே இருந்தது.
2 ஆதாமுடைய விலா எலும்பிலிருந்து எடுக்கப்பட்ட பொருளை பயன்படுத்தி, மனுஷனுக்கு ஏற்ற துணையை, ஓர் உதவியாளரை—அதாவது ஓர் மனுஷியை—கடவுள் வடிவமைத்தார். ஏவாளின் மாசற்ற அழகு இன்றைய பெண்வர்க்கத்தின் பேரழகையும் விஞ்சியது. (ஆதியாகமம் 2:21-23) மேலும், இந்தப் பூமியை அழகிய “பிருந்தாவனமாக்கும்” திட்டத்தை நிறைவேற்ற பரிபூரண தேகமும் அறிவாற்றலும் முதல் தம்பதியினருக்கு கொடுக்கப்பட்டது. “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று ஆதியாகமம் 1:28-ல் சொல்லப்பட்டுள்ள கடவுளின் கட்டளையை நிறைவேற்றும் சக்தியும் அருளப்பட்டது. கடைசியில், ‘ஐக்கியத்தின் பூரண கட்டாகிய’ அன்பு எனும் கயிற்றால் பிணைக்கப்பட்டு, இந்தப் பூகோள தோட்டம் மகிழ்ச்சியால் பூத்துக்குலுங்கும் கோடிக்கணக்கான மனித பூக்களால் நிரப்பப்படவிருந்தது.—கொலோசெயர் 3:14.
3. நம் முதல் பெற்றோர் எவ்வாறு கனவீனத்திற்குரிய பாத்திரமானார்கள், அதன் விளைவு என்ன?
3 ஆனால், நம்முடைய முதல் பெற்றோர் வேண்டுமென்றே தங்களுடைய உன்னத படைப்பாளராகிய மகத்தான குயவருடைய அதிகாரத்திற்கு எதிராக கலகம் செய்தது சோகமே! அவர்களுடைய போக்கு ஏசாயா 29:15, 16-ல் விவரிக்கப்பட்டுள்ளதைப் போலானது: “தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார்? என்கிறவர்களுக்கு ஐயோ! . . . குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ? உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக் குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக் குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ?” அவர்களுடைய தான்தோன்றித்தனமான செயல் பேரழிவை—நித்திய மரண தண்டனையை—கொண்டுவந்தது. மேலும், அவர்களிலிருந்து தோன்றிய முழு மனிதகுலமும் பாவத்தையும் மரணத்தையுமே ஆஸ்தியாக பெற்றது. (ரோமர் 5:12, 18) மகத்தான குயவருடைய படைப்பின் அழகில் களங்கம் ஏற்பட்டுவிட்டது.
4. கனத்திற்குரிய என்ன நோக்கத்திற்காக நாம் சேவிக்கலாம்?
4 ஆனால், தற்போது நம்மை அபூரணம் ஆட்டிப்படைக்கையிலும், பாவமுள்ள ஆதாமின் சந்ததியாராகிய நாம் சங்கீதம் 139:14-ல் உள்ள வார்த்தைகளில் யெகோவாவை துதிக்கலாம்: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மை துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.” ஆனால், மகத்தான குயவருடைய ஆதி வேலைப்பாடு உருக்குலைந்தது எவ்வளவு வருந்தத்தக்கது!
குயவர் தம்முடைய வேலையை நீட்டிக்கிறார்
5. மகத்தான குயவருடைய திறமை எவ்வாறு பயன்படுத்தப்படவிருந்தது?
5 மகத்தான குயவராகிய நம் சிருஷ்டிகருடைய திறமை மனிதவர்க்கத்தின் ஆரம்ப படைப்பைக் காட்டிலும் பிரமாண்டமான விதத்தில் பயன்படுத்தப்படவிருந்தது மகிழ்ச்சிக்குரியது. அப்போஸ்தலன் பவுல் நமக்கு சொல்கிறார்: “மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா? மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?”—ரோமர் 9:20, 21.
6, 7. (அ) எவ்வாறு இன்று அநேகர் கனவீனத்திற்காக வடிவமைக்கப்பட விரும்புகிறார்கள்? (ஆ) எவ்வாறு நீதிமான்கள் கனத்திற்குரிய உபயோகத்திற்கு வடிவமைக்கப்படுகிறார்கள்?
6 ஆம், மகத்தான குயவருடைய வேலைப்பாடில் சில கனத்துக்குரிய உபயோகமாகவும் சில கனவீனத்திற்குரிய உபயோகமாகவும் மாற்றப்படும். ஆழமான சேற்றுக்குள் மூழ்கியிருக்கும் தேவபக்தியற்ற இந்த உலகத்தோடு ஒத்துவாழ விரும்புவோர் அழிவிற்கு அடையாளப்படுத்தும் முறையில் வடிவமைக்கப்படுகிறார்கள். மகிமையின் ராஜா கிறிஸ்து இயேசு நியாயந்தீர்க்க வருகையில், வெள்ளாட்டைப் போன்ற பிடிவாதமான மனிதர் அனைவரும் இப்படிப்பட்ட கனவீனத்திற்குரிய பாத்திரங்களாய் கருதப்படுவர். மத்தேயு 25:46 (தி.மொ.) குறிப்பிடுகிறபடி, அவர்கள் ‘நித்திய ஆக்கினைக்குப் போவார்கள்.’ ‘கனத்திற்குரிய’ உபயோகத்திற்கு வடிவமைக்கப்படும் செம்மறியாடு போன்ற ‘நீதிமான்களோ’ ‘நித்திய ஜீவனை’ சுதந்தரித்துக்கொள்வார்கள்.
7 நீதிமான்களாகிய இவர்கள் கடவுளால் வடிவமைக்கப்படுவதற்கு தாழ்மையோடு தங்களை கீழ்ப்படுத்தியிருப்பார்கள். அவர்கள் கடவுள் காட்டும் ஜீவ வழியில் நுழைந்திருக்கிறார்கள். 1 தீமோத்தேயு 6:17-19-ல் சொல்லப்பட்டுள்ள அறிவுரையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்: ‘நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமல், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் [உங்களுடைய] நம்பிக்கையை வையுங்கள்.’ அது மட்டுமல்ல. “நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதார குணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும்” வேண்டுமென்ற அறிவுரையை வாழ்க்கையில் பொருத்தியிருக்கிறார்கள். அவர்கள் தெய்வீக சத்தியத்தால் வடிவமைக்கப்படுகிறார்கள்; மேலும், ஆதாமின் பாவத்தால் இழக்கப்பட்ட அனைத்தையும் திரும்ப மீட்பதற்கு ‘தம்மை கிரயபலியாக தந்த’ கிறிஸ்து இயேசுவின் மூலம் யெகோவா செய்துள்ள ஏற்பாட்டில் அசைக்கமுடியாத விசுவாசம் வைக்கிறார்கள். (1 தீமோத்தேயு 2:6) அப்படியானால், ‘தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட [வடிவமைக்கப்பட்ட] புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுமாறு’ பவுல் கொடுத்த அறிவுரைக்கு நாம் எவ்வளவு மனப்பூர்வமாய் கீழ்ப்படிய வேண்டும்!—கொலோசெயர் 3:10.
நீங்கள் எப்படிப்பட்ட பாத்திரமாக இருப்பீர்கள்?
8. (அ) ஒரு நபர் எப்படிப்பட்ட பாத்திரமாக ஆகிறார் என்பதை எது தீர்மானிக்கிறது? (ஆ) ஒருவருடைய உருவை எந்த இரண்டு அம்சங்கள் வடிவமைக்கின்றன?
8 ஒரு நபர் எப்படிப்பட்ட பாத்திரமாகிறார் என்பதை எது தீர்மானிக்கிறது? அவருடைய மனப்பான்மையும் நடத்தையுமே. இவை முதலாவதாக இருதயத்தின் ஆசாபாசங்களால் வடிவமைக்கப்படுகின்றன. ஞானியாகிய சாலொமோன் ராஜா இவ்வாறு சொன்னார்: “மானிடன் இதயம் அவன் வழியை யோசிக்கும், அவன் நடைகளை நிலைப்படுத்துபவர் யெகோவாவே.” (நீதிமொழிகள் 16:9, தி.மொ.) இரண்டாவதாக, காதால் கேட்கிற, கண்ணால் பார்க்கிற விஷயங்களாலும், கூட்டுறவுகளாலும் அனுபவங்களாலும் வடிவமைக்கப்படுகின்றன. ஆகவே, “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்” என்ற இந்த அறிவுரைக்கு செவிசாய்ப்பது எவ்வளவு முக்கியம். (நீதிமொழிகள் 13:20) 2 பேதுரு 1:16 (தமிழ் கத்தோலிக்க பைபிள்) நம்மை எச்சரிக்கிறபடி, ‘சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை’ அல்லது ‘தந்திரமான கட்டுக்கதைகளை’ பின்பற்றுவதை நாம் தவிர்க்க வேண்டும். இவற்றில் கிறிஸ்தவமண்டலத்தின் விசுவாசதுரோக போதனைகளும் பண்டிகைகளும் அடங்கும்.
9. மகத்தான குயவரால் வடிவமைக்கப்படுவதற்கு இசைவாக நாம் எவ்வாறு பிரதிபலிக்கலாம்?
9 அப்படியானால், நாம் எப்படி பிரதிபலிக்கிறோமோ அதற்கு இசைவாக, கடவுள் நம்மை வடிவமைக்க முடியும். தாவீதின் ஜெபத்தையே நாமும் யெகோவாவுக்கு முன்பு தாழ்மையோடு சொல்லலாம்: “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.” (சங்கீதம் 139:23, 24) யெகோவா ராஜ்ய செய்தி பிரசங்கிக்கப்படும்படி செய்திருக்கிறார். நற்செய்தியையும் அவருடைய கூடுதலான வழிநடத்துதல்களையும் நம் இதயம் போற்றுதலோடு ஏற்றுக்கொண்டிருக்கிறது. நற்செய்தியைப் பிரசங்கிப்பதோடு தொடர்புடைய பல்வேறு சிலாக்கியங்களை அவருடைய அமைப்பின் வாயிலாக நமக்கு தருகிறார்; இவற்றை நாம் உறுதியாக பற்றிக்கொண்டு நெஞ்சார நேசிப்போமாக.—பிலிப்பியர் 1:9-11.
10. ஆவிக்குரிய திட்டங்களைப் பின்பற்ற நாம் எவ்வாறு மும்முரமாய் முயல வேண்டும்?
10 கடவுளுடைய வார்த்தைக்கு தொடர்ந்து கவனம் செலுத்துவது மிக முக்கியம். இதை எப்படி செய்யலாம்? அன்றாட பைபிள் வாசிப்பு திட்டத்தைப் பின்பற்றுவதாலும், நம்முடைய குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் பைபிளையும் யெகோவாவின் சேவையையும் பற்றி பேசுவதாலும் செய்யலாம். யெகோவாவின் சாட்சிகளுடைய எல்லா பெத்தேல் மற்றும் மிஷனரி இல்லங்களிலும் காலை உணவின்போது நடத்தப்படும் வழிபாட்டு நிகழ்ச்சியில், பொதுவாக பைபிளோ தற்போதைய வருடாந்தரப் புத்தகமோ (ஆங்கிலம்) ஒவ்வொரு வாரமும் மாறிமாறி வாசிக்கப்படும். இப்படிப்பட்ட ஏற்பாட்டை உங்களுடைய குடும்பமும் பின்பற்ற முடியுமா? கிறிஸ்தவ சபையிலும் நாம் ஒன்றாக கூடிவரும் கூட்டங்களிலும் கூட்டுறவுகொள்வதால், விசேஷமாக வாராந்தர காவற்கோபுர படிப்பில் கலந்துகொள்வதால் நாம் அனைவருமே எப்பேர்ப்பட்ட நன்மைகளைப் பெறுகிறோம்!
சோதனைகளை சமாளிக்க வடிவமைக்கப்படுதல்
11, 12. (அ) நம் அன்றாட வாழ்வில் வரும் சோதனைகளுக்கு எவ்வாறு யாக்கோபின் அறிவுரையை பொருத்தலாம்? (ஆ) உத்தமத்தைக் காத்துக்கொள்ள யோபுவின் அனுபவம் நம்மை எவ்வாறு உற்சாகப்படுத்துகிறது?
11 நம்முடைய அன்றாட வாழ்க்கையில், சில சூழ்நிலைகள் ஏற்படுவதை கடவுள் அனுமதிக்கிறார், அவற்றில் சில நமக்கு மலைபோல் தோன்றலாம். இவற்றை நாம் எப்படி பார்க்க வேண்டும்? யாக்கோபு 4:8 அறிவுரை கூறுகிறபடி, ஒருபோதும் மனக்கசப்படையாமல், ‘நாம் தேவனிடம் நெருங்கி வருகையில், அவர் நம்மிடம் நெருங்கி வருவார்’ என்ற நம்பிக்கையோடு அவரிடம் வருவோமாக, நம்முடைய முழு இருதயத்தோடு விசுவாசம் வைப்போமாக. கஷ்டங்களையும் சோதனைகளையும் சகிக்க வேண்டும் என்பது உண்மைதான், ஆனால் அவை நம்மை வடிவமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளன; அதன் பலனோ மகிழ்ச்சி ததும்பும் ஒன்றாக இருக்கும். யாக்கோபு 1:2, 3 நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறது: “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.”
12 யாக்கோபு மேலும் கூறுகிறார்: “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.” (யாக்கோபு 1:13, 14) நமக்கு பல சோதனைகள் வரலாம், அவை பலவகையாகவும் இருக்கலாம். ஆனால் யோபின் விஷயத்தில் பார்த்தபடி, நம்மை வடிவமைப்பதில் இவையனைத்தும் ஒரு பாகம் வகிக்கின்றன. யாக்கோபு 5:11-ல் பைபிள் நமக்கு எப்பேர்ப்பட்ட மகத்தான உறுதியை அளிக்கிறது: “இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.” மகத்தான குயவருடைய கைகளில் உள்ள பாத்திரங்களாக, வரப்போகும் பலனில் யோபுவைப் போன்ற நம்பிக்கை வைத்து எல்லா சமயங்களிலும் உத்தமத்தைக் காத்துக்கொள்வோமாக!—யோபு 2:3, 9, 10; 27:5; 31:1-6; 42:12-15.
நம் பிள்ளைகளை வடிவமைத்தல்
13, 14. (அ) பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை எப்பொழுது வடிவமைக்க ஆரம்பிக்க வேண்டும், முடிவில் என்ன பலனை கருத்தில்கொண்டு? (ஆ) மகிழ்ச்சிக்குரிய என்ன பலன்களை நீங்கள் குறிப்பிடலாம்?
13 பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை சிசுப்பருவத்திலிருந்தே வடிவமைப்பதில் பங்குகொள்ளலாம். நம்முடைய இளைஞர்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்வதில் எப்பேர்ப்பட்ட சிறந்த ஆட்களாக பரிணமிப்பார்கள்! (2 தீமோத்தேயு 3:14, 15) சோதனைகள் மிகக் கொடூரமாக இருந்தாலும் இதுவே உண்மையாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்க தேசம் ஒன்றில் துன்புறுத்துதல் மிகத் தீவிரமாக இருந்தது. அந்தச் சமயத்தில், நம்பகமான ஒரு குடும்பம் காவற்கோபுரத்தை கொல்லைப்புற கொட்டகையில் இரகசியமாக அச்சடித்து வந்தது. இளைஞர்களை இராணுவத்தில் சேர்ப்பதற்காக படைவீரர்கள் ஒருநாள் வீடு வீடாக சோதனை போட்டுக்கொண்டு அந்தத் தெரு வழியே வந்துகொண்டிருந்தார்கள். அந்தக் குடும்பத்திலுள்ள இந்த இரண்டு இளைஞர்களும் ஒளிந்துகொள்ள இன்னும் நேரம் இருந்தது, ஆனால் அந்தப் படைவீரர்கள் சோதனை போடுகையில் அச்சிடும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்பது நிச்சயம். இது, முழு குடும்பத்தாரும் சித்திரவதை அனுபவிப்பதற்கும் ஒருவேளை கொலை செய்யப்படுவதற்கும் வழிநடத்தலாம். ஆனால் இப்பொழுது என்ன செய்வது? அந்த இரண்டு பையன்களும் யோவான் 15:13-ஐ தைரியமாக எடுத்துக் காண்பித்தார்கள்: “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.” மெயின் ஹாலிலேயே இருக்கத் தீர்மானித்தார்கள். இராணுவ சேவைசெய்ய மறுத்தால் அந்தப் படைவீரர்கள் அவர்களைக் கண்டுபிடித்து, கொடூர சித்திரவதைக்கு ஆளாக்குவார்கள் அல்லது அவர்களை கொலையும் செய்வார்கள். ஆனால் அதன்பிறகு அவர்கள் சோதனை போடமாட்டார்கள். அச்சு இயந்திரமும் அகப்படாது, முழு குடும்பத்தாரும் காப்பாற்றப்படுவார்கள். ஆனால் அவர்கள் நினைத்துக்கூட பார்க்காத ஒன்றுதான் நடந்தது. உண்மையில், அந்தப் படைவீரர்கள் இந்த வீட்டை விட்டுவிட்டு மற்ற வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்தார்கள்! காலத்திற்கேற்ற ஆவிக்குரிய உணவை தொடர்ந்து பிரசுரிப்பதற்கு, கனத்துக்குரிய உபயோகத்திற்காக வடிவமைக்கப்பட்ட அந்த மனித பாத்திரங்களும், அதோடு அச்சு இயந்திரமும் தப்பிப்பிழைத்தன. அந்த இரண்டு பையன்களில் ஒருவரும் அவருடைய சகோதரியும் இப்பொழுது பெத்தேலில் சேவை செய்கிறார்கள்; அவர் இன்னும் அந்தப் பழைய இயந்திரத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.
14 எப்படி ஜெபிப்பது என்பதை சிறுபிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம், கடவுள் அவர்களுடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார். ருவாண்டா படுகொலையின்போது முக்கியமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஆறு வயது சிறுமியையும் அவளுடைய பெற்றோர்களையும் கைவெடி குண்டால் தாக்குவதற்கு கலகக்காரர்கள் தயாராயிருந்தார்கள். அப்போது, யெகோவாவுக்கு இன்னும் அதிக சேவை செய்வதற்கு தங்களை காப்பாற்றும்படி அந்தப் பிள்ளை சத்தமாகவும் ஊக்கமாகவும் ஜெபித்தது. அதைக் கேட்டதும் கொலைசெய்ய திட்டமிட்டிருந்தவர்களுடைய மனம் இளகியது. அவர்கள் சொன்னதாவது: “இந்தச் சின்ன பிள்ளைக்காக நாங்க உங்களை கொலை செய்யாமல் விடுகிறோம்.”—1 பேதுரு 3:12.
15. பவுல் எச்சரித்த சீர்கேடான செல்வாக்குகள் யாவை?
15 நம்முடைய இளைஞர்கள் பெரும்பாலானோர் இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளில் இல்லை. ஆனால் பள்ளியிலும் சீர்கேடான இன்றைய சமுதாயத்திலும் அவர்கள் இதுபோன்ற பல சோதனைகளை சந்திக்கிறார்கள். கெட்ட வார்த்தைகள், ஆபாச புத்தகங்கள், மோசமான பொழுதுபோக்கு, கெட்ட நடத்தைகளில் ஈடுபட வற்புறுத்தும் நண்பர்களின் தொல்லை ஆகியவை அநேக இடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட செல்வாக்குகளுக்கு எதிராக அப்போஸ்தலன் பவுல் அடிக்கடி எச்சரித்தார்.—1 கொரிந்தியர் 5:6; 15:33, 34; எபேசியர் 5:3-7.
16. எவ்வாறு ஒருவர் கனத்துக்குரிய உபயோகமுள்ள பாத்திரமாகலாம்?
16 ‘சிலரை கனத்திற்கும் சிலரை கனவீனத்திற்குமான பாத்திரமாக’ குறிப்பிட்ட பிறகு, பவுல் சொல்கிறார்: “ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னை சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.” ஆகவே, தங்களுடைய கூட்டுறவுகளைக் குறித்து விழிப்புடன் இருந்து, ‘பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுது கொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடைய நாடுவதற்கு’ இளைஞர்களை நாம் உற்சாகப்படுத்துவோமாக. (2 தீமோத்தேயு 2:20-22) ‘ஒருவரையொருவர் தேற்றுவதற்கான’ ஒரு குடும்ப திட்டம் நம்முடைய இளமையை வடிவமைப்பதில் மதிப்புமிக்க ஒன்றாக இருக்கலாம். (1 தெசலோனிக்கேயர் 5:11; நீதிமொழிகள் 22:6) சங்கத்தின் பொருத்தமான பிரசுரங்களைப் பயன்படுத்தி தினமும் பைபிளை வாசிப்பதும் ஆராய்வதும் சிறந்த உதவியாக இருக்கும்.
அனைவரும் வடிவமைக்கப்படுதல்
17. சிட்சை எவ்வாறு நம்மை வடிவமைக்கும், அதனால் வரும் சந்தோஷ பலன் என்ன?
17 நம்மை வடிவமைப்பதற்கு யெகோவா அவருடைய வார்த்தையின் வாயிலாகவும் அமைப்பின் வாயிலாகவும் அறிவுரைகள் வழங்குகிறார். இத்தகைய அறிவுரைகளை ஒருபோதும் புறக்கணியாதிருப்போமாக! அதற்கு ஞானமாய் செவிகொடுங்கள், கனத்துக்குரிய பாத்திரமாக யெகோவா உபயோகத்திற்கு அது உங்களை வடிவமைப்பதாக. நீதிமொழிகள் 3:11, 12 இவ்வாறு புத்திமதி தருகிறது: “என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.” மேலும், தகப்பனை போன்ற அறிவுரை எபிரெயர் 12:6-11-ல் கொடுக்கப்பட்டுள்ளது: “கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சி[க்கிறார்], . . . எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.” இத்தகைய சிட்சைக்கான முக்கிய வழிமூலம் கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையாகவே இருக்க வேண்டும்.—2 தீமோத்தேயு 3:16, 17.
18. மனந்திரும்புதலைக் குறித்து, லூக்கா 15-ம் அதிகாரத்தில் நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
18 யெகோவா இரக்கமுள்ளவராயும் இருக்கிறார். (யாத்திராகமம் 34:6) இருதயப்பூர்வ மனந்திரும்புதலைக் காண்பிக்கும் பட்சத்தில் மிக வினைமையான பாவத்திற்கும்கூட மன்னிப்பு வழங்குகிறார். நவீனகால ‘ஊதாரிகளும்கூட’ கனத்திற்குரிய உபயோகத்திற்கான பாத்திரங்களாக வடிவமைக்கப்படலாம். (லூக்கா 15:22-24, 32, NW) நம்முடைய பாவங்கள் ஊதாரி மகனுடையதைப்போல இல்லாமலிருக்கலாம். ஆனால் வேதப்பூர்வ அறிவுரைக்கு நாம் தாழ்மையோடு கீழ்ப்படிவது கனத்திற்குரிய உபயோகத்திற்கான பாத்திரங்களாக வடிவமைக்கப்படுவதற்கு எப்பொழுதும் நம்மை வழிநடத்தும்.
19. யெகோவாவின் கரங்களில் நாம் எவ்வாறு தொடர்ந்து கனத்திற்குரிய உபயோகத்திற்கான பாத்திரங்களாக சேவிக்கலாம்?
19 சத்தியத்தை நாம் முதலாவதாக கற்றுக்கொண்டபோது, யெகோவா நம்மை வடிவமைக்க விருப்பம் காண்பித்தோம். உலக வழிகளை விட்டொழித்தோம், புதிய ஆள்தன்மையைத் தரித்துக்கொண்டோம், ஒப்புக்கொடுக்கப்பட்டு முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களானோம். “முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை களைந்துபோட்டு, உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்ற எபேசியர் 4:20-24-ல் உள்ள அறிவுரைக்கு கீழ்ப்படிந்தோம். எப்பொழுதும் கனத்திற்குரிய உபயோகத்திற்கான பாத்திரங்களாக சேவித்து மகத்தான குயவராகிய யெகோவாவின் கரங்களில் தொடர்ந்து வளைக்கத்தக்கவர்களாக இருப்போமாக!
ஞாபகத்திற்காக
◻ நம் பூமியைக் குறித்ததில் மகத்தான குயவருடைய நோக்கம் என்ன?
◻ கனத்திற்குரிய உபயோகத்திற்காக நீங்கள் எவ்வாறு வடிவமைக்கப்படலாம்?
◻ எந்த வழியில் நம்முடைய பிள்ளைகள் வடிவமைக்கப்படலாம்?
◻ சிட்சையைக் குறித்ததில் நமக்கு என்ன நோக்குநிலை இருக்க வேண்டும்?
[பக்கம் 10-ன் படம்]
நீங்கள் கனத்திற்குரிய உபயோகத்திற்காக வடிவமைக்கப்படுவீர்களா அல்லது ஒதுக்கப்படுவீர்களா?
[பக்கம் 12-ன் படம்]
சிசுப்பருவத்திலிருந்தே பிள்ளைகளை வடிவமைக்கலாம்