உங்களை தவறாக புரிந்துகொண்டதாய் நினைக்கிறீர்களா?
அன்டோனியோவுக்கு மனதே சரியில்லை. அவருடைய ஆருயிர் நண்பன் லியோநார்டோ என்ன காரணமோ தெரியவில்லை திடீரென்று முகம்கொடுத்து பேசுவதில்லை.a பல சமயங்களில் அவர் ‘ஹலோ’ சொல்கையில் பார்த்தும் பார்க்காததுபோல் போகிறார். அவர்கள் சேர்ந்திருந்த சமயத்திலும் அந்நியன் போல் நடந்துகொள்வதாக தோன்றியது. இப்படி, நண்பன் தவறாக புரிந்துகொள்ளும் அளவுக்கு என்ன பேசினோம், என்ன செய்தோம் என்ற இனந்தெரியாத கவலையும் பயமும் அன்டோனியோவை வாட்ட ஆரம்பித்தது. ஆனால் காரணம்தான் என்னவென்று தெரியவில்லையே.
மனஸ்தாபம் ஏற்படுவது சகஜம்தான். அநேக விஷயங்கள் அற்பமானவை, அவற்றை சுலபமாக சரிசெய்துவிடலாம். ஆனால் சில, மன நிம்மதியையே கெடுத்துவிடும்; அதுவும் முக்கியமாக, தவறான அபிப்பிராயங்களை சரிசெய்ய அனைத்து முயற்சிகளையும் எடுத்த பிறகும் சரியாகவில்லை என்றால் நிம்மதியே பறிபோய்விடும். ஏன் இப்படி தப்பான அபிப்பிராயங்கள் தலைதூக்குகின்றன? அப்படிப்பட்ட பிரச்சினையில் மாட்டிக் கொள்வோர் எப்படி பாதிக்கப்படுகின்றனர்? நீங்கள் எதையாவது செய்கையில் மற்றவர்கள் தவறாக எடைபோட்டால் என்ன செய்யலாம்? மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அந்தளவுக்கு முக்கியமானதா?
தப்புக்கணக்கிலிருந்து யாரும் தப்ப முடியாது
நம் சிந்தனைகளையும் நோக்கங்களையும் மற்றவர்கள் அறிந்துகொள்ள முடியாது. ஆகவே நாம் சொல்வதையோ செய்வதையோ எப்படியும் யாராவது தவறாக புரிந்துகொள்ளலாம். தப்புக்கணக்குப் போட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சில சமயங்களில் நம் எண்ணங்களை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்த தவறிவிடுவோம். அக்கம்பக்கத்திலிருந்து எழும் சப்தங்களும் கவனச் சிதறல்களும் நாம் சொல்வதை நன்கு கவனிக்க முடியாதபடி கேட்பவரைச் செய்யலாம்.
ஒருசில நடத்தைகள் தவறாக புரிந்துகொள்ளப்படலாம். உதாரணத்திற்கு கூச்ச சுபாவமுள்ளவரை எடுத்துக்கொள்ளுங்கள். இவர் யாரிடமும் பழகமாட்டார்; யாரையும் பொருட்படுத்த மாட்டார், அல்லது வீண் ஜம்பம் அவருக்கு என்று சிலர் தப்புக்கணக்குப் போட்டுவிடலாம். வாழ்க்கையில் பட்ட அனுபவங்களால் ஒருவர், சில சந்தர்ப்பங்களில் சிந்தித்து செயல்படாமல் உணர்ச்சிகளுக்கு அடிபணிந்துவிடலாம். கலாச்சாரம், மொழி போன்ற வித்தியாசங்களின் காரணமாக ஒருவரையொருவர் சரிவர புரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போவது சகஜம்தான். இதோடு, காதில் விழும் தவறான விஷயங்களையும் வீண்பேச்சுக்களையும் அந்தக் கணக்கில் சேர்த்தால், செய்கிற அல்லது சொல்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் பற்பல அர்த்தங்கள் கற்பிக்கப்படலாம். ஆனால் அதைச் சொன்னவருக்கோ செய்தவருக்கோ அப்படிப்பட்ட எண்ணம் துளியும் இருந்திருக்காது. தங்களைப் பற்றி மற்றவர்கள் தப்புக்கணக்கு போட்டுவிட்டதாக அங்கலாய்ப்பவர்களுக்கு இவை எல்லாம் ஒருகாலும் ஆறுதலளிக்க மாட்டா.
உதாரணமாக ஆனா என்னும் பெண்ணை எடுத்துக்கொள்வோம். தன் சிநேகிதியை எல்லாருக்குமே பிடிக்கும் என கள்ளங்கபடமுமில்லாமல் ஒருமுறை சொல்லிவிட்டாள்; அப்போது அந்த சிநேகிதி அங்கு இல்லை. அதைக் கேட்ட வேறொரு பெண் அவளிடம் போய் அதற்கு தானே ஒரு அர்த்தம் கற்பித்து சொல்லிவிட்டாள். உடனே அந்த சிநேகிதி, ஒரு பாய் பிரண்டுடன் தான் பழகுவது பிடிக்காமல் பொறாமையால் அவள் அப்படி சொன்னதாக அதிக கோபத்தோடு எல்லார் முன்நிலையிலும் ஆனாவை சாடினாள். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஆனா கதிகலங்கிப்போனாள். ஆனா சொன்னதை அந்தப் பெண் அப்படியே மாற்றி சொல்லிவிட்டாள். தன் சிநேகிதியைப் புண்படுத்தும் எண்ணத்தில் அப்படி சொல்லவில்லை என ஆனா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அது செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ஆனது. மிஞ்சியதெல்லாம் மனவேதனைதான். தவறாக புரிந்துகொண்ட சிநேகிதியின் எண்ணத்தை அடியோடு மாற்ற ஆனாவுக்கு வெகு காலம் எடுத்தது.
உங்கள் நோக்கங்களை மற்றவர்கள் எப்படி புரிந்துகொள்கிறார்களோ அதை வைத்தே அவர்கள் உங்களை மதிப்பிடுகின்றனர். ஆகவே உங்களுடைய நோக்கத்தை மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்கையில் வேதனைப்படுவது சகஜம்தான். மற்றவர்கள் உங்களைப் பற்றி தப்புக்கணக்குப் போட எந்தக் காரணமும் இல்லை என நினைத்து ஆத்திரப்படலாம். உங்களைப் பொருத்தவரை அப்படிப்பட்ட அபிப்பிராயங்கள் ஒருதலைபட்சமானவை, குறைகண்டுபிடிப்பதற்காகவே சொல்லப்படுகிறவை, முழுக்க முழுக்க தவறானவை. அவை உங்களை பெரிதும் புண்படுத்தலாம். ஒருவேளை யாருடைய அபிப்பிராயத்தை நாம் மிகவும் மதிக்கிறோமோ அவரே நம்மை பற்றி தப்புக்கணக்குப் போடும்போது ஏற்படும் வேதனையை சொல்லவே வேண்டாம்.
மற்றவர்கள் உங்களை எடைபோடும் விதம் எரிச்சலூட்டினாலும், அவர்களுக்கும் சொந்த கருத்துக்கள் இருக்கும் என்பதை மதிப்பது பொருத்தமானதே. மற்றவர்களின் கருத்துக்களை அலட்சியப்படுத்துவது கிறிஸ்தவ குணமல்ல, நம்முடைய சொற்களும் செயல்களும் மற்றவர்களை பாதிக்க ஒருபோதும் விரும்பமாட்டோம். (மத்தேயு 7:12; 1 கொரிந்தியர் 8:12) ஆகவே ஒருவர் உங்கள் மீது வைத்திருக்கும் தவறான அபிப்பிராயத்தை சரிசெய்வதற்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டிய அவசியம் அவ்வப்போது நேரிடலாம். மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக அளவுக்கு அதிகமாக கவலைப்படுவதிலும் அர்த்தமில்லை; அப்படி செய்தால் ஒருவேளை நம் சுயமரியாதையை இழக்கலாம் அல்லது ஒதுக்கப்பட்ட உணர்வு எழலாம். எப்படியிருந்தாலும் உங்களுடைய உண்மையான மதிப்பு மற்றவர்களின் அபிப்பிராயங்களைச் சார்ந்தில்லை.
ஒருவேளை உங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு தக்க ஆதாரம் இருப்பதை நீங்கள் உணரலாம். அதுவும் கலக்கமடைய செய்யலாம்; ஆனால் உங்கள் குறைகளை தயங்காமல் நேர்மையோடு ஒப்புக்கொள்வது பயனளிக்கும்; அது தேவையான மாற்றங்களைச் செய்ய தூண்டுதல் அளிக்கும்.
மோசமான பாதிப்புகள்
தவறாக புரிந்துகொள்வது படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்படுத்தாமலும் இருக்கலாம். உதாரணமாக, ரெஸ்டாரன்டில் ஒருவர் சப்தமாக பேசிக்கொண்டிருப்பதை நீங்கள் கேட்கலாம். இவர் எல்லாரிடமும் சகஜமாக பழகுபவர் போலிருக்கிறதே அல்லது தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்ள விரும்புகிறவர் போலிருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்கள் கணிப்பு தவறாக போகலாம். சரியாக காதுகேட்காதவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதே உண்மையாக இருக்கலாம். இன்னொரு உதாரணத்தை சிந்திப்போம். கடையில் பணிபுரியும் ஒரு பெண்ணைப் பார்க்கிறீர்கள்; இவள் யாரிடமும் இன்முகத்தோடு பேசமாட்டாள் போலிருக்கிறதே என்று நினைக்கலாம். ஆனால் அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒருவேளை இப்படிப்பட்ட மனஸ்தாபங்கள் தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தலாம் என்றாலும் பெரிய அல்லது நிரந்தர பாதிப்பு ஏதும் ஏற்படப் போவதில்லை என்பது உண்மைதான். ஆனால் சில சமயங்களில் தவறாக புரிந்துகொள்வது அழிவுக்கு வழிநடத்தலாம். உதாரணத்திற்கு, பண்டைய இஸ்ரவேலரின் வரலாற்றில் நடந்த இரண்டு சம்பவங்களை கவனியுங்கள்.
அம்மோன் புத்திரரின் ராஜா நாகாஸ் மரித்த பின்பு, அவனுடைய மகன் ஆனூன் ஆட்சி பொறுப்பை ஏற்றான். அப்போது அவனுக்கு ஆறுதல் சொல்ல தாவீது தன் ஸ்தானாபதிகளை அனுப்பி வைத்தார். ஆனால், அந்த ஸ்தானாபதிகள் அம்மோனியரின் தேசத்தை வேவுபார்க்க வந்திருப்பதாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. இதனால் ஆனூன் முதலில் அவர்களை அவமானப்படுத்தி, பின்னர் இஸ்ரவேலரோடு போர் தொடுத்தான். விளைவு? குறைந்தபட்சம் 47,000 பேர் மாண்டனர். இவையெல்லாம் நல்லெண்ணங்களை தவறாக புரிந்துகொண்டதால் வந்த வினை.—1 நாளாகமம் 19:1-19.
அடுத்து, இஸ்ரவேலரின் வரலாற்றின் ஆரம்பத்தில் நடந்த சம்பவம்; தவறான அபிப்பிராயம் எவ்விதமாக முற்றிலும் வித்தியாசமான விதத்தில் சரிசெய்யப்பட்டது என்பதை இதிலிருந்து கவனியுங்கள். ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதி கோத்திரத்தாரும் யோர்தான் நதி அருகே ஒரு பெரிய பலிபீடத்தைக் கட்டினர். இதைக் கேள்விப்பட்ட மற்ற இஸ்ரவேலர்கள் இதை துரோகச் செயல், யெகோவாவுக்கு எதிரான கலகம் என கருதினர். ஆகவே இவர்களோடு யுத்தம் பண்ண கூடிவந்தனர். ஆனால் அவசரப்பட்டு எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன்பு, அவர்களுடைய உண்மையற்ற செயல் தங்களைக் கோபமடைய செய்திருப்பதை அக்கோத்திரத்தாருக்கு தெரிவிக்க தூதுவர்களை அனுப்பினர். அப்படி அவர்கள் செய்தது நல்லதாயிற்று. ஏனென்றால் பலிபீடத்தைக் கட்டியவர்கள், உண்மை வணக்கத்திலிருந்து விலகும் எண்ணம் தங்களுக்குத் துளியும் இல்லை என பதிலளித்தனர். ஆனால், யெகோவாவுக்கு தங்கள் உண்மைத்தன்மையை காட்டுவதற்கு நினைவுச்சின்னமாய் இருக்க அந்தப் பலிபீடத்தைக் கட்டியதாக சொன்னார்கள். தவறாக புரிந்துகொண்டது இரத்தவெள்ளம் பெருக்கெடுக்க காரணமாய் இருந்திருக்கும். ஆனால், ஞானமாய் செயல்பட்டது அந்த மோசமான விளைவுகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றியது.—யோசுவா 22:10-34.
அன்புடன் பிரச்சினைகளை பேசித் தீர்த்தல்
மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு பதிவுகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பது பயனளிப்பதாய் உள்ளது. தவறாக புரிந்துகொள்ளப்பட்டதை தெளிவுபடுத்துவதே ஞானமான காரியம் என்பதில் சந்தேகமில்லை. இரண்டாவது சம்பவத்தில் இரு தரப்பினரும் பேசி தெளிவுபடுத்திக் கொண்டதால் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட்டனவோ யாருக்குத் தெரியும்? மற்றவரின் சரியான உள்நோக்கங்களை புரிந்துகொள்ள தவறினால் பெரும்பாலும் உயிர்சேதம் ஏற்படாமல் இருக்கலாம், ஆனால் நட்புக்கு சேதம் ஏற்படுவது உறுதி. ஆகவே யாரோ ஒருவர் உங்களிடம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்று நினைத்தால், உண்மையான நிலைமையை நன்கு புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று நிச்சயமாக சொல்ல முடியுமா அல்லது தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்களா? அவருடைய நோக்கமென்ன? அவரையே கேளுங்கள். உங்களை தவறாக புரிந்துகொண்டிருப்பதாக நினைக்கிறீர்களா? அதைக் குறித்து வெளிப்படையாய் பேசுங்கள். பேசுவதை பெருமை தடை செய்ய அனுமதிக்காதீர்கள்.
மனஸ்தாபங்களை சரிசெய்வதற்கு இயேசு சிறந்த ஒரு குறிப்பைச் சொன்னார்: “ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.” (மத்தேயு 5:23, 24) ஆகவே மற்றவர்களை இதில் உட்படுத்தாமல் தனிப்பட்ட விதத்தில் அவரை அணுகுவதே சரியான காரியம். உங்களைப் புண்படுத்தினவர் உங்கள் எண்ணத்தை வேறொருவர் வாயிலாக முதலில் கேள்விப்படுகையில் நிலைமை மோசமாகிவிடும். (நீதிமொழிகள் 17:9) அன்பாக சமரசமாவதே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். பிரச்சினையை தெளிவாகவும் எளியமையான, குற்றப்படுத்தாத வார்த்தைகளிலும் சாந்தமாக விளக்குங்கள். அந்த சூழ்நிலையில் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள். அதன்பிறகு அவர் சொல்வதையும் கேட்டு நியாயமாக எடைபோடுங்கள். அவருடைய எண்ணங்களுக்கு அவசரப்பட்டு தவறான உள்நோக்கம் கற்பித்துவிடாதீர்கள். அவர் தவறாக எண்ணவில்லை என நம்பத் தயாராக இருங்கள். அன்பு “அனைத்தையும் நம்பும்” என்பதை மறந்துவிடாதீர்கள்.—1 கொரிந்தியர் 13:7, பொ.மொ.
தப்பான எண்ணங்கள் சரிசெய்யப்பட்ட பின்னரும் புண்பட்ட உணர்ச்சிகளும் பாதிப்புகளும் மறையாதிருக்கலாம். அப்போது என்ன செய்வது? அவசியம் ஏற்பட்டால் மனதார மன்னிப்பு கேட்பது பொருத்தமாயிருக்கும். அதோடு காரியங்களை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம். இந்த எல்லா சமயத்திலும் புண்படுத்தப்பட்டவர், ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட இந்தப் புத்திமதியை பின்பற்றுவது மிகவும் நல்லது: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து [“யெகோவா,” NW] உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.”—கொலோசெயர் 3:13, 14; 1 பேதுரு 4:8.
நாம் அபூரணராக இருக்கும்வரை, ஒருவரையொருவர் தவறாக புரிந்துகொள்வதும், புண்படுத்துவதும் இருக்கத்தான் செய்யும். யார் வேண்டுமானாலும் தவறு செய்யலாம் அல்லது உணர்ச்சிகளை புரிந்துகொள்ளாமலும் கடுமையாகவும் பேசிவிடலாம். “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரண புருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக் கூடியவனுமாயிருக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 3:2) இதை யெகோவா தேவன் நன்கு அறிந்திருப்பதால் அவர் தரும் அறிவரை: “உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும். சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே; கவனித்தால் உன் வேலைக்காரன் உன்னை நிந்திப்பதைக் கேள்விப்பட வேண்டியதாகும். அநேகந்தரம் நீயும் பிறரை நிந்தித்தாயென்று, உன் மனதுக்குத் தெரியுமே.”—பிரசங்கி 7:9, 21, 22.
‘யெகோவா இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்’
உங்களைப் பற்றிய மற்றவரின் தவறான அபிப்பிராயத்தை மாற்றவே முடியாது என தோன்றினால் என்ன செய்வது? சோர்ந்துவிடாதீர்கள். முடிந்தளவு கிறிஸ்தவ குணங்களை வளர்த்துக்கொண்டு அவற்றை வெளிக்காட்டுங்கள். நீங்கள் எதில் முன்னேற்றம் செய்ய வேண்டுமோ அதில் உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள். உங்களின் உண்மையான மதிப்பு முடிவில் மற்றவர்களால் நிர்ணயிக்கப்படுவதில்லை. யெகோவா மாத்திரமே துல்லியமாக ‘இருதயங்களை நிறுத்துப்பார்க்க’ முடியும். (நீதிமொழிகள் 21:2) இயேசுவேகூட மனுஷர்களால் மதிப்போடு நடத்தப்படவில்லை; இகழப்பட்டார். ஆனால் இது யெகோவாவின் பார்வையில் அவரது மதிப்பை எந்த விதத்திலும் குறைக்கவில்லை. (ஏசாயா 53:3) சிலர் உங்களைப் பற்றி தப்புக்கணக்குப் போட்டாலும் யெகோவா புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கையில் அவரிடம் “உங்கள் இருதயத்தை ஊற்றி”விடலாம். “மனுஷன் பார்க்கிறபடி கடவுள் பார்க்கமாட்டார்; ஏனெனில் மனுஷன் வெளித்தோற்றத்தைப் பார்க்கிறான்; யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார்.” (சங்கீதம் 62:8; 1 சாமுவேல் 16:7, NW) நீங்கள் எப்போதும் நன்மையே செய்துவந்தால், தவறான அபிப்பிராயத்தை வைத்திருப்பவர்கள் காலப்போக்கில் தங்கள் தப்பை உணர்ந்து மனதை மாற்றிக் கொள்ளலாம்.—கலாத்தியர் 6:9; 2 தீமோத்தேயு 2:15.
கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அன்டோனியோவை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் பைபிளின் அறிவுரைபடி செய்ய தைரியத்தை வரவழைத்துக் கொண்டார்; நண்பன் லியோநார்டோவின் மனதை நோகடிக்கும் அளவுக்கு செய்தது என்ன என அவரிடமே கேட்டார். விளைவு? லியோநார்டோ ஸ்தம்பித்துவிட்டார். தன் மனம் நோகும்படி அன்டோனியோ எதுவுமே செய்யவில்லை என்றும் உண்மையில் அவரிடம் வித்தியாசமாகவே நடந்துகொள்ளவில்லை என்றும் உறுதியாக சொன்னார். அவர் பேசாமல் இருந்திருந்தார் என்றால் எதையோ ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருந்ததே காரணமாக இருந்திருக்கும் என்றும் கூறினார். தன்னை அறியாமலேயே தன் நண்பனை புண்படுத்திவிட்டதற்கு லியோநார்டோ மன்னிப்பு கேட்டார்; இந்த விஷயத்தைக் குறித்து பேசி சரிசெய்ததற்கு நன்றிகூறினார். இனிமேல் மற்றவர்கள் தன்னைப் பற்றி இப்படி நினைக்காதவாறு நடந்துகொள்ள அதிக கவனமாக இருப்பதாகவும் கூறினார். இருவருக்கு இடையே இருந்த மனத்தாங்கல்கள் எல்லாம் நீங்கின, இருவரும் எப்போதும்போல ஆருயிர் நண்பர்கள் ஆயினர்.
நம்மை பற்றி யாராவது தவறாக நினைத்தால் அது நமக்கு கஷ்டமாகவே இருக்கும். ஆனால் அதை சரிசெய்வதற்கு தேவையான அனைத்தையும் செய்வதோடு, அன்பு, மன்னித்தல் ஆகிய வேதப்பூர்வ நியமங்களைப் பின்பற்றுகையில் அதே நல்ல பலன்கள் உங்களுக்கும் கிடைக்கும்.
[அடிக்குறிப்பு]
a இந்தக் கட்டுரையில் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 23-ன் படங்கள்]
அன்போடும் மன்னிக்கும் மனப்பான்மையோடும் காரியங்களைத் தெளிவுபடுத்துவது சந்தோஷமான பலன்களைத் தரும்