பஞ்ச நிவாரணம் வருகிறது!
‘என்ன பஞ்சம்?’ என நீங்கள் வினவலாம். ஆன்மீக உணவுப் பஞ்சம்! இந்தப் பஞ்சத்தைப் பற்றி பூர்வகால எபிரெய தீர்க்கதரிசி ஒருவர் முன்னறிவித்தார்: “இதோ, நாட்கள் வரும்,—இது யெகோவாவாகிய ஆண்டவரின் திருவாக்கு—அப்போது தேசத்திலே பஞ்சம் வரச் செய்வேன், அது ஆகாரப் பஞ்சமல்ல, ஜலதாகமுமல்ல, யெகோவாவின் வசனத்தைக் கேட்க வேண்டுமெனத் தவிக்கிற பஞ்சமே.” (ஆமோஸ் 8:11, தி.மொ.) இந்த ஆன்மீக பஞ்சத்திற்கு நிவாரண உதவி அளிக்க, நியூ யார்க், பேட்டர்ஸனில் அமைந்துள்ள உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் 112-ம் வகுப்பில் பட்டம் பெற்ற 48 பேர் 5 கண்டங்களிலுள்ள 19 நாடுகளுக்கும் தீவுகளுக்கும் படையெடுக்கப் போகிறார்கள்.
அவர்கள் இறைச்சியையோ தானியங்களையோ அல்ல, ஆனால் அறிவு, அனுபவம், பயிற்சி ஆகியவற்றை கொண்டு செல்வார்கள். அயல்நாடுகளில் மிஷனரி சேவை செய்யும்படி அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்ட தீவிர பைபிள் படிப்பில் ஐந்து மாத காலமாக மூழ்கியிருந்தார்கள். மார்ச் 9, 2002-ல், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட 5,554 பேர் நிகழ்ச்சியை மகிழ்ச்சியுடன் செவிமடுத்துக் கேட்டார்கள்.
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினராக சேவை செய்யும் ஸ்டீபன் லெட் உற்சாகம் பொங்க அந்த நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். உலகின் பல பகுதிகளிலிருந்து வருகை புரிந்த விருந்தினர் பலரை விசேஷமாக வரவேற்றார். பின்பு, “நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகளை வருங்கால மிஷனரிகளின் வேலைக்குப் பொருத்திக் காட்டினார். (மத்தேயு 5:14, பொ.மொ.) ‘உங்களுடைய நியமிப்புகளின் வாயிலாக யெகோவாவின் அற்புத செயல்பாடுகளின் பல்வேறு அம்சங்களுக்கு “ஒளியேற்றி,” யெகோவா மற்றும் அவருடைய நோக்கங்களின் அழகை நல்ல உள்ளம் கொண்டோர் காண உதவி செய்வீர்கள்’ என அவர் விளக்கினார். பொய்க் கோட்பாடுகள் எனும் இருளைப் போக்குவதற்கும் சத்தியத்தைத் தேடுவோருக்கு வழிகாட்டுவதற்கும் கடவுளுடைய வார்த்தை எனும் ஒளியைப் பயன்படுத்தும்படி சகோதரர் லெட் மிஷனரிகளை உற்சாகப்படுத்தினார்.
வெற்றிக்கு இன்றியமையாத சரியான மனப்பான்மை
சேர்மேனுடைய ஆரம்ப உரைக்குப் பிறகு, பட்டதாரிகள் வெற்றிகரமான மிஷனரிகளாய் திகழ திட்டமிடப்பட்ட தொடர் பேச்சுக்களில் முதல் பேச்சை ஐக்கிய மாகாணங்களின் கிளைக் காரியாலய குழு அங்கத்தினர் பால்டாசார் பெர்லா கொடுத்தார். “மனவலிமை கொள்! திடன்கொள்! செயல்படு!” என்ற கருப்பொருளில் உரையாற்றினார். (1 குறிப்பேடு [1 நாளாகமம்] 28:20, பொ.மொ.) இதுவரை செய்திராத சவால் மிகுந்த ஒரு நியமிப்பை—எருசலேமில் ஆலயம் கட்டும் நியமிப்பை—பூர்வ இஸ்ரவேலின் அரசனாகிய சாலொமோன் பெற்றார். சாலொமோன் செயல்பட்டார், யெகோவாவின் ஆதரவுடன் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பாடத்தை மாணவர்களுக்குப் பொருத்தி சகோதரர் பெர்லா இவ்வாறு கூறினார்: ‘நீங்கள் ஒரு புதிய நியமிப்பை, மிஷனரியாக சேவை செய்யும் நியமிப்பை பெற்றிருக்கிறீர்கள், ஆகவே நீங்கள் மனவலிமை கொண்டு திடன்கொள்ள வேண்டும்.’ யெகோவாவை அண்டியிருக்கும்வரை அவர் தங்களை கைவிட மாட்டார் அல்லது விட்டுவிலக மாட்டார் என்ற உறுதியில் அந்த மாணவர்கள் நிச்சயமாகவே ஆறுதலை கண்டடைந்தார்கள். ‘மிஷனரிகளாய் நீங்கள் நிறைய நன்மைகளைச் செய்ய முடியும். என்னுடைய குடும்பத்திற்கும் எனக்கும் சத்தியத்தைத் தந்தவர்கள் மிஷனரிகளே!’ என தன் அனுபவத்தை சொல்லி முடிப்பதன் மூலம் சகோதரர் பெர்லா கூட்டத்தாரின் இதயத்தைத் தொட்டார்.
“வெற்றிக்காக யெகோவாவை நோக்கியிருங்கள்”—இதுவே ஆளும் குழுவைச் சேர்ந்த மற்றொரு அங்கத்தினராகிய சாமுவேல் ஹெர்டு கொடுத்த பேச்சின் பொருள். இந்த மாணவர்கள் வாழ்க்கை பணியாக மிஷனரி சேவையில் அடியெடுத்து வைக்கிறார்கள், அவர்களுடைய வெற்றி யெகோவாவுடன் உள்ள அவர்களுடைய நல்லுறவிலேயே பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. சகோதரர் ஹெர்டு அவர்களுக்கு இந்தப் புத்திமதியை வழங்கினார்: ‘கிலியட் பள்ளியில் படித்ததன் மூலம் பைபிள் அறிவை நீங்கள் பெருமளவு பெற்றிருக்கிறீர்கள். அதை சந்தோஷத்துடன் பெற்று வந்திருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது, உண்மையான வெற்றிக்கு, நீங்கள் கற்றுக்கொண்டதை வாரிவழங்க வேண்டும்.’ (அப்போஸ்தலர் 20:35) மற்றவர்களுக்காக ‘தங்களையே வார்த்துக்கொடுப்பதன் மூலம்’ இதைச் செய்ய மிஷனரிகளுக்கு அநேக வாய்ப்புகள் இருக்கும்.—பிலிப்பியர் 2:17.
இந்த மாணவர்களுக்கு போதனையாளர்கள் தந்த பிரிவுபசார அறிவுரை? ரூத் 3:18-ன் (பொ.மொ.) அடிப்படையில், “இது எப்படி முடியும் என்பதை அறியும்வரை காத்திரு” என்ற பொருளில் மார்க் நியூமர் தன்னுடைய பேச்சை அமைத்திருந்தார். நகோமி மற்றும் ரூத்தின் உதாரணத்தைப் பயன்படுத்தி, கடவுளுடைய பூமிக்குரிய அமைப்பு செய்திருக்கும் ஏற்பாடுகளில் முழு நம்பிக்கை வைக்கும்படியும் தேவராஜ்ய அதிகாரத்தை மதிக்கும்படியும் பட்டதாரிகளை பேச்சாளர் உற்சாகப்படுத்தினார். மாணவர்களுடைய இதயத்தைத் தொடும் ஒன்றை சகோதரர் நியூமர் சொன்னார்: ‘சிலசமயங்களில், உங்களை பாதிக்கிற ஒரு தீர்மானம் ஏன் எடுக்கப்பட்டது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம் அல்லது ஒரு காரியத்தை வேறு விதமாகத்தான் செய்திருக்க வேண்டும் என நீங்கள் உறுதியாக உணரலாம். அப்போது என்ன செய்வீர்கள்? நீங்களே காரியங்களை உங்களுடைய கைகளில் எடுத்துக்கொள்வீர்களா அல்லது கடவுளுடைய வழிநடத்துதலில் நம்பிக்கை வைத்து ஏற்ற சமயத்தில் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும்படி அவர் பார்த்துக்கொள்வார் என்ற உறுதியுடன் அவருக்காக “காத்திரு”ப்பீர்களா? (ரோமர் 8:28) ‘ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதில் கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள், ஆள்தன்மைகளின் மீது அல்ல, ஆனால் யெகோவாவின் அமைப்பு என்ன செய்கிறதோ அதன் மீது கண்களை ஊன்ற வையுங்கள்’ என்ற அறிவுரை வருங்காலத்தில் அயல்நாட்டில் சேவை செய்யும் மிஷனரிகளுக்கு பொன்னான அறிவுரை என்பதில் சந்தேகமில்லை.
மிஷனரியாக இருந்தவரும் இப்பொழுது கிலியட் பள்ளியில் போதனையாளராக சேவை செய்பவருமான வாலஸ் லிவ்ரன்ஸ் முதல் தொடர்-பேச்சில் கடைசி பேச்சை கொடுத்தார். “ஒருமுகப்படுத்தப்பட்டவர்களாய் இருங்கள், கடவுளுடைய சேவையில் நிலைத்திருங்கள்” என்பதே அவருடைய பேச்சின் மையப் பொருள். தானியேல் தீர்க்கதரிசி பாபிலோன் வீழ்ச்சியடைந்ததைக் கண்டதிலிருந்தும் எரேமியா முன்னறிவித்ததை ஆராய்ந்ததிலிருந்தும், இஸ்ரவேலர் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவது அருகில் இருந்ததை பகுத்தறிந்தார் என்பதை அவர் எடுத்துக் காட்டினார். (எரேமியா 25:11; தானியேல் 9:2) யெகோவாவின் கால அட்டவணையைப் பற்றிய விழிப்புணர்வு தானியேலுக்கு இருந்தது, கடவுளுடைய நோக்கம் நிறைவேறி வருவதன் பேரில் ஒருமுகப்படுத்தப்பட்டவராய் நிலைத்திருக்க அது அவருக்கு உதவியது. ஆனால் தீர்க்கதரிசியாகிய ஆகாயின் காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலரோ, “ஏற்ற காலம் இன்னும் வரவில்லை” என்று சொன்னார்கள். (ஆகாய் 1:2) தாங்கள் வாழ்ந்துவந்த காலத்தின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்த தவறினார்கள், சொகுசான வாழ்விலும் சொந்த காரியங்களிலுமே கவனத்தை ஒருமுகப்படுத்தினார்கள், எந்த வேலைக்காக பாபிலோனிலிருந்து விடுவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டார்களோ அந்த வேலையை, ஆலயத்தை மீண்டும் கட்டும் வேலையை விட்டுவிட்டார்கள். சகோதரர் லிவ்ரன்ஸ் இவ்வாறு கூறி முடித்தார்: “ஆகவே, எல்லா சமயங்களிலும் யெகோவாவின் நோக்கத்தை மனதில் வைத்திருப்பதன் மூலம் ஒருமுகப்படுத்தப்பட்டவர்களாய் இருங்கள்.”
“ஜீவனுள்ள வார்த்தையைப் பயன்படுத்துகிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்” என்ற பாகத்திற்கு கிலியட் போதனையாளர் லாரன்ஸ் போவன் தலைமை தாங்கினார். (எபிரெயர் 4:12) கிலியட் வகுப்பாருடைய வெளி ஊழிய அனுபவங்களைப் பற்றி இந்தப் பாகம் அலசியது. பிரசங்கிக்கையிலும் கற்பிக்கையிலும் பைபிளைப் பயன்படுத்துகிறவர்களை யெகோவா எவ்வாறு ஆசீர்வதிக்கிறார் என்பதை இது சிறப்பித்துக் காட்டியது. கடவுளுடைய ஊழியர்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்து சிறந்த முன்மாதிரியாய் திகழ்கிறார் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்: ‘தான் கற்பிப்பது தன்னுடையதல்ல, கடவுளுடைய வார்த்தையே என இயேசுவால் உண்மையோடு சொல்ல முடிந்தது.’ நேர்மை இருதயம் படைத்தோர் சத்தியத்தை உணர்ந்துகொண்டு அதற்கு சாதகமாக பிரதிபலித்தார்கள். (யோவான் 7:16, 17) இதுவே இன்றும் உண்மை.
கிலியட் பயிற்சி எந்த நற்கிரியையும் செய்ய ஒருவரை தகுதியாக்குகிறது
அடுத்து, நீண்ட காலமாக பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினர்களாய் சேவை செய்யும் ரிச்சர்ட் ஆப்ரஹாம்சன் என்பவரும் பேட்ரிக் லாஃப்ராங்கா என்பவரும் இப்பொழுது பல்வேறு விசேஷ முழுநேர சேவையில் பணிபுரியும் கிலியட் பட்டதாரிகள் ஆறு பேரை பேட்டி கண்டார்கள். தங்களுடைய தற்போதைய நியமிப்பு எதுவாக இருந்தாலும், பைபிள் படிப்பு, ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் ஆட்களோடு ஒத்துப்போதல் ஆகியவை சம்பந்தமாக கிலியட் பள்ளியில் பெற்ற பயிற்சியை பல ஆண்டுகளாக அந்த ஆறு பேரும் தொடர்ந்து பயன்படுத்துவதைக் கேட்டபோது 112-ம் வகுப்பைச் சேர்ந்த பட்டதாரிகள் உற்சாகம் பெற்றார்கள்.
ஆளும் குழுவின் அங்கத்தினராகிய தியோடர் ஜாரக்ஸ் இந்த நிகழ்ச்சியில் முக்கிய சொற்பொழிவை ஆற்றினார். “சாத்தானின் பகைமையை சகித்திருப்பதன் மூலம் எது சாதிக்கப்படுகிறது” என்பதே அதன் தலைப்பு. கடந்த ஐந்து மாதங்களாக, இந்த மாணவர்கள் அன்பு மணம் கமழும் தேவராஜ்ய சூழலில் வாசம் பண்ணினார்கள். ஆனால் அவர்களுடைய வகுப்பில் சுட்டிக்காட்டப்பட்டபடி, நாம் சத்துருவின் உலகில் வாழ்ந்து வருகிறோம். உலகம் முழுவதிலும் யெகோவாவின் ஜனங்கள் தாக்கப்படுகிறார்கள். (மத்தேயு 24:9) ‘நாம் பிசாசின் விசேஷ இலக்காக இருக்கிறோம். யெகோவாவுடன் நம்முடைய உறவை பலப்படுத்திக்கொண்டு சோதனைகளை சந்திக்க ஆயத்தமாயிருக்க வேண்டும்’ என பல்வேறு பைபிள் விவரப்பதிவுகளின் வாயிலாக சகோதரர் ஜாரக்ஸ் சுட்டிக்காட்டினார். (யோபு 1:8; தானியேல் 6:4; யோவான் 15:20; வெளிப்படுத்துதல் 12:12, 17) கடவுளுடைய மக்களுக்கு எதிராக தொடர்ந்து பகைமை இருந்துவருகிற போதிலும், ஏசாயா 54:17 சொல்கிறபடி, ‘நமக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம். அவருடைய உரிய நேரத்தில், உரிய முறையில் நாம் மீட்கப்படுவதை யெகோவா பார்த்துக்கொள்வார்’ என்று கூறி சகோதரர் ஜாரக்ஸ் தன்னுடைய உரையை முடித்தார்.
112-ம் கிலியட் வகுப்பைச் சேர்ந்த இந்த மிஷனரிகள் ‘தகுதியுள்ளவர்களாய்,’ தாங்கள் சேவிக்கப்போகும் நாடுகளில் நிலவும் ஆவிக்குரிய பஞ்சத்தைப் போக்குவதில் நிறைய சாதிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. (2 தீமோத்தேயு 3:16, 17) இந்த நாடுகளில் வாழும் ஜனங்களுக்கு போஷாக்களிக்கும் செய்தியை இவர்கள் எப்படி சொல்கிறார்கள் என்பதைப் பற்றிய அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்.
[பக்கம் 23-ன் பெட்டி]
வகுப்பின் புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 6
அனுப்பப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 19
மாணவர்களின் எண்ணிக்கை: 48
சராசரி வயது: 33.2
சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 15.7
முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 12.2
[பக்கம் 24-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 112-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) பாரட், எம்.; ஹுக்கர், ஈ.; ஆனாயா, ஆர்.; ரேனால்ட்ஸ், ஜே.; ஜெஸ்வால்டி, கே.; கொன்ஜாலஸ், ஜே. (2) ராபின்சன், சி.; ஃபிலிப்ஸ், பி.; மேட்மன்ட், கே.; மோர், ஐ.; நோக்ஸ், ஜே.; பார்நட், எஸ். (3) ஸ்டைர்ஸ், டி.; பல்மேர், பி.; யங், சி.; க்ரூத்துயஸ், எஸ்.; க்ரோபி, டி.; பாக், சி. (4) ஆனாயா, ஆர்.; சூகரிஃப், ஈ.; ஸ்டீவர்ட், கே.; சைமோஸ்ராக், என்.; சைமாடல், சி.; பாக், ஈ. (5) ஸ்டீவர்ட், ஆர்.; யங், ஹெச்.; கில்ஃபெதர், ஏ.; ஹேரிஸ், ஆர்.; பார்நட், டி.; பாரட், எஸ். (6) மேட்மன்ட், ஏ.; மோர், ஜே.; க்ரூத்துயஸ், சி.; கில்ஃபெதர், சி.; நோக்ஸ், எஸ்.; ஸ்டைர்ஸ், டி. (7) ஜெஸ்வால்டி, டி.; க்ரோபி, டி.; சூகரிஃப், பி.; பல்மேர், ஜி.; ஃபிலிப்ஸ், என்.; சைமாடல், ஜே. (8) ஹேரிஸ், எஸ்.; ஹுக்கர், பி.; கொன்ஜாலஸ், ஜே.; சைமோஸ்ராக், டி.; ரேனால்ட்ஸ், டி.; ராபின்சன், எம்.