அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்
இன்னல்களை பவுல் ஜெயிக்கிறார்
பவுல் நம்பிக்கையிழந்த நிலையில் இருக்கிறார். அவரும் இன்னும் 275 பேரும் செல்கிற கப்பல் கொந்தளிக்கும் கடலில் சிக்கிக் கொள்கிறது. மத்தியதரைக் கடலுக்கே உரித்தான படுமோசமான சூறாவளிக் காற்றில்—வாடைக்கொண்டல் என்னும் பேய்க்காற்றில்—மாட்டி தத்தளிக்கின்றனர். புயல் அந்தளவு கடுமையாக இருந்ததால், பகலில் கதிரவனின் பொன்னொளியையோ இரவில் நட்சத்திரப் பூக்களையோ காண முடியவில்லை. மரணத்தின் பிடியில் இருந்த பயணிகளை பயம் ஆட்டிப் படைத்தது புரிந்துகொள்ளத்தக்கதே. இருப்பினும், இராக்கனாவில் தான் பார்த்த தெய்வீக தரிசனத்தை சொல்லி அவர்களை பவுல் தேற்றுகிறார்: “கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது.”—அப்போஸ்தலர் 27:14, 20-22.
புயல் வீச ஆரம்பித்த 14-வது நாள் இரவில், மாலுமிகளுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது. நீரின் ஆழம் வெறும் 20 ஆள் ஆழமே (ஃபேதம்)a என்று காண்கின்றனர். சிறிது தூரத்திற்கு பின் மறுபடியும் ஆழத்தை அளக்கின்றனர். இம்முறையோ, 15 ஆள் ஆழமே இருக்கிறது. கரை இதோ வெகு அருகில்! நிம்மதிப் பெருமூச்சுவிட வைக்கிற நற்செய்தி அது. ஆனால், அதோடுகூட கவலையும் அவர்களை உலுக்கி எடுக்கிறது. ஆழமற்ற நீரில் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டு பாறைகளில் மோதி கப்பலே தவிடு பொடியாகி விடுமோ என்ற பயமே. மாலுமிகள் புத்திசாலித்தனமாக நங்கூரத்தைப் போடுகின்றனர். ஸ்கிஃப் என்றழைக்கப்படும் சிறிய படகு ஒன்றை கடலில் இறக்கி அதில் ஏறி செல்ல சிலர் விரும்புகின்றனர். இது ஆபத்தான முயற்சி.b ஆனால், பவுல் அவர்களை தடுத்து நிறுத்துகிறார். பவுல் நூற்றுக்கு அதிபதியையும் சேவகரையும் நோக்கி, “இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்க மாட்டீர்கள்” என்கிறார். அதிகாரி பவுலின் சொல்லுக்கு செவி கொடுக்கவே, கப்பலில் இருந்த 276 பயணிகளும் எப்போது விடியும் என கொட்ட கொட்ட விழித்திருக்கின்றனர்.—அப்போஸ்தலர் 27:27-32.
கப்பற்சேதம்
மறு நாள் காலை, கரையுள்ள ஏதோ வளைகுடாப் பகுதி பயணிகளின் கண்களில் தென்படுகிறது. புத்துயிர் பெற்றவர்களாக, மாலுமிகள் நங்கூரத்தை அவிழ்த்து கடலில் விடுகிறார்கள். காற்று வீசும் திசையில் பாய்மரத்தை விரித்துக் கட்டி கரையை நோக்கிக் கப்பலை செலுத்துகின்றனர். மகிழ்ச்சி ஆரவாரத்தோடு கப்பல் கரையை நோக்கி மெல்ல நகரத் தொடங்குகிறது.—அப்போஸ்தலர் 27:39, 40.
இருப்பினும், திடீரென்று ஆழமற்ற ஓரிடத்தில் கப்பல் மோதுகிறது. வேகமாக வந்து மோதிய அலைகள் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன. கப்பலின் பின்பகுதியை தாக்க, அது சுக்கு நூறாகிறது. எல்லா பயணிகளும் கப்பலை அப்படியே விட்டுவிட்டு வரவேண்டியதுதான்! (அப்போஸ்தலர் 27:41) ஆனால், இது ஒரு புதுப்பிரச்சினையை கிளப்பி விடுகிறது. பவுல் உட்பட, கப்பலில் இருக்கிற பெரும்பாலோர் கைதிகள். ரோம சட்டத்தின்படி, ஒரு காவலாளர் கைதியை தப்பவிட்டால், கைதிக்கு என்ன தண்டனை விதிக்கப்பட்டதோ அதை அந்த சேவகனே அனுபவிக்க வேண்டும். உதாரணமாக, ஒரு கொலைகாரன் தப்பிவிட்டால், கவனக்குறைவாக இருந்த காவலாளனுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
இதற்கு பயந்தே போர்ச்சேவகர்கள் எல்லாக் கைதிகளையும் கொன்றுவிட திட்டமிடுகின்றனர். ஆனால், நூற்றுக்கு அதிபதி பவுலை காப்பாற்ற விரும்பி, அவர்களுடைய திட்டம் நிறைவேறாமல் தடுக்கிறார். நீந்தத் தெரிந்தவர்கள் கடலில் குதித்து முதலில் கரை சேரும்படி கட்டளையிடுகிறார். மற்றவர்கள் பலகைகளையாவது கப்பலின் சிதறிய துண்டுகளையாவது பிடித்துக்கொண்டு கரை சேர கட்டளையிடுகிறார். ஒவ்வொருவராக, பயணிகள் எல்லாரும் சிதைந்த கப்பலைவிட்டு கரை சேருகின்றனர். பவுலின் வார்த்தை நூற்றுக்கு நூறு உண்மையாகிறது. உயிர்ச்சேதமே இல்லை!—அப்போஸ்தலர் 27:42-44.
மால்டாவில் அற்புதம்
மால்டா என்றழைக்கப்படும் ஒரு தீவில் களைத்திருந்த அவர்கள் அனைவரும் தஞ்சம் புகுகின்றனர். அத்தீவினர் “வேற்று-பாஷை மக்கள்.” இப்பதத்தின் சொல்லர்த்தமான அர்த்தம் “காட்டுமிராண்டிகள்” (கிரேக்கில், வார்வாரோஸ்).c ஆனால், மால்டா தீவு மக்களோ காட்டுத்தனமானவர்கள் அல்ல. மாறாக, அவர்கள் “எங்களுக்குக் காட்டின அன்பு கொஞ்சநஞ்சமல்ல. அந்த வேளையிலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள்” என பவுலோடு பிரயாணம் செய்த லூக்கா அறிவிக்கிறார். மால்டா தீவினரோடு சேர்ந்து பவுலும் சுள்ளிகளைப் பொறுக்கிச் சேர்த்துத் தீயில் போடுகிறார்.—அப்போஸ்தலர் 28:1-3, NW அடிக்குறிப்பு.
திடீரென, ஒரு விரியன் பாம்பு பவுலின் கையில் சுற்றிக் கொள்கிறது! பவுல் ஒரு கொலைகாரன் என தீவு மக்கள் ஊகித்துக் கொள்கின்றனர். பாவத்திற்கு காரணமாய் இருந்த உறுப்பை தாக்குவதன்மூலம் குற்றவாளிகளை ஒருவேளை கடவுள் தண்டிக்கிறார் என அவர்கள் கருதுகின்றனர். ஆனால் அடுத்து என்ன நடக்கிறது பாருங்கள்! பவுல் பாம்பை நெருப்பில் உதறிவிடுகிறார். அத்தீவு மக்கள் ஸ்தம்பித்து நிற்கின்றனர். “[பவுலுக்கு] வீக்கங்கண்டு, அல்லது சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்” என லூக்காவின் பதிவு விவரிக்கிறது. தீவு மக்கள் தங்களுடைய எண்ணத்தை மாற்றிக் கொள்கின்றனர். பவுலைக் கடவுள் என்று சொல்லத் தொடங்குகின்றனர்.—அப்போஸ்தலர் 28:3-6.
அடுத்த மூன்று மாதங்களை பவுல் மால்டா தீவிலே கழிக்கிறார். அந்த காலப்பகுதியில், பவுலை அன்போடு உபசரித்த, தீவின் தலைவனாகிய புபிலியுவின் தந்தையை குணமாக்குகிறார். அத்தீவில் நோயுற்ற மற்றவர்களும் அவரிடத்தில் வந்து குணமடைகின்றனர். மேலும், சத்தியத்தின் விதையை பவுல் விதைக்கிறார். அன்போடு உபசரித்த மால்டா மக்களுக்கு இது நிறைய ஆசீர்வாதங்களை பொழிகிறது.—அப்போஸ்தலர் 28:7-11.
நமக்கு பாடம்
அவருடைய ஊழியத்தில் பவுல் அநேக பிரச்சினைகளை எதிர்ப்பட்டார். (2 கொரிந்தியர் 11:23-27) நற்செய்திக்காக கைதியானதை மேலே சொல்லப்பட்ட பதிவு விவரிக்கிறது. அதன் பின்னர், அவர் எதிர்ப்பட்ட எதிர்பாரா சோதனைகள்: கடும்புயல், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கப்பற்சேதம். இவை அனைத்திலும், நற்செய்தியின் வைராக்கியமுள்ள பிரசங்கியாக இருக்கும் தன் தீர்மானத்தில் சிறிதேனும் இழைப்பிசகாமல் இருந்தார். “வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன். எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” என அனுபவத்தால் எழுதினார்.—பிலிப்பியர் 4:12, 13, பொ.மொ.
உண்மை கடவுளுடைய வைராக்கியமான ஊழியர்களாக இருக்க எடுத்துள்ள நம் தீர்மானத்தை வாழ்க்கையின் பிரச்சினைகள் வலுவிழக்கச் செய்ய ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எதிர்பாராத சோதனைகள் வரும்போது, யெகோவாவின் மேல் பாரத்தைப் போடுவோமாக. (சங்கீதம் 55:22) சோதனைகளை சகிக்க அவர் எப்படி நமக்கு வழிகளை செவ்வைப்படுத்துகிறார் என்பதைப் பார்க்க பொறுமையோடு காத்திருப்போமாக. இதற்கிடையே, நமக்கு சிறந்ததையே செய்வார் என்ற முழு நம்பிக்கையில் அவரை உண்மையோடு தொடர்ந்து சேவிப்போமாக. (1 கொரிந்தியர் 10:13; 1 பேதுரு 5:7) என்ன இடையூறு வந்தாலும்சரி, நாமும் பவுலைப் போல் உறுதியாய் நிலைத்திருந்தால் இன்னல்களை வெல்ல முடியும்.
[அடிக்குறிப்புகள்]
a ஓர் ஆள் ஆழம் (ஃபேதம்) என்பது சுமார் 1.8 மீட்டர்.
b ஸ்கிஃப் என்பது ஒரு சிறிய பளு குறைந்த படகு. கடற்கரைக்கு அருகே கப்பலை நங்கூரமிட்டு கரைக்கு செல்ல பயன்படுத்தப்படும் சிறு படகு. மாலுமிகள் தங்களுடைய உயிரைக் காத்துக் கொள்வதற்காக கப்பல் ஓட்டத்தெரியாத சிலரிடத்தில் பொறுப்பை தட்டிக்கழிக்க எண்ணினர். அவர்களுடைய உயிரை மாலுமிகள் துச்சமாக கருதினர் என சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.
c வில்ஃப்ரெட் ஃபங்க் என்பவரின் வார்த்தையின் தோற்றங்கள் (ஆங்கிலம்) புத்தகம் குறிப்பிடுவதாவது: “கிரேக்கர்கள் பிற மொழிகளை வெறுத்தனர். அவை அவர்களுடைய காதுகளில் ‘வார்-வார்’ (bar-bar) என்றே ஒலித்தன. அவற்றைப் பேசுபவர்களை வார்வாரோஸ் (barbaros) என்றே அழைத்தனர்.”