“கடவுளிடம் நெருங்கி வாருங்கள்”
“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.” —யாக்கோபு 4:8, NW.
1, 2. (அ) மனிதர்கள் அடிக்கடி என்ன சொல்லிக்கொள்கின்றனர்? (ஆ) யாக்கோபு என்ன அறிவுரை கூறினார், அது ஏன் தேவைப்பட்டது?
“கடவுள் நம்மோடிருக்கிறார்.” இந்த வார்த்தைகள் தேசீய சின்னங்களையும் போர்வீரர்களின் சீருடைகளையும்கூட அலங்கரித்திருக்கின்றன. “கடவுளே எங்கள் நம்பிக்கை.” இந்த வார்த்தைகள் எண்ணற்ற நவீன நாளைய நாணயங்களிலும் ரூபாய் நோட்டுகளிலும் பதிக்கப்பட்டுள்ளன. கடவுளோடு தங்களுக்கு நெருங்கிய உறவு இருப்பதாக மனிதர்கள் சொல்லிக்கொள்வது சகஜம். ஆனால், அப்படி ஒரு உறவை வைத்திருப்பதற்கு வெறுமனே அதைப் பற்றி பேசுவது அல்லது மற்றவர்கள் கண்ணில் படும்படி எழுதிவைப்பது மட்டும் போதாது என்று நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா?
2 கடவுளோடு ஒரு நல்ல உறவை வைத்துக்கொள்ள முடியும் என்று பைபிள் காட்டுகிறது. ஆனால் அதற்கு முயற்சி தேவைப்படுகிறது. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும்கூட யெகோவா தேவனோடு தங்களுடைய உறவை பலப்படுத்திக் கொள்வது அவசியமாக இருந்தது. அவர்களில் சிலருக்கு மாம்சப்பிரகாரமான மனநிலை இருந்தது, அவர்கள் ஆன்மீக ரீதியில் சுத்தமாக இருக்கவில்லை. ஆகவே கிறிஸ்தவ கண்காணியாக இருந்த யாக்கோபு அவர்களை எச்சரிக்க வேண்டியதாக இருந்தது. அந்தச் சமயத்தில் அவர் இந்த வலிமையான அறிவுரையைக் கொடுத்தார்: “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.” (யாக்கோபு 4:1-12, NW) “நெருங்கி வாருங்கள்” என்ற யாக்கோபின் வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்தின?
3, 4. (அ) “கடவுளிடம் நெருங்கி வாருங்கள்” என்று யாக்கோபு சொன்னபோது அது முதல் நூற்றாண்டு வாசகர்கள் சிலருக்கு எதை நினைவூட்டியிருக்கும்? (ஆ) கடவுளை அணுகுவது சாத்தியமே என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?
3 முதல் நூற்றாண்டு வாசகர்கள் பலருக்கு பரிச்சயமான இந்த வார்த்தைகளை யாக்கோபு பயன்படுத்தினார். மக்களின் சார்பாக யெகோவாவை எவ்வாறு அணுகுவது அல்லது அவர் ‘சமுகத்தில் வருவது’ என்பதைக் குறித்து ஆசாரியர்களுக்குத் திட்டவட்டமான அறிவுரைகள் நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. (யாத்திராகமம் 19:22) யெகோவாவை அணுகுவது என்பது சாதாரணமான ஒரு விஷயமல்ல என்பது யாக்கோபின் வாசகர்களுக்கு இதன் மூலம் நினைவூட்டப்பட்டிருக்கலாம். ஏனெனில் யெகோவா சர்வலோகத்திலும் மிக உன்னதமான ஸ்தானத்தில் இருப்பவர்.
4 மறுபட்சத்தில், பைபிள் கல்விமான் ஒருவர் குறிப்பிடும் விதமாக, “[யாக்கோபு 4:8-லுள்ள] இந்த அறிவுரை மிகவும் நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது.” யெகோவா அபூரண மனிதர்களை தம்மிடமாக நெருங்கி வரும்படி எப்போதுமே அன்பாக அழைத்திருப்பது யாக்கோபுக்கு நன்றாகவே தெரியும். (2 நாளாகமம் 15:2) இயேசுவின் பலியினால் யெகோவாவை முழுமையான கருத்தில் அணுகுவதற்கான வழி பிறந்திருக்கிறது. (எபேசியர் 3:9, 12) இன்று, கடவுளை அணுகுவதற்கான வழி லட்சக்கணக்கானோருக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது! ஆனால் இந்த மகத்தான வாய்ப்பினை நாம் எவ்வாறு சிறந்த விதத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்? யெகோவா தேவனிடம் நெருங்கி வருவதற்கு மூன்று வழிகளை நாம் சுருக்கமாக சிந்திக்கலாம்.
தேவனைப் பற்றி தொடர்ந்து ‘அறிந்துகொண்டே’ இருங்கள்
5, 6. தேவனை ‘அறியும் அறிவை எடுத்துக்கொள்வதில்’ என்ன உட்பட்டுள்ளது என்பதை இளம் சாமுவேலின் உதாரணம் எவ்விதமாக காட்டுகிறது?
5 யோவான் 17:3-ல் இயேசு இவ்வாறு சொன்னார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” இந்த மொழிபெயர்ப்பிலிருந்தும் மற்ற அநேக மொழிபெயர்ப்புகளிலிருந்தும் சற்று வித்தியாசமாக புதிய உலக மொழிபெயர்ப்பு இந்த வசனத்தை மொழிபெயர்க்கிறது. ‘அறிவது’ என்பதற்குப் பதிலாக, ‘அறிந்துகொண்டே இருப்பது’ என மொழிபெயர்க்கிறது. ஆனால் வல்லுநர்கள் பலர் மூல எபிரெயுவில் இந்த வார்த்தைக்கு இன்னும் அதிக அர்த்தம் இருப்பதாக கூறுகின்றனர். இது தொடர்ச்சியான ஒரு செயலை, மற்றொருவரோடு நெருங்கிய உறவுக்கும்கூட வழிநடத்தும் ஒன்றைக் குறிப்பிடுகிறது என்பது அவர்கள் கருத்து.
6 கடவுளை அதிக நெருக்கமாக அறிவதென்பது இயேசுவின் நாளிலிருந்தவர்களுக்கு ஒரு புதிய கருத்தாக இருக்கவில்லை. உதாரணமாக, எபிரெய வேதவாக்கியங்களில், சாமுவேல் சிறு பையனாக இருந்தபோது, “கர்த்தரை [“யெகோவாவை,” NW] இன்னும் அறியாதிருந்தான்” என்று வாசிக்கிறோம். (1 சாமுவேல் 3:7) இது கடவுளைப் பற்றி சாமுவேல் அறியாதிருந்தான் என்பதை அர்த்தப்படுத்துமா? இல்லை. அவனுடைய பெற்றோரும் ஆசாரியர்களும் நிச்சயமாகவே அவனுக்கு அதிகத்தைப் போதித்திருப்பார்கள். ஆனால் ஒரு கல்விமானின் கருத்துப்படி, அந்த வசனத்தில் உள்ள எபிரெய வார்த்தை “அதிக நெருக்கமான உறவை” குறிப்பதற்கு பயன்படுத்தப்படலாம். அப்போது சாமுவேல் யெகோவாவை நெருக்கமாக அறிந்திருக்கவில்லை. பிற்பாடு யெகோவாவின் பேச்சாளராக சேவிக்கையில் அவரை அதிகமாக அறிந்துகொள்ளவிருந்தார். சாமுவேல் வளர்ந்தபோது உண்மையிலேயே அவரை அறிந்துகொண்டு அவரோடு நெருக்கமான உறவை அனுபவித்தார்.—1 சாமுவேல் 3:19, 20.
7, 8. (அ) பைபிளின் ஆழமான போதனைகள் அதிக கடினமாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு ஏன் மனந்தளர்ந்துவிடக் கூடாது? (ஆ) கடவுளுடைய வார்த்தையில் நாம் படிக்க வேண்டிய சில ஆழமான சத்தியங்கள் யாவை?
7 யெகோவாவோடு நெருக்கமான உறவை பெறும் வகையில் நீங்கள் அவரைப் பற்றி அறிந்துகொண்டே வருகிறீர்களா? அப்படி செய்யவேண்டுமானால், கடவுள் அளிக்கும் ஆவிக்குரிய உணவுக்காக ‘வாஞ்சையை’ வளர்த்துக்கொள்வது அவசியம். (1 பேதுரு 2:3) அடிப்படை பைபிள் போதகங்களை அறிந்திருப்பதோடு திருப்தியாக இருந்துவிடாதீர்கள். பைபிளிலுள்ள ஆழமான போதனைகளைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். (எபிரெயர் 5:12-14) இந்த போதனைகள் அதிக கடினமாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு மனந்தளர்ந்து போகிறீர்களா? அப்படியானால், யெகோவா ‘மகத்தான போதகர்’ என்பதை மறந்துவிடாதீர்கள். (ஏசாயா 30:20, NW) அபூரணமான மனித மனங்களுக்கு ஆழமான சத்தியங்களை எப்படிச் சொல்வது என்பது அவருக்குத் தெரியும். அவர் கற்றுக்கொடுப்பதை கிரகித்துக்கொள்வதற்கு நீங்கள் எடுக்கும் உண்மையான முயற்சிகளை அவரால் ஆசீர்வதிக்கவும் முடியும்.—சங்கீதம் 25:4.
8 ‘தேவனுடைய ஆழங்களில்’ சிலவற்றைப் பற்றி நீங்களே ஏன் ஆராய்ந்து பார்க்கக்கூடாது? (1 கொரிந்தியர் 2:10) அவை இறையியலர்களும் பாதிரிமார்களும் தர்க்கம் செய்யும் சுவாரஸ்யமில்லாத விஷயங்கள் அல்ல. ஆனால் அவை பொருத்தமான பிரயோஜனமான கோட்பாடுகள். நம்முடைய அன்புள்ள தகப்பனின் மனதையும் இருதயத்தையும் பற்றிய சுவராஸ்யமான விஷயங்களை கற்றுக்கொள்ள உதவும் பயனுள்ள கோட்பாடுகள் அவை. உதாரணமாக, மீட்கும் பொருள், “பரிசுத்த இரகசியம்,” யெகோவா தம்முடைய மக்களை பாதுகாக்கவும் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றவும் ஏற்படுத்தின பல்வேறு உடன்படிக்கைகள் போன்ற விஷயங்களை தனிப்பட்ட ஆராய்ச்சி செய்து படித்தால் மகிழ்ச்சி அடைவீர்கள், அது பிரயோஜனமாகவும் இருக்கும்.—1 கொரிந்தியர் 2:7, NW.
9, 10. (அ) பெருமை ஏன் ஆபத்தானது, அதை தவிர்க்க எது நமக்கு உதவிசெய்யும்? (ஆ) யெகோவாவைப் பற்றிய அறிவு என்று வரும்போது நாம் ஏன் மனத்தாழ்மையுடன் இருக்க முயல வேண்டும்?
9 ஆழமான ஆன்மீக சத்தியங்களைப் பற்றிய அறிவில் நீங்கள் வளரும்போது வரக்கூடிய ஆபத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அதுதான் பெருமை. (1 கொரிந்தியர் 8:1) ஆம், பெருமை அபாயகரமானது, ஏனென்றால் அது மனிதர்களை கடவுளிடமிருந்து தூர விலகிப் போகச் செய்கிறது. (நீதிமொழிகள் 16:5; யாக்கோபு 4:6) எந்த மனிதனுக்குமே தன் அறிவைப் பற்றி பெருமைப்பட்டுக்கொள்ள எந்தக் காரணமுமில்லை என்பதை நினைவில் வையுங்கள். உதாரணத்திற்கு, மனிதரின் சமீபகால அறிவியல் முன்னேற்றங்களை மதிப்பிடும் ஒரு புத்தகத்தின் அறிமுக வார்த்தைகளை எடுத்துக்கொள்ளுங்கள்; “அதிகமதிகமாக தெரிந்துகொள்கையில்தான் நமக்கு எவ்வளவு கொஞ்சமே தெரிந்திருக்கிறது என்பது புரிய வருகிறது. . . . நாம் கற்றிருப்பது கையளவு, கற்றுக்கொள்ள வேண்டியது கடலளவு” என அதில் சொல்லப்பட்டது. இதுபோன்ற மனத்தாழ்மை புத்துயிரளிக்கிறது. ஆகவே, அறிவுக் களஞ்சியமாகிய யெகோவா தேவனைப் பற்றி அறிந்துகொள்கையில், மனத்தாழ்மையுடன் இருக்க இன்னும் அதிக காரணம் இருக்கிறது. ஏன்?
10 யெகோவாவைப் பற்றி பைபிள் கூறும் சில வாக்கியங்களை கவனியுங்கள். “உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.” (சங்கீதம் 92:5) “அவருடைய [யெகோவாவுடைய] அறிவு அளவில்லாதது.” (சங்கீதம் 147:5) “அவருடைய [யெகோவாவுடைய] புத்தி ஆராய்ந்து முடியாதது.” (ஏசாயா 40:28) “ஆ, தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!” (ரோமர் 11:33) யெகோவாவைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் நம்மால் தெரிந்துகொள்ள முடியாது என்பதில் சந்தேகமில்லை. (பிரசங்கி 3:11) அநேக அதிசயமான காரியங்களை அவர் நமக்கு கற்பித்திருக்கிறார், ஆனால் இன்னும் நாம் கற்றுக்கொள்வதற்கு விஷயங்கள் இருந்துகொண்டே இருக்கும். அதை யோசித்துப்பார்க்கையில் நாம் மெய்சிலிர்த்துப் போகிறோம், சிறுமையாகவும் உணருகிறோம் அல்லவா? ஆகவே, மற்றவர்களுக்கும் மேலாக நம்மை உயர்த்துவதற்கு நம் அறிவை ஒருபோதும் பயன்படுத்தாதிருப்போமாக; நாம் யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கும் மற்றவர்கள் அவரிடம் நெருங்கி வர உதவுவதற்குமே அதை எப்போதும் பயன்படுத்துவோமாக.—மத்தேயு 23:12; லூக்கா 9:48.
யெகோவாவின் மீதுள்ள அன்பை செயலில் காட்டுங்கள்
11, 12. (அ) யெகோவாவைப் பற்றி நாம் எடுத்துக்கொள்ளும் அறிவு நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்? (ஆ) கடவுளிடமாக ஒருவரின் அன்பு உண்மையானதா என்பதை தீர்மானிப்பது எது?
11 அப்போஸ்தலன் பவுல் அறிவுக்கும் அன்புக்கும் தொடர்பிருப்பதாக சொன்னது சரியே. அவர் இவ்வாறு எழுதினார்: ‘உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருக வேண்டுதல் செய்கிறேன்.’ (பிலிப்பியர் 1:9) யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி நாம் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு அருமையான சத்தியமும் பெருமையினால் இறுமாப்படைய செய்வதற்கு பதிலாக, நம்முடைய பரலோக தந்தையிடமாக நமக்கிருக்கும் அன்பை அதிகரிக்க வேண்டும்.
12 கடவுளை நேசிப்பதாக சொல்லும் அநேகர் உண்மையில் அவரை நேசிப்பதில்லை. உண்மைதான், அவர்களுடைய இருதயங்கள் உணர்ச்சிப் பெருக்கினால் நிரம்பியிருக்கலாம். அப்படிப்பட்ட உணர்ச்சிகள் நல்லதுதான், அது திருத்தமான அறிவுக்கு இசைவாக இருக்கும்போது அதை நாம் பாராட்டவும் செய்யலாம். ஆனால் அப்படிப்பட்ட உணர்ச்சிகள் இருந்தால் மட்டுமே கடவுளிடம் அன்புகூருகிறோம் என்றாகிவிடாது. ஏன்? இந்த அன்புக்கு கடவுளுடைய வார்த்தை தரும் விளக்கத்தை கவனியுங்கள்: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்.” (1 யோவான் 5:3) அப்படியானால், யெகோவாவின் மீது காட்டும் அன்பு, கீழ்ப்படிதலுள்ள செயல்களால் வெளிப்படுத்தப்படும்போதுதான் உண்மையானதாக இருக்கும்.
13. தேவ பயம் எவ்வாறு யெகோவாவிடம் நமக்கிருக்கும் அன்பை காண்பிக்க உதவி செய்யும்?
13 தேவ பயம் யெகோவாவுக்கு கீழ்ப்படிய நமக்கு உதவிசெய்யும். யெகோவாவைப் பற்றியும் அவருடைய எல்லையற்ற பரிசுத்தம், மகிமை, வல்லமை, நீதி, ஞானம், அன்பு ஆகியவற்றைப் பற்றியும் கற்றுக்கொள்வதினால் அவரிடத்தில் ஆழ்ந்த பயபக்தி வருகிறது. அவரிடம் நெருங்கி வருவதற்கு இப்படிப்பட்ட ஒரு பயம் மிகவும் முக்கியம். சங்கீதம் 25:14 என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள்: “கர்த்தருடைய [யெகோவாவுடைய] இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது.” அன்புள்ள நம்முடைய பரலோக தகப்பனை கோபப்படுத்திவிடுவோமோ என்ற ஆரோக்கியமான பயம் நமக்கிருக்குமானால், நாம் அவரிடம் நெருங்கி வரமுடியும். நீதிமொழிகள் 3:6-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள ஞானமுள்ள ஆலோசனைக்கு செவிகொடுக்க தேவ பயம் நமக்கு உதவிசெய்யும்: “உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” அது எதை அர்த்தப்படுத்துகிறது?
14, 15. (அ) தினசரி வாழ்க்கையில் நாம் எதிர்ப்படும் சில தீர்மானங்கள் யாவை? (ஆ) நாம் எவ்வாறு தேவ பயத்தை காட்டும் விதமாக தீர்மானங்களைச் செய்யலாம்?
14 நீங்கள் ஒவ்வொரு நாளும் சிறிய மற்றும் பெரிய தீர்மானங்களை எடுக்க வேண்டும். உதாரணமாக, உங்களுடன் வேலை செய்பவர்கள், பள்ளி சகாக்கள், அயலகத்தார் ஆகியோருடன் உங்கள் பேச்சு எப்படியிருக்கும்? (லூக்கா 6:45) நீங்கள் செய்ய வேண்டிய ஒரு வேலையைச் செய்கையில் அதை ஊக்கமாக செய்வீர்களா அல்லது உடம்பை அலட்டிக்கொள்ளாமல் செய்வீர்களா? (கொலோசெயர் 3:24) யெகோவாவிடம் மிகக் குறைந்த அளவே அல்லது அவரிடம் அன்பே இல்லாதவர்களிடம் நெருங்கி வருவீர்களா அல்லது ஆன்மீக குணங்களுடைய ஆட்களோடு உங்கள் உறவை பலப்படுத்திக்கொள்ள முயற்சி செய்வீர்களா? (நீதிமொழிகள் 13:20) கடவுளுடைய ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிக்க சிறிய வழிகளிலும்கூட நீங்கள் என்ன செய்வீர்கள்? (மத்தேயு 6:33) இங்கே கூறப்பட்டுள்ளவற்றைப் போன்ற வேதாகம நியமங்கள் நீங்கள் தினந்தோறும் செய்யும் தீர்மானங்களை வழிநடத்தினால், உண்மையிலேயே உங்கள் “வழிகளிலெல்லாம்” அவரை நினைத்துக்கொள்கிறீர்கள் என்று பொருள்.
15 உண்மையில், ஒவ்வொரு தீர்மானம் செய்யும்போதும் இந்த எண்ணம் நமக்கு வரவேண்டும்: ‘நான் என்ன செய்யும்படி யெகோவா விரும்புவார்? என்ன செய்தால் அவருக்கு மிகவும் பிரியமாயிருக்கும்?’ (நீதிமொழிகள் 27:11) இந்த வகையில் தேவ பயத்தைக் காட்டுவது யெகோவாவிடம் நமக்கிருக்கும் அன்பைக் காட்டுவதற்கு மிகச் சிறந்த வழி. தேவ பயமிருந்தால் நாம் ஆன்மீகத்தில், ஒழுக்கத்தில், சரீரத்தில் சுத்தமாக இருப்போம். “கடவுளிடம் நெருங்கி வாருங்கள்” என்று கிறிஸ்தவர்களுக்கு யாக்கோபு அறிவுரை கூறும் அதே வசனத்தில் அவர் இவ்வாறும் அறிவுரை கூறுகிறார்: “பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.”—யாக்கோபு 4:8.
16. யெகோவாவுக்குக் கொடுக்கும்போது, நாம் ஒருபோதும் என்ன செய்ய முடியாது, ஆனால் எப்போதுமே எதை வெற்றிகரமாக செய்ய முடியும்?
16 யெகோவாவிடம் நமக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்துவது தீமையிலிருந்து விலகியிருப்பதை மட்டுமே குறிப்பதில்லை. அந்த அன்பு சரியானதைச் செய்யும்படியும் நம்மைத் தூண்டுகிறது. உதாரணமாக, யெகோவாவின் தாராள குணத்துக்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்கிறோம்? யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது.” (யாக்கோபு 1:17) உண்மைதான், நம்முடைய உடைமைகளை யெகோவாவுக்குக் கொடுக்கும்போது நாம் அவரை பணக்காரராக்குவதில்லை. எல்லா பொருட்களும் வளங்களும் ஏற்கெனவே அவருக்கு சொந்தமானவையே. (சங்கீதம் 50:12) யெகோவாவுக்கென்று நம் நேரத்தையும் சக்தியையும் செலவிடாவிட்டால் அவரால் சமாளிக்க முடியாது என்று நினைக்கலாகாது. கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை நாம் பிரசங்கிக்க மறுத்தால்கூட, கல்லுகளையே சத்தமிடச் செய்ய அவரால் முடியும்! அப்படியென்றால் நாம் ஏன் நம் பொருளாதார வளங்களையும் நேரத்தையும் சக்தியையும் யெகோவாவுக்கு கொடுக்க வேண்டும்? அதற்கு முக்கிய காரணம், அவ்வாறு கொடுப்பதன் மூலம் நாம் அவரை முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் மனதோடும் பலத்தோடும் நேசிப்பதை காட்டுகிறோம்.—மாற்கு 12:29, 30.
17. யெகோவாவுக்கு உற்சாகமாய் கொடுப்பதற்கு எது நம்மைத் தூண்டலாம்?
17 யெகோவாவுக்குக் கொடுக்கும்போது சந்தோஷமாக கொடுக்க வேண்டும், “உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (2 கொரிந்தியர் 9:7) உபாகமம் 16:17-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள நியமம் உற்சாகமாக கொடுக்க நமக்கு உதவிசெய்யும்: “உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.” யெகோவா நம்மிடமாக எவ்வளவு தாராளமாக இருந்திருக்கிறார் என்பதை எண்ணிப்பார்த்தால், நாம் அவருக்கு தாராளமாக கொடுக்க வேண்டும் என்று விரும்புவோம். இப்படி கொடுப்பது அவருடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறது, அன்பான ஒரு சிறுபிள்ளை தரும் சிறிய பரிசுப்பொருள் அவனுடைய பெற்றோரை சந்தோஷப்படுத்துவது போலவே இதுவும் இருக்கிறது. நம்முடைய அன்பை இந்த வழியில் காட்டுவது யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கு உதவிசெய்யும்.
ஜெபத்தின் மூலம் நெருக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
18. நம்முடைய ஜெபங்களின் தரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று சிந்திப்பது ஏன் பிரயோஜனமுள்ளது?
18 நம்முடைய தனிப்பட்ட ஜெபங்கள் நம் பரலோக தந்தையிடம் நெருக்கமாகவும் இரகசியமாகவும் பேசுவதற்கு அருமையான வாய்ப்புகளை அளிக்கின்றன. (பிலிப்பியர் 4:6) கடவுளிடம் நெருங்கி வருவதற்கு ஜெபம் முக்கியமான வழியாக இருப்பதால், நம்முடைய ஜெபங்களின் தரத்தை சற்று நிதானித்து எண்ணிப்பார்ப்பது பிரயோஜனமாக இருக்கும். நம் ஜெபங்கள் மொழி நடையிலும் அமைப்பிலும் சிறந்து விளங்கும் வகையில் செய்யப்பட வேண்டியதில்லை. ஆனால் அவை இருதயத்திலிருந்து வரும் உண்மையான வார்த்தைகளாக இருக்க வேண்டும். நம்முடைய ஜெபங்களின் தரத்தை நாம் எப்படி மேம்படுத்தலாம்?
19, 20. ஜெபிப்பதற்கு முன்பாக ஏன் தியானம் செய்ய வேண்டும், இப்படி தியானிப்பதற்கு பொருத்தமான விஷயங்கள் சில யாவை?
19 ஜெபம் செய்வதற்கு முன்னால் அதைப் பற்றி தியானித்துப் பார்க்க முயற்சி செய்யலாம். முன்கூட்டியே அதை தியானித்துப் பார்த்தால், திட்டவட்டமாகவும் அர்த்தமுள்ள விதத்திலும் நாம் ஜெபிக்கலாம். இப்படி செய்யும்போது, பழக்கப்பட்ட வார்த்தைகளையும் மனதுக்கு வேகமாக வரும் வார்த்தைகளையும் திரும்பத் திரும்ப சொல்லும் பழக்கத்தை நாம் தவிர்க்க முடியும். (நீதிமொழிகள் 15:28, 29) இயேசு தம்முடைய மாதிரி ஜெபத்தில் குறிப்பிட்ட சில விஷயங்களை எண்ணிப் பார்த்து, அவை நம்முடைய சொந்த சூழ்நிலைகளுக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதை யோசிப்பது உதவியாக இருக்கும். (மத்தேயு 6:9-13) உதாரணமாக, இங்கே பூமியில் யெகோவாவுடைய சித்தத்தைச் செய்வதில் நம்முடைய சிறிய பங்கு என்னவாக இருக்கும் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம். முடிந்தவரை அவருக்குப் பிரயோஜனமுள்ளவராக இருக்க நாம் விரும்புவதை யெகோவாவுக்குத் தெரியப்படுத்தி, நமக்கு அவர் கொடுக்கும் எந்த நியமிப்பையும் செய்துமுடிக்க உதவுமாறு நாம் அவரைக் கேட்கலாம் அல்லவா? பொருளாதார தேவைகளைப் பற்றிய கவலைகள் நம்மை நெருக்குகின்றனவா? என்ன பாவங்களுக்காக நமக்கு மன்னிப்பு தேவை, யாரை நாம் அதிகமாக மன்னிக்க வேண்டும்? என்ன சோதனைகள் நம்மைப் பாதிக்கின்றன, அந்த விஷயத்தில் யெகோவாவின் பாதுகாப்பு உடனடியாக நமக்கு தேவை என்பதை நாம் புரிந்துகொள்கிறோமா?
20 மேலுமாக நமக்குத் தெரிந்த யாருக்கு குறிப்பாக யெகோவாவின் உதவி தேவை என்பதைப் பற்றி நாம் யோசித்துப் பார்க்கலாம். (2 கொரிந்தியர் 1:11) அதோடு, நன்றி சொல்ல நாம் மறந்துவிடக்கூடாது. நாம் சற்று யோசித்தால், யெகோவாவின் அபரிமிதமான நற்குணத்துக்காக நன்றிசொல்லி அவரைத் துதிப்பதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கும். (உபாகமம் 8:10; லூக்கா 10:21) அப்படி செய்வதில் இன்னொரு நன்மையும் இருக்கிறது. வாழ்க்கையைப் பற்றி நல்ல நம்பிக்கையான, போற்றுதலுள்ள மனப்பான்மையை பெற அது நமக்கு உதவும்.
21. என்ன வேதாகம உதாரணங்களைப் படிப்பது, யெகோவாவை ஜெபத்தில் அணுகும்போது நமக்கு உதவிசெய்யும்?
21 படிப்பும்கூட நம்முடைய ஜெபங்களை மேம்படுத்த உதவும். கடவுளுடைய வார்த்தையில் உண்மையுள்ள ஆண்களும் பெண்களும் செய்த குறிப்பிடத்தக்க ஜெபங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, மிகவும் சவாலான ஒரு பிரச்சினை நமக்கு முன்னால் இருக்கலாம், இதனால் நம்முடைய அல்லது நமக்கு அன்பானவர்களுடைய நலனைக் குறித்து கவலையும் பயமும்கூட ஏற்படலாம். அந்தச் சமயத்தில் பழிவாங்க துடித்துக் கொண்டிருந்த ஏசாவை சந்திக்கப் போகும்போது யாக்கோபு செய்த ஜெபத்தை நாம் வாசித்துப் பார்க்கலாம். (ஆதியாகமம் 32:9-12) அல்லது சுமார் பத்து லட்சம் எத்தியோப்பியர்கள் அடங்கிய ஒரு படை கடவுளுடைய ஜனங்களை தாக்க வந்தபோது ஆசா ராஜா செய்த ஜெபத்தை நாம் படிக்கலாம். (2 நாளாகமம் 14:11, 12) யெகோவாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடிய ஒரு பிரச்சினையால் நாம் கலங்கிப்போயிருந்தால், கர்மேல் மலையின்மேல் பாகால் வணக்கத்தாருக்கு முன்பாக எலியா செய்த ஜெபத்தை வாசித்துப் பார்ப்பது நல்லது, அதே போல எருசலேமின் பரிதாபமான நிலையைக் குறித்து நெகேமியா செய்த ஜெபத்தை வாசித்துப் பார்க்கலாம். (1 இராஜாக்கள் 18:36, 37; நெகேமியா 1:4-11) இப்படிப்பட்ட ஜெபங்களை வாசித்து தியானம் செய்தால், அது நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்தும், நமக்கு பாரமாயிருக்கும் கவலைகளோடு யெகோவாவை எவ்வாறு மிகச் சிறந்த முறையில் அணுகலாம் என்பதை தெரிந்துகொள்ளவும் முடியும்.
22. 2003 வருடாந்தர வசனம் என்ன, வருடம் முழுவதிலுமாக அவ்வப்போது நம்மைநாமே என்ன கேட்டுக்கொள்வோம்?
22 “கடவுளிடம் நெருங்கி வாருங்கள்” என்று யாக்கோபு கூறும் அறிவுரைக்கு செவிசாய்ப்பதைவிட மதிப்புமிக்க செயல் வேறில்லை, அதைவிட சிறந்த இலட்சியமும் இருக்க முடியாது. (யாக்கோபு 4:8) இந்த இலட்சியத்தை அடைய தேவனைப் பற்றிய அறிவில் வளர்ந்து, அவரிடமாக நமக்கிருக்கும் அன்பை அதிகமதிகமாக வெளிப்படுத்த நாடி, நம்முடைய ஜெபங்களில் அவரோடு ஒரு நெருக்கத்தை வளர்ப்போமாக. 2003-ஆம் வருடம் முழுவதுமாக, வருடாந்தர வசனமாகிய யாக்கோபு 4:8-ஐ மனதில் வைத்திருக்கையில் நாம் உண்மையில் யெகோவாவிடம் நெருங்கிச் சென்று கொண்டிருக்கிறோமா என்பதை தொடர்ந்து ஆராய்வோமாக. அந்த வசனத்தின் பிற்பகுதியைப் பற்றி என்ன? என்ன கருத்தில் யெகோவா ‘உங்களிடம் நெருங்கி வருவார்?’ அதனால் என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்? இந்த விஷயத்தை அடுத்த கட்டுரை கையாளும்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• யெகோவாவிடம் நெருங்கி வருவது ஏன் முக்கியமான விஷயம்?
• யெகோவாவைப் பற்றி அறிவது சம்பந்தமாக நாம் என்ன சில இலக்குகளை வைக்கலாம்?
• யெகோவாவிடம் நமக்கு உண்மையான அன்பிருப்பதை நாம் எவ்வாறு காட்டலாம்?
• என்ன விதங்களில் நாம் யெகோவாவோடு ஜெபத்தில் அதிக நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம்?
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
2003 வருடாந்தர வசனம்: “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.”—யாக்கோபு 4:8, NW.
[பக்கம் 8, 9-ன் படம்]
சாமுவேல் வளர்ந்து வந்தபோது யெகோவாவை மிகவும் நெருக்கமாக அறிந்துகொண்டான்
[பக்கம் 12-ன் படம்]
கர்மேல் மலையின் மேல் எலியா செய்த ஜெபம் நமக்கு சிறந்த மாதிரி