தறிகெட்ட தராதரங்களும் நம்பிக்கை துரோகமும்
இங்கிலாந்து அரசர் முதலாம் ஹென்றி (1100-1135) காலத்தில் ஒரு கெஜம் என்றால் எவ்வளவு நீளம் என தெரியுமா? “அரசனுடைய மூக்கு நுனிக்கும் நீட்டப்பட்ட கையின் பெருவிரலுக்கும் இடைப்பட்ட தூரம்தான்” ஒரு கெஜம். ஹென்றி அரசனுடைய குடிமக்களின் கெஜக்கோல்கள் எந்தளவுக்கு துல்லியமாக இருந்தன? அரசரை நேரடியாக சந்தித்து அளந்து பார்ப்பதைத் தவிர வேறு வழியே இல்லை!
இன்று, திட்ட அளவுகளில் (standards) மிகத் துல்லியமாக அளவுகள் வரையறுக்கப்படுகின்றன. வெற்றிடத்தில் ஒரு வினாடியில் ஒளி பயணம் செய்யும் தூரத்தை 29,97,92,458 என்ற எண்ணால் வகுக்க கிடைக்கும் அளவே மீட்டர் என வரையறுக்கப்படுகிறது. மிகத் துல்லியமாக சொல்லப்போனால், இந்த ஒளியின் அலைநீளம் மாறாதது; இது விசேஷித்த லேசர் ஒளிக்கதிரால் வெளியிடப்படுகிறது. இந்தத் திட்ட அளவையே மறுபடியும் உண்டாக்கும் கருவி இருந்தால், தாங்கள் வைத்திருக்கும் நீளம் எல்லாரும் வைத்திருக்கும் அதே நீளம்தானா என்பதை மக்கள் எங்கு வேண்டுமென்றாலும் சரிபார்த்துக் கொள்ளலாம்.
ஆனால், திட்ட அளவில் ஏற்படும் சிறு மாற்றங்கள்கூட சந்தேகத்தை உண்டுபண்ணலாம், அதனால் திட்ட அளவுகளைப் பாதுகாப்பதற்கு பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணமாக, பொருளை எடைபோடுவதற்கு பிரிட்டனில் பயன்படுத்தப்படும் திட்ட அளவு பிளாட்டினம் மற்றும் இரிடியம் கலந்த உலோகக் கலவையால் தயாரிக்கப்பட்ட ஒரு பாளமாகும்; இது ஒரு கிலோகிராம் எடையுடையது. இந்தப் பாளம் தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. வாகனங்களாலும் விமானங்களாலும் ஏற்படும் காற்று தூய்மைக்கேட்டினால் ஒவ்வொரு நாளும் இந்தத் திட்ட அளவு கிலோகிராமின் எடை கூடுகிறது. ஆனால், இந்த உலோகப்பாளம் அல்லது உருளை உலக திட்ட அளவு பாளத்தின் நகல்தான்! இதன் ஒரிஜனல், பிரான்ஸில் செவரஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள சர்வதேச எடைகள் மற்றும் அளவைகளின் அலுவலகத்தில் (International Bureau of Weights and Measures) ஒரு பாதாள நிலவறையில் மணி ஜாடிகளுக்குள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய பொருட்களால் மாசுபடுவதால் இந்த ஒரிஜனல் பாளத்தின் எடையும்கூட மாறுபடுகிறது. இதுவரை, உலக அளவை அறிஞர்களால் (metrologists) மிகவும் நிலையான திட்ட அளவை உருவாக்க முடியவில்லை.
சராசரி மனிதனுக்கு மயிரிழை மாற்றங்கள் தவிர்க்க முடியாதவையாக இருந்தாலும், திட்ட அளவில் அப்பட்டமான மாற்றம் ஏற்பட்டால் அது பெரும் குழப்பத்தை விளைவிக்கலாம். இம்பீரியல் அளவையிலிருந்து (பவுண்டு, அவுன்ஸ்) மெட்ரிக் அளவைக்கு (கிலோகிராம், கிராம்) மாறியது அதிக அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. என்றாலும், இதற்கு நியாயமான காரணம் உண்டு. மக்களுக்கு இந்தப் புதிய முறையைப் பற்றி அவ்வளவாக தெரியாததால் மோசடிக்கு அஞ்சாத கடைக்காரர்கள் சிலர் இதைப் பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய வாடிக்கையாளர்களை ஏமாற்றினார்கள்.
குடும்ப, ஒழுக்க தராதரங்கள்
குடும்ப தராதரங்களிலும் ஒழுக்க தராதரங்களிலும் (standards) ஏற்படும் மாற்றங்களைப் பற்றியென்ன? இப்படிப்பட்ட மாற்றங்களால் ஏற்படும் விளைவு படுபயங்கரமாக இருக்கலாம். குடும்பம் பிளவுறுதல், கட்டுப்பாடற்ற பாலின பழக்கங்கள், குழந்தை துஷ்பிரயோகம் ஆகியவற்றைப் பற்றிய தற்கால அறிக்கைகள் அநேகரை அதிர்ச்சியடையச் செய்கின்றன; தராதரங்கள் சீரழிந்துவரும் ஒரு சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன. உள்ளூர் அதிகாரிகளின் கவனிப்பிலுள்ள குழந்தைகள் பயங்கரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவது, ஒற்றை பெற்றோர் குடும்பங்கள், ஓரினப்புணர்ச்சி “பெற்றோரால்” வளர்க்கப்படும் பிள்ளைகள் ஆகியவற்றிற்கு காரணம் என்ன? இவையெல்லாம் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த தராதரங்களை மக்கள் தள்ளிவிட்டதால் வந்த விளைவுகளே ஆகும். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பைபிள் முன்னறிவித்தபடி, மக்கள் மேன்மேலும் “தற்பிரியராயும், . . . சுபாவ அன்பில்லாதவர்களாயும், . . . நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், . . . தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்” மாறிக்கொண்டு வருகிறார்கள்.—2 தீமோத்தேயு 3:1-4.
ஒழுக்க தராதரங்களின் சீர்குலைவும் ஈவிரக்கமற்ற துரோகமும் கைகோர்த்துச் செல்கின்றன. சமீபத்தில், வட இங்கிலாந்திலுள்ள ஹைட் என்ற நகரத்தில் மருத்துவ துறையின் உயர்ந்த தராதரங்கள் அடிமட்டத்திற்கு சரிந்துபோனது வெளிச்சத்திற்கு வந்தது. அங்கு வசிப்பவர்கள் “மரியாதைக்கும் நம்பிக்கைக்குமுரிய” குடும்ப மருத்துவர்களை நம்பி எல்லாவற்றையும் அவரிடம் சொன்னார்கள். ஆனால் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், ஒரு மருத்துவர் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். எப்படி? குறைந்தபட்சம் 15 பெண் நோயாளிகளுடைய மரணத்திற்கு அந்த மருத்துவரே காரணம் என்பதை விசாரணை அறிக்கைகள் வெளிப்படுத்தின. சொல்லப்போனால், அந்த மருத்துவர் சம்பந்தப்பட்ட இன்னும் 130-க்கும் அதிகமானோருடைய மரணத்தையும் போலீஸ் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. அந்த மருத்துவர் குற்றவாளியாக தீர்க்கப்பட்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டபோது, எந்தளவுக்கு நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார் என்பது அம்பலப்படுத்தப்பட்டது. சிறை அதிகாரிகள் இருவருடைய தாயும் இந்த மருத்துவரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதால் இப்பிரபல கைதியை அந்த அதிகாரிகள் கவனித்துக்கொள்ள வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டு அவர்களுக்கு வேறு வேலைகள் கொடுக்கப்பட்டன. த டெய்லி டெலிகிராஃப் என்ற செய்தித்தாளில் இந்த வழக்கைப் பற்றிய அறிக்கையில் இந்த மருத்துவரை “‘டெவில்’ டாக்டர்” என வர்ணித்ததில் ஆச்சரியமில்லை.
வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தராதரங்கள் மாறிக்கொண்டும் சீரழிந்துகொண்டும் வருவதைப் பார்க்கையில், யார் மீது நீங்கள் உறுதியாக நம்பிக்கை வைக்கலாம்? தராதரங்களை காத்துக்கொள்ளும் சக்தி படைத்த ஓர் அதிகாரத்தின் ஆதரவுபெற்ற மாறா தராதரங்களை நீங்கள் எங்கே காணலாம்? இந்த விஷயங்களைப் பற்றி பின்வரும் கட்டுரை கலந்தாலோசிக்கிறது.