எதிரும்புதிருமான மனப்பான்மைகளை வளர்த்துக்கொண்ட சகோதரர்கள்
பெற்றோரின் தீர்மானங்கள் பிள்ளைகளை நிச்சயம் பாதிக்கும். அது ஏதேன் தோட்டத்திலும் சரி இன்றும் சரி உண்மையே. ஆதாம், ஏவாளின் கலகத்தனம் மனிதவர்க்கம் முழுவதையும் பெருமளவு பாதித்தது. (ஆதியாகமம் 2:15, 16; 3:1-6; ரோமர் 5:12) இருந்தாலும், நாம் விரும்பினால் சிருஷ்டிகரோடு நல்லுறவை வளர்த்துக்கொள்ள நம் ஒவ்வொருவருக்குமே வாய்ப்புள்ளது. மனித சரித்திரத்தில் முதல் சகோதரர்களாக இருந்த காயீன், ஆபேல் பற்றிய பதிவு இதை நிரூபிக்கிறது.
ஏதேனிலிருந்து துரத்தப்பட்ட பிறகு ஆதாம், ஏவாளோடு கடவுள் பேசியதாக பைபிளில் எந்த பதிவும் இல்லை. இருந்தாலும் யெகோவா அவர்களுடைய மகன்களோடு பேசினார். நடந்த சம்பவங்களை தங்கள் பெற்றோர் கூற காயீனும் ஆபேலும் கேட்டிருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. “ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல் செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும்” அவர்கள் பார்த்தனர். (ஆதியாகமம் 3:24) வியர்வையும் வருத்தமுமே வாழ்க்கையில் மிஞ்சும் என கூறிய கடவுளின் வார்த்தை அப்படியே நிஜமானதையும் இவர்கள் கண்டனர்.—ஆதியாகமம் 3:16, 19.
“உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என யெகோவா சர்ப்பத்திடம் கூறியதை காயீனும் ஆபேலும் அறிந்திருப்பர். (ஆதியாகமம் 3:15) யெகோவாவைப் பற்றி அவர்கள் அறிந்திருந்தவை அவரோடு ஏற்கத்தக்க உறவை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவும்.
யெகோவாவின் தீர்க்கதரிசனத்தையும் அன்புள்ள கொடையாளராக அவருடைய குணங்களையும் பற்றி தியானிப்பது அவருடைய அங்கீகாரத்தை பெறும் ஆவலை காயீன், ஆபேலுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அந்த ஆவலை அவர்கள் எந்தளவுக்கு வளர்த்துக்கொள்வார்கள்? கடவுளை வணங்க வேண்டும் என்ற உள்ளான விருப்பத்திற்கு இசைவாக நடந்து, அவர்மீது விசுவாசம் வைக்குமளவிற்கு தங்கள் ஆவிக்குரிய தன்மையை வளர்த்துக்கொள்வார்களா?—மத்தேயு 5:3.
சகோதரர்களின் காணிக்கைகள்
காலப்போக்கில் காயீனும், ஆபேலும் கடவுளுக்கு காணிக்கைகள் செலுத்தினர். காயீன் நிலத்தின் கனிகளையும் ஆபேல் தன் மந்தையின் தலையீற்றுகளையும் காணிக்கையாக கொண்டு வந்தனர். (ஆதியாகமம் 4:3, 4) அப்போது அவர்கள் இருவருக்கும் ஏறக்குறைய 100 வயது இருந்திருக்கும்; ஏனெனில் மகன் சேத் பிறந்தபோது ஆதாமுக்கு 130 வயது.—ஆதியாகமம் 4:25; 5:3.
காயீனும், ஆபேலும் தங்கள் பாவ நிலையை உணர்ந்து, கடவுளுடைய தயவைப் பெற விரும்பியதையே அவர்களுடைய காணிக்கைகள் காண்பித்தன. சர்ப்பத்தையும் ஸ்திரீயின் வித்துவையும் குறித்த யெகோவாவின் வாக்குறுதியைப் பற்றி அவர்கள் கொஞ்சமாவது சிந்தித்து பார்த்திருக்க வேண்டும். யெகோவாவோடு நல்லுறவை வளர்த்துக்கொள்ள காயீனும் ஆபேலும் எவ்வளவு நேரமும் முயற்சியும் எடுத்தனர் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அவர்களுடைய காணிக்கைகளுக்கு கடவுள் பிரதிபலித்த விதம், அவர்கள் இருவருடைய உள்ளான எண்ணங்களையும் படம்பிடித்து காட்டுகிறது.
காயீன் பிறந்தபோது, “கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்” என ஏவாள் கூறியதால் சர்ப்பத்தை அழிக்கப்போகும் அந்த ‘வித்து’ காயீனே என அவள் நினைத்திருப்பாள் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். (ஆதியாகமம் 4:1) ஒருவேளை காயீனும் இவ்வாறு நினைத்திருந்தால் அது முழுக்க முழுக்க தவறானதே. மறுபட்சத்தில், ஆபேல் விசுவாசத்தோடு காணிக்கை செலுத்தினார். ஆகவே, “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்.”—எபிரெயர் 11:4.
ஆபேலுக்கு ஆவிக்குரிய பகுத்தறிவு இருந்தது, காயீனுக்கோ அது இல்லை. ஆனால் இதுமட்டுமே இந்த சகோதரர்கள் மத்தியிலிருந்த வித்தியாசம் அல்ல. அவர்களுடைய மனப்பான்மைகளிலும் வித்தியாசம் இருந்தது. ஆகவே, “ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை.” காயீன் தன் காணிக்கைக்கு அதிக கவனம் செலுத்தாமல் கடமைக்காக மட்டுமே அதை செலுத்தியிருக்கலாம். ஆனால் மேலோட்டமான வணக்கத்தை கடவுள் அங்கீகரிக்கவில்லை. காயீன் துன்மார்க்க இருதயத்தை வளர்த்துக்கொண்டான், அவனுக்கு தவறான உள்நோக்கங்கள் இருப்பதை யெகோவா கண்டுணர்ந்தார். அவனுடைய காணிக்கை ஒதுக்கப்பட்டபோது காயீன் நடந்துகொண்ட விதம் அவனுடைய சுயரூபத்தை வெளிப்படுத்தியது. தன்னைத் திருத்திக்கொள்வதற்கு பதிலாக, “காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.” (ஆதியாகமம் 4:5) அவன் செயல்பட்ட விதம் அவனது கெட்ட எண்ணங்களையும் உள்நோக்கங்களையும் வெளிப்படுத்தியது.
எச்சரிப்பும் பிரதிபலிப்பும்
காயீனுடைய மனப்பான்மையை அறிந்த கடவுள் அவனுக்கு இவ்வாறு ஆலோசனை கூறினார்: “நீ ஏன் கடுஞ்சினம் கொண்டாய், உன் முகம் வாடிப்போனது ஏன்? நீ நன்மைசெய்ய முற்பட்டால் உனக்கு மேன்மை அல்லவா? நீ நன்மைசெய்ய முற்படவில்லை என்றால் பாவம் வாசலில் வந்து பதுங்கி நின்றுகொண்டிருக்கிறது, அதன் தீவிர ஆசை உன் மேல் இருக்கும்; நீயோ, உன்னுடைய பங்கில், அதைக் கட்டுப்படுத்தி அடக்கிக் கொள்வாயோ?”—ஆதியாகமம் 4:6, 7, NW.
இதில் நாம் கற்றுக்கொள்வதற்கு ஒரு பாடம் உள்ளது. உண்மையில், நம்மை விழுங்குவதற்காக பாவம் நம் வாசற்படியில் பதுங்கியிருக்கிறது. ஆனாலும், தெரிவு செய்யும் சுதந்திரத்தை கடவுள் நமக்கு கொடுத்திருக்கிறார், சரியானதை செய்ய நாம் தெரிவு செய்யலாம். ‘நன்மை செய்யும்படி’ யெகோவா காயீனுக்கு அழைப்பு கொடுத்தார், ஆனால் மாறும்படி அவனை வற்புறுத்தவில்லை. காயீனே தனது வழியை தேர்ந்தெடுத்தான்.
ஏவப்பட்ட பதிவு இவ்வாறு தொடர்கிறது: “காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலை செய்தான்.” (ஆதியாகமம் 4:8) இவ்வாறு காயீன் கீழ்ப்படியாத, ஈவிரக்கமற்ற கொலைகாரன் ஆனான். “உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே” என யெகோவா கேட்டபோது காயீன் துளிகூட வருத்தப்படவில்லை. மாறாக, “நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ” என்று இரக்கமே இல்லாமல், திமிராக பதிலளித்தான். (ஆதியாகமம் 4:9) அந்த பச்சை பொய்யும் பொறுப்பை தட்டிக்கழித்ததும் காயீனின் கொடூரத்தன்மையை வெளிப்படுத்தின.
யெகோவா காயீனை சபித்து ஏதேனின் சுற்றுப்புறங்களில் இராதபடி அவனை துரத்திவிட்டார். ஏற்கெனவே நிலத்தின் மீதிருந்த சாபம் காயீன் விஷயத்தில் இன்னும் அதிக கடுமையாக ஆகியிருக்கும், அவன் விதைத்தாலும் பூமி விளைச்சலை தராது. அவன் பூமியில் நிலையற்று, நாடோடிபோல் அலைகிறவனாய் இருப்பான். தன் சகோதரனுடைய கொலைக்காக பழிவாங்கப்படுவானோ என்ற பயத்தால்தான் தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு கடுமையானது என காயீன் முறையிட்டான், ஆனால் அவன் உண்மையில் மனந்திரும்பவில்லை. யெகோவா காயீனுக்காக ஒரு “அடையாளத்தை” ஏற்படுத்தினார்; மற்றவர்கள் அறிந்து கடைப்பிடித்த பயபக்தியூட்டும் ஒரு கட்டளையாக அது இருந்திருக்கலாம். பழிவாங்கும் எண்ணத்தில் அவன் கொல்லப்படுவதிலிருந்து அது அவனைப் பாதுகாத்தது.—ஆதியாகமம் 4:10-15.
அப்போது “காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.” (ஆதியாகமம் 4:16) தன் சகோதரிகளில் அல்லது உடன்பிறந்தாரின் மகள்களில் ஒருத்தியை மனைவியாக்கிக் கொண்டு, ஒரு நகரத்தை கட்டி அதற்கு தன் மூத்த மகனான ஏனோக்குவின் பெயரை வைத்தான். காயீனின் வழிவந்த லாமேக்கு, தேவபக்தியற்ற தன் முற்பிதாவைப் போன்றே கொடூரமானவனாக இருந்தான். ஆனால், நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்தில் காயீனின் வம்சம் சுவடு தெரியாமல் அழிக்கப்பட்டது.—ஆதியாகமம் 4:17-24.
நமக்கு பாடங்கள்
காயீன், ஆபேல் பற்றிய பதிவிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். “பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போ[ல்]” இல்லாமல் ஒருவரிலொருவர் அன்புகூரும்படி அப்போஸ்தலன் யோவான் கிறிஸ்தவர்களை அறிவுறுத்துகிறார். காயீனின் ‘கிரியைகள் பொல்லாதவைகளும், அவன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்தன.’ “தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்” என்றும் யோவான் கூறுகிறார். உடன் கிறிஸ்தவர்களை எவ்வாறு நடத்துகிறோம் என்பது கடவுளோடு உள்ள நம் உறவையும் நம் எதிர்கால வாய்ப்புகளையும் பாதிக்கும். உடன் வணக்கத்தாரில் ஒருவரை வெறுக்கும் அதே சமயத்தில் கடவுளுடைய அங்கீகாரத்தையும் நம்மால் பெற முடியாது.—1 யோவான் 3:11-15; 4:20.
காயீனும் ஆபேலும் ஒரேவிதமாகத்தான் வளர்க்கப்பட்டிருப்பார்கள், ஆனால் காயீனுக்கு கடவுள்மீது விசுவாசம் இல்லை. உண்மையில் அவன், முதல் ‘மனுஷ கொலைபாதகனும் பொய்க்கு பிதாவுமான’ பிசாசின் மனப்பான்மையை வெளிப்படுத்தினான். (யோவான் 8:44) நம் அனைவருக்குமே தெரிவு செய்யும் வாய்ப்புள்ளது, பாவம் செய்ய தெரிவு செய்வோர் கடவுளிடமிருந்து தங்களை விலக்கிக் கொள்கின்றனர், மனந்திரும்பாதவர்களை யெகோவா நியாயந்தீர்க்கிறார் என்பதை காயீனின் வாழ்க்கைமுறை காண்பிக்கிறது.
மறுபட்சத்தில், ஆபேல் யெகோவாமீது விசுவாசம் வைத்தார். “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்து தேவனே சாட்சி கொடுத்தார்.” ஆபேல் பேசிய ஒரு வார்த்தைகூட வேதாகமத்தில் இல்லையென்றாலும் முன்மாதிரியாக விளங்கும் அவருடைய விசுவாசத்தினால் அவர் “இன்னும் பேசுகிறா[ர்].”—எபிரெயர் 11:4.
உத்தமத்தன்மையை காத்துக்கொண்டவர்களின் நீண்ட பட்டியலில் ஆபேலுக்கே முதலிடம். ‘பூமியிலிருந்து யெகோவாவை நோக்கி கூப்பிட்ட’ அவருடைய இரத்தம் மறக்கப்படவில்லை. (ஆதியாகமம் 4:10; லூக்கா 11:48-51) ஆபேலைப் போல விசுவாசத்தை வெளிக்காட்டினால் நாமும் யெகோவாவோடு ஓர் அருமையான, நிரந்தர உறவை அனுபவித்து மகிழலாம்.
[பக்கம் 22-ன் பெட்டி]
விவசாயியும் மேய்ப்பனும்
கடவுள் ஆரம்பத்தில் ஆதாமுக்கு கொடுத்த பொறுப்புகளில் பயிர் செய்வதும் விலங்குகளை கவனித்துக்கொள்வதும் அடங்கும். (ஆதியாகமம் 1:28; 2:15; 3:23) அவனுடைய மகனான காயீன் விவசாயி ஆனான், ஆபேல் மேய்ப்பன் ஆனான். (ஆதியாகமம் 4:2) ஆனால், ஜலப்பிரளயத்திற்கு முன்பு வரை மனிதர்கள் பழங்களையும் காய்கறிகளையும் மட்டுமே சாப்பிட்டு வந்ததால் ஆடு வளர்க்க வேண்டிய தேவை என்ன?—ஆதியாகமம் 1:29; 9:3, 4.
மனிதர்களின் பராமரிப்பில்தான் ஆடுகள் செழித்து வளரும். மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே மனிதர்கள் இந்த வீட்டு விலங்குகளை வளர்த்து வந்தனர் என்பதை ஆபேலின் தொழில் நிரூபிக்கிறது. ஜலப்பிரளயத்திற்கு முன்பு வாழ்ந்தவர்கள் விலங்குகளின் பாலை உணவாக உபயோகித்தார்களா இல்லையா என வேதாகமம் கூறுவதில்லை, ஆனால் சைவ உணவு சாப்பிடுபவர்கள்கூட ஆட்டு ரோமத்தை உபயோகிக்கலாமே. ஆடுகள் இறக்கையில் அவற்றின் தோல்களும் அநேக விதங்களில் பயன்படுகின்றன. உதாரணமாக, ஆதாம் ஏவாளுக்கு யெகோவா நீண்ட “தோல் உடைகளை” செய்து கொடுத்தார்.—ஆதியாகமம் 3:21.
எப்படியிருந்தாலும், காயீனும் ஆபேலும் ஆரம்பத்தில் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்தனர் என நம்புவதற்கு நல்ல காரணம் இருப்பதாக தோன்றுகிறது. உண்ணவும், உடுத்தவும் குடும்பத்தாருக்கு தேவைப்பட்டதை அவர்கள் தயாரித்தனர்.
[பக்கம் 23-ன் படம்]
காயீனின் ‘கிரியைகள் பொல்லாதவைகளும், அவன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவை களுமாயிருந்தன’