துன்புறும் அநாதைகளையும் விதவைகளையும் ஆதரியுங்கள்
அன்பு என்று சொன்னால் அது என்ன விலை என கேட்கும் உலகில் நாம் வாழ்கிறோம். “கடைசி நாட்களில்” காலம் கழிக்கும் இப்படிப்பட்ட ஜனங்களை குறிப்பிட்டு அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்கள் வரும். மனிதர்கள் சுயநலவாதிகளாகவும் . . . அன்பற்றவர்களாகவும் இருப்பார்கள்.” (2 தீமோத்தேயு 3:1-3, NW) எவ்வளவு உண்மை!
பெரும்பாலானோருடைய இதயத்தில் இரக்கம் எனும் ஈரம் காய்ந்து போவதற்கு, நம்முடைய நாளில் நிலவும் ஒழுக்க சூழலும் ஒரு காரணம். பிறருடைய நலனில், ஏன் தங்கள் குடும்ப அங்கத்தினருக்கு மத்தியிலும் அக்கறை காட்டும் அன்புள்ளங்களை காண்பது அபூர்வமே.
இது, பல்வேறு சூழ்நிலைகளால் வறுமையில் வாடும் வறியவர் பலரை மிகவும் வாட்டியிருக்கிறது. போர்களாலும், இயற்கை சீற்றங்களாலும், புகலிடம் தேடி மக்கள் புறப்படுவதாலும் விதவைகள் மற்றும் அநாதைகளுடைய எண்ணிக்கை சீராக ஏறிக்கொண்டே வருகிறது. (பிரசங்கி 3:19) “போரினால் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் [பிள்ளைகள்] அநாதைகளாகியிருக்கிறார்கள் அல்லது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்” என ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல நிறுவனம் குறிப்பிடுகிறது. தனிமரங்களாக, தவிக்கவிடப்பட்டவர்களாக, விவாகரத்து செய்யப்பட்டவர்களாக வாழும் தாய்மார் பலரை நீங்களும் அறிந்திருக்கிறீர்கள். இவர்கள் யாருடைய தயவுமின்றி தாங்களாகவே அன்றாட வாழ்க்கைக்கு அயராது உழைக்கிறார்கள், குழந்தை குட்டிகளை வளர்க்கிறார்கள். போதாக்குறைக்கு சில நாடுகளில் பொருளாதார நெருக்கடி வேறு! இதனால் இப்படிப்பட்ட நாடுகளில் வாழும் குடிமக்கள் பெரும்பாலானோர் வறுமையிலும் கொடிய வறுமையில் வாடுகிறார்கள்.
இதையெல்லாம் பார்க்கையில், துயரப்படுவோருக்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? ஆதரவற்ற அநாதைகளுடைய வேதனையும் கணவனையிழந்த கைம்பெண்களுடைய வேதனையும் எப்படி தணியும்? என்றாவது இந்தப் பிரச்சினை அடியோடு ஒழிக்கப்படுமா?
பைபிள் காலங்களில் அன்பான கவனிப்பு
பைபிள் காலங்களில், விதவைகள் மற்றும் அநாதைகளுடைய சரீர தேவைகளையும் ஆன்மீக தேவைகளையும் கவனித்துக்கொள்வது எப்பொழுதும் வழிபாட்டின் இன்றியமையாத பாகமாக இருந்திருக்கிறது. இஸ்ரவேலர் தானியத்தையோ பழங்களையோ அறுவடை செய்கையில், வயலில் மீந்தவற்றை சேகரிக்கக் கூடாது. மீந்த தானியக் கதிர்களை ‘அன்னியருக்கும் அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிட’ வேண்டும். (உபாகமம் 24:19-21) “விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் [“அநாதையையும்,” NW] ஒடுக்காமல் இருப்பீர்களாக” என மோசேயின் நியாயப்பிரமாணம் குறிப்பிட்டது. (யாத்திராகமம் 22:22, 23) பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள விதவைகளும் அநாதைகளும் உண்மையிலேயே ஏழை ஜனங்கள். ஏனென்றால் கணவனும் தகப்பனும் அல்லது பெற்றோர் இருவருமே இறந்துவிட்டால், உயிரோடிருக்கும் குடும்ப அங்கத்தினர்கள் தனிமையாக விடப்படுவார்கள், வறுமையில் வாடுவார்கள். முற்பிதாவாகிய யோபு இவ்வாறு குறிப்பிட்டார்: “கதறிய ஏழைகளை நான் காப்பாற்றினேன்; தந்தை இல்லார்க்கு உதவினேன்.”—யோபு 29:12, பொது மொழிபெயர்ப்பு.
கிறிஸ்தவ சபை பிறந்திருந்த நாட்களில், ஒடுக்கப்பட்டவர்களையும் பெற்றோர்களையோ அல்லது கணவனையோ இழந்ததால் உண்மையிலேயே வறுமையில் வாடினவர்களையும் கவனித்துக்கொள்வது மெய் வணக்கத்தை பளிச்சென படம்பிடித்துக் காட்டும் அம்சமாக இருந்தது. இப்படிப்பட்டவர்களுடைய நலனில் ஆழ்ந்த அக்கறைகொண்டு சீஷன் யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.”—யாக்கோபு 1:27, பொ.மொ.
யாக்கோபு அநாதைகளையும் விதவைகளையும் குறிப்பிடுவதோடு, ஏழைகளாகவும் பரம ஏழைகளாகவும் இருந்தவர்களுக்காகவும் ஆழ்ந்த அக்கறையை காண்பித்தார். (யாக்கோபு 2:5, 6, 15, 16) அப்போஸ்தலன் பவுல் இதேபோன்ற சிந்தையை வெளிப்படுத்தினார். அவருக்கும் பர்னபாவுக்கும் பிரசங்கிக்கும் நியமிப்பு கொடுக்கப்பட்டபோது, ‘தரித்திரரை நினைத்துக்கொள்ளுங்கள்’ என்பதும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவுரைகளில் அடங்கியிருந்தது. “அப்படிச் செய்யும்படி அதற்கு முன்னமே நானும் கருத்துள்ளவனாயிருந்தேன்” என நல்மனசாட்சியோடே பவுல் சொல்ல முடிந்தது. (கலாத்தியர் 2:9, 10) கிறிஸ்தவ சபை ஸ்தாபிக்கப்பட்ட பிறகு கொஞ்ச காலத்திலேயே அதன் செயற்பாடுகளைப் பற்றிய பதிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டது: “அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.” (அப்போஸ்தலர் 4:34, 35) அநாதைகள், விதவைகள், வறியவர்கள் ஆகியோரை கவனிப்பதற்கு பூர்வ இஸ்ரவேலில் இருந்த அதே ஏற்பாடு கிறிஸ்தவ சபையிலும் செயல்படுத்தப்பட்டது.
அளிக்கப்பட்ட உதவி குறைவாக இருந்தாலும், தனிப்பட்ட சபைகளுடைய வருவாய்க்கு ஏற்றவாறு இருந்தது. பணம் வீண் செலவு செய்யப்படவில்லை, உண்மையிலேயே தேவைப்பட்டவர்களுக்கு மாத்திரமே உதவி அளிக்கப்பட்டது. எந்த கிறிஸ்தவனும் இந்த ஏற்பாட்டை சுயநலமாக பயன்படுத்திக்கொள்ளவில்லை, சபையின் மீது தேவையில்லாமல் பாரத்தை சுமத்தவுமில்லை. இது, 1 தீமோத்தேயு 5:3-16-ல் கொடுக்கப்பட்டுள்ள பவுலின் அறிவுரைகளிலிருந்து தெளிவாக தெரிகிறது. ஏழ்மையில் கஷ்டப்படுவோருக்கு அவர்களுடைய உறவினர்களால் உதவ முடியுமென்றால், இந்த உத்தரவாதத்திற்கு அவர்களே தோள்கொடுக்க வேண்டியிருந்தது. விதவைகள் உதவி பெற சில தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. இவையெல்லாம் ஏழ்மையில் கஷ்டப்படுவோரை கவனித்துக்கொள்வதற்கு யெகோவா செய்த ஞானமான ஏற்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. இருந்தபோதிலும், காண்பிக்கப்படும் இந்த தயவை யாரும் தவறாக பயன்படுத்திக் கொள்ளாதவாறு சமநிலையை காத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இது காட்டுகிறது.—2 தெசலோனிக்கேயர் 3:10-12.
இன்று விதவைகளையும் அநாதைகளையும் கவனித்தல்
கஷ்டப்படுகிறவர்கள் மீது அக்கறை காட்டி அவர்களை ஆதரிக்கும் விஷயத்தில், கடந்த காலங்களில் கடவுளுடைய ஊழியர்கள் பின்பற்றிய அதே நியமங்களே இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளிலும் பொருத்தப்படுகின்றன. சகோதர அன்பு நம்மை படம்பிடித்துக் காட்டும் முக்கிய பண்பாக இருக்கிறது, அதைத்தான் இயேசுவும் குறிப்பிட்டார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) யாரேனும் ஏழ்மையில் வாடுகிறவர்களாக இருந்தால், அல்லது இயற்கை சேதங்களால் அல்லது உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால், ஆவிக்குரிய ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் உதவுவதற்கு வழிவகை செய்ய சர்வதேச சகோதரர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். இதன் சம்பந்தமாக என்ன செய்யப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள நவீன கால அனுபவங்கள் சிலவற்றை நாம் பார்க்கலாம்.
ஒன்றரை வயதில் தன்னுடைய தாயை இழந்த பெட்ரோவுக்கு துளிகூட அவரை பற்றிய நினைவில்லை. பெட்ரோவுக்கு ஐந்து வயதானபோது, அவருடைய தந்தையும் காலமானார். ஆகவே, பெட்ரோ தன்னுடைய சகோதரர்களுடன் தனியாக விடப்பட்டார். ஏற்கெனவே அவருடைய அப்பாவை யெகோவாவின் சாட்சிகள் சந்தித்து வந்தார்கள், அதனால் பெட்ரோவும் அவருடைய அண்ணன்மார்கள் அனைவரும் வீட்டு பைபிள் படிப்பு படித்துக்கொண்டிருந்தார்கள்.
பெட்ரோ இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அடுத்த வாரமே நாங்கள் சபை கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்தோம். நாங்கள் சகோதரர்களோடு கூட்டுறவு கொண்டபோது, எங்களிடம் அவர்கள் காட்டிய அன்பை எங்களால் உணர முடிந்தது. சபை எனக்கு ஒரு புகலிடமாக இருந்தது, ஏனென்றால் என்னுடைய பெற்றோர்களை போலவே, அந்த சகோதர சகோதரிகள் என்னிடம் அன்பையும் பாசத்தையும் பொழிந்தார்கள்.” கிறிஸ்தவ மூப்பர் ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு இவரை அழைத்ததை பெட்ரோ நினைவுகூருகிறார். அங்கே அந்தக் குடும்பத்தாருடன் பெட்ரோ உரையாடினார், ஓய்வாக நேரத்தை கழித்தார். “இவையெல்லாம் நான் நெஞ்சார நேசிக்கும் நினைவுகள்” என பெட்ரோ சொல்கிறார்; இவர் தன்னுடைய நம்பிக்கையைக் குறித்து 11 வயதில் பிரசங்கிக்க ஆரம்பித்து 15 வயதில் முழுக்காட்டுதல் பெற்றார். இதைப் போலவே, சபையிலுள்ளவர்களுடைய உதவியால் அவருடைய அண்ணன்மார்களும் ஆவிக்குரிய விஷயத்தில் அதிக முன்னேற்றம் செய்தார்கள்.
தாவீது என்பவருடைய விஷயத்தையும் கவனியுங்கள். இவருடைய பெற்றோர்கள் பிரிந்துவிட்ட சமயத்தில் இரட்டைப் பிள்ளைகளான இவரும் இவருடைய சகோதரியும் கைவிடப்பட்டார்கள். தாத்தா பாட்டியும் ஆண்ட்டியும் இவர்களை வளர்த்தார்கள். “நாங்கள் வளர்ந்து பெரியவர்களானபோது எங்களுடைய சூழ்நிலையை புரிந்துகொண்டோம், அப்போது பாதுகாப்பின்மையும் கவலையும் எங்களை வாட்டியது. ஆதரவுக்கு ஏதோ எங்களுக்குத் தேவைப்பட்டது. என்னுடைய ஆண்ட்டி யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரானார், இதனால் எங்களுக்கும் பைபிள் சத்தியத்தைப் புகட்டினார். சகோதரர்கள் எங்களுடன் பாசத்தோடும் நட்போடும் பழகினார்கள். அவர்கள் எங்களோடு அதிக பிரியமாக இருந்தார்கள், இலக்குகளை அடையவும் யெகோவாவுக்காக தொடர்ந்து சேவை செய்யவும் எங்களை உற்சாகப்படுத்தினார்கள். எனக்கு சுமார் 10 வயதாக இருந்தபோது, வெளி ஊழியத்தில் கலந்துகொள்வதற்கு உதவி ஊழியர் ஒருவர் என்னை அழைத்துச் செல்வார். மாநாடுகளுக்குச் சென்றபோது இன்னொரு சகோதரர் என்னுடைய செலவுகளை கவனித்துக்கொண்டார். ராஜ்ய மன்றத்தில் நன்கொடை போடுவதற்குக்கூட ஒருவர் எனக்கு உதவி செய்தார்.”
டேவிட் 17 வயதில் முழுக்காட்டுதல் பெற்றார், பிற்பாடு மெக்ஸிகோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் சேவை செய்ய ஆரம்பித்தார். இப்பொழுதுகூட அவர் இவ்வாறு ஒத்துக்கொள்கிறார்: “என்னுடைய படிப்புக்கு நிறைய மூப்பர்கள் உதவி செய்தார்கள், நல்ல அறிவுரைகளையும் கொடுத்தார்கள். இந்த முறையில் என்னுடைய பாதுகாப்பற்ற உணர்வையும் தனிமை உணர்வையும் சமாளித்து வருகிறேன்.”
மெக்ஸிகோவில் உதவி தேவைப்படுகிற பல விதவைகள் இருக்கிறார்கள், இங்குள்ள சபையில் இருக்கும் ஆபேல் என்ற மூப்பர் இவ்வாறு சொல்கிறார்: “விதவைகளுக்கு மிக முக்கியமாக தேவைப்படுவது உணர்ச்சிப்பூர்வ ஆதரவு என்பதை நன்றாக புரிந்துகொண்டேன். சிலசமயங்களில் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகிறார்கள்; தனிமையாக உணருகிறார்கள். ஆகவே, அவர்களுக்கு மிக ஆதரவாக, செவிகொடுத்துக் கேட்பவராக இருப்பது முக்கியம். நாங்கள் [சபை மூப்பர்கள்] அவர்களை அடிக்கடி சென்று பார்க்கிறோம். இப்படிப்பட்டவர்களுடைய பிரச்சினைகளை கவனிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்வது முக்கியம். ஆவிக்குரிய விதத்தில் ஆறுதலடைய இது அவர்களுக்கு உதவுகிறது.” ஆனால் பொருளாதார உதவியும் சில சந்தர்ப்பங்களில் தேவைப்படுகிறது. “விதவையாக இருக்கும் ஒரு சகோதரிக்கு நாங்கள் இப்பொழுது ஒரு வீடு கட்டிக்கொண்டிருக்கிறோம்” என ஆபேல் கொஞ்ச நாட்களுக்கு முன்பு குறிப்பிட்டார். “சனிக்கிழமைகளிலும் வார நாட்களில் பிற்பகல் வேளைகளிலும் சிலசமயங்களில் அவர்களுடைய வீட்டில் வேலை செய்கிறோம்.”
அநாதைகளுக்கும் விதவைகளுக்கும் உதவியளிப்பதில் தன்னுடைய அனுபவத்தைப் பற்றி மற்றொரு சபை மூப்பர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “விதவைகளைக் காட்டிலும் அநாதைகளுக்கு கிறிஸ்தவ அன்பு மிக அதிகம் தேவை என நான் நினைக்கிறேன். அப்பா அம்மா ஆகிய இருவரையும் கொண்ட பிள்ளைகளையும் பருவ வயதினரையும்விட இவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணரும் வாய்ப்பிருப்பதை பெரும்பாலும் நான் கவனித்திருக்கிறேன். அவர்களுக்கு சகோதர அன்பு அதிகம் தேவைப்படுகிறது. கூட்டங்களுக்குப் பிறகு அவர்களை சந்தித்து சுகநலம் விசாரிப்பது நல்லது. மணமான சகோதரர் ஒருவர் இருக்கிறார், இவர் சிறுபையனாக இருந்தபோதே அநாதையானவர். கூட்டங்களில் அவரை நான் எப்பொழுதும் அன்போடு வரவேற்பேன், என்னை பார்க்கும்போது அப்படியே கட்டிப்பிடித்துக் கொள்வார். இது உண்மையான சகோதர அன்பின் பிணைப்பை பலப்படுத்துகிறது.”
யெகோவா ‘ஏழைகளை விடுவிப்பார்’
யெகோவாவில் நம்பிக்கையே விதவைகள் மற்றும் அநாதைகளுடைய சூழ்நிலையை சமாளிப்பதற்கு அடிப்படை தேவையாக இருக்கிறது. அவரைப் பற்றி இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது: “ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்; அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்.” (சங்கீதம் 146:9, பொ.மொ.) இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றிலுமான பரிகாரம் இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் கடவுளுடைய ராஜ்யத்தின் மூலமே வரும். மேசியாவால் ஆளப்படும் அந்த ஆட்சியை தீர்க்கதரிசனமாக விவரிக்கையில், சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.”—சங்கீதம் 72:12, 13, பொ.மொ.
இந்தத் தற்போதைய உலக ஒழுங்குமுறையின் முடிவு நெருங்கி வருகிறபடியால், கிறிஸ்தவர்கள் பொதுவாக எதிர்ப்படும் பிரச்சினைகளும் நிச்சயமாகவே அதிகரிக்கும். (மத்தேயு 24:9-13) தினமும் கிறிஸ்தவர்கள் ஒருவரிலொருவர் அதிக அக்கறை காட்டுவதும் ‘ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுவதும்’ அவசியம். (1 பேதுரு 4:7-10) கிறிஸ்தவ ஆண்கள், முக்கியமாக மூப்பர்கள், அநாதைகளிடம் அதிக அக்கறையும் இரக்கமும் காண்பிக்க வேண்டும். சபையிலுள்ள முதிர்ச்சிவாய்ந்த பெண்கள், விதவைகளுக்கு அதிக ஆதரவாகவும் ஆறுதலின் ஊற்றாகவும் இருக்கலாம். (தீத்து 2:3-5) சொல்லப்போனால், மற்றவர்கள் துன்பப்படுகையில் அவர்களிடம் அக்கறை காட்டுவதன் மூலம் எல்லாருமே உதவி செய்யலாம்.
மெய் கிறிஸ்தவர்கள் ‘தங்களுடைய சகோதரருக்கு குறைச்சலுண்டென்று காணும்போது’ ‘தங்களுடைய இருதயத்தை அவர்களுக்கு அடைத்துக்கொள்வதில்லை.’ அப்போஸ்தலன் யோவானின் புத்திமதியை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்: “என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.” (1 யோவான் 3:17, 18) ஆகவே, ‘துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்து’ வருவோமாக.—யாக்கோபு 1:27, பொ.மொ.
[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]
“வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.” 1 யோவான் 3:18
[பக்கம் 10-ன் படங்கள்]
மெய் கிறிஸ்தவர்கள் அநாதைகளையும் விதவைகளையும் பொருளாதார ரீதியிலும் ஆவிக்குரிய ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் கவனித்துக்கொள்கிறார்கள்