தீமை வென்றுவிட்டதா?
நல்ல சக்திகளுக்கும் தீய சக்திகளுக்கும் இடையே நிலவும் அகிலவுலக போராட்டத்தைப் பற்றிய கருத்து எண்ணற்ற ஊகங்களை வழங்க எழுத்தாளர்களையும் தத்துவஞானிகளையும் தூண்டியிருக்கிறது. ஆனால் கடவுளுக்கும் பிசாசுக்கும் இடையே நடைபெறும் யுத்தத்தைப் பற்றிய திருத்தமான விவரத்தை தரும் நூல் ஒன்று இருக்கிறது. அதுதான் பைபிள். இந்தப் போராட்டத்தில் உட்பட்டுள்ள விவாதங்களை அது படம்பிடித்துக் காட்டுகிறது, உண்மையில் யார் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை அறிந்துகொள்வதற்கான ஆதாரத்தையும் அது அளிக்கிறது.
முதல் மனுஷனும் மனுஷியும் படைக்கப்பட்ட பிறகு, பிசாசாகிய சாத்தான் என்ற கண்ணுக்குப் புலப்படாத ஓர் ஆவி சிருஷ்டி கடவுளுடைய அரசதிகாரத்தை எதிர்த்து சவால்விட்டான். எப்படி? கடவுள் தாம் படைத்த மனிதருக்கு நல்ல காரியங்களை கொடுக்காமல் வைத்துக்கொள்கிறார் என்றும், அவர்கள் தன்னிச்சையாக செயல்பட்டால் வாழ்வில் உயர்வடைவார்கள் என்றும் சூட்சுமமாக தெரிவித்தான்.—ஆதியாகமம் 3:1-5; வெளிப்படுத்துதல் 12:9.
பிற்பாடு, முற்பிதாவாகிய யோபுவின் நாட்களில், சாத்தான் மற்றொரு விவாதத்தை கிளப்பினான். கடவுளிடம் யோபு காட்டும் உத்தமத்தை முறிக்கும் முயற்சியோடு சாத்தான் இவ்வாறு கூறினான்: “தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் மனுஷன் கொடுத்துவிடுவான்.” (யோபு 2:4) அனைவரையும் உட்படுத்திய சவால் அல்லவா அது! யோபு என்ற பெயரை பயன்படுத்துவதற்குப் பதிலாக, ‘மனுஷன்’ என பொதுப்படையாக சொல்வதன் மூலம் எல்லா மனுஷருடைய உத்தமத்தன்மையைக் குறித்தும் அவன் சந்தேகத்தைக் கிளப்பினான். சொல்லப்போனால், ‘தன் உயிரைப் பாதுகாக்க ஒரு மனுஷன் எதையும் செய்வான். எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், எவரையும் கடவுளிடமிருந்து பிரிக்க முடியும்’ என்றே அவன் வாதாடினான்.
மனிதனே மனிதனை வெற்றிகரமாய் ஆள முடியுமா? பிசாசால் மெய்க் கடவுளிடமிருந்து அனைவரையும் பிரிக்க முடிந்ததா? என்ற இந்த இரு கேள்விகளுக்கு பதிலளித்தால் கடவுளுக்கும் பிசாசுக்கும் இடையே நிகழும் இந்தப் போரில் யார் வெற்றியாளர் என்பதை தீர்மானித்துவிடலாம்.
மனிதனே மனிதனை வெற்றிகரமாய் ஆள முடியுமா?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு வகையான ஆட்சியை மனிதன் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறான். மன்னராட்சி, உயர்குடி ஆட்சி, மக்களாட்சி, சர்வாதிகார ஆட்சி, பாஸிஸம், கம்யூனிஸம் ஆகியவற்றை கடந்த காலங்களில் மனிதன் முயன்று பார்த்திருக்கிறான். அடுத்தடுத்து பல்வேறு வகை ஆட்சியை பரிசோதித்துப் பார்த்ததிலிருந்தே ஒரு ஆட்சியும் சரிப்பட்டு வரவில்லை என்பது தெளிவாக தெரிகிறது அல்லவா?
“நிர்வாக சம்பந்தப்பட்ட விஷயங்களில் ரோமர்கள் தங்களை அறியாமலேயே நிறைய பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்தார்கள்” என 1922-ல் பிரசுரிக்கப்பட்ட உலக சரித்திரம் (ஆங்கிலம்) என்ற நூலில் ஹெச்.ஜி. உவெல்ஸ் எழுதுகிறார். அவர் தொடர்ந்து இவ்வாறு கூறுகிறார்: “அது சதா மாறிக்கொண்டே இருந்தது, அது ஒருபோதும் ஸ்திரமான நிலைக்கு வரவில்லை. ஒரு கருத்தில் பார்த்தால், அந்தப் பரிசோதனை தோல்வியுற்றது. மற்றொரு கருத்தில் பார்த்தால், அந்தப் பரிசோதனை இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை; ஆரம்பத்தில் ரோமர்கள் எடுத்த முயற்சிக்குப் பின் இன்று ஐரோப்பாவும் அமெரிக்காவும் உலக விவகாரங்களில் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இன்னமும் முயன்றுகொண்டே இருக்கிறார்கள்.”
இந்தப் பரிசோதனை இருபதாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. அந்த நூற்றாண்டின் முடிவில், மக்களாட்சிக்கு முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. மக்களாட்சி அனைவருக்கும் ஆட்சியில் பங்கு தருவதாக உரிமை பாராட்டுகிறது. ஆனால், கடவுளுடைய உதவியின்றி மனிதன் வெற்றிகரமாக ஆள முடியும் என்பதை மக்களாட்சி காண்பித்திருக்கிறதா? மக்களாட்சி வரவேற்கத்தக்கது என இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு கூறினார், ஆனால் “மற்றெல்லா நிர்வாக முறைகளும் மோசமாக இருப்பதால் இதை சொல்கிறேன்” என்றும் கூறினார். பிரெஞ்சு நாட்டு ஜனாதிபதி வாலரி ஷிஸ்கார் டெஸ்டங் இவ்வாறு கூறினார்: “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட மக்களாட்சியிலும் நெருக்கடி நிலையை நாம் இப்பொழுது கண்கூடாக காண்கிறோம்.”
இரண்டாயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பே கிரேக்க தத்துவஞானி பிளாட்டோ ஜனநாயக முறையில் ஆட்சி செய்வதில் உட்பட்டுள்ள ஒரு பலவீனத்தைக் கண்டுபிடித்தார். “அரசியல்வாதிகளின் அறியாமையும் தகுதியின்மையும் ஜனநாயகத்திற்கே உரிய சாபம்” என அவர் சாடியதாக அரசியல் கொள்கையின் சரித்திரம் (ஆங்கிலம்) என்ற நூல் குறிப்பிடுகிறது. அரசாங்க சேவைக்கு தகுதிபெறும் திறமை படைத்த நபர்களை கண்டுபிடிப்பதில் இருக்கும் கஷ்டத்தைக் குறித்து இன்றைய அரசியல்வாதிகள் அநேகர் புலம்புகிறார்கள். “பெரும் பிரச்சினைகளை சந்திக்கையில் அவற்றைத் தீர்க்க திறமையின்றி கூனிக்குறுகி நிற்கும் தலைவர்களைக் காணும்போது [மக்கள்] மனக்கசப்படைகிறார்கள்” என த உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியது. அது தொடர்ந்து இவ்வாறு சொன்னது: “மக்கள் வழிநடத்துதலுக்காக தேடுகையில் தங்கள் தலைவர்களுடைய உறுதியின்மையையும் ஊழலையும் கண்டு வெறுப்படைகிறார்கள்.”
இப்பொழுது, பூர்வ இஸ்ரவேலில் அரசாண்ட சாலொமோன் அரசனின் அரசாட்சியை சிந்தித்துப் பாருங்கள். சாலொமோனுக்கு யெகோவா தேவன் மலைக்க வைக்கும் ஞானத்தை அருளினார். (1 இராஜாக்கள் 4:29-34) சாலொமோனுடைய 40-வருட ஆட்சியில் இஸ்ரவேல் தேசத்தார் எவ்வாறு செழித்தோங்கினார்கள்? “யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக் குடித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்” என பைபிள் பதிலளிக்கிறது. அதோடு, “சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபா மட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள்தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள்தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்” என்றும் அந்தப் பதிவு கூறுகிறது. (1 இராஜாக்கள் 4:20, 25) காணக்கூடாத உன்னத அரசராகிய யெகோவா தேவனின் காணக்கூடிய பிரதிநிதியாக ஞானமுள்ள ஓர் அரசன் அவர்கள் மீது ஆட்சி செய்ததால், அத்தேசம் ஸ்திரத்தன்மையையும் செழுமையையும் சந்தோஷத்தையும் ஈடிணையற்ற விதத்தில் அனுபவித்துக் களித்தது.
மனிதனுடைய ஆட்சிக்கும் கடவுளுடைய ஆட்சிக்கும் எப்பேர்ப்பட்ட வித்தியாசம்! அரசுரிமையைப் பற்றிய விவாதத்தில் சாத்தான் வெற்றி பெற்றுவிட்டான் என யாராவது உண்மையில் சொல்ல முடியுமா? முடியவே முடியாது, ஏனென்றால் “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்” என எரேமியா தீர்க்கதரிசி துல்லியமாக அறிவித்தாரே.—எரேமியா 10:23.
சாத்தானால் எல்லாரையும் கடவுளிடமிருந்து விலகச் செய்ய முடியுமா?
எல்லாரையும் கடவுளிடமிருந்து விலகச் செய்ய முடியும் என்ற வாதத்தில் சாத்தான் வெற்றிபெற்று விட்டானா? எபிரெயர் என்ற பைபிள் புத்தகம் 11-ம் அதிகாரத்தில், கிறிஸ்தவ காலத்திற்கு முன்பு உண்மையுடன் வாழ்ந்த அநேக ஆண்கள் பெண்களுடைய பெயர்களை அப்போஸ்தலன் பவுல் பட்டியலிடுகிறார். அதன் பிறகு அவர் இவ்வாறு அறிவிக்கிறார்: “கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங் குறித்து நான் விவரஞ்சொல்ல வேண்டுமானால் காலம் போதாது.” (எபிரெயர் 11:32) கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியை காட்டிய இந்த ஊழியர்களை ‘மேகம் போன்ற திரளான சாட்சிகள்’ என பவுல் குறிப்பிடுகிறார். (எபிரெயர் 12:1) “மேகம்” என்ற வார்த்தைக்குரிய கிரேக்க வார்த்தை தனியாக பிரிந்திருக்கும் திட்டவட்டமான அளவும் வடிவமும் கொண்ட மேகத்தை அல்ல, ஆனால் வடிவமற்ற திரளான மேகக்கூட்டத்தைக் குறிக்கிறது. இது பொருத்தமானதே. ஏனென்றால், கடந்த காலத்தில் கடவுளுக்கு உண்மையுள்ள ஊழியர்களாய் விளங்கிய எண்ணற்றோர் பெருந்திரளான மேகக் கூட்டத்தைப் போலவே இருந்திருக்கின்றனர். ஆம், நூற்றாண்டுகளாக எண்ணிலடங்கா திரளான ஜனங்கள் தங்களுடைய சுயாதீனத்தை பயன்படுத்தி, யெகோவாவுக்கு தங்கள் பக்தியைக் காட்ட தெரிவு செய்திருக்கிறார்கள்.—யோசுவா 24:15.
நம்முடைய நாளில் நாம் எதைக் காண்கிறோம்? உலகெங்கிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் 20-ம் நூற்றாண்டில் பயங்கர துன்புறுத்துதலையும் எதிர்ப்பையும் அனுபவித்த போதிலும் அவர்களுடைய எண்ணிக்கை 60 லட்சத்திற்கும் மேலாக உயர்ந்திருக்கிறது. இதோடு சுமார் 90 லட்சம் பேர் அவர்களுடன் கூட்டுறவு கொண்டு வருகிறார்கள், இவர்களில் அநேகர் கடவுளுடன் நெருங்கிய உறவுக்குள் வர உறுதியான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
மனிதர்களை கடவுளிடமிருந்து விலகச் செய்ய முடியுமென்ற சாத்தானுடைய வாதத்திற்கு கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தே மிகச் சிறந்த பதில் வந்தது. கழுமரத்தில் அனுபவித்த தாங்கொணா வேதனையும்கூட அவருடைய உத்தமத்தை முறிக்க முடியவில்லை. இயேசு தமது இறுதி மூச்சின்போது, “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்று மகா சத்தமாய் சொன்னார்.—லூக்கா 23:46.
மனிதரை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கு தனது சக்திக்குட்பட்ட அனைத்தையும்—சோதனைகள் முதல் நேரடியான துன்புறுத்துதல் வரை அனைத்தையும்—சாத்தான் பயன்படுத்துகிறான். ஜனங்களை வசப்படுத்துவதற்கு ‘மாம்சத்தின் இச்சையையும், கண்களின் இச்சையையும் ஜீவனத்தின் பெருமையையும்’ பயன்படுத்தி, யெகோவாவிடமிருந்து அவர்களை விலக்க அல்லது வசீகரிக்க முயற்சி செய்கிறான். (1 யோவான் 2:16) ‘கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளுக்கு பிரகாசமாயிராதபடிக்கு [சாத்தான்] அவர்களுடைய மனதைக் குருடாக்கியிருக்கிறான்.’ (2 கொரிந்தியர் 4:4) மேலும், சாத்தான் தன்னுடைய இலட்சியத்தை நிறைவேற்ற மனிதர் மீது அச்சுறுத்தல்களை கொண்டு வருகிறான், மனித பயத்தையும் பயன்படுத்திக் கொள்கிறான்.—அப்போஸ்தலர் 5:40.
ஆனால் கடவுளுடைய பக்கத்தில் இருந்தவர்களை பிசாசால் வெல்ல முடியவில்லை. அவர்கள் யெகோவா தேவனைப் பற்றி அறியவும், ‘முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும் அவரில் அன்புகூரவும்’ ஆரம்பித்திருக்கிறார்கள். (மத்தேயு 22:37) ஆம், இயேசு கிறிஸ்துவும் எண்ணற்ற மனிதர்களும் துளியும் மாறாத பற்றுறுதியைக் காண்பித்தது பிசாசாகிய சாத்தானுக்கு ஒரு பெரும் அடியாக அமைந்திருக்கிறது.
எதிர்காலம் எப்படி இருக்கும்?
மனிதர்கள் பலவித அரசாங்கங்களை முயன்று பார்ப்பது என்றென்றும் தொடருமா? தானியேல் தீர்க்கதரிசி இவ்வாறு முன்னுரைத்தார்: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44) பரலோகத்தில் கடவுள் ஸ்தாபிக்கும் ராஜ்யம் ஒரு பரலோக அரசாங்கம், அது இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும். தம்மை பின்பற்றுவோர் இந்த ராஜ்யத்திற்காகவே ஜெபிக்கும்படி இயேசு கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 6:9, 10) அந்த ராஜ்யம், விரைவில் “சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்த”த்தில் எல்லா மனித அரசாங்கங்களையும் அழித்துவிடும், அது பூமி முழுவதையும் பாதிக்கும்.—வெளிப்படுத்துதல் 16:14, 16.
சாத்தானுக்கு என்ன நேரிடும்? வருங்காலத்தில் நடக்கப்போவதை பைபிள் விவரிக்கிறது: ‘ஒரு தூதன் . . . பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தைப் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும் வரைக்கும் அது ஜனங்களை மோசம் போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.’ (வெளிப்படுத்துதல் 20:1-3) சாத்தானை பாதாளம் எனும் செயலற்ற நிலைமைக்கு தள்ளிய பிறகே இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சி ஆரம்பமாகும்.
அப்பொழுது இந்தப் பூமி எவ்வளவு மகிழ்ச்சி ததும்பும் இடமாக இருக்கும்! துன்மார்க்கமும் அதற்கு காரணரும் அழிக்கப்படுவர். பைபிள் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறது: “பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:9-11) மனிதரோ விலங்கோ எதுவானாலும் அவர்களுடைய சமாதானத்தைக் குலைக்காது. (ஏசாயா 11:6-9) அறியாமையாலும் யெகோவாவை அறிந்துகொள்ளும் வாய்ப்பு இல்லாததாலும் முற்காலத்தில் பிசாசின் பக்கத்தில் இருந்த லட்சோப லட்சம் பேர் மீண்டும் உயிரடைவார்கள், பிறகு அவர்களுக்கு தெய்வீக கல்வி புகட்டப்படும்.—அப்போஸ்தலர் 24:15.
ஆயிர வருட ஆட்சியின் இறுதிக்குள், இந்தப் பூமி பரதீஸ் போன்ற நிலைமைக்கு வந்துவிடும், அதிலிருக்கும் மனிதரோ பரிபூரணத்திற்கு வந்திருப்பார்கள். பிறகு சாத்தான் “கொஞ்சக்காலம்” விடுதலையாவான், அதன் பிறகு கடவுளுடைய அரசாட்சியை எதிர்ப்பவர்கள் அனைவரும் அவனோடுகூட நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள்.—வெளிப்படுத்துதல் 20:3, 7-10.
நீங்கள் யாருடைய பக்கம்?
சாத்தான் இந்தப் பூமியில் அழிவுக்கு மேல் அழிவை கொண்டுவந்த நூற்றாண்டே 20-ம் நூற்றாண்டு. பூமியிலுள்ள இந்த நிலைமைகள் அவன் வெற்றி சிறந்ததை சுட்டிக்காட்டாமல், பொல்லாத உலகின் கடைசி நாட்களில் நாம் வாழ்கிறோம் என்பதற்கு ஓர் அடையாளமாகவே இருக்கின்றன. (மத்தேயு 24:3-14; வெளிப்படுத்துதல் 6:1-8) பூமியில் அக்கிரமம் பெருகியிருப்பதோ அல்லது பெரும்பான்மையருடைய கருத்தோ யார் வெற்றியடைந்தார் என்பதை தீர்மானிக்கும் காரணி அல்ல. யாருடைய ஆட்சி முறை சிறந்தது என்பதும் எவராவது அன்பினிமித்தம் கடவுளை சேவித்திருக்கிறார்களா என்பதுமே தீர்மானிக்கும் காரணிகள். இந்த இரண்டு காரணிகளை வைத்துப் பார்க்கும்போது, யெகோவாவுக்கே வெற்றி.
இதுவரை அனுமதிக்கப்பட்ட காலத்தில் சாத்தானுடைய எல்லா காரியங்களுமே தவறு என நிரூபிக்கப்பட்டிருப்பதால், இன்னமும் ஏன் கடவுள் துன்மார்க்கத்தை தொடர்ந்து அனுமதிக்கிறார்? யெகோவா பொறுமையோடு இருக்கிறார், ஏனென்றால் ‘ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்புகிறார்.’ (2 பேதுரு 3:9) “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” வேண்டுமென்பதே அவருடைய சித்தம். (1 தீமோத்தேயு 2:4) மீதமுள்ள காலத்தை பைபிளை படிப்பதற்கும், ‘ஒன்றான மெய்த் தேவனையும் அவர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவைப் பெறவும்’ பயன்படுத்திக்கொள்வோமாக. (யோவான் 17:3) வெற்றிவாகை சூடும் அணியில் உறுதியாக நிலைத்திருக்கும் லட்சக்கணக்கானோருடன் சேர்ந்துகொள்வதற்காக நீங்களும் இந்த அறிவைப் பெற உங்களுக்கு உதவி செய்ய யெகோவாவின் சாட்சிகள் அதிக ஆவலோடு இருக்கிறார்கள்.
[பக்கம் 5-ன் படங்கள்]
யெகோவாவின் சாட்சிகள் உத்தமத்தைக் காத்துக்கொள்வதன் மூலம் சாத்தானுடைய தோல்வியை இன்னும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்
[பக்கம் 7-ன் படம்]
உண்மைப் பற்றுறுதியுடைய அநேகர் யெகோவாவின் பக்கம் இருக்கிறார்கள்