நிக்கொதேமுவிடமிருந்து ஒரு பாடம் கற்றுக்கொள்ளுங்கள்
“ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தான் சொந்தம் கைவிட்டு, தன் வாதனையின் கழுமரத்தை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னை தொடர்ந்து பின்பற்றக்கடவன்.” (லூக்கா 9:23, NW) தாழ்மை குணம் படைத்த மீனவர்கள் சிலரும், மக்களால் வெறுக்கப்பட்ட வரிவசூலிப்பவர் ஒருவரும் உடனடியாக இந்த அழைப்பை ஏற்றனர். அவர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்ற ஆரம்பித்தனர்.—மத்தேயு 4:18-22; லூக்கா 5:27, 28.
இயேசுவின் அழைப்பு இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அநேகர் இந்த அழைப்பை ஏற்றிருக்கின்றனர். ஆனால் யெகோவாவின் சாட்சிகளிடம் மகிழ்ச்சியோடு பைபிளை படிக்கும் சிலர் ‘தங்களைத் தாங்களே சொந்தம் கைவிட்டு வாதனையின் கழுமரத்தை சுமப்பதற்குத்’ தயங்குகின்றனர். இயேசுவின் சீஷராயிருப்பதால் வரும் பொறுப்பையும் கிடைக்கும் அருமையான சிலாக்கியத்தையும் ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் இருக்கின்றனர்.
இயேசுவின் அழைப்பை ஏற்று யெகோவா தேவனுக்கு தங்களை ஒப்புக்கொடுப்பதிலிருந்து சிலர் ஏன் பின்வாங்குகின்றனர்? யூத, கிறிஸ்தவ மதத்தினரைப் போல் ஒரே தெய்வத்தை வழிபடும் பழக்கத்தில் வளர்க்கப்படாதவர்களுக்கு தனிப்பட்ட, சர்வ வல்லமையுள்ள ஒரே படைப்பாளர் இருப்பதை முழுமையாக புரிந்துகொள்வதற்கு சில காலமெடுக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால் கடவுள் உண்மையாகவே இருக்கிறார் என்பதை உறுதியாக நம்ப ஆரம்பித்த பின்னும் சிலர் இயேசுவின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதற்கு சாக்குப்போக்கு சொல்கின்றனர். யெகோவாவின் சாட்சிகளாக மாறிவிட்டால் உறவினர்களும் நண்பர்களும் என்ன சொல்வார்களோ என்று அவர்கள் பயப்படலாம். வேறுசிலரோ நாம் வாழும் காலத்தின் அவசரத்தன்மையை உணராமல் பொன்னையும் புகழையும் தேடிச் சென்றுவிடுகின்றனர். (மத்தேயு 24:36-42; 1 தீமோத்தேயு 6:9, 10) காரணம் எதுவாக இருந்தாலும், இயேசுவை பின்பற்றும் தீர்மானம் எடுப்பதை ஒருவர் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தால், இயேசுவின் நாளில் வாழ்ந்து வந்த பணக்கார யூத அதிபதியான நிக்கொதேமுவிடமிருந்து கற்றுக்கொள்ள ஒரு பாடம் இருக்கிறது.
அருமையான வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன
இயேசு தமது பூமிக்குரிய ஊழியத்தை ஆரம்பித்து சுமார் ஆறு மாதங்களே ஆகியிருந்தன. அந்தச் சமயத்தில்தான், இயேசு ‘தேவனிடத்திலிருந்து வந்த போதகர்’ என்பதை நிக்கொதேமு புரிந்துகொண்டார். பொ.ச. 30-ல் வந்த பஸ்காவின்போது எருசலேமில் இயேசு நடப்பித்த அற்புதங்களால் மனம் கவரப்பட்டு இரவிலே இயேசுவை பார்க்க வந்தார். போதகராகிய இயேசுவை தான் விசுவாசிப்பதாக ஒப்புக்கொண்டு அவரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளவே வந்தார். அப்போது, தேவனுடைய ராஜ்யத்தில் ஒருவர் பிரவேசிப்பதற்கு ‘மறுபடியும் பிறப்பது’ அவசியம் என்ற ஒரு ஆழமான சத்தியத்தை நிக்கொதேமுவிடம் இயேசு கூறினார். அதுமட்டுமின்றி, “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்றும் இந்த சந்தர்ப்பத்தில் இயேசு கூறினார்.—யோவான் 3:1-16.
நிக்கொதேமுவுக்கு எப்பேர்ப்பட்ட மகத்தான எதிர்பார்ப்பு இருந்தது! இயேசுவின் நெருங்கிய தோழராகும் வாய்ப்பு அவருக்கு இருந்தது, இயேசுவுடைய பூமிக்குரிய வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை கண்ணார காணும் வாய்ப்பும் இருந்தது. யூதர்களின் அதிபதியாகவும் இஸ்ரவேலின் போதகனாகவும் இருந்தபடியால் கடவுளுடைய வார்த்தையை அவர் நன்கு அறிந்திருந்தார். இயேசுவை கடவுள் அனுப்பிய போதகராக அவர் அடையாளம் கண்டுகொண்டதிலிருந்து அவருக்கு கூர்மையான உட்பார்வையும் இருந்தது என்பது தெரிகிறது. ஆன்மீக காரியங்களில் நிக்கொதேமுவுக்கு அக்கறை இருந்தது, அவர் மிகுந்த பணிவுள்ளவராக இருந்தார். யூதர்களின் உச்ச நீதிமன்ற உறுப்பினராக இருந்த அவருக்கு, ஓர் எளிய தச்சனுடைய மகனை கடவுளால் அனுப்பப்பட்டவராக ஏற்றுக்கொள்வது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்! இந்த எல்லா குணங்களுமே ஒருவர் இயேசுவின் சீஷராவதற்கு மிகவும் மதிப்புள்ளவையாகும்.
நாசரேத்திலிருந்து வந்திருந்த இயேசுவிடம் நிக்கொதேமுவுக்கு இருந்த ஆர்வம் அதன் பிறகும் குறைந்ததாக தெரியவில்லை. இரண்டரை ஆண்டுகளுக்குப்பின், கூடாரப் பண்டிகையின்போது ஆலோசனை சங்க கூட்டத்திற்கு நிக்கொதேமு வந்திருந்தார். அந்தச் சமயத்தில் நிக்கொதேமு இன்னும் “அவர்களிலொருவனா”கத்தான் இருந்தார். பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் இயேசுவை கைதுசெய்ய அதிகாரிகளை அனுப்பி வைத்தனர். அதிகாரிகள் திரும்பிவந்து, “அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை” என்றனர். ஆகவே பரிசேயர்கள் அவர்களை கேலி செய்ய ஆரம்பித்து, “நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டோ? வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்றனர். அதன் பிறகும் நிக்கொதேமுவால் பேசாமல் இருக்க முடியவில்லை. அவர் எழுந்து, “ஒரு மனுஷன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா”? என தைரியமாக கேட்டார். அதற்கு மற்ற பரிசேயர்கள் விமர்சித்து, “நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்து பாரும் என்றார்கள்.”—யோவான் 7:1, 10, 32, 45-52.
சுமார் ஆறு மாதங்களுக்குப்பின், பொ.ச. 33-ல் வந்த பஸ்கா அன்று, இயேசுவின் உடல் கழுமரத்திலிருந்து இறக்கப்பட்டதை நிக்கொதேமு பார்த்தார். இயேசுவின் உடலை அடக்கம் செய்வதற்காக ஆயத்தம் செய்வதில் யூத ஆலோசனை சங்கத்தின் இன்னொரு உறுப்பினராகிய அரிமத்தியா ஊரானாகிய யோசேப்புடன் அவரும் சேர்ந்துகொண்டார். அதற்காக நிக்கொதேமு சுமார் 100 ரோம பவுண்டுகள் எடையுள்ள “வெள்ளைப்போளமும் கரியபோளமும்” கொண்டுவந்தார். சுமார் 33 கிலோ எடையுடைய இந்தப் பொருள் கணிசமான தொகையாகும். இயேசுவை “எத்தன்” என்று அழைத்த உடன் பரிசேயர்களின் முன்னிலையில் தன்னை அவரோடு இனம்காட்டிக்கொள்ள நிக்கொதேமுவுக்கு தைரியம் வேண்டியிருந்தது. இயேசுவின் சரீரத்தை அடக்கம் செய்வதற்காக சீக்கிரமாக ஆயத்தம் செய்தபின் இருவரும் சேர்ந்து இயேசுவை அருகிலிருந்த புதிய கல்லறையில் வைத்தார்கள். ஆனால் இந்தக் கணத்திலும்கூட நிக்கொதேமு இயேசுவின் சீஷனாக அடையாளம் காட்டப்படவில்லை!—யோவான் 19:38-42; மத்தேயு 27:63; மாற்கு 15:43.
அவர் செயல்பட தவறியது ஏன்
நிக்கொதேமு ஏன் ‘தன் வாதனையின் கழுமரத்தை சுமந்துகொண்டு’ இயேசுவுக்கு பின் செல்வதிலிருந்து பின்வாங்கினார் என்பதை யோவான் தன் பதிவில் வெளிப்படுத்தவில்லை. ஆனால், இந்தப் பரிசேயன் தீர்மானம் எடுக்காமல் இருந்ததற்கான காரணத்தை விளக்கக்கூடிய சிறு குறிப்புகளை தருகிறார்.
முதலாவதாக இந்த யூத அதிபதி ‘இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்தார்’ என யோவான் குறிப்பிடுகிறார். (யோவான் 3:2) பைபிள் அறிஞர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: “இயேசுவை நேரில் காணவந்தபோது ஜனங்கள் இடைஞ்சலாக இருப்பார்கள் என்பதால்தான் நிக்கொதேமு இரவில் பார்க்க வந்தார், பயத்தின் காரணமாக இல்லை.” ஆனால் அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு ‘யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனாக’ இருந்தான் என்று எந்த சூழமைவில் யோவான் குறிப்பிட்டாரோ அதே சூழமைவில்தான் நிக்கொதேமு ‘ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்தார்’ என்றும் குறிப்பிட்டார். (யோவான் 19:38, 39) ஆகவே அந்நாளில் இயேசுவோடு எந்தத் தொடர்பையும் வைத்துக்கொள்ள பயப்பட்ட மற்றவர்களைப் போலவே நிக்கொதேமுவும்கூட “யூதருக்குப் பயந்திருந்ததினாலே” இராத்திரியில் வந்திருக்க வேண்டும்.—யோவான் 7:13.
உங்களுடைய உறவினர்கள், நண்பர்கள் அல்லது கூட்டாளிகள் என்ன சொல்வார்களோ என்று நினைப்பதால் இயேசுவின் சீஷர்களில் ஒருவராவதற்கு தீர்மானம் எடுக்காமல் தள்ளிப்போடுகிறீர்களா? “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்” என்று ஒரு நீதிமொழி கூறுகிறது. ஆனால் அந்த பயத்தை சமாளிப்பது எப்படி? “கர்த்தரை [“யெகோவாவை,” NW] நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்” என்று அது தொடர்ந்து கூறுகிறது. (நீதிமொழிகள் 29:25) யெகோவாவில் அப்படிப்பட்ட நம்பிக்கையை வளர்ப்பதற்கு, நீங்கள் மிகவும் இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்ளும்போது அவர் உங்களைத் தாங்குவார் என்பதை அனுபவித்து பார்க்க வேண்டும். யெகோவாவிடம் ஜெபியுங்கள், உங்கள் வணக்கத்தின் சம்பந்தமாக சிறிய தீர்மானங்களைச் செய்வதற்கும்கூட தேவையான தைரியத்தை தரும்படி அவரிடம் கேளுங்கள். அப்பொழுது படிப்படியாக, யெகோவாவில் உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் வளருவதை நீங்கள் காண்பீர்கள், அப்போது அவருடைய சித்தத்திற்கு இசைவாக பெரிய தீர்மானங்களை உங்களால் செய்ய முடியும்.
ஆளும் வர்க்கத்தின் உறுப்பினராக நிக்கொதேமு பெற்றிருந்த பதவியும் அந்தஸ்தும்கூட, தன்னைத்தான் சொந்தம் கைவிடும் அந்த முக்கியமான நடவடிக்கையை அவர் எடுக்காததற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆலோசனை சங்கத்தின் உறுப்பினராக அவருக்கிருந்த அந்தப் பதவியை அந்தச் சமயத்திலும் அவர் மிகவும் நேசித்திருப்பார். சமுதாயத்தில் வகிக்கும் அந்தஸ்தான ஒரு பதவியை இழந்துவிடக்கூடும் என்பதாலோ முன்னேறுவதற்கு வரும் சில வாய்ப்புகளை தியாகம் செய்ய வேண்டும் என்பதற்காகவோ கிறிஸ்துவை பின்பற்றுகிறவராவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நீங்கள் தயங்குகிறீர்களா? இந்தக் காரியங்கள் எதையுமே, சர்வலோகத்தின் மகா உன்னதமானவரை சேவிக்கும் மதிப்பான வாய்ப்போடு ஒப்பிடவே முடியாது; பிரபஞ்சத்தின் மகா உன்னதமானவர், தம் சித்தத்திற்கிசைவாக நீங்கள் வேண்டிக்கொள்ளும் காரியங்களை உங்களுக்கு வழங்க விருப்பமுள்ளவராக இருக்கிறார்.—சங்கீதம் 10:17, 18ஆ; 83:17; 145:18.
நிக்கொதேமு தீர்மானமெடுப்பதை தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்ததற்கு மற்றொரு காரணம் அவருக்கிருந்த செல்வமாக இருக்கலாம். அவர் ஒரு பரிசேயனாக இருந்தார், மற்ற பரிசேயர்கள் “பொருளாசைக்கார”ராக இருந்தபடியால் இவருக்கும் அந்த மனப்பான்மை தொற்றியிருந்திருக்கும். (லூக்கா 16:14) விலையுயர்ந்த வெள்ளைப்போளமும் கரியபோளமும் வாங்க முடிகிற அளவுக்கு அவருக்கு வசதி இருந்தது அவர் செல்வந்தர் என்பதைக் காட்டுகிறது. இன்று சிலர் தங்கள் பொருளுடைமைகளைப் பற்றி மிகவும் கவலைப்படுவதால் ஒரு கிறிஸ்தவராக பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள தீர்மானம் செய்யாமல் தாமதித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம் இவ்வாறு அறிவுரை கூறினார்: “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள். . . . இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.”—மத்தேயு 6:25-33.
அதிகத்தை இழந்தார்
யோவானின் சுவிசேஷத்தில் மட்டுமே காணப்படும் நிக்கொதேமு பற்றிய விவரம், அவர் கடைசியில் இயேசுவின் சீஷனாக ஆனாரா இல்லையா என்பதை சொல்வதில்லை. நிக்கொதேமு இயேசுவின் சார்பாக நிலைநிற்கை எடுத்தார், முழுக்காட்டப்பட்டார், யூதர்களின் துன்புறுத்துதலுக்கு ஆளானார், தன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார், கடைசியாக எருசலேமிலிருந்து நாடுகடத்தப்பட்டார் என்று ஒரு பாரம்பரியம் கூறுகிறது. எது உண்மையாக இருந்தாலும் ஒரு காரியம் நிச்சயம்: இயேசு இங்கே பூமியில் இருந்தபோது காலந்தாழ்த்தியதால் அவர் அதிகத்தை இழந்தார்.
நிக்கொதேமு இயேசுவை முதன்முறை சந்தித்தபோதே அவரை பின்பற்ற ஆரம்பித்திருந்தால், அவருடைய நெருங்கிய சீஷனாக ஆகியிருக்கலாம். நிக்கொதேமுவுக்கிருந்த அறிவு, உட்பார்வை, மனத்தாழ்மை, ஆன்மீக தேவைகளைக் குறித்த உணர்வு ஆகியவற்றை வைத்துப் பார்த்தால், அவர் நிச்சயம் சிறந்த சீஷனாக ஆகியிருந்திருக்கலாம். பெரிய போதகர் ஆற்றிய வியப்பூட்டும் பேச்சுக்களை கேட்டிருந்திருக்கலாம், இயேசுவின் உவமைகளிலிருந்து இன்றியமையாத பாடங்களை கற்றிருந்திருக்கலாம், இயேசு நடப்பித்த ஆச்சரியமூட்டும் அற்புதங்களை நேரில் கண்டிருக்கலாம், இயேசு பிரிந்து செல்வதற்கு முன் தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு கொடுத்த புத்திமதியிலிருந்து பலத்தை பெற்றிருக்கலாம். இதை எல்லாம் அவர் இழந்தார்.
தீர்மானம் எடுக்காமல் காலம் தாழ்த்தியதால் நிக்கொதேமு அவருடைய பங்கில் அதிகத்தை இழந்தார். இதில் இயேசுவின் கனிவான அழைப்பும் உட்பட்டிருந்தது: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” (மத்தேயு 11:28-30) இயேசுவிடமிருந்து நேரடியாக புத்துணர்ச்சியை பெற்று அனுபவிக்கும் வாய்ப்பை நிக்கொதேமு இழந்துபோனார்!
நீங்கள் எப்படி?
1914 முதற்கொண்டு இயேசு கிறிஸ்து பரலோகத்தில் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக பிரசன்னமாகியுள்ளார். அவருடைய பிரசன்னத்தின்போது என்ன நடக்கும் என்பதை முன்னறிவிக்கையில் மற்ற காரியங்களோடுகூட இயேசு இவ்வாறு கூறினார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14) ஆகவே முடிவு வருவதற்கு முன்பாக, உலகம் முழுவதிலும் அந்த பிரசங்க வேலை செய்து முடிக்கப்பட வேண்டும். அபூரண மனிதர்களைக்கொண்டு அதை செய்வதில் இயேசு கிறிஸ்து மகிழ்ச்சியைக் காண்கிறார். நீங்களும்கூட இந்த வேலையில் பங்குகொள்ளலாம்.
இயேசு கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நிக்கொதேமு புரிந்துகொண்டார். (யோவான் 3:2) நீங்களும் பைபிளை படித்து இதேபோன்ற முடிவுக்கு வந்திருக்கலாம். பைபிள் தராதரங்களின்படி வாழ நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்திருக்கலாம். பைபிளைப் பற்றி கூடுதலான அறிவைப் பெற்றுக்கொள்வதற்காக நீங்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கும் போய்வரலாம். நீங்கள் எடுக்கும் இந்த முயற்சிகளுக்காக உங்களை பாராட்டியே ஆகவேண்டும். என்றாலும், இயேசு கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை மதித்துணருவதற்கும் மேலாக நிக்கொதேமு அதிகத்தை செய்ய வேண்டியதாக இருந்தது. ‘அவன் தன்னைத்தான் சொந்தம் கைவிட்டு தன் வாதனையின் கழுமரத்தை நாள்தோறும் சுமந்துகொண்டு, அவரை [இயேசுவை] தொடர்ந்து பின்பற்றி’வருவது அவசியமாக இருந்தது.—லூக்கா 9:23, NW.
அப்போஸ்தலன் பவுல் நமக்குச் சொல்வதை இருதயத்தில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். “தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன் வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்தி சொல்லுகிறோம். அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உனக்கு உதவி செய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சணிய நாள்” என அவர் எழுதினார்.—2 கொரிந்தியர் 6:1, 2.
உங்களை செயல்பட வைக்கும் விசுவாசத்தை வளர்த்துக்கொள்வதற்கு இதுவே சமயம். அதைச் செய்வதற்கு பைபிளில் நீங்கள் படிக்கும் காரியங்களைக் குறித்து தியானம் செய்யுங்கள். யெகோவாவிடம் ஜெபம் செய்து இப்படிப்பட்ட ஒரு விசுவாசத்தைக் காண்பிக்க உங்களுக்கு உதவும்படி கேளுங்கள். அவர் உங்களுக்கு உதவியாக இருப்பதை நீங்கள் அனுபவத்தில் காணும்போது அவரிடமாக உங்கள் நன்றியுணர்வும் அன்பும் பெருகும், அது உங்களை ‘சொந்தம் கைவிட்டு வாதனையின் கழுமரத்தை நாள்தோறும் சுமந்துகொண்டு இயேசு கிறிஸ்துவை தொடர்ந்து பின்பற்றிவர’ உங்களைத் தூண்டும். நீங்கள் இப்போதே செயல்படுவீர்களா?
[பக்கம் 9-ன் படம்]
ஆரம்பத்தில் நிக்கொதேமு இயேசுவுக்காக தைரியமாக குரல் கொடுத்தார்
[பக்கம் 9-ன் படம்]
எதிர்ப்பு இருந்தாலும், இயேசுவின் சரீரத்தை அடக்கம் செய்வதற்கு ஆயத்தப்படுத்துவதில் நிக்கொதேமு உதவினார்
[பக்கம் 10-ன் படம்]
தனிப்பட்ட படிப்பும் ஜெபமும் செயல்படுவதற்கு உங்களைப் பலப்படுத்த முடியும்
[பக்கம் 10-ன் படம்]
இயேசு கிறிஸ்துவின் தலைமையின்கீழ் வேலை செய்யும் சிலாக்கியத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?