அன்புக்கு உண்டோ எல்லை?
“உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.”—மத்தேயு 22:39.
1. யெகோவாவின் மீது நமக்கு அன்பு இருந்தால், ஏன் நம் அயலானிடமும் அன்பு காட்டியே தீர வேண்டும்?
பிரதான கட்டளை எதுவென இயேசுவிடம் கேட்டபோது, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [“யெகோவாவிடத்தில்,” NW] உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக” என்று பதிலளித்தார். பின்பு, அந்த முதல் கட்டளைக்கு ஒப்பான இரண்டாவது கட்டளையையும் குறிப்பிட்டார்: “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.” (மத்தேயு 22:37, 39) அயலானிடம் அன்பு காட்டுவது கிறிஸ்தவரை அடையாளம் காட்டும் சின்னம். யெகோவாவின் மீது நமக்கு அன்பு இருந்தால், அயலானிடமும் அன்பு காட்டியே தீர வேண்டும். ஏன்? ஏனெனில் யெகோவாவிடமுள்ள அன்பை, அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதன்மூலம் காட்டுகிறோம்; அவருடைய வார்த்தை, அயலானிடம் அன்பு காட்டும்படி நமக்கு கட்டளையிடுகிறது. ஆகையால், நம் சகோதர சகோதரிகளிடம் அன்பு காட்டாவிட்டால், கடவுளிடமுள்ள நம் அன்பு உண்மையானதாய் இருக்க முடியாது.—ரோமர் 13:8; 1 யோவான் 2:5; 4:20, 21.
2. என்ன விதமான அன்பை நாம் அயலானிடம் காட்ட வேண்டும்?
2 நாம் அயலானிடம் அன்பு காட்ட வேண்டுமென்று இயேசு சொன்னபோது நட்பைப் பற்றி மட்டுமே பேசவில்லை. குடும்பங்களுக்குள் அல்லது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நிலவும் இயல்பான அன்பிலிருந்து வேறுபட்ட ஒன்றைப் பற்றி அவர் குறிப்பிட்டார். தமக்கு ஒப்புக்கொடுத்த ஊழியர்களிடம் யெகோவாவுக்கு இருக்கும் அன்பையும், அவர்களுக்கு அவரிடம் இருக்கும் அன்பையும் பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தார். (யோவான் 17:26; 1 யோவான் 4:11, 19) ‘முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பலத்தோடும்’ கடவுளிடம் அன்பு காட்ட வேண்டும் என்பதை அந்த யூத வேதபாரகன் ஒப்புக்கொண்டான். அவன் புத்திசாலித்தனமாக பதிலளித்ததை இயேசுவும் அறிந்துகொண்டார். (மாற்கு 12:28-34) அவன் சொன்னது முழுக்க முழுக்க சரி. கடவுளிடமும் அயலாரிடமும் காட்டுவதற்கு ஒரு கிறிஸ்தவர் வளர்க்க வேண்டிய அன்பு, நம் உணர்ச்சிகளையும் உட்படுத்துகிறது, அறிவுத்திறனையும் உட்படுத்துகிறது. எப்படியெனில், இந்த அன்பு இருதயத்தால் தூண்டப்பட்டு மனதால் வழிநடத்தப்படுகிறது.
3. (அ) அயலான் யார் என்பதில் பரந்த மனப்பான்மையுடன் இருக்க ஒரு ‘நியாயசாஸ்திரிக்கு’ இயேசு எப்படி உதவினார்? (ஆ) இயேசுவின் உவமை இன்றைய கிறிஸ்தவர்களுக்கு எப்படி பொருந்துகிறது?
3 நம் அயலானிடம் அன்பு காட்ட வேண்டுமென்று இயேசு சொன்னபோது, “எனக்குப் பிறன் [“அயலான்,” தி.மொ.] யார்” என்று ஒரு “நியாயசாஸ்திரி” கேட்டதாக லூக்கா அறிக்கை செய்தார். அந்தக் கேள்விக்கு பதிலை இயேசு ஓர் உவமையில் சொன்னார். அந்த உவமையாவது: அடித்து, கொள்ளையடிக்கப்பட்ட ஒருவன் குற்றுயிராய் வழியருகே கிடக்கிறான். முதலாவதாக ஓர் ஆசாரியனும், பின்பு ஒரு லேவியனும் அவ்வழியே சென்றனர். இருவரும் அவனை கண்டுகொள்ளவே இல்லை. கடைசியாக, ஒரு சமாரியன் அவ்வழியே வந்தான். காயம்பட்ட அந்த மனிதனைக் கண்டு, பரிதாபப்பட்டு அவனுக்கு உதவினான். அப்படியானால், காயம்பட்ட மனிதனுக்கு அந்த மூவரில் யார் அயலான்? பதில் தெள்ளத் தெளிவானதே. (லூக்கா 10:25-37) ஆசாரியனையும் லேவியனையும்விட, அந்த சமாரியன் நல்ல அயலான் என இயேசு சொன்னதைக் கேட்ட அவன் ஆச்சரியப்பட்டிருக்கலாம். அயலானிடம் அன்பு காட்டுவதில் அன்புக்கு எல்லை இல்லை என்பதை அவன் புரிந்துகொள்வதற்கு இயேசு உதவியது தெளிவாக தெரிந்தது. கிறிஸ்தவர்களும் அப்படித்தான் அன்பு காட்டுகின்றனர். யாரிடமெல்லாம் அன்பு காட்ட வேண்டும் என்ற பட்டியலைப் பாருங்கள்.
குடும்பத்தினரிடம் அன்பு
4. ஒரு கிறிஸ்தவர் முதலில் யாரிடம் அன்பு காட்டுகிறார்?
4 கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் அன்பு காட்டுகின்றனர். கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும், பெற்றோர் பிள்ளைகளிடமும் அன்பு காட்டுகின்றனர். (பிரசங்கி 9:9; எபேசியர் 5:33; தீத்து 2:4) இயல்பான அன்பின் பிணைப்பு இன்று பெரும்பாலான குடும்பங்களில் இருப்பது உண்மைதான். எனினும், திருமண முறிவுகள், மணத் துணையை துஷ்பிரயோகிப்பது, பிள்ளைகள் புறக்கணிக்கப்படுவது அல்லது துஷ்பிரயோகிக்கப்படுவது பற்றிய அறிக்கைகளும் இன்று சர்வசாதாரணம்; இவை குடும்பங்கள் நெருக்கப்படுவதையும் குடும்ப பந்தத்தை இணைக்கும் பிணைப்பு அறுபடுவதையும் காட்டுகின்றன. (2 தீமோத்தேயு 3:1-3) சீரும் சிறப்புமாக குடும்பத்தை நடத்த விரும்பும் கிறிஸ்தவர்கள் யெகோவாவும் இயேசுவும் காட்டும் அதே விதமான அன்பை குடும்பத்தாரிடம் காட்ட வேண்டும்.—எபேசியர் 5:21-27.
5. தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர் யாருடைய உதவியை நாடுகின்றனர், அநேகருக்கு அது என்ன பலனை அளித்திருக்கிறது?
5 கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் பிள்ளைகளை யெகோவா தந்த சொத்தாகவே கருதுகின்றனர்; அவர்களை வளர்ப்பதில் அவருடைய உதவியையே நாடுகின்றனர். (சங்கீதம் 127:4-6; நீதிமொழிகள் 22:6) இவ்வாறு, கிறிஸ்தவ அன்பை வளர்க்கின்றனர். இது, தவறான காரியங்களிலிருந்து இன்றைய இளைஞர்களை பாதுகாக்க பெற்றோருக்கு உதவுகிறது. இதனால் அநேக கிறிஸ்தவ பெற்றோர்கள் மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர். இது நெதர்லாந்திலுள்ள ஒரு தாயின் மகிழ்ச்சியைப் படம்பிடித்துக் காட்டுகிறது. கடந்த ஆண்டில் நெதர்லாந்தில் 575 பேர் முழுக்காட்டப்பட்டனர்; அதில் அவருடைய மகனும் ஒருவர். அதைப் பார்த்த தாய் இவ்வாறு எழுதினார்: “கடந்த 20 ஆண்டுகளாக நான் பட்ட எல்லா பிரயாசத்துக்கும் இப்போது கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. நான் பட்ட பாடு, வருத்தம், எடுத்த முயற்சி உட்பட நான் செலவழித்த நேரத்தையும் சக்தியையும் பற்றி இனி நினைக்கவே மாட்டேன்.” யெகோவாவைச் சேவிக்க முன்வந்த தன் மகனின் சுய தீர்மானத்தைக் கண்டு அந்தத் தாய் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தார்! கடந்த ஆண்டு நெதர்லாந்தில் அறிக்கை செய்த 31,089 பிரஸ்தாபிகளின் உச்சநிலை எண்ணிக்கையில், தங்கள் பெற்றோரிடமிருந்து யெகோவாவிடம் அன்பு காட்ட கற்றுக்கொண்ட பலர் உள்ளனர்.
6. விவாக பந்தம் பலப்படுவதற்கு கிறிஸ்தவ அன்பு எப்படி உதவலாம்?
6 அன்பை ‘பூரண சற்குணத்தின் கட்டு’ என பவுல் வர்ணித்தார். வாழ்க்கையில் “புயல் வீசினாலும்” விவாக பந்தம் எனும் ‘ஓடம்’ பாதுகாப்பாய் கரை சேர அன்பு உதவும். (கொலோசெயர் 3:14, 18, 19; 1 பேதுரு 3:1-7) டஹிடியிலிருந்து ஏறக்குறைய 700 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு சிறிய தீவுதான் ருருட்டு. அங்கு யெகோவாவின் சாட்சிகளுடன் ஒருவர் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். அவருடைய மனைவிக்கு துளியும் அது பிடிக்காததால் கடுமையாய் எதிர்த்தாள். கடைசியில் தன் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு டஹிடியில் வாழ தன் கணவனைப் பிரிந்து சென்றாள். இருப்பினும், அவர் அவளுக்குத் தவறாமல் பணம் அனுப்புவதன் மூலமும், அவளுக்கோ பிள்ளைகளுக்கோ ஏதாவது தேவைப்படுகிறதா என தொலைபேசியில் கேட்பதன் மூலமும் தன் அன்பை தொடர்ந்து காண்பித்தார். இவ்வாறு தன் கிறிஸ்தவ கடமையை சரிவர செய்ய தன்னால் முடிந்த அனைத்தும் செய்தார். (1 தீமோத்தேயு 5:8) பிரிந்த குடும்பம் இணைய வேண்டும் என எப்போதும் ஜெபித்து வந்தார்; கடைசியில் அவருடைய மனைவி திரும்பி வந்தாள். அவளிடம், ‘அன்புடனும் பொறுமையுடனும் சாந்தகுணத்துடனும்’ நடந்து கொண்டார். (1 தீமோத்தேயு 6:11) 1998-ல் அவர் முழுக்காட்டப்பட்டார். பின்னர், தன் மனைவியும் பைபிள் படிப்பதற்கு ஒப்புக்கொண்டபோது அவர் எந்தளவுக்கு மகிழ்ச்சியடைந்தார் என்பதை சொல்லவா வேண்டும்? கடந்த ஆண்டில் டஹிடி கிளை அலுவலகத்தின் மேற்பார்வையிலுள்ள பிராந்தியத்தில் நடத்தப்பட்ட 1,351 படிப்புகளில் அந்த மனைவிக்கு நடத்தப்பட்ட படிப்பும் அடங்கும்.
7. ஜெர்மனியிலுள்ள ஒருவரின் விவாக பந்தத்தை எது பலப்படுத்தியது?
7 தன் மனைவி பைபிள் சத்தியத்தில் ஆர்வம் காட்டுவது ஜெர்மனியிலுள்ள ஒருவருக்குப் பிடிக்கவில்லை, எதிர்த்தார். யெகோவாவின் சாட்சிகள் அவளை ஏமாற்ற போவதாக உறுதியாய் நம்பினார். எனினும் தன் மனைவியை முதன்முதல் சந்தித்த சாட்சிக்கு அவர் பின்னர் இவ்வாறு கடிதம் எழுதினார்: “என் மனைவியை யெகோவாவின் சாட்சிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததற்கு நன்றி. அவர்களைப் பற்றி பல தவறான செய்திகளை கேள்விப்பட்டிருந்ததால் முதலில் நான் கவலைப்பட்டேன். ஆனால் இப்போது என் மனைவியோடு கூட்டங்களுக்குப் போய் வருவதால் என் நினைப்பு எந்தளவு தவறாக இருந்தது என்பது புரிகிறது. என் காதில் விழுபவை சத்திய வார்த்தைகள் என்பது எனக்குத் தெரியும், அது எங்கள் விவாக பந்தத்தை இன்னும் பலப்படுத்தியிருக்கிறது.” கடவுளுடைய அன்பில் ஐக்கியப்பட்ட பல குடும்பங்கள் உட்பட, ஜெர்மனியில் 1,62,932 பேரும் டஹிடி கிளை அலுவலகத்தின் மேற்பார்வையிலுள்ள தீவுகளில் 1,773 பேரும் யெகோவாவின் சாட்சிகளாக உள்ளனர்.
கிறிஸ்தவ சகோதரர்களிடம் அன்பு
8, 9. (அ) நம் சகோதரர்களிடம் அன்பு காட்ட யார் நமக்கு கற்பிக்கிறார், அன்பு என்ன செய்யும்படி நம்மை உந்துவிக்கிறது? (ஆ) சகோதரர்கள் ஒருவரையொருவர் ஆதரித்துக்கொள்ள அன்பு உதவும் என்பதற்கு ஓர் உதாரணம் கொடுங்கள்.
8 தெசலோனிக்கேயிலிருந்த கிறிஸ்தவர்களிடம் “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்குத் தேவனால் [“யெகோவாவால்,” NW] போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே” என பவுல் சொன்னார். (1 தெசலோனிக்கேயர் 4:9) ஆம், ‘யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்போர்’ ஒருவருக்கொருவர் அன்பு காட்டுகின்றனர். (ஏசாயா 54:13, NW) “அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்” என பவுல் சொன்னபடியே அவர்கள் தங்கள் அன்பை செயலில் காட்டுகின்றனர். (கலாத்தியர் 5:13; 1 யோவான் 3:18) உதாரணமாக, உடல்நலமற்ற சகோதர சகோதரிகளை போய் பார்க்கையிலும், சோர்வால் துவண்டு போயிருப்போரை ஊக்குவிக்கையிலும், பலவீனரைத் தாங்குகையிலும் இதை அவர்கள் செய்கின்றனர். (1 தெசலோனிக்கேயர் 5:14) மாசற்ற நம்முடைய கிறிஸ்தவ அன்பு, ஆவிக்குரிய பரதீஸ் வளர்வதற்கு பங்களிக்கிறது.
9 ஈக்வடாரிலுள்ள 544 சபைகளில் ஒன்றான ஆங்கோன் சபையின் சகோதரர்கள் தங்கள் அன்பை செயலில் வெளிக்காட்டினர். அங்கு ஏற்பட்ட பணநெருக்கடியால் அவர்கள் வேலையின்றி அல்லது வருவாயின்றி தவித்தனர். அங்கிருந்த பிரஸ்தாபிகள் பணம் சம்பாதிக்க வழி கண்டுபிடித்தனர்; அவ்விடத்து மீனவர்கள் இரவு முழுவதும் மீன்பிடித்துவிட்டு வீடு திரும்புகையில் அவர்களுக்கு உணவு பலகாரங்களை விற்க தீர்மானித்தனர். எல்லாரும் இதில் ஒத்துழைத்தனர்; பிள்ளைகள்கூட உதவினர். விடியற்காலை 4 மணிக்குள் உணவு தயாராவதற்கு நடுராத்திரி 1 மணிக்கே சமைக்க ஆரம்பிக்க வேண்டியிருந்தது. இப்படி சம்பாதித்த பணத்தையும் சகோதரர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர். இத்தகைய பரஸ்பர உதவி, தூய கிறிஸ்தவ அன்பை செயலில் வெளிக்காட்டினது.
10, 11. நமக்கு தெரியாத சகோதரர்களிடம் எவ்வாறு அன்பு காட்டலாம்?
10 எனினும், நமக்கு நன்கு தெரிந்த கிறிஸ்தவர்களிடம் மட்டுமே நாம் அன்பு காட்டுவதில்லை. “சகோதரக் கூட்டத்தார் எல்லாரிடத்திலும் அன்பு காட்டுங்கள்” என அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். (1 பேதுரு 2:17, NW) நம்முடைய சகோதர சகோதரிகள் எல்லாரும் யெகோவா தேவனை வணங்கும் உடன் வணக்கத்தார்; எனவே அவர்கள் எல்லாரிடமும் அன்பு காட்டுகிறோம். நெருக்கடி காலங்கள் இந்த அன்பை நிரூபிப்பதற்கு வாய்ப்பளிக்கலாம். உதாரணமாக, 2000-ன் ஊழிய ஆண்டில் பயங்கர வெள்ளப்பெருக்கு மொஸாம்பிக்கை பாழ்ப்படுத்தியது. அங்கோலாவில் தொடர்ந்து நடந்துவந்த உள்நாட்டு போர் பலரை வறுமையில் வாட்டியது. மொஸாம்பிக்கிலிருந்த 31,725 சகோதரர்களிலும் அங்கோலாவிலிருந்த 41,222 சகோதரர்களிலும் பெரும்பாலானோர் இந்தச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால், அருகிலிருந்த தென் ஆப்பிரிக்க நாட்டு சாட்சிகள், அந்நாடுகளில் இருக்கும் சகோதரரின் துன்பத்தைத் தணிக்க பெருமளவு பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர். தங்களிடமிருந்த ‘அதிகமான பொருட்களை’ தேவைப்படும் தங்கள் சகோதரர்களுக்கு மனமுவந்து கொடுத்ததன் மூலம் தங்கள் அன்பை வெளிக்காட்டினர்.—2 கொரிந்தியர் 8:8, 13-15, 24, NW.
11 வசதி வாய்ப்பு குறைவுபடும் நாடுகளில் ராஜ்ய மன்றங்களையும் மாநாட்டு மன்றங்களையும் கட்டுவதற்கு பல நாடுகளிலுள்ள சகோதரர் பண உதவி அளிப்பதும் அன்பை வெளிக்காட்டுகிறது. இதற்கு உதாரணமாக சாலொமோன் தீவுகளை சொல்லலாம். சாலொமோன் தீவுகளில் பெரும் கலவரங்கள் நடந்து வந்தபோதிலும் கடந்த ஆண்டில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் 6-சதவீத அதிகரிப்பு இருந்தது, உச்சநிலை எண்ணிக்கை 1,697 பேர். அவர்கள் ஒரு மாநாட்டு மன்றம் கட்ட திட்டமிட்டனர். அத்தீவுகளைச் சேர்ந்த அநேகர் வேறு இடங்களுக்கு மாறிச் சென்றுகொண்டிருந்தபோதிலும், ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த வாலண்டியர்கள் கட்டுமான பணியில் உதவினர். வாலண்டியர்கள் திரும்பிச் செல்ல வேண்டிய வேளை வந்தது; ஆனால் அதற்கு முன்னரே அஸ்திவாரத்தை முழுமையாக பூர்த்திசெய்வதற்கு உள்ளூர் சகோதரர்களுக்குப் பயிற்சி அளித்துவிட்டனர். மன்றம் கட்டுவதற்கு, முன்னதாக வடிவமைக்கப்பட்டிருந்த இரும்பு சட்டங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து கப்பலில் வந்து இறங்கின. கட்டப்படாமல் பல இடங்கள் பாழாய் கிடக்கும் நிலையில் இந்த மன்றம் வெகு சிறப்பாய் கட்டி முடிக்கப்படும்போது யெகோவாவின் பெயருக்கும் சகோதரர்களின் அன்புக்கும் ஒப்பற்ற சாட்சியாய் விளங்கும்.
நாமும் கடவுளைப்போல் உலகை நேசிக்கிறோம்
12. விசுவாசிகளாய் இல்லாதவர்களிடம் காட்டும் நம் மனப்பான்மையில் யெகோவாவை எப்படி பின்பற்றுகிறோம்?
12 நம் குடும்பத்தாரிடமும் சகோதரர்களிடமும் மட்டுமே நாம் அன்பு காட்டுகிறோமா? இல்லை. ஏனெனில் நாம் ‘தேவனைப் பின்பற்றுகிறோம்.’ ‘தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்’ என இயேசு சொன்னார். (எபேசியர் 5:1, NW; யோவான் 3:16) யெகோவா தேவனைப் போலவே நாமும், விசுவாசிகளாய் இல்லாத மற்றவர்களிடமும் அன்பு காட்டுகிறோம். (லூக்கா 6:35, 36; கலாத்தியர் 6:10) முக்கியமாக, அந்த அன்பின் காரணமாகவே நாம் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கிறோம்; அவர்கள் மீதுள்ள அன்பால் கடவுள் செய்திருக்கும் அரும்பெரும் செயல்களைப் பற்றி அவர்களுக்குச் சொல்கிறோம். இது, இச்செய்திக்கு செவிசாய்ப்பவர்களை இரட்சிப்புக்கு வழிநடத்துகிறது.—மாற்கு 13:10; 1 தீமோத்தேயு 4:16.
13, 14. தனிப்பட்ட விதத்தில் பிரச்சினைகள் இருந்தும் சாட்சிகளாக இல்லாதவர்களிடம் அன்பு காட்டிய சகோதரர்களின் அனுபவங்கள் சில யாவை?
13 நேப்பாளத்திலுள்ள நான்கு விசேஷ பயனியர்களைப் பற்றி சற்று சிந்தியுங்கள். அந்நாட்டின் தென்மேற்குப் பகுதியிலுள்ள ஒரு நகரத்தில் அவர்கள் ஊழியம் செய்து வந்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்நகரத்திலும் அதன் அக்கம்பக்கத்திலுள்ள கிராமங்களிலும் பொறுமையுடன் சாட்சி கொடுத்து வருவதன் மூலம் தங்கள் அன்பை வெளிக்காட்டி இருக்கின்றனர். இந்தப் பிராந்தியத்தில் முழுமையாய் ஊழியம் செய்வதற்கு அடிக்கடி மணிக்கணக்காக சைக்கிளில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது; அதுவும் 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலைக்கும் அதிகமான உஷ்ணத்தில். அவர்களுடைய அன்பும் ‘சோர்ந்துபோகாமல் செய்த நற்கிரியைகளும்’ சிறந்த பலன்களை அவர்களுக்கு அள்ளித் தந்திருக்கின்றன; ஆம், அந்த கிராமங்கள் ஒன்றில் அவர்கள் புத்தகப் படிப்பு தொகுதி ஒன்றை ஏற்படுத்தி இருக்கின்றனர். (ரோமர் 2:7) 2000, மார்ச் மாதத்தில், அங்கு விஜயம் செய்த வட்டாரக் கண்காணியின் பொதுப் பேச்சைக் கேட்க 32 பேர் வந்தனர். கடந்த ஆண்டு நேப்பாளத்தில் உச்சநிலை எண்ணிக்கையாக 430 பிரஸ்தாபிகள் இருந்தனர்; இது 9 சதவீத அதிகரிப்பாகும். அந்நாட்டிலுள்ள சகோதரர்களின் ஆர்வத்தையும் அன்பையும் யெகோவா ஆசீர்வதிப்பது தெள்ளத் தெளிவாய் தெரிகிறது.
14 கொலம்பியாவில் தற்காலிக விசேஷ பயனியர்கள் வையூ இந்தியர்களுக்குப் பிரசங்கிக்க சென்றனர். இதற்காக முதலில் அவர்கள் புதிய மொழியைக் கற்க வேண்டியிருந்தது. அன்புடன் அவர்கள் பட்ட பிரயாசம் வீண்போகவில்லை; அடைமழை பெய்தபோதிலும் 27 பேர் பொதுப் பேச்சைக் கேட்க வந்தனரே! இந்தப் பயனியர்கள் காட்டியதைப் போன்ற அன்பும் ஆர்வமும், கொலம்பியாவில் 5 சதவீத அதிகரிப்பையும் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் 1,07,613 பேர் என்ற உச்சநிலையையும் எட்ட செய்தது. டென்மார்க்கிலுள்ள முதிர்ந்த சகோதரி ஒருவர் நற்செய்தியை மற்றவர்களுக்கு பிரசங்கிக்க விரும்பினார். ஆனால் அவரோ உடல் ஆரோக்கியமற்றவர். இருந்தாலும் சோர்வுக்கு இடமளிக்காமல் கடிதங்கள் எழுதுவதன்மூலம், ஆர்வம் காட்டுவோரிடம் ‘உரையாடினார்.’ தற்போது அவர் 42 பேரோடு கடிதத் தொடர்பு வைத்திருக்கிறார், 11 பைபிள் படிப்புகளை நடத்தி வருகிறார். சென்ற ஆண்டு டென்மார்க்கில் அறிக்கை செய்த 14,885 உச்சநிலை பிரஸ்தாபிகளில் அவரும் ஒருவர்.
பகைவர்களிடம் அன்பு காட்டுங்கள்
15, 16. (அ) நாம் யாரிடமும் அன்பு காட்ட வேண்டுமென்று இயேசு சொன்னார்? (ஆ) யெகோவாவின் சாட்சிகளை தவறாக குற்றஞ்சாட்டிய ஒருவரிடம் பொறுப்புள்ள சகோதரர்கள் எவ்வாறு அன்புடன் நடந்துகொண்டனர்?
15 நியாயப்பிரமாணத்தில் தேறிய மனிதனிடம் சமாரியனும் அயலான்தான் என இயேசு சொன்னார். தம் மலைப்பிரசங்கத்தில் இயேசு அதை இன்னும் நன்கு வலியுறுத்தினார். “உனக்கடுத்தவனைச் [“உன் அயலானை,” NW] சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; . . . உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்” என்று அவர் சொன்னார். (மத்தேயு 5:43-45) நம்மை யாரேனும் ஒருவர் எதிர்த்தாலும் ‘தீமையை நன்மையினால் வெல்ல’ பிரயாசப்படுவோம். (ரோமர் 12:19-21) முடிந்தால், அவருடன் நம்முடைய ஒப்பற்ற சொத்தான சத்தியத்தை பகிர்ந்துகொள்வோம்.
16 உக்ரேனில் க்ரெமென்செக் ஹெரால்ட் என்ற செய்தித்தாளில் வெளிவந்த கட்டுரை ஒன்று யெகோவாவின் சாட்சிகளை ஆபத்தான மதத் தொகுதியினர் என குறிப்பிட்டது. இது உண்மையிலேயே பயங்கர குற்றச்சாட்டு. ஏனெனில், சாட்சிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அல்லது தடை செய்ய ஜனங்களைத் தூண்டிவிடுவதற்கு ஐரோப்பாவில் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி இப்படி சிலர் பேசி வருகின்றனர். ஆகையால், பதிப்பாசிரியரை அணுகி, அந்தக் கட்டுரையைத் திருத்தி வெளியிடும்படி சாட்சிகள் கேட்டுக் கொண்டனர்; அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால் திருத்திய வெளியீட்டில், உண்மையின் அடிப்படையிலேயே முந்தின கட்டுரை எழுதப்பட்டதாக ஒரு குறிப்பையும் அவர் சேர்த்து அச்சிட்டார். எனவே பொறுப்புள்ள சகோதரர்கள், இன்னும் அதிக தகவலுடன் அவரை மீண்டும் சென்று சந்தித்தனர். முடிவில், அந்த முதல் கட்டுரை தவறு என்பதை தெளிவாக உணர்ந்த அந்தப் பதிப்பாசிரியர், தான் முன்கூறினதை மாற்றி பிரசுரித்தார். அவரிடம் ஒளிவுமறைவில்லாமலும் தயவாகவும் நடந்துகொண்டது, இந்தச் சூழ்நிலையை சமாளிக்கும் அன்பான முறையாக இருந்தது; அது நல்ல பலனைப் பெற்று தந்தது.
நாம் எப்படி அன்பை வளர்க்கலாம்?
17. மற்றவர்களிடம் அன்பு காட்டுவது எப்போதுமே எளிதல்ல என்பதை எது காட்டுகிறது?
17 ஒரு குழந்தை பிறந்த நொடியிலிருந்தே பெற்றோர்கள் அதனிடம் அன்பைப் பொழிகின்றனர். ஆனால் அப்படி பெரியவர்களிடம் இயல்பாய் அன்பு காட்ட முடிவதில்லை. அதனால்தான் பைபிள் திரும்ப திரும்ப ஒருவருக்கொருவர் அன்பு காட்டும்படி நமக்கு சொல்கிறது எனலாம். இதை நாம் வளர்த்துக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். (1 பேதுரு 1:22; 4:8; 1 யோவான் 3:11) நம்முடைய சகோதரனை ‘ஏழெழுபது தரம்’ மன்னிக்க வேண்டும் என்று இயேசு சொன்னபோது, நம் அன்புக்கு சோதனை வரும் என்பதை அவர் அறிந்திருந்தார். (மத்தேயு 18:21, 22) ‘தொடர்ந்து ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்’ என்று பவுலும் நம்மை ஊக்குவித்தார். (கொலோசெயர் 3:12, 13, NW) “அன்பை நாடுங்கள்” என்று நமக்கு சொல்லப்பட்டதில் ஆச்சரியமேதும் இல்லை. (1 கொரிந்தியர் 14:1) இதை எப்படி செய்யலாம்?
18. மற்றவர்களிடம் அன்பு காட்ட எது நமக்கு உதவும்?
18 முதலாவதாக, யெகோவா தேவனிடம் நாம் காட்டுகிற அன்பை எப்பொழுதும் மனதில் வைக்கலாம். இதுவே நம் அயலானில் அன்பு காட்ட பலத்த தூண்டுதலாய் நமக்கு அமைகிறது. ஏன்? ஏனெனில் அன்பான முறையில் நடந்துகொள்கையில், நம்முடைய பரலோக தகப்பனை பிரதிபலிக்கிறோம், அவருக்கு மகிமையையும் துதியையும் சேர்க்கிறோம். (யோவான் 15:8-10; பிலிப்பியர் 1:9-11) இரண்டாவதாக, யெகோவா எப்படி உணருகிறாரோ அப்படியே நாம் காரியங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம். நாம் பாவம் செய்யும்போதெல்லாம் யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்கிறோம்; எனினும், மறுபடியும் மறுபடியும் மன்னித்து, நம்மில் எப்போதும் அன்பு காட்டுகிறார். (சங்கீதம் 86:5; 103:2, 3; 1 யோவான் 1:9; 4:18, NW) யெகோவாவைப் போல் சிந்திக்க ஆரம்பித்தால், மற்றவர்களிடம் அன்பு காட்டுவோம், நமக்கு எதிராக செய்யும் தவறுகளை மனமார மன்னிப்போம். (மத்தேயு 6:12) மூன்றாவதாக, மற்றவர்கள் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களிடம் நாம் நடந்துகொள்வோம். (மத்தேயு 7:12) அபூரணராக இருப்பதால், அடிக்கடி நமக்கு மன்னிப்பு தேவைப்படுகிறது. உதாரணமாக, மற்றவர்களைப் புண்படுத்தும் விதத்தில் நாம் ஏதாவது சொல்லிவிட்டால், எல்லாரும் அவ்வப்போது நாவினால் பாவம் செய்பவர்கள்தான் என்பதை அவர்கள் நினைவுகூர வேண்டும் என விரும்புகிறோம். (யாக்கோபு 3:2) மற்றவர்கள் நம்மிடம் அன்பு காட்ட வேண்டும் என நாம் விரும்பினால், நாம் அவர்களிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும்.
19. அன்பை வளர்த்துக்கொள்வதில் பரிசுத்த ஆவியின் உதவியை எவ்வாறு நாடலாம்?
19 நான்காவதாக, பரிசுத்த ஆவியின் உதவியை நாடலாம்; ஏனெனில், ஆவியின் கனிகளில் ஒன்றுதான் அன்பு. (கலாத்தியர் 5:22, 23) நட்புறவுகள், குடும்ப பிணைப்புகள், காதல் ஆகியவை எப்போதும் இயல்பாய் ஏற்படுகின்றன. ஆனால், யெகோவாவிடமிருக்கும் அந்த அன்பை, ஐக்கியத்தின் பரிபூரண கட்டாகிய அந்த அன்பை, நம்மில் வளர்த்துக்கொள்ள அவருடைய ஆவியின் உதவி நமக்குத் தேவை. கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட பைபிளை வாசிக்கையில் பரிசுத்த ஆவியின் உதவியை நாடலாம். உதாரணமாக, இயேசுவின் வாழ்க்கை சரிதையை படித்தால், ஜனங்களிடம் அவர் எப்படி நடந்துகொண்டார் என்பதை காண்போம்; அவரைப் போல் நடக்க நாமும் கற்றுக்கொள்வோம். (யோவான் 13:34, 35; 15:12) மேலும், பரிசுத்த ஆவியைத் தரும்படி நாம் யெகோவாவிடம் கேட்கலாம்; முக்கியமாய், அன்பான விதத்தில் நடந்துகொள்வது நமக்கு கடினமாக தோன்றும் சூழ்நிலைகளில் அதற்காக ஜெபிக்கலாம். (லூக்கா 11:13) கடைசியாக, கிறிஸ்தவ சபையுடன் நெருங்கிய கூட்டுறவு வைத்திருப்பதன் மூலம் அன்பை நாடலாம். அன்புள்ள சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து இருக்கையில் அன்பை வளர்த்துக்கொள்வது நமக்கு உதவியாய் இருக்கும்.—நீதிமொழிகள் 13:20.
20, 21. யெகோவாவின் சாட்சிகள் 2000 ஊழிய ஆண்டின்போது, என்ன கவனிக்கத்தக்க அன்பின் அத்தாட்சியை அளித்தனர்?
20 கடந்த ஆண்டில், நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பிரஸ்தாபிகள் உலகம் முழுவதும் உச்சநிலை எண்ணிக்கையாக 60,35,564 பேர் இருந்தனர். ஆட்களைத் தேடிக் கண்டுபிடித்து நற்செய்தியை அறிவிப்பதில் யெகோவாவின் சாட்சிகள் மொத்தம் 117,12,70,425 மணிநேரம் செலவிட்டனர். இந்த ஊழியத்தில் உஷ்ணத்தையும், மழையையும், குளிரையும் சகிக்க அன்பே அவர்களுக்கு கைகொடுத்தது. பள்ளித் தோழர்களிடமும் வேலைசெய்யும் இடங்களிலுள்ள தோழர்களிடமும் வீதிகளிலும் மற்ற இடங்களிலும் முன்பின் தெரியாத மற்றவர்களிடமும் சாட்சி கொடுக்க அன்பே அவர்களைத் தூண்டியது. சாட்சிகள் சந்தித்தவர்களில் பலர் அசட்டை செய்தனர். சிலர் எதிர்க்கவும் செய்தனர். ஆனாலும் சிலர் ஆர்வம் காட்டினர். ஆகவே, 43,34,54,049 மறுசந்திப்புகள் செய்யப்பட்டன, 47,66,631 பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன.a
21 கடவுளிடமும் தங்கள் அயலாரிடமும் யெகோவாவின் சாட்சிகள் காட்டும் அன்புக்கு எத்தனை எத்தனை அத்தாட்சிகள்! அந்த அன்பு ஒருபோதும் தணிந்து போகாது. 2001 ஊழிய ஆண்டில், மனிதகுலத்திற்கு இன்னும் பெருமளவு சாட்சி கொடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். உண்மைப் பற்றுறுதியும் வைராக்கியமுமுள்ள வணக்கத்தார் ‘காரியங்களையெல்லாம் அன்போடே செய்ய’ முயலுகையில் அவர்களுக்கு யெகோவாவின் ஆசீர்வாதம் என்றும் இருப்பதாக!—1 கொரிந்தியர் 16:14.
[அடிக்குறிப்பு]
a 2000 ஊழிய ஆண்டு அறிக்கைப் பற்றிய முழு விபரங்களுக்கு, 18-21 பக்கங்களில் உள்ள அட்டவணையைக் காண்க.
உங்களால் விளக்க முடியுமா?
• நம் அயலாரிடம் அன்பு காட்டுகையில் யாரை பின்பற்றுகிறோம்?
• யாரிடமும் நாம் அன்பு காட்ட வேண்டும்?
• கிறிஸ்தவ அன்பை வெளிக்காட்டும் சில அனுபவங்கள் யாவை?
• கிறிஸ்தவ அன்பை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
[பக்கம் 18-21-ன் அட்டவணை]
உலகளாவிய யெகோவாவின் சாட்சிகளுடைய 2000 ஊழிய ஆண்டு அறிக்கை
(பவுண்டு வால்யூமைப் பார்க்கவும்)
[பக்கம் 15-ன் படங்கள்]
கிறிஸ்தவ அன்பு குடும்பத்தை இணைக்கும் பிணைப்பு
[பக்கம் 17-ன் படங்கள்]
நம் நம்பிக்கையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அன்பு நம்மை தூண்டுகிறது