தானியேல் புத்தகம் விளக்கப்பட்டது!
மாநாட்டுக்கு வருகைபுரிந்தோர், தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! என்ற 320 பக்கங்களடங்கிய புதிய வெளியீட்டை பெற ஆவலாக இருந்தார்கள். அந்தப் புத்தகத்தைப் பற்றி அவர்கள் அபிப்பிராயம் என்ன? சிலரின் கருத்துக்களை கவனியுங்கள்.
“அநேக வாலிபர்களைப் போலவே, பழங்கால சரித்திரத்தைப் படிப்பது எனக்கு கொஞ்சம்கூட பிடிக்காது. அதனால், தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! என்ற புதிய புத்தகத்தை வாங்கியபோது எனக்கு அவ்வளவு ‘த்ரில்லிங்கா’ இல்லை. ஆனால் சும்மா படித்துத்தான் பார்ப்போமே என்று பார்த்தேன். அடடா, என்ன ஒரு தவறான எண்ணம்! நான் வாசித்த மிகச் சிறந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. இது கண்கொட்டாமல் ஒருவரை படிக்க வைக்கும்! ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால் நடந்த சம்பவத்தைப் படிக்கிற மாதிரியான உணர்வே ஏற்படவில்லை. முதல் தடவையாக, தானியேல் இடத்தில் என்னை வைத்துப் பார்க்க முடியுமென்று தெரிகிறது. குடும்பத்தைவிட்டுப் பிரித்து வேற்று நாட்டிற்கு கடத்தப்பட்டு நம் உத்தமத்தன்மையை அவ்வப்போது சோதித்தால் எப்படியிருக்கும் என்பதை என்னால் உண்மையிலேயே கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இந்தப் புத்தகத்திற்காக உங்களுக்கு ரொம்ப நன்றி.”—அனியா.
“தம்முடைய மக்களை பாதிக்கிற எந்தவொரு விஷயமும் யெகோவாவின் கைக்கு மிஞ்சினதில்லை என்ற உண்மையே எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது. தானியேலின் தரிசனங்கள், கனவுகள், அவர் அர்த்தம் சொன்ன மற்ற விஷயங்கள்—இவையெல்லாவற்றின் மூலமும்—யெகோவா தம்முடைய நோக்கத்திற்கு மீறி எதுவும் நடக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டேன். புதிய உலகத்தைப் பற்றி பைபிளில் சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசன மாதிரிகள் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கையை இது பலப்படுத்துகிறது.”—செஸ்டர்.
“தானியேலை உயிர்ப்பித்திருக்கும் விதமே என்னை கவர்ந்தது. அவருடைய நாட்டங்களையும் அக்கறைகளையும் சிறப்பித்துக் காட்டியிருப்பது அவருடன் நன்கு அறிமுகமாக எனக்கு உதவியது. தானியேலை யெகோவா விரும்பி ஏற்றுக்கொண்டதற்கான காரணத்தை என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. அவருடைய எல்லா சோதனைகளின்போதும் துன்புறுத்துதல்களின்போதும் அவர் தன்னைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டில்லை. யெகோவாவிடமும் அவருடைய அழகிய பெயரிடமும் தான் முதன்மையான அக்கறை காட்டினார். இப்படிப்பட்ட குறிப்புகளை சிறப்பித்து காட்டியமைக்கு மிக்க நன்றி.”—ஜாய்.
“இந்தப் புத்தகத்திற்குத்தான் நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தோம்! தானியேல் புத்தகம் நம் ஒவ்வொருவருக்கும் இந்தளவுக்கு பொருந்துகிறது என்பது இதுவரை விளக்கப்படவில்லை. அந்தப் புதிய புத்தகத்தைப் பெற்ற அன்று மாலையிலேயே பெரும்பகுதியை வாசித்துவிட்டேன். இடையில் சற்று நிறுத்தி யெகோவாவுக்கு நன்றி கூறினேன்.”—மார்க்.
“இந்தளவுக்கு எங்கள் பிள்ளைகளின் மனதைத் தொடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு ஐந்து வயது குழந்தையும் மூன்று வயது குழந்தையும் இருக்கிறார்கள். . . . என்னுடைய பைபிள் கதை புத்தகம் என்ற புத்தகத்தில் உள்ள தானியேல், அனனியா, மிஷாவேல், அசரியாவின் கதைகள் அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதே சமயத்தில் தானியேல் தீர்க்கதரிசனம் என்ற புத்தகம் இந்த அளவுக்கு அவர்களை ஈர்க்கும் என்று நாங்கள் நினைத்தும் பார்க்கவில்லை. அவர்களுடைய மழலை பருவத்திலேயே இந்த நீதியுள்ள இளம் மனிதர்களைப் பற்றி நன்றாக புரிந்துகொள்ள முடிந்ததாய் தோன்றுகிறது. எங்கள் குழந்தைகள் பார்த்துப் பின்பற்றுவதற்கு என்னே சிறந்த முன்மாதிரிகள்! என்னே அருமையான புத்தகத்தை எங்களுக்குக் கொடுத்திருக்கிறீர்கள்! நன்றி, மிக்க நன்றி!”—பெத்தெல்.
“அந்த எபிரெய இளைஞர்களின் விசுவாசம் பரீட்சிக்கப்பட்டபோது நானும் அங்கு இருப்பதாகவே உணர்ந்தேன். என்னுடைய விசுவாசத்தை நான் ஆராய்ந்து பார்ப்பதற்கு அது என்னை தூண்டியது. “நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?” என்ற தலைப்பை கொண்ட மறுபார்வை பெட்டி அந்த அதிகாரத்தின் பொருளடக்கத்தை மனதில் பதியவைக்கிறது. இந்த தலைசிறந்த படைப்பிற்காக மீண்டும் என் நன்றி.”—லிட்யா.