“பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்”
“பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.” —யாக்கோபு 4:7.
1. இன்றைய உலகத்தைப் பற்றி என்ன சொல்லலாம், அபிஷேகம் பண்ணப்பட்டவர்களும் அவர்களது கூட்டாளிகளும் விழிப்புடனிருப்பது ஏன் அவசியம்?
“கடவுள் மறைந்து விட்டார், ஆனால் பிசாசோ நிலைத்திருக்கிறான்.” பிரெஞ்சு எழுத்தாளர் ஆன்ரே மால்ரோ சொன்ன அந்த வார்த்தைகள் நாம் வாழும் இந்த உலகுக்கு பொருத்தமானவையே. ஏனெனில் மனிதரின் செயல்கள் கடவுளுடைய சித்தத்தைவிட பிசாசின் தந்திரங்களையே வெளிப்படுத்துபவையாக தெரிகின்றன. சாத்தான், “சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும்” செயல்பட்டு மனிதரை திசைதிருப்புகிறான். (2 தெசலோனிக்கேயர் 2:9, 10) என்றாலும், இந்தக் “கடைசி நாட்களில்” சாத்தான் கடவுளுடைய ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்களை குறிவைத்தே எல்லா முயற்சிகளையும் செய்கிறான். “தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய” அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களோடு அவன் போரிடுகிறான். (2 தீமோத்தேயு 3:1; வெளிப்படுத்துதல் 12:9, 17) ஆகவே, கடவுளுடைய அபிஷேகம் பண்ணப்பட்ட இந்த ஊழியர்களும் பூமிக்குரிய நம்பிக்கையுடைய அவர்களது கூட்டாளிகளும் விழிப்புடனிருப்பது அவசியம்.
2. ஏவாளை சாத்தான் எப்படி ஏமாற்றினான், எதற்கு பயப்படுவதாக அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்?
2 சாத்தான் சுத்த வஞ்சகன். அவன் தந்திரமாக சர்ப்பத்தை பயன்படுத்தி, கடவுளை சார்ந்திராமல் இஷ்டப்படி நடந்து கொள்வதன் மூலம் மிகுந்த மகிழ்ச்சியை கண்டடைய முடியும் என்ற எண்ணத்தை தூண்டிவிட்டு ஏவாளை வஞ்சித்தான். (ஆதியாகமம் 3:1-6) சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு பின்பு, அப்போஸ்தலனாகிய பவுல், கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்கள் சாத்தானின் தந்திரங்களுக்குள் சிக்கிக்கொள்வார்களோ என்ற தன் பயத்தை தெரிவித்தார். “சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்” என அவர் எழுதினார். (2 கொரிந்தியர் 11:3) சாத்தான் மக்களின் மனங்களை கெடுத்து அவர்களுடைய எண்ணங்களை தவறான பாதையில் திசைதிருப்புகிறான். ஏவாளை ஏமாற்றியதைப் போலவே, தவறான தீர்மானத்தை எடுக்க கிறிஸ்தவர்களையும் அவன் தூண்டலாம்; யெகோவாவும் அவரது குமாரனும் ஏற்றுக்கொள்ளாத ஏதோவொன்றின் பேரிலேயே தங்கள் மகிழ்ச்சி சார்ந்திருப்பதாக எண்ணும்படி அவர்களை தூண்டலாம்.
3. பிசாசை எதிர்த்து நிற்க என்ன பாதுகாப்பை யெகோவா அளிக்கிறார்?
3 சூதுவாதறியாத பட்சிகளைப் பிடிக்க கண்ணிகளை வைக்கும் வேடனுக்கு சாத்தானை ஒப்பிடலாம். சாத்தானின் கண்ணிகளைத் தவிர்க்க, ‘உன்னதமானவரின் மறைவிடத்தில் தங்கியிருப்பது’ அவசியம்; அது, தாங்கள் செய்யும் காரியங்களில் யெகோவாவின் சர்வலோக பேரரசுரிமையை அங்கீகரிப்போருக்கு அவர் பாதுகாப்பளிக்கும் அடையாள அர்த்தமுள்ள இடமாக திகழ்கிறது. (சங்கீதம் 91:1-3) கடவுள் தமது வார்த்தை, பரிசுத்த ஆவி, அமைப்பு ஆகியவற்றின் வாயிலாக அளிக்கிற சகல பாதுகாப்பும் நமக்கு அவசியம். அதன் மூலம், ‘பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாக’ நாம் இருக்கலாம். (எபேசியர் 6:11) யெகோவாவின் ஊழியர்களை தன் வலையில் சிக்க வைக்கும் முயற்சியில் பிசாசு அநேக உபாயங்களையும் தந்திரங்களையும் பயன்படுத்துகிறான்.
ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு சாத்தான் வைத்த கண்ணிகள்
4. ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் எத்தகைய சூழ்நிலையில் வாழ்ந்து வந்தார்கள்?
4 பொ.ச. முதலாம், இரண்டாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ரோம சாம்ராஜ்யத்தின் செல்வாக்கு கொடிகட்டிப் பறந்த காலத்தில் வாழ்ந்து வந்தார்கள். ரோம சாம்ராஜ்யத்தின் ஓரளவு சமாதான காலம் வாணிபம் செழித்தோங்க வாய்ப்பளித்தது. இந்தச் செழுமை ஆளும் வர்க்கத்தினருக்கு அதிக ஓய்வுநேரத்தை அளித்தது. ஆகவே, பொதுமக்கள் கலகம் செய்யாமல் இருப்பதற்காக அதிகாரிகள் எக்கச்சக்கமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை அவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். சில காலப் பகுதிகளில், வேலை நாட்களுக்கு சமமாக பொது விடுமுறை நாட்களும் இருந்தன. உணவையும் வேடிக்கை விளையாட்டுகளையும் ஏற்பாடு செய்வதற்காக தலைவர்கள் பொது நிதியை பயன்படுத்தினார்கள்; இவ்வாறு மக்களின் வயிறை நிரப்பி மனதை திசைதிருப்பினார்கள்.
5, 6. (அ) ரோமர்களின் காட்சி அரங்குகளுக்கும் வட்டரங்குகளுக்கும் வழக்கமாக செல்வது கிறிஸ்தவர்களுக்கு ஏன் பொருத்தமற்றதாக இருந்தது? (ஆ) சாத்தான் எத்தகைய தந்திரத்தை பயன்படுத்தினான், கிறிஸ்தவர்கள் இதை எப்படி தவிர்த்திருக்கலாம்?
5 ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு இது ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியதா? அப்போஸ்தலர்களுடைய காலத்திற்கு பின் வாழ்ந்த டெர்ட்டுல்லியன் போன்ற எழுத்தாளர்களின் எச்சரிப்புகளை காண்கையில், அன்றைய பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் பெரும்பாலானவை உண்மை கிறிஸ்தவர்களுக்கு ஆவிக்குரிய ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் ஆபத்துகளை விளைவிப்பவையாக இருந்தது தெரிகிறது. அதற்கு ஒரு காரணம், பெரும்பாலான பொது விழாக்களும் விளையாட்டுகளும் பொய்க் கடவுட்களை கௌரவிப்பதற்காகவே நடத்தப்பட்டன. (2 கொரிந்தியர் 6:14-18) அரங்கங்களில் காட்டப்பட்ட பழங்கால நாடகங்களில் பலவும் முற்றிலும் ஒழுக்கக்கேடான அல்லது இரத்தம் சிந்துதல் நிறைந்த வன்முறை காட்சிகளாகவே இருந்தன. மெல்ல மெல்ல பழங்கால நாடகங்கள் மீதான மக்களின் ரசனை குறைந்து விட்டது; அதற்கு பதிலாக கீழ்த்தரமான அபிநயக்கூத்துகள் அரங்கேறின. பூர்வ ரோமில் அன்றாட வாழ்க்கை (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் சரித்திராசிரியரான ஷேரோம் கார்கோபீனோ இவ்வாறு கூறுகிறார்: “இந்த நடனங்களில் நடிகைகள் நிர்வாணமாக நடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர் . . . இரத்தம் ஆறாக பெருக்கெடுத்தது . . . [இந்த அபிநயக்கூத்து] ஒழுக்கக்கேட்டில் மிகவும் நெறிபிறண்ட நிலையை எட்டியது; அது தலைநகர் வாசிகளை தன் பிடியில் சிக்க வைத்திருந்தது. இப்படிப்பட்ட வக்கிரமான காட்சிகள் அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தவில்லை; ஏனெனில் அந்த வட்டரங்கில் நடைபெற்ற வெறித்தனமான வன்முறை காட்சிகள் ஏற்கெனவே அவர்களுடைய உணர்ச்சிகளை மரத்துப்போகச் செய்திருந்தன, இயல்புணர்ச்சிகளை கெடுத்திருந்தன.—மத்தேயு 5:27, 28.
6 வட்டரங்குகளில் வீரர்கள் ஒருவரையொருவர் சாகடிக்கும் வரை போரிட்டனர் அல்லது கொடிய மிருகங்களோடு சண்டையிட்டு அவற்றை கொன்றனர், இல்லையேல் அவற்றால் கொல்லப்பட்டனர். குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் இக்கொடிய மிருகங்களிடம் தூக்கி எறியப்பட்டனர்; நாளடைவில் அநேக கிறிஸ்தவர்களும் இவ்வாறு தூக்கி எறியப்பட்டனர். ஒழுக்கக்கேடும் வன்முறையும் சர்வசாதாரணமாகி, மக்கள் அதை நாடித் தேடும் அளவுக்கு அவற்றின் மீதான அவர்களது வெறுப்பை மழுங்கச் செய்வதே அன்றும் சாத்தானுடைய தந்திரமாக இருந்தது. அந்தக் கண்ணியை தவிர்க்க ஒரே வழியாக இருந்தது காட்சி அரங்குகளுக்கும் வட்டரங்குகளுக்கும் செல்லாமல் இருப்பதே.—1 கொரிந்தியர் 15:32, 33.
7, 8. (அ) ரத போட்டிகளைப் பார்ப்பது ஒரு கிறிஸ்தவனுக்கு ஏன் ஞானமற்றதாக இருந்திருக்கும்? (ஆ) கிறிஸ்தவர்களை சிக்க வைப்பதற்கு ரோமர்களின் குளிக்குமிடங்களை சாத்தான் எப்படி பயன்படுத்தியிருக்கலாம்?
7 பிரமாண்டமான நீள்வட்ட அரங்குகளில் நடத்தப்பட்ட ரத போட்டிகள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியதில் சந்தேகமில்லை, ஆனால் கிறிஸ்தவர்களுக்கோ அவை தகாதவை; காரணம் அங்கு சென்ற கூட்டத்தினர் பெரும்பாலும் கோபாவேசமடைந்தனர். பார்வையாளர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டதாக மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் குறிப்பிட்டார்; அந்த அரங்கு கட்டடத்தின் வளைவு பந்தல்களின் கீழ் “ஜோதிடர்களும் விலைமாதர்களும் தொழில் நடத்தி வந்ததாக” கார்கோபீனோ குறிப்பிடுகிறார். ஆகவே, அந்த ரோம அரங்கு கிறிஸ்தவர்களுக்கு ஏற்ற இடமாக இராதது தெளிவாகிறது.—1 கொரிந்தியர் 6:9, 10.
8 ரோமர்களின் பிரசித்திப் பெற்ற குளிக்குமிடங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? சுத்தமாக இருப்பதற்கு குளிப்பதில் எந்தத் தவறும் இல்லைதான். ஆனால் ரோமர்களின் குளிக்குமிடங்களுக்கென பெரிய பெரிய கட்டடங்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் மஸாஜ் அறைகள், உடற்பயிற்சி கூடங்கள், சூதாட்ட அறைகள், புசித்துக் குடிப்பதற்கான இடங்கள் ஆகியவை இருந்தன. குளிப்பதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் இருபாலாரும் சேர்ந்து குளிப்பதற்கும் பெரும்பாலும் அனுமதிக்கப்பட்டனர். அலெக்ஸாண்டிரியாவை சேர்ந்த கிளெமென்ட் இவ்வாறு எழுதினார்: “ஆண், பெண் என்ற பாகுபாடில்லாமல் இருபாலாரும் சேர்ந்து குளிப்பதற்கு அனுமதியளிக்கப்படுகிறது; அங்கே அவர்கள் தங்கள் ஆடைகளை களைந்துவிட்டு ஒழுக்கக்கேடான காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.” இவ்வாறு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஸ்தாபனத்தையே கிறிஸ்தவர்களுக்கு ஒரு கண்ணியாக சாத்தான் பயன்படுத்தியிருக்கலாம். விவேகிகளோ அத்தகைய இடங்களுக்கு செல்லவில்லை.
9. ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் என்னென்ன கண்ணிகளை தவிர்க்க வேண்டியிருந்தது?
9 ரோம பேரரசு செல்வாக்குமிக்கதாக திகழ்ந்த காலத்தில், மக்கள் மத்தியில் சூதாட்டம் பெரிதும் விரும்பப்பட்ட பொழுதுபோக்காக இருந்தது. ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் அரங்குகளுக்கு செல்லாமல் இருப்பதுதானே ரதத்தின் மீது பந்தயம் கட்டுவதைத் தவிர்க்க அவர்களுக்கு உதவியது. சிறிய அளவிலான சூதாட்டமும்கூட சத்திரங்கள், மதுபானக் கடைகள் போன்றவற்றின் உள்ளறைகளில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டன. சூதாட்டக்காரர்கள், மற்றவரின் கையிலிருக்கும் கூழாங்கற்கள் ஒற்றையா இரட்டையா என பந்தயம் கட்டி விளையாடினார்கள். சூதாட்டம் மக்களின் வாழ்க்கையில் விறுவிறுப்பை ஏற்படுத்தியதற்கு காரணம், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் நம்பிக்கையை அது அவர்களுக்கு அளித்தது. (எபேசியர் 5:5) அதோடு, விலைமாதர்களே பெரும்பாலும் மதுபானக் கடைகளில் பணிப் பெண்களாக பணியாற்றினார்கள், அது பாலியல் ஒழுக்கக்கேட்டின் அபாயத்தை மேலும் அதிகரிக்க செய்தது. ரோம பேரரசின் கீழிருந்த நகரங்களில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு சாத்தான் வைத்த கண்ணிகளில் இவை ஒரு சிலவே. இன்றைய நிலை மிக வித்தியாசமானதா என்ன?
சாத்தானின் இன்றைய கண்ணிகள்
10. இன்றைய சூழ்நிலை எவ்வாறு ரோம பேரரசில் நிலவியிருந்த நிலைமைகளுக்கு ஒத்திருக்கிறது?
10 நூற்றாண்டுகள் பல கடந்தாலும் சாத்தானுடைய தந்திரங்களில் மாற்றமேதுமில்லை. ஒழுக்கத்தில் தறிகெட்டு போயிருந்த கொரிந்து நகரில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் ‘சாத்தானால் மோசம்போகாதிருக்கும்படி’ அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களுக்கு உறுதியான ஆலோசனையை கொடுத்தார். “[சாத்தானுடைய] தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே” என அவர் கூறினார். (2 கொரிந்தியர் 2:11) அநேக வளர்ச்சியடைந்த நாடுகளில் இன்று காணப்படும் சூழ்நிலை, ரோம பேரரசு சீரும் சிறப்புமாய் திகழ்ந்த காலத்தில் நிலவிய சூழ்நிலைக்கு ஒத்ததாக இருக்கிறது. முன்பைவிட இன்று பலருக்கு அதிக ஓய்வு நேரம் கிடைக்கிறது. அரசாங்க லாட்டரிகள் ஏழை எளியவர்களுக்கும்கூட நம்பிக்கையின் ஒளிக்கீற்றை அளிக்கின்றன. மக்களின் மனதிற்கு தீனியாக மலிவான பொழுதுபோக்குகள் மலிந்து கிடக்கின்றன. விளையாட்டு மைதானங்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன, மக்கள் சூதாட்ட பந்தயத்தில் இறங்குகின்றனர், சில சமயங்களில் கூட்டத்தார் கொதித்தெழுகின்றனர், பல சமயங்களில் விளையாடுவோரும் கோபாவேசம் அடைகின்றனர். மக்களின் காதில் சதா ஒலிப்பது தரம்கெட்ட இசை; நாடக அரங்குகளிலும் சினிமாவிலும் டிவியிலும் இடம்பெறுவது இழிவான காட்சிகள். சில நாடுகளில் ஆண், பெண் இருபாலாரும் சேர்ந்து நீராவிக் குளியல் ஸ்தலங்களிலும் ஹாட் ஸ்பிரிங்குகளிலும் குளிப்பது சர்வசாதாரணம், சில கடற்கரை பகுதிகளில் ஆடையின்றி குளிப்பதைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. கிறிஸ்தவத்தின் ஆரம்ப கால நூற்றாண்டுகளில் இருந்தது போலவே இன்றும் ஓய்வு நேர பொழுதுபோக்கு காரியங்கள் வாயிலாக கடவுளுடைய ஊழியர்களை ஆசைகாட்டி வசப்படுத்த பார்க்கிறான் சாத்தான்.
11. ரிலாக்ஸாக இருக்க விரும்புவதில் என்ன கண்ணிகள் இருக்கின்றன?
11 மன அழுத்தம் நிறைந்த ஓர் உலகில் அவ்வப்போது எல்லாவற்றையும் மறந்து ரிலாக்ஸாக இருக்க விரும்புவது இயல்பானதே. என்றாலும், ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு ஆபத்தானவையாக இருந்த ரோமர்களின் குளிக்குமிடங்களைப் போலவே சில சுற்றுலா மையங்கள் சாத்தான் உபயோகிக்கும் கண்ணியாக நிரூபித்திருக்கின்றன; ஒழுக்கக்கேட்டிலோ குடிவெறியிலோ இன்றைய கிறிஸ்தவர்களை சிக்க வைப்பதற்கு அவற்றை அவன் பயன்படுத்தியிருக்கிறான். “மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் [“கெட்ட சகவாசங்கள்,” NW] நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப் பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே” என கொரிந்திய கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதினார்.—1 கொரிந்தியர் 15:33, 34.
12. யெகோவாவின் ஊழியர்களை சிக்க வைப்பதற்கு இன்று சாத்தான் உபயோகிக்கும் சில தந்திரங்கள் யாவை?
12 ஏவாளின் சிந்தனையை கெடுக்க சாத்தான் எவ்வாறு தந்திரமாக செயல்பட்டான் என்பதை நாம் பார்த்தோம். (2 கொரிந்தியர் 11:3) யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்களைப் போலவே தாங்களும் இருப்பதாக முடிந்தவரை காட்டிக்கொள்வதன் மூலம் சிலரை சத்தியத்திற்குள் ஆதாயப்படுத்திக் கொள்ளலாம் என சிந்திக்கத் தூண்டுவதே இன்று பிசாசு வைக்கும் கண்ணிகளில் ஒன்று. சிலசமயங்களில் மட்டுக்கு மீறி இவ்வாறு அவிசுவாசிகளைப் போல் நடந்துகொள்வது விபரீதத்தில் போய் முடிகிறது. (ஆகாய் 2:11-14) ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களாகிய சிறியோரும் பெரியோரும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து ‘தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தும்படி’ தூண்டிவிடுவது சாத்தானுடைய தந்திரங்களில் மற்றொன்று ஆகும். (எபேசியர் 4:30) சிலர் இன்டர்நெட்டை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் இந்தக் கண்ணிக்குள் சிக்கியிருக்கிறார்கள்.
13. பிசாசின் தந்திரங்களில் தீங்கற்றதாக தோன்றும் ஒரு கண்ணி எது, நீதிமொழிகளிலுள்ள என்ன ஆலோசனை இங்கு பொருத்தமாக இருக்கிறது?
13 சாத்தானின் கண்ணிகளில் மற்றொன்று, தீங்கற்றது போல் தோன்றும் மாய மந்திரம். எந்தவொரு உண்மை கிறிஸ்தவரும் வேண்டுமென்றே பேய் வணக்கத்திலோ ஆவியுலகத் தொடர்புகளிலோ ஈடுபட மாட்டார். ஆனாலும், சிலர் கவனக்குறைவால் அறியாமலேயே வன்முறையையோ மாயமந்திர பழக்கங்களையோ சிறப்பித்துக் காட்டும் சினிமாக்கள், டிவி தொடர்கள் போன்றவற்றை பார்க்கிறார்கள், வீடியோ கேம்ஸ்களை விளையாடுகிறார்கள், சிறுவர் புத்தகங்களையும் காமிக்ஸுகளையும்கூட படிக்கிறார்கள். மாய மந்திரத்தோடு சம்பந்தப்பட்ட எதையும் தவிர்க்க வேண்டும். “மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முள்ளுகளும் கண்ணிகளுமுண்டு; தன் ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளுக்குத் தூரமாய் விலகிப்போவான்” என்கிறது நீதிமொழி. (நீதிமொழிகள் 22:5) சாத்தான், ‘இப்பிரபஞ்சத்தின் தேவனாக’ இருப்பதால் மிகப் பிரபலமானதாக தோன்றும் எதுவும் சாத்தானுடைய மறைவான கண்ணிகளில் ஒன்றாக இருக்க வாய்ப்புண்டு.—2 கொரிந்தியர் 4:4; 1 யோவான் 2:15, 16.
இயேசு பிசாசை எதிர்த்தார்
14. பிசாசின் முதல் சோதனையை இயேசு எவ்வாறு எதிர்த்தார்?
14 பிசாசை எதிர்த்து அவனை ஓடிப்போகச் செய்வதில் இயேசு சிறந்த மாதிரி வைத்தார். இயேசு முழுக்காட்டுதல் பெற்று 40 நாட்கள் உபவாசமிருந்த பின்பு, அவரை சாத்தான் சோதித்தான். (மத்தேயு 4:1-11) உபவாசத்திற்கு பிறகு இயல்பாகவே இயேசுவுக்கு ஏற்பட்ட பசியை முதல் சோதனைக்கு சாதகமாக அவன் பயன்படுத்த விரும்பினான். சரீர தேவை ஒன்றை பூர்த்தி செய்வதற்காக இயேசு தன் முதல் அற்புதத்தை நடப்பிக்கும்படி சாத்தான் சொன்னான். இயேசு உபாகமம் 8:3-ஐ மேற்கோள் காட்டி, தம் அதிகாரத்தை சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ள மறுத்தார்; சரீர உணவைவிட ஆவிக்குரிய உணவையே உயர்வாக கருதினார்.
15. (அ) இயேசுவை சோதிப்பதற்கு என்ன இயல்பான ஆசையை சாத்தான் பயன்படுத்தினான்? (ஆ) இன்று கடவுளுடைய ஊழியர்களுக்கு எதிராக பிசாசு பயன்படுத்தும் முக்கிய தந்திரங்களில் ஒன்று எது, ஆனால் நாம் எப்படி அவனை எதிர்க்கலாம்?
15 இந்த சோதனை சம்பந்தமாக கவனிக்க வேண்டிய குறிப்பு, இயேசுவை பாலியல் பாவத்தில் ஈடுபடுத்த பிசாசு முயலவில்லை என்பதே. சாப்பிடும் ஆர்வத்தை இயல்பாக தூண்டிவிடும் பசியே, சரீரப்பிரகாரமான பலமான ஆசையாக இந்த சந்தர்ப்பத்தில் தோன்றியதால், இயேசுவை சோதிப்பதற்கு அதை அவன் கையாண்டான். இன்று கடவுளுடைய ஜனங்களை வசீகரிக்க பிசாசு என்னென்ன சோதனைகளை பயன்படுத்துகிறான்? அவன் எத்தனை எத்தனையோ விதவிதமான சோதனைகளை பயன்படுத்துகிறான்; ஆனால், யெகோவாவின் ஜனங்களை அவர்களுடைய உத்தமத்திலிருந்து விலக்க அவன் பயன்படுத்தும் முக்கிய தந்திரங்களில் ஒன்று பாலியல் சம்பந்தப்பட்ட சோதனைகள். இயேசுவைப் பின்பற்றுவதன் மூலம், நாமும் பிசாசை எதிர்த்து சோதனைகளைத் தடுக்கலாம். இயேசு பொருத்தமான வேத வசனங்களை நினைவுகூர்ந்து சாத்தானின் முயற்சிகளை முறியடித்தது போலவே சோதனைகளை சந்திக்கையில் ஆதியாகமம் 39:9, 1 கொரிந்தியர் 6:18 போன்ற வசனங்களை நாம் நினைவுபடுத்திப் பார்க்கலாம்.
16. (அ) இரண்டாவது முறையாக இயேசுவை சாத்தான் எப்படி சோதித்தான்? (ஆ) யெகோவாவை பரீட்சிக்க தூண்டுவதற்கு என்னென்ன வழிகளில் நம்மை சோதிக்க சாத்தான் முயலலாம்?
16 அடுத்ததாக, ஆலயத்தின் மதிலிலிருந்து குதிக்கும்படியும் தூதர்கள் மூலமாக அவரை காப்பாற்ற கடவுளுக்கு திறன் இருக்கிறதா என பரீட்சிக்கும்படியும் இயேசுவிடம் பிசாசு அறைகூவல் விட்டான். இயேசுவோ உபாகமம் 6:16-ஐ மேற்கோள் காட்டி தம் பிதாவை பரீட்சை பார்க்க மறுத்தார். ஆலயத்தின் உப்பரிகையிலிருந்து குதிக்கும்படி சாத்தான் நம்மிடம் சொல்லாவிட்டாலும், யெகோவாவை பரீட்சிக்கும்படி அவன் நம்மை தூண்டலாம். நம்முடைய ஆடை அலங்கார விஷயத்தில் கண்டிக்கப்படாத அளவுக்கு உலகத்தின் போக்கை முடிந்தவரை நெருக்கமாக பின்பற்ற ஆசைப்படுகிறோமா? சந்தேகத்திற்குரிய பொழுதுபோக்குகளில் கலந்துகொள்ள தூண்டப்படுகிறோமா? அப்படியானால் நாம் யெகோவாவை பரீட்சிப்பவர்களாக இருப்போம். அப்படிப்பட்ட மனச்சாய்வுகள் நமக்கு இருந்தால், சாத்தான் நம்மை விட்டு ஓடிப்போக மாட்டான், மாறாக நம்மையே சுற்றிச் சுற்றி வருவான்; கடவுளை எதிர்ப்பதில் அவனோடு சேர்ந்துகொள்ள நம்மை சதா இழுத்துக்கொண்டே இருப்பான்.
17. (அ) மூன்றாவது முறையாக இயேசுவை பிசாசு எப்படி சோதித்தான்? (ஆ) யாக்கோபு 4:7 எவ்வாறு நம் விஷயத்தில் உண்மையாக நிரூபிக்கலாம்?
17 ஒரு வணக்கச் செயலுக்கு ஈடாக உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அளிக்க சாத்தான் முன்வந்தபோது, இயேசு மறுபடியுமாக வேத வசனத்தை மேற்கோள் காட்டி அவனை எதிர்த்தார். தம் பிதாவை மட்டுமே வணங்குவதில் உறுதியாக இருந்தார். (உபாகமம் 5:9; 6:13; 10:20) சாத்தான் நமக்கு இந்த உலகத்தின் ராஜ்யங்களை அளிக்க முன்வராவிட்டாலும், எப்போதும் பொருட்செல்வத்தை பகட்டாக காண்பித்து நமக்கென ஒரு குட்டி ராஜ்யத்தை ஏற்படுத்திக்கொள்ளும்படியான எதிர்பார்ப்பை தூண்டிவிடுகிறான். இந்த விஷயத்தில் இயேசுவைப் போலவே நாமும் நடந்துகொண்டு யெகோவாவுக்கு முழுமையான பக்தியை செலுத்துகிறோமா? அப்படியானால், இயேசுவின் விஷயத்தில் என்ன நடந்ததோ அதுவே நம் விஷயத்திலும் நடக்கும். “அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான்” என மத்தேயுவின் பதிவு குறிப்பிடுகிறது. (மத்தேயு 4:11) பொருத்தமான பைபிள் நியமங்களை நினைவுபடுத்தி, அவற்றிற்குக் கீழ்ப்படிவதன் மூலம் சாத்தானை உறுதியாக எதிர்த்தோமானால் அவன் நம்மை விட்டு விலகிப்போவான். “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்” என சீஷனாகிய யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 4:7) பிரான்ஸை சேர்ந்த ஒரு கிறிஸ்தவர் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு இவ்வாறு எழுதினார்: “சாத்தான் உண்மையிலேயே படுதந்திரசாலி. எனக்கு நல்லெண்ணங்கள் இருந்தாலும், என் உணர்ச்சிகளையும் ஆசைகளையும் கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. ஆனாலும் தைரியத்தோடும், பொறுமையோடும், எல்லாவற்றிற்கும் மேலாக யெகோவாவின் உதவியோடும் என் உத்தமத்தைக் காத்துக்கொண்டு சத்தியத்தில் உறுதியாக இருக்கிறேன்.”
பிசாசை எதிர்க்க முற்றிலும் தயாராயிருத்தல்
18. பிசாசை எதிர்க்க என்ன ஆவிக்குரிய ஆயுதவர்க்கம் நம்மை தயார்படுத்துகிறது?
18 “பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்க” தகுதியுள்ளவர்களாக ஆவதற்கு யெகோவா நமக்கு ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்தை அளித்திருக்கிறார். (எபேசியர் 6:11-18) சத்தியத்திடம் உள்ள அன்பு நம் அரைகளுக்கு கச்சையாக இருக்கும், அதாவது கிறிஸ்தவ நடவடிக்கைகளில் ஈடுபட நம்மை தயார்படுத்தும். யெகோவாவின் நீதியான தராதரங்களை பின்பற்றுவதற்கான நம் தீர்மானம், இருதயத்தை பாதுகாக்கும் மார்க்கவசத்தைப் போலிருக்கும். நற்செய்தி நம் பாதங்களுக்கு பாதரட்சையாக இருக்குமேயானால், நாம் தவறாமல் பிரசங்க வேலையில் ஈடுபடுவோம்; ஆவிக்குரிய ரீதியில் அது நம்மை பலப்படுத்தி, பாதுகாத்திடும். நம் பலமான விசுவாசம், ‘பொல்லாங்கன் எய்யும் அக்கினி ஆஸ்திரங்களிலிருந்தும்’ அவனுடைய மறைமுக தாக்குதல்கள், சோதனைகள் ஆகியவற்றிலிருந்தும் நம்மை பாதுகாக்கும் மிகப் பெரிய கேடயம் போன்றிருக்கும். யெகோவாவுடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தில் நமக்குள்ள திடநம்பிக்கை, நம் சிந்தனையை பாதுகாத்து மனநிம்மதி அளிக்கும் தலைச்சீராவைப் போலிருக்கும். (பிலிப்பியர் 4:7) கடவுளுடைய வார்த்தையை பயன்படுத்துவதில் வல்லவர்களாக ஆகும்போது, அது ஆவிக்குரிய விதத்தில் சாத்தானின் அடிமைத்தனத்தில் இருப்போரை விடுவிப்பதற்குரிய பட்டயம் போன்று இருக்கும். இயேசு சோதிக்கப்பட்டபோது வேத வசனங்களை பயன்படுத்தி தம்மை தற்காத்துக்கொண்ட விதமாகவே நாமும் செய்யலாம்.
19. ‘பிசாசை எதிர்த்து நிற்பதோடு’ வேறெதுவும் செய்ய வேண்டும்?
19 நாம் “தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை” தரித்தவர்களாக, தொடர்ந்து ஜெபிக்கையில், சாத்தான் நம்மைத் தாக்கும்போது யெகோவா பாதுகாப்பார் என உறுதியோடிருக்கலாம். (யோவான் 17:15; 1 கொரிந்தியர் 10:13) ஆனால் ‘பிசாசை எதிர்த்து நிற்பது’ மட்டும் போதாது என யாக்கோபு காட்டினார். எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மை அக்கறையோடு கவனிப்பவரான ‘தேவனுக்குக் கீழ்ப்படிந்திருக்கவும்’ வேண்டும். (யாக்கோபு 4:7, 8) நாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருப்பது எப்படி என்பதை அடுத்த கட்டுரை கலந்தாலோசிக்கும்.
எப்படி பதிலளிப்பீர்கள்?
• ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் சாத்தானுடைய என்ன கண்ணிகளை தவிர்க்க வேண்டியிருந்தது?
• யெகோவாவின் ஊழியர்களை சிக்க வைக்க இன்று சாத்தான் பயன்படுத்தும் தந்திரங்கள் யாவை?
• பிசாசின் சோதனைகளை இயேசு எப்படி எதிர்த்தார்?
• பிசாசை எதிர்க்க என்ன ஆவிக்குரிய ஆயுதவர்க்கம் நமக்கு உதவுகிறது?
[பக்கம் 9-ன் படம்]
இயேசு மனவுறுதியுடன் பிசாசை எதிர்த்தார்
[பக்கம் 10-ன் படங்கள்]
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் வன்முறையும் ஒழுக்கக்கேடும் நிறைந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒதுக்கித் தள்ளினர்
[படத்திற்கான நன்றி]
The Complete Encyclopedia of Illustration/J. G. Heck