வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
• லூஸிஃபர் என்பது சாத்தானுக்கு பைபிள் பயன்படுத்தும் பெயரா?
லூஸிஃபர் என்ற பெயர் பைபிளில் ஒரு தடவை மட்டுமே காணப்படுகிறது, அதுவும் சில மொழிபெயர்ப்புகளில் மட்டுமே காணப்படுகிறது. உதாரணமாக, ஏசாயா 14:12-ஐ கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “அதிகாலையின் மகனாகிய லூஸிஃபரே, நீ வானத்திலிருந்து விழுந்துவிட்டாயே!”
“லூஸிஃபர்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தையின் அர்த்தம் “பிரகாசிக்கிறவன்” என்பதே. செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பு, “விடியலை வரவழைப்பவன்” என்ற அர்த்தமுடைய கிரேக்க வார்த்தையை பயன்படுத்துகிறது. ஆகவே, சில மொழிபெயர்ப்பாளர்கள் மூல எபிரெய வார்த்தையின்படி “விடிவெள்ளி” என மொழிபெயர்க்கிறார்கள். ஆனால், ஜெரோமின் லத்தீன் வல்கேட் மொழிபெயர்ப்பு “லூஸிஃபர்” (ஒளி கொண்டுசெல்பவன்) என்ற வார்த்தையை பயன்படுத்துகிறது; அதோடு இந்த வார்த்தை பைபிளின் பல மொழிபெயர்ப்புகளிலும் காணப்படுவதற்கான காரணத்தையும் விளக்குகிறது.
இந்த லூஸிஃபர் யார்? ‘பாபிலோன் மன்னனுக்கு எதிராக ஏளனப் பாடலாக எடுத்துக் கூறும்படி’ (பொ.மொ.) இஸ்ரவேலரிடம் தீர்க்கதரிசனமாக ஏசாயா கொடுத்த கட்டளையில் “பிரகாசிக்கிறவன்” அல்லது “லூஸிஃபர்” என்ற இந்தப் பதம் காணப்படுகிறது. அப்படியானால், முக்கியமாக பாபிலோனிய சாம்ராஜ்யத்திற்காக பாடப்பட்ட பாடலின் ஒரு பகுதியே இது. “பிரகாசிக்கிறவன்” என்ற பெயர் ஒரு ஆவி சிருஷ்டிக்கு அல்ல, ஒரு நபருக்கே கொடுக்கப்படுகிறது; ஏனென்றால், “நீ ஷியோலிலே தள்ளுண்டு போவாய்” என அதைத் தொடர்ந்து கூறப்படுவதிலிருந்து இது தெரிகிறது. ஷியோல் என்பது மனிதகுலத்தின் பொதுவான கல்லறையாகும்; பிசாசாகிய சாத்தான் குடியிருக்கும் இடமல்ல. அதோடு, லூஸிஃபரை காண்பவர்கள், ‘இந்த மனுஷன்தானா பூமியைத் தத்தளிக்கப்பண்ணியவன்’ என கேட்பார்கள்.’ ஆகவே, “லூஸிஃபர்” என்ற பெயர் ஒரு ஆவி சிருஷ்டியை அல்ல ஒரு மனிதனையே குறிப்பிடுகிறது என்பது தெளிவாகிறது.—ஏசாயா 14:4, 15, 16, NW.
பாபிலோனிய சாம்ராஜ்யத்திற்கு ஏன் இப்படிப்பட்ட உயர்வான பெயர் கொடுக்கப்படுகிறது? பாபிலோனிய சாம்ராஜ்யம் வீழ்ச்சி அடைந்த பின்னரே, பிரகாசிக்கிறவன் என அது அழைக்கப்பட்டது என்பதை நாம் அறிய வேண்டும்; அதுவும் ஏளனமாகவே அவ்வாறு அழைக்கப்பட்டது. (ஏசாயா 14:3) சுற்றிலும் உள்ளவர்களுக்கு மேலாக தங்களை உயர்த்துவதற்கு பாபிலோனின் அரசர்களை தூண்டியது அவர்களுடைய தன்னல அகம்பாவமே. அந்த சாம்ராஜ்யத்தின் அகம்பாவம் அந்தளவுக்கு பெரிதாக இருந்ததால், அது தற்பெருமையுடன் இப்படி சொல்வதாக வருணிக்கப்படுகிறது: “நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே [“சந்திப்பு மலையிலே, NW] வீற்றிருப்பேன். . . . உன்னதமானவருக்கு ஒப்பாவேன்.”—ஏசாயா 14:13, 14.
தாவீதின் அரச பரம்பரையில் வந்த ராஜாக்களே ‘தேவனுடைய நட்சத்திரங்கள்.’ (எண்ணாகமம் 24:17) தாவீது முதற்கொண்டு இந்த ‘நட்சத்திரங்கள்’ சீனாய் மலையிலிருந்து ஆட்சி புரிந்தன. சாலொமோன் எருசலேமில் ஆலயத்தைக் கட்டின பின்பு முழு நகரமும் சீயோன் என அழைக்கப்பட்டது. நியாயப்பிரமாண உடன்படிக்கையின்படி இஸ்ரவேல் ஆண்கள் அனைவரும் வருடத்திற்கு மூன்று முறை சீயோனுக்கு பிரயாணம் செய்யும்படி கட்டளையிடப்பட்டனர். அவ்வாறு, அது “சந்திப்பு மலை” ஆயிற்று. யூதேய ராஜாக்களை கீழ்ப்படுத்தி, அந்த மலையிலிருந்து அவர்களை நீக்கும் தீர்மானத்தோடு, அந்த ‘நட்சத்திரங்களுக்கு’ மேலாக தன்னை உயர்த்தும் எண்ணத்தை நேபுகாத்நேச்சார் அறிவிக்கிறார். யூதேய ராஜாக்களை வென்றதற்குரிய பெருமையை யெகோவாவுக்கு சேர்ப்பதற்கு பதிலாக, அகம்பாவத்துடன் தன்னை யெகோவாவின் ஸ்தானத்தில் வைக்கிறார். ஆகவே, பாபிலோனிய வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரே “பிரகாசிக்கிறவன்” என அது ஏளனமாக குறிப்பிடப்படுகிறது.
பாபிலோனிய அரசர்களின் இந்தத் தற்பெருமை “இப்பிரபஞ்சத்தின் தேவனான” பிசாசாகிய சாத்தானின் அதே மனப்பான்மையைத்தான் பிரதிபலித்தது. (2 கொரிந்தியர் 4:4) அவனும்கூட அதிகாரத்தைப் பெற்று யெகோவா தேவனுக்கு மேலாக தன்னை உயர்த்த ஆசையாய் துடிக்கிறான். ஆனால் லூஸிஃபர் என்ற பெயர் வேதப்பூர்வமாக சாத்தானுக்கு சூட்டப்பட்ட பெயர் அல்ல.
• ஒன்று நாளாகமம் 2:13-15-ல் தாவீதை ஈசாயின் ஏழாம் குமாரன் என்றும் 1 சாமுவேல் 16:10, 11-ல் எட்டாம் குமாரன் என்றும் குறிப்பிடுவது ஏன்?
பூர்வ இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல் மெய் வணக்கத்திலிருந்து விலகிச் சென்ற பின்பு, யெகோவா தேவன் ஈசாயின் குமாரர்களில் ஒருவனை ராஜாவாக அபிஷேகம் பண்ணும்படி தீர்க்கதரிசியாகிய சாமுவேலை அனுப்பினார். இந்த சரித்திர சம்பவத்தைப் பற்றிய பைபிள் பதிவை பொ.ச.மு. 11-ம் நூற்றாண்டில் சாமுவேல்தான் எழுதினார்; அப்பதிவு தாவீதை ஈசாயின் எட்டாம் குமாரன் என குறிப்பிடுகிறது. (1 சாமுவேல் 16:10-13) ஆனாலும், ஆசாரியனாகிய எஸ்றாவால் சுமார் 600 ஆண்டுகளுக்குப் பின்னால் எழுதப்பட்ட பதிவு இவ்வாறு கூறுகிறது: “ஈசாய் தன் மூத்த குமாரன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் குமாரனையும், சிம்மா என்னும் மூன்றாம் குமாரனையும், நெதனெயேல் என்னும் நாலாம் குமாரனையும், ரதாயி என்னும் ஐந்தாம் குமாரனையும், ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்.” (1 நாளாகமம் 2:13-15) அப்படியானால் தாவீதின் சகோதரரில் ஒருவருக்கு என்ன ஆயிற்று, எஸ்றா ஏன் அந்தப் பெயரை விட்டுவிட்டார்?
“ஈசாயுக்கு எட்டுக் குமாரர்” இருந்ததாக பைபிள் குறிப்பிடுகிறது. (1 சாமுவேல் 17:12) அவருடைய குமாரரில் ஒருவர் திருமணமாகி பிள்ளைகளை பெறுவதற்கு முன்பே இறந்து விட்டார் என்றே தோன்றுகிறது. சந்தானமின்றி இறந்துவிட்டதால், அவர் கோத்திர சுதந்தரத்தையும் பெற முடியாது, ஈசாயின் வழியில் வந்த வம்ச பரம்பரை பதிவுகளிலும் அவரது பெயர் இடம்பெற முடியாது.
இப்போது எஸ்றாவின் காலத்தைக் குறித்து சிந்தித்துப் பார்க்கலாம். அவர் நாளாகம விவரப்பதிவுகளை சேகரித்த சூழ்நிலையை கவனியுங்கள். சுமார் 77 ஆண்டுகளுக்கு முன்புதான் பாபிலோனிய சிறையிருப்பு முடிவுக்கு வந்தது; யூதர்களோ தங்கள் தேசத்தில் மறுபடியும் குடியேறிவிட்டார்கள். நியாயாதிபதிகள், கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை கற்பிப்போர் ஆகியோரை நியமிக்கவும் யெகோவாவின் ஆலயத்தை அழகுபடுத்தவும் எஸ்றாவுக்கு பெர்சிய ராஜா அதிகாரம் அளித்திருந்தார். கோத்திர சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும் ஆசாரியத்துவத்திற்கு தகுதியானவர்கள் மட்டுமே அவ்வாறு சேவிப்பதை உறுதிப்படுத்துவதற்கும் துல்லியமான வம்சாவளி பட்டியல்கள் தேவைப்பட்டன. ஆகவே, யூதா மற்றும் தாவீதின் சரியான, நம்பத்தகுந்த வம்சாவளி பதிவு உட்பட, அந்த தேசத்தாரின் கடந்தகால வரலாறு பற்றிய ஒரு முழுமையான பதிவை எஸ்றா தயாரித்தார். சந்தானமின்றி இறந்துபோன ஈசாயின் குமாரனுடைய பெயரை அதில் குறிப்பிடுவது பொருத்தமற்றதாக இருந்திருக்கும். ஆகவே எஸ்றா அவருடைய பெயரை குறிப்பிடவில்லை.