யெகோவா உங்களை அக்கறையோடு கவனிக்கிறார்
“அவர் [கடவுள்] உங்களை அக்கறையோடு கவனிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்துவிடுங்கள்.”—1 பேதுரு 5:7, NW.
1. எந்த முக்கிய விஷயத்தில் யெகோவாவும் சாத்தானும் முற்றிலும் நேர்மாறானவர்கள்?
யெகோவாவும் சாத்தானும் முற்றிலும் நேர்மாறான குணம் படைத்தவர்கள். யெகோவாவிடத்தில் நெருங்கிவர நினைக்கும் எவரும் பிசாசினால் நிச்சயம் வெறுக்கப்படுவார். இந்த வேறுபாடு எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. யோபு என்ற பைபிள் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள சாத்தானின் செயல்கள் சம்பந்தமாக என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா (1970) இவ்வாறு கூறுகிறது: ‘பூமியெங்கும் சுற்றித்திரிந்து மோசமான செயல்களையோ அதை செய்பவர்களையோ கண்டுபிடித்து குற்றம்சாட்டுவதே சாத்தானுடைய வேலையாக இருக்கிறது; ஆகவே அவனுடைய இந்த வேலை, நல்ல ஜனங்களை பலப்படுத்துவதற்காக பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிற “கர்த்தருடைய கண்களுக்கு” முற்றிலும் நேர்மாறானது (2 நா. 16:9). மனிதரின் சுயநலமற்ற நற்குணத்தை சாத்தான் குறைகாண்பதால், கடவுளுடைய அதிகாரத்திற்கும் கட்டுப்பாட்டுக்கும் அவர் ஏற்படுத்துகிற வரையறைக்கும் உட்பட்டு அதைச் சோதிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளான்.’ இருவருக்கும் இடையே எப்பேர்ப்பட்ட வேறுபாடு!—யோபு 1:6-12; 2:1-7.
2, 3. (அ) “பிசாசு” என்ற வார்த்தையின் அர்த்தம், யோபுவுக்கு நேரிட்ட சம்பவத்தில் எப்படி பொருத்தமாகவே தெளிவாக்கப்பட்டுள்ளது? (ஆ) பூமியில் யெகோவாவின் ஊழியர்களை சாத்தான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவதை பைபிள் எப்படி காட்டுகிறது?
2 “பிசாசு” என்பதற்கான கிரேக்க வார்த்தையின் அர்த்தம் “பொய்க் குற்றஞ்சாட்டுபவன்,” “பழிதூற்றுபவன்.” யெகோவாவின் உண்மையுள்ள ஊழியனாகிய யோபு, சுயநல நோக்கத்தோடு அவரை சேவிப்பதாக சாத்தான் குற்றஞ்சாட்டியதைப் பற்றி யோபு புத்தகம் தெரிவிக்கிறது; “யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?” என சாத்தான் கேட்டான். (யோபு 1:9) யோபுவுக்கு சோதனைகளும் கஷ்டங்களும் வந்த போதிலும் அவர் முன்பைவிட யெகோவாவிடம் அதிகம் நெருங்கி வந்தார் என யோபு புத்தகத்தின் பதிவு காட்டுகிறது. (யோபு 10:9, 12; 12:9, 10; 19:25; 27:5; 28:28) தனக்கு நேரிட்ட சோதனைகளுக்குப் பின்பு அவர் கடவுளிடம், “என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது” என்று கூறினார்.—யோபு 42:5.
3 கடவுளுடைய உண்மை ஊழியர்களைப் பற்றி குறைகூறுவதை சாத்தான் யோபுவின் காலத்தோடு நிறுத்திவிட்டானா? இல்லவே இல்லை. இந்த முடிவின் காலத்தில், கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்பட்ட சகோதரர்களை சாத்தான் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறான்; அவர்களுடைய உண்மையுள்ள கூட்டாளிகளை குறித்ததிலும் அவன் அவ்வாறு செய்வதில் உறுதியாக இருக்கிறான் என வெளிப்படுத்துதல் புத்தகம் காட்டுகிறது. (2 தீமோத்தேயு 3:12; வெளிப்படுத்துதல் 12:10, 17) ஆகவே, நம்மை அக்கறையோடு கவனிக்கிற யெகோவாவுக்கு நம்மைக் கீழ்ப்படுத்துவதே மெய்க் கிறிஸ்தவர்களாக நம் அனைவரும் முக்கியமாக செய்ய வேண்டிய காரியம்; ஆழமான அன்புடன் அவரை சேவித்து சாத்தானின் குற்றச்சாட்டை பொய்யென நிரூபிப்பது அவசியம். அப்போது நாம் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துவோம்.—நீதிமொழிகள் 27:11.
நமக்கு உதவ யெகோவா வழிதேடுகிறார்
4, 5. (அ) சாத்தானுக்கு நேர்மாறாக யெகோவா எதற்காக பூமியை பார்க்கிறார்? (ஆ) யெகோவாவின் ஆதரவை பெற வேண்டுமானால் நம் பங்கில் என்ன செய்வது அவசியம்?
4 யாரையேனும் குற்றஞ்சுமத்தி விழுங்கலாமோ என பிசாசு பூமியெங்கும் உலாவி வருகிறான். (யோபு 1:7, 9; 1 பேதுரு 5:8) அதற்கு நேர்மாறாக, யெகோவாவோ தம் வல்லமையை நாடுவோருக்கு உதவ வழிதேடுகிறார். “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” என அனானி தீர்க்கதரிசி அரசனாகிய ஆசாவிடம் சொன்னார். (2 நாளாகமம் 16:9) தீய எண்ணத்துடன் சாத்தான் நோட்டம்விடுவதற்கும் அன்பான விதத்தில் யெகோவா கவனிப்பதற்கும் இடையே எத்தகைய வேறுபாடு!
5 யெகோவா, நம்முடைய குற்றங்குறைகள் ஒவ்வொன்றையும் கண்டுபிடிப்பதிலேயே குறியாக நம்மை வேவுபார்ப்பதில்லை. “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே” என சங்கீதக்காரன் எழுதினார். (சங்கீதம் 130:3) யாருமே நிலைநிற்க முடியாது என்பதே அதில் புதைந்துள்ள பதில். (பிரசங்கி 7:20) முழு இருதயத்தோடு நாம் யெகோவாவிடம் நெருங்கிச் செல்வோமானால், அவருடைய கண்கள் நம்மீது இருக்கும்; நம்மீது குற்றம் கண்டுபிடிப்பதற்காக அல்ல, நம் முயற்சிகளை கூர்ந்து கவனிப்பதற்கும், உதவியையும் மன்னிப்பையும் கேட்டு நாம் செய்யும் ஜெபங்களுக்கு பதிலளிப்பதற்குமே தம் கண்களை நம்மீது பதிப்பார். “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமை செய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது” என அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதினார்.—1 பேதுரு 3:12.
6. தாவீதுக்கு சம்பவித்தது நமக்கு எவ்வாறு ஆறுதலளிப்பதாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கிறது?
6 தாவீது அபூரணராக இருந்தார்; பெரும் பாவத்தை செய்தார். (2 சாமுவேல் 12:7-9) ஆனால் அவர் இருதயத்திலுள்ளதை யெகோவாவிடத்தில் கொட்டி, ஊக்கமான ஜெபத்துடன் அவரை அணுகினார். (சங்கீதம் 51:1-12, தலைப்பு) தான் செய்த பாவத்தின் மோசமான விளைவுகளை தாவீது அனுபவித்தாலும் யெகோவா அவருடைய ஜெபத்துக்கு செவிசாய்த்தார், அவரை மன்னித்தார். (2 சாமுவேல் 12:10-14) இது நமக்கு ஆறுதலளிப்பதோடு ஓர் எச்சரிக்கையாகவும் அமைய வேண்டும். நாம் உண்மையிலேயே மனந்திரும்பும்போது யெகோவா நம் பாவங்களை மன்னிப்பதற்கு மனமுள்ளவராக இருக்கிறார் என்பதை அறிவது நமக்கு ஆறுதலளிக்கிறது; அதே சமயத்தில் அப்பாவங்கள் பெரும்பாலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் சிந்திக்க வைக்கிறது. (கலாத்தியர் 6:7-9) யெகோவாவிடம் நெருங்கிவர விரும்பினால் அவருக்குப் பிரியமில்லாத எதையும் செய்வதிலிருந்து முடிந்தவரை நாம் விலகியிருக்க வேண்டும்.—சங்கீதம் 97:10.
யெகோவா தமது ஜனங்களை தம்மிடத்தில் சேர்த்துக்கொள்கிறார்
7. எப்படிப்பட்டவர்களை யெகோவா கவனிக்கிறார், அவர்களை அவர் எப்படி தம்மிடத்தில் சேர்த்துக் கொள்கிறார்?
7 தான் எழுதிய சங்கீதங்கள் ஒன்றில் தாவீது, “கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்” என எழுதினார். (சங்கீதம் 138:6) அவ்வாறே மற்றொரு சங்கீதம் சொல்வதாவது: “உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்? அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்.” (சங்கீதம் 113:5-7) ஆம், இப்பிரபஞ்சத்தின் சர்வவல்லமையுள்ள படைப்பாளர் பூமியிலுள்ளவர்களைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்; ‘தாழ்மையுள்ளவனையும்,’ ‘சிறியவனையும்,’ ‘செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிறவர்களையும்’ அவருடைய கண்கள் பார்க்கின்றன. (எசேக்கியேல் 9:4) தம் குமாரன் மூலமாக அப்படிப்பட்டவர்களை தம்மிடத்தில் சேர்த்துக் கொள்கிறார். இயேசு பூமியில் இருந்தபோது, “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; . . . ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான்” என குறிப்பிட்டார்.—யோவான் 6:44, 65.
8, 9. (அ) நாம் அனைவரும் ஏன் இயேசுவிடம் வர வேண்டும்? (ஆ) மீட்கும் பொருள் ஏற்பாட்டைப் பற்றியதில் எது ஒப்பற்றது?
8 நாம் பாவத்தில் பிறந்து கடவுளிடமிருந்து விலகியிருப்பதால் எல்லாருமே இயேசுவிடம் வந்து மீட்கும் பலியில் விசுவாசம் வைக்க வேண்டும். (யோவான் 3:36) அவர்கள் கடவுளோடு ஒப்புரவாகுவது அவசியம். (2 கொரிந்தியர் 5:20) சமாதானத்தைக் கண்டடைவதற்கு ஓர் ஏற்பாட்டை செய்யும்படி பாவிகள் தம்மிடம் கெஞ்சும் வரை கடவுள் காத்திருக்கவில்லை. “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்.—ரோமர் 5:8, 10.
9 கடவுளே மனிதரை தம்மிடத்தில் ஒப்புரவாக செய்கிறார் என்ற ஒப்பற்ற சத்தியத்தை அப்போஸ்தலனாகிய யோவான் உறுதிப்படுத்தினார். “தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது” என அவர் எழுதினார். (1 யோவான் 4.9, 10) அப்படி ஒப்புரவாவதில் முதற்படி எடுத்தது மனிதனல்ல, கடவுளே. ‘பாவிகளாக’ மட்டுமல்லாமல் ‘சத்துருக்களாகவும்’ இருந்த மனிதரிடத்தில் இந்தளவுக்கு அன்பு காட்டும் இப்படிப்பட்ட ஒரு கடவுளிடம் நெருங்கிவர நாம் தூண்டப்படவில்லையா?—யோவான் 3:16.
யெகோவாவைத் தேடுவதன் அவசியம்
10, 11. (அ) யெகோவாவைத் தேட நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) சாத்தானிய ஒழுங்குமுறையை நாம் எப்படி கருத வேண்டும்?
10 யெகோவா தம்மிடத்தில் வரும்படி யாரையுமே கட்டாயப்படுத்துவதில்லை என்பது நமக்கு தெரிந்ததே. ‘உண்மையில் அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவராக இல்லாதபோதிலும் நாம் அவரை தேட வேண்டும், தட்டித் தடவியாவது நிஜமாகவே கண்டுபிடிக்க வேண்டும்.’ (அப்போஸ்தலர் 17:27, NW) கீழ்ப்படிதலை நம்மிடம் கேட்பதற்கு யெகோவாவுக்கு உரிமை இருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். “ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்” என சீஷனாகிய யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 4:7, 8) பிசாசுக்கு எதிராகவும் யெகோவாவின் சார்பாகவும் உறுதியான நிலைநிற்கை எடுக்க நாம் தயங்கக் கூடாது.
11 சாத்தானுடைய பொல்லாத ஒழுங்குமுறையிலிருந்து விலகியிருப்பதையே இது அர்த்தப்படுத்துகிறது. “உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்” என்றும் யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 4:4) அதேவிதமாக, நாம் யெகோவாவுக்கு சிநேகிதராயிருக்க விரும்பினால் சாத்தானிய உலகம் நம்மை பகைக்குமெனவும் எதிர்பார்க்க வேண்டும்.—யோவான் 15:19; 1 யோவான் 3:13.
12. (அ) என்ன ஆறுதலான வார்த்தைகளை தாவீது எழுதினார்? (ஆ) அசரியா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா என்ன எச்சரிப்பு கொடுத்தார்?
12 ஒரு குறிப்பிட்ட வழியில் சாத்தானிய உலகம் நம்மை எதிர்க்கும்போது, நாம் முக்கியமாய் ஜெபத்தில் யெகோவாவை அணுகி அவரிடத்தில் உதவி கேட்பது அவசியம். அநேக சமயங்களில் யெகோவாவின் காக்கும் கரத்தை அனுபவத்தில் கண்ட தாவீது நம்முடைய ஆறுதலுக்காக இவ்வாறு எழுதினார்: “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார். கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.” (சங்கீதம் 145:18-20) தனிப்பட்டவர்களாக சோதனையை எதிர்ப்படுகையில் நம்மை யெகோவா காப்பார் என்பதையும் ஒரு தொகுதியாக ‘மிகுந்த உபத்திரவத்தில்’ தம் மக்களை பாதுகாப்பார் என்பதையும் இந்த சங்கீதம் காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 7:14) நாம் யெகோவாவிடத்தில் நெருங்கி இருந்தால் அவரும் நம்மிடத்தில் நெருங்கி இருப்பார். “தேவனுடைய ஆவி”யால் வழிநடத்தப்பட்ட அசரியா தீர்க்கதரிசி குறிப்பிட்டதை ஓர் அடிப்படை உண்மையாக நாம் எடுத்துக்கொள்ளலாம். அவர் குறிப்பிட்டதாவது: “நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டு விடுவார்.”—2 நாளாகமம் 15:1, 2.
யெகோவா நமக்கு நிஜமானவராக இருக்க வேண்டும்
13. யெகோவா நமக்கு நிஜமானவராக இருப்பதை நாம் எப்படி காட்டலாம்?
13 அப்போஸ்தலனாகிய பவுல், மோசேயைக் குறித்து “அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல, உறுதியாயிருந்”ததாக எழுதினார். (எபிரெயர் 11:27) சொல்லப்போனால், மோசே யெகோவாவை பார்த்ததே இல்லை. (யாத்திராகமம் 33:20) ஆனால், பார்த்ததுபோல் யெகோவா அவருக்கு அவ்வளவு நிஜமானவராக இருந்தார். அவ்வாறே தனக்கு நேரிட்ட சோதனைகளுக்குப் பின்பு யோபுவும் தன் விசுவாசக் கண்களால் யெகோவாவை மிகத் தெளிவாக கண்டார்; அதாவது தம் உண்மையுள்ள ஊழியர்கள் சோதனைகளை அனுபவிக்க இடமளித்தாலும் அவர்களை ஒருபோதும் கைவிடாத ஒரு கடவுளாக யெகோவாவை தெளிவாக கண்டார். (யோபு 42:5) ஏனோக்கும் நோவாவும் ‘தேவனோடே சஞ்சரித்ததாக’ சொல்லப்பட்டது. அவர்கள் கடவுளைப் பிரியப்படுத்தி அவருக்குக் கீழ்ப்படிய நாடியதன் மூலம் அதைச் செய்தார்கள். (ஆதியாகமம் 5:22-24; 6:9, 22; எபிரெயர் 11:5, 7) ஏனோக்கு, நோவா, யோபு, மோசே ஆகியவர்களுக்கு இருந்ததைப் போன்று யெகோவா நமக்கும் நிஜமானவராக இருந்தால், நம் வழிகளிலெல்லாம் “அவரை நினைத்துக்கொள்”வோம், அவரும் நம் “பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”—நீதிமொழிகள் 3:5, 6.
14. யெகோவாவைப் ‘பற்றிக்கொள்வது’ எதை அர்த்தப்படுத்துகிறது?
14 இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கு சற்று முன்பாக மோசே அவர்களுக்கு இவ்வாறு ஆலோசனை கொடுத்தார்: “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக.” (உபாகமம் 13:4) அவர்கள் யெகோவாவைப் பின்பற்றி, அவருக்கு பயந்து, அவருக்கு கீழ்ப்படிந்து, அவரைப் பற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. ‘பற்றிக்கொள்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள “இந்த எபிரெய வார்த்தை மிக நெருக்கமான, அன்னியோன்னிய உறவை சுட்டிக்காட்டுகிறது” என ஒரு பைபிள் அறிஞர் குறிப்பிடுகிறார். “யெகோவாவுடன் நெருக்கமான உறவு அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு உரியது” என சங்கீதக்காரன் குறிப்பிட்டார். (சங்கீதம் 25:14, NW) அவர் நமக்கு நிஜமானவராக இருந்தால், எந்த விதத்திலும் அவருக்கு பிரியமில்லாததை செய்துவிடக்கூடாது என்ற பயத்துடன் அவரிடத்தில் ஆழமான அன்பு காட்டினால், இந்த மதிப்புமிக்க, நெருங்கிய உறவை நாமும் அனுபவிப்போம்.—சங்கீதம் 19:9-14.
யெகோவா அக்கறையோடு கவனித்துக் கொள்வதை உணருகிறீர்களா?
15, 16. (அ) யெகோவா நம்மை அக்கறையோடு கவனிக்கிறார் என்பதை சங்கீதம் 34 எப்படி காட்டுகிறது? (ஆ) யெகோவா நமக்கு செய்திருக்கும் நன்மைகளை ஞாபகப்படுத்திப் பார்ப்பது கஷ்டமாக இருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?
15 நம் கடவுளாகிய யெகோவா தம் உண்மை ஊழியர்களை இடைவிடாது கவனித்து வரும் உண்மையை மறக்கும்படி செய்வதே சாத்தான் பயன்படுத்தும் தந்திரங்களில் ஒன்று. இஸ்ரவேலில் அரசனாயிருந்த தாவீது, மிகவும் ஆபத்தான சந்தர்ப்பத்தை எதிர்ப்பட்ட போதும்கூட யெகோவாவின் கரம் தன்னை காக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தார். காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு முன்பாக பயித்தியக்காரன் போல் பாசாங்கு செய்ய நேர்ந்தபோது, அவர் அழகான சங்கீதம் ஒன்றை இயற்றினார்; விசுவாசத்தை வெளிப்படுத்தும் இவ்வார்த்தைகள் அந்தச் சங்கீதத்தில் இடம்பெற்றிருந்தன: “என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.”—சங்கீதம் 34:3, 4, 7, 8, 18, 19; 1 சாமுவேல் 21:10-15.
16 யெகோவாவின் காக்கும் வல்லமையைக் குறித்ததில் நீங்கள் உறுதியான நம்பிக்கையோடு இருக்கிறீர்களா? அவருடைய தூதர்கள் தரும் பாதுகாப்பை உணருகிறீர்களா? யெகோவா நல்லவர் என்பதை நீங்கள் வாழ்க்கையில் ருசித்துப் பார்த்திருக்கிறீர்களா? குறிப்பாக யெகோவா மிகவும் நல்லவரென நீங்கள் கடைசியாக எப்போது உணர்ந்தீர்கள்? அதை நினைவுப்படுத்திப் பார்க்க முயலுங்கள். இனிமேலும் ஊழியத்தைத் தொடர முடியாது என்ற உணர்வோடு கடைசி வீட்டில் சாட்சி கொடுத்தபோது அவ்வாறு உணர்ந்தீர்களா? ஒருவேளை அந்த வீட்டில் நீங்கள் ஒரு அருமையான உரையாடலை அனுபவித்திருப்பீர்கள். உங்களுக்குத் தேவைப்பட்ட அதிகப்படியான பலத்தை தந்து ஆசீர்வதித்ததற்காக யெகோவாவுக்கு மறக்காமல் நன்றி தெரிவித்தீர்களா? (2 கொரிந்தியர் 4:7) மறுபட்சத்தில், யெகோவா உங்களுக்காக செய்த குறிப்பிட்ட நற்காரியத்தை நினைவுக்கு கொண்டுவருவது கஷ்டமாக இருக்கலாம். ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருடம் அல்லது அதற்கும் வெகு காலம் முன்பு நடந்தவற்றை சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கலாம். அப்படியானால், யெகோவாவிடம் நெருங்கிவர ஊக்கமாக முயன்று அவர் உங்களை பாதுகாத்து வழிநடத்தும் விதத்தை ருசித்துப் பார்க்க ஏன் முயலக்கூடாது? “[கடவுளுடைய] பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை அக்கறையோடு கவனிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” என அப்போஸ்தலனாகிய பேதுரு கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறினார். (1 பேதுரு 5:6, 7, NW) சொல்லப்போனால், அவர் எந்தளவுக்கு உங்களை கவனிக்கிறார் என்பதை நீங்கள் அறியும்போது அசந்து போவீர்கள்.—சங்கீதம் 73:28.
தொடர்ந்து யெகோவாவைத் தேடுங்கள்
17. நாம் யெகோவாவை தொடர்ந்து தேடுவதற்கு என்ன தேவைப்படுகிறது?
17 யெகோவாவுடன் உள்ள நம் உறவு தொடர்ந்து காத்துவர வேண்டிய ஒன்று. இயேசு தம் பிதாவிடம் ஜெபிக்கையில் “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” என்று சொன்னார். (யோவான் 17:3) யெகோவாவையும் அவருடைய குமாரனையும் பற்றிய அறிவை அடைவதற்கு நம் பங்கில் விடா முயற்சி தேவை. “தேவனுடைய ஆழங்களை” புரிந்துகொள்வதற்கு ஜெபமும் பரிசுத்த ஆவியின் உதவியும் தேவை. (1 கொரிந்தியர் 2:10; லூக்கா 11:13) “ஏற்ற வேளையிலே” நம் மனங்களை ஆவிக்குரிய உணவால் போஷிப்பதற்கு ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனின்’ வழிநடத்துதலும் நமக்குத் தேவை. (மத்தேயு 24:45) இந்த வகுப்பாரின் மூலமாகவே யெகோவா, தம்முடைய வார்த்தையை தினந்தோறும் வாசிக்குமாறும் கிறிஸ்தவ கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ளுமாறும் ‘ராஜ்யத்தின் நற்செய்தியை’ பிரசங்கிப்பதில் அர்த்தமுள்ள பங்கை கொண்டிருக்குமாறும் நமக்கு ஆலோசனை அளித்திருக்கிறார். (மத்தேயு 24:14, NW) இவ்வாறு செய்வதன் மூலம் நம்மை அக்கறையோடு கவனிப்பவரான கடவுளை தொடர்ந்து தேடிக்கொண்டிருப்போம்.
18, 19. (அ) நாம் எதைச் செய்ய திடத்தீர்மானமாய் இருக்க வேண்டும்? (ஆ) பிசாசுக்கு எதிராக உறுதியாக நின்று தொடர்ந்து யெகோவாவை தேடிக்கொண்டிருந்தால் நாம் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுவோம்?
18 தன் சக்தி முழுவதையும் பயன்படுத்தி சாத்தான் யெகோவாவின் ஜனங்களுக்கு நாலா புறமிருந்தும் துன்புறுத்தலையும், எதிர்ப்பையும், அழுத்தத்தையும் கொண்டு வருகிறான். அவன் நம் சமாதானத்தை குலைத்து கடவுளுக்கு முன்பாக நம் சிறந்த நிலைநிற்கையை அழித்துப்போட முயலுகிறான். நேர்மை உள்ளம் படைத்தவர்களை கண்டுபிடிக்கும் வேலையை நாம் தொடர்ந்து செய்வதை அவன் விரும்புவதில்லை, சர்வலோக பேரரசுரிமையைக் குறித்த விவாதத்தில் யெகோவாவை ஆதரிக்கும்படி நாம் அவர்களுக்கு உதவுவதையும் அவன் விரும்புவதில்லை. ஆனால் தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதியோடு இருக்க நாம் திடத்தீர்மானமாக இருக்க வேண்டும்; தீயோனிடமிருந்து நம்மை காக்கும்படி அவரையே நாம் சார்ந்திருக்க வேண்டும். கடவுளுடைய வார்த்தை நம்மை வழிநடத்துவதற்கு இடமளித்து, அவருடைய காணக்கூடிய அமைப்பில் ஆர்வம் குன்றாமல் நிலைத்திருக்கையில் அவர் நமக்கு எப்போதும் பக்க பலமாக இருப்பார் என்பதில் நாம் உறுதியோடிருக்கலாம்.—ஏசாயா 41:8-13.
19 ஆகவே, பிசாசுக்கும் அவனுடைய தந்திரங்களுக்கும் எதிராக நாம் அனைவரும் உறுதியான நிலைநிற்கை எடுப்போமாக; எப்போதும் நம்மை ‘ஸ்திரப்படுத்தி பலப்படுத்தும்’ நம் அன்புள்ள கடவுள் யெகோவாவை தொடர்ந்து தேடுவோமாக. (1 பேதுரு 5:8-11) அவ்வாறு ‘தேவனுடைய அன்பிலே நம்மைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருப்போம்.’—யூதா 21.
எப்படி பதிலளிப்பீர்கள்?
• “பிசாசு” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன, அப்பெயருக்கு ஏற்ப பிசாசு எப்படி நடந்துகொள்கிறான்?
• பூமியில் குடியிருக்கிறவர்களை யெகோவா கூர்ந்து கவனிக்கும் விதம் எவ்வாறு பிசாசு கவனிப்பதிலிருந்து வேறுபடுகிறது?
• யெகோவாவை அணுகுவதற்கு ஒருவர் மீட்கும் பொருளில் ஏன் நம்பிக்கை வைக்க வேண்டும்?
• யெகோவாவைப் ‘பற்றிக்கொள்வது’ எதை அர்த்தப்படுத்துகிறது, நாம் எவ்வாறு யெகோவாவை தொடர்ந்து தேடலாம்?
[பக்கம் 15-ன் படம்]
சோதனைகளின் மத்தியிலும் யெகோவா தன்னை அக்கறையோடு கவனித்ததை யோபு மதித்துணர்ந்தார்
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
தினந்தோறும் பைபிள் வாசிப்பது, கிறிஸ்தவ கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வது, பிரசங்க வேலையில் வைராக்கியத்துடன் ஈடுபடுவது போன்றவை யெகோவா நம்மை அக்கறையோடு கவனிப்பதை நினைப்பூட்டுகின்றன