கிறிஸ்தவ சபை—ஆறுதலின் பிறப்பிடம்
பாப்பி ஓர் இளம்பெண். அவளுக்கு இருபது இருபத்திரெண்டு வயதிருக்கும். பெற்றோருடன் எதையும் மனம்விட்டு பேசமுடியாத நிலையில் இருந்தாள். இப்படிப்பட்ட வேதனைமிக்க குடும்ப சூழலால் நிலைகுலைந்து போயிருந்தாள்.a ஒரு கிறிஸ்தவ மூப்பரிடமும் அவருடைய மனைவியிடமும் தன் இதயத்தில் உள்ளதை எல்லாம் கொட்டினாள். அதன் பிறகு அவர்களுக்கு இவ்வாறு எழுதினாள்: “என்னிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்கியதற்கு உங்களுக்கு ரொம்ப நன்றி. நீங்கள் என்மீது அக்கறைகாட்டியது எவ்வளவு ஆறுதலாய் இருந்தது என்பது உங்களுக்குத் தெரியாது. நான் நம்பிக்கையோடு பேசுவதற்கு யெகோவா எனக்கு தந்த நபர்களுக்காக அவருக்கு நன்றி.”
டியூலா என்ற பெண் சமீபத்தில் விதவையானாள். அவளுக்கு இரண்டு வாலிப பிள்ளைகள். இப்பொழுது இவள் உணர்ச்சி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள். சபையிலுள்ள ஒரு கிறிஸ்தவ தம்பதியினர் இவளையும் இவளுடைய பிள்ளைகளையும் தவறாமல் சந்தித்து பலப்படுத்தினர். தன்னுடைய சூழ்நிலைமையை வெற்றிகரமாக சமாளித்தப்பின், அவர்களுக்கு ஒரு வாழ்த்து மடல் அனுப்பினாள். அதில் இவ்வாறு எழுதியிருந்தாள்: “என்னுடைய ஜெபங்களில் எப்பொழுதும் உங்களை நினைத்துக்கொள்கிறேன். நீங்கள் எனக்கு பக்கபலமாக இருந்து உதவிய அநேக சந்தர்ப்பங்களை நினைத்துப் பார்க்கிறேன்.”
இந்த உலகின் அழுத்தங்கள் அதிகரித்துக்கொண்டே வருவதால் சிலசமயங்களில் ‘பாரம்சுமப்பதைப்’ போல் நீங்கள் உணருகிறீர்களா? (மத்தேயு 11:28) வேதனைமிக்க அனுபவங்கள் குறுக்கிட்டு உங்களுடைய அமைதலான வாழ்க்கை ஓட்டத்தை ‘சமயமும் எதிர்பாரா சம்பவங்களும்’ தடைசெய்கின்றனவா? (பிரசங்கி 9:11, NW) மனச்சோர்வால் இப்படி கஷ்டப்படுவது நீங்கள் மட்டுமே அல்ல. ஆனால் துயரத்தில் உழன்றுகொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோர் ஏற்கெனவே பெற்றிருப்பது போலவே யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ சபையில் நீங்களும் அர்த்தமுள்ள உதவியை பெறலாம். பொ.ச. முதல் நூற்றாண்டில், உடன் கிறிஸ்தவர்கள் சிலர் தனக்கு மிகவும் ‘ஆறுதலளிப்பவர்களாய்’ இருந்ததை அப்போஸ்தலன் பவுல் கண்டார். (கொலோசெயர் 4:10, 11) நீங்களும் இப்படிப்பட்ட அனுபவத்தைப் பெறலாம்.
ஆதரவும் உதவியும்
கிரேக்க வேதாகமத்தில், “சபை” என்ற வார்த்தை எக்லிஸியா என்ற கிரேக்க பதத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒன்றுகூடிவரும் ஆட்களின் தொகுதியை இது அர்த்தப்படுத்துகிறது. ஒருமைப்பாடும் பரஸ்பர ஆதரவும் இந்த வார்த்தையில் பொதிந்துள்ள கருத்துக்கள்.
கிறிஸ்தவ சபை கடவுளுடைய சத்திய வார்த்தையை ஆதரித்து அவருடைய ராஜ்ய நற்செய்தியை அறிவிக்கிறது. (1 தீமோத்தேயு 3:15; 1 பேதுரு 2:9) ஆனால், அது சபையோடு கூட்டுறவு கொள்கிறவர்களுக்கு ஆவிக்குரிய ஆதரவையும் உதவியையும் தருகிறது. அங்கே அன்பும் அக்கறையும் பாசமும் நிறைந்த நண்பர்களின் தொகுதியை ஒருவர் காணலாம்; நெருக்கடியான காலங்களில் மற்றவர்களுக்கு உதவியையும் ஆறுதலையும் அளிக்க அவர்கள் தயாராகவும் விருப்பமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.—2 கொரிந்தியர் 7:5-7.
யெகோவாவின் வணக்கத்தார் அவருடைய சபையில் எப்பொழுதும் பாதுகாப்பை கண்டடைந்திருக்கின்றனர். ஒன்றுகூடிவரும் கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் மகிழ்ச்சியை கண்டடைந்ததாகவும் பாதுகாப்புணர்வை பெற்றதாகவும் சங்கீதக்காரன் சுட்டிக்காட்டினார். (சங்கீதம் 27:4, 5; 55:14; 122:1) அதைப் போலவே இன்றும், கிறிஸ்தவ சபை ஒருவரையொருவர் கட்டியெழுப்பி உற்சாகப்படுத்தும் உடன் விசுவாசிகளின் கூட்டுறவாலானது.—நீதிமொழிகள் 13:20; ரோமர் 1:10, 11.
சபையிலுள்ள அங்கத்தினர்கள், “யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்ய” போதிக்கப்படுகிறார்கள். (கலாத்தியர் 6:10) அவர்கள் பெறும் பைபிள் அடிப்படையிலான கல்வி பரஸ்பர சகோதர அன்பையும் பாசத்தையும் வெளிக்காட்டும்படி தூண்டுவிக்கிறது. (ரோமர் 12:10; 1 பேதுரு 3:8) தயவு, சாந்தம், கனிவான இரக்கம் ஆகிய பண்புகளை காட்டுவதற்கு சபையிலுள்ள சகோதர சகோதரிகள் தூண்டப்படுகிறார்கள். (எபேசியர் 4:3) ஏதோ கடமைக்கு வணக்கத்தாராக இருப்பதற்குப் பதிலாக, மற்றவர்களுக்கு அன்பான அக்கறையை காண்பிக்கிறார்கள்.—யாக்கோபு 1:27.
இதனால், ஒடுக்கப்பட்டவர்கள் கனிவான குடும்ப சூழலை சபையில் காண்கிறார்கள். (மாற்கு 10:29, 30) நெருங்கிய, அன்பான ஒரு தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு அவர்களை பலப்படுத்துகிறது. (சங்கீதம் 133:1-3) சபையின் வாயிலாக “உண்மையும் விவேகமுள்ள அடிமை” போஷாக்களிக்கும் ஆவிக்குரிய ‘உணவை’ ‘ஏற்ற வேளையில்’ அளிக்கிறது.—மத்தேயு 24:45, NW.
அன்பான கண்காணிகளிடமிருந்து உதவி
கிறிஸ்தவ சபை அங்கத்தினர்கள் அதில் அன்பான, புரிந்துகொள்கிற, தகுதியுள்ள மேய்ப்பர்களை எதிர்பார்க்கலாம்; அவர்கள் ஆவிக்குரிய ஆதரவையும் உற்சாகத்தையும் அளிக்கிறார்கள். இத்தகைய குணங்களுள்ள மேய்ப்பர்கள் “காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” இருக்கிறார்கள். (ஏசாயா 32:1, 2) ஆவியால் நியமிக்கப்பட்ட மூப்பர்கள் அல்லது கண்காணிகள், கடவுளுடைய செம்மறியாடு போன்ற மக்களை கவனித்துக்கொள்கிறார்கள், நோய்வாய்ப்பட்டோரையும் மனச்சோர்வடைந்தோரையும் உற்சாகப்படுத்துகிறார்கள், தவறிழைத்தவர்களை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.—சங்கீதம் 100:3; 1 பேதுரு 5:2, 3.
சபை மூப்பர் குழுவினர், உடன் விசுவாசிகள் எதிர்ப்படும் உடல்நல அல்லது மனநல பிரச்சினைகளை குணப்படுத்தும் தகுதிபெற்ற ஆலோசகர்களோ மருத்துவர்களோ அல்ல. இந்தக் காரிய ஒழுங்குமுறையில், வியாதியஸ்தருக்கு “வைத்தியன்” தேவை. (லூக்கா 5:31) என்றபோதிலும், ஆவிக்குரிய விதத்தில் தேவை இருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட மேய்ப்பர்கள் உதவ முடியும். (யாக்கோபு 5:14, 15) எப்பொழுதெல்லாம் சாத்தியமோ, அப்பொழுதெல்லாம் மூப்பர்கள் வேறுசில உதவிக்கும் ஏற்பாடு செய்கிறார்கள்.—யாக்கோபு 2:15, 16.
இத்தகைய அன்பான ஏற்பாட்டிற்கு பின்னால் இருப்பது யார்? யெகோவா தேவனே! யெகோவா இவ்வாறு அறிவிப்பதாக எசேக்கியேல் தீர்க்கதரிசி சொல்கிறார்: “நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப் பார்ப்பேன். . . . நான் என் ஆடுகளைத்தேடி, . . . அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பிவரப்பண்ணி, என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன்.” மெலிந்த, வலுவற்ற ஆடுகளைப் பற்றியும் கடவுள் அக்கறை கொள்கிறார்.—எசேக்கியேல் 34:11, 12, 15, 16.
தக்க தருணத்தில் உண்மையான உதவி
கிறிஸ்தவ சபையில் உண்மையான உதவி நிஜமாகவே கிடைக்கிறதா? ஆம், சபை உதவிக்கரம் நீட்டிய பல்வேறு சந்தர்ப்பங்களை பின்வரும் உதாரணங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
◆ அன்பானவரை மரணத்தில் இழத்தல். தீராத வியாதியால் அவதிப்பட்டு பின்பு அன்னாவின் கணவர் இறந்துவிட்டார். “அப்போதிருந்து கிறிஸ்தவ சகோதரர்களிடமிருந்து கனிவான அன்பை பெறுகிறவளாக ஆகிவிட்டேன்” என்று சொல்கிறாள். “உடன் விசுவாசிகளிடமிருந்து ஆதரவும் கனிவான தழுவுதலும் உற்சாகமளிக்கும் அன்பான வார்த்தைகளும் தொடர்ந்து கிடைப்பது, இதயம் நின்றுவிடுவதற்குப் பதிலாக என்னுடைய இதயம் துடிக்க வைத்திருக்கிறது, அதற்காக யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன். அவர்கள் காட்டிய அன்பு என்னை அதிகமாக ஆதரித்து, அரவணைத்து தாங்கி நிறுத்தியிருக்கிறது.” மரணத்தில் அன்பானவரை இழந்த துயரை நீங்களும் ஒருவேளை அனுபவித்திருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில், சபையிலுள்ள அங்கத்தினர்கள் தேவையான ஆறுதலையும் உணர்ச்சிப்பூர்வ ஆதரவையும் தரமுடியும்.
◆ வியாதி. போலந்தைச் சேர்ந்த ஆர்தர் என்ற ஒரு பயணக் கண்காணி, ஆவிக்குரிய விதத்தில் பலப்படுத்துவதற்காக மத்திய ஆசியாவிலுள்ள சபைகளை வழக்கமாக விஜயம் செய்துவந்தார். இந்த சந்திப்புகளில் ஒன்றில், அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டுவிட்டார், அவர் சிக்கலான பிரச்சினைகளை எதிர்ப்பட ஆரம்பித்தார். “[கஸகஸ்தானிலுள்ள ஒரு நகரத்தின்] சகோதர சகோதரிகள் எப்படி என்னை கவனித்துக்கொண்டார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்” என மிகுந்த போற்றுதலோடு ஆர்தர் சொல்கிறார். “சகோதர சகோதரிகளில் அநேகர் எனக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்கள்—அதோடு பைபிள் படிப்பில் அக்கறை காட்டியவர்களும்— பணமும் உணவும் மருந்து மாத்திரைகளும் கொண்டுவந்து கொடுத்தார்கள். . . . அதை அவர்கள் அதிக சந்தோஷத்தோடு செய்தார்கள்.
“கொஞ்சம் பணத்தோடு எனக்கு வந்த இந்தக் கடிதத்தையும் நான் பெற்றபோது எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளை கற்பனை செய்துபாருங்கள்: ‘அன்புள்ள சகோதரருக்கு, உங்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள். ஐஸ் கிரீம் வாங்குவதற்கு அம்மா எனக்கு பணம் கொடுத்தார்கள், ஆனால் மருந்து செலவுக்காக அதை உங்களுக்கு கொடுக்க நான் விரும்பினேன். நீங்கள் சீக்கிரம் குணமாக வேண்டும். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். நாம் இன்னும் நீண்டகாலம் சேவைசெய்ய யெகோவா விரும்புகிறார். பாடம்புகட்டும் நல்ல கதைகள் எங்களுக்கு இன்னும் கொஞ்சம் சொல்லுங்கள். இப்படிக்கு வோவா.’ ” ஆம், இந்த அனுபவத்தில் காண்பிக்கப்பட்டுள்ளபடி, சபையிலுள்ள சிறுவர்களும் பெரியவர்களும் வியாதியாக இருப்போருக்கு ஆறுதல் அளிக்க முடியும்.—பிலிப்பியர் 2:25-29.
◆ மனச்சோர்வு. பயனியராக, அதாவது முழுநேரம் ராஜ்ய செய்தியை அறிவிப்பவராக ஆகவேண்டும் என்பது டெரியின் இதயப்பூர்வமான ஆசை. ஆனால் பிரச்சினைகளின் காரணமாக அவர் செய்துவந்த பயனியர் சேவையை நிறுத்த வேண்டியிருந்தது. “இந்த ஊழியத்தை ஆரம்பித்து ஒரு வருஷங்கூட செய்ய முடியவில்லையே என்ற பயங்கரமான குற்றவுணர்ச்சி எனக்கு இருந்தது” என அவள் சொல்கிறாள். யெகோவாவின் அங்கீகாரம் தான் செய்யும் சேவையின் அளவை பொருத்தே இருக்கும் என டெரி தவறாக நினைத்தாள். (மாற்கு 12:41-44-ஐ வேறுபடுத்திக் காண்க.) மிகவும் மனச்சோர்வடைந்ததால் அவள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாள். ஆனால் பிற்பாடு புத்துணர்ச்சியூட்டும் உதவி சபையிலிருந்து அவளுக்கு கிடைத்தது.
டெரி சொல்கிறாள்: “வயதான ஒரு பயனியர் சகோதரி உடனே எனக்கு உதவிசெய்தார்கள், என்னுடைய உணர்ச்சிகளை அவர்களிடம் கொட்டியபோது எனக்கு செவிகொடுத்துக் கேட்டார்கள். நான் அவருடைய வீட்டை விட்டுச்சென்றபோது, என்னுடைய எல்லா பாரத்தையும் கீழே இறக்கி வைத்ததைப் போல உணர்ந்தேன். அது முதற்கொண்டு, இந்தப் பயனியர் சகோதரியும் சபையில் மூப்பராக இருக்கும் அவளுடைய கணவரும் சொல்லமுடியாத அளவுக்கு நிறைய உதவி செய்தார்கள். நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டு தினமும் அவர்களிடமிருந்து போன் வரும். . . . சிலசமயங்களில் அவர்களுடைய குடும்ப படிப்பில் என்னையும் சேர்த்துக்கொண்டார்கள், குடும்பங்கள் நெருங்கி இருப்பதன் முக்கியத்துவத்தை அது என்னுடைய மனதில் பதியவைத்தது.”
அநேகர்— ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களும்— மனச்சோர்வடைவது, உற்சாகமிழப்பது, தனிமையை உணர்வது அசாதாரணமானதல்ல. கடவுளுடைய சபையில் கிடைக்கும் அன்பான, சுயநலமற்ற உதவிக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்!—1 தெசலோனிக்கேயர் 5:14.
◆ பேராபத்துக்களும் விபத்துக்களும். தங்களுடைய வீடு எரிந்து சாம்பலானதால் எல்லா உடைமைகளையும் இழந்த நான்கு பேருள்ள ஒரு குடும்பத்தில் உங்களையே வைத்துப் பாருங்கள். “யெகோவாவின் ஜனங்கள் மத்தியில் இருக்கும் உண்மை அன்பே எப்பொழுதும் எங்களுடைய மனதை தொடும், எங்களை கவர்ந்த, உற்சாகமளிக்கும் அனுபவம்” என்பதை அவர்கள் வெகு விரைவிலேயே கண்டார்கள். அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றனர்: “எங்களுடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளிடமிருந்து கிட்டத்தட்ட உடனடியாகவே எங்களுக்கு கிடைத்த உள்ளப்பூர்வமான ஆதரவும் இரக்கமும் நிறைந்த அழைப்புகளால் நாங்கள் திக்குமுக்காடிப் போனோம். விடாமல் போன் வந்துகொண்டே இருந்தது. ஒவ்வொருவரும் காட்டிய உண்மையான அக்கறையும் அன்பும் நன்றியுணர்வால் கண்ணீர்விடும் அளவுக்கு எங்களுடைய மனதை தொட்டது.”
வெகுசீக்கிரத்தில், சபை மூப்பர்கள் ஒரு பெரும் சகோதர கூட்டத்தை ஏற்பாடு செய்தார்கள். சிலநாட்களில் இந்தக் குடும்பத்திற்காக அவர்கள் ஒரு புதிய வீடு கட்டினார்கள். அண்டை வீட்டுக்காரர் ஒருவர் இவ்வாறு வியந்து கூறினார்: “நீங்க அதைப் பார்த்திருக்கணுமே! பலதரப்பட்ட மக்களும்—ஆண்களும் பெண்களும் கறுப்பர்களும் ஸ்பானியர்களும்—வேலை செய்துகொண்டிருந்தாங்க!” இது உண்மையிலேயே சகோதர அன்பிற்கு அத்தாட்சி.—யோவான் 13:35.
உடன் கிறிஸ்தவர்கள் அந்தக் குடும்பத்திற்கு துணிமணிகளும் உணவும் பணமும் கொடுத்தார்கள். தகப்பன் இவ்வாறு சொல்கிறார்: “அது, மற்றவர்களெல்லாம் ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் கொடுத்துக்கொண்டிருந்த கிறிஸ்மஸ் சீஸன். ஆனால் நாங்கள் அனுபவித்ததைப் போன்று வேறு எவருமே இருதயப்பூர்வமான, தாராள குணத்தை அனுபவித்திருக்க மாட்டார்கள் என்று நிச்சயமாக சொல்லலாம்.” அவர்கள் மேலும் கூறினர்: “தீப்பற்றியதைப் பற்றிய நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, அந்த இடத்தில் அன்பான செயல்களையும் நல்ல நண்பர்களையும் பற்றிய நினைவுகள் இடம்பிடித்துக் கொண்டன. இப்பேர்ப்பட்ட அற்புதகரமான, ஐக்கியப்பட்ட சகோதரர்களின் குடும்பத்தை பூமியில் கொண்டிருப்பதற்காக எங்களுடைய நன்றிகளை நம்முடைய அன்பான பரலோக தகப்பனாகிய யெகோவாவுக்கு செலுத்துகிறோம்; அதன் பாகமாயிருப்பதற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்!”
நிச்சயமாகவே, இப்படிப்பட்ட செயல்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் சாத்தியமல்ல, எதிர்பார்க்கப்படுவதுமில்லை. ஆனால் இந்தச் செயல்கள் சபை கொடுக்கக்கூடிய ஆதரவை படம்பிடித்துக் காட்டுகின்றன.
பரத்திலிருந்து வரும் ஞானம்
உதவியையும் பலத்தையும் அளிக்கும் மற்றொரு வகை ஊற்றுமூலத்தை கிறிஸ்தவ சபையில் அநேகர் கண்டுபிடித்திருக்கின்றனர். அது என்ன? அதுதான் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யால் தயாரித்து அளிக்கப்படும் பிரசுரங்கள். இவற்றில் மிகப் பிரபலமானவை காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள். இந்தப் பிரசுரங்கள் உட்பார்வைமிக்க ஆலோசனையையும் நடைமுறை அறிவுரையையும் வழங்குவதற்காக, முக்கியமாக பைபிளில் காணப்படும் தெய்வீக ஞானத்தையே சார்ந்திருக்கின்றன. (சங்கீதம் 119:105) மனச்சோர்வு, துஷ்பிரயோகம், பல்வேறு சமுக மற்றும் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து குணப்படுதல், இளைஞர் எதிர்ப்படும் சவால்கள், வளர்ந்துவரும் தேசங்களிலுள்ள மக்களுக்கே உரித்தான பிரச்சினைகள் போன்ற விஷயங்களைப் பற்றி பொறுப்புள்ள, அதிகாரப்பூர்வமான ஆராய்ச்சியோடு வேதப்பூர்வமான தகவல் கொடுக்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுள் காட்டும் வழியே வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி என்பதை இந்தப் பிரசுரங்கள் ஆதரித்துப் பேசுகின்றன.—ஏசாயா 30:20, 21.
ஒவ்வொரு வருடமும், உவாட்ச் டவர் சொஸைட்டி ஆயிரக்கணக்கான பாராட்டு கடிதங்களை பெறுகிறது. உதாரணமாக, தற்கொலை விஷயத்தைப் பற்றிய விழித்தெழு! கட்டுரையைக் குறித்து ரஷ்யாவிலுள்ள ஒரு இளைஞர் இவ்வாறு எழுதினார்: “எனக்கு மனச்சோர்வு ஏற்படுவதால், . . . பலதடவை தற்கொலை செய்ய யோசித்திருக்கிறேன். என்னுடைய பிரச்சினைகளை சமாளிக்க கடவுள் எனக்கு உதவிசெய்வார் என்ற நம்பிக்கையை இந்தக் கட்டுரை பலப்படுத்தியிருக்கிறது. நான் வாழும்படி அவர் விரும்புகிறார். இந்தக் கட்டுரையின் மூலம் அவர் கொடுத்த உதவிக்கு நன்றி.”
இந்த உலகத்தால் வரும் கொந்தளிக்கும் அலை போன்ற தொல்லைகள் சமாளிக்க முடியாதளவுக்கு மிகத் தீவிரமாக இருப்பதாய் நீங்கள் உணர்ந்தால், கிறிஸ்தவ சபை புகலிடமாய் இருப்பதைக் குறித்து நிச்சயமாக இருக்கலாம். உண்மையில், இந்த உலகமாகிய அன்பற்ற வறண்ட பாலைவனம் உங்களுடைய பலத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தால், யெகோவாவின் அமைப்பில் நீங்கள் உயிர்ப்பூட்டும் பாலைவனச் சோலையை காணலாம். இத்தகைய ஆதரவை பெற்றபிறகு, தன் கணவருடைய பயங்கரமான வியாதியை வெற்றிகரமாக சமாளித்த ஒரு கிறிஸ்தவ பெண்மணியின் மனநிலைகளை நீங்களும் எதிரொலிக்கலாம். அவள் எழுதினாள்: “அக்கறையோடு எங்களுக்குக் காட்டிய அன்பை யெகோவா தம்முடைய உள்ளங்கையில் ஏந்திச் செல்வதைப் போல உணருகிறேன். யெகோவாவின் மகத்தான அமைப்பின் பாகமாயிருப்பதில் நான் எவ்வளவு நன்றியுள்ளவளாக இருக்கிறேன்!”
[அடிக்குறிப்புகள்]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 26-ன் படம்]
நோய்வாய்ப்பட்டோருக்கும் அன்பானவரை இழந்து தவிப்போருக்கும் பிறருக்கும் நாம் ஆறுதலளிக்கலாம்