காவற்காரனோடு சேவை செய்தல்
‘‘ஆண்டவரே, நான் பகல்முழுதும் என் காவலிலே நின்று, இராமுழுதும் நான் என் காவலிடத்திலே தரித்திருக்கிறேன்.”—ஏசா. 21:8.
1. என்ன மகத்தான வாக்குறுதிகளுக்கு யெகோவாவே சாட்சியாய் இருக்கிறார்?
யெகோவா தமது நோக்கத்தை நிறைவேற்றுவதில் நிகரற்றவர். தம்முடைய பெயரை பரிசுத்தப்படுத்தி, பரதீஸான பூமியில் மகிமையான அரசாட்சியை ஸ்தாபிக்க தீர்மானித்திருக்கிறார்; அவருடைய மகத்தான நோக்கத்தைத் தடுத்து நிறுத்த, பிசாசாகிய சாத்தான் எனும் அந்தக் கலகக்கார தூதனால் எதுவும் செய்ய முடியாது. (மத்தேயு 6:9, 10) அந்த ஆட்சியில் மனிதர் அமோகமாய் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள். கடவுள், “மரணத்தை என்றுமாக விழுங்குவார்; யெகோவாவாகிய கடவுள் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து . . . நீக்கிவிடுவார்.” ஒன்றுபட்ட சந்தோஷமுள்ள ஜனங்கள் நித்திய காலத்திற்கும் சமாதானத்தையும் செழிப்பையும் அனுபவித்து மகிழ்வார்கள். (ஏசாயா 25:8, தி.மொ.; 65:17-25) இந்த மகத்தான வாக்குறுதிகளுக்கு யெகோவாவே சாட்சியாக உள்ளார்!
2. எந்த மனித சாட்சிகளை யெகோவா எழுப்பியிருக்கிறார்?
2 எனினும் மகத்தான சிருஷ்டிகருக்கு மனித சாட்சிகளும் இருக்கின்றனர். கிறிஸ்தவத்திற்கு முன்னான காலங்களில், ஆபேல் முதல், ‘மேகம்போன்ற திரளான சாட்சிகள்’ சகித்து நிலைத்திருந்தார்கள். பல சமயங்களில் கடும் சோதனைகளையும் சமாளித்து நின்றார்கள். அவர்களுடைய மிகச் சிறந்த முன்மாதிரி, உத்தமமுள்ள கிறிஸ்தவர்களை இன்று ஊக்குவிக்கிறது. தைரியமாய் சாட்சி கொடுத்ததற்கு தலைசிறந்த முன்மாதிரி கிறிஸ்து இயேசுவே. (எபிரெயர் 11:1–12:2) உதாரணத்திற்கு, பொந்தியு பிலாத்துவுக்கு முன் அவர் அளித்த கடைசி சாட்சியத்தை நினைவுபடுத்தி பாருங்கள். “சத்தியத்தைக் குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்” என்று இயேசு சொன்னார். (யோவான் 18:37) பொ.ச. 33 முதல் இன்று பொ.ச. 2000 வரை, வைராக்கியமான கிறிஸ்தவர்கள் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி “தேவனுடைய மகத்துவங்களை” குறித்து தைரியமாய் சாட்சி கொடுத்து வந்திருக்கிறார்கள்.—அப்போஸ்தலர் 2:11.
பாபிலோனிய மத செல்வாக்கு
3. யெகோவாவையும் அவருடைய சித்தத்தையும் பற்றி கொடுக்கப்படும் சாட்சியை சாத்தான் எவ்வாறு எதிர்த்திருக்கிறான்?
3 கொடிய பகைவனாகிய பிசாசான சாத்தான், கடவுளுடைய சாட்சிகள் கொடுக்கும் சாட்சியத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பொல்லாத வழிகளில் முயன்று வந்திருக்கிறான். “பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம்” என அழைக்கப்படும் ‘பொய்க்குப் பிதா’ இந்த ‘உலகமனைத்தையும் மோசம்போக்கி’ வருகிறான். ‘தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு’ எதிராக அவன் தொடுக்கும் போரின் கடுமை தணியவில்லை, முக்கியமாய் இந்தக் கடைசி நாட்களில்.—யோவான் 8:44; வெளிப்படுத்துதல் 12:9, 17.
4. மகா பாபிலோன் பிறந்தது எவ்வாறு?
4 ஏறக்குறைய 4,000 ஆண்டுகளுக்கு முன், நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்திற்குப் பின், “யெகோவாவுக்கு எதிரான பலத்த வேட்டைக்காரனாகிய” நிம்ரோதை சாத்தான் தூண்டிவிட்டான். (ஆதியாகமம் 10:9, 10, NW) நிம்ரோதுவின் மாபெரும் நகரமாகிய பாபிலோன் (பாபேல்), பேய்த்தன மதத்தின் மையமானது. பாபேல் கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்தவர்களின் மொழியை யெகோவா குழப்பியபோது, அந்த ஜனங்கள் பூமியெங்கும் சிதறிப்போனார்கள்; அதோடு தங்கள் பொய் மதத்தையும் தங்களோடு கொண்டுசென்றார்கள். இவ்வாறு பாபிலோன், வெளிப்படுத்தின விசேஷத்தில் மகா பாபிலோன் என்று அழைக்கப்பட்டுள்ள பொய்மத உலகப் பேரரசின் பிறப்பிடமாயிற்று. இந்தத் தொன்மையான மத அமைப்பின் அழிவை வெளிப்படுத்துதல் புத்தகம் முன்னறிவிக்கிறது.—வெளிப்படுத்துதல் 17:5; 18:21.
சாட்சிகளாகிய ஒரு ஜனம்
5. எந்த ஜனத்தை யெகோவா தம்முடைய சாட்சியாக ஒழுங்கமைத்தார், ஆனால் அவர்கள் நாடுகடத்தப்படும்படி ஏன் அனுமதித்தார்?
5 நிம்ரோதுக்குப் பிறகு ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்குப் பின், உண்மையுள்ள ஆபிரகாமின் சந்ததியாரான இஸ்ரவேலரை யெகோவா தம்முடைய சாட்சிகளாக ஒழுங்கமைத்தார். (ஏசாயா 43:10, 12) அந்த ஜனத்தில் பலர் யெகோவாவை உத்தமத்தோடு சேவித்தார்கள். ஆனால் நூற்றாண்டுகள் உருண்டோட, அக்கம் பக்கத்திலிருந்த தேசத்தாரின் பொய் நம்பிக்கைகள் இஸ்ரவேலை சீரழித்தன. யெகோவாவின் உடன்படிக்கைக்கு உட்பட்ட ஜனம், அவரை விட்டு விலகி பொய் தெய்வங்களை வணங்க ஆரம்பித்தது. ஆகையால், ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய சேனைகள் பொ.ச.மு. 607-ல் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் அழித்து, பெரும்பான்மையான யூதர்களை பாபிலோனுக்கு நாடுகடத்திச் சென்றன.
6. யெகோவாவின் தீர்க்கதரிசன காவற்காரன் என்ன நற்செய்தியை அறிவித்தான், அது எப்போது நிறைவேறியது?
6 பொய் மதத்திற்கு அது அமோக வெற்றி அல்லவா! ஆனால், பாபிலோனின் ஆதிக்கம் நீடிக்கவில்லை. அந்தச் சம்பவத்திற்கு ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன், யெகோவா இவ்வாறு கட்டளையிட்டார்: “நீ போய், காண்பதைத் தெரிவிக்கும்படி ஜாமக்காரனை வை.” இந்தக் காவற்காரன் என்ன செய்தியைத் தெரிவிக்க வேண்டும்? “பாபிலோன் விழுந்தது, விழுந்தது; அதின் விக்கிரக தேவர்களையெல்லாம் தரையோடே மோதி உடைத்தார்” என்பதே அந்தச் செய்தி. (ஏசாயா 21:6, 9) நிச்சயமாகவே, பொ.ச.மு. 539-ல், இந்தத் தீர்க்கதரிசன அறிவிப்பின்படியே நடந்தது. பலம்படைத்த பாபிலோன் விழுந்தது, கடவுளுடைய உடன்படிக்கையின் ஜனங்கள், சீக்கிரத்தில் தங்கள் தாயகம் திரும்பவிருந்தார்கள்.
7. (அ) யெகோவா தங்களைத் தண்டித்ததிலிருந்து யூதர்கள் என்ன கற்றார்கள்? (ஆ) பாபிலோனிய சிறைவாழ்க்கைக்குப் பின் யூதர்கள் என்ன கண்ணிகளுக்குள் விழுந்தார்கள், அதன் விளைவு என்ன?
7 திரும்பிவந்த யூதர்கள், விக்கிரக வணக்கத்தையும் ஆவி வழிபாட்டையும் விட்டு விலகியிருக்க வேண்டிய அவசியத்தை நன்றாகவே புரிந்திருந்தார்கள். எனினும், ஆண்டுகள் செல்லச்செல்ல, மற்ற கண்ணிகளுக்குள் வீழ்ந்தார்கள். சிலர் கிரேக்க தத்துவம் எனும் கண்ணியில் சிக்கினார்கள். இன்னும் சிலர், கடவுளுடைய வார்த்தைக்கு பதிலாக மனித பாரம்பரியத்திற்கே முதலிடம் கொடுத்தார்கள். வேறு சிலர், தேசாபிமானம் எனும் வலையில் வீழ்ந்தார்கள். (மாற்கு 7:13; அப்போஸ்தலர் 5:37) இயேசு பிறப்பதற்குள், அந்த ஜனம் மீண்டும் தூய வணக்கத்திலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றிருந்தது. நற்செய்தியை இயேசு அறிவிக்கையில் சில யூதர்கள் செவிசாய்த்தபோதிலும், மொத்தத்தில் அந்த ஜனம் அவரை ஏற்காமல் புறக்கணித்தது. ஆகவே கடவுளும் அவர்களை ஒதுக்கிவிட்டார். (யோவான் 1:9-12; அப்போஸ்தலர் 2:36) இனிமேலும் இஸ்ரவேல் கடவுளுடைய சாட்சியல்ல; பொ.ச. 70-ல், எருசலேமும் அதன் ஆலயமும் மறுபடியும் பாழாக்கப்பட்டது; இந்தச் சமயத்தில் ரோம சேனை அதைப் பாழாக்கியது.—மத்தேயு 21:43.
8. யார் யெகோவாவின் சாட்சியானார்கள், பவுலின் எச்சரிக்கை இந்தச் சாட்சிகளுக்கு எவ்வாறு காலத்துக்கேற்றதாய் இருந்தது?
8 இதற்கிடையில், கிறிஸ்தவர்கள் அடங்கிய ‘தேவனுடைய இஸ்ரவேல்’ பிறந்தது; இது இப்போது, சகல தேசத்தாருக்கும் கடவுளுடைய சாட்சியாய் விளங்கியது. (கலாத்தியர் 6:16) உடனடியாக இந்தப் புதிய ஆவிக்குரிய ஜனத்தை சின்னாபின்னமாக்க சாத்தான் சதிசெய்தான். முதல் நூற்றாண்டின் முடிவுக்குள், சபைகளில் பிரிவினைகள் தோன்றின. (வெளிப்படுத்துதல் 2:6, 14, 20) பவுலின் இந்த எச்சரிக்கை காலத்துக்கு ஏற்றதாய் இருந்தது: “தத்துவசாஸ்திரம் மாயமான வஞ்சகம் இவற்றினால் ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; அவை மனுஷரின் பாரம்பரிய முறைமைக்கும் உலகத்தின் பாலபோதனைகளுக்கும் இசைந்தவைகளேயன்றிக் கிறிஸ்துவுக்கு இசைந்தவைகளல்ல.”—கொலோசெயர் 2:8, தி.மொ.
9. பவுல் எச்சரித்தபடியே, என்ன விஷயங்கள் கிறிஸ்தவமண்டலத்தின் பிறப்பிற்கு வழிநடத்தின?
9 முடிவில், கிரேக்க தத்துவசாஸ்திரமும் பாபிலோனிய மத கருத்துகளும், பின்னர் பரிணாமக் கொள்கை, குதர்க்கமான பைபிள் விமரிசனம் போன்ற மனித “ஞானமும்,” கிறிஸ்தவம் என சொல்லப்பட்ட மதத்தை கெடுத்தன. அது, பவுல் இவ்வாறு முன்னறிவித்ததுபோல் இருந்தது: “நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 20:29, 30) இந்த விசுவாச துரோகத்தின் விளைவாகவே கிறிஸ்தவமண்டலம் பிறந்தது.
10. கிறிஸ்தவமண்டலத்தின் தூய்மையற்ற வழிபாட்டை எல்லாருமே பின்பற்றவில்லை என்பதை என்ன விஷயங்கள் தெளிவாக்கின?
10 மெய் வணக்கத்திற்கு உண்மையிலேயே தங்களை அர்ப்பணித்திருந்தவர்கள் ‘பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக . . . தைரியமாய்ப் போராட வேண்டியிருந்தது.’ (யூதா 3) உண்மை வணக்கத்திற்கும் யெகோவாவுக்கும் உரிய சாட்சி பூமியிலிருந்து துடைத்தழிக்கப்பட்டு போகுமா? இல்லை. கலகக்காரனாகிய சாத்தானுக்கும் அவனுடைய எல்லா செயல்களுக்கும் அழிவு காலம் நெருங்கியபோது, கிறிஸ்தவமண்டல விசுவாசதுரோக வணக்கத்தை எல்லாருமே பின்பற்றுவதில்லை என்பது தெளிவாயிற்று. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அமெரிக்காவிலுள்ள பிட்ஸ்பர்க்கில் உண்மை மனமுள்ள பைபிள் மாணாக்கர்களின் தொகுதி ஒழுங்கமைக்கப்பட்டது; அது கடவுளுடைய தற்கால சாட்சிகளின் அஸ்திவாரமாயிற்று. இந்த உலகத்தின் முடிவு சமீபித்திருப்பதற்கான வேதப்பூர்வ அத்தாட்சியை இந்தக் கிறிஸ்தவர்கள் கவனிக்கத் தொடங்கினார்கள். பைபிள் தீர்க்கதரிசனத்திற்கு இசைய இந்த உலகத்தின் “முடிவு” காலம் 1914-ல் ஆரம்பித்தது; அப்போது முதல் உலக யுத்தம் ஆரம்பமானது. (மத்தேயு 24:3, 7) அந்த ஆண்டுக்குப் பின், சாத்தானும் அவனுடைய பேய்க் கூட்டத்தாரும் பரலோகத்திலிருந்து கீழே தள்ளப்பட்டதற்கு உறுதியான அத்தாட்சி உள்ளது. இக்கட்டுகள் மிகுந்த 20-ம் நூற்றாண்டு, சாத்தானின் நடவடிக்கைக்கு தெளிவான நிரூபணத்தை அளித்துள்ளது. பரலோகத்தில் இயேசு ராஜாவாக அரசாளுகிறார் என்பதற்கான அடையாளங்களும் இந்த நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க அளவில் நிறைவேறி வருகின்றன.—மத்தேயு 24-ம் 25-ம் அதிகாரங்கள்; மாற்கு 13-ம் அதிகாரம்; லூக்கா 21-ம் அதிகாரம்; வெளிப்படுத்துதல் 12:10, 12.
11. சாத்தான் என்ன செய்ய முயன்றான், ஆனால் அவனுடைய முயற்சி எவ்வாறு தோல்வியைத் தழுவியது?
11 ஜூன் 1918-ல் அந்த பைபிள் மாணாக்கர்களை சுவடுதெரியாமல் அழித்துப்போட மூர்க்க வெறிகொண்ட சாத்தான் முயன்றான். அந்தச் சமயத்திற்குள் அவர்கள் உலகின் பல பாகங்களில் பிரசங்கித்து வந்தார்கள். அவர்களுடைய சட்டப்பூர்வ ஸ்தாபனமாகிய உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியையும் அழித்துப்போட சாத்தான் முயன்றான். சொஸைட்டியின் தலைமை அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்; முதல் நூற்றாண்டில் இயேசுவின்மீது குற்றம் சாட்டப்பட்டதைப்போல், அவர்கள்மீதும் ராஜதுரோக குற்றம் சாட்டப்பட்டது. (லூக்கா 23:2) ஆனால், 1919-ல் இந்த அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டார்கள், அவர்கள் தங்கள் ஊழியத்தைத் தொடர்ந்தனர். அவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பிற்பாடு முழுமையாய் நீக்கப்பட்டது.
கூர்ந்து கவனிக்கும் ‘ஜாமக்காரன்’
12. இன்று யெகோவாவின் காவற்கார வகுப்பார் அல்லது ‘ஜாமக்காரர்’ யார், என்ன மனப்பான்மை அவர்களுக்கு இருந்திருக்கிறது?
12 ‘முடிவு காலம்’ தொடங்கினபோது, யெகோவா மீண்டும் காவற்காரனை நியமித்தார். அவரது நோக்கங்களின் நிறைவேற்றத்தோடு தொடர்புடைய சம்பவங்களை ஜனங்களுக்கு அவன் எச்சரித்தான். (தானியேல் 12:4; 2 தீமோத்தேயு 3:1) இந்நாள்வரை அந்தக் காவற்கார வகுப்பார், அதாவது அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாலாகிய தேவனுடைய இஸ்ரவேலர், தீர்க்கதரிசன காவற்காரனைப் பற்றிய ஏசாயாவின் விவரிப்புக்கேற்ப செயல்பட்டு வருகின்றனர்: “அவன் . . . மிகுந்த கவனமாய்க் கவனித்துக்கொண்டே இருந்து: ஆண்டவரே, நான் பகல்முழுதும் என் காவலிலே நின்று, இராமுழுதும் நான் என் காவலிடத்திலே தரித்திருக்கிறேன் என்று சிங்கத்தைப்போல் சத்தமிட்டுக் கூப்பிடுகிறான்.” (ஏசாயா 21:7, 8) இவனே தன் வேலையை கருத்தூன்றி செய்யும் காவற்காரன்!
13. (அ) யெகோவாவின் காவற்காரன் என்ன செய்தியை அறிவித்தான்? (ஆ) மகா பாபிலோன் விழுந்தது என்று எவ்வாறு சொல்ல முடியும்?
13 இந்தக் காவற்காரன் எதைக் கண்டான்? மறுபடியும், யெகோவாவின் காவற்கார வகுப்பினர் இவ்வாறு அறிவித்தனர்: “பாபிலோன் விழுந்தது, விழுந்தது; அதின் விக்கிரக தேவர்களையெல்லாம் [யெகோவா] தரையோடே மோதி உடைத்தார்.” (ஏசாயா 21:9) நவீன காலத்தில், முதல் உலக யுத்தத்திற்குப் பின், பொய்மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோன் அதன் அதிகார ஸ்தானத்திலிருந்து கீழே தள்ளப்பட்டது. (எரேமியா 50:1-3; வெளிப்படுத்துதல் 14:8) மகா யுத்தம் என அப்போது அறியப்பட்ட அந்த யுத்தம் கிறிஸ்தவமண்டலத்தில் தொடங்கியது. இருதரப்பு மத குருமாரும், துடிப்புமிக்க இளைஞர்களை போருக்குச் செல்லும்படி ஊக்குவித்தனர். எத்தகைய கேவலமான செயல்! 1919-ல், அப்போது பைபிள் மாணாக்கர் என அறியப்பட்ட யெகோவாவின் சாட்சிகள், செயலற்ற நிலையிலிருந்து ‘வீறுகொண்டெழுந்து’ உலகமெங்கும் மூலைமுடுக்கெல்லாம் சாட்சி பகர்ந்தனர். மகா பாபிலோனால் அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை; இப்போதும் அவர்கள் தொடர்ந்து சாட்சி கொடுத்து வருகிறார்கள். (மத்தேயு 24:14) பொ.ச.மு. ஆறாவது நூற்றாண்டில் இஸ்ரவேலர் விடுதலை செய்யப்பட்டது பூர்வ பாபிலோனின் அழிவுக்கு அடையாளமாக இருந்ததுபோல், இது மகா பாபிலோனின் வீழ்ச்சிக்கு அடையாளமாக இருந்தது.
14. யெகோவாவின் காவற்கோபுர வகுப்பினர் எந்தப் பத்திரிகையை முக்கியமாய் பயன்படுத்தினர், இதை யெகோவா எவ்வாறு ஆசீர்வதித்திருக்கிறார்?
14 காவற்கார வகுப்பு எப்போதும் தன் ஊழியத்தை வைராக்கியத்துடனும், சரியானதைச் செய்ய வேண்டும் என்ற ஆவலுடனும் நிறைவேற்றி வந்திருக்கிறது. ஜூலை 1879-ல், பைபிள் மாணாக்கர் காவற்கோபுரம் பத்திரிகையைப் பிரசுரிக்கத் தொடங்கினார்கள்; அப்போது இதன் பெயர் ஜயன்ஸ் உவாட்ச் டவர் அண்ட் ஹெரல்ட் ஆஃப் கிறைஸ்ட்ஸ் பிரெஸென்ஸ். 1879 முதல் டிசம்பர் 15, 1938 வரை ஒவ்வொரு வெளியீட்டின் அட்டையிலும் இந்த வாசகம் காணப்பட்டது: “ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது?—ஏசாயா 21:11.” a 120 ஆண்டுகளாக காவற்கோபுரம் உலக சம்பவங்களுக்கும் அவற்றின் தீர்க்கதரிசன உட்பொருளுக்கும் உண்மையோடு ஆழ்ந்த கவனம் செலுத்தியிருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5, 13) கடவுளின் காவற்கார வகுப்பாரும் அவர்களுடைய தோழர்களான “மற்ற செம்மறியாடுகளும்,” கிறிஸ்துவின் ராஜ்யத்தின்மூலம் யெகோவாவின் அரசாதிகாரம் நியாயநிரூபணம் செய்யப்படும் காலம் சமீபமாயுள்ளது என்று அறிவித்து வருகிறார்கள்; இதை மிகுந்த ஊக்கத்துடன் மனிதவர்க்கத்திற்கு அறிவிக்க இந்தப் பத்திரிகையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். (யோவான் 10:16, NW) இந்தச் சாட்சியை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறாரா? 1879-ல் காவற்கோபுரம் பத்திரிகையின் முதல் வெளியீடு 6,000 பிரதிகள். இப்போதோ 132 மொழிகளில் 2,20,00,000-க்கும் அதிகமான பிரதிகள் உலகெங்கும் வினியோகிக்கப்படுகின்றன. இவற்றில் 121 மொழிகளில் ஒரே சமயத்தில் பிரசுரிக்கப்படுகின்றன. உலகிலேயே வினியோகிப்பில் முதலிடத்தை தக்கவைத்திருக்கும் மத பத்திரிகை மெய் கடவுளாகிய யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்துவது எவ்வளவு பொருத்தமானது!
படிப்படியான சுத்திகரிப்பு
15. படிப்படியான என்ன சுத்திகரிப்பு, 1914-க்கு முன்பேயும் தொடங்கினது?
15 1914-ல் கிறிஸ்துவின் பரலோக ஆட்சி தொடங்கும் முன்பே, ஏறக்குறைய 40 ஆண்டுகளாக பைபிள் மாணாக்கர் கிறிஸ்தவமண்டலத்தின் பல கோட்பாடுகளிலிருந்து விடுதலை பெற்றிருந்தார்கள். அதாவது, குழந்தை ஞானஸ்நானம், மனித ஆத்துமா அழியாமை, உத்தரிக்கும் ஸ்தலம், நரக அக்கினியில் வதைக்கப்படுதல், திரித்துவ கடவுள் போன்ற பைபிளில் இல்லாத கோட்பாடுகளிலிருந்து விடுபட்டிருந்தார்கள். ஆனால், தவறான எல்லா கருத்துக்களிலிருந்தும் விடுதலை பெற இன்னும் அதிக காலம் எடுத்தது. உதாரணமாக, 1920-களில், பைபிள் மாணாக்கர் பலர், சிலுவையும் கிரீடமும் உள்ள பேட்ஜை உடையில் குத்திக்கொண்டார்கள், கிறிஸ்மஸ் மற்றும் புறமத கொண்டாட்டங்களை ஆசரித்தார்கள். எனினும், தூய வணக்கத்திற்கு உருவ வழிபாடு சம்பந்தப்பட்ட அனைத்தும் சுவடு தெரியாமல் நீக்கப்பட வேண்டும். கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிள் மட்டுமே கிறிஸ்தவ விசுவாசத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் ஒரே ஆதாரம். (ஏசாயா 8:19, 20; ரோமர் 15:4) கடவுளுடைய வார்த்தையில் எவற்றையும் சேர்ப்பதோ அல்லது அதிலிருந்து நீக்குவதோ தவறு.—உபாகமம் 4:2; வெளிப்படுத்துதல் 22:18, 19.
16, 17. (அ) என்ன தவறான அபிப்பிராயம் இந்தக் காவற்கார வகுப்பினரிடம் சில காலமாக இருந்தது? (ஆ) ‘எகிப்தில்’ “பலிபீடம்,” “ஸ்தம்பம்” என்பதற்கு சரியான விளக்கம் என்ன?
16 இந்த நியமம் எந்தளவு முக்கியம் என்பதை ஓர் உதாரணம் வலியுறுத்தும். 1886-ல் சி. டி. ரஸல் ஒரு புத்தகத்தைப் பிரசுரித்தார்; அதன் தலைப்பு த டிவைன் பிளான் ஆஃப் த ஏஜஸ். இந்தப் புத்தகத்தில் மனித சகாப்தங்களை எகிப்தின் பெரிய பிரமிடோடு இணைக்கும் வரைபடம் ஒன்று இருந்தது. பார்வோன் கூஃபூவின் இந்த நினைவுச்சின்னமே, ஏசாயா 19:19, 20-ல் குறிப்பிடப்பட்ட ஸ்தம்பம் என்பதாக கருதப்பட்டது: “அக்காலத்திலே எகிப்து தேசத்தின் நடுவிலே கர்த்தருக்கு ஒரு பலிபீடமும், அதின் எல்லையருகே கர்த்தருக்கு ஒரு ஸ்தம்பமும் உண்டாயிருக்கும். அது எகிப்து தேசத்திலே சேனைகளின் கர்த்தருக்கு அடையாளமும் சாட்சியுமாயிருக்கும்.” இந்தப் பிரமிடுக்கும் பைபிளுக்கும் என்ன சம்பந்தம்? உதாரணமாக, அந்தப் பெரிய பிரமிடின் சில நடைக்கூடங்களின் நீளம், அப்போதைய புரிந்துகொள்ளுதலின்படி, மத்தேயு 24:21-ல் சொல்லப்பட்டுள்ள ‘மிகுந்த உபத்திரவம்’ தொடங்கும் காலத்தைக் குறிப்பதாக கருதப்பட்டது. பைபிள் மாணாக்கர்களில் சிலர், தாங்கள் பரலோகத்திற்குச் செல்லும் நாள் போன்றவற்றை தீர்மானிக்க அந்தப் பிரமிடின் பல்வேறு அம்சங்களை அளவிடுவதில் தீவிரமாய் ஈடுபட்டார்கள்!
17 கல் பைபிள் என்று அழைக்கப்பட்ட இது, சில பத்தாண்டுகளுக்கு பெரும் மதிப்புக்குரியதாய் கருதப்பட்டது. அதன்பின் 1928, நவம்பர் 15 மற்றும் டிசம்பர் 1 காவற்கோபுர வெளியீடுகள் விஷயத்தை தெளிவுபடுத்தின. புறமத பார்வோன்களால் கட்டப்பட்ட ஜோதிட சாஸ்திரத்துக்குரிய பேய்த்தன அடையாளங்கள் நிரம்பிய நினைவுச்சின்னமான எந்தக் கல்லும், பைபிளின் சாட்சியை உறுதிப்படுத்த யெகோவாவுக்குத் தேவையில்லை என்பதை தெளிவுபடுத்தின. ஏசாயாவின் தீர்க்கதரிசனத்திற்கு ஆவிக்குரிய பொருத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. வெளிப்படுத்துதல் 11:8-ல் “எகிப்து,” சாத்தானின் உலகத்தைக் குறிக்கிறது. யெகோவாவுக்கான ‘பலிபீடம்,’ அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இந்தப் பூமியில் இருக்கையில் செலுத்தும் ஏற்கத்தக்க பலிகளை நினைப்பூட்டுகிறது. (ரோமர் 12:1; எபிரெயர் 13:15, 16) “[எகிப்தின்] எல்லையருகே” ஒரு ஸ்தம்பம் என்பது, ‘சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிற அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபையை குறிக்கிறது; இது, அவர்கள் விட்டுச் செல்லவிருக்கும் இந்த உலகமாகிய ‘எகிப்தில்’ சாட்சியாக நிற்கிறது.—1 தீமோத்தேயு 3:15.
18. (அ) பைபிள் மாணாக்கருக்கு யெகோவா எவ்வாறு விஷயங்களைத் தொடர்ந்து தெளிவுபடுத்துகிறார்? (ஆ) வசனத்திற்கான விளக்கம் புரிந்துகொள்ள கடினமாக இருந்தால் என்ன ஞானமான மனப்பான்மை தேவை?
18 ஆண்டுகள் கடந்து செல்ல செல்ல, சத்தியத்தைப் பற்றிய கூடுதலான விளக்கத்தை தொடர்ந்து யெகோவா நமக்கு அளிக்கிறார். தீர்க்கதரிசன வார்த்தையை இன்னும் மிகத் தெளிவாய் புரிந்துகொள்ள உதவுகிறார். (நீதிமொழிகள் 4:18) முடிவு வருவதற்கு முன்பாக ஒழிந்துபோகாத சந்ததி, செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய உவமை, பாழாக்கும் அருவருப்பு, அது பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கும் காலம், புதிய உடன்படிக்கை, மறுரூபமாதல், எசேக்கியேல் புத்தகத்திலுள்ள ஆலயத்தைப் பற்றிய தரிசனம் போன்ற அநேக காரியங்களுக்கு இன்னும் தெளிவான விளக்கத்தை சமீப ஆண்டுகளில் பெற்றுள்ளோம். அத்தகைய புது விளக்கங்களை புரிந்துகொள்வது சில சமயங்களில் கடினமாக இருக்கலாம். ஆனால், அவற்றிற்கான காரணங்கள், காலப்போக்கில் தெளிவாகின்றன. குறிப்பிட்ட வசனத்தின் புதிய விளக்கத்தை ஒரு கிறிஸ்தவர் முழுமையாக புரிந்துகொள்ளாத சமயத்தில் தீர்க்கதரிசியாகிய மீகா சொன்னதைப் போல் மனத்தாழ்மையுடன் சொல்வது நலமானது: “என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்.”—மீகா 7:7.
19. அபிஷேகம் செய்யப்பட்ட மீதிபேரும் மற்ற செம்மறியாடுகளான அவர்களுடைய உடன்தோழர்களும் இந்தக் கடைசி நாட்களில் எவ்வாறு சிங்கத்தைப் போன்ற தைரியத்தைக் காட்டியிருக்கிறார்கள்?
19 காவற்காரன், ‘கர்த்தாவே, நான் பகல்முழுதும் என் காவலிலே நின்று, இராமுழுதும் நான் என் காவலிடத்திலே தரித்திருக்கிறேன் என்று சிங்கத்தைப்போல் சத்தமிட்டுக் கூப்பிடுகிறான்’ என்பதை வாசித்தோம். (ஏசாயா 21:8) அபிஷேகம் செய்யப்பட்ட மீதிபேர், பொய் மதத்தை அம்பலப்படுத்தி விடுதலைக்கான பாதையை ஜனங்களுக்கு சுட்டிக்காட்டுவதில் சிங்கத்தைப் போன்ற தைரியத்தை காண்பித்திருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 18:2-5) ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனாக’ சேவிக்கும் இவர்கள், ‘ஏற்ற வேளை போஜனமாகிய’ பைபிள்களையும் பத்திரிகைகளையும் மற்ற பிரசுரங்களையும் அநேக மொழிகளில் அளித்திருக்கிறார்கள். (மத்தேயு 24:45) ‘சகல தேசத்தாரிலும், கோத்திரத்தாரிலும் ஜனத்தாரிலும், பாஷைக்காரரிலுமிருந்து வந்த . . . திரள் கூட்டமானோரைக்’ கூட்டிச் சேர்ப்பதில் இவர்கள் தலைமை வகித்திருக்கிறார்கள். இவர்களும்கூட மீட்பளிக்கும் இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டு, கடவுளுக்கு “இரவும் பகலும் பரிசுத்த சேவை” செய்வதில் சிங்கத்தைப் போன்ற மனநிலையைக் காட்டுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 14, 15, NW) யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட சாட்சிகளில் இன்னும் உயிரோடிருக்கும் சிறிய தொகுதியினரும், அவர்களுடைய உடன் தோழர்களான திரள்கூட்டத்தாரும் கடந்த ஆண்டு புரிந்த சாதனைகள் என்ன? எமது அடுத்த கட்டுரையை வாசியுங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a ஜனவரி 1, 1939 முதல் இது, “‘நானே யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.’—எசேக்கியேல் 35:15” என மாற்றப்பட்டது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• ஆண்டுகள் செல்ல செல்ல எந்தெந்த சாட்சிகளை யெகோவா பயன்படுத்தியிருக்கிறார்?
• எது மகா பாபிலோனின் தொடக்கம்?
• பொ.ச.மு. 607-ல், தம்முடைய சாட்சிகளின் தலைநகரமாகிய எருசலேம் அழிக்கப்படுவதை யெகோவா ஏன் அனுமதித்தார்? பொ.ச. 70-ல் ஏன் அனுமதித்தார்?
• என்ன மனப்பான்மையை யெகோவாவின் காவற்கார வகுப்பினரும் அவர்களுடைய உடன்தோழர்களும் காட்டியிருக்கிறார்கள்?
[பக்கம் 7-ன் படம்]
‘கர்த்தாவே, நான் . . . என் காவலிலே தரித்திருக்கிறேன்’
[பக்கம் 10-ன் படங்கள்]
யெகோவாவின் காவற்கார வகுப்பார் தங்கள் வேலையை மிகுந்த பொறுப்போடு ஏற்றிருக்கின்றனர்