இறுதி வெற்றியை நோக்கி!
“இதோ, ஒரு வெண்குதிரை! அதின்மேல் ஏறியிருந்தவர் வில்லைப் பிடித்திருந்தார்; அவருக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவர் ஜெயிக்கிறவராக ஜெயிப்பதற்கெனப் புறப்பட்டார்.”—வெளிப்படுத்துதல் 6:2, திருத்திய மொழிபெயர்ப்பு.
1. தரிசனத்தில் யோவான் கண்ட எதிர்கால சம்பவங்கள் யாவை?
கிறிஸ்து ராஜாவாக முடிசூட்டப்படுவதை சுமார் 1,800 வருடங்களுக்கு முன்பே அப்போஸ்தலன் யோவான் தெய்வீக ஏவுதலால் பார்க்கவும் விவரிக்கவும் முடிந்தது. தரிசனத்தில் கண்டதை நம்புவதற்கு யோவானுக்கு விசுவாசம் தேவைப்பட்டது. முன்னறிவிக்கப்பட்ட இந்த முடிசூட்டுதல் 1914-ல் நிகழ்ந்தது என்பதற்கு இன்று நமக்கு தெளிவான அத்தாட்சி உள்ளது. இயேசு கிறிஸ்து ‘ஜெயிக்கிறவராக ஜெயிப்பதற்கெனப் புறப்படுவதை’ விசுவாசக் கண்களால் நாம் காண்கிறோம்.
2. ராஜ்யத்தின் பிறப்பிற்கு பிசாசு எப்படி பிரதிபலித்தான், இது எதற்கு அத்தாட்சி?
2 ராஜ்யத்தின் பிறப்பை பின்தொடர்ந்து பரலோகத்திலிருந்து சாத்தான் தள்ளப்பட்டான். அதனால் அதிக தீவிரத்தோடும் கோபாவேசத்தோடும் போரிடுகிறான், ஆனால் நிச்சயமாகவே அவனால் வெற்றியடைய முடியாது. (வெளிப்படுத்துதல் 12:7-12) உலக நிலைமைகள் இவ்வளவு மோசமானதற்கு காரணம் அவனுடைய கோபம்தான். மனித சமுதாயமே சிதைவுறுவதுபோல் தோன்றுகிறது. ஆனால் யெகோவாவின் சாட்சிகளுக்கோ, தங்களுடைய அரசன் “ஜெயிப்பதற்கென” முன்னேறிச் செல்கிறார் என்பதற்கு இது தெளிவான அத்தாட்சியை அளிக்கிறது.
ஒரு புதிய உலக சமுதாயம் உருவாகிறது
3, 4. (அ) ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது முதற்கொண்டு கிறிஸ்தவ சபையில் செய்யப்பட்ட அமைப்புக்குரிய மாற்றங்கள் யாவை, அவை ஏன் அவசியமாக இருந்தன? (ஆ) ஏசாயா முன்னறிவித்தபடி, இந்த மாற்றங்களால் என்ன நன்மை ஏற்பட்டுள்ளது?
3 ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டவுடன், இப்போது அதிக ராஜ்ய உத்தரவாதங்களைக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட கிறிஸ்தவ சபையை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையைப் போன்று ஸ்தாபிப்பதற்கான சமயம் வந்தது. ஆகவே, கிறிஸ்தவ அமைப்பு எவ்வாறு இயங்க வேண்டும் என்ற விஷயம் ஜூன் 1 மற்றும் 15, 1938 ஆங்கில காவற்கோபுர இதழ்களில் ஆராயப்பட்டது. பிற்பாடு வெளிவந்த டிசம்பர் 15, 1971 ஆங்கில இதழில், “ஆளும் குழு சட்டப்பூர்வ ஸ்தாபனத்திலிருந்து வித்தியாசப்பட்டது” என்ற கட்டுரையில் நவீன கால ஆளும் குழுவைப் பற்றி தெளிவாக விளக்கப்பட்டது. 1972-ல் உள்ளூர் சபைகளுக்கு உதவியும் வழிநடத்துதலும் கொடுக்க மூப்பர் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
4 மீண்டும் சரியான மேற்பார்வை அளிக்கப்பட்டதால் கிறிஸ்தவ சபை மிகவும் பலப்பட்டது. அதோடு, மூப்பர்கள் தங்களுடைய வேலைகளை செய்வதற்கு தேவையான அறிவுரையையும், நியாய விசாரணை போன்ற விஷயங்களில் பயிற்சியும் பெறுவதற்கு ஆளும் குழு ஏற்பாடுகளை செய்தது. கடவுளுடைய பூமிக்குரிய அமைப்பின் ஏற்பாடுகள் சம்பந்தமாக படிப்படியான முன்னேற்றங்களும் அதன் நல்ல பலன்களும் ஏசாயா 60:17-ல் முன்னறிவிக்கப்பட்டன: “நான் வெண்கலத்துக்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும் வரப்பண்ணி, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை நீதியுள்ளவர்களுமாக்குவேன்.” இந்த முன்னேற்றங்கள் கடவுளுடைய ஆசீர்வாதத்தை வழங்கின, அவருடைய ராஜ்யத்திற்கு வெளிப்படையாகவும் ஆர்வத்தோடும் ஆதரவு காட்டியவர்களுக்கு தெய்வீக அங்கீகாரத்தின் அத்தாட்சியாகவும் இருந்தன.
5. (அ) தம்முடைய ஜனங்கள்மீது யெகோவாவின் ஆசீர்வாதம் இருப்பதைக் கண்டு சாத்தான் எவ்வாறு பிரதிபலித்தான்? (ஆ) பிலிப்பியர் 1:7-க்கு இசைவாக, சாத்தானுடைய கோபத்திற்கு யெகோவாவின் ஜனங்கள் எப்படி பிரதிபலித்திருக்கிறார்கள்?
5 ராஜ்ய பிறப்புக்குப்பின் தம்முடைய மக்களுக்கு கடவுள் காட்டிய அன்பான கவனிப்பும் வழிநடத்துதலும் சாத்தானுடைய கண்ணில் படாமல் போகவில்லை. பின்வரும் உதாரணங்களை கவனியுங்கள்: 1931-ல் இச்சிறு தொகுதியான கிறிஸ்தவர்கள், வெறுமனே பைபிள் மாணாக்கர்கள் மட்டுமல்ல என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. ஏசாயா 43:10-க்கு இசைய அவர்கள் யெகோவாவின் சாட்சிகள்! பிசாசானவன் எதேச்சையாகவோ அல்லது திட்டமிட்டோ உலகமுழுவதும் இதுவரை கண்டிராத அளவுக்கு துன்புறுத்தலின் அலையை கட்டவிழ்த்துவிட்டான். மத சுதந்திரமுடைய தேசங்கள் என அறியப்பட்ட ஐக்கிய மாகாணங்கள், கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் சாட்சிகள் வணக்க சுதந்திரத்தை காத்துக்கொள்வதற்காக மீண்டும் மீண்டும் சட்டப்பூர்வமாக போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 1988-க்குள் ஐ.மா. உச்சநீதி மன்றம் யெகோவாவின் சாட்சிகளை உட்படுத்திய 71 வழக்குகளை பரிசீலித்தது. அவற்றில் மூன்றில் இரண்டு பாக வழக்குகளில் சாட்சிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது. இன்று உலகமுழுவதும் சட்டப்பூர்வ வழக்குகள் தொடர்ந்துகொண்டே இருப்பதால், முதல் நூற்றாண்டைப் போலவே ‘நற்செய்திக்காக வழக்காடி அதை நிலைநாட்ட’ வேண்டியுள்ளது.—பிலிப்பியர் 1:7, பொது மொழிபெயர்ப்பு.
6. தடைகளும் கட்டுப்பாடுகளும் யெகோவாவின் ஜனங்கள் முன்னேறுவதை தடுத்து நிறுத்தியதா? உதாரணம் கொடுங்கள்.
6 இரண்டாம் உலகப் போர் நெருங்கி வந்துகொண்டிருந்த நாட்களில், 1930-களில், சர்வாதிகார அரசாங்கங்கள் யெகோவாவின் சாட்சிகளின் வேலைக்கு தடைகளை அல்லது கட்டுப்பாடுகளை விதித்தன. அப்படி தடை விதிக்கப்பட்ட நாடுகளில் மூன்று ஜெர்மனி, ஸ்பெய்ன், ஜப்பான் ஆகும். ஆனால், 2000-வது ஆண்டில் இந்த மூன்று நாடுகளில் மட்டுமே சுமார் 5,00,000 சுறுசுறுப்பான ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள் இருந்தனர். இது 1936-ல் உலகமுழுவதிலும் இருந்த சாட்சிகளின் எண்ணிக்கையைவிட கிட்டத்தட்ட பத்து மடங்கு! ஆகவே, ஜெயங்கொள்ளும் தலைவர் இயேசு கிறிஸ்துவின்கீழ் யெகோவாவின் ஜனங்கள் முன்னேறி வருவதை தடைகளோ கட்டுப்பாடுகளோ தடுத்து நிறுத்த முடியாது என்பது தெளிவாகிறது.
7. என்ன முக்கிய சம்பவம் 1958-ல் நிகழ்ந்தது, அது முதல் என்ன குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்திருக்கிறது?
7 நியூ யார்க் நகரில், 1958-ல் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளின் சரித்திரம் காணா மிகப் பெரிய மாநாடு—தெய்வீக சித்தம் என்ற சர்வதேச மாநாடு—அவர்கள் முன்னேறிச் செல்கிறார்கள் என்பதற்கு மிகப் பெரிய அடையாளமாக இருந்தது; அந்த மாநாட்டின் உச்சநிலை எண்ணிக்கை 2,53,922. 1970-ம் ஆண்டிற்குள்ளாக கிழக்கு ஜெர்மனி என அப்போது அறியப்பட்ட நாட்டைத் தவிர, மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளிலும் அவர்களுடைய வேலை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் மிகப் பெரிய சோவியத் யூனியனிலும் அதன் வார்ஸா ஒப்பந்தத்தின் கீழிருந்த நேசநாடுகளிலும் இருந்த சாட்சிகள் இன்னும் தடையுத்தரவின்கீழ் இருந்தனர். முன்பு கம்யூனிஸ நாடுகளாக இருந்த இந்த நாடுகளில் இப்போது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான சாட்சிகள் இருக்கிறார்கள்.
8. யெகோவாவின் ஆசீர்வாதம் அவருடைய ஜனங்கள்மீது இருந்ததன் விளைவு என்ன, 1950-ல் இதைக் குறித்து காவற்கோபுரம் என்ன சொன்னது?
8 யெகோவாவின் சாட்சிகளுடைய இந்த அதிகரிப்பிற்கு காரணம் அவர்கள் தொடர்ந்து “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய [தேவனுடைய] நீதியையும்” தேடியிருப்பதே. (மத்தேயு 6:33) “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்: கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்” என்ற ஏசாயா தீர்க்கதரிசனம் சொல்லர்த்தமாக ஏற்கெனவே நிறைவேறிவிட்டது. (ஏசாயா 60:22) ஆனால் அந்த அதிகரிப்பு அத்துடன் நின்றுவிடவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டுமே, ராஜ்யத்தை உற்சாகத்தோடு ஆதரிப்போரின் எண்ணிக்கை 17,50,000 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் மனமுவந்து இந்த வகுப்பாரின் பாகமாகி இருக்கின்றனர். இவர்களைப் பற்றி 1950 ஆங்கில காவற்கோபுரம் இவ்வாறு குறிப்பிட்டது: “கடவுள் இப்போது ஒரு புதிய உலக சமுதாயத்தை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். . . . இவர்கள் அர்மகெதோனை தப்பிப்பிழைத்து, . . . ‘புதிய பூமியில்’ முதலாவது அடியெடுத்து வைப்பர். . . . இவர்களே தேவராஜ்ய முறைப்படி ஒழுங்கமைக்கப்பட்டவர்கள், அமைப்பின் ஏற்பாடுகளை நன்கு அறிந்தவர்கள்.” அந்தக் கட்டுரை இவ்வாறு முடித்தது: “நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு புதிய உலக சமுதாயமாக சீராக முன்னேறுவோம்!”
9. பல வருடங்களாக யெகோவாவின் சாட்சிகள் கற்றிருக்கும் காரியங்கள் எவ்வாறு பயனுள்ளதாக இருந்திருக்கின்றன?
9 அதேசமயத்தில், காரியங்களை சுமூகமாகவும் திறம்படவும் எப்படி செய்ய வேண்டும் என்ற அறிவையும், எண்ணிக்கையில் அதிகரித்துவரும் இந்த புதிய உலக சமுதாயம் பெற்றுள்ளது. இந்த அறிவு இன்றும், ஒருவேளை அர்மகெதோனுக்குப் பின்னும் புதுப்பிக்கும் வேலைக்கு பெரிதும் துணைபுரியும். உதாரணமாக, பெரிய பெரிய மாநாடுகளை ஒழுங்கமைப்பது, விரைந்து சென்று நிவாரண உதவி அளிப்பது, கட்டிடங்களை விரைவில் கட்டி முடிப்பது போன்ற காரியங்களை சாட்சிகள் நன்கு அறிந்துள்ளனர். யெகோவாவின் சாட்சிகளை அநேகர் மெச்சுவதற்கும் மதிப்பதற்கும் இவையே காரணமாக இருந்திருக்கின்றன.
தப்பெண்ணங்களை சரிசெய்தல்
10, 11. யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய தப்பெண்ணங்கள் எவ்வாறு சரிசெய்யப்பட்டுள்ளன என்பதை விளக்கவும்.
10 இருந்தாலும், யெகோவாவின் சாட்சிகளை சமூகத்தோடு ஒட்டாதவர்கள் என பழிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இரத்தமேற்றுதல், நடுநிலைமை, புகைபிடித்தல், மற்றும் ஒழுக்க சம்பந்தப்பட்ட விஷயங்களில் சாட்சிகள் எடுக்கும் பைபிள் சார்ந்த நிலைநிற்கையே இதற்கு முக்கிய காரணம். ஆனால் சாட்சிகளின் கருத்துக்கள் சிந்திக்கப்பட வேண்டியவை என்பதை பொதுமக்கள் இப்போது ஒத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். உதாரணமாக, போலந்திலுள்ள ஒரு டாக்டர், யெகோவாவின் சாட்சிகளுடைய நிர்வாக அலுவலகத்திற்கு ஃபோன் செய்தார்; இரத்தமேற்றுதல் என்ற விஷயத்தைப் பற்றி அவரும் மருத்துவமனையிலுள்ள சக பணியாளர்களும் பலமணிநேரத்திற்கு விவாதித்துக் கொண்டிருந்ததாக சொன்னார். அந்த விவாதத்திற்கு காரணமே அன்று ஜன்னீக் ஸாஹாட்னீ என்ற போலிஷ் தினசரியில் வெளிவந்த கட்டுரைதான். “மருத்துவ துறையில் இரத்தம் அதிகமாக பயன்படுத்தப்படுவதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்” என அந்த டாக்டரே ஒத்துக்கொண்டார். “இதை சரிசெய்ய வேண்டும், இந்த விஷயத்தை தர்க்கத்துக்கு கொண்டுவந்திருப்பதற்காக நான் அதிக சந்தோஷப்படுகிறேன். இன்னும் அதிகமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.”
11 கடந்த வருடம் ஸ்விட்ஸர்லாந்தில் நடந்த ஒரு கூட்டத்திற்கு இஸ்ரேல், ஐக்கிய மாகாணங்கள், ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகளிலிருந்து மருத்துவ அதிகாரிகள் வந்தனர். இரத்தம் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு உதவுவதற்கென்று தயாரிக்கப்பட்ட தகவலை கலந்தாலோசித்தனர். இன்றைய பொதுவான அபிப்பிராயத்திற்கு முரணாக, இரத்தமேற்றாமல் இறந்து போனவர்களின் எண்ணிக்கையைவிட இரத்தமேற்றியதால் இறந்துபோன நோயாளிகளின் எண்ணிக்கையே அதிகம் என அந்தக் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது. இரத்தம் ஏற்றிக்கொள்ளும் நோயாளிகளைவிட சாட்சிகளாக இருக்கும் நோயாளிகளே பொதுவாக சீக்கிரத்தில் மருத்துவமனையை விட்டு வெளிவர முடிகிறது. இதனால் சிகிச்சைக்கு ஆகும் செலவும் மிச்சமாகிறது.
12. அரசியல் நடுநிலைமை விஷயத்தில் யெகோவாவின் சாட்சிகள் எடுத்த நிலைநிற்கையை உயர் அதிகாரிகள் எவ்வாறு பாராட்டியிருக்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் கொடுங்கள்.
12 இரண்டாம் உலகப் போரின் சமயத்திலும் அதற்கு முன்பும் யெகோவாவின் சாட்சிகள் நாஸியின் தாக்குதலுக்கு இலக்கானபோது, நடுநிலை வகித்ததைக் குறித்து பலரும் சாதகமான கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர். நாஸி தாக்குதலுக்கு எதிராக யெகோவாவின் சாட்சிகள் உறுதியாக நிற்கிறார்கள் என்ற ஆங்கில வீடியோவை யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டனர்; இந்த வீடியோ முதன்முறையாக நவம்பர் 6, 1996-ல் ஜெர்மனியிலுள்ள ராவன்ஸ்புரூக் சித்திரவதை முகாமில் காட்டப்பட்டது பொருத்தமாக இருந்தது, இது சாதகமான கருத்துக்களுக்கு வழிவகுத்திருக்கிறது. ஏப்ரல் 18, 1998-ல், பெர்கன்-பெல்சனில் உள்ள பேர்போன சித்திரவதை முகாமிலும் இதேவிதமாக போட்டு காட்டப்பட்டது; லோவர் சாக்சனியிலுள்ள அரசியல் கல்வி மையத்தின் இயக்குநர் டாக்டர் உல்ஃப்காங் ஷீல் அப்போது இவ்வாறு ஒத்துக்கொண்டார்: “மனதை உறுத்தும் சரித்திர உண்மைகளில் ஒன்று என்னவெனில், மற்ற கிறிஸ்தவ சர்ச்சுகளில் உள்ளவர்களைவிட யெகோவாவின் சாட்சிகளே நாஸி ஆட்சியை விடாப்பிடியாக ஏற்க மறுத்தவர்கள். . . . யெகோவாவின் சாட்சிகளுடைய போதனைகளையும் மத வைராக்கியத்தையும் குறித்து நாம் எப்படி உணர்ந்தாலும் நாஸி ஆட்சியின்போது அவர்கள் மனவுறுதியுடன் இருந்ததே மெச்சத்தக்க விஷயம்.”
13, 14. (அ) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் சார்பாக எதிர்பாரா நபரிடமிருந்து வந்த நியாயமான கருத்து என்ன? (ஆ) இன்று கடவுளுடைய மக்களின் சார்பாக தெரிவிக்கப்பட்ட சாதகமான கருத்துக்களுக்கு உதாரணம் கொடுங்கள்.
13 சர்ச்சைக்குரிய விஷயங்களின்பேரில் உயர் அதிகாரிகள் யெகோவாவின் சாட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும்போது அல்லது நீதிமன்றங்கள் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கும்போது, அவை தப்பெண்ணங்களை உடைத்து சாட்சிகளை நல்லெண்ணத்துடன் நோக்குவதற்கு வழிவகுக்கலாம். இதனால் ஒருபோதும் செவிகொடுக்க மனமில்லாதவராக இருந்தவர்களிடமும் பேசுவதற்கு அவர்களுக்கு வழி திறக்கிறது. ஆகவே, இப்படிப்பட்ட தீர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன, யெகோவாவின் சாட்சிகளும் உண்மையில் அவற்றை போற்றுகிறார்கள். முதல் நூற்றாண்டில் எருசலேமில் என்ன நடந்தது என்பதை இது நம் நினைவுக்குக் கொண்டு வருகிறது. கிறிஸ்தவர்கள் வைராக்கியமாக பிரசங்கித்ததால் யூத உயர்நீதி மன்றமாகிய நியாய சங்கம் அவர்களை கொலை செய்ய நினைத்தது; அப்போது, “சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரியாகிய” கமாலியேல் அவர்களை எச்சரித்து இவ்வாறு சொன்னார்: “இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப் போகிறதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். . . . இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்; தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள்.”—அப்போஸ்தலர் 5:33-39.
14 சமீப காலத்தில் கமாலியேலைப் போன்று உயர் அதிகாரிகளும் யெகோவாவின் சாட்சிகளுடைய மத சுதந்திரத்திற்கு சாதகமாக வெளிப்படையாய் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். உதாரணமாக, நம்பிக்கை மற்றும் மத சுதந்திரம் என்ற சர்வதேச அகடமியின் முன்னாள் தலைவர் இவ்வாறு விவாதித்தார்: “ஒரு மதத்தின் நம்பிக்கைகள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை அல்லது பாரம்பரியத்தின்படி இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அதன் உரிமைகளை நிராகரிக்கக் கூடாது.” லீப்ஸிக் பல்கலைக்கழகத்தில் மதத்தைப் பற்றிய முறைப்படியான ஆய்வு நடத்தும் ஒரு பேராசிரியர், கருத்து வேறுபாட்டுக் குழுவினர் என அழைக்கப்படுகிறவர்களை விசாரணை செய்வதற்கென ஏற்படுத்தப்பட்ட ஜெர்மன் அரசாங்க தீர்ப்பாய்வுக் குழுவிடம் இந்தப் பொருத்தமான கேள்வியைப் போட்டார்: “[ரோமன் கத்தோலிக்க சர்ச் மற்றும் லூத்தரன் சர்ச்] இந்த இரண்டு பெரிய சர்ச்சுகளை மட்டும் விட்டுவிட்டு சிறுபான்மையான மதத்தினரை மாத்திரம் ஏன் எப்போதும் விசாரணை செய்ய வேண்டும்?” இதற்கு விடை காண நாம் வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை, முன்னாள் ஜெர்மன் அதிகாரியே இவ்வாறு எழுதினார்: “அரசாங்கத்தின் இந்தத் தீர்ப்பாய்வுக் குழுவை மறைமுகமாக தூண்டிவிடுகிறவர்கள் சர்ச் தீவிரவாதிகளே என்பதில் எந்த சந்தேகமுமில்லை.”
விடுதலைக்காக யாரை நாம் எதிர்நோக்கலாம்?
15, 16. (அ) கமாலியேலின் நடவடிக்கையால் ஏன் முழுமையான பலனில்லை? (ஆ) இயேசுவின் விஷயத்தில், செல்வாக்குமிக்க மற்ற மூன்று மனிதருடைய செயல்களால் முழுமையான பலனில்லை என்று எப்படி சொல்லலாம்?
15 கடவுளுடைய ஆதரவுடன் செய்யப்படும் வேலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதையே கமாலியேலின் வார்த்தைகள் காட்டுகின்றன. நியாய சங்கத்திடம் அவர் கூறிய வார்த்தைகளால் பூர்வ கிறிஸ்தவர்கள் பயனடைந்தனர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, ஆனால் தம்முடைய சீஷர்கள் துன்புறுத்தப்படுவார்கள் என்று இயேசு சொன்ன வார்த்தைகள் உண்மை என்பதையும் அவர்கள் மறந்துவிடவில்லை. கமாலியேலின் செயலால் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற மதத் தலைவர்களின் திட்டங்கள் தோல்வியடைந்தாலும், அவர்களை அறவே துன்புறுத்தாமல் தடுக்க முடியவில்லை. ஏனென்றால் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக் குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள்.”—அப்போஸ்தலர் 5:40.
16 இயேசுவை பொந்தியு பிலாத்து விசாரணை செய்கையில் அவரிடம் எந்தக் குற்றமும் காணப்படாததால் அவரை விடுதலை செய்ய முயன்றார். ஆனால் அவரால் முடியாமல் போய்விட்டது. (யோவான் 18:38, 39; 19:4, 6, 12-16) நியாயசங்க அங்கத்தினர்களாகிய நிக்கொதேமுவும் அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும் இயேசுவுக்கு ஆதரவாக இருந்தபோதிலும், அவருக்கு விரோதமாக நியாய சங்கம் நடவடிக்கை எடுப்பதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. (லூக்கா 23:50-52; யோவான் 7:45-52; 19:38-40) யெகோவாவின் மக்களுக்கு ஆதரவாக மனிதர் செயல்படுகையில்—அதற்குரிய காரணம் எதுவாக இருந்தாலும்—அதனால் ஓரளவே விடுதலை கிடைக்கிறது. கிறிஸ்துவை பகைத்த விதமாகவே அவருடைய உண்மை சீஷர்களையும் இந்த உலகம் தொடர்ந்து பகைக்கும். முற்றிலுமான விடுதலையை யெகோவா மட்டுமே தர முடியும்.—அப்போஸ்தலர் 2:24.
17. யெகோவாவின் சாட்சிகள் எதை எதிர்பார்க்கிறார்கள், ஆனால் நற்செய்தியை தொடர்ந்து போதிக்க வேண்டும் என்ற திடதீர்மானத்தை அவர்கள் ஏன் விட்டுவிடுவதில்லை?
17 சொல்லப்போனால், யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்துதல் தொடர்ந்து இருக்கும் என்பதை எதிர்பார்க்கிறார்கள். சாத்தானிய உலகம் ஒழிந்தால்தான் துன்புறுத்துதலும் ஒழியும். எனினும், துன்புறுத்துதல் கடினமாக இருந்தாலும், ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிக்கும் வேலையை செய்து முடிப்பதிலிருந்து சாட்சிகளை இது எந்தவிதத்திலும் தடுக்காது. அவர்களுக்கு கடவுளின் துணையிருக்க, ஏன் இது நிகழ வேண்டும்? சிறந்த முன்மாதிரியாக விளங்கும் தைரியமான தலைவர் இயேசு கிறிஸ்துவை அவர்கள் நோக்குகிறார்கள்.—அப்போஸ்தலர் 5:17-21, 27-32.
18. யெகோவாவின் ஜனங்களுக்கு எந்த கடினமான காலம் இன்னும் வரவிருக்கிறது, ஆனாலும் என்ன முடிவைக் குறித்ததில் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்?
18 மெய் மதம் ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்புகளை சந்தித்திருக்கிறது. விரைவில், கோகுவின் அதாவது, பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டது முதற்கொண்டு தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கும் சாத்தானின் உச்சக்கட்ட தாக்குதலுக்கு இது ஆளாகும். ஆனால் மெய் மதம் தப்பிப்பிழைக்கும். (எசேக்கியேல் 38:14-16) சாத்தானுடைய வழிநடத்துதலுக்கு கீழுள்ள “பூலோகமெங்குமுள்ள ராஜாக்கள்” “ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்.” (வெளிப்படுத்துதல் 16:14; 17:14) ஆம், நமது அரசர் இறுதி வெற்றியை நோக்கி முன்னேறிச் செல்கிறார், வெகுவிரைவில் ‘ஜெயிப்பார்.’ ‘தேவன் நம்முடைய பட்சத்திலிருக்கிறார்’ என யெகோவாவின் வணக்கத்தார் சொல்வதை மறுப்போர் யாரும் இல்லாத காலம் விரைவில் வரவிருக்கிறது என்பதை அறிந்து அவருடன் முன்னேறிச் செல்வது என்னே ஓர் அரும்பாக்கியம்!—ரோமர் 8:31; பிலிப்பியர் 1:27, 28.
உங்களால் விளக்க முடியுமா?
• ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது முதற்கொண்டு கிறிஸ்தவ சபையை பலப்படுத்துவதற்கு யெகோவா என்ன செய்திருக்கிறார்?
• கிறிஸ்து வெற்றி பெறுவதைத் தடுக்க சாத்தான் எவ்வாறு முயன்றிருக்கிறான், அதன் விளைவு என்ன?
• கிறிஸ்தவர்களல்லாதவர்களின் சாதகமான செயலைக் குறித்ததில் என்ன சமநிலையான கருத்தை நாம் கொண்டிருக்க வேண்டும்?
• சீக்கிரத்தில் சாத்தான் என்ன செய்யப் போகிறான், அதன் முடிவு என்ன?
[பக்கம் 18-ன் படங்கள்]
யெகோவாவின் மக்கள் முன்னேறிச் செல்கிறார்கள் என்பதற்கு மாநாடுகள் சிறந்த அத்தாட்சி
[பக்கம் 20-ன் படங்கள்]
இரண்டாம் உலகப் போரின்போது சாட்சிகள் வகித்த நடுநிலைமை இப்போதும் யெகோவாவுக்கு துதிசேர்க்கிறது