நினைவுகூர வேண்டிய நாள்
மனிதகுலத்தின் நித்திய நன்மைக்காக அதன் எதிர்காலத்தை அடியோடு மாற்றிய நாளே அந்த நாள். மனிதரின் எதிர்காலத்தின் மீது அந்தளவு தாக்கத்தை ஏற்படுத்திய வேறொரு நாள் சரித்திரத்திலேயே கிடையாது. இயேசு பூமிக்கு வந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றியதும் அந்த நாளில்தான். கழுமரத்தில் அறையப்பட்டிருந்தபோது “எல்லாம் நிறைவேறிற்று” என சத்தமிட்டு கூறி அவர் தமது இறுதி மூச்சை விட்டார். (யோவான் 19:30, பொது மொழிபெயர்ப்பு) இயேசு என்ன நோக்கத்திற்காக பூமிக்கு வந்தார்?
“மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என பைபிள் சொல்கிறது. (மத்தேயு 20:28, பொ.மொ.) வழிவழியாக வந்த பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதரை மீட்பதற்கு இயேசு தம் ஆத்துமாவையே அல்லது தம் உயிரையே கொடுத்தார். ஆம், “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) இயேசுவின் பலி எவ்வளவு மதிப்புவாய்ந்த ஓர் ஏற்பாடு!
இயேசுவின் மரண நாளை நினைவுகூருவதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அப்போஸ்தலர்கள் விசுவாசத்தில் நிலைத்திருப்பதற்கு இயேசு மிகச் சிறந்த பாடங்களை கற்பித்தது அந்த நாளில்தான். அவர் வாயிலிருந்து பிறந்த கடைசி வார்த்தைகள் அந்த சீஷர்களின் மனதை எந்தளவுக்கு நெகிழ வைத்திருக்கும்! அப்படியானால், அவர் கற்பித்த விஷயங்கள் யாவை? அவற்றிலிருந்து நாம் எப்படி நன்மை அடையலாம்? இக்கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த கட்டுரையில் ஆராயப்படும்.