கடவுளின் சேவையில் பெரி . . . ய்ய குடும்பங்கள்
“பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்” என சங்கீதக்காரன் எழுதினார்.—சங்கீதம் 127:3-5.
ஆம், பிள்ளைகள் யெகோவா தேவனின் அருளால் கிடைக்கும் பரிசு. வில்வீரர் தன் அம்பறாத்தூணியிலுள்ள அம்பை எய்தும் வித்தையை கற்றவுடன் சந்தோஷ வானில் சிறகடித்துப் பறப்பார்; அதுபோலவே தம் பிள்ளைகளை நித்தியகால வாழ்க்கைப் பாதையில் வழிநடத்துகிற பெற்றோர் பெரு மகிழ்ச்சி அடைகின்றனர்.—மத்தேயு 7:14.
முற்காலத்தில், கடவுளுடைய மக்களிடையே குழந்தைகுட்டிகள் பெருகியிருந்த பெரிய குடும்பங்கள் சர்வசகஜமாய் இருந்தன. உதாரணமாக, அவர்கள் எகிப்தில் சிறைப்பட்டிருந்த ஆண்டுகளை சிந்தித்துப் பாருங்கள். “இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது.” (யாத்திராகமம் 1:7) எகிப்துக்குள் நுழையும்போது இருந்த இஸ்ரவேலரின் எண்ணிக்கையோடு அதைவிட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப்பார்த்தால், சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திலும் பத்து பிள்ளைகள் இருந்தனரென அறிகிறோம்!
பிற்காலத்தில், இன்றுள்ள குடும்பங்களோடு ஒப்பிடுகையில் அநேகருக்கு பெரிய குடும்பமாக தோன்றும் ஒன்றில்தான் இயேசு வளர்ந்தார். அவரே அக்குடும்பத்தின் மூத்தபிள்ளையாக இருந்தார். ஆனால், யோசேப்புக்கும் மரியாளுக்கும் நான்கு மகன்களும் ஓரிரு மகள்களும் இருந்தனர். (மத்தேயு 13:54-56) ஒருசமயம், எருசலேமில் பண்டிகையை கொண்டாடிவிட்டு அக்குடும்பத்தினர் குதூகலமாக திரும்பிக் கொண்டிருந்தனர். ஆனால் மகனாகிய இயேசு தங்களோடு இல்லை என்பதை யோசேப்பும் மரியாளும் ஒருநாள் முழுக்க கவனிக்கவேயில்லை. இதிலிருந்தே அவர்களுடைய வீட்டில் குழந்தைக் குட்டிகள் அதிகமென்பது நமக்கு தெரிகிறதல்லவா.—லூக்கா 2:42-46.
இன்று பெரிய குடும்பங்கள்
இன்றோ, ஆன்மீகம், பொருளாதாரம், சமுதாயம், இன்னும் மற்றபிற காரணங்களுக்காக கிறிஸ்தவர்களில் அநேகர் சிறு குடும்பம், சிங்காரத் தோட்டம் என்ற பாலிசியைப் பின்பற்றுகின்றனர். இருந்தாலும்கூட, நிறைய சமுதாயங்களில் பெரிய குடும்பங்கள் சர்வசாதாரணம். உலக பிள்ளைகளின் நிலை 1997 (ஆங்கிலம்) என்பதன்படி, சஹாராவுக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இத்தகைய குடும்பங்கள் ஏராளம். அங்கே ஒரு சராசரி பெண் ஆறு குழந்தைகளுக்கு தாயாகிறாள்.
பெரிய குடும்பத்தை உடைய கிறிஸ்தவ பெற்றோருக்கு, பிள்ளைகளை யெகோவாவை நேசிக்கிறவர்களாக வளர்த்தெடுப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அநேகர் அதை வெற்றிகரமாக செய்து வருகிறார்கள். இந்த வெற்றியின் இரகசியம் என்ன தெரியுமா? குடும்பங்கள் உண்மை வணக்கத்தில் ஒன்றுசேர்ந்திருப்பதுதான். அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்துவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதிய வார்த்தைகள் இன்றுள்ள கிறிஸ்தவ குடும்பங்களுக்கு மிகவும் பொருத்தம். அவர் எழுதினார்: “சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.” (1 கொரிந்தியர் 1:10) இத்தகைய ஒற்றுமையை எவ்வாறு அடையலாம்?
பெற்றோரே, ஆவிக்குரிய நபர்களாக வாழுங்கள்!
பெற்றோர் கடவுளுக்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களாய் வாழ்வது ஓர் முக்கிய அம்சம். இஸ்ரவேலருக்கு மோசே சொன்னவற்றைச் சிந்தித்துப் பாருங்கள்: “இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பே[சு].”—உபாகமம் 6:4-7.
இதைச் சற்று கவனியுங்கள். கடவுளின் சட்டங்கள் பெற்றோரின் ‘இருதயத்தில்’ அச்சாய் பதிய வேண்டுமென மோசே சுட்டிக்காட்டினார். அப்போதுதான் தெய்வீக போதனைகளை பிள்ளைகளுக்கு தவறாமல் கற்றுத்தர அவர்களுக்கு மனம் வரும். பெற்றோர் ஆவிக்குரிய வாழ்வில் மூழ்கியவர்களாக இருந்தால்தான், பிள்ளைகளுக்கு அவற்றை எப்ப கற்பிக்கலாம், எப்ப கற்பிக்கலாம் என சந்தர்ப்பத்திற்காக ஆவலோடு காத்திருப்பர்.
ஆவிக்குரிய நபராக வாழ்ந்து யெகோவாவை இருதயப்பூர்வமாக நேசிக்க விரும்புகிறீர்களா? கடவுளுடைய வார்த்தையை தவறாமல் வாசித்து, அதைப் பற்றி தியானித்து, அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது மிக மிக அவசியம். யெகோவாவின் சட்டத்தை “இரவும் பகலும்” வாசித்து, அதில் பேரின்பம் அடைபவர், ‘நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பார்; அவர் செய்வதெல்லாம் வாய்க்கும்’ என சங்கீதக்காரன் எழுதினார்.—சங்கீதம் 1:2, 3.
நாள்தவறாமல் நீர்ப்பாய்ச்சப்படுகிற மரம் நல்ல பழங்களைத் தரும்; அதுபோல, ஆவிக்குரிய உணவால் போஷாக்கு பெறுகிற குடும்பங்கள் யெகோவாவின் மகிமைக்காக தெய்வீக கனிகளைப் பிறப்பிக்கின்றன. மேற்கு ஆப்பிரிக்காவில் வாழுகிற உவாமெக்வூவின் குடும்பம் இதற்கு நல்ல உதாரணம். உவாமெக்வூக்கு எட்டு பிள்ளைகள். இருந்தாலும் அவரும் அவருடைய மனைவியும் ரெகுலர் பயனியர்களாக அல்லது யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியர்களாக இருக்கின்றனர். அவர் சொல்கிறார்: “எங்க வீட்டில், குடும்ப பைபிள் படிப்பை 20 வருஷத்துக்கும் மேல விடாம நடத்திட்டு வர்றோம். பிள்ளைங்க, கைக்குழந்தைங்களா இருந்தப்ப இருந்தே, பைபிளைப் பத்தி சொல்லி கொடுக்க ஆரம்பிச்சோம். குடும்பமா பைபிளை படிக்கும்போது மட்டுமல்ல, ஊழியம் செய்யும்போதும், மத்த சமயத்திலேயும்கூட பைபிளைப் பத்திதான் அவங்ககிட்ட பேசுவோம். எங்க பிள்ளைங்க எல்லாருமே ஒழுங்கா ஊழியத்துக்கு போறாங்க. சின்னப்பொண்ணுக்கு ஆறு வயசுதான் ஆகுது. அவ ஒருத்தி மட்டும்தான் இன்னும் முழுக்காட்டுதல் எடுக்கலை.”
குழுவாக வேலை செய்தல்
“வீடு ஞானத்தினாலே கட்டப்படும்” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 24:3) குடும்பத்தில் இத்தகைய ஞானம் குழுவாக வேலை செய்ய உதவுகிறது. குழுவின் “கேப்டன்” அப்பா; ஏனென்றால், அவர்தானே வீட்டுக்கு கடவுளால் நியமிக்கப்பட்ட தலைவர். (1 கொரிந்தியர் 11:3) ஆவியால் ஏவப்பட்ட அப்போஸ்தலன் பவுல் தலைமைவகிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எழுதினார்: “தம் உறவினரை, சிறப்பாகத் தம் வீட்டாரை [பொருளாதார ரீதியிலும் ஆவிக்குரிய ரீதியிலும்] ஆதரியாதோர் விசுவாசத்தை மறுதலிப்பவராவர். அவர்கள் விசுவாசமற்றோரைவிடத் தாழ்ந்தோராவர்.”—1 திமொத்தேயு [தீமோத்தேயு] 5:8, பொ.மொ.
பைபிளிலுள்ள ஆலோசனைக்கு இசைவாக, கிறிஸ்தவ கணவர்கள் தங்கள் மனைவிகளின் ஆவிக்குரிய வாழ்வில் அக்கறை காட்ட வேண்டும். மனைவிகளை வீட்டுவேலை பளுவால் திணறடித்தால், அவர்களின் ஆவிக்குரிய வாழ்வு நலிவுறும். ஆப்பிரிக்க தேசம் ஒன்றில், புதிதாக முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர் ஒருவர் தம் மனைவிக்கு ஆவிக்குரிய காரியங்களில் ஆர்வம் குறைந்துவிட்டதாக சபை மூப்பர்களிடம் குறை சொன்னார். மூப்பர்கள் அவருக்கு கொடுத்த அறிவுரை என்ன தெரியுமா? உங்கள் மனைவி வீட்டுவேலை செய்யும்போது கூடமாட உதவுங்கள் என்பதே. எனவே கணவன் வீட்டுவேலைகளில் கூடமாட உதவ ஆரம்பித்தார். அதோடு, மனைவிக்கு நன்கு வாசிக்க கற்றுக் கொடுத்தார்; பைபிளின் அறிவை வளர்த்துக்கொள்ளவும் உதவினார். மனைவியும் எல்லாவற்றையும் ஆர்வமாக படித்தார். அதனால் இன்று முழு குடும்பமும் கடவுளுக்கு ஒன்றுசேர்ந்து சேவை செய்கிறார்கள்.
அப்பாமார்களே, நீங்கள் உங்களுடைய பிள்ளைகளின் ஆவிக்குரிய வாழ்விலும் அக்கறை காட்டவேண்டியது அவசியம். பவுல் எழுதினார்: “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.” (எபேசியர் 6:4) பிள்ளைகளை எரிச்சல்படுத்தக்கூடாது, அவர்களுக்கு நன்கு பயிற்சியளிக்க வேண்டும் என்ற பைபிளின் அறிவுரைகளை பெற்றோர் ஏற்று நடந்தால், குடும்பம் எனும் குழுவில் தங்களுக்கு பங்கு இருக்கிறது என பிள்ளைகள் உணருவர். இதனால், பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் உதவி செய்து, ஆவிக்குரிய இலக்குகளை அடைய ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொள்வர்.
உங்கள் பிள்ளைகள் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வயதை எட்டிவிட்டனரா? குழுவாக வேலை செய்வதற்கு, அப்பாவே எல்லாவற்றையும் தன் தலையில் போட்டுக்கொள்வதற்கு பதிலாக பொறுப்பை பிள்ளைகளிடமும் பகிர்ந்து அளிக்கலாம். 11 பிள்ளைகளை உடைய ஒரு மூப்பர், அதிகாலையிலேயே எழுந்து, வேலைக்கு செல்வதற்கு முன்பு தன் பிள்ளைகளில் சிலருக்கு பைபிள் படிப்பு நடத்துகிறார். மூத்த பிள்ளைகள் இப்போது முழுக்காட்டுதல் எடுத்துவிட்டார்கள். எனவே தங்களுடைய தம்பி தங்கைகளுக்கு இப்போது அவர்கள் மாறிமாறி உதவி செய்கிறார்கள். அவர்களுக்கு பைபிள் படிப்பை நடத்துவதிலும் உதவுகிறார்கள். அந்த அப்பா அவற்றை மேற்பார்வை செய்கிறார்; தன் பிள்ளைகளை பெரிதும் பாராட்டுகிறார். இப்போது அந்தக் குடும்பத்தில் மொத்தம் ஆறு பிள்ளைகள் முழுக்காட்டுதல் எடுத்துவிட்டார்கள்; மற்றவர்கள் அந்த இலக்கை அடைய உழைத்து வருகிறார்கள்.
மனம் திறந்து பேசுதல், ஒரேவிதமான லட்சியங்களை வைத்தல்
மனம் திறந்து, அன்பாக பேசுவதும், ஒரேவிதமான லட்சியங்களை வைத்து அவற்றை அடைய முயல்வதும் குடும்பத்தின் ஒற்றுமைக்கு மிக அவசியம். இதற்கு நைஜீரியாவில் வாழும் கிறிஸ்தவ மூப்பர் கார்டனின் வீட்டை வலம் வருவோமா? இவருக்கு 11 வயது முதல் 27 வயது வரை வரிசையாக ஏழு பிள்ளைகள். ஆறு பேர், பெற்றோரின் அடிச்சுவடைப் பின்பற்றி பயனியர் ஊழியம் செய்கிறார்கள். கடைக்குட்டி இப்போதுதான் முழுக்காட்டுதல் எடுத்திருக்கிறார்; அவரும் மற்றவர்களைப் போலவே சீஷராக்கும் வேலையில் தவறாமல் கலந்து கொள்கிறார். பெரிய பையன்கள் இருவரும் சபையில் உதவி ஊழியர்கள்.
கார்டன் தன் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பைபிள் படிப்பு நடத்தினார். அதோடு முழு குடும்பமாக சேர்ந்தும் பைபிளின் அறிவை விரிவாக்கும் திட்டத்தை வகுத்தார். ஒவ்வொருநாள் காலையிலும் எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து தினவாக்கியத்தைப் படிப்பர்; பிறகு, சபை கூட்டங்களுக்கு தயார் செய்வர்.
குடும்பத்தில் அனைவரும் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை ஒன்றுவிடாமல் படித்துவிட வேண்டுமென உறுதி பூண்டார்கள். சமீபத்தில், தினமும் பைபிள் வாசிக்கும் பழக்கத்தையும் அதில் சேர்த்துக் கொண்டனர். தினமும் தாங்கள் வாசிப்பதை மற்ற குடும்ப அங்கத்தினர்களிடம் சொல்வதன்மூலம், இந்த பழக்கத்தைக் கைவிடாமல் இருப்பதற்கு ஒருவருக்கொருவர் உற்சாகம் தருகின்றனர்.
வாராவாரம் குடும்ப பைபிள் படிப்பு இருப்பதை யாருக்கும் நினைப்பூட்ட வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் எல்லாரும் அதை ஆசையோடு எதிர்பார்த்து இருக்கின்றனர். பிள்ளைகள் வளர வளர அவர்களுடைய வயதுக்கும் தேவைக்கும் ஏற்ப குடும்பப் படிப்பில் எதை படிப்பது, எப்படி படிப்பது, எவ்வளவுநேரம் படிப்பது என்பதில் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கின்றனர்; அக்குடும்பத்தினர் கடவுளுக்கு உண்மையுள்ள மற்ற ஊழியர்களுடனும்கூட நெருங்கிய தோழமையை வைத்திருக்கின்றனர். இவர்கள் பிள்ளைகளின் வாழ்வில் சிறந்த செல்வாக்கு செலுத்தியிருக்கின்றனர்.
எதை செய்தாலும் குடும்பமாக செய்கின்றனர்; பொழுதுபோக்குக்காகவும் நேரம் ஒதுக்குகின்றனர். வாரத்துக்கொரு தடவை, “பேமிலி ஈவ்னிங்”குக்காக நேரம் ஒதுக்குகின்றனர். அப்போது, க்விஸ், வயிறுவலிக்க சிரிக்க வைக்கிற ஜோக்குகள், பியானோ வாசித்தல், கதை சொல்லுதல், ‘ஹாய்’ ஆக இருத்தல் என பொழுதைக் கழிக்கின்றனர். எப்போதாவது, பீச்சுக்கும், பார்த்து ரசிக்க வேண்டிய இடங்களுக்கும் செல்கின்றனர்.
யெகோவாவைச் சார்ந்திருத்தல்
மேலே விவரிக்கப்பட்டவை பெரிய குடும்பத்தை நடத்துவது எளிது என சொல்வதில்லை. கிறிஸ்தவர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: “எட்டு பிள்ளைகளுக்கு அப்பாவாக இருக்கிறது என்கிறது சாதாரண விஷயமல்ல. அது பெரிய சவால். அவுங்கள வளர்த்து ஆளாக்கிறதுக்கு ஆவிக்குரிய விஷயத்திலும்சரி, பொருளாதார விஷயத்திலும்சரி ஏராளம் வேண்டியிருக்கு. அதுக்கு நான் முதுகு ஒடிய வேலை செய்தாகணும். என்னோட மூத்த பிள்ளைங்க டீன் ஏஜில் இருக்கிறாங்க. எட்டு பேருமே ஸ்கூல் போறாங்க. அவங்களுக்கு ஆவிக்குரிய பயிற்றுவிப்பு எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் என்னோட ஒண்ணுரெண்டு பிள்ளைங்க பிடிவாதமாவும், கீழ்ப்படியாமலும் இருக்காங்க. அது என் மனசுக்கு வருத்தமாதான் இருக்குது. இருந்தாலும், நானே சில சமயங்கள்ல யெகோவாவுக்கு பிடிக்காதத செய்து அவருடைய மனசை வேதனப்படுத்தறேன். அவர் என்னை மன்னிக்கிறாருல்ல. அதுபோல என் பிள்ளைகளும் நல்ல புத்தி அடையறவரைக்கும் நான் பொறுமையோடு அவங்கள திருத்தித்தான் ஆகணும்.
“நாம எல்லாரும் மனந்திரும்ப வேணும்னு ஆசைப்படறதனால யெகோவா நம்மகிட்ட பொறுமையா இருக்காரு. அவருடைய முன்மாதிரிய நானும் பின்பற்ற முயலுறேன். என் குடும்பத்தில் உள்ளவங்களுக்கு நான் பைபிள் படிப்பு நடத்தறேன். என்னோட ஒருசில பிள்ளைங்க முழுக்காட்டுதல் எடுக்கனும்ங்கிற லட்சியம் வெச்சு அதுக்காக உழைக்கிறாங்க. நல்ல பலன் கிடைக்கணும்கிறதுக்காக நான் என்னோட சொந்த பலத்தில நம்பிக்கை வைக்கிறதில்ல. என்னால செய்ய முடிஞ்சதெல்லாம் ஏதோ கொஞ்சம்தான். ஜெபிக்கிறதினால் யெகோவாகிட்ட எப்பவும் இருந்ததைவிட அதிக நெருக்கமா ஆக விரும்பறேன்: ‘உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்’ என்ற இந்த நீதிமொழியை என் வாழ்க்கையில பொருத்த முயற்சிக்கிறேன். என் பிள்ளைங்களுக்கு பயிற்சி கொடுக்கிற இந்தப் பொறுப்பை நான் செய்து முடிக்க யெகோவா எனக்கு உதவுவார்.”—நீதிமொழிகள் 3:5, 6.
ஒருபோதும் விட்டுக்கொடுத்து விடாதீர்!
சில சமயங்களில், உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்கும் பயிற்சியெல்லாம் விழலுக்கு இறைத்த நீராய் வீணாகப் போய்விடலாம்; ஆனால் அதற்காக அதை ஒருபோதும் நிறுத்தி விடாதீர்கள்! விடா முயற்சியுடன் இருங்கள்! உங்கள் பிள்ளைகள் இப்போது நீங்கள் எடுக்கும் முயற்சிகளை உயர்வாய் மதிக்காமலோ, உங்கள் பேச்சுக்கு இசைவாக நடக்காமலோ இருக்கலாம். ஆனால் பிற்காலத்தில் அவ்வாறு செய்யலாம். ஒரு பிள்ளை ஆவியின் கனிகளை வெளிக்காட்டுகிற கிறிஸ்தவராக வளர வெகுநாட்கள் செல்லும்.—கலாத்தியர் 5:22, 23.
கென்யாவில் வாழும் மோனிகா பத்து பிள்ளைகள் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் சொல்கிறார்: “நாங்க குழந்தைங்களா இருந்தப்ப இருந்தே அப்பாம்மா பைபிளப் பத்தி சொல்லி கொடுத்தாங்க. அப்பா, வாராவாரமும் அமைப்பு வெளியிட்ட புஸ்தகங்கள்ல இருந்து படிப்பு நடத்துவார். அவரோட வேலை காரணமா, வாராவாரம் அதே நாள்ல படிக்க முடியல. சில சமயம், வேலையிலிருந்து வரும்போதே, நாங்க வெளியில் விளையாடிட்டு இருக்கிறத பார்ப்பாரு. இன்னும் அஞ்சு நிமிஷத்தில் எல்லாரும் பைபிள் படிப்புக்காக உள்ள வந்துடனும்னு சொல்லுவாரு. படிப்பு முடிஞ்சதுக்கப்புறம், ஏதாவது கேள்வியிருந்தா கேட்கச் சொல்வாரு, இல்லேனா எங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தா அதப் பத்தி கேப்பாரு.
“நாங்க எப்பவும் தேவபக்தியுள்ள பிள்ளைங்களோட பழகுறோமானு உன்னிப்பா கவனிப்பாரு. ஸ்கூல்ல நாங்க எப்படி இருக்கிறோம்னு டீச்சர்ங்க கிட்ட தவறாம வந்து விசாரிப்பாரு. அந்தமாதிரி ஒரு தடவ வந்தப்ப என்னோட மூணு அண்ணன்க மத்த பசங்ககிட்ட சண்ட போடறாங்க, சில சமயம் ரொம்ப முரட்டுத்தனமா நடந்துக்கிறாங்கன்னு அவருக்கு தெரிஞ்சிடுச்சு. அப்படி நடந்ததுக்காக வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் அப்பா அவங்களுக்கு தண்டனை கொடுத்தாரு. ஏன் தெய்வ பக்தியுள்ளவங்களா நடக்கணும்னு பைபிள்ல இருந்து விளக்கினாரு.
“எங்க அப்பாம்மா எங்ககூட உட்கார்ந்து கூட்டங்களுக்கு தயாரிப்பாங்க. அதனால கூட்டங்களுக்கு போறதால எவ்வளவு நன்மைங்கிறதையும் காண்பிச்சாங்க. ஊழியம் நல்லா செய்யறதுக்காக வீட்டிலேயே அதை கத்துக் கொடுத்து, பழகிப்பார்க்க சொன்னாங்க. குழந்தைங்களா இருந்தப்பவிருந்தே நாங்க அவங்ககூட ஊழியத்துக்கு போவோம்.
“இப்ப, என்னோட ரெண்டு அண்ணன்க ஸ்பெஷல் பயனியரா இருக்காங்க. தங்கச்சி ரெகுலர் பயனியர்; அக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அவங்களும் அவங்க குடும்பமும் வைராக்கியமான சாட்சிகளாக இருக்காங்க. என்னோட பதினெட்டு வயசு தங்கச்சியும், பதினாறு வயசு தங்கச்சியும் முழுக்காட்டுதல் பெற்ற பிரஸ்தாபிகள். இரண்டு குட்டித் தம்பிகளும் இப்பதான் ஊழியத்துக்கு வர ஆரம்பிச்சிருக்காங்க. நான் யெகோவாவின் சாட்சிகளோட கென்யா கிளை அலுவலகத்தில மூணு வருஷமா சேவை செய்யறேன். எங்க அப்பாம்மா ஆவிக்குரிய நபர்கள். அதனால அவங்கள நான் ரொம்ப நேசிக்கிறேன்; அவங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவங்க எங்களுக்கு சிறந்த முன்மாதிரி வெச்சாங்க.”
உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும்சரி, நித்திய ஜீவனுக்கான பாதையில் நடப்பதற்கு அவர்களுக்கு உதவுவதை ஒருபோதும் நிறுத்திவிடாதீர்கள். யெகோவா உங்கள் முயற்சிகளை ஆசீர்வதிக்கையில் அப்போஸ்தலனாகிய யோவான் தன் ஆவிக்குரிய பிள்ளைகளைப் பற்றி சொன்ன வார்த்தைகளை நீங்களும் சொல்வீர்கள்: “என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.”—3 யோவான் 4.