காரியங்களை கடவுளுடைய நோக்குநிலையில் பாருங்கள்
செப்டம்பர் 14, 2002—அது நியூ யார்க்கிற்கு கதிரொளி சிந்திய கதகதப்பான ஒரு நாள். 6,521 பேர் அடங்கிய சர்வதேச கூட்டத்தார் பாட்டர்ஸன் கல்வி மையத்திலும் அப்பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய மற்ற இரண்டு வளாகங்களிலும் குழுமியிருந்தனர். உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் 113-ம் வகுப்பு பட்டமளிப்பு விழாவை பார்ப்பதற்கென அவர்கள் கூடியிருந்தனர். மாணவர்கள் 14 நாடுகளிலிருந்து வந்திருந்தனர், 19 நாடுகளில் மிஷனரிகளாக சேவை செய்ய தயாராவதற்காக கடந்த ஐந்து மாதங்களை செலவழித்திருந்தனர்.
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு அங்கத்தினரான 97 வயது கேரி பார்பர் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சுமார் 60 வருட பாரம்பரியமிக்க கிலியட் பள்ளிக்கு அவர் கவனத்தை ஈர்த்தார்; மிஷனரி சேவைக்காக ஆயிரக்கணக்கானோரை இப்பள்ளி பயிற்றுவித்திருக்கிறது. சகோதரர் பார்பர் இவ்வாறு குறிப்பிட்டார்: “அவர்களுக்கு வழங்கப்பட்ட கூடுதலான பயிற்சியால் சிறந்த பலன்கள் கிடைத்திருக்கின்றன என்று கூறினால் அது மிகையாகாது. பயிற்சிபெற்ற மிஷனரிகளுடைய உதவியால் ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து மெய் வணக்கத்தை தழுவி பரிசுத்த சேவை செய்திருக்கிறார்கள்.”
கிலியட் பள்ளியில் சேருவதற்கு முன்பு, அந்த மாணவர்களில் அநேகர் தங்களுடைய ஊழியத்தை விரிவாக்குவதில் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள். கனடாவில் ஒரு தம்பதியினர் தாங்கள் வசித்துவந்த பகுதியிலுள்ள சீன மக்களை தொடர்புகொள்வதற்கு மான்டரின் என்ற சீன மொழியை கற்றுக்கொள்ள ஓராண்டிற்கும் அதிகமாக செலவழித்திருந்தார்கள். மற்றொரு தம்பதியினர் அல்பேனிய மொழியை சுயமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்; அல்பேனியாவில் வசிக்கும் அநேகருக்கு பைபிளில் ஆர்வம் அதிகரித்து வருவதால் அப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதற்கென கடைசியில் இவர்கள் அல்பேனியாவுக்கே குடிபெயர்ந்து சென்றார்கள். இந்த வகுப்பில் கலந்துகொண்ட மற்றவர்களோ ஹங்கேரி, குவாதமாலா, டொமினிகன் குடியரசு ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்தார்கள்; கடவுளுடைய வார்த்தையை கற்பிப்பதற்கு அநேகர் தேவைப்பட்டதால் இந்த நாடுகளுக்கு இவர்கள் குடிபெயர்ந்து சென்றிருந்தார்கள்.
இப்பொழுது ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, தூர கிழக்கு நாடுகள் ஆகியவற்றிற்கு மிஷனரி சேவை செய்ய செல்வதற்கு முன்னர், தாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் கடவுளை கவனத்தில் எடுத்துக் கொள்ளும்படி பட்டம்பெறும் மாணவர்கள் அனைவரும் உற்சாகப்படுத்தப்பட்டார்கள்.
காரியங்களை கடவுளுடைய நோக்குநிலையில் பாருங்கள்
அறிமுக உரைக்குப் பிற்பாடு, ஐக்கிய மாகாணங்களின் கிளையலுவலக குழு அங்கத்தினர் மேக்ஸ்வெல் லாய்டு என்பவரை சகோதரர் பார்பர் அறிமுகப்படுத்தினார். “எல்லா காரியங்களையும் கடவுளுடைய நோக்குநிலையில் பாருங்கள்” என்ற கருப்பொருளை அவர் சிறப்பித்துக் காட்டினார். தாவீது மற்றும் கடவுளுடைய குமாரனாகிய இயேசுவின் முன்மாதிரிகளுக்கு அவர் கவனத்தை ஈர்த்தார். (1 சாமுவேல் 24:6; 26:11; லூக்கா 22:42) பைபிளை ஐந்து மாத காலம் படித்ததில், காரியங்களை கடவுளுடைய நோக்குநிலையில் பார்ப்பதற்கு பயிற்றுவிப்பு கிடைத்ததை மாணவர்களுக்கு நினைவூட்டிய பிறகு, பேச்சாளர் இவ்வாறு கேட்டார்: “நீங்கள் புதிய நியமனம் பெற்று செல்லுமிடத்தில் ஜனங்களுக்கு பைபிள் படிப்பு நடத்தும்போது, காரியங்களை கடவுளுடைய நோக்குநிலையிலிருந்து சிந்தித்துப் பார்க்க அவர்களுக்கு உதவி செய்வீர்களா?” பிறருக்கு அறிவுரை கொடுக்கும் விஷயத்தில், “‘என்னை பொறுத்தவரை, நான் நினைக்கிறேன் . . . ’ என்றெல்லாம் சொல்லாதீர்கள். கடவுளுடைய நோக்குநிலை என்ன என்பதை புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுங்கள். இப்படி செய்தால், நீங்கள் போகுமிடத்தில் உங்களுடன் பழகுகிறவர்களுக்கு உண்மையிலேயே ஆசீர்வாதமாக இருப்பீர்கள்.”
இந்நிகழ்ச்சியில் அடுத்து வந்தவர் ஆளும் குழு அங்கத்தினர் கெரட் லோயிஷ். “நான் உன்னோடேகூட இருக்கிறேன்” என்ற பொருளில் இவர் சொற்பொழிவாற்றினார். ‘நான் உன்னோடேகூட இருக்கிறேன்’ என தமது உண்மை ஊழியர்களிடம் யெகோவா சொன்ன அநேக சந்தர்ப்பங்களை கவனத்திற்கு கொண்டுவந்தார். (ஆதியாகமம் 26:23, 24; 28:15; யோசுவா 1:5; எரேமியா 1:7, 8) இக்காலத்திலோ, நாம் உண்மையுடன் நிலைத்திருந்தால் யெகோவா மீது நாமும் இதே நம்பிக்கையை வைத்திருக்கலாம். சகோதரர் லோயிஷ் இவ்வாறு குறிப்பிட்டார்: “பைபிளைப் படிப்பதற்கு ஆர்வமுள்ள ஆட்களை கண்டுபிடிக்க முடியுமா என நீங்கள் கவலைப்படுகிறீர்களா? ‘நான் உன்னோடேகூட இருக்கிறேன்’ என யெகோவா சொன்னதை மறந்துவிடாதீர்கள். பணமும் பொருளும் போதுமான அளவுக்கு கிடைக்குமா என நீங்கள் கவலைப்படுகிறீர்களா? ‘நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை’ என யெகோவா சொன்னார்.” (எபிரெயர் 13:5) சீஷராக்கும் வேலையில் உண்மைத்தன்மையுள்ள தம் சீஷர்களுக்கு துணைநிற்பதாக இயேசு வாக்குறுதி அளித்ததை மாணவர்களுக்கு நினைப்பூட்டி அவர் தமது உரையை நிறைவு செய்தார்.—மத்தேயு 28:20.
“கடும் சோதனைகளில் நீங்கள் பாதுகாப்பை கண்டடைவீர்களா?” இதுவே கிலியட் போதனையாளர் லாரன்ஸ் போவென் என்பவருடைய பேச்சின் கருப்பொருள். ஏதேனில் எழுப்பப்பட்ட விவாதங்களின் காரணமாக, யெகோவாவுக்கு தனிப்பட்ட பக்தியை செலுத்த விரும்பியவர்கள் எல்லாரும் துன்பங்களையும், சிலசமயங்களில் கடும் சோதனைகளையும் எதிர்ப்பட்டிருக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டார். இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றும்படி பட்டம்பெறும் மாணவர்களை அவர் உற்சாகப்படுத்தினார்; யெகோவாவின் மீது முழுமையாக சார்ந்திருந்ததன் மூலமும் தமது கீழ்ப்படிதலை பூரணப்படுத்துவதற்கு அவர் அனுமதித்த கடும் சோதனைகளை ஏற்றுக்கொண்டதன் மூலமும் இயேசு உண்மையான பாதுகாப்பைக் கண்டார். (எபிரெயர் 5:8, 9) கசடுகளை நீக்குவதற்கு சரியான அளவு சூட்டை பயன்படுத்தி தங்கத்தைப் புடமிடுகிறவருக்கு யெகோவாவை ஒப்பிடலாம். சொல்லப்போனால், அக்கினியால் சோதிக்கப்பட்ட விசுவாசம் புடமிடப்பட்ட தங்கத்தைவிட மிக மிக மேலான பாதுகாப்பை தருகிறது. ஏன்? “ஏனென்றால் புடமிடப்பட்ட விசுவாசத்தால் எந்தவொரு சோதனையையும் தாங்கிக்கொள்ள முடியும், அது ‘முடிவுபரியந்தம்’ வரை சகித்திருக்க நமக்கு உதவி செய்யும்” என கூறினார் சகோதரர் போவென்.—மத்தேயு 24:13.
மற்றொரு கிலியட் போதனையாளர் மார்க் நியூமர் இவ்வாறு கேட்டார்: “நீங்கள் விரும்பப்படத்தக்கவர்களாய் இருப்பீர்களா?” அவருடைய பேச்சுப்பொருள் 1 சாமுவேல் 2:26-ல் (NW) காணப்படும் வார்த்தைகளின் அடிப்படையில் அமைந்திருந்தது. “யெகோவாவின் நோக்குநிலையிலும் மனிதருடைய நோக்குநிலையிலும் பிரியமானவனாக” விளங்கிய சாமுவேலை பற்றி அந்த வசனம் வர்ணிக்கிறது. சாமுவேலின் உதாரணத்தை சிந்தித்த பிற்பாடு, ஆப்பிரிக்காவில் மிஷனரி சேவையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கழித்த சகோதரர் நியூமர் இவ்வாறு குறிப்பிட்டார்: “கடவுள் உங்களுக்கு கொடுத்த வேலையில் உண்மைப் பற்றுறுதியுடன் நிலைத்திருப்பதன் மூலம் நீங்களும் கடவுளுடைய பார்வையில் விரும்பத்தக்கவர்களாக ஆகலாம். அவர் உங்களுக்கு ஓர் அருமையான மிஷனரி வேலையை கொடுத்திருக்கிறார்.” பட்டம் பெறுவோர் தங்களுடைய நியமிப்பை கடவுள் தங்களிடம் ஒப்படைத்த பரிசுத்தமான ஒரு பொறுப்பாக கருதும்படியும் தங்களுடைய நியமிப்புகளை நிறைவேற்றுவதில் கடவுளுடைய சிந்தையை கொண்டிருக்கும்படியும் சகோதரர் நியூமர் உற்சாகப்படுத்தினார்.
பள்ளி நடைபெற்ற சமயத்தில், பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள “தேவனுடைய மகத்துவங்களைப்” பற்றி அந்தப் பகுதியில் வசித்த மக்களுக்கு சொல்வதற்கு வாரக் கடைசியில் மாணவர்களுக்கு அநேக வாய்ப்புகள் இருந்தன. (அப்போஸ்தலர் 2:11) சொல்லப்போனால், இந்த மகத்துவங்களைப் பற்றி அவர்களால் பத்து மொழிகளில் பேச முடிந்தது. வாலஸ் லிவரன்ஸ் என்ற மற்றொரு கிலியட் போதனையாளர் மாணவர்களில் ஒரு தொகுதியினரை பேட்டி கண்டார்; “‘தேவனுடைய மகத்துவங்கள்’ மக்களை செயல்படத் தூண்டுகிறது” என்ற கருப்பொருளில் அவர்கள் தங்களுடைய அனுபவங்களை விவரித்தனர். அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “‘தேவனுடைய மகத்துவங்களைப்’ பற்றி பேசுவதற்கு பெந்தெகொஸ்தே நாளன்று மேலறையில் கூடியிருந்தவர்களை ஆவி தூண்டியது. கடவுளுடைய உண்மை ஊழியர்கள் அனைவரிடத்திலும் அதே ஆவி இன்று செயல்படுகிறது.” இன்னும் அநேகருக்கு சாட்சிகொடுக்கும் நோக்கத்தோடு சிலர் புதிய மொழிகளை கற்றுக்கொள்வதற்கு தூண்டப்பட்டிருக்கிறார்கள்.
காரியங்களை கடவுளுடைய நோக்குநிலையில் பார்க்க நடைமுறையான அறிவுரை
அறிமுகவுரைகளைத் தொடர்ந்து, ஐக்கிய மாகாணங்களின் கிளையலுவலக அங்கத்தினர்களான கேரி புரோவும் வில்லியம் யங்கும், தற்பொழுது மிஷனரிகள் சேவை செய்கிற நாடுகளிலுள்ள பல்வேறு கிளையலுவலக குழு அங்கத்தினர்களையும், மிஷனரி சேவையில் 41 வருடங்களை செலவழித்த ஒரு தம்பதியினரையும் பேட்டி கண்டார்கள். இதோ, அவர்கள் சொன்ன ஒரு குறிப்பு: “சொந்த சௌகரியங்களை அதிகம் எதிர்பார்க்காதவர்கள் இந்த சேவையில் நெடுநாள் நிலைத்திருக்கிறார்கள். அவர்கள் மிஷனரிகளாக வந்திருப்பதற்குரிய காரணத்தின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துகிறார்கள். நற்செய்தியை பிரசங்கிப்பதற்கும் யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ள மக்களுக்கு உதவி செய்வதற்குமே வந்திருப்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.”
“நீங்கள் வெகுதூரம் செல்வதில்லை!” என்ற பொருளில் பேசி ஆளும் குழுவின் மற்றொரு அங்கத்தினராகிய டேவிட் ஸ்பிளேன் இந்நிகழ்ச்சியை நிறைவு செய்தார். பட்டம்பெறவிருந்த 46 பேரும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படவிருந்தார்கள், அப்படியிருக்க “நீங்கள் வெகுதூரம் செல்வதில்லை!” என சொன்னபோது பேச்சாளர் எதை அர்த்தப்படுத்தினார்? அவர் இவ்வாறு விளக்கினார்: “நீங்கள் பூமியில் எங்கிருந்தாலும்சரி, உண்மையுடன் நிலைத்திருக்கும்வரை, நீங்கள் எப்பொழுதும் கடவுளுடைய வீட்டில் இருப்பீர்கள்.” ஆம், உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும், அவர்கள் எங்கு வாழ்ந்தாலும்சரி, கடவுளுடைய பெரிய ஆவிக்குரிய ஆலயத்தின், அல்லது வீட்டின் ஒரு பகுதியில் சேவை செய்துவருகிறார்கள்; முதல் நூற்றாண்டில் இயேசு முழுக்காட்டுதல் பெற்ற சமயத்திலிருந்து இந்த ஆலயம் இருந்துவருகிறது. (எபிரெயர் 9:9) பூமியிலுள்ள உண்மை ஊழியர்கள் அனைவரின் அருகிலும் யெகோவா இருக்கிறார் என்பதை அறிவது அங்கிருந்தவர்களுக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்தது! இயேசு பூமியில் வாழ்ந்தபோது யெகோவா அவர்மீது அக்கறையுள்ளவராக இருந்தது போலவே, நாம் எங்கு வாழ்ந்தாலும்சரி, நம் அனைவர் மீதும் அவர் அக்கறையுள்ளவராக இருக்கிறார். ஆகவே வணக்க சம்பந்தப்பட்ட விஷயங்களில், நாம் எல்லாரும் ஒருவரிலிருந்து ஒருவர் வெகுதூரம் இல்லை, யெகோவா மற்றும் இயேசுவிடமிருந்தும் வெகுதூரம் இல்லை.
உலகம் முழுவதிலுமிருந்து வந்த வாழ்த்துதல்களை ஏற்றுக்கொண்ட பிறகு, மாணவர்களுக்குரிய நியமிப்புகள் அறிவிக்கப்பட்டன, பின் கிலியட்டில் பெற்ற பயிற்சிக்காக வகுப்பார் தந்த போற்றுதல் கடிதம் வாசிக்கப்பட்டது, அதன் பிறகு தலைமைதாங்கிய சகோதரர் வெற்றிகரமாக இந்நிகழ்ச்சியை நிறைவு செய்தார். புதிய மிஷனரிகள் தங்களுடைய நல்ல வேலையை தொடர்ந்து செய்யும்படியும் யெகோவாவின் சேவையில் சந்தோஷப்படும்படியும் அவர் உற்சாகப்படுத்தினார்.—பிலிப்பியர் 3:1.
[பக்கம் 23-ன் பெட்டி]
வகுப்பின் புள்ளிவிவரங்கள்
[பக்கம் 23-ன் படக்குறிப்பு]
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 14
அனுப்பப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 19
மாணவர்களின் எண்ணிக்கை: 46
சராசரி வயது: 35.0
சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 17.2
முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 13.7
[பக்கம் 24-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 113-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) லிக்ட்ஹார்ட், எம்.; ஹோசோயி, எஸ்.; பெர்க்டோல்ட், ஏ.; லிம், சி.; ஆயோக்கி, ஜே.; (2) பாகியாஷ், ஜே.; பியூகே, எஸ்.; போஸி,ஏ.; ஆல்டன், ஜே.; ஏஸ்கோபார், ஐ.; ஏஸ்கோபார், எஃப்.; (3) ஸ்டாய்கா, ஏ.; ஸ்டாய்கா, டி.; ஃப்ரீமத், எஸ்.; கார்ல்சன், எம்.; லப்லாங், ஆர்.; (4) பியாங்கி, ஆர்.; பியாங்கி, எஸ்.; காமின்ஸ்கி, எல்.; ஜோசப், எல்.; பாரிஸ், எஸ்.; லப்லாங், எல்.; (5) பாரிஸ், எம்.; ஸ்கிட்மார்,பி.; ஹார்டன், ஜே.; ஹார்டன், எல்.; ஸ்கிட்மார், ஜி.; (6) லிம், பி.; ஆல்டன், ஜி.; குவிரிஸி, ஈ.; லாங்கல்வா, எம்.; ஸ்டைனிங்க,எஸ்.; ஆயோக்கி, ஹெச்.; (7) லாங்கல்வா, ஜே.; ஸ்டைனிங்க, எம்.; போஸி, எஃப்.; காமின்ஸ்கி, ஜே.; பியூகே, ஜே.; லிக்ட்ஹார்ட், ஈ.; ஹோசோயி, கே.; (8) பாகியாஷ், ஜே.; குவிரிஸி, எம்.; கார்ல்சன், எல்.; ஃப்ரீமத், சி.; பெர்க்டோல்ட், டபிள்யு.; ஜோசப், ஆர்.