நீங்கள் தேர்ந்தெடுக்கும் நெறிகள்
நீங்கள் நெறிமுறையோடு வாழ்பவரா? அல்லது ஒழுக்கநெறிகளை ஏதோ பத்தாம்பசலித்தனமாக கருதுகிறீர்களா? எப்படியிருந்தாலும், எல்லாருமே ஓரளவுக்கு ஏதாவது நெறிகளோடு—தாங்கள் முக்கியமாக கருதுகிற நெறிகளோடு—வாழ்கிறார்கள் என்பதே உண்மை. நெறி என்பது “தனி மனித ஒழுக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்ட விதி அல்லது மேற்கொள்ளும் முறை” என ஓர் அகராதி வரையறுக்கிறது. நெறிகள் நாம் எடுக்கும் தீர்மானங்களைக் கடிவாளம் போல கட்டுப்படுத்துகின்றன, நம்முடைய வாழ்க்கைப் பாதையை தீர்மானிக்கின்றன. ஆகவே, நெறிகள் திசைமானியைப் போல் செயல்படுகின்றன.
உதாரணமாக, பொன் விதியை கடைப்பிடிப்பதற்கு இயேசு தமது சீஷர்களை உந்துவித்தார்; இது மத்தேயு 7:12-ல் (பொது மொழிபெயர்ப்பு) காணப்படுகிறது: “பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” கன்பூசியருடைய சீடர்கள் லி மற்றும் இன் என்ற நெறிகளைப் பின்பற்றுகிறார்கள்; இவை தயவு, தாழ்மை, மரியாதை, விசுவாசம் போன்ற குணங்களைப் பற்றி பேசுகின்றன. மதப்பற்று இல்லாதவர்களும் தங்களுடைய நடத்தையை தீர்மானிக்கும் விதிமுறைகள் சிலவற்றை வைத்திருக்கிறார்கள்.
எத்தகைய நெறிகளைத் தேர்ந்தெடுப்பது?
ஆனால் அந்த நெறிகள் நல்லவையாகவோ தீயவையாகவோ இருக்கலாம் என்பதை மனதிற்கொள்ள வேண்டும். உதாரணமாக, ‘மீயிஸம்’ (நான்/எனக்கு) என்ற மனப்பான்மை சுமார் கடந்த பத்தாண்டுகளாக மக்கள் பலரை ஆட்டிப்படைத்து வந்திருக்கிறது. இந்த வார்த்தை பலருடைய காதில் விழுந்திராவிட்டாலும், அது தங்களுக்கு பொருந்தாது என நினைத்தாலும், ‘மீயிஸம்’ என்பது அநேகர் தங்களை அறியாமலே பின்பற்றும் நெறியாக இருக்கிறது. அதாவது, உயர்ந்த ஒழுக்க தராதரங்களை உதறித் தள்ளிவிட்டு பின்பற்றுகிற ஒரு நெறியாக இருக்கிறது. அதை ‘மீயிஸம்’ என அழைத்தாலும்சரி அழைக்காவிட்டாலும்சரி, சுயநலத்தின் வெளிப்பாடே இந்தப் போக்கு, பெரும்பாலும் கண்மூடித்தனமான பொருளாசையும் இதோடு ஒட்டிக்கொள்கிறது. “நமக்கு இரண்டே நெறிகள்தான் இருக்கின்றன” என சீனாவிலுள்ள டிவி எக்ஸிகியூட்டிவ் கூறினார். “ஒன்று பொருளாசையை திருப்தி செய்தல். மற்றொன்று பணத்தை குவித்தல்.”
இந்த ‘மீயிஸம்’ ஒரு காந்தத்தைப் போல செயல்பட முடியும். ஒரு காந்தம் எவ்வாறு திசைமானியை பாதிக்கிறது? இரண்டும் ஒன்றையொன்று சந்திக்கையில், திசைமானியின் முள் திசைமாறி விடுகிறது. அதே போல, இந்த ‘மீயிஸம்’ ஒரு நபருடைய ஒழுக்கநெறி எனும் திசைமானியை அல்லது நன்னடத்தைக்குரிய விதியை சின்னாபின்னமாக்கி விடலாம். எப்படி? ஒருவருடைய சொந்த ஆசைகளே எல்லாவற்றிற்கும் மேல் ஆதிக்கம் செலுத்தி பிறவற்றை பின்னுக்குத் தள்ளிவிடுவதன் மூலமே.
‘மீயிஸம்’ நவீன காலத்தில் தோன்றியதல்ல என்பதை அறிவது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறதா? படைப்பாளரால் ஸ்தாபிக்கப்பட்ட தராதரங்களை நமது முதல் பெற்றோர் தள்ளிவிட்டபோதே, ஏதேன் தோட்டத்திலேயே இது வேர்விட ஆரம்பித்துவிட்டது. இது அவர்களுடைய ஒழுக்கநெறி திசைமானியை மாற்றிவிட்டது. ஆதாம் ஏவாளின் வாரிசுகளும் தங்களுடைய வாழ்க்கைக்கு அதே போக்கை தேர்ந்தெடுத்ததால்—‘மீயிஸம்’ என இன்று நாம் அழைக்கிற இந்தப் போக்கை தேர்ந்தெடுத்ததால்—அவதிப்படுகிறார்கள்.—ஆதியாகமம் 3:6-8, 12.
‘கடைசிநாட்கள்’ என பைபிள் தீர்க்கதரிசனம் அழைக்கிற ‘கையாளுவதற்கு கடினமான இந்தக் கொடிய காலங்களில்’ இப்படிப்பட்ட மனப்பான்மை விஷவாயு போல எங்கும் ஊடுருவியிருப்பதை நாம் காண முடிகிறது. ‘தற்பிரியர்கள்’ பலர் நம் மத்தியில் இருக்கிறார்கள். ‘மீ-ஃபஸ்ட்’ (நான்-முதல்) என்ற இந்தப் போக்கு நம்மையும் பீடித்துக்கொள்வதில் ஆச்சரியமே இல்லை.—2 தீமோத்தேயு 3:1-5, NW.
ஓலஃப் என்ற இளைஞன் சொல்வதை ஒருவேளை நீங்களும் ஆமோதிப்பீர்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய ஐரோப்பிய நாட்டு கிளை அலுவலகம் ஒன்றிற்கு அவன் இவ்வாறு எழுதினான்: “ஒழுக்க ரீதியில் நேர்மையாக நிலைத்திருப்பது இன்றைக்கு பெரும்பாடாக இருக்கிறது, அதிலும் முக்கியமாக எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு சொல்லவே வேண்டாம். பைபிள் நெறிகளை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை தயவுசெய்து எங்களுக்கு நினைப்பூட்டிக் கொண்டே இருங்கள்.”
ஓலஃப் பகுத்துணர்வை காண்பித்தான். உயர்ந்த ஒழுக்க தராதரங்களைப் பின்பற்றுவதற்கு கடவுள் தரும் நெறிகள் நமக்கு—வாலிபராக இருந்தாலும்சரி வயோதிகராக இருந்தாலும்சரி—உதவி செய்யும். ‘மீயிஸ’த்தை—அல்லது நீங்கள் அதை வேறெப்படி அழைத்தாலும்சரி—தடுத்து நிறுத்துவதற்கும் அவை துணைபுரியும். பைபிள் நெறிகள் உண்மையிலேயே எவ்வாறு உதவும் என்பதைப் பற்றி கூடுதலாக அறிந்துகொள்ள விரும்பினால், தயவுசெய்து அடுத்த கட்டுரையை ஆராயுங்கள்.
[பக்கம் 4-ன் படங்கள்]
இன்றைக்கு அநேகர் பிறருடைய தேவைகளை கண்டுகொள்வதே இல்லை