வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஒரு கிறிஸ்தவர் பைபிளின் மீது கையை வைத்து நீதிமன்றத்தில் சத்தியம் செய்வது பைபிள் நியமங்களுக்கு இசைவானதா?
இது அவரவரது தனிப்பட்ட தீர்மானம். (கலாத்தியர் 6:5) எனினும் உண்மையைச் சொல்வதற்கு நீதிமன்றத்தில் ஆணையிடுவதை பைபிள் தடைசெய்வதில்லை.
ஆணையிடுவது சாதாரணமாக எங்கும் பின்பற்றப்படும் பழக்கம். உதாரணமாக, பூர்வ காலங்களில் கிரேக்கர்கள் ஆணையிடுகையில் வானை நோக்கி கையை உயர்த்தினார்கள் அல்லது பீடத்தைத் தொட்டார்கள். ரோமர் ஒருவர் உண்மையைச் சொல்வதற்கு ஆணையிடுகையில் ஒரு கல்லை கையில் வைத்துக்கொண்டு, “வேண்டுமென்றே நான் ஏமாற்றினால், [கடவுளாகிய] ஜூப்பிட்டர் நகரத்தையும் அரணையும் பாதுகாக்கையில், இந்தக் கல்லை நான் தூக்கியெறிவது போல என் வாழ்வின் இன்பமனைத்தையும் என்னிடமிருந்து தூக்கியெறிந்துவிடுவாராக” என சத்தியம் செய்தார்.—ஜான் மெக்ளின்டாக் மற்றும் ஜேம்ஸ் ஸ்ட்ராங் எழுதிய சைக்ளோப்பீடியா ஆஃப் பிப்ளிக்கல், தியாலஜிக்கல் அண்டு எக்ளிஸியாஸ்டிக்கல் லிட்டரேச்சர், தொகுதி VII, பக்கம் 260.
அத்தகைய செயல்கள் கடவுள் இருக்கிறார் என மனிதன் நம்புவதை சுட்டிக்காட்டின; அவர் தங்களைக் கவனிக்கிறார், தாங்கள் அவருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என ஒப்புக்கொள்வதையும் குறித்தன. தாங்கள் சொன்னதையும் செய்ததையும் யெகோவா அறிவார் என்பதை பூர்வத்திலிருந்தே உண்மை வணக்கத்தார் தெளிவாக உணர்ந்திருந்தார்கள். (நீதிமொழிகள் 5:21; 15:3) தங்கள் முன்னிலையில் கடவுள் இருப்பதாக கருதி அல்லது அவரை சாட்சியாக வைத்து அவர்கள் ஆணையிட்டார்கள். உதாரணமாக, இப்படித்தான் போவாஸ், தாவீது, சாலொமோன், சிதேக்கியா ஆகியோர் செய்தார்கள். (ரூத் 3:13; 2 சாமுவேல் 3:35; 1 இராஜாக்கள் 2:23, 24; எரேமியா 38:16) மெய் கடவுளை வணங்குவோர், மற்றவர்கள் தங்களிடம் ஆணையிட்டு கொடுக்கும்படி கேட்டபோது மறுக்கவில்லை. ஆபிரகாமும் இயேசு கிறிஸ்துவும் அவ்வாறே செய்தார்கள்.—ஆதியாகமம் 21:22-24; மத்தேயு 26:63, 64.
யெகோவாவுக்கு முன்பாக ஒருவர் ஆணையிடுகையில் சிலசமயங்களில் வார்த்தைகளை சொல்வதோடு சைகைகளும் காட்டினார். உதாரணத்திற்கு, ஆபிராம் (ஆபிரகாம்) சோதோமின் ராஜாவிடம் இவ்வாறு சொன்னார்: “வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்.” (ஆதியாகமம் 14:23) தீர்க்கதரிசியாகிய தானியேலிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு தேவதூதன் “தம்முடைய வலது கரத்தையும் தம்முடைய இடது கரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து . . . என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் பேரில் ஆணையி”ட்டார். (தானியேல் 12:7) அடையாள அர்த்தத்தில் கடவுளும்கூட ஆணையிடுவதற்கு தம் கையை உயர்த்துவதாக சொல்லப்படுகிறது.—உபாகமம் 32:40; ஏசாயா 62:8.
ஆணையிடுவதை பைபிள் தடை செய்வதில்லை. எனினும், ஒரு கிறிஸ்தவர் தான் சொல்லும் ஒவ்வொரு குறிப்புக்கும் ஆதாரமாக ஆணையிட அவசியமில்லை. “‘ஆம்’ என்றால் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள்” என இயேசு சொன்னார். (மத்தேயு 5:33-37, பொது மொழிபெயர்ப்பு) சீஷனாகிய யாக்கோபும் இதைப் போன்ற குறிப்பையே சொன்னார். “சத்தியம் பண்ணாதிருங்கள்” என அவர் சொல்லுகையில் தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் ஆணையிடுவதற்கு எதிராகவே எச்சரித்தார். (யாக்கோபு 5:12) நீதிமன்றத்தில் உண்மையைச் சொல்ல ஆணையிடுவது தவறென இயேசுவோ யாக்கோபோ சொல்லவில்லை.
ஒரு கிறிஸ்தவர் தான் சொல்வதெல்லாம் உண்மையென சத்தியம் செய்யும்படி நீதிமன்றத்தில் கேட்கப்பட்டால் என்ன செய்வது? அவ்வாறு ஆணையிடுவது சரியென அவர் நினைக்கலாம். அப்படி ஆணையிட விரும்பாதபோது, தான் பொய் சொல்லவில்லை என உறுதிமொழி கொடுப்பதற்கு நீதிமன்றம் அவரை அனுமதிக்கலாம்.—கலாத்தியர் 1:20.
கையை உயர்த்தும்படி அல்லது பைபிளின் மீது கையை வைக்கும்படி நீதிமன்றத்தில் கேட்டால் ஒரு கிறிஸ்தவர் அதற்கு சம்மதிக்கலாம். அப்போது, சைகையோடு ஆணையிட்ட பைபிள் உதாரணங்கள் அவர் நினைவுக்கு வரலாம். ஒரு கிறிஸ்தவரைப் பொருத்த வரையில், ஆணையிடுகையில் ஒரு குறிப்பிட்ட சைகை செய்வதைவிட கடவுளுக்கு முன்பாக அவர் உண்மையைச் சொல்வதாக ஆணையிடுகிறார் என்பதை அவர் மனதில் வைக்க வேண்டும். ஆகவே அத்தகைய ஆணை சாதாரண விஷயமல்ல. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லும் சூழ்நிலை வரலாம், பதில் சொல்லும் கட்டாயமும் ஏற்படலாம்; அப்போது உண்மையை சொல்வதற்கான ஆணைக்குக் கட்டுப்பட்டிருப்பதை அவர் நினைவில் வைக்க வேண்டும்; இப்படி எப்போதும் உண்மை பேசத்தான் ஒரு கிறிஸ்தவரும் நிச்சயமாகவே விரும்புகிறார்.