வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
கிறிஸ்துவின் ஞாபகார்த்த தினத்தை எவ்வளவு காலத்திற்கு ஒருமுறை ஆசரிக்க வேண்டும்?
இயேசுவின் மரண நினைவு ஆசரிப்பு ஏற்படுத்தப்பட்டதைப் பற்றி குறிப்பிடுகையில், பவுல் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.” (1 கொரிந்தியர் 11:25, 26) கிறிஸ்துவின் மரணத்தை அடிக்கடி, அதாவது பல தடவை, நினைவுகூர வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆகவே அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் அடிக்கடி அதைச் செய்கிறார்கள். பவுல் இதைத்தான் அர்த்தப்படுத்தினாரா?
இயேசு தம்முடைய மரண நினைவு ஆசரிப்பை துவங்கி வைத்ததிலிருந்து இப்போது 2,000 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆகவே வருடத்துக்கு ஒரு முறை நினைவு ஆசரிப்பு கொண்டாடப்படுகிறது என்று எடுத்துக்கொண்டாலும், பொ.ச. 33 முதற்கொண்டு அது அடிக்கடி கொண்டாடப்பட்டிருக்கிறது என்றுதான் பொருள்படுகிறது. ஆனால், 1 கொரிந்தியர் 11:25, 26-ன் சூழமைவை எடுத்துக்கொண்டால், எவ்வளவு அடிக்கடி என்பதைப் பற்றி பவுல் பேசவில்லை, அது எவ்வாறு நினைவுகூரப்பட வேண்டும் என்பதைப் பற்றிதான் பேசினார். மூல கிரேக்க மொழியில் “அடிக்கடி” அல்லது “மறுபடியும் மறுபடியும்” என்று பொருள்படும் போலாகிஸ் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக, ஆசாகிஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அதன் பொருள், “போதெல்லாம்” என்பதாகும். இது, “எப்போதெல்லாம்” “ஒவ்வொரு சமயமும்” என்று பொருள்படும் மரபுத் தொடராகும். ‘இதை செய்யும் ஒவ்வொரு சமயமும் நீங்கள் ஆண்டவரின் மரணத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்றுதான் பவுல் சொன்னார்.
அப்படியானால், இயேசுவின் ஞாபகார்த்த தினத்தை எவ்வளவு அடிக்கடி ஆசரிக்க வேண்டும்? வருடத்திற்கு ஒரு முறை மாத்திரம் ஆசரிப்பதே பொருத்தமானது. அது உண்மையில் ஒரு நினைவு நாள். நினைவு நாட்கள் வருடத்திற்கு ஒரு முறை மாத்திரமே ஆசரிக்கப்படுகின்றன. அதோடு, வருடத்திற்கு ஒரு முறையே வந்த யூத பண்டிகையாகிய பஸ்கா அன்று இயேசு மரித்தார். இயேசுவை “பஸ்காவாகிய கிறிஸ்து” என்று பவுல் குறிப்பிடுவது பொருத்தமாகவே உள்ளது. பூர்வ காலங்களில் பஸ்கா நாளன்று அடிக்கப்பட்ட பலி, எகிப்திலிருந்த இஸ்ரவேலரின் முதற்பேறான பிள்ளைகளை பாதுகாத்தது, இஸ்ரவேலர் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படவும் வழியைத் திறந்தது. அதைப் போலவே, இயேசுவின் பலிக்குரிய மரணம், ஆவிக்குரிய இஸ்ரவேலருக்கு ஜீவனுக்கான வழியைத் திறந்து வைத்திருக்கிறது. (1 கொரிந்தியர் 5:7; கலாத்தியர் 6:16) ஆண்டுக்கு ஒரு முறை வந்த யூத பண்டிகையாகிய பஸ்காவோடு இயேசுவின் மரண நினைவுநாள் தொடர்புடையதாக இருப்பது, அது வருடத்துக்கு ஒரு முறை மாத்திரமே ஆசரிக்கப்பட வேண்டும் என்பதற்கு கூடுதல் அத்தாட்சி.
அது மட்டுமல்லாமல், இயேசுவின் மரணத்தை ஆண்டுக்கு ஒரு முறை வந்த மற்றொரு யூத பண்டிகையாகிய பாவ நிவாரண நாளோடு பவுல் தொடர்புபடுத்தி பேசினார். எபிரெயர் 9:25, 26-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் [பாவநிவாரண நாளில்] பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் [இயேசு] அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை. . . . அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிக் காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.” இயேசுவின் பலி வருடாந்தர பாவ நிவாரண பலியின் இடத்தை எடுத்துக்கொண்டதால், அவருடைய மரண நினைவு நாள் ஆண்டுக்கு ஒரு முறை ஆசரிக்கப்படுவது சரியே. அதற்கும் அதிகமான தடவை நினைவு நாளை ஆசரிப்பதற்கு வேதப்பூர்வமான ஆதாரம் எதுவுமில்லை.
இதற்கு இசைவாகவே, ஆசியா மைனரில் வாழ்ந்து வந்த இரண்டாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், இயேசுவின் மரண நினைவு நாளை “யூதர்களுடைய முதல் மாதத்தில் [நிசான்] பதினான்காம் நாளில்” வழக்கமாக ஆசரித்தனர் என்று சரித்திராசிரியர் ஜான் லாரன்ஸ் ஃபான் மோஸ்ஹைம் கூறுகிறார். பிற்பட்ட வருடங்களில்தான் கிறிஸ்தவமண்டலத்தில் ஆண்டுக்கு ஒரு முறைக்கும் மேல் அடிக்கடி அதை ஆசரிக்கும் பழக்கம் ஏற்பட்டது.