பைபிள் தீர்க்கதரிசனம்—இதை நீங்களும் நம்பலாம்
கிரீஸுக்கு வடமேற்கே, எபிரஸ் மாகாணத்தின் மன்னன் பைரஸ், நீண்டகாலமாக ரோம பேரரசுடன் மோதிக்கொண்டிருந்தார். போரின் முடிவை அறிய தவியாய் தவித்தார். ஆகவே டெல்ஃபிக்கு குறிகேட்க போனார். ஆனால் அங்கே அவருக்கு சொன்ன ஆருடத்தை இருவேறு விதங்களில் அர்த்தம் கொள்ளலாம்: (1) அக்குஸின் மகனே, நீ ரோமானியர்களை வெல்வாய். நீ போகலாம். நீ திரும்பிவருவாய். போரில் நீ மரணமடைய மாட்டாய்.” (2) “அக்குஸின் மகனே, ரோமானியர்கள் வெல்வார்கள். நீ போகலாம். நீ திரும்பிவரமாட்டாய். போரில் நீ மரணமடைவாய்.” அவர் முதல் ஆருடத்தை நம்பி, ரோமை எதிர்த்து போரிட்டு, படு-தோல்வியை தழுவினார்.
அந்தக் காலத்து கிரேக்கில் இப்படிதான் ஆருடங்கள் தெளிவில்லாமல், புதிர்போல் இருந்தன. ஆனால் பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றியதென்ன? அந்தக் காலத்து ஆருடங்களைப்போலவே பைபிள் தீர்க்கதரிசனங்களும் உள்ளன என்கிறார்கள் பைபிள் திறனாய்வாளர்கள். ஒருசில அதி புத்திசாலிகள், பொதுவாக குரு வகுப்பார் சம்பவங்களை உற்று கவனித்து, எதிர்காலத்தில் இப்படி இப்படி நடக்கும் என்று கணித்து கூறிய கூற்றுகள்தான் பைபிள் தீர்க்கதரிசனங்கள் என்று கதைகட்டுகிறார்கள் திறனாய்வாளர்கள். சரி, அந்த அதி புத்திசாலிகளுடைய அனுபவத்தால், அல்லது அவர்களுக்கு தெரிந்த நண்பர்களின் உதவியால் எதிர்கால சம்பவங்களை கணக்கிட்டு சொன்னதாகவே வைத்துக்கொள்வோம். இப்போது பைபிள் தீர்க்கதரிசனத்தின் பண்புகளையும் அந்தக் காலத்தில் குறி சொன்னார்களே அவற்றின் பண்புகளையும் ஒப்பிடலாம். விடை உங்களுக்கே தெரியவரும்.
வேறுபாடுகள்
இப்படியும் நடக்கலாம், அப்படியும் நடக்கலாம் என்று அநிச்சயமாக இருப்பதில் அந்தக் காலத்து ஆருடம் அக்மார்க் முத்திரையைப் பெற்றிருந்தது. உதாரணத்திற்கு, டெல்ஃபியில் குறிசொல்லும்போது, விளங்காத, ஏதேதோ சப்தங்கள் கேட்குமாம். அதை சாமியார்கள் விளக்கி, செய்யுள் வடிவில் எழுதியபோது, அர்த்தம் அப்படியே தலைகீழாக மாறினாலும் மாறிவிடுமாம். இப்படி நடந்ததற்கு லிடியாவின் அரசன் கிரிசஸ் பொருத்தமான உதாரணம். அவர் கோயிலில் குறிகேட்டபோது, “ஹாலிஸ் ஆற்றை கடந்தால், வலிமை மிக்க பேரரசை அழித்திடுவாய்” என்று ஆருடம் சொன்னார்கள். ஆனால், அழிந்த அந்த ‘வலிமை மிக்க பேரரசு’ இவருடைய பேரரசே. ஹாலிஸ் ஆற்றை கடந்து காப்பாடோசியாவின்மீது படையெடுத்துச் செல்லலாம் என்று நினைத்த அவர், பெர்சிய அரசன் கோரேசிடம் தோல்வியுற்றார்.
அந்தக் காலத்து ஆருடங்களுக்கு நேர்மாறாக பைபிள் தீர்க்கதரிசனங்கள் இருந்தன. அவை அச்சுப்பிசகாமல் நிறைவேறின. பாமரனுக்கும் பட்டென்று விளங்கின. உதாரணத்திற்கு பாபிலோன் வீழ்ச்சியைப் பற்றி பைபிள் சொன்ன தீர்க்கதரிசனத்தை எடுத்துக்கொள்வோம். இத்தீர்க்கதரிசனம் பைபிளில் ஏசாயா புத்தகத்தில் உள்ளது. சுமார் 200 வருடங்களுக்கு முன்பே, மேதிய பெர்சியரால் பாபிலோன் கவிழ்க்கப்படும் என்பதை விலாவாரியாக ஏசாயா முன்னறிவித்தார். வெற்றிவாகை சூடவிருக்கும் அரசனின் பெயர் கோரேசு என்பதைக்கூட தீர்க்கதரிசனம் சொல்லிவிட்டது. மேலும், பாபிலோன் கோட்டையை சுற்றி அகழியைப்போல் ஆறு பாய்ந்தோடி, அரணாக விளங்கியது. அந்த ஆற்றையே வற்றச்செய்து, பாதுகாப்பான கோட்டை கதவுகள் திறந்திருக்க, அவற்றின் வழியே உட்புகுவார் என்று அவரது போர் உத்தியையும் முன்னறிவித்தது. இவை அனைத்தும் அப்படியே அச்சுப்பிசகாமல் நிறைவேறின. (ஏசாயா 44:27-45:2) நாளடைவில் பாபிலோனில் மனித வாடையே சுத்தமாக இருக்காது என்பதையும் பைபிள் தீர்க்கதரிசனமாக சொல்லிவிட்டது.—ஏசாயா 13:17-22.
யோனா என்ற தீர்க்கதரிசி வாயிலாக கடவுள் கொடுத்த பின்வரும் எச்சரிக்கையை கவனியுங்கள்: “இன்னும் நாற்பது நாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்.” (யோனா 3:4) கொஞ்சம்கூட குழப்பமே இல்லாமல், திட்டவட்டமாக நாள் குறித்து, எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது! விஷயத்தை நறுக்கென்று, நேரடியாக சொன்னதால், நினிவே மக்கள் உடனே “கடவுள் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள் . . . அனைவரும் சாக்கு [சணல்] உடை உடுத்திக்கொண்டனர்.”—யோனா 3:5-10, பொ.மொ.
அரசர்களும் தளபதிகளும் அவர்களுக்குச் சாதகமாக இருந்த ஆருடங்களை மாத்திரம் அடிக்கடி வெளியே சொன்னார்கள். அவற்றிற்கு “தெய்வ-வாக்கு என்ற சாயத்தை” பூசி, ஆதாயத்தை தேடிக்கொண்டார்கள். விருப்பமான செயல்களில் ஈடுபட சாக்காக பயன்படுத்திக் கொண்டார்கள். இப்படியாக சாமியாடி சொன்ன ஆருடங்கள் அவர்கள் கையில் அரசில் கருவிகளாக வலம் வந்தன. ஆனால் கடவுளுடைய தீர்க்கதரிசன சேதிகள், யாருடைய சொந்த வெறுப்பு விருப்புக்கும் இடமளிக்காமல் எல்லாருக்கும் பொதுவாக வழங்கப்பட்டன.
அப்படி வழங்கப்பட்டதற்கு எடுத்துக்காட்டுகள் ஏராளம் ஏராளம். தாவீது அரசன் தவறுசெய்துவிட்டான். தவறு செய்தது அரசனே என்றாலும்கூட அவரை தட்டிக்கேட்க தயங்கவில்லை நாத்தான் என்கிற யெகோவாவின் தீர்க்கதரிசி. (2 சாமுவேல் 12:1-12) பத்து கோத்திர இஸ்ரவேலில் இரண்டாம் யெரொபெயாம் ஆட்சிசெய்து கொண்டிருந்தான். அந்த பொல்லாத அரசனும், அவனது ஆதரவாளர்களும் கடவுளை மறந்து, அவருக்கு அவமரியாதை உண்டாக்கும் செயல்களை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது தீர்க்கதரிசிகளான ஓசியாவும், ஆமோஸும் அவர்களை இடித்துரைத்தார்கள். (ஓசியா 5:1-7; ஆமோஸ் 2:6-8) குறிப்பாக, ஆமோஸ் மூலம் யெகோவா கொடுத்த எச்சரிக்கை சவுக்கடிபோல் விழுந்தது: “நான் எரொபவாம் வீட்டாருக்கு எதிராக நான் வாளெடுத்து வருவேன்.” (ஆமோஸ் 7:9, பொ.மொ.) யெரொபெயாமின் வம்சமே ஒழிந்தது.—1 இராஜாக்கள் 15:25-30; 2 நாளாகமம் 13:20.
ஆருடம் கேட்பதற்கு பெரும்பாலும் கணிசமான ஒரு தொகையை செலுத்த வேண்டும். ஒருவர் எவ்வளவு தொகையை செலுத்துகிறார் என்பதை பொருத்து, அவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆருடம் வழங்கப்படும். டெல்ஃபியில் குறிகேட்க போனவர்கள், உப்பு சப்பு இல்லாத ஜோதிடங்களுக்குக்கூட கொள்ளை கொள்ளையாக பணத்தைக் கொட்டி கொடுத்தார்கள். இப்படியாக அப்போலோ கோயிலில் பணத்துக்குமேல் பணம் குவிந்தது. குவிந்த பணத்தில் கோயிலை மேலும் மேலும் விரிவாக்கினார்கள். ஆனால் பைபிள் தீர்க்கதரிசனங்களும், எச்சரிக்கைகளும் யாருக்கும் ஓரவஞ்சனை இன்றி, பதவிகளையும் துச்சமாக மதித்து, ஏழை, பணக்காரன் என்று பார்க்காமல் இலவசமாக வழங்கப்பட்டன. உண்மை தீர்க்கதரிசிகளை லஞ்சம் கொடுத்து மடக்கிவிடலாம் என்று கனவில்கூட நினைக்க முடியாது. அதனால்தான் தீர்க்கதரிசியாகவும், நீதிபதியாகவும் இருந்த சாமுவேலால் இப்படியாக நெஞ்சை நிமிர்த்தி கேட்க முடிந்தது: “யாரிடமிருந்தாவது கையூட்டுப் பெற்று [லஞ்சம் வாங்கி] நான் அநீதியைக் கண்டுகொள்ளாமல் இருந்தேனா?”—1 சாமுவேல் 12:3, பொ.மொ.
அந்தக் காலத்து கிரீஸில் சில குறிப்பிட்ட இடங்களில் மாத்திரம் குறிகேட்க முடிந்தது. ஆருடம் கேட்க ஒருவர் சிரமப்பட்டு, பயணம் செய்து அங்கே போகவேண்டும். சாமானிய மனிதன் செல்லவே முடியாத இடங்களில் பெரும்பாலான குறிசொல்லும் கோயில்கள் அமைந்திருந்தன. உதாரணத்திற்கு எபிரஸில் டாமரஸ் மலையில் டாடொனா கோயிலும், மத்திய கிரீஸின் மலைப்பகுதிகளில் டெல்ஃபி கோயிலும் அமைந்திருந்தன. பொதுவாக செல்வந்தர்களும், வலிமைமிக்கவர்களும் மாத்திரம் தெய்வங்களிடம் குறிகேட்டார்கள். வருடத்தின் ஒருசில நாட்களில் மாத்திரம் “இந்தத் தெய்வங்கள் தங்கள் விருப்பங்களை” தெரிவித்தன. இதற்கு நேர்மாறாக யெகோவா தேவன் தமது தீர்க்கதரிசிகளை நேரடியாக மக்களிடத்திற்கே அனுப்பி, அவர்கள் காதுகளில் விழும்படி, தீர்க்கதரிசனங்களை அறிவிக்க செய்தார். உதாரணத்திற்கு, யூதர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டபோது, அவர்கள் மத்தியில் இருக்க குறைந்தது மூன்று தீர்க்கதரிசிகளை கடவுள் அனுப்பிவைத்தார். எருசலேமில் எரேமியாவும், நாடுகடத்தப்பட்ட மக்களிடத்தில் எசேக்கியேலும், பாபிலோனிய பேரரசின் தலைநகரில் தானியேலும் இருந்தார்கள்.—எரேமியா 1:1, 2; எசேக்கியேல் 1:1; தானியேல் 2:48.
பொதுவாக ஆருடத்தை இரகசியமாக சொன்னார்கள். ஆருடம் கேட்டவர் அதை தன் ஆதாயத்துக்கு பயன்படுத்திக்கொண்டார். ஆனால், பைபிள் தீர்க்கதரிசனங்கள் நாடறிய, பொதுமக்கள் எல்லாரும் கேட்டு, அதன் அர்த்தத்தை உணர்ந்துகொள்ளும் வகையில் அறிவிக்கப்பட்டன. எரேமியா தீர்க்கதரிசி எருசலேமில் பல முறை பொதுமக்கள் முன்னிலையில் தீர்க்கதரிசனம் உரைத்தார். அவர் சொன்ன சேதி தலைவர்களுக்கும், நகர மக்களுக்கும் பிடிக்கவில்லை என்று தெரிந்தும்கூட அவர் அவ்வாறு செய்தார்.—எரேமியா 7:1, 2.
அந்தக் காலத்தில் கிரீஸில் சொல்லப்பட்ட ஆருடங்கள் இன்று பண்டைய கால வரலாறாக ஆகிவிட்டன. இன்றைய கஷ்டகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு எந்தவிதத்திலும் உபயோகம் இல்லை. அந்த ஆருடங்கள் நம் நிகழ்காலத்தை பற்றியோ, எதிர்காலத்தை பற்றியோ எதுவும் சொல்லவில்லை. ஆனால் பைபிள் தீர்க்கதரிசனங்கள் ‘தேவனுடைய வார்த்தையின்’ பாகமாக இருப்பதால், இன்றும் ‘ஜீவனோடும், வல்லமையோடும்’ திகழ்கின்றன. (எபிரெயர் 4:12) ஏற்கெனவே நிறைவேறிய தீர்க்கதரிசனங்களிலிருந்து, யெகோவா மக்களிடத்தில் எவ்வாறு நடந்துகொள்கிறார், அவரது நோக்கங்களின் முக்கிய அம்சங்கள் யாவை, அவரது பண்புகள் யாவை போன்ற விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். அதோடு, மிக முக்கியமான பைபிள் தீர்க்கதரிசனங்கள் வெகு சீக்கிரத்தில் நிறைவேறப்போகின்றன. எதிர்காலத்தில் நிறைவேறவிருக்கும் தீர்க்கதரிசனத்தை விவரித்து, அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “அவருடைய [கடவுளுடைய] வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் [பரலோக மேசியானிய ராஜ்யம்] புதிய பூமியும் [நீதியான மக்கள் சமுதாயம்] உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.”—2 பேதுரு 3:13.
த கிரேட் ஐடியாஸ் என்கிற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “எதிர்காலத்தை கணித்து கூறிய மனிதர்களின் வரிசையில் எபிரெய [யூத] தீர்க்கதரிசிகளே தன்னிகரற்று திகழ்கிறார்கள். யூதமதத்தில் அல்லாதவர்கள் மைப்போட்டு பார்த்து அல்லது ஏதோ அடையாள குறிகளை உபயோகித்து குறிசொன்னார்கள். . . . [ஆனால்] இதுபோன்ற எந்த உத்தியும் இன்றி, அவர்கள் [எபிரெய தீர்க்கதரிசிகள்] தேவ ரகசியங்களை வெளியிட்டார்கள். . . . குறிசொன்னவர்களின் ஆருடம் தெளிவில்லாமல் இருந்தன. [ஆனால், எபிரெய தீர்க்கதரிசிகளின்] தீர்க்கதரிசன சொற்பொழிவுகள் தெள்ளத்தெளிவாக இருந்தன. மக்கள் முன்னதாக அறியவேண்டும் என்று கடவுள் விரும்பிய, கடவுளுடைய திட்டத்தை மறைக்காமல் தெரிவிக்க வேண்டும் என்பதே அவர்களது எண்ணம்.” எனவே இதுவரை அந்தக் காலத்து ஆருடத்தையும், பைபிள் தீர்க்கதரிசனத்தையும் சுருக்கமாக ஒப்பிட்டுப் பார்த்ததில், இந்தப் புத்தகம் கூறியதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.
பைபிள் தீர்க்கதரிசனத்தை நீங்கள் நம்புவீர்களா?
பைபிள் தீர்க்கதரிசனத்தை நீங்களும் நம்பலாம். யெகோவாவையும், அவரது தீர்க்கதரிசன வசனத்தின் நிறைவேற்றத்தையும் நம்பி, உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். பைபிள் தீர்க்கதரிசனம் ஏற்கெனவே நிறைவேறி முடிந்துவிட்ட அந்தக் காலத்து பதிவு என்று ஒதுக்க முடியாது. இப்போதும் அதற்கு சக்தி உள்ளது. வேத வசனத்தில் காணப்படுகிற பல தீர்க்கதரிசனங்கள் இன்று நிறைவேறி வருகின்றன. இன்னும் பல வெகுவிரைவில் நிறைவேற காத்திருக்கின்றன. நிறைவேறிய தீர்க்கதரிசனங்களை பார்க்கும்போது, இவையும் நிச்சயம் நிறைவேறும் என்று முழு நம்பிக்கையோடு இருக்கலாம். இவை நம் காலத்தை சுட்டிக்காட்டுவதால், எதிர்காலத்தையும் பாதிக்கவிருப்பதால், கருத்தூன்றி கவனிப்போமாக.
ஏசாயா 2:2, 3-ல் காணப்படும் பின்வரும் பைபிள் தீர்க்கதரிசனத்தை நீங்கள் தாராளமாக நம்பலாம்: “கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் [மலை] பர்வதங்களின்கொடுமுடியில் [மலை உச்சியில்] ஸ்தாபிக்கப்பட்டு, . . .எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்.” ஆம், இன்று லட்சக்கணக்கான மக்கள், மலையென உயர்ந்திருக்கும் யெகோவாவின் வழிபாட்டில் கலந்துகொண்டு, அவருடைய பாதையில் நடக்க கற்றுவருகிறார்கள். கடவுளுடைய வழிகளைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள, கடவுளையும், அவரது நோக்கங்களையும் சரியாக அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தால், அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்வீர்களா?—யோவான் 17:3.
பைபிளின் இன்னொரு தீர்க்கதரிசனம் நிறைவேறிக்கொண்டிருப்பதால், நாம் உடனே நடவடிக்கை எடுத்தாக வேண்டும். வெகுவிரைவில் நடக்கப்போவதை சங்கீதக்காரன் தீர்க்கதரிசனமாக இவ்வாறு பாடியுள்ளார்: “பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; . . . இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்.” (சங்கீதம் 37:9, 10) கெட்ட ஆட்களுக்கும், பைபிள் தீர்க்கதரிசனத்தை ஏளனம் செய்கிறவர்களுக்கும் அழிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இதற்கு சங்கீதக்காரன் காட்டும் வழி: யெகோவாவை நம்பி, “காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் [உடமையாக்கி] கொள்வார்கள்” (சங்கீதம் 37:9) யெகோவாவை நம்புவதென்றால், அவர் தந்திருக்கும் வாக்குறுதிகளில் கடுகளவும் சந்தேகப்படக்கூடாது. அதோடு, அவரது தராதரங்களுக்கு ஏற்றபடி வாழவேண்டும்.—நீதிமொழிகள் 2:21, 22.
யெகோவாவை நம்பி, பூமியை உடைமையாக்கிக்கொள்ளும் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? தெரிந்துகொள்ள வேண்டுமா, பைபிள் தீர்க்கதரிசனங்களை புரட்டிப் பாருங்கள். கடவுளுக்கு பணிந்து நடக்கும் மக்களுக்கு அற்புதமான எதிர்காலம் இருப்பதை அவை சொல்லும். ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு எழுதினார்: “அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும்.” (எசாயா 35.5, 6, பொ.மொ.) மனதுக்கு தெம்பூட்டும் பின்வரும் வார்த்தைகளை அப்போஸ்தலன் யோவான் எழுதினார்: “ ‘அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் [யெகோவா] துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன’ என்றது. அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், . . . ‘இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை’ . . . எழுது என்றார்.”—வெளிப்படுத்துதல் [திருவெளிப்பாடு] 21:4, 5, பொ.மொ.
பைபிள் நம்பகமான தீர்க்கதரிசன புத்தகம் என்பதை யெகோவாவின் சாட்சிகள் நன்கு அறிந்திருக்கிறார்கள். “அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்” என்று அப்போஸ்தலன் பேதுரு கொடுத்த அறிவுரையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறார்கள். (2 பேதுரு 1:19) ஒளிமயமான எதிர்காலத்தை உங்கள் முன் வைக்கிறது பைபிள் தீர்க்கதரிசனம். அதை நீங்களும் அறிந்து, ஆனந்தம் அடையவேண்டும் என்பதே எங்கள் உளமார்ந்த விருப்பம்.
[பக்கம் 6-ன் படம்]
பண்டைய கிரீஸில், டெல்ஃபியில் அமைந்த குறிசொல்லும் கோயில் புகழ்பெற்றது.
பெண் சாமியார், இந்த மேடையில் அமர்ந்து குறிசொல்வார்
[படங்கள்]
மயக்கம் தரும் புகை பெண் சாமியாரை ஒருவித பரவசத்தில் ஆழ்த்தும்
அவர் உச்சரித்த சத்தங்களில், அப்போலோ கடவுள் அருள்வாக்கும் கலந்திருந்ததாக நம்பினார்கள்
[படத்திற்கான நன்றி]
Tripod: From the book Dictionary of Greek and Roman Antiquities; Apollo: The Complete Encyclopedia of Illustration/J. G. Heck
[பக்கம் 7-ன் படம்]
டெல்ஃபி கோயிலில் சொன்ன குறிகள் நம்புவதற்கு முற்றிலும் லாயக்கற்றவை
[படத்திற்கான நன்றி]
Delphi, Greece
[பக்கம் 8-ன் படம்]
புதிய உலகம் வரும் என்ற பைபிள் தீர்க்கதரிசனத்தை நீங்கள் முழுமையாக நம்பலாம்