அப்பாக்கலிப்ஸ் புத்தகத்தின் “மகிழ்ச்சிக்குரிய செய்தி”
“மற்றொரு தூதன் நடுவானத்தில் பறக்கக் கண்டேன்; அவன், பூமியில் வசிப்போருக்கு மகிழ்ச்சியுள்ள செய்தியாக அறிவிக்கத்தக்க நித்திய நற்செய்தியை உடையவனாக இருந்தான்.”—வெளிப்படுத்துதல் 14:6, NW.
1. அப்பாக்கலிப்ஸ் புத்தகம் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதை யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறபோதிலும், ஏன் அவர்கள் “அப்பாக்கலிப்டிக் மதப் பிரிவினர்” அல்லர்?
சிலர் குற்றம்சாட்டுவது போல, யெகோவாவின் சாட்சிகள் ‘அப்பாக்கலிப்டிக் மதப் பிரிவினரோ,’ ‘நியாயத்தீர்ப்பு நாள் வழிபாட்டினரோ’ (doomsday cult) அல்லர். ஆனால், அப்பாக்கலிப்ஸ் அல்லது வெளிப்படுத்துதல் புத்தகத்தை ஏவப்பட்டு எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தையின் பாகமாக ஏற்றுக்கொள்கிறார்கள். அக்கிரமக்காரருக்கு விரோதமான நியாயத்தீர்ப்பு செய்திகள் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் உரைக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், கடவுளுடைய ஊழியர்கள் பொதுமக்களுக்கு சாட்சி கொடுக்கையில், அப்பாக்கலிப்ஸ் அல்லது வெளிப்படுத்துதல் புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருப்பது உட்பட, பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிசயமான நம்பிக்கையின் மீதே முக்கியமாக கவனத்தை ஊன்ற வைக்கிறார்கள். இவ்வாறாக, அதிலுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளில் எதையும் நீக்குவதோ சேர்ப்பதோ இல்லை.
மகிழ்ச்சிக்குரிய செய்தியின் அறிவிப்பாளர்கள்
2. யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய பிரசங்க வேலையில் அடிக்கடி பயன்படுத்தும் வேதவசனங்களில் சில யாவை?
2 யெகோவாவின் சாட்சிகள் தாங்கள் செய்யும் ஊழியத்திற்கு வேதப்பூர்வ ஆதாரமாக அடிக்கடி குறிப்பிடும் வசனம் இதுவே: “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல தேசத்தாருக்கும் சாட்சியாக முன்னறிவிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.” (மத்தேயு 24:14, NW) அப்படியானால், “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி” என்ன? கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியையும், அவருடைய அரசாங்கத்தையும், மரணமோ துக்கமோ அலறுதலோ ‘இல்லாத’ மனித சமுதாயத்தையும் பற்றிய வசனங்களை வெளிப்படுத்துதல் 20, 21-ம் அதிகாரங்களிலிருந்து எடுத்துக்காட்டி சாட்சிகள் பதிலளிப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 20:6; 21:1, 4.
3. யெகோவாவின் சாட்சிகள் செய்யும் பிரசங்க வேலை எதற்கு ஒத்திருக்கிறது?
3 மகிழ்ச்சி ததும்பும் இச்செய்தியை அறிவிக்கும் யெகோவாவின் சாட்சிகள், உண்மையிலேயே அடையாளப்பூர்வமான பரலோக செய்தியாளனின் பிரதிநிதிகள். அந்தச் செய்தியாளனின் வேலையும் வெளிப்படுத்துதலில் விவரிக்கப்படுகிறது: “வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக் கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை [“நற்செய்தியை,” NW] உடையவனாயிருந்[தான்].” (வெளிப்படுத்துதல் 14:6) “உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின” என்பதும், “பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பதற்கு” யெகோவாவின் குறிக்கப்பட்ட “காலம் வந்தது” என்பதும் இந்த ‘நித்திய நற்செய்தியில்’ அடங்கியுள்ளது. (வெளிப்படுத்துதல் 11:15, 17, 18) இது உண்மையாகவே நற்செய்தி அல்லவா?
வெளிப்படுத்துதல் நமக்கு அளிக்கும் நம்பிக்கை
4. (அ) வெளிப்படுத்துதல் 1-ம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை சத்தியங்கள் யாவை? (ஆ) நற்செய்தியிலிருந்து பயனடைய விரும்புகிறவர்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
4 வெளிப்படுத்துதல் புத்தகத்தின் முதல் அதிகாரம், “இருக்கிறவரும், இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: . . . அல்பாவும் ஓமேகாவும்” என யெகோவாவை அறிமுகப்படுத்துகிறது. “உண்மையுள்ள சாட்சி,” “மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவ[ர்],” “பூமியின் ராஜாக்களுக்கு அதிபதி” என அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அறிமுகப்படுத்துகிறது. ‘நம்மில் அன்புகூருகிறவராய்த் தமது இரத்தத்தினால் நமது பாவங்களிலிருந்து நம்மை விடுதலை செய்தவர்’ எனவும் இயேசுவைப் பற்றி சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 1:5, 8, தி.மொ.) இவ்வாறு, ஆரம்பம் முதற்கொண்டே, உயிரை காக்கும் அடிப்படை சத்தியங்களை வெளிப்படுத்துதல் விவரமாக எடுத்துரைக்கிறது. யெகோவாவின் அரசாதிகாரத்தை அங்கீகரித்து, இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தில் விசுவாசம் வைத்து, யெகோவாவே இயேசுவை உயிர்த்தெழுப்பினார் என்றும் இப்போது அவரை பூமியின்மீது அரசராக நியமித்திருக்கிறார் என்றும் நம்பினால் மாத்திரமே, ‘பூமியில் வாசம்பண்ணுகிற’ ஜனங்கள் தங்களுக்குக் கொண்டுவரப்பட்ட அந்த ‘மகிழ்ச்சிக்குரிய செய்தியிலிருந்து’ பயனடைவர்.—சங்கீதம் 2:6-8.
5. வெளிப்படுத்துதல் 2 மற்றும் 3-ம் அதிகாரங்களில் கிறிஸ்து என்ன பாகம் வகிப்பதாக சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது?
5 அடுத்த இரண்டு அதிகாரங்கள், கிறிஸ்து இயேசுவை, பூமியிலுள்ள அவருடைய சீஷர்கள் அடங்கிய சபைகளின் அன்புள்ள பரலோக கண்காணியாக சித்தரிக்கின்றன. பொ.ச. முதல் நூற்றாண்டில் ஆசியா மைனரில் இருந்த தெரிந்தெடுக்கப்பட்ட ஏழு கிறிஸ்தவ சபைகளுக்கு இந்தப் புத்தகச் சுருள் முகவரியிடப்பட்டிருந்தது. இன்றைக்கும் பொருந்துகிற ஊக்குவிப்பும் கண்டிப்பான அறிவுரையும் அதில் உள்ளது. சபைகளுக்கு அனுப்பப்பட்ட செய்திகள், “உன் கிரியைகளையும் . . . அறிந்திருக்கிறேன்” அல்லது “உன் உபத்திரவத்தையும் . . . அறிந்திருக்கிறேன்” என்பவற்றை போன்ற வார்த்தைகளால் பொதுவாக தொடங்குகின்றன. (வெளிப்படுத்துதல் 2:2, 9) ஆம், தம்முடைய சீஷர்கள் அடங்கிய சபைகளில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை கிறிஸ்து நன்கு அறிந்திருந்தார். சில சபைகளை அவற்றின் அன்புக்காகவும், விசுவாசத்திற்காகவும், ஊழியத்தில் உழைப்புக்காகவும், பொறுமைக்காகவும், தம்முடைய பெயருக்கும் வார்த்தைக்கும் உண்மையுடன் இருந்ததற்காகவும் பாராட்டினார். யெகோவாவின்மீதும் அவருடைய குமாரன்மீதும் அவர்களுக்கு இருந்த அன்பு குறைந்துபோக அனுமதித்ததால், அல்லது பாலின ஒழுக்கக்கேடு, உருவ வழிபாடு அல்லது விசுவாசதுரோக கட்சிப் பிரிவினை போன்றவற்றிற்கு இடங்கொடுத்ததால் மற்ற சபைகளை கடிந்துகொண்டார்.
6. நான்காம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள தரிசனம் ஜனங்கள் எதைப் புரிந்துகொள்ள உதவுகிறது?
6 நான்காம் அதிகாரம் யெகோவா தேவனுடைய பரலோக சிங்காசனத்தின் வியப்பூட்டும் காட்சியை கண்முன் கொண்டுவருகிறது. யெகோவாவின் பிரசன்னத்தின் மகிமையையும், அவர் பயன்படுத்தப்போகும் பரலோக ஆட்சி அமைப்பு முறையையும் பற்றிய கணநேர காட்சியை வழங்குகிறது. சர்வலோகத்திலும் முதன்மையான சிங்காசனத்தைச் சுற்றிலும் கிரீடம் அணிந்த அரசர்கள் தங்கள் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள்; யெகோவா தேவனை தொழுதுகொண்டு அவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்: “தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.”—வெளிப்படுத்துதல் 4:11.
7. (அ) பூமியில் குடியிருக்கிறவர்கள் என்ன செய்யும்படி தேவதூதன் அறைகூவல் விடுக்கிறார்? (ஆ) நம்முடைய கல்வி திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
7 இன்றைய ஜனங்களுக்கு இது எதையாவது அர்த்தப்படுத்துகிறதா? நிச்சயமாகவே! ஆயிரவருட ராஜ்யத்தில் தங்களுக்கு ஜீவன் வேண்டுமென்றால், “கடவுளுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புச் செய்யும் வேளை வந்துவிட்டது” என்று ‘நடுவானத்தில் பறக்கிற தூதன்’ அறிவிக்கும் செய்திக்கு செவிகொடுக்க வேண்டும். (வெளிப்படுத்துதல் 14:6, 7, தி.மொ.) ‘பூமியில் வாசம்பண்ணுகிறவர்கள்’ யெகோவாவை அறிந்து அவரை வணங்கவும், அவர் சிருஷ்டிகர் என்பதை தெரிந்துகொள்ளவும், அவருடைய நீதியுள்ள அரசாட்சிக்கு மனப்பூர்வமாய் கீழ்ப்படியவும் உதவி செய்வதே யெகோவாவின் சாட்சிகளால் செய்யப்படும் பைபிள் அறிவு புகட்டும் இந்த ஊழியத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
ஆட்டுக்குட்டியானவர் கனத்திற்குப் பாத்திரர்
8. (அ) 5 மற்றும் 6-ம் அதிகாரங்களில் இயேசு எவ்வாறு சித்தரித்துக் காட்டப்படுகிறார்? (ஆ) நற்செய்திக்கு செவிசாய்ப்போர் அனைவரும் இத்தரிசனத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
8 அடுத்த இரண்டு அதிகாரங்களாகிய 5-ம் 6-ம், ஏழு முத்திரைகள் போட்ட புத்தக சுருளைத் திறப்பதற்கு தகுதியான ஆட்டுக்குட்டியானவராக இயேசு கிறிஸ்துவை காட்டுகின்றன. இவ்வாறு, நம்முடைய நாளில் நடைபெறும் சம்பவங்களை அடையாள மொழியில் வெளிப்படுத்துகின்றன. (யோவான் 1:29-ஐ ஒப்பிடுக.) அடையாளப்பூர்வமான இந்த ஆட்டுக்குட்டியானவரிடம் பரலோகக் குரல்கள் இவ்வாறு சொல்கின்றன: “புத்தகச் சுருளை எடுத்து அதன் முத்திரைகளை உடைக்க நீர் தகுதியானராக இருக்கிறீர், ஏனெனில் நீர் கொல்லப்பட்டீர், உம்முடைய இரத்தத்தினால் கடவுளுக்காக ஆட்களை எல்லா மரபினரிலிருந்தும் மொழியினரிலிருந்தும் ஜனங்களிலிருந்தும் தேசங்களிலிருந்தும் வாங்கி, அவர்களை ஒரு ராஜ்யமாகவும் நம் கடவுளுக்கு ஆசாரியர்களாகவும் இருக்க செய்தீர், அவர்கள் அரசர்களாக பூமியின்மீது ஆளுகை செலுத்துவார்கள்.” (வெளிப்படுத்துதல் 5:9, 10, NW) எல்லா இனத்தையும் சேர்ந்த மனிதர்கள் சிலர், கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தின் அடிப்படையில், அவரோடு பரலோகத்தில் இருந்து, ‘அரசர்களாக பூமியின்மீது ஆளுகை செலுத்த’ அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று இத்தரிசனம் கற்பிக்கிறது. (வெளிப்படுத்துதல் 1:5, 6-ஐ ஒப்பிடுக.) அவர்களுடைய திட்டமான எண்ணிக்கை வெளிப்படுத்துதலில் பின்னால் தெரிவிக்கப்படுகிறது.
9. ஆறாம் அதிகாரத்தில் இயேசு எவ்வாறு சித்தரித்துக் காட்டப்படுகிறார்?
9 மற்றொரு தரிசனத்தில் கிறிஸ்து, கிரீடம் தரித்து வெள்ளை குதிரையின்மீது சவாரி செய்து, “ஜெயிக்கிறவராக ஜெயிப்பதற்கென” புறப்பட்டுச் செல்வதாக காட்டப்படுகிறார். அப்பாக்கலிப்ஸ் புத்தகத்தில் அடையாளப்பூர்வமாக குறிப்பிடப்படும் மற்ற மூன்று குதிரைகளில் சவாரிசெய்வோரின் தீய பாதிப்புகளை இவர் வென்று கீழ்ப்படுத்துவது மகிழ்ச்சிக்குரியது. இவர்களுடைய ஆக்ரோஷமான சவாரி, முக்கிய திருப்புக்கட்ட ஆண்டாகிய 1914 முதற்கொண்டு, மனிதவர்க்கத்திற்கு யுத்தங்களையும் பஞ்சங்களையும் மரணத்தையும் கொண்டுவந்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 6:1-8) மனிதவர்க்கத்தை இரட்சிப்பதிலும் யெகோவாவின் அதிசயமான நோக்கங்களை நிறைவேற்றுவதிலும் தேவ ஆட்டுக்குட்டியானவராகிய கிறிஸ்து வகிக்கும் ஈடிணையற்ற பாகம், யெகோவாவின் சாட்சிகளுடைய பைபிள் போதக ஊழியத்தின் முக்கிய கருப்பொருளாகும்.
10. (அ) 7-ம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள முக்கிய தகவல் என்ன? (ஆ) ராஜ்யத்தைப் பெற்றுக்கொள்கிறவர்களைப் பற்றி கிறிஸ்து எவ்வாறு பேசினார்?
10 ஏழாம் அதிகாரத்தில் மகிழ்ச்சிதரும் செய்தி அடங்கியுள்ளது. ஆட்டுக்குட்டியானவரின் பிதாவானவர் வழங்கும் ராஜ்யத்தை சுதந்தரிக்கப்போகும் ‘சிறு மந்தை’ என இயேசு அழைக்கிறவர்களுடைய எண்ணிக்கையை வெளிப்படுத்துதல் புத்தகத்தில் மாத்திரமே நாம் காண்கிறோம். (லூக்கா 12:32; 22:28-30) இவர்கள் யெகோவா தேவனுடைய ஆவியால் முத்திரையிடப்படுகின்றனர். (2 கொரிந்தியர் 1:21, 22) வெளிப்படுத்துதலைப் பெற்ற அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு உறுதியளிக்கிறார்: “முத்திரை போடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன்; . . . முத்திரை போடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்.” (வெளிப்படுத்துதல் 7:4) பரலோக சீயோன் மலையில் ஆட்டுக்குட்டியானவரோடு ஆளுகை செய்வதற்கு ‘மனுஷரிலிருந்து . . . மீட்டுக்கொள்ளப்பட்டவர்களின்’ இந்தத் திட்டமான எண்ணிக்கையை பிற்பட்ட ஓர் அதிகாரம் உறுதிப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 14:1-4) இந்த எண்ணிக்கையைப் பற்றி கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் தெளிவும் உறுதியுமற்ற விளக்கங்களைக் கொடுக்கின்றன. ஆனால் பைபிள் அறிஞராகிய இ. டபிள்யு. புல்லிங்கர் இதைப் பற்றி சொல்வது அக்கறைக்குரிய விஷயம். ‘இந்த ஒரே அதிகாரத்தில் திட்டமான ஒரு எண்ணிக்கையோடு அதற்கு நேர்மாறாக திட்டமில்லாத எண்ணிக்கை கொடுக்கப்பட்டிருப்பது ஓர் எளிய உண்மை’ என்று அவர் சொல்கிறார்.
11. (அ) 7-ம் அதிகாரத்தில் உள்ள நற்செய்தி என்ன? (ஆ) ‘திரள் கூட்டத்தாருக்கு’ முன்பாக வைக்கப்பட்டுள்ள நம்பிக்கை என்ன?
11 திட்டமில்லாத எந்த எண்ணிக்கையை புல்லிங்கர் குறிப்பிடுகிறார்? 9-ஆம் வசனத்தில் அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்.” (வெளிப்படுத்துதல் 7:9) இந்தத் திரள் கூட்டத்தினர் யார், தற்போது கடவுளுக்கு முன்பாக அவர்களுடைய நிலைநிற்கை என்ன, அவர்களுக்கு என்ன எதிர்காலம்? அப்பாக்கலிப்டிக் தரும் பதில், பூமியில் வசிப்போருக்கு நற்செய்தி. நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.” கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தில் விசுவாசம் வைப்பதால் இவர்கள் ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ பாதுகாக்கப்படுவார்கள். கிறிஸ்து “இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்.” (வெளிப்படுத்துதல் 7:14-17) ஆம், இன்று வாழும் லட்சக்கணக்கானோர் தற்போதைய பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் முடிவை தப்பிப்பிழைக்கும் எண்ணிக்கையற்ற அந்தக் கூட்டத்தின் பாகமாகலாம். அரசராகிய இயேசு கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியில் வாழும் அவருடைய பிரஜைகளாகிய இவர்கள், பூமியில் நித்திய ஜீவனடைவதற்கு அவரால் வழிநடத்தப்படுவார்கள். இது நற்செய்தி அல்லவா?
“அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்”
12, 13. (அ) 8 முதல் 19 அதிகாரங்களில் என்ன சொல்லப்பட்டுள்ளன? (ஆ) இத்தகைய தீர்க்கதரிசனங்களைப் பற்றி நேர்மை இருதயமுள்ளோர் ஏன் கவலைப்பட வேண்டியதில்லை?
12 8 முதல் 19 வரையான அதிகாரங்களே அப்பாக்கலிப்ஸ் அல்லது வெளிப்படுத்துதல் புத்தகம் பயங்கர நிகழ்ச்சிகளை முன்னறிவிக்கும் புத்தகம் என்ற பெயரெடுப்பதற்கு காரணம். சாத்தானிய காரிய ஒழுங்குமுறையின் பல்வேறு தொகுதிகளுக்கு எதிராக கூறப்பட்ட (எக்காள முழக்கங்கள், வாதைகள், மற்றும் தேவனுடைய கோபகலசங்களால் அடையாளமாக குறிக்கப்பட்ட) நியாயத்தீர்ப்பு செய்திகள் இதில் அடங்கியுள்ளன. இந்த நியாயத்தீர்ப்புகள் முதலில் பொய் மதத்திற்கு (‘மகா பாபிலோனுக்கு’) எதிராகவும், பின்பு மூர்க்க மிருகங்களால் அடையாளமாக குறிக்கப்பட்ட தேவபக்தியற்ற அரசியல் ஒழுங்கு முறைகளுக்கு எதிராகவும் நிறைவேற்றப்படும்.—வெளிப்படுத்துதல் 13:1, 2; 17:5-7, 15, 16. a
13 சாத்தானும் அவனுடைய பேய்களும் பூமியில் தள்ளப்பட்டு, பரலோகங்கள் சுத்திகரிக்கப்பட்டதை இந்த அதிகாரங்கள் வர்ணிக்கின்றன. 1914 முதல், முன்னொருபோதும் இராத அளவு பூமியில் காணப்படும் துன்பங்களுக்கு சரியான விளக்கத்தை இதுவே தருகிறது. (வெளிப்படுத்துதல் 12:7-12) மேலும், பூமியிலிருக்கும் சாத்தானின் பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் அழிவையும் இவை அடையாள அர்த்தத்தில் விவரிக்கின்றன. (வெளிப்படுத்துதல் 19:19-21) திடுக்கிடச் செய்யும் இத்தகைய சம்பவங்களால் நல்மனமுள்ளோர் அதிர்ச்சியடைய வேண்டுமா? இல்லை, ஏனெனில் கடவுளுடைய நியாயத்தீர்ப்புகள் நிறைவேற்றப்படுகையில் பரலோகத்திலுள்ள பெருந்திரளானோர் இவ்வாறு ஆர்ப்பரிக்கிறார்கள்: “அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.”—வெளிப்படுத்துதல் 19:1, 2.
14, 15. (அ) தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவு எவ்வாறு நீதியாக நிறைவேற்றப்படும்? (ஆ) அப்பாக்கலிப்ஸில் உள்ள இந்தப் பாகம் ஏன் நேர்மை இருதயமுள்ளோருக்கு மகிழ்ச்சிக்குரியதாக இருக்க வேண்டும்?
14 பூமியை கெடுப்போரை ஒழிக்காமல் நீதியுள்ள காரிய ஒழுங்குமுறையை யெகோவா கொண்டுவரப் போவதில்லை. (வெளிப்படுத்துதல் 11:17, 18; 19:11-16; 20:1, 2) ஆனால், இதை நிறைவேற்ற எந்த மனிதனுக்கும் அல்லது அரசியல் துறைக்கும் அதிகாரமோ வல்லமையோ இல்லை. யெகோவாவும், அவரால் நியமிக்கப்பட்ட அரசரும் நியாயாதிபதியுமான கிறிஸ்து இயேசுவுமே நீதியான முறையில் இதை செய்ய முடியும்.—2 தெசலோனிக்கேயர் 1:6-9.
15 தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையை முடிவுக்குக் கொண்டுவர யெகோவா நோக்கம் கொண்டிருக்கிறார் என்று அப்பாக்கலிப்ஸ் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. இது, “அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற” ஆண்களுக்கும் பெண்களுக்கும் களிகூர ஒரு காரணமாக இருக்க வேண்டும். (எசேக்கியேல் 9:4) மகிழ்ச்சியுள்ள செய்தியுடன் தேவதூதன் கொடுத்த இந்த அழைப்புக்கு செவிசாய்க்க வேண்டிய அவசர தேவையை அவர்கள் மனதில் பதியவைக்க வேண்டும். தேவதூதன் சொன்னதாவது: “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் . . . உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள்.” (வெளிப்படுத்துதல் 14:7) அப்படிப்பட்ட ஜனங்கள், “தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய” அவருடைய சாட்சிகளோடு யெகோவாவை வணங்கி அவரை சேவிப்பார்களாக.—வெளிப்படுத்துதல் 12:17.
மகிமையான ஆயிரவருட ஆட்சி
16. (அ) ஏன் சர்ச்சுகள் ஆயிரவருட நம்பிக்கையை நிராகரித்து விட்டன? (ஆ) பரமண்டல ஜெபம் பதிலளிக்கப்படும் என்பதை ஏன் யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள்?
16 வெளிப்படுத்துதல் புத்தகத்தில் 20 முதல் 22 வரையிலான அதிகாரங்கள், ஆயிரவருட ஆட்சியில் நம்பிக்கை வைப்பதற்கான ஆதாரத்தை அள்ளி வழங்குகின்றன. பைபிளில் இந்தப் புத்தகம் மாத்திரமே ஆயிரவருட ஆட்சியில் பரலோகத்திலும் பூமியிலும் என்றும் மகிழ்ச்சி நிலவுவதை முற்காட்சியாக குறிப்பிடுகிறது. கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் ஆயிரவருட ஆட்சியின் நம்பிக்கையை கைவிட்டுவிட்டன. நீதிமான்கள் பரலோகத்திற்கும் பொல்லாதவர்கள் நரகத்திற்கும் செல்வார்கள் என்ற கோட்பாட்டை வைத்திருப்பதால், பூங்காவனம் போன்ற பரதீஸிய பூமியில் அவற்றிற்கு எந்த இடமுமில்லை. கடவுளுடைய ‘சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படும்’ என்ற இயேசுவின் மாதிரி ஜெபம், கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளிலுள்ள பெரும்பாலான அங்கத்தினர்களுக்கு எந்தவித அர்த்தமும் இல்லாமல் போய்விட்டது. (மத்தேயு 6:10) ஆனால் யெகோவாவின் சாட்சிகளுடைய விஷயத்தில் அப்படியில்லை. யெகோவா தேவன் இந்தப் பூமியை ‘வெறுமையாக’ படைக்காமல், அதை ‘குடியிருப்புக்காக’ படைத்திருக்கிறார் என்பதை அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். (ஏசாயா 45:12, 18) இவ்வாறு, பூர்வகால தீர்க்கதரிசனம், மாதிரி ஜெபம், ஆயிரவருட ஆட்சியைப் பற்றிய அப்பாக்கலிப்டிக் நம்பிக்கை ஆகிய அனைத்தும் ஒத்திருக்கிறது. ஆயிரவருட ஆட்சியின்போது யெகோவாவின் சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படும்படி கிறிஸ்து பார்த்துக்கொள்வார்.
17. ‘ஆயிர வருடத்தை’ சொல்லர்த்தமாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதை எது காட்டுகிறது?
17 ‘ஆயிர வருடம்’ என்ற பதம் வெளிப்படுத்துதல் 20-ம் அதிகாரத்தின் முதல் ஏழு வசனங்களில் ஆறு தடவை வருகிறது. நான்கு தடவை ‘அந்த’ என்ற சுட்டிடைச் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பது அக்கறைக்குரிய ஒன்றாகும். இது, வரையறுக்கப்படாத நீண்ட காலத்தை அல்ல, சொல்லர்த்தமான ஆயிரவருட ஆட்சியையே குறிப்பிடுகிறது என்பதை காட்டுகிறது. இப்படித்தான் நாம் நம்பும்படி பெரும்பாலான கிறிஸ்தவமண்டல விரிவுரையாளர்களும் விரும்புகிறார்கள். ஆயிரவருட ஆட்சியில் என்ன நடக்கும்? முதலாவதாக, இந்த முழு காலப்பகுதியிலும் சாத்தான் செயலற்றவனாக்கப்படுவான். (வெளிப்படுத்துதல் 20:1-3; ஒப்பிடுக: எபிரெயர் 2:14; NW.) என்னே ஒரு நற்செய்தி!
18. (அ) ஆயிரவருட ஆட்சியை ஏன் நியாயத்தீர்ப்பின் ‘நாள்’ என அழைக்கலாம்? (ஆ) ஆயிரவருட முடிவில் என்ன சம்பவிக்கும்?
18 ‘அவரோடேகூட [கிறிஸ்துவோடேகூட] ஆயிரம் வருஷம் அரசாளுகிறவர்களுக்கு’ ‘நியாயந்தீர்க்கும் அதிகாரம்’ கொடுக்கப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால், இந்தக் காலப்பகுதி நியாயத்தீர்ப்பின் ஆயிரவருட ‘நாள்.’ (வெளிப்படுத்துதல் 20:4, 6; ஒப்பிடுக: அப்போஸ்தலர் 17:31; 2 பேதுரு 3:8) மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படுவர். பின்பு, ‘மிகுந்த உபத்திரவத்தைத்’ தப்பிப்பிழைப்பவர்களோடு, அந்த ஆயிரவருட காலப்பகுதியில் தாங்கள் செய்த செய்கைகளுக்கு தக்கவாறு நியாயமாக தண்டனை வழங்கப்படுவர். (வெளிப்படுத்துதல் 20:12, 13) ஆயிரவருட முடிவில், மனிதரை கடைசி பரீட்சைக்கு உட்படுத்துவதற்காக சாத்தான் சிலகாலத்திற்கு விடுதலை செய்யப்படுவான். அதன்பின்பு, அவனும் அவனுடைய பேய்களும் இவர்களோடு சேர்ந்து கலகம் செய்கிற பூமியிலுள்ள எவரும் நிரந்தரமாக அழிக்கப்படுவர். (வெளிப்படுத்துதல் 20:7-10) இந்தப் பரீட்சையில் தேறுகிறவர்களுடைய பெயர்கள் ‘ஜீவபுஸ்தகத்திலிருந்து’ அழிக்க முடியாதவாறு எழுதப்படும். மேலும், நித்திய காலமாக மகிழ்ச்சியில் திளைக்கும் வாழ்க்கைக்கு வழிநடத்தப்படுவர். இவர்கள் பரதீஸிய பூமியில், யெகோவாவை சேவித்து அவரையே வணங்குவர்.—வெளிப்படுத்துதல் 20:14, 15; சங்கீதம் 37:9, 29; ஏசாயா 66:22, 23.
19. (அ) வெளிப்படுத்துதல் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிசயமான நம்பிக்கைகள் தவறாமல் நிறைவேறும் என்பதில் நாம் ஏன் நிச்சயமாக இருக்கலாம்? (ஆ) பின்வரும் கட்டுரையில் என்ன சிந்திக்கப்படும்?
19 இப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி ததும்பும் செய்திகளே அப்பாக்கலிப்ஸ் புத்தகத்தில் உள்ளன. இவை மனிதனால் கொடுக்கப்பட்ட வெற்றுவேட்டு வாக்குறுதிகள் அல்ல. அப்போஸ்தலன் யோவான் எழுதினார்: “சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.” (வெளிப்படுத்துதல் 21:5) மகிழ்ச்சிக்குரிய இந்தச் செய்தியின் நிறைவேற்றத்தில் பங்குபெற நாம் என்ன செய்ய வேண்டும்? கடவுளைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்களுக்கு வெளிப்படுத்துதல் புத்தகத்தில் நிறைய அறிவரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட அறிவரைகளைப் பின்பற்றுவது இன்றும் என்றும் எல்லையில்லா மகிழ்ச்சியைக் கொண்டுவரும். இதை அடுத்த கட்டுரை காண்பிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a வெளிப்படுத்துதல் புத்தகத்தின் முழு விளக்கங்களுக்கு, 1988-ல் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தைக் காண்க.
சிந்தனைக்கு கொண்டுவர சில குறிப்புகள்
◻ வெளிப்படுத்துதல் 4 முதல் 6 அதிகாரங்களில் காணப்படும் என்ன அடிப்படை சத்தியங்கள் நற்செய்தியின் முக்கிய பாகமாகின்றன?
◻ வெளிப்படுத்துதல் 7-ம் அதிகாரத்தில் காணப்படும் நற்செய்தி என்ன?
◻ வெளிப்படுத்துதலில் சொல்லப்பட்டுள்ள நியாயத்தீர்ப்பு செய்தியால் நேர்மை இருதயமுள்ளோர் ஏன் அதிர்ச்சியடைய வேண்டியதில்லை?
◻ எந்த விதங்களில் ஆயிரவருட ஆட்சி ஒரு நியாயத்தீர்ப்பு ‘நாள்’?
[பக்கம் 10-ன் படம்]
போர், பஞ்சம், சாவு இவற்றை ராஜாவாகிய இயேசு கிறிஸ்து முற்றிலும் ஒழித்துக்கட்டுவார்