யெகோவாவின் சாட்சிகள்—திடநம்பிக்கையுடன் முன்னேறுகிறார்கள்!
வருடாந்தர கூட்டத்தின் அறிக்கை
அவநம்பிக்கையும் சந்தேகமும் ஆட்டிப்படைக்கும் இந்தக் காலத்தில், யெகோவாவின் சாட்சிகள் திடநம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களாக தெள்ளென தெரிகிறார்கள். இது, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் வருடாந்தர கூட்டத்தில் தெளிவாக்கப்பட்டது. இது நியூ ஜெர்ஸியில், ஜெர்ஸி சிட்டியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் மாநாட்டு மன்றத்தில், 2000, அக்டோபர் 7, சனிக்கிழமை நடத்தப்பட்டது.a
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு அங்கத்தினர் ஜான் இ. பார் என்பவர் அவைத் தலைவராக பொறுப்பேற்றார். அவர் தன்னுடைய அறிமுகத்தில் இவ்வாறு கூறினார்: “யெகோவாவுக்கு மிகவும் நேசமான குமாரனாகிய கிறிஸ்து இயேசு இப்போது பரலோக சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டு சத்துருக்களின் மத்தியில் அரசாளுகிறார் என்பதை பூமி முழுவதிலும் இருக்கும் கோடாகோடி மக்களில் நாமே அறிந்திருக்கிறோம், நாமே அதை நம்புகிறோம்.” இத்தகைய திடநம்பிக்கைக்குரிய அத்தாட்சியை உலகெங்குமிருந்து வரும் சிலிர்க்க வைக்கும் ஆறு அறிக்கைகளில் காணலாம்.
பைபிள் சத்தியத்தால் ஹைதியில் ஆவிக்கொள்கையை அடித்து விரட்டுதல்
ஹைதியில் ஆவிக்கொள்கை பேரளவில் பரவியுள்ளது. “பொதுவாக, ஜனங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பில்லி சூனியத்தை நாடுவார்கள்” என கிளை காரியாலய குழுவின் ஒருங்கமைப்பாளர் ஜான் நார்மன் கூறினார். ஒரு விபத்தில் சூனியக்காரன் ஒருவன் தன் காலை இழந்தபோது, அவனுடைய மனதில் சந்தேகங்கள் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கின. ‘ஆவிகள் என்னை பாதுகாக்குமானால், எனக்கு எப்படி இப்படியொரு கதி ஏற்படும்?’ என்று அவன் சிந்தித்தான். மற்ற அநேகரைப் போலவே, இந்த மனிதனுக்கும் யெகோவாவின் சாட்சிகளால் சத்தியம் கற்பிக்கப்பட்டு, ஆவிக்கொள்கையின் ஆக்ரோஷ பிடியிலிருந்து விடுதலை பெற உதவி அளிக்கப்பட்டது. ஏப்ரல் 19, 2000 அன்று நடைபெற்ற கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்கு ஹைதியிலிருந்த ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைவிட நான்கு மடங்குக்கும் அதிகமானோர் வந்திருந்தனர்; இதிலிருந்து அந்நாட்டில் வளர்ச்சிக்கு வளமான வாய்ப்பு இருப்பது தெளிவாக தெரிகிறது.
கொரியாவின் பரந்த பிராந்தியத்தில் ஆர்வம்
கொரியாவில் யெகோவாவின் சாட்சிகளில் 40 சதவீதத்தினர் முழுநேர சேவையில் இருக்கின்றனர். கிளை காரியாலய குழு ஒருங்கமைப்பாளர் மில்டன் ஹாமில்டன் இவ்வாறு சொன்னார்: “இத்தனைப் பெரிய சேனை இருப்பதால், 4 கோடியே 70 லட்சத்துக்கும் அதிகமான ஜனங்கள் வசிக்கும் எங்களுடைய பிராந்தியம் ஒரே மாதத்தில் செய்து முடிக்கப்படுகிறது.” முக்கியமாய் சைகை மொழிகளில் நடத்தப்படும் சபைகளில் வளர்ச்சி கவனிக்கத்தக்கது. சைகை மொழி வட்டாரம் ஒன்றில் 800 வீட்டு பைபிள் படிப்புகள் நடத்தப்படுகின்றன. சராசரியாக ஒரு பிரஸ்தாபிக்கு ஒரு படிப்பு. நடுநிலை வகிப்பின் காரணமாக இளம் சகோதரர்கள் இன்னும் சிறையில் அடைக்கப்படுவது வருத்தகரமான விஷயம். இருந்தாலும், அவர்கள் தயவாய் நடத்தப்படுகிறார்கள், நம்பிக்கைக்கு பாத்திரமான வேலைகளே பெரும்பாலும் அவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன.
மெக்ஸிகோவின் வளர்ச்சிக்கு ஈடுகட்டுதல்
மெக்ஸிகோவில் ஆகஸ்ட் 2000-த்தில் வெளி ஊழிய அறிக்கை செய்த ராஜ்ய அறிவிப்பாளர்களின் உச்சநிலை எண்ணிக்கை 5,33,665! இதற்கு மூன்று மடங்குக்கும் அதிகமானோர் நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தார்கள். “இன்னும் 240 ராஜ்ய மன்றங்களைக் கட்ட வேண்டும் என்பதே எங்களுடைய இந்த வருஷ இலக்கு” என்று கிளை காரியாலய குழு ஒருங்கமைப்பாளர் ராபர்ட் டிரேஸி சொன்னார். “இருந்தாலும், எங்களுக்கு இன்னும் அதிகமான ராஜ்ய மன்றங்கள் தேவை” என்று அவர் மேலும் கூறினார்.
மெக்ஸிகோவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய இளைஞர்கள் நல்ல முன்மாதிரி வகிக்கிறார்கள். ஓர் இளைஞனைக் குறித்து கத்தோலிக்க பாதிரி ஒருவர் இவ்வாறு சொன்னார்: “என்னைப் பின்பற்றும் ஆட்களில் ஒருவராவது அவனைப்போல இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். இந்த ஜனங்களுடைய மனவுறுதியையும் இவர்கள் பைபிள் வசனங்களை திறமையுடன் பயன்படுத்துவதையும் நான் மெச்சுகிறேன். தங்களுடைய உயிர் போனாலும் பரவாயில்லை என கடவுள் சார்பாக பேசியிருக்கிறார்கள்.”
கலவரத்தின் மத்தியிலும் சியர்ரா லியோனில் உத்தமத்தைக் காத்தல்
ஏப்ரல் 1991-ல் சியர்ரா லியோனில் உள்நாட்டுக் கலகம் வெடித்ததிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், காயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், அல்லது முடமாக்கப்பட்டிருக்கிறார்கள். “போரும் துன்பமும் ஜனங்களை மிகவும் பாதித்திருக்கின்றன” என்று கிளை காரியாலய குழு ஒருங்கமைப்பாளர் பில் கவன் அறிவித்தார். “நம்முடைய செய்தியை அசட்டை செய்த பலர் இப்போது அக்கறையோடு செவிகொடுத்துக் கேட்கிறார்கள். தெருவிலிருந்து நேரே நம்முடைய ராஜ்ய மன்றங்களுக்குள் நுழையும் ஆட்களைப் பார்ப்பது சகஜமாகிவிட்டது. சகோதரர்கள் தெருவில் நடந்து செல்லும்போது அவர்களை நிறுத்தி பைபிள் படிப்புக்காக அடிக்கடி கேட்கிறார்கள்” என்றும் அவர் தெரிவித்தார். நாட்டில் பதற்றநிலை தொடர்ந்திருக்கிறபோதிலும், சியர்ரா லியோனில் ராஜ்ய-பிரசங்கிப்பு வேலை பலன் தந்துகொண்டிருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய கட்டிட திட்டம்
தற்போது, தென் ஆப்பிரிக்க கிளை காரியாலயத்தின் மேற்பார்வைக்குட்பட்ட பிராந்தியத்தில், ஆயிரக்கணக்கில் ராஜ்ய மன்றங்கள் தேவைப்படுகின்றன. நூற்றுக்கணக்கான மன்றங்கள் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன. “முன்பு செய்யப்பட்டதுபோல், சிறு குடிசையிலோ அல்லது ஒரு மரத்தின் அடியிலோ கூடுவதற்குப் பதிலாக, பொருத்தமான இருக்கைகள் போடப்பட்ட தகுந்த ஓர் இடத்தில் நம் சகோதரர்கள் கூடிவர முடிகிறது” என்று கிளை காரியாலய குழு அங்கத்தினர் ஜான் கிக்காட் குறிப்பிட்டார். “பெரும்பாலும் இந்த ராஜ்ய மன்றங்கள் எளிமையாக இருக்கிறபோதிலும், பொதுவாக, அந்தப் பகுதியில் அவை மிகவும் கம்பீரமான கட்டிடங்களாக காட்சியளிக்கின்றன. சில பகுதிகளில், ஒரு ராஜ்ய மன்றத்தைக் கட்டிய பின்பு, அடுத்த ஓர் ஆண்டுக்குள் அந்தச் சபையின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் அதிகமாக ஆகிவிடுவதை பார்த்திருக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.
உக்ரேனில் சாட்சிகளின் புதிய சந்ததி
2000-ம் ஊழிய ஆண்டில், இந்த நாட்டிலுள்ள பிரஸ்தாபிகளின் உச்சநிலை 1,12,720. இவர்களில் 50,000-த்திற்கும் மேற்பட்டவர்கள், கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் சத்தியத்தைக் கற்றவர்கள். “உண்மையிலேயே, யெகோவா தம்முடைய பெயரை அறிவிப்பதற்கு ஒரு புதிய இளம் சந்ததியான சாட்சிகளை எழுப்பியிருக்கிறார்!” என்று கிளை காரியாலய குழு ஒருங்கமைப்பாளர் ஜான் டீடர் கூறினார். “கடந்த இரண்டு ஆண்டுகளில், ஐந்து கோடிக்கும் மேற்பட்ட பத்திரிகைகளை அளித்திருக்கிறோம்—இது இந்த நாட்டின் ஜனத்தொகைக்குச் சமம். கூடுதலான தகவல் கேட்டு, அக்கறை காண்பிக்கும் ஆட்களிடமிருந்து ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஆயிரம் கடிதங்களைப் பெறுகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.
அந்த நிகழ்ச்சிநிரலில் மனதைக் கவர்ந்த மற்ற அம்சங்கள்
ஆளும் குழுவின் உறுப்பினராக இருக்கும் டான்யல் சிட்லிக் கவனத்தை ஈர்க்கும் ஒரு பேச்சை கொடுத்தார். “ஆளும் குழுவிற்கும் சட்டப்பூர்வ நிறுவனத்திற்கும் உள்ள வித்தியாசம்” என்ற தலைப்பில் இப்பத்திரிகையில் காணப்படும் கட்டுரை, தகவல்கள் நிறைந்த அந்தப் பேச்சின் அடிப்படையிலானது.
“தேவராஜ்ய ஏற்பாட்டின்படி கண்காணிகளும் உதவி ஊழியர்களும் நியமிக்கப்படுகின்றனர்” என்ற தலைப்பில் சிந்தனையைத் தூண்டும் பேச்சை ஆளும் குழுவைச் சேர்ந்த தியோடர் ஜாரக்ஸ் கொடுத்தார். இந்தப் பத்திரிகையில் அச்சிடப்பட்டுள்ள கட்டுரைகளில் ஒன்று அந்தப் பொருளைச் சார்ந்தது.
2001-ம் ஆண்டின் வருடாந்தர வசனத்தின்பேரில், ஆளும் குழு அங்கத்தினர் டேவிட் ஸ்ப்ளேனும் இந்த வருடாந்தர கூட்டத்தில் உந்துவிக்கும் பேச்சு கொடுத்தார். இது அப்போஸ்தலன் பவுலினுடைய வார்த்தைகளின் அடிப்படையிலானது: “நீங்கள் கடவுளுக்குச் சித்தமான எதிலும் தேறினவர்களாயும் முழு நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநி[ல்லுங்கள்].” (கொலோசெயர் 4:12, திருத்திய மொழிபெயர்ப்பு) உலகமுழுவதிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகள், ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பூமியெங்கும் உண்மையுடன் பிரசங்கித்து வருகையில் அவ்வாறு செய்ய திடமாய்த் தீர்மானித்திருக்கிறார்கள்.—மத்தேயு 24:14.
[அடிக்குறிப்பு]
a இந்நிகழ்ச்சி மின்னியல் மூலம் பல இடங்களுடன் இணைக்கப்பட்டது. இவ்வாறு ஆஜரானோரின் மொத்த எண்ணிக்கை 13,082.