உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 11/1 பக். 28-29
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • இதே தகவல்
  • கொடி வணக்கம், ஓட்டுப் போடுதல், படைத்துறை சாராத பொதுச் சேவை
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • யெகோவாவின் சாட்சிகள் ஏன் அரசியல் விஷயங்களில் நடுநிலையோடு இருக்கிறார்கள்?
    யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • ‘அவர்கள் உலகத்தின் பாகமல்ல’
    ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள்
  • “அவர்கள் உலகத்தின் பாகமல்ல”
    ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 11/1 பக். 28-29

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாக்களிப்பதைப் பற்றி யெகோவாவின் சாட்சிகளுடைய கருத்து என்ன?

கடவுளுடைய ஊழியர்கள் இந்த விஷயத்தில் சரியான கருத்தைக் கொண்டிருக்க பைபிளில் தெளிவான நியமங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், வாக்களித்தல் என்ற பழக்கத்திற்கு எதிராக எந்த ஒரு நியமமும் இல்லை என்றே சொல்லலாம். உதாரணமாக, தங்களுடைய கார்ப்பரேஷன் சம்பந்தப்பட்ட தீர்மானங்களை எடுக்கையில் இயக்குநர் குழு ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. யெகோவாவின் சாட்சிகளின் சபைகளில் அடிக்கடி கூட்ட நேரங்கள் மற்றும் சபையின் பணத்தை பயன்படுத்துவதைப் பற்றிய தீர்மானங்கள் கைகளை உயர்த்தி வாக்களிப்பதன்மூலம் எடுக்கப்படுகிறது.

அப்படியானால் அரசியல் தேர்தல்களில் வாக்களிப்பதைப் பற்றியென்ன? மக்களாட்சி தேசங்கள் சிலவற்றில் அங்குள்ள மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேலானோர் தேர்தல் அன்று வாக்களிக்க செல்வதில்லை என்பது மெய்யே. யெகோவாவின் சாட்சிகளைப் பொறுத்ததில் அவர்கள் மற்றவர்களின் ஓட்டுரிமையில் குறுக்கிடுவதில்லை; அரசியல் தேர்தல்களுக்கு எதிராக எவ்வகையிலும் பிரச்சாரம் செய்வதுமில்லை. அப்படிப்பட்ட தேர்தல்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளை மதித்து ஒத்துழைக்கிறார்கள். (ரோமர் 13:1-7) தேர்தலில் போட்டியிடும் ஒருவருக்கு ஓட்டுப்போடலாமா என்பதைக் குறித்ததில் ஒவ்வொரு யெகோவாவின் சாட்சியும் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் அடிப்படையிலும் கடவுளிடம் மற்றும் அந்த நாட்டினிடம் உள்ள தனது பொறுப்பை புரிந்துகொள்வதன் அடிப்படையிலும் தீர்மானம் எடுக்கிறார். (மத்தேயு 22:21; 1 பேதுரு 3:16) இத்தகைய தனிப்பட்ட தீர்மானம் எடுக்கையில் சாட்சிகள் அநேக அம்சங்களை ஆலோசிக்கிறார்கள்.

முதலாவதாக, இயேசு கிறிஸ்து தம்மை பின்பற்றுவோரிடம் இவ்வாறு சொன்னார்: “நான் உலகத்தானல்லாதது போல அவர்களும் உலகத்தாரல்ல.” (யோவான் 17:14) யெகோவாவின் சாட்சிகள் இந்த நியமத்தை ஏனோதானோவென்று எடுத்துக்கொள்வதில்லை. ‘உலகத்தாரல்லாததால்’ இவ்வுலக அரசியல் விவகாரங்களில் நடுநிலை வகிக்கிறார்கள்.​—யோவான் 18:36.

இரண்டாவதாக, அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய நாளில் வாழ்ந்த ஜனங்களிடம் தன்னை கிறிஸ்துவை பிரதிநிதித்துவம் செய்யும் ‘தூதுவன்’ என குறிப்பிட்டார். (எபேசியர் 6:20; 2 கொரிந்தியர் 5:20, பொ.மொ.) கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக இயேசு கிறிஸ்து இப்போது சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார் என்பதை யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். ஆகவே, தூதுவர்களைப் போன்று இதை தேசங்களுக்கு அவர்கள் அறிவிக்க வேண்டும். (மத்தேயு 24:14; வெளிப்படுத்துதல் 11:15) தூதுவர்கள் தாங்கள் எந்த நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்களோ அங்கே உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் நடுநிலை வகிக்கும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள். அதைப் போன்றே, கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் பிரதிநிதிகளாக யெகோவாவின் சாட்சிகள் தாங்கள் குடியிருக்கும் நாடுகளின் அரசியலில் தலையிடாதிருப்பதை ஒரு பொறுப்பாக உணருகிறார்கள்.

மூன்றாவது அம்சமானது, ஓட்டுப்போட்டு ஒருவரை பதவிக்கு கொண்டுவருபவர்கள் அவர் செய்யும் எல்லா காரியங்களுக்கும் பொறுப்புள்ளவராகலாம். (1 தீமோத்தேயு 5:22, த நியூ இங்கிலீஷ் பைபிள்) இந்தப் பொறுப்பை கிறிஸ்தவர்கள் தங்கள்மேல் சுமத்திக்கொள்ள விரும்புகிறார்களா என்பதை கவனமாக ஆலோசிக்க வேண்டியுள்ளது.

நான்காவதாக, யெகோவாவின் சாட்சிகள் தங்கள் கிறிஸ்தவ ஐக்கியத்தை அதிக மதிப்புள்ள ஒன்றாக கருதுகிறார்கள். (எபேசியர் 4:3) மதங்கள் அரசியலில் ஈடுபடும்போது அடிக்கடி தங்கள் அங்கத்தினரிடையே பெரும் பிளவுகளையே உண்டாக்குகின்றன. யெகோவாவின் சாட்சிகள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதால் அரசியலில் ஈடுபடுவதை தவிர்க்கிறார்கள். இவ்வாறு தங்கள் கிறிஸ்தவ ஐக்கியத்தை காத்து வருகிறார்கள்.​—மத்தேயு 12:25; யோவான் 6:15; 18:36, 37.

கடைசியாக, அரசியலில் ஈடுபடாதிருப்பது எல்லா கட்சிகளைச் சார்ந்த அரசியல்வாதிகளிடமும் ராஜ்யத்தைப் பற்றிய இந்த முக்கியமான செய்தியை பேசும் சுதந்திரத்தை அளிக்கிறது.​—எபிரெயர் 10:35, NW.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் வேதாகம நியமங்களின் அடிப்படையில், அநேக தேசங்களில் யெகோவாவின் சாட்சிகள் அரசியல் தேர்தல்களில் ஓட்டுப்போட வேண்டாமென தனிப்பட்ட தீர்மானத்தை எடுத்துள்ளனர். அவர்கள் அந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கான சுதந்திரம் அத்தேசத்து சட்டத்தால் ஆதரிக்கப்படுகிறது. குடிமக்கள் ஓட்டுப்போடும்படி சட்டம் வற்புறுத்துகிறதென்றால் அப்போது என்ன? அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒவ்வொரு சாட்சியும் அதை எப்படி கையாளுவது என்பதைப் பற்றி பைபிள் அடிப்படையிலான மனச்சாட்சியுடன் தீர்மானம் எடுக்கும் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். ஒருவர் வாக்குச் சாவடிக்கு செல்ல தீர்மானிக்கிறார் என்றால் அது அவருடைய தீர்மானம். அவர் வாக்குச்சாவடியில் என்ன செய்கிறார் என்பது அவருக்கும் படைப்பாளருக்கும் இடையே உள்ள விஷயம்.

நவம்பர் 15, 1950 ஆங்கில காவற்கோபுரம் பக்கங்கள் 445, 446 இவ்வாறு சொன்னது: “குடிமக்கள் வாக்களிக்க வேண்டும் என ராயன் வற்புறுத்துகையில் . . . [சாட்சிகள்] வாக்குச் சாவடிக்குச் செல்லலாம். இங்கே அவர்கள் எதற்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதை வாக்குச் சீட்டில் குறிக்கும்படி அல்லது எழுதும்படி கேட்கப்படுகிறார்கள். பின் வாக்காளர்கள் விருப்பப்படி செய்வார்கள். ஆகவே சாட்சிகள் இங்கு கடவுளுடைய முன்னிலையில் அவருடைய கட்டளைகளுக்கு இசைவாகவும் தங்கள் விசுவாசத்திற்கு இசைவாகவும் செயல்பட வேண்டும். வாக்குச் சீட்டை என்ன செய்வது என்பதைக் குறித்து அவர்களுக்கு உணர்த்துவது நம்முடைய பொறுப்பல்ல.”

ஒரு கிறிஸ்தவ பெண்ணின் அவிசுவாசியான கணவன் ஓட்டு போடும்படி வற்புறுத்துவாராகில் அப்போது என்ன? ஆம், கிறிஸ்தவர்கள் உன்னத அதிகாரங்களுக்கு கீழ்ப்படிய வேண்டியதுபோல் அவள் தன் கணவனுக்கு கீழ்ப்பட்டிருக்கிறாள். (எபேசியர் 5:22; 1 பேதுரு 2:13-17) அவள் தன் கணவனுக்குக் கீழ்ப்படிந்து வாக்குச் சாவடிக்குச் செல்கிறாள் என்றால் அது அவளுடைய தனிப்பட்ட தீர்மானம். ஒருவரும் அவளை குறைகூற கூடாது.​—ரோமர் 14:4-ஐ ஒப்பிடுக.

வாக்களிப்பது சட்டப்படியான கட்டளையாக இல்லாத நாட்டில் வாக்குச் சாவடிக்குச் செல்லாதவர்கள்மீது கடும் பகைமை உணர்ச்சி இருக்குமானால்​—ஒருவேளை சரீரப் பிரகாரமான அபாயம் இருக்குமானால் அப்போது என்ன? அல்லது சட்டப்படி வாக்களிக்க கடமைப்பட்டவராய் இல்லாதபோது, அவர்கள் வாக்குச் சாவடிக்குச் செல்லாததன் காரணமாக ஏதாவதொரு வகையில் அநியாயமாக நடத்தப்படுவதைப்பற்றி என்ன? இப்படிப்பட்ட அல்லது இதுபோன்ற சூழ்நிலைகளில் ஒரு கிறிஸ்தவன் தன் சொந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளது. “அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.”​—கலாத்தியர் 6:5.

தங்கள் நாட்டில் தேர்தலின்போது யெகோவாவின் சாட்சிகளில் சிலர் வாக்குச் சாவடிக்குச் செல்வதையும் சிலர் போகாமல் இருப்பதையும் காண்கையில் ஜனங்கள் இடறலடையலாம். ‘யெகோவாவின் சாட்சிகள் எல்லாரும் ஒரே கொள்கையுடையவர்கள் அல்ல’ என அவர்கள் சொல்லக்கூடும். தனிப்பட்டவர்களுடைய மனச்சாட்சி சம்பந்தப்பட்ட இதுபோன்ற விஷயங்களில் யெகோவாவின் முன்னிலையில் ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னுடைய சொந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியிருப்பதை ஜனங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.​—ரோமர் 14:12.

வித்தியாசப்பட்ட சூழ்நிலைகளில் யெகோவாவின் சாட்சிகள் எடுக்கும் தனிப்பட்ட தீர்மானங்கள் எதுவாயினும் தங்கள் கிறிஸ்தவ நடுநிலையையும் பேச்சுரிமையையும் காத்துக்கொள்வதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். இவை எல்லாவற்றிலும் தங்களை பலப்படுத்தவும், ஞானத்தை அருளுவதற்கும், தங்கள் விசுவாசத்தை எவ்விதத்திலும் விட்டுக்கொடுக்காமலிருக்க உதவுவதற்கும் அவர்கள் யெகோவா தேவன்மீது சார்ந்திருக்கிறார்கள். இவ்வாறாக அவர்கள் சங்கீதக்காரனின் வார்த்தைகளில் உறுதியான நம்பிக்கையைக் காட்டுகிறார்கள்: “என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.”​—சங்கீதம் 31:3.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்