சத்தியத்தை நேசிக்கும் இளைஞர்கள்
“வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்?” என ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஓர் எபிரெய சங்கீதக்காரன் கேட்டார். (சங்கீதம் 119:9) இக்கேள்வி இன்றைக்கும் பொருத்தமானது; ஏனென்றால் இளைஞர்கள் இன்றைய உலகில் எத்தனையோ பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். கட்டுப்பாடற்ற செக்ஸ் லீலைகளால் அநேக இளைஞருக்கு எய்ட்ஸ் தொற்றியிருக்கிறது; இந்தக் கொடிய நோயினால் அவதிப்படுபவர்களில் சுமார் பாதிப்பேர் 15-24 வயதுக்கு இடைப்பட்டவர்கள். போதைப் பொருளுக்கு அடிமையாவதாலும் இளைஞர்களுக்கு பல பிரச்சினைகள், இதனால் இளமையில் மலரும் முன்னே உயிர் பட்டுப்போகிறது. தரங்கெட்ட இசை; வன்முறையையும் ஒழுக்கக்கேட்டையும் சித்தரிக்கும் சினிமாக்கள், டிவி நிகழ்ச்சிகள், வீடியோக்கள்; இன்டெர்நெட் ஆபாசம் ஆகியவை இளைஞர்களை கெடுத்து குட்டிச் சுவராக்குகின்றன. ஆகவே சங்கீதக்காரன் கேட்ட அந்தக் கேள்வி அநேக பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இன்று அதிக அக்கறைக்குரியதாக உள்ளது.
கேள்வியைக் கேட்ட சங்கீதக்காரன் இப்படியாக அதற்கு தானே பதிலளித்தார்: “உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.” கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் நிச்சயமாகவே இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டுதல் அளிக்கிறது; அதை ஏற்று நடக்கும் அநேக இளைஞர்களின் வாழ்க்கை செழித்தோங்குகிறது. (சங்கீதம் 119:105) சுகபோக பித்துப் பிடித்த பொருளாசைமிக்க இந்த உலகில், கடவுளை நேசித்து, தொடர்ந்து ஆன்மீக ரீதியில் உறுதியாயிருக்க முயலும் சில இளைஞர்களின் உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.
பெற்றோரின் வழிநடத்துதலுக்கு நன்றியோடு இருக்கிறார்கள்
யாகோப் இம்மானூயெல் மெக்ஸிகோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் பணிபுரிகிறார்; அதற்கு முன் சில காலம் முழுநேர பயனியர் ஊழியம் செய்து வந்தார். கடவுளை சேவிப்பதற்கான ஆசை எப்படி தனக்கு வந்தது என்பதை அவர் நினைவுகூர்ந்து போற்றுதலோடு இவ்வாறு சொல்கிறார்: “என் பெற்றோர்தான் அதற்கு முக்கிய தூண்டுகோலாக இருந்தார்கள், நான் நெருங்கிப் பழகிய அனுபவமுள்ள கிறிஸ்தவ சகோதரர்கள் சிலரும்கூட ரொம்ப உதவி செய்திருக்கிறார்கள். பிரசங்க வேலையை நேசிக்கும்படி அவர்கள் என்னை தூண்டுவித்தார்கள். கனிவோடு என்னை சரியான பாதையில் நடத்தினார்கள்; என்னை அவர்கள் வற்புறுத்தியதாக நான் உணர்ந்ததே இல்லை.”
டேவிட், முழுநேர ஊழியத்தில் பல ஆண்டுகளை செலவழித்திருக்கிறார். அவரும் அவரது தம்பியும் சிறுவர்களாக இருந்தபோது அவர்களுடைய பெற்றோர் விசேஷ பயனியர்களாக சேவிக்க ஆரம்பித்தது அவர் மனதைத் தொட்டதாம். அவரது அப்பா இறந்த பிறகும்கூட விசேஷ பயனியர் ஊழியத்தை அவரது அம்மா விட்டுவிடவில்லை. அவர் பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டு நற்செய்தியையும் பிரசங்கித்து வந்தார். “பயனியர் ஆகும்படி அவர்கள் என்னை கட்டாயப்படுத்தவே இல்லை, ஆனால் முழுநேர ஊழியத்தால் நாங்கள் குடும்பமாக மிகுந்த சந்தோஷத்தை அனுபவித்தோம், அந்தச் சூழலும் தோழமையும் அதில் ஈடுபட என்னையும் தூண்டியது” என்கிறார் டேவிட். பெற்றோரின் சிறந்த வழிகாட்டுதலும் கவனிப்பும் எந்தளவுக்கு அவசியம் என்பதைக் குறித்து டேவிட் இவ்வாறு சொல்கிறார்: “பரதீஸ் இழக்கப்பட்டதிலிருந்து பரதீஸ் திரும்பப் பெறும் வரையில்a என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து நாள் தவறாமல் ராத்திரி வேளையில் அம்மா எங்களுக்கு கதைகளை வாசித்துக் காட்டுவார்கள். அந்தக் கதைகளை அவர்கள் விவரித்து சொன்ன விதம், ஆவிக்குரிய உணவை ஆசை ஆசையாக அருந்த எங்களுக்கு உதவியது.”
கூட்டங்களுக்கு போற்றுதல்
கிறிஸ்தவ கூட்டங்களுக்குப் போற்றுதல் காட்டுவது சில இளைஞர்களுக்கு கஷ்டமான காரியம். பெற்றோர் அழைத்துச் செல்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் போகிறார்கள். இருந்தாலும் அவர்கள் தவறாமல் கூட்டங்களுக்கு சென்று வந்தால் நாளடைவில் அதை நேசிக்க ஆரம்பிக்கலாம். ஆல்ஃப்ரேதோவை எடுத்துக்கொள்ளுங்கள்; 11 வயதில் முழுநேர ஊழியம் செய்ய ஆரம்பித்தார். ஐந்து வயதாக இருக்கையில் கூட்டங்களுக்கு செல்லாமல் எப்போதும் நழுவப் பார்த்ததை ஒப்புக்கொள்கிறார். ஏனென்றால் அங்கு சென்றாலே தூக்கம் கண்ணை சுழற்றுமாம், ஆனால் அப்பாவும் அம்மாவுமோ கூட்டம் நடக்கையில் அவரை தூங்க விடமாட்டார்களாம். “நான் பெரியவனாகையில் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டங்கள்மீது ஆர்வம் பிறந்தது. முக்கியமாக எழுதப் படிக்க கற்றுக்கொண்ட பிறகு ஆர்வம் அதிகரித்தது. ஏனென்றால் சொந்த வார்த்தைகளில் நான் பதில் சொல்ல ஆரம்பித்தேன்” என்கிறார் அவர்.
சின்டியா 17 வயது பெண்; ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்பவள். கடவுளுடைய ஊழியத்தை நேசிப்பதில் நல்ல கூட்டுறவு எப்படி பெரும் பங்கு வகித்ததென அவள் சொல்கிறாள். “சகோதரர்களோடு நன்கு பழகியதாலும் கூட்டங்களுக்குத் தவறாமல் சென்றதாலும் உலகப்பிரகாரமான நண்பர்கள் இல்லையே என நான் கவலைப்பட்டதில்லை; மற்ற இளைஞர்களைப் போல் நைட்கிளப்புகளுக்கு போக முடியவில்லையே அல்லது வேறு காரியங்களை செய்ய முடியவில்லையே என்ற ஏக்கமும் எனக்கு ஏற்பட்டதில்லை. கூட்டங்களில் மற்றவர்களுடைய பதில்களையும் அனுபவங்களையும் கேட்டது, என்னிடம் இருக்கும் அனைத்தையும் யெகோவாவிற்கு அர்ப்பணிக்க என்னைத் தூண்டியது; என்னிடம் இருப்பதிலேயே சிறந்தது என் இளமைதான் என்று நான் நினைக்கிறேன். ஆகவே அதை அவரது சேவைக்கு அர்ப்பணிக்க தீர்மானித்தேன்.”
இருந்தாலும் அவள் இதை ஒப்புக்கொள்கிறாள்: “நான் முழுக்காட்டுதல் எடுப்பதற்கு முன்பு ஒரு கால கட்டத்தில், ஹோம்வர்க்கை அல்லது மற்ற ஸ்கூல் வேலைகளை சாக்காக வைத்துக் கொண்டு கூட்டங்களுக்கு போவதிலிருந்து தப்பித்துக்கொள்வேன். இப்படி பல முறை கூட்டங்களுக்கு டிமிக்கி கொடுத்திருக்கிறேன். இதனால் ஆன்மீக விஷயங்களில் பலவீனமடைய ஆரம்பித்தேன். பைபிளில் ஆர்வம் காட்டாத ஒரு பையனோடு சேர்ந்து பழக ஆரம்பித்தேன். ஆனால் காலப்போக்கில் யெகோவாவின் உதவியோடு என்னை திருத்திக்கொண்டேன்.”
தனிப்பட்ட தீர்மானம்
யெகோவாவுக்கு முழுநேர ஊழியம் செய்யும் மற்றொரு இளைஞர்தான் பாப்லோ. கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை நேசிக்க எது முக்கியமாக தேவை என அவரிடம் கேட்டபோது இப்படி சொன்னார்: “இரண்டு விஷயங்கள் தேவை என்று நான் நினைக்கிறேன்; ஒன்று, தவறாமல் தனிப்பட்ட படிப்பு படிப்பது, இன்னொன்று பிரசங்க ஊழியத்தில் வைராக்கியமாக ஈடுபடுவது. யெகோவாவைப் பற்றிய சத்தியத்தை எனக்குக் கற்றுக்கொடுத்ததற்காக என் பெற்றோருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்; இதைவிட சிறப்பான ஒன்றை அவர்களால் எனக்கு கொடுத்திருக்க முடியாது என நினைக்கிறேன். இருந்தாலும் யெகோவாவை நேசிப்பதற்கான காரணத்தை தனிப்பட்ட விதமாக நான் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு, பைபிள் சத்தியத்தின் ‘அகலத்தையும் ஆழத்தையும்’ அறிந்துகொள்வது அவசியம். இப்படித்தான் யெகோவாவின் வார்த்தையின்மீது வாஞ்சையை வளர்த்துக்கொள்ள முடியும்; அதைப் பற்றி மற்றவர்களிடம் பேச வேண்டுமென்ற துடிப்பு அப்போது ‘அக்கினியைப்போல்’ நமக்குள் ‘எரியும்.’ பிரசங்க வேலைக்கான இந்த வைராக்கியம் சத்தியத்தின் மீதான நம் போற்றுதலை அதிகரிக்கும்.”—எபேசியர் 3:18; எரேமியா 20:9.
முன்னர் குறிப்பிட்ட யாகோப் இம்மானூயெலும், யெகோவாவை சேவிப்பதற்கு தனிப்பட்ட விதத்தில் தீர்மானம் எடுப்பது எவ்வளவு அவசியமென்பதை குறிப்பிடுகிறார். முழுக்காட்டுதல் எடுக்கும்படி அவரது பெற்றோர் அவரை வற்புறுத்தவே இல்லையாம். “அப்படிச் செய்ததுதான் சிறந்ததென எனக்கு படுகிறது, ஏனென்றால் அதற்குரிய நல்ல பலன்களைப் பார்க்கிறேன். உதாரணத்திற்கு, என்னுடைய நண்பர்களில் சிலர் ஒரே சமயத்தில் முழுக்காட்டுதல் எடுக்க தீர்மானித்தனர். அது சந்தோஷமான விஷயமானாலும் அவர்களில் சிலர் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்ததை என்னால் உணர முடிந்தது. சீக்கிரத்திலேயே தேவராஜ்ய காரியங்களில் அவர்களது ஆர்வம் குறைந்துவிட்டது. என் விஷயத்தில், யெகோவாவிற்கு அர்ப்பணிக்கும்படி என் பெற்றோர் வற்புறுத்தவே இல்லை. நானே சொந்தமாக முடிவெடுத்தேன்.”
சபையின் பங்கு
சில இளைஞர்கள், கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் சத்தியத்தை தங்கள் பெற்றோரின் உதவி இல்லாமலேயே சுயமாக கற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் சரியானதைக் கற்றுக்கொண்டு அதை உறுதியாக கடைப்பிடிப்பது அவ்வளவு சுலபமானதல்ல.
சத்தியம் தனக்கு எந்தளவு பயனளித்தது என்பதை நோயி குறிப்பிடுகிறார். ரொம்ப சின்ன வயதிலிருந்தே அவர் முன்கோபக்காரராகவும் படுமுரடராகவும் இருந்தார். 14 வயதில் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்; அதுமுதல் அவர் குணமே அடியோடு மாற ஆரம்பித்தது. இதைப் பார்த்த அவரது பெற்றோர் அப்போது பைபிளில் ஆர்வம் காட்டாத போதிலும் மிகவும் சந்தோஷப்பட்டனர். ஆன்மீக விஷயங்களில் நோயி படிப்படியாக முன்னேறியபோது கடவுளுடைய சேவையில் தன் வாழ்க்கையை இன்னும் முழுமையாக அர்ப்பணிக்க விரும்பினார். இப்போது அவர் முழுநேர ஊழியம் செய்கிறார்.
அலேகான்ட்ரோவும் அப்படித்தான். அவர் சிறு வயதிலேயே கிறிஸ்தவ சத்தியத்தில் ஆர்வம் காட்ட தொடங்கினார்; அவர் பெற்றோருக்கோ ஆர்வமில்லை. சத்தியத்திற்கான தன் போற்றுதலை அவர் இவ்வாறு தெரிவிக்கிறார்: “பரம்பரை கத்தோலிக்க குடும்பத்தில் நான் வளர்க்கப்பட்டேன். ஆனால் கம்யூனிஸ நாத்திகத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது; ஏனென்றால் சின்னஞ்சிறு வயதிலிருந்தே என் மனதை குழப்பிய கேள்விகளுக்கு சர்ச் பதிலளிக்கவில்லை. கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள யெகோவாவின் அமைப்பு எனக்கு உதவியது. அது நிஜமாகவே என் உயிரைக் காப்பாற்றியது; ஏனென்றால் நான் மட்டும் பைபிளைப் படித்திருக்காவிட்டால் ஒழுக்கக்கேட்டிற்கோ மதுபானத்திற்கோ போதைப் பொருளுக்கோ அடிமையாகியிருப்பேன். சில புரட்சிக் கும்பல்களில் போய் சேர்ந்திருப்பேன்; அதனால் வாழ்க்கையில் எனக்கு வேதனைகளே மிஞ்சியிருக்கும்.”
பெற்றோரின் உதவி இல்லாமலேயே எவ்வாறு இளைஞர்களால் சத்தியத்தைக் கண்டுபிடிப்பதிலும் அதைக் கடைப்பிடிப்பதிலும் உறுதியாக இருக்க முடியும்? இந்த விஷயத்தில் மூப்பர்களும் சபையிலுள்ள மற்றவர்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. நோயி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தனிமை என்னை வாட்டியதே இல்லை, ஏனென்றால் யெகோவா எப்போதும் என்னோடு இருந்திருக்கிறார். அதோடு அன்பான சகோதர சகோதரிகள் அநேகரும் எனக்கு பக்க பலமாக இருந்திருக்கிறார்கள்; அவர்கள் ஆவிக்குரிய கருத்தில் என் அப்பாவாக, அம்மாவாக, சகோதரராக ஆகியிருக்கிறார்கள்.” இப்போது நோயி பெத்தேலில் சேவை செய்கிறார், தன் நேரத்தை கடவுளுடைய சேவைக்கு அர்ப்பணித்திருக்கிறார். அதேபோல், அலேகான்ட்ரோ இவ்வாறு சொல்கிறார்: “என் சபையின் மூப்பர்கள் அன்பாக தனிப்பட்ட விதத்தில் என்மீது அக்கறை காட்டினார்கள்; இந்த ஆசீர்வாதத்திற்காக நான் எப்போதுமே நன்றியுடன் இருப்பேன். அதுவும், 16 வயதில் பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது இளைஞருக்கே உரிய துருதுருப்பு என் மனதையும் ஆக்கிரமித்திருந்தது; அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் செய்த உதவியை மறக்கவே மாட்டேன். சபையில் இருந்த குடும்பங்கள் என்னை ஒருபோதும் கைவிடவில்லை. என்னை உபசரித்து தங்க இடமும் உண்ண உணவும் மட்டுமல்ல தங்கள் இருதயத்தையும் கொடுக்க யாராவது எப்போதும் தயாராக இருந்தார்கள்.” அலேகான்ட்ரோ முழுநேர ஊழியம் செய்ய ஆரம்பித்து இப்போது 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
மதம் என்பது வயதானவர்களுக்கே உரியது என சிலர் நினைக்கிறார்கள். என்றாலும் அநேக இளைஞர்கள் சிறுவயதிலேயே பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு யெகோவாவை நேசித்து வருகிறார்கள், அவருக்கு உண்மையுள்ளவர்களாகவும் நிலைத்திருக்கிறார்கள். சங்கீதம் 110:3-ல் (தி.மொ.) பதிவு செய்யப்பட்டுள்ள தாவீதின் வார்த்தைகளை இந்த இளைஞருக்குப் பொருத்தலாம்: “உமது பராக்கிரமத்தின் நாளிலே உமது ஜனம் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமுமுள்ளதாய்க் கூடிவரும்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உமது யௌவன ஜனம் உம்மிடம் திரண்டுவரும்.”
சத்தியத்தைக் கற்றுக்கொண்டு அதில் நிலைத்திருப்பது இளைஞருக்கு சவால்தான். அநேக இளைஞர்கள் யெகோவாவின் அமைப்போடு மிக நெருங்கிய கூட்டுறவை வைத்துக்கொண்டு, கூட்டங்களுக்கு தவறாமல் சென்று, பைபிளை ஊக்கமாக படிப்பதைக் காண்பது எவ்வளவு ஆனந்தத்தைத் தருகிறது! இவ்வாறு செய்வதன் மூலம் கடவுளுடைய வார்த்தையிடமும் அவரது சேவையிடமும் உண்மையான அன்பை அவர்கள் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.—சங்கீதம் 119:15, 16.
[அடிக்குறிப்பு]
a 1958-ல் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட புத்தகம்; இப்போது அச்சிடப்படுவதில்லை.